கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 15,137 
 
 

திரினிடாடில் நாற்பத்தியைந்தில் போர் ஓய்ந்தது. அநேக மக்கள் ஓய்வுத்-துட்டு பெற்றுக்கொண்டு ராணுவத்தில் இருந்து வெளியே வந்தார்கள். பிரடரிக் அவர்களில் ஒருத்தன். இவ்வளவு பணத்தை ஒருசேர அவன் பார்த்ததே கிடையாது. அலட்சியமாயும் ஊதாரியாவும் அவன் வாழ்ந்தான். ஆறஅமர கணக்கு பார்க்கிற காலத்தில் அரசாங்கம் அவனிடம் தந்தனுப்பிய மூன்னுறில் சில டாலர்களே மிச்சமாய் இருந்தன.

அப்போது வேலைதேடி கும்பல் கும்பலாய் பயல்கள் வெனிசூலா போய்க் கொண்டிருந்தார்கள். அங்கே நிலவரம் சிலாக்கியமாய் இருந்தது. அவர்கள் வீட்டுக்கு எழுதும்போது, காசு தட்டுப்பாடு இல்லையென்றும், அமெரிக்கப் பணமுதலைகளின் கண் அங்க விழுந்திருக்கிறதால் நிறைய வேலை வாய்ப்புகளும் இருப்பதாய் எழுதினார்கள்.

வெனிசூலா வாஸ்தவத்தில் வசதியான நாடுதானே. இரும்பும் தாதுக்களும் தாராளமாய்க் கிடைக்கின்றன அங்கே. சண்டை ஓயவும் உலக மொத்தத்திலிருந்தும் ஜனம் அங்கே குவிய ஆரம்பித்து விட்டது. போர் சரித்திரம் திரும்புகிறது. ஸ்பெயினின் பிரதான பகுதிக்குள் பணத்துக்காக திரும்பவும் உலகமே ஊடுருவியது!

Black man வெனிசூலா அரசாங்கம் கொஞ்சம் கெடுபிடி பண்ணாவிட்டால் எல்லாம் நன்றாய் இருந்திருக்கும். மேற்கிந்தியர்கள் ஓரளவுக்கு மேல் வேலைக்கு வேணாம், என அது சொல்ல ஆரம்பித்தது. பிரடரிக் போயிறலாம்னு யோசிக்கையில், எற்கனவே தேவைக்குமேல் அங்கே மேற்கிந்தியர்கள் இருந்தார்கள்.

அதைப்பத்தி என்ன — மீன்பிடி படகுகளில் ஜனங்கள் அங்கேபோய் அந்த நாட்டுக்காரர்கள் என்கிறதாய்க் காட்டிக் கொண்டு நல்ல வேலைகளிலும் உட்கார்ந்து கொண்டார்கள். திரினிடாடில் ஒரு சில்லரைக்கும்பல் இந்தக் காற்று உள்ளபோதே துற்றிக்கொண்டது. வெனிசூலாவுக்குக் கொண்டுவிடுகிறதாய் நிறையப் பணம் வாங்கிக் கொண்டபடி, படகில் ராவோட ராவாய் ஆட்களை ஏற்றிக் கொள்ள வேண்டியது, திரினிடாடையே ஒர் ரவுண்டு அடித்துவிட்டு மறுகரையில் எங்கனாச்சும், வெனிசூலா இதானப்பா, என இறக்கி விட வேண்டியது. ஜனங்கள் உள்ளே நடந்துபோய் தாங்கள் திரினிடாடிலேயே இருக்கிறதை அறிந்தார்கள். ஆனால் யாரிடமும் முறையிட வழியில்லை. அவர்கள் சட்டவிரோதமாய்க் கள்ளத்தோணி பிடித்தவர்கள். சட்டவிரோதமாய் வெளிக் கிளம்புகிறவர்களை உள்ளூர்ப் போலிஸ் கண்காணித்துக் கொண்டிருந்தது.

பிரடரிக்குக்கு வெனிசூலாவில் பார்க்கர் என்கிற சகா இருந்தான். நிலைமை அங்கே நன்றாய் இருப்பதாக அவன் எழுதிக் கொண்டிருந்தான். பணம்னு கூட இல்லப்பா. அழகான நாடு. நான் இங்க ராஜா மாதிரி இருக்கேன். இங்க வந்துரு, நான் உனக்கு ஒருவழி காட்டி விடறேன்…

சரி ரைட், என்று பின்வாசல் வழியாக வெனிசூலாவுக்குள் ஊடுருவும் திட்டத்தில் இருந்த நான்குபேருடன் அவனும் சேர்ந்து கொண்டான். ஸ்பானிய கலப்பு இன ஹென்ரி. அவனிடம் சொந்தப் படகு இருக்கிறது. சார்லசுக்கு ஒருமண்ணுந் தெரியாவிட்டாலும் வெனிசூலாவைத் தன் புறங்கையைப் போல அறிந்தவனாட்டம் பேசினான் அவன். லால்சிங் இந்தியாக்காரன். அப்புறம் லிங் பிங்… சீனாக்காரன். வெனிசூலாவில் ஆத்தோரமாய் எங்காவது கிராமாந்தரத்தில் அவன் கடைபோட்டுக் கொள்வான்.

கொலம்பஸ் வளைகுடா வழியே அவர்கள் இகாகோஸ் என்ற இடத்துக்குப் போனார்கள். அதான் சுருக்குவழி. அங்கே ‘பாம்புவாய்’ பக்கம் மீன்பிடிக்கப் போனாலே பல சந்தர்ப்பங்களில் நீர்வேகம் படகுகளை வெனிசூலாவுக்குத் தள்ளியிருக்கிறது! ஆனால் ஸ்பானிய அரசாங்கம் அங்கே பாரா போட்டிருந்தது. அவர்கள் மீனவர்களைத் திருப்பி அனுப்பினார்கள். இல்லாவிட்டால் ஜெயிலில் அடைத்துவிட்டு சாவியைத் தூர விட்டெறிந்தார்கள்.

ஆக, நீர்வேகத்தில் அந்த ராத்திரி அதிகம் துடுப்பு வலிக்காமல் அவர்கள் போனார்கள். மறுநாள்க் காலை அவர்கள் நதியில் குருட்டாம் போக்கில் போய்க் கொண்டிருந்தார்கள்… யாருக்குமே நாட்டின் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்று விளங்கவில்லை. சார்லசைக் கேட்டால் வெனிசூலாவில் இந்த மாதிரி இடத்தைத் தன் ஆயுசில் பார்த்ததேயில்லை என்கிறான்.

லால்சிங்குக்கும் அந்த சைனாக்காரனுக்கும் உதறலெடுக்க ஆரம்பித்து விட்டது. சுத்திவர காடு. சினிமாவில்போல இருந்தது எல்லாம். ஆப்பிரிக்கக் காட்டுக்குள் கதாநாயகன் போகிறான். குரங்கும் மனிதக்குரங்கும் வானளாவிய விருட்சங்களில் விருட்டெனத் தாவித் திரிகின்றன.

லால்சிங்கும் சைனாக்காரனும் பீதியில் நடுங்கி படகையே அசக்கினார்கள். கூட வந்தவர்களையும் அவர்கள் இப்படி பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் தண்ணீரில் முதலைகள். யாராவது விழமாட்டார்களா என உற்சாகமாய்க் காத்திருந்தன. சார்லஸ் அப்போது பார்த்து, ‘இந்தப் பக்கம் ஒரு சின்னவகை மீனய்யா. பாய்ஞ்சிச்சின்னா எலும்பத்தான் மிச்சம் வைக்கும்!’ என்று கதை சொல்லிக் கொண்டே வந்தான்.

எல்லாவற்றுக்கும் மேலே, சாப்பாட்டுப் பிரச்னை. நிறைய ஒன்றும் அவர்கள் எடுத்து வந்திருக்கவில்லை. நாலு பொதி ரொட்டி. சோளம் போட்ட பன்னியிறைச்சி ரெண்டு டின். இகாகோஸ் கடற்கரையில் பொறுக்கிச் சேர்த்த சில கொப்பரைகள். அது தவிர காட்டில் எங்கயுமே ஒதுங்க வகையில்லாமல் இருந்தது அப்போது.

ஒரு நாள், ஒரு ராத்திரி என நதியோடு போய்க் கொண்டிருந்தார்கள். ஒதுங்க சிறிய இடம் ஒன்று வாய்த்தது, ஆனால் தேனீக்கள் போல பெத்தம் பெரிய கொசுக்கள் காதைச் சுத்தி இரைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தன. யாருமே தூங்க முடியவில்லை. பச்சைத் தழைகளைத் தீமூட்டி புகையவிட்டுப் பார்த்தார்கள். கொசுக்கள் விடவேயில்லை.

காலையில் யாருக்குமே எங்கயுமே போக விருப்பமில்லை. திரும்பிப் போயிறலாமா, ஆற்றின் வேறு கிளையில் பிரிந்துபோய்ப் பார்க்கிறதா? லால்சிங்கும் அந்த சைனாக்காரனும் திரும்பிப் போயிறலாம் திரும்பிப் போயிறலாம், என்றார்கள். சார்லஸ், நான் காட்டுக்குள்ள போய்ப் பார்க்கிறேன் என்கிறான். ஹென்ரி, ‘படகு என்னிதப்பா. நான் மேல போலாம்னிருக்கேன்’ என்றபோது பிரடரிக் அதை ஆமோதித்தான். ‘ஆமாமாம். நாம மனுசங்க இருக்கிற இடமாப் பார்த்துப் போய்ச் சேருவோம்.’

அப்போது சார்லஸ் நதிக்கரையில் மரக்கிளை ஒன்றில் காயப்போட்டிருந்த மாமிசத் துண்டு ஒன்றைக் காட்டினான். ‘பக்கத்துலதாம்ப்பா நாட்டுப்புறம். சிவப்பிந்தியர்கள் மாமிசத்தை அப்பிடித்தான் காய வைப்பார்கள். அப்றம் உப்பு போட்டு வெச்சிட்டா வாரக்கணக்கில் கெடாமல்க் கிடக்கும்…’

எல்லாருக்கும் உற்சாகம். கட்டையும் துடுப்பும் எடுத்துக்கொண்டு அவர்கள் செயலில் இறங்கினார்கள். காலை பூராவும் போய்க்கொண்டே யிருந்தார்கள். ஒரு மனுசக்குஞ்சையும் காணவில்லை. இன்னும் மோசமான விசயம், அந்தப் பக்கத் தண்ணீரில் கொடிபடர்ந்து கிடந்தது. துடுப்பு சிக்கி, படகு அப்படியே நின்றது. பிரடரிக் முன்பக்கத்துக்கு வந்தான். ஹென்ரி கதிர்அரிவாளால் கொடியை அறுத்துவிட்டுக்கொண்டே வந்தான்.

ஆகா கடவுளின் கருணை! மதியவாக்கில் ஒரு நாட்டுப்புறத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். சிவப்பிந்தியர்கள் வசிக்கும் கிராமம். எல்லாவனுக்கும் இப்ப தைரியம் வந்திருந்தது. ஆ ஊவென்று பேசிக் கொண்டார்கள்… அவங்க ஒண்ணும் பயப்படவில்லை. எப்பிடியும் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்துருவம்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன.

திட்டப்படி, எதாவது கிராமத்துக்கு வந்து சேர்ந்தவுடன் ஆளாளுக்குத் தன் வழி பார்த்துக் கொள்ள வேண்டியது. வெனிசூலாவில் சில வெட்டிப்பயல்கள் இருக்கிறார்கள். உன்னைப் பிடிக்காவிட்டால் உடனே போலிசுக்குப் போட்டுக் குடுத்துருவான்கள். தன் திட்டம் பற்றி யாரிடமும் சொல்லாதது பற்றி பிரடரிக் சந்தோஷப்பட்டுக் கொண்டான்!

—-
வந்தவர்கள் கழட்டிக் கொள்ளும்வரை அவன் காத்திருந்தான். பட்டணத்துக்கு எப்பிடிப்போவது என்று சிவப்பிந்தியர்களிடம் அவன் தெரிந்துகொண்டான். மறுநாள் மதியம் அவன் பார்க்கர் வசிக்கும் பகுதிக்கே வந்து சேர்ந்திருந்தான். பார்க்கர் கைகுலுக்கி பெரிய ஸ்பானிய ஒய்ன் பாட்டிலை உடைத்தான்.

பிரடரிக் அலுப்பாகவும் பசியாகவும் இருந்தான். சாப்பாடெல்லாம் ஆனதும் பார்க்கர் அவனிடம் நிறைய சமாச்சாரங்கள் கேட்டான். தன்னூர் ஜனங்களை அவன் விசாரித்தான். பாட்டி உசிரோட இருக்காப்லியா? என் டான்ட்டி அவளைப் போய்ப் பார்க்கறாப்லியா… ஆமா, இல்லைன்னிட்டிருந்தான் பிரடரிக். உண்மையில் திரினிடாடில் பார்க்கர் குடும்பம் பத்தியே அவன் ஏதுமறியான். பார்க்கர் அவனை வெனிசூலா வரச்சொன்னான். வந்தா வழிகாட்டி விடறேன்னான் – அவ்வளவுதான்! பழங்கதைங்களை யெல்லாம் சட்டுபுட்டுனு முடிச்சிட்டு, ‘நாட்டுக்குள்ள வந்தாச்சி, நான் இப்ப என்ன செய்யணும்?’னான் பிரடரிக்.

‘ஒரு அடையாள அட்டைப்பா. செடுலா-ம்பாங்க அதை. அது ஒண்ணு உனக்கு வேணும். ஏன்னா அதான் இங்க முக்கியம். அப்பதான் ஜனங்க உன்னை இந்த நாட்டுக்காரன்னு நம்புவாங்க. வேலையும் அப்ப சிரமம் இல்லாமக் கிடைச்சுரும்…’

‘அட்டைக்கு நான் எங்க போறது. நீ ரொம்ப காலமா இங்க இருக்கே. அதான் பேசறே’ என்றான் பிரடரிக். ‘இங்க போலிஸ் இல்லியா?’

‘போலிசா? உன்னாண்ட பணம் இருக்குங்காட்டியும் நீ வெளவால் போல. உனக்கு ஒரு ஆபத்தும் கிடையாது. ஒருடாலர் நோட்டுக்குப் பினனால நீ ஒளிஞ்சிக்கிட்டியானா போலிஸ் உன்னை கண்டுக்காது. அட அதைப் பத்திப் பேசச்சில, ஆமாமா- ‘லிப்ரட்டா மிலிடர்’- இன்னொரு கார்டும் உனக்கு வேணும்ப்பா…’

‘என்னா தலைவா இது. ரொம்பத் திண்டாடும் போலுக்கே! எல்லாம் நான் பாத்துக்கறேன்னு நீ வாக்கு குடுத்தே, நான் வந்தேன்…’

‘ராணுவத்ல நீ வேலை செஞ்சேன்னு அத்தாட்சிக் கார்டு அது. இங்க எல்லாருமே கொஞ்ச காலம் பட்டாளத்துல வேலை செஞ்சாகணும். எவனாச்சும் டபாய்ச்சான்னா அப்பவே வேலைலேர்ந்து பட்டாளத்துக்குக்
கில்லியாடிருவாங்க. சில சமயம் எல்லா கார்டும் ஒளுங்கா இருந்தாலே தொந்தரவு குடுக்கறானுங்க…’

நாம நினைக்கிறாப்ல சொர்க்கபூமி இல்லடோய் இது, என பிரடரிக் நினைக்க ஆரம்பித்தான். ‘ஹ்ம், எனக்கு நீ எழுதினப்ப இதெல்லாம் சொல்லல. நீ என்னா சொன்னே- அமெரிக்காக்காரன் வேலை தர்றான்னே. பெரிய வேலையா வாங்கித் தரேன்னே…’

‘ஆமா ஆமா’ என்றான் பார்க்கர். பிரடரிக் இல்லை, தானே விருந்தாளி என்கிறாப்போல அவன் ஒயினைக் காலிபண்ணிக் கொண்டிருந்தான். ‘சரிப்பா ஊளையிடாதே. நான் ஏற்பாடு பண்றேன். என்ரிக்னு ஒராள். அவனாண்ட நாளைக்கு உன்னை அனுப்பறேன். உனக்கு வேண்டிய எல்லாக் காகிதத்தையும் அவன் முடிச்சித் தருவான். அதக்குப் பிறகு நீ கவலையில்லாம இருக்கலாம்.’

—-
இப்படியாய் மறுநாள் காலையில் பிரடரிக் பரபரப்புடன் போலிவார் நகர பஸ்சில் துள்ளியேறி உட்கார்ந்து கொண்டான். போலிவாரில்தான் அந்தப் பயல் என்ரிக் இருக்கிறான்… பஸ்சானால் போயிட்டே யிருந்தது. இடையே ஒரு பாலைவனங் கூட வந்தது. உலகத்தின் அந்தப் பக்கம் ஒரு பாலைவனம் இருக்குன்ற விவரமே இவனுக்குத் தெரியாது. ஓரிடத்தில் டிரைவர் கீழேயிறங்கி இரு கால்நடைகளை எழுப்பித் தெருவோரத்துக்கு ஒதுக்கிவிட்டுப் போக வேண்டியிருந்தது.
ஊர் அடைந்ததுமே இறங்கிய ஒவ்வொருவனும் அந்த ஊரில் எத்தனை காலம் தங்கப் போகிறார்கள் என ஒரு புத்தகத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். வழியில் சில அழகான இயற்கைக் காட்சிகளெல்லாம் இருந்தன என்றாலும் பிரடரிக் அதில் மனம் செலுத்தவில்லை. மனம் பூராவும் ஒரே நினைப்பில் இருந்தது அவனுக்கு. என்ரிக் எப்பவும் பூங்காவில் கிடப்பான் என்று பார்க்கர் சொல்லி யனுப்பி யிருந்தான். அவன் கோலி விளையாடிக் கொண்டிருந்த சில பையன்களிடம் விசாரித்துக் கொண்டான்.

என்ரிக்கைக் கண்டடைவதில் சிரமம் இல்லை. மரக்கட்டைக் காலன். குள்ளன். இந்தியச் சில்லரைப்பயல் அவன். காக்கி உடை. கப்பல் அதிகாரிபோல ஒரு உயரத் தொப்பி. மரக் காலை நீட்டிக்கொண்டு ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். உலகத்தில் அவனுக்குப் பிரச்னையே இல்லை போலிருந்தது. ஆனால் பிரடரிக் அவனைநோக்கிப் போனபோது அவன் எழுந்துகொண்டு தெருவிலிறங்கி விந்தி விந்தி நடக்க ஆரம்பித்தான். ‘ஏய் என்ரிக், உன்னாண்ட ஒரு காரியம் ஆகணுமே…’ என்ரிக் காதிலேயே விழாததுபோல் நடித்தபடி போனான். பிரடரிக் திரும்ப அவனிடம் பேச முற்பட்டான். என்ரிக் கடுப்பாகி ‘இங்க பேசாதடா முட்டாத்…. நடந்துகினே வா. சுத்திவர போலிஸ்!’

பிரடரிக் சிறிது தொலைவு நடந்து ஒரு முக்கில்போய் நின்றான். என்ரிக் வந்தான். எந்தப் பக்கத்துலேர்ந்தாவது திடுதிப்னு போலிஸ்காரன் முளைச்சு அவனைப் பிடிச்சுக்குவானோன்னு சுத்து முத்தும் பாத்திட்டே இருந்தான். காற்றில் பேசுகிறாப்போல தன் வீட்டுக்கு வந்து பார்க்கும்படி சொல்லி வழியும் தெரிவித்துவிட்டு விந்தி விந்தி காணாமல் போனான்.

திரினிடாட் விட்டுக் கிளம்புகையில் பிரடரிக் இந்தப் பாடெல்லாம் எதிர்பார்த்தானில்லை. இது வெனிசூலா. பேசாமல் என்ரிக் என்ன சொல்றானோ அதைக் கேட்பதே சாலச் சிறந்தது.

அவன் என்ரிக் வீட்டுக்குப் போனான். குண்டான ஒரு வெனிசூலாப் பொம்பளை கதவைத் திறந்தது. என்ரிக் காத்திருக்கச் சொன்னதாக அவளிடம் ஸ்பானிய மொழியில் அவிழ்த்து விட்டான் பிரடரிக். உள்ளே வந்து உட்காரச் சொன்னாள் அவள்.
கொஞ்சங் கழித்து என்ரிக் வந்தான். ‘ஸ்…ஸப்பா, என்ன வெயில்’ என்றும், ‘இப்பல்லாம் துட்டுக்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு’ என்றும் சத்தமாய் அவன் அலுத்துக் கொண்டான். பிரடரிக் அவன் நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும்! அவனின் பேச்சு தோரணையிலேயே இவன் திரினிடாட்காரன்தான் என்று தெரிந்துவிட்டது.

‘நம்ப பார்க்கர் அனுப்ச்சாப்ல. நமக்கு ஒரு செடுலா வேணும்…’

‘நீ வெனிசூலாக்காரனா?’ என்று கேட்டான் என்ரிக். இப்போது அவன் வேறாளாய்த் தெரிந்தான். பார்க்கில் பார்த்த பயந்த ஆசாமி இல்லை. 007 போல கேள்வி கேட்டான்.

‘இல்ல’

‘அட முட்டாப் பயமவனே, ஆமான்னு சொல்லணும் நீ. இப்பத்திலேர்ந்து அதைப் பழகிக்க. நீ வெனிசூலாக்காரன்! இங்கியே பொறந்து வளர்ந்தவன்!’ – மரக்காலை நீட்டிக்கொண்டு அவன் அலுத்துக் கொண்டான். தனக்குத் தானே போல அவன் பேசினான். ‘ம்… பார்க்கரா அனுப்ச்சான். அவன் பழைய பாக்கி 200 bee அப்டியே நிக்குது. குடுத்து விட்ருக்கானா?’

‘ஐய அதப்பத்தி ஒண்ணும் நமக்குத் தெரியாதண்ணே’ – கூண்டில் மாட்டிக் கொண்டாற்போல பிரடரிக் உணர்ந்தான்.

என்ரிக் செருமிக் கொண்டான். ‘நான் இல்லாங்காட்டி பார்க்கர் இங்க வந்திருக்க ஏலாது. எவ்வளவோ சிரமப்பட்டு நான் அந்த மனுசனுக்கு ஒத்தாசை செஞ்சேன். இப்ப அவன் அமெரிக்காக்காரன் கம்பெனில நல்ல உத்தியோகத்திலயும் இருக்காப்டி. சம்பளமே டாலர்லதான். இன்னும் பாக்கியத் தரல்லே.’ என்ரிக் ஒரு பத்திரிகையை எடுத்து வேகவேகமாய் விசிறிக் கொண்டான். மார் முடிகள் தெரிய மேல்பட்டனைக் கழற்றி விட்டுக் கொண்டான். ‘நீ எப்பிடி உள்ள வந்தே?’

‘கள்ளத்தோணி! மத்தாளுக மாதிரிதான்!’

‘நல்ல விஷயம். அப்டின்னா உன்னை இங்க யாருக்கும் தெரியாது. ஸ்பானிஷ் பேசுவியா?’

‘பேசுவேண்ணே’
‘நல்லாப் பேசணும், தட்டுத் தடுமாறாம… இங்க வர்ற சில பசங்க கிளியாட்டம் பேசுவேன்னுவானுங்க. பேசுடான்னா ஊமையா நிப்பானுங்க.’

‘நான் நல்லாப் பேசுவேண்ணே’

‘உன் பேரென்ன?’

‘ரபேல் கோம்ஸ்’ – பார்க்கர் அந்தப்பெயரைத்தான் சொல்லச் சொல்லியிருந்தான்.
என்ரிக் சொல்லிப் பார்த்துக்கொண்டான். ‘பரவால்ல. வெனிசூலாப்பேர்தான். எவ்ள பணம் கொண்டாந்திருக்க?’

மாட்டிக் கொண்டாற்போல பிரடரிக் திரும்பவும் உணர்ந்தான். ‘200 bee தாண்ணே. அதும் நான் வேலைக்குப் போயி, சம்பாதிச்சி அனுப்பறேன்னு கடன் வாங்கிட்டு வந்தது.’

‘200. பார்க்கர் பாக்கியும் அவ்ளதான்! ஏய் என்னை டபாய்க்கிறயா நீயி? பார்க்கரை எனக்கு நல்லாத் தெரியும். மவனே என்ட்ட வெச்சிக்கிட்டே, ஆப்பு அடிச்சிருவேன்!’

‘தலைவா, நான் இங்க புது ஆளு. அவ்ளோ முட்டாத்தனமா நடந்துக்குவேனா?’

‘ச், என் நேரத்தை வீணாக்கறே நீயி. 200 bee! பத்தவே பத்தாது. பேசாம ஊருக்கே போ. நிறையப் பணத்தோட ஒருமாசம் களிச்சி வா. இப்ப இங்கத்திய நிலைமையும் சரியா இல்ல. இந்த ஆபிசரு மாத்திப் போனாலும் போயிருவாராம். கொஞ்சம் போனால் நிலைமை சரியாயிரும்… உன்னாட்டம் ஏகப்பட்ட பேர் இங்க வர்றாங்க என்கிட்ட. ஓ-ன்னு கதர்றாங்க! புண்ணியம் பண்ணி விடுங்க சாமி-ன்றாங்க. திரும்ப வர்றேன், பாக்கிய அடைச்சிர்றேன்றானுங்க. ஆனா காரியம் ஆயாச்சின்னா அவ்ளதான். அப்றம் கண்ணுலயே மாட்றதில்ல. ஆபிசர்ட்ட நான் போயி, பாக்கி வரல்ல சார்னு சொல்ல முடியுமா?’

‘வாஸ்தவந்தாண்ணே!’ என்று அவசரமாய்ச் சொன்னான் பிரடரிக். நிலைமை கபடிப் பிடியாய் கிடுக்கிப் பிடியாய் இருந்தது. ‘ஆனா அண்ணே அந்த மாதிரி ஆள் நான் இல்ல. இந்த இரநூறு பத்தாதுன்னா வேலைக்குப் போனதும் தலைப்பாடா உங்க கடனை அடைக்கிறேன்!’

அப்போது மூணு கோழிக் குஞ்சுகளும் இரண்டு பன்றிகளும் கொல்லையில் இருந்து உள்ளே நுழைந்தன. என்ரிக் நிமிர்ந்து உட்கார்ந்து அக்குள்-தாங்கியை வீசி அவற்றை விரட்டியபடியே ஸ்பானிய மொழியில் வைதான். ‘கொல்லைக் கதவைச் சாத்தி வையிடின்னு இந்த இழவெடுத்த பொம்பளை கிட்ட சொல்லிச் சொல்லி மாய்ஞ்சிட்டேன். செவிடாப் போயிட்டாளா சனியன். மகா அலட்சியம்!…’ அவன் திரும்பி பிரடரிக்கைப் பார்த்துக் கண் சிமிட்டினான். ‘ச், பரவால்ல. நம்ம விஷயம் அவளுக்குப் புரியாது. இங்கிலீஷ் தெரியாது அவளுக்கு.’

என்ரிக் திடீரென்று, ‘கோமோ ஸே பாமா?’ என்றான். பிரடரிக் உடன் பிரகாசமாகி ‘ரபேல் கோம்ஸ்’ என்றான். எனக்கு ஸ்பானிய மொழி தெரியும் மச்சான்!

‘பரவால்ல. பொழைப்பை ஓட்டிருவேன்னு தோணுது. பெரிசா உதவி செய்யறேன் உனக்கு!…’ எழுந்து கொண்டு விந்தி விந்தி அடுத்த அறைக்குப் போனான் என்ரிக். வைத்துவிட்டுப்போன காகிதங்களை யெல்லாம் நேரத்துக்குக் கைக்கு எட்டாமல் அள்ளி யெடுத்து வைத்து விடுகிறாள் பெண்டாட்டி, என்கிறதாய் முணுமுணுத்தபடியே எதையோ தேடினான்.

திரும்பி வந்தவன் ‘என்ட்ட ஒரு பிறப்புச் சான்றிதழ் இருக்கு. எப்பிடி வந்ததுன்னு கேக்காதே. ஒரு பையனுக்காக வாங்கினது. வரேன்னுட்டுப் போனான், வாரம் மூணு ஆவுது. ஆளைக் காணம். இந்தா இதை வெச்சிக்க. உன் பேரை நீ இப்ப இதன்படி மாத்திக்கணும்.’ அதைக் கொடுத்து பிரடரிக்கை வாசிக்கச் சொன்னான். அரசாங்க முத்திரையும் கையெழுத்தும் போட்டு நிஜ சான்றிதழ் போலவே இருந்தது அது. என்ரிக் அவன் முதுகுப் பக்கம் எட்டிப் பார்த்தபடி, ‘கவனி. ஜோஸ் மொரேல்ஸ். அப்பன் தெரியாத பிள்ளை… நீதான் அது! ஞாபகம் வெச்சிக்க. ஆமாம், உனக்கு அப்பனைத் தெரியவே தெரியாது! அம்மா வண்ணாத்தி. பிறந்த தேதி, பிறந்த இடம் – ஞாபகம் வெச்சிக்கணும். வயசையும் பாத்துக்க. ஏடாகூடம் பண்ணிறப்டாது. குழப்படி பண்ணினே, நாம எல்லாருக்கும் ஜெயில்தான்! வெளிய வரேலாது…’

‘சரி. அப்பறம் அந்த செடுலா…’

‘இன்னிக்கு நேரம் ஆயிட்டது. அத்தோட இந்தப் புது விவரம்லாம் உனக்கு நல்லா ஞாபகம் இருக்கணும். ஆபீசுக்குக் கூட்டிட்டுப் போயி நாளைக்கு எல்லாம் பண்ணித் தாரேன். இன்னொரு விஷயம், எப்பயாவது இந்த செடுலாவுக்கு எவ்வளவு குடுத்தேன்னு யாராச்சும் கேட்டா என்ன சொல்லுவே?… மூணு bee. ஸ்டாம்பல மூணு bee – அரசாங்கம் வாங்கறது அவ்வளவுதான். மடத்தனமா 300 குடுத்ததாச் சொல்லி அப்பன் குதிர்க்குள்ள இல்லன்னு மாட்டிக்காதே…’

இரா தங்க மலிவாய் இடம் கிடைக்குமா என்று பிரடரிக் கேட்டபோது, வீட்டிலேயே துணித்தூளி கட்டிக் கொடுத்தான் என்ரிக். பேசாம வெளியிலேயே எங்கியச்சும் போயிருக்கலாம் என்கிறாப்போல ராத்திரி பூராவும் என்ரிக் கேள்வி மேலே கேள்வி கேட்டு தொணதொணத்தான். ஆபீஸ்ல என்னென்ன கேப்பாங்க. அவன் என்ன சொல்லணும்…

காலை விடிந்ததும் சினிமாவில் வரும் வேவுகாரன் போல திரும்ப ராமாயணம்! பிரடரிக்கைத் தெருவோரம் ஒதுக்கி, ‘பாரு. நான் மாடிக்குப் போறேன். நீ அந்தப் பக்கம் நின்னுட்டிருக்கே, தெருவில். ஜன்னல்லேர்ந்து நான் வெளியே எட்டிப் பார்க்கிறாப்போல, இந்தா பாரு /ஒரு மஞ்சள்க் கைக்குட்டை/ இதை எடுத்து முகத்தைத் துடைச்சேன்னா, காரியம் பலிதம் ஆயிட்டது. நீ மாடிக்கு வந்து செடுலா வாங்கிக்கலாம்னு அர்த்தம்.’ பின்புறப் பாக்கெட்டிலிருந்து சிவப்புக் கைக்குட்டையை எடுத்துக் காட்டினான். ‘இதை எடுத்துத் துடைச்சிக் கிட்டேன்னு வையி. நிற்கிற சோலியே வெச்சிக்காதே. ஜுட் விட்றணும். ஊரையே விட்டு, ‘எம்மா தூரம் ஓட முடியுமோ ஓடிறணும்!’

‘ம்’ என்றான் பிரடரிக். ‘இம்மா தூரம் அல்ட்டிக்கறா மாதிரி ஒண்ணும் ஆயிறாது.’

‘என்ட்டச் சொல்லாதே’ என்றான் என்ரிக். ‘என் காரியம் எனக்குத்தான் தெரியும். நான் சொல்றதை நீ கேட்டு கோளாறா நடந்துக்க. அப்பறம்… வேலை முடிஞ்சதும்… கீழ போற நீ. கடையொண்ணு பாத்தியா. அங்க போயி உக்காந்து நிதானமா ஒரு பீர் வாங்கி அடிச்சிட்டிரு. ஆபீசர் அங்க வருவார். அவரோட கைகுலுக்கினாப் போல நீ நைஸா 200 bee கைமாத்திறணும். விளங்குதா?’

‘ம்’

‘அத்தோட, யாராவது போலிஸ் பாத்தா ஒரே இடத்ல நின்னுட்டிருக்கப்டாது. அப்டி இப்டி உலாத்திட்டிருக்கணும். சரியா?’

—-
அத்தோடு முடித்துக் கொண்டு என்ரிக் அலுவலகத்துக்குள் போனான். தெருவின் எதிர்ப்பக்கம் தனியே விடப்பட்டான் பிரடரிக். காத்திருந்தபோது கன்னா பின்னாவென்று கற்பனைகள் வந்தன. உடம்பு குளிர்ந்து வியர்த்தது. எத்தனை நேரம் இப்பிடி நின்னுட்டிருக்கணுமோ என்றிருந்தது. திடீரென ஜன்னலில் என்ரிக். என்ரிக் முகம் துடைத்துக் கொண்டிருந்தான்!

பிரடரிக் உற்றுப் பார்த்தான். ரெண்டு கைக்குட்டையாலும் என்ரிக் முகந் துடைக்கிறான். பகீரென்றிருந்தது. இதுக்கு என்ன அர்த்தமோ- சரி பர்றந்துற வேண்டிதான், என்று காலெடுக்கும்போது என்ரிக் சிவப்பைக் கீழே போட்டுவிட்டு மஞ்சள் கைக்குட்டையால் முகம் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தான். யப்பா!… வயத்துல பாலை வார்த்தாய். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பிரடரிக் உள்ளே போனான்.

மேஜைக்கு அந்தாண்டைப் பக்கம் உட்கார்ந்து ஒரு சில்லரைப் பயல் அவனை என்னென்னவோ கேள்வி கேட்டான். எங்கயிருந்துதான் பதில் வந்திச்சோ, நம்மாள் ஸ்பானிஷில் பொறிஞ்சு தள்ளினான். ஆகா, கடவுளின் கருணை! அவன் பிரடரிக்கிடம் ஒரு காகிதத்தைத் தந்து காரகாஸ் அமைச்சகத்தில் இருந்து முறையான செடுலா வரும்வரை இது போதும், என்றான்.

அதைக் கையில் வாங்கியதும் பிரடரிக்குக்குப் பறந்துவிடத் துடித்தது. ஆபீசராவது என்ரிக்காவது… ஆனால் தெரு குறுக்கே என்ரிக் நின்றபடி கடையை ஜாடை காட்டினான். கடையுள் போய் பீர் சொல்லிவிட்டு, பிரடரிக் என்ன செய்ய என யோசிக்க ஆரம்பித்தான்.

திடீரென அவன் முதுகில் ஒரு ஷொட்டு! ஒராள் ஸ்பானிஷில் பேசியதும் கேட்டது. எதிர்பாராத இந்தத் தட்டுதலில் அவன் வெலவெலத்துப் போனான். மாடியில் அவனிடம் காகிதம் தந்த அதே பயல்தான். நிதானப் பட்டு, ஸ்பானிஷில் அவனுடன் பேசி, கைகுலுக்கி, பேருக்கு ஒரு 20 bee கையில் திணித்துவிட்டு, மீதி பீரை யோசிக்காமல் விறுவிறுவென்று நடையைக் கட்டினான்.

வெளியே வந்தால் அந்தப் பக்கம் காத்திருந்த என்ரிக்கையே அறியாதவனாய் இருந்தான். ‘ஏய் ஏய் நில்லு!’ ஆனால் பிரடரிக் சிட்டாய்ப் போனான். ஒற்றைக் காலுடன் அவனால் பிரடரிக்கைப் பிடிக்க முடியாது என்று தெரியும்!

ரெண்டு வாரத்தில் ஜோஸ் மொரேல்ஸ் என்கிற, அப்பனை அறியாத, வண்ணாத்தி மகனான வெனிசூலாக்காரனுக்கு பந்தாவான அமெரிக்கன் எண்ணெய்க் கம்பெனி ஒன்றில் வேலையானது. ஆனால் என்ரிக்?… அவன் இன்னும் சிரமதசையிலேயே, பின்வாசல் வழியே வந்து சேர்கிறவர்களுக்கெல்லாம் செடுலா வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கலாம். யாருமே தனது ஆபத்தான உபகாரங்களுக்குத் தன்னைக் கவனித்துக் கொள்வதில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். அல்லது இப்படிக் கூட இருக்கலாம்… அவன் போலிசில் மாட்டி, அவர்கள் அவனை ஜெயிலுக்குள் எத்தி, சாவியைத் தூர விட்டெறிந்திருக்கலாம்.

ஆங்கில மூலம்: சாமுவேல் செல்வான் (மே.இ.தீவுகள்)
தமிழில்: சைதன்யா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *