பாசறைச் சிங்கம் பகவத்சிங் !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,561 
 

நீராவி எப்போதும் என் பார்வையில் ஒரு புத்தகப் புழுவாகத்தான் தெரிந்தார்.

நீராவி என்கிற பெயா் ஏதோ வித்தியாசமாக தெரிகிறதா? அது, அவரது பெற்றோர்கள் வைத்த பெயா்தான். அவரது குல தெய்வமான நீர் காத்தலிங்கம் என்பதின் சுருக்கம் தான், நீராவி!
அவர் யாரைச் சந்தித்தாலும் புத்தகத்தைப் பற்றியே தான் பேசுவார். புத்தகம் படியுங்கள். புத்தகம் படியுங்கள் என்று சதா அறிவுரைகள் வழங்குவார். அவரை தெரிந்தவா்கள் மத்தியில் அவருக்கு வைத்திருக்கும் பட்டப்பெயா் புத்தகப் பைத்தியம்.

தமிழ்வாணணுக்கு கறுப்புக் கண்ணாடி எப்படி அடையாளமோ? அப்படிதான், நீராவிக்கு அவரது தோளில் தொங்கும் ஜோல்னாப்பை. அதில் எப்பவும் நான்கு அல்லது ஐந்து புத்தகங்களாவது இருக்கும்.

அவருடன் பேசும்போது, அவர் நினைத்தது மாதிரி நாம் மிகச்சரியான பதிலையோ அல்லது தகவலையோ சொல்லிவிட்டால் போதும் “யெ…ஸ்…” என்று காட்டுக் கத்தல் கத்துவார். நாம் இப்படி காட்டு கத்து கத்துறோமே அருகில் இருப்பவா்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கூச்சமோ நாச்சமோ அவருக்கு இருந்ததில்லை..

நீராவிக்கு கோபம் வந்துவிட்டால், அவரது வயதான தோற்றத்திற்கும் கோபத்திற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பயங்கரமாகத் தெரிவார்.

நான் எத்தனையோ முறை அவரிடம் சொல்லிவிட்டேன்.

“ஐயா, எனக்கு புத்தகம் படிக்கிறதெல்லாம் பிடிக்காது. நானொரு சாப்பாட்டு ராமன். அதிலும் அசைவப் பிரியன். நீங்களோ புத்தகப் பிரியா். எனக்கும் உங்களுக்கும் எப்போதும் ஒத்துவராது. என்னை உங்களோடு எங்கேயும் வரச்சொல்லி வற்புறுத்தாதீங்க”.

அந்த மனுசரும், என்ன சொல்லியும் கேட்க மாட்டேனுட்டு திரும்பத் திரும்ப என்னை கூப்பிடலாமோ?

இன்றும் அப்படித்தான் அவரிடம் மாட்டிக்கொண்டேன்.

டீக்கடையில் என்னைப் பார்த்ததும், “என்னங்க கண்ணன் இன்னைக்கு வேலைக்கு எதுவும் போகலையா?”

தினசரி பேப்பா் படிக்கும் மும்பரத்தில் “ஆமாங்க ஐயா” என்று பதில் சொல்லி தொலைத்துவிட்டேன். வந்தது வினை!

“பச்சையப்பன் காலேஜ்க்கு எதிரில் புத்தகக் கண்காட்சி நடக்குது. நீங்களும் வாங்க ஒரு எட்டு பொயிட்டு வந்துடலாம்”.

திடுக்கென்றது எனக்கு!

தப்பிக்க என்ன வழி?

ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனிமேல் எங்கே பார்த்தாலும் என்னிடம் பேசாதவாறு கோபமாக எதையாவது பேசிடலாம்.

“ஐயா, என்னெ தயவு செய்து ஆள விடுங்க. டிரான்ஸ்போர்ட்டுல கண்டக்டரா வேலை செய்து ரிட்டையிடு ஆயிட்டிங்க. உங்க செலவுக்கு பென்சன் பணமிருக்குது. பஸ்ல போறதுக்கும் பஸ் பாஸ் இருக்குது. என்னோட நிலைமை அப்படியில்ல. உங்களுக்கு பொழுது போகலங்கிறதால, நீங்க தொட்டுக்க ஊறுகாய் நானில்ல! ஆள விடுங்க”.

கடகடவென அவர் முகத்தை நேருக்கு நேரா பார்க்காமலே சொல்லி முடித்தேன்.

“கண்ணா நீங்க புத்தகம் வாங்க வேண்டாம். எனக்கு ஒரு பேச்சு துணைக்கு வாங்களேன்”.

இவரு என்ன மனுசன், என்னெ இப்படியா வறுத்தெடுத்து உலையில போடுவாரு.
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் பிரசங்கம் செய்ய தொடங்கிவிட்டார்.

“கண்ணா, நான் கண்டக்டா் வேலையில இருக்குறப்போ தொழிற்சங்க தலைவரா இருந்தேன். தொழிலாளா்களோட பிரச்சனைகள், அதிகாரிகளோட அதிகார மமதைகள், குடும்பப் பொருளாதார நெருக்கடிகள், குடும்பச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், இத்தனைக்கும் நடுவிலேயும் நான் ஒரு நாள் கூட புத்தகம் வாசிக்காமல் இருந்ததில்லை. புத்தகம் படிக்கிறது எவ்வளவு சுகமானது தெரியுமா? ஒரு புத்தகம் படிக்கிறது ஆயிரம் ஆசிரியா்கள் சொல்லித்தறதுக்கு சமம். புத்தகம் படிக்கும்போது அதை எழுதியவரோடு உட்கார்ந்து பேசுறது போலவே இருக்கும், தெரியுமா? நீ ஒரு முறை படிச்சுப்பாரு அப்போ புரியும் நான் சொல்லுறது உண்மையா? இல்லையான்னு!.
அவர், பேசப் பேச எனக்கு நெருப்புல நிக்கிற மாதிரியே இருக்கு.

அப்பாடி! நாங்க, இறங்க வேண்டிய பச்சையப்பன் காலேஜ் பஸ் ஸ்டாப் வந்துருச்சு.
சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜனக்கூட்டம் சமுத்திரம் போல் பரவி இருந்தனா்.
நீராவியின் தொல்லையிலிருந்து விடுபட நினைத்தேன்.

நீராவியின் பார்வையிலிருந்து விலகி ஜன சமுத்திரத்தில் கலந்து, ஒரு புத்தக ஸ்டாலுக்குள் நுழைந்து, ஒருவழியாக அப்பாடா! என்று நிம்மதி பெரு மூச்சு விட்டேன்.

புத்தக ஸ்டாலுக்குள் திரும்பிய பக்கமெல்லாம் புத்தகங்கள் வரிசையாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சிறுவா்களுக்கென்றே ஒரு பிரிவு, மாணவர்களுக்கென்றே ஒரு பிரிவு, சிறுகதைகள், நாவல்கள், கவிதை, சினிமா, நாடகம், தன்னம்பிக்கை,ஆன்மிகம்,ஆராய்ச்சிகளுக்கென்று,எத்தனை எத்தனை தலைப்புகள்,எத்தனை எத்தைனை புத்தகங்கள்.

புத்தக ஸ்டாலுக்குள் புத்தகங்கள் அதிகமா? புத்தகங்கள் வாங்க வந்துள்ள ஜனங்கள் அதிகமா? யூகம் செய்ய முடியவில்லை.

எனக்குப் பார்க்க பார்க்க பிரமிப்பு!.ஏதோ ஒரு புது உலகத்துக்குள் பிரவேசிக்கிறேனோ?
புத்தகங்கள் எடுத்து படித்துப் பார்க்கிறார்கள்.தோ்ந்தெடுத்தப் புத்தகங்களை கைகளில் அடுக்கிக் கொண்ட அவர்களது லாவகம். என்னையும் பார்க்கிறேன்.வெட்கம் என்னை பிடிங்கித் தின்னது. என்னை அறியாமலே ஒரு புத்தகத்தை எடுத்தேன். படிப்பது போல் பாவணை செய்ய நினைத்து, மெல்ல மெல்ல படித்துப் பார்த்தேன்.

பகத்சிங்கின் குடும்பத்தில் அனைவருமே நாட்டின் விடுதலைக்குத் தங்களை தந்தவர்கள். பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங், அவருடைய சகோதரா் அஜுத்சிங், பாட்டனார் அா்ஜீன் சிங், அனைவருமே நாட்டு விடுதலைக்கு போராடியவா்கள். வழி வழியாக ஏறத்தாழ ஜமீன்தார் குடும்பம் தான்.

தாய் வித்யாகெளா் மடியிலே குழந்தையை கிடத்தி இவன் அதிர்ஷ்டக்காரன் என்று சொல்லி,பகத்சிங் என்று பெயர் சூட்டுகிறார்கள். பனிரெண்டு வயது பகத்சிங் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்க சபதமேற்கிறார்.

தூக்கிலிடப்பட்ட போது பகத்சிங்கின் வயது இருபத்தி முன்று.

அவா்,கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்: என் முகத்தை கறுப்புத் துணியால் மூடி, மரணத்தைக் கண்டு பயப்படும் கோழையாக்கி விடாதீா்கள்!. என் மூச்சு நிற்கும் வேளையில் என் தாய் மண்ணைப் பார்த்தவாறே மரணத்தைத் தழுவ விரும்புகிறேன்.

படிக்கும் வார்த்தைகள் என் உடலில் ஏதோ செய்கிறது!.புத்தகத்தை மூடி விட்டு ஒரு கணம் கண்ணை மூடினேன்.

பகத்சிங் தோற்றம் தெரிந்தது!
மெல்ல கண்ணைத் திறக்கிறேன்.
என் எதிரே நீராவி நிற்கிறார்!

இப்படியானவர்களால் தான் அல்லது இப்படியானவா்கள்தாம் பகத்சிங்காக மாற முடியுமோ?
ஆ! அவா் சுதந்திரப் பாசறைச் சிங்கம்; இவா் சுகமான படிப்புலக பகவத்சிங்!.
நாளை…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *