பழி கரப்பு அங்கதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 3,112 
 
 

முல்லைப் புங்கனூர் சங்கரலிங்க அண்ணாவி இசைப் பரம்பரை யில் வந்தவர் வாகைக்குளம் முத்த நல்லாப்பிள்ளை எனும் மகா வித்வான். திருவிதாங்கூர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மா மகா ராஜா அரசவையில் பாடி பட்டு சால்வையும் நவரத்தின கண்டி ஆரமும் சன்மானம் பெற்றவர். பஞ்சலிங்கமங்கலம் பாவநாசம் அவரது மூத்த புதல்வர். பாலபாடம் தகப்பனாரிடம், பலமான அஸ்திவாரம். மீதி சிட்சை திருநாவாய் பரம்பரையில் வந்த சிம்மம் சிவாநந்தம் பிள்ளை யிடம். விசேடமான சில கீர்த்தனைகளை காளிகேச நல்லூர் கந்தையா பிள்ளை பாகவதரிடமும் அழகிய மங்கலத்து யக்ஞ நாராயண சாஸ்திரிகளிடமும் கற்றுத் தேர்ந்தார். வேய்ங் குழலிலும் பரிச்சயம் உண்டு என்றாலும் வாய்ப்பாட்டுத்தான் பிரதானம்.

ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதில் இருந்து இசையுலகின் சக்ரவர்த்தி அவர். கிரீடமும் செங்கோலும் சிம்மாசனமும் கொடியும் குடையும் முரசும் பட்டத்து யானையும் புரவியும் இல்லாவிட்டால் என்ன? பஞ்சம் பாட்டில் பேரரசர்தான்? சினிமாப் பாட்டைத் தாண்டி இசை கேட்பவர்களுக்கு அவர் பெயர் தெரியாமல் இருக்க நியாய மில்லை . இன்றும் இசையுலகில் பயபக்தியுடன் உச்சரிக்கப் படும் பெயர்களில் ஒன்று பஞ்சம்.

மதுரை சோமசுந்தரத்துக்குப் பிறகு பெருந்திரளான ரசிகப் பட்டாளம் உடையவர் பஞ்சம். இளவயதில் பூதலிங்க சுவாமி கோயில் பிரகாரத்தில் பாடியதைக் கேட்டு, பூதப்பாண்டி சோணாசல அண்ணாவி தோளோடு தழுவிக்கொண்டு “சிங்கம்டா” என்று சொன்னதாகச் சொல்வார்கள்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , நாமக்கல் கவிஞர் பாடல் கள் சிலவற்றை சுரப்படுத்திப் பாடி அவற்றைப் பிராபல்யப் படுத்திய பெருமை பஞ்சத்துக்கு உண்டு. பஞ்சலிங்க மங்கலம் என்றாலும் பாவநாசம் என்றாலும் இசைப் பிரியர்கள் அறிவார்கள். என்றாலும் அவரை வெகு செல்லமாக ‘ரஸிகாஸ்’ அழைக்கும் பெயர் பஞ்சம் என்பது. இங்கு பஞ்சம் என்பதை வறுமை எனும் பொருளில் கையாளாமல் ஐந்து எனும் பொருளை ‘வாசகாஸ்’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்படுகிறார்கள்.

பெயருக்கேற்றபடி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் அவர் அத்தாரிட்டி என்றார்கள். மேலும் சிவபெருமான் மீது பாடப் பெற்ற சிறப்பான ஐந்து கீர்த்தனைகளை ‘பஞ்ச லிங்கக் கீர்த்தனைகள்’ என்று அவர் பிரபலப்படுத்தி வந்தார்.

எண்பதுக்கும் மேற்பட்ட இசைப் பேழைகளை ரசிகர்களுக்கு வழங்கி இருந்தார். அவற்றுள் அருணாசலக் கவிராயர் கீர்த்தனைகள், கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து, பாரதியார் பாடல்கள், திரு அருட்பா, கோளறு பதிகம், அபிராமி அந்தாதி, திருப்பாவை, பாவநாசம் சிவன் கீர்த்தனைகள், பெரியசாமித் தூரன் கீர்த்தனைகள் போன்ற இசைப் பேழைகள் எண்ணற்ற பதிப்புகள் விற்றுத் தீர்ந்தன. ஆனந்த பைரவியில் ஸ்ரீராம தாசா இயற்றிய ‘பலுக்கே பங்கார மாயனா கோதண்டபாணி’ எனும் கீர்த்தனை மாத்திரம் கொண்ட இசைப் பேழை லட்சம் பிரதிகள் விற்றன என்றனர். –

மேலும் எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களில் கனராகங்களும் ஜனரஞ்சக ராகங்களுமான கல்யாணி, தோடி, மோகனம், ரீதி கௌளை, சிந்து பைரவி, சங்கராபரணம், கரகரப்பிரியா, லதாங்கி, காம்போதி என நீண்டதொரு பட்டியல் அது – தனித்தனி ஒலிப் பேழை களாக வெளியிட்டுள்ளார். என்றாலும் ராகம் – தானம் – பல்லவியில் நாட்டைக் குறிஞ்சியை அவர் பாடிக் கேட்க வேண்டும் என்பார்கள். ‘சிறந்த நம் நாட்டை குறிஞ்சி என்பார்’ என்பது பல்லவி.

சபையில் அமர்ந்ததும் அவருக்கு நாடி புலப்படும். மகுடி என்பதும் பாம்பினத்துக்கு மாத்திரம் ஆனதல்ல. பொதுவாக எல்லா வகையிலுமான ரசிகர்களையும் திருப்திப்படுத்திப் பாடக் கூடியவர். மற்ற வித்வான்களைப் போல கஞ்சத்தனமாகவும் வஞ்சகமாகவும் துக்கடாக்களுக்கு மாத்திரம் தமிழ்ப்பாட்டு பாடுவது என்றில்லாமல் பாதிக்குப் பாதி தமிழ்ப்பாட்டு பாடுவார். சிலசமயம் பிரதான அயிட்டமே தமிழ்க் கீர்த்தனையாக இருக்கும். அன்றைய சூழலில் அதுவே பெரும் புரட்சி.

ஒரு கச்சேரியில் பாரதிதாசன் பாடல் ஒன்றைப் பாடியபோது, பாரம்பரிய சங்கீத ரசிகர் ஒருவர், முதியவர், நாமதாரி, எழுந்து நின்று, ”அடுத்தாப்ல ஈவெ ராமசாமி நாயக்கர் எழுதுன பாட்டையும் பாடிப் பிடு” என்று கத்தியதாகச் சொல்வார்கள். அதுவும் இசைச் சூழல்தான். – விருத்தங்களை சொல்லைச் சிதைக்காமல், திருத்தமாகப் பாடு வதில் பஞ்சலிங்க மங்கலம் வல்லாளர். பல பாடகர்களுக்கு தாய் மொழியும் தெரியாது, கீர்த்தனை இயற்றப் பட்டிருக்கும் மொழி யிலும் பயிற்சி இல்லாது, எழுதி வைத்து மனப்பாடம் செய்து, குருநாதர் பாடிக் காட்டிய வரியில் நின்று பிறழாமல் பாடுவார்கள். குரு நாதனுக்கு எந்த இடத்தில் எப்படி சங்கதி விழுந்ததோ சீடனுக்கும் அந்த இடத்தில் அப்படியே சங்கதி விழும். தும்மல்கூட விழும்.

பஞ்சலிங்கமங்கலமோவெகு கல்பனைகள் கொண்டவர். நிறைய வித்வான்கள் தனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்பதையே குடியரசுத் தலைவர் விருது போல் சட்டையில் கொருத்துத் திரிபவர்கள். ஆனால் பஞ்சலிங்கம் சொந்தமாகக் கீர்த்தனைகள் இயற்றவும் சுரப்படுத்தவும் பாடிப் பிரபலப்படுத்தவும் புலமை உடையவர்.

சென்னையில், ஒரு டிசம்பர் சங்கீத சீசனில் வெவ்வேறு சபாக் களில் வெவ்வேறு பாடகிகள் ”என்றைக்கு சிவ க்ருபை வருமோ?” என்று பாடியது கேட்கக் கிடைத்திருக்கிறது. ஆனால் அது, என்றைக்கு ரேஷனில் கிஷ்ணாயில் வருமோ எனும் பாவத்தில் இருந்தது. ஆனால் பஞ்சம் அப்படியல்ல. சுத்தமான பாவம் அவரிடம் பெருக்கெடுத்துப் பாயும். இங்கும் ஒரு சிறு குறிப்பு. பாவம் என்பதை ‘பாக்கு’ போல் உச்சரித்துப் பொருள் கொளாமல், ‘பாம்பே’ போல் உச்சரித்துப் பொருள் கொளல் வேண்டும்.

சுத்தமான இசைப்புலமை போல, பஞ்சத்துக்கு நல்ல மொழி ஆர்வமும் உண்டு. சில சமயம் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி மலர்களில் அவரது கவிதைகளை நீங்கள் கண்ணுற்றிருக்கலாம். பெரும் பான்மையான நமது தொழில்முறைக் கவிஞர்கள் எழுதுவதை விட ‘அது மோசமாக இருக்காது. குடியரசுத் தலைவர்கள், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், நீதிபதிகளின் மனைவிகள், மருமகள்கள் எழுது வதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

என்றாலும் பஞ்சம் சமயங்களில் தனது ஆங்கில அறிவையும் புலப்படுத்த பிரயாசைப்படுவார். இன்று சங்கீத உலகில் அஃதோர் குணப்படுத்த முடியாத சமூக வியாதி போலப் பரந்து விட்டது. நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ் தெரிந்தவர் சபையில், The next composition is of Thyagaraja, in the raga Atana, set to Adi Thala என்பார் பஞ்சம். தெலுங்கு கன்னட கீர்த்தனைகளையும் மராத்தி ‘அபங்’ களையும் கேட்டுப் புரிந்து கொள்கிறவர்கள் தானே எனும் எண்ணம் எழாதோ என்னவோ! இல்லை சான் ஃபிரான்சிஸ்கோவில் பாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றுமோ என்னவோ? கர்நாடக இசை மும்மூர்த்திகள் ரசிகர்களின் திருச்செவி சாற்ற வேண்டும்!

மூத்த சங்கீத வித்வான், பிதாமகன், ஆயிரம் பிறை கண்ட கணியான் குளம் சின்னையா பாகவதர், பஞ்சத்தைப் பற்றிக் கூறிய பாராட்டு, ”நல்லாப் பாடவும் செய்கிறான், ஏகமா சம்பாதிக்கவும் செய்கிறான்” என்பது.

பஞ்சம் போய் வராத மேநாடு இல்லை . இந்தியக் கடவுச் சீட்டு செலாவணி ஆகிற எல்லா நாட்டுக்கும் போய் வந்திருக்கிறார். இன்னும் ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்கான வாய்ப்பு மட்டும் வரவில்லை . நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில், மடாதிபதி களின் சந்நிதானத்தில், ஆதீனங்களில், வெளிநாட்டுத் தலைவர்களுக் கான விருந்துகளில்…

பஞ்சத்துக்கு குறை ஒன்றுமில்லை. மூன்று மக்களுக்கும் தனித் தனிப் பங்களாக்கள். தனித்தனி நவீன சொகுசு ஊர்திகள், நல்ல நிலை யில் செய்து கொடுக்கப்பட்ட திருமணம், பேரன் பேத்திகள்…

வாட்டசாட்டமான தோற்றப் பொலிவும், முக வசீகரமும், நிறைந்து குலுங்கும் பெருஞ்சிரிப்பும், பஞ்சம் உண்மையில் இசைச் சக்கரவர்த்திதான். பிற இசைச் சக்கரவர்த்திகளான ராஜரத்தினம் பிள்ளை , தியாகராஜ பாகவதர் போல, தங்கத் தட்டில் பால் கஞ்சி குடிக்கக் கொடுத்து வைத்தவர் தான்.

சம்பிரதாயமாகச் சொல்வார்கள் – போன பிறவியில் பஞ்சம் கலைவாணிக்கு தேனில் அபிஷேகம் செய்து புண்ணியம் ஈட்டி இருப்பார் என. எல்லோர்க்கும் அது வாய்ப்பதில்லை. எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஷெனாய் ஊதுகிறார்கள்? எல்லோர் வாத்தியத் திலுமா பண்டிட் பிஸ்மில்லா கானின் தேனருவி பொழிந்தது? எத்தனை ஆயிரம் காலமாக வேய்ங் குழல் ஊதுகிறார்கள்? அதெங் ஙனம் பண்டிட் ரோணு மஜும்தார் அல்லது பண்டிட் ஹரி பிரசாத் சௌராஸ்யா ஊதும் போது தேனாய்ப் பொழிகிறது? இஞ்சியும் எலுமிச்சையயும் சேர்த்துப் பிழிந்தது. எனவே திகட்டுவதில்லை.

பஞ்சத்துக்கு சங்கீதப் பரிசாரகக் கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்த இசை சத் சங்கத்தில் அவர் ஆப்ரிக்க இசைக் குறிப்பு ஒன்றில் மோகனத்தின் சாயலும் சீன இசைக் குறிப்பு ஒன்றில் தோடி யின் சாயலும் இருப்பதை பாடிக் காட்டி நிறுவியவர்.

சொல்வார்கள், சரஸ்வதி கடாட்சம் பூரணமாய்ப் பெற்றவர் களுக்கு மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை கிட்டுவதில்லை என. பஞ்சம் அதற்குமொரு விதிவிலக்கு என்றாகி விட்டது.

குவாலியர் கரானா அல்லது பனாரஸ் கரானாவைச் சேர்ந்த இந்துஸ்தானி பாடகர் ஒரு கச்சேரிக்கு ஒன்றரை லட்சம் வாங்கும் போது பஞ்சம் ஒரு லட்சம் வாங்குவதைக் குறைகாண முடியாது. மேலும் அஃதோர் Demand and Supply theory. பஞ்சம் வந்து பாடுவதை ஒரு கௌரவமாகக் கருதும்போது, அதற்கான விலையைக் கோருவது அநியாயமாகாது. மேலும் அது ஒரு ‘காதல் காலறுவானே’ அல்லது ‘நேசமான நீசனே’ என்று சினிமாவில் பாடுகிறவர் வாங்கும் தொகையை விடக் குறைவானதுதான்.

ஒன்று உறுதி. பஞ்சம் கச்சேரி எனில் அரைமணிக்கூர் முன்னால் போக முடியவில்லை என்றால் எத்தா பெரிய அரங்கம் என்றாலும் நின்று கொண்டுதான் கேட்க வேண்டியதிருக்கும். மேலும் பஞ்சம் கச்சேரி தொடங்குமுன் தனது ஒன்பது கட்டளைகளை முதலிலேயே சொல்லி விடுவார்.

1. செல்ஃபோனை Switch off / Silent mode – ல் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. தனி ஆவர்த்தனத்தின் போது எழுந்து போகக்கூடாது.

3. இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு உடையவர் மாத்திரை சாப்பிடும், உணவு அருந்தும் வேளை வந்தால், ஒரு கீர்த்தனை முடிந்து அடுத்து தொடங்குமுன் எழுந்து போகலாமே தவிர பாட்டின் நடுவே போகக்கூடாது.

4. பாடும்போது ரஸிகாஸ் தமக்குள் உரையாடக் கூடாது. கொட்டாவி, ஏப்பம், குசு, பெருமூச்சு ஆகியன சத்தமாக விடக்கூடாது.

5. பிடித்த பாடல்கள் கேட்டு சீட்டு அனுப்பக் கூடாது. 6. புகைப்படம் எடுப்போர் குறுக்க மறுக்க நடக்கக்கூடாது. 7. பாடும்போது மறைவாய் யாரும் பதிவு செய்யலாகாது. 8. கண்டிப்பாய் ஆட்டோகிராஃப் செய்யப்படமாட்டாது. 9. கச்சேரி முடிந்ததும் யாரும் காலில் விழலாகாது.

பஞ்சம் நல்ல பக்குவத்தில் உண்பவர். அதை விவரிக்கப் போனால் அது தனிக்கதையாகும். அது போல் பஞ்சம் வாங்கிய பட்டங்கள் – விருதுகளை விவரிக்கப் போனாலும். அவர் கடைசியாக வாங்கிய பட்டங்கள் சங்கீதக் கலா நிதி, பத்ம ஸ்ரீ என்பன. ப அந்த நகரில் ஆயுத பூஜையன்று அனுமத் கான சபாவில் பஞ்சம் கச்சேரி. அங்கவர் கரகரப்பிரியாவில் பாடிய தியாகராஜ கீர்த்தனை ‘ராம நீஸமான மெவரு ரகுவம்ஸோத் தாரக’ கேட்டு அனுமனே வந்து கை கட்டி நின்றிருக்கக்கூடும். அப்படியொரு குழைவு, பாவம், பளிங்கு போன்ற நீரோட்டம். கச்சேரி கேட்க வந்திருந்த ரஸிகாஸ் யாவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள்.

மறுநாள் பஞ்சத்துக்கு முழு ஓய்வு. சங்கீத உபாசகரும் மூன்று நூற் பாலைகளுக்குச் சொந்தக்காரருமான சத்தனப்பள்ளி சத்யவீர அன்னம நாயக்கர் விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். சமையலுக்கு பாலக் காட்டு ராமனுண்ணி. எடுபிடிக்கு அன்னம நாயக்கரின் கான்டசா காரை ஓட்டும் பாக்கியநாதன். அடுத்த நாள் பாலக்காட்டுப் பக்கமிருந்த நூரணி கிராமத்துக் கோயிலில் பஞ்சத்துக்கு இன்னுமொரு கச்சேரி இருந்தது. அதையும் முடித்த பிறகே அவருக்கு சென்னை புறப்பாடு.

வழக்கம் போல எழுந்து, தோட்டத்தில் ஒரு மணிக்கூர் நடந்து, குளித்து , பூசனைகள் முடிந்து உணவருந்திய பிறகு, குளிரூட்டப்பட்ட விடுதி முன்னறையில் அமர்ந்து பஞ்சம் பக்கவாத்தியக்காரர்களுடன் சொகுசான வம்பளப்பில் இருந்தார்.

“அண்ணா, நேத்து சபை சிலுத்துப் போச்சுண்ணா… பொன்னவிர் மேனி சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கேண்ணு எடுத்து நாட்டை, காம்போதி, சாமா, அமிர்தவர்ஷிணி, சகானா, கீர வாணிண்ணு போயிண்டே இருந்தேளோல்லியோ, நிறைப் பேரு ரஸிகாஸ் கண்ணத் துடைச்சுண்டே இருந்தா… எனக்கே புல்லரிச்சுப் போச்சுண்ணா ” என்றார் கஞ்சிரா வாசிப்பவர்.

“ஆமாமா… எனக்கும் வாசிக்கவே கை ஓடல்லே” என்றார் மிருதங்கம்.

வாசலில் சிறு கூட்டம் ஒன்று நிழலாடியது. வழக்கம் போல் நேரில் கண்டு வணங்க வரும் உள்ளூர் புரவலரோ, வசதி படைத்த ரஸிகாசோ என நினைந்து தலை நிமிர்த்திப் பார்த்தார் பஞ்சம்.

பருவெண் கோடுடைய மதமறக்களிறு போல், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், அகன்று உயர்ந்த தோள்களும் பரந்த மார்புமாய் தூய நல் வெள்ளை வேட்டி, முழுக்கைச் சட்டை, அங்கவஸ்திரம் தரித்து, நெற்றியில் சந்தன குங்குமப் பொட்டுக் கொலுவுடன் பார்த்த மாத்திரத்தில் எவரும் எழுந்து நின்று கை கூப்பும் தோரணையுடனும் முக வசீகரத்துடனும் நேமிநாதன் உள்ளே நுழைந்தார். அவர் பின்னால் சற்று மிதமான கூச்சத்துடன் உள்ளூர் இசைக் கல்லூரியின் பேராசிரியர், தொடர்ந்து ஐந்தாறு மாணவர்கள்.

“அண்ணா வாங்கோ… நானே வரலாம்ணு இருந்தேன்… இவா படுத்தற பாடு தாங்கல… நல்லதாப் போச்சு… வாங்கோ , உக்காருங்கோ …” என்றார் பஞ்சம்.

அவருக்குத் தெரியும் எத்தனை பெரிய வித்வானாக இருந்தாலும் கோவை இசையுலகில் நேமிநாதனன்றி ஒரு ஸ்வரமும் அசையாது என. மேலும் நேமிநாதன் முதல் தலைமுறை தேசத் தலைவர் போல, கைப் பொருள் இழந்து, வேள்வி போல் அந்நகரில் இசை வளர்த்துக் கொண்டிருந்தார். எதையும் முகத்துக்கு நேரே சொல்கிற நேர்மையும் துணிவும் சுதந்திரமும் உடையவர். நினைத்திருந்தால் நான்கு நூற் பாலைகளுக்கு அவரும் சொந்தக்காரராக ஆகியிருக்க இயலும். அவரோ ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்’ என இசைக்கும், இசை வாணருக்கும் அடிமையாகிக் கிடந்தார். வேண்டுமானால் ‘நான் எனும் ஆணவந்தள்ளலும்-இசைஞாலத்தைத் தானெனக் கொள்ளலும்’ என்று புதுப்பாட்டுப் பாடலாம்.

இருக்கையில் அமர்ந்த நேமிநாதன், பேராசிரியரையும் கை காட்டி அமரச் சொன்னார்.

“ஆகாரமெல்லாம் ஆச்சா… வசதி எல்லாம் சரியா இருக்கா?” என்று ஆரம்பித்த நேமிநாதன் சொன்னார் “நேத்து கச்சேரி பிரமாதம்… முகாரி நேத்துப் போலப் பாடிக் கேட்டு ரொம்ப நாளாச்சு. சபையும் ரொம்ப ரசிச்சுக் கேட்டா…”

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்” என்றார் அடக்கமாகப் பஞ்சம்.

”இவரைத் தெரியுமா? கோபி கிருஷ்ண பாகவதர்… நம்ப இசைக் கல்லூரித் தலைவர். அங்க நிக்கிறவங்களெல்லாம் மாணவர்கள்… உங்ககிட்டே ஒரு கோரிக்கையோட வந்திருக்கேன்…”

”என்னது, பெரிய வார்த்தையெல்லாம் பேசிண்டு… என்ன வானாலும் சொல்லுங்கோ … செஞ்சுப்புடலாம்…”

”பசங்க எல்லாம் ஆசைப்படறா… அவங்க கல்லூரிக்கு வந்து நீங்க ஒரு லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் குடுக்கணும்… உங்களுக்கு சௌகர்யமான நேரத்திலே… ஒரு மணி நேரம் போதும்….”

“அதுக்கென்ன, செஞ்சுப்புடுவோம்…” எனச் சொல்லி பஞ்சம் புன்னகைத்தார். தொடர்ந்து கை விரல்களையும் ஐந்து முறை விரித்து குவித்துக் காட்டினார்.

நேமிநாதன் கற்பூரம் போலத் தீப்பற்றிக் கொள்ளும் புத்திசாலி. தண்ணீரிலும் தடம் பார்ப்பவர். எனவே பஞ்சத்தின் சைகையைக் கண்டது போல் காட்டிக் கொள்ளாமல், ”பசங்க எல்லாம் சேர்ந்து பத்தாயிரம் வசூல் பண்ணி வச்சிருக்கா… எதோ அவாளால முடிஞ்ச மரியாதை… நீங்க அவசியம் வந்து அவாளை அனுக்கிரகம் பண்ண ணும்…”

”என்ன நேமி அண்ணா … சரியாக் கவனிக்கல்லியோ ?” என்று மறுமுறையும் விளக்கு அணைந்தணைந்து எரிவது போல், ஐந்து முறை பத்து விரல்களையும் விரித்துக் குவித்துக் காட்டினார் பஞ்சம்.

”அவ்வளவெல்லாம் இவாளால முடியாது… சங்கீதம் சொல்லிக்க வாற பசங்க எப்படியாப்பட்ட வீட்டுப் பிள்ளைகளா இருப்பா… உங்களுக்குத் தெரியாததா… நீங்க பெரிய மனசு பண்ண ணும்…”

”அதான் பாதியாக் குறச்சுச் சொல்றேன்… அவாள் வச்சிருக்கப் பட்ட தொகைக்கு நம்மால் ஆகாது. அதுக்குத் தக்கன உள்ள வித்வானாப் பாத்துக்கிடட்டும்.”

நேமிநாதனுக்கு ஒன்றும் சொல்ல வாய் வரவில்லை. முகம் பூத்து வெளிறியது. சுற்றி நின்ற பேராசிரியரை, மாணவர்களை, பக்க வாத்தியக்காரர்களைப் பார்த்தார். கண்கள் பொங்கி வந்தன. சற்று மங்கியும் வந்தன.

“வெம்மடங்கல் வெகுண்டனைய சினமடங்க

மனமடங்க வினையம் வீயத்

தெம்மடங்கல் பொருதடக்கைச் செயலடங்க

மயலடங்க ஆற்றல் தேய…”

என்று ஓடியது பாடல்.

ஜயந்த ஸ்ரீ ராகத்தில் ‘மறு கேல ரா ஓ ராகவா’ என்றொரு வரியோடியது நேமிநாதன் உதடுகளில்.

சடாரென எழுந்து நின்று கை கூப்பினார். ”அப்ப உத்தரவு வாங்கிக்கிடவா” என்றார். இலேசாகச் சிரித்தபடி பஞ்சம் கரங் குவித்தார்.

திட்டமிட்டதற்கு மாறாக, இந்த இடத்தில் கதையை நிப்பாட்டிக் கொள்ளவே தோன்றுகிறது இக்கணத்தில். சில சமயங்களில் உண்மை , புனைவு போல் எதிர்ப்பட்டு பரிகசித்துச் சிரிக்கிறது. இனிமேல் எழுத நேரும் வரிகளில் பழி கரந்து உறைகிறதென்பதும் யானறிவேன். ஆனால் உண்மையை எருமைச் சாணத்தில் பொதிந்து ஒளித்து வைக்க இயலுமா?

மறு நாள் பாலக்காட்டில் கச்சேரியை முடித்து விட்டு, உண வருந்தி, கான்டசா காரின் முன்னிருக்கையில் சாய்ந்து தூங்கியவாறு பஞ்சம் விருந்தினர் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பக்க வாத்தியக்காரர்கள் அன்றிரவே ரயிலில் சென்னைக்குப் புறப்படுவார் கள். பஞ்சத்துக்கு மறுநாள் காலையில் நகரில் இருந்து விமானத்தில் சென்னை செல்ல ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு க.க.சாவடி தாண்டி, மரப் பாலமும் தாண்டி, மதுக்கரைக்கு சற்று முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ட்ரெய்லர் லாரி ஒன்றின் கீழே அதிவேகமாக வந்த கான்டசா புக முயற்சி செய்ததில் பஞ்சம் தலையுடைந்து தலத்திலேயே குருதிப் பெருக்கில் கிடந்தார். தப்பிய சாரதி பாக்கியநாதன், தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் வந்து நகரின் பிரதான மருந்துவமனை செல்லுமுன் காலம் காத்து நிற்காமல் நகர்ந்து போய்விட்டது.

– உயிர் எழுத்து – டிசம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *