பருவந்தவறிய மழையைப் போலவே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 2,028 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்போதெல்லாம் பின்னிரவுகளிலேயே உறக்கம் கலைந்து விடுகிறது. நாலைந்து மாதங்களாகத்தான் இந்த நிலை. ஏதேதோ யோசனைகளும் நினைவுகளும் கனவுகளுமாய்……. பெரிய அவஸ்தையாய் இருக்கிறது. உறக்கம் கலைந்தாலும் எழும்ப முடிவதில்லை. படுக்கையிலேயே அரைமயக்கமாயும்…… அரை விழிப்பாயும்…

தூரத்தில் பள்ளிவாசலிலிருந்து சுபுஹ தொழுகைக்கான பாங்கு ஓசை கேட்கிறது. தொடர்ந்து பறவைகளின் காலை நேரத்து ஆரவாரங்கள்; ஆலயமணியின் ரீங்காரிக்கும் ஓசை; பக்கத்து அறையில் இருமலும் கொட்டாவியும் பின்னர் குழந்தைகளை அதட்டி எழுப்பும் சத்தமுமாய்…… 

கண்களை மலர விழிக்கின்றான். 

ஜன்னல் சிறகின் இடைவெளியினூடாக ஒளி, அறையில் ஊடுருவி இருந்தது. மங்கலொளியில் அறை வான்கோவின் ஓவியம் போல….. மேசையின் மூலையில் குவியலாய் புத்தகங்கள்; தலை நிமிர்த்தி நிற்கும் ஒரு சாங்கமான மேசை விளக்கு; சுருண்டு கிடக்கும் வயர்ச்சுருள்; தண்ணீர்ப் போத்தல்; கிளாஸ்; சாய்வு நாற்காலி. 

இந்த ஞாயிறு விடிகின்றபோதே வெளியே மழை தூறிக் கொண்டிருக்கிறது. இப்போது நாலைந்து நாட்களாய் ஒரே மழைதான். காலையில் மதியத்தில் மாலையிலென்று – சூரியன் முகங்காட்டி சிறிது சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டு – திடீரென சிணுங்கலாக ஆரம்பித்துக் கொட்டும் மழை. இரவின் ஆழத்தில் சங்கீதம் போல ஒரே சீராகப் பெய்யும் மழையில் ஓர் இதம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும், இடையின்றி இப்படி மழை பெய்து கொண்டிருப்பது சலிப்பையே தருகின்றது. 

காலைக்கடன்களுக்காக வீட்டை விட்டு வெளியே இறங்கவே தயக்கமாகத்தானிருந்தது. ஒரு தென்பில், அசுவாரசியமான நாளாந்த இயக்கத்தில் அது ஒரு கடனாகவே முடிந்து போயிற்று. அவன் இடையிடையே தலையில் முழுகிக் கொள்வானென்றாலும், தொடர்ந்து காலைவேளைகளில் மழை பெய்தால் அப்பொழுதெல்லாமுமே தலையில் முழுகிக் கொள்வான். அது ஒரு வித்தியாசமான அனுபவம் போலத் தெரிந்தது. மழையில் தலையில் முழுகல், கிணற்றைச் சுற்றியுள்ள வாழைக்கொல்லையின் இடையே ஓடிய சிறுகொடியில் உடுக்கும் சாறத்தையும் துவட்டும் துவாயையும் போட்டுவிட்டால் – வாழையிலைகளில் பட்டு, ஒன்றாய் உருண்டு திரண்டு வரும் ஓரிரு மழைத் துளிகளைத் தவிர அவை நனையாது பத்திரமாகவே இருக்கும். இவன் வாளியால் அள்ளி அள்ளித் தலையில் ஊற்றுவான். ‘மழையை என்னால் வென்றுவிட முடியும்; மழையை என்னால் வென்றுவிட முடியும்!’ 

முன்னரெல்லாம் அவன் இப்படிச் செய்வதில்லை. மழை வந்தாலே அத்துடன் அந்த ஒற்றைத் தலைவலி வந்துவிடும். மூக்கில் நீர் ஒழுகும்; தொண்டை நோகும்; தொடர்ந்து நெஞ்சைப் பிளக்கிற மாதிரி இருமல் வரும். மழை நாட்களில் குளிக்காமலேயே விடுவான். அப்படிக் குளிக்கின்றதாயினும் தலையைச் சுற்றி இறுகத் துணியால் கட்டி, இரண்டொரு வாளி தண்ணீரை உடம்பில் ஊற்றுவான். தடிமனைத் தடுப்பதற்கான அந்தச் சீனத்து தேகாப்பியாசத்தைப் பற்றி வீரகேசரியில் படித்த பிற்பாடு, ஒரு நம்பிக்கையுடன் அதைச் செய்யத் தொடங்கினான். கைகளை வருடி….. இமைக்கு மேலால் நெற்றியை வருடி….. கழுத்து நரம்புகளை வருடி….. முழங்கால் சிரட்டைக்கு மேல் கையை மீண்டு கொடுத்து, உடம்பால் குனிந்து வளைந்து நிமிர்ந்து முன்னரைப் போலல்லாது இப்போது எப்போதாவதுதான் தடிமன் வரும். ‘மழையை வென்றாயிற்று….. மழையை வென்றாயிற்று’ 

வாழ்க்கையை உன்னைச் சூழ்ந்திருக்கும் ஏமாற்றுக் காரரையும், துரோகிகளையும், நயவஞ்சகர்களையும், மீறி – நீ நேசிப்பவர்களை உன்னால் காப்பாற்ற முடியுமா? 

நெடுங்காலமாக மறந்திருந்த கடவுளர்களை இப்போது துணைக்கழைக்க வேண்டியதாயிற்று. இப்போது கொஞ்ச நாட்களாக காலைகளில் கண்களை மூடிப் பிரார்த்தனைகள் செய்கின்றான். இந்த ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை செய்யும்போது, கோளறு பதிகத்தைப் படிக்கவேண்டும் போலத் திடீரென மனதில் தோன்றிற்று. “வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன் – மிக நல்ல வீணை தடவி – மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்… வியாழன்… 

கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் வியாழன் ஓர் இராசியிலிருந்து இன்னோர் இராசிக்கு மாறியிருந்தது. எல்லாருமே ஓர் எதிர்பார்ப்புடன், பரபரப்புடன் அதை எதிர்கொண்டனர். வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்; மெத்தனமாக இருப்பார்கள். வருகின்ற தமிழ் வார இதழ்களிலெல்லாம் வியாழ மாற்றப் பலனை இரகசியமாகவே பார்ப்பார்கள். யாராவது அவதானித்தால் ஒரு சிரிப்புச் சிரிப்பார்கள். ‘உங்களுக்கு வியாழ மாற்றம் எப்படி’ என்பார்கள். சிலர் அக்கறை இல்லாதவர்களைப் போல, அக்கறையாகவே வியாழமாற்றப் பலன்களைப் பற்றி விசாரிப்பார்கள். அவன் அக்கறையாகவே இருந்தான். தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் எல்லாம் வியாழமாற்றப் பலனைப் பார்த்து அவற்றின் ஒன்றுக்கொன்று முரணான அபிப்பிராயங்களைப் படித்துக் குழம்பிப் போயிருந்தான். என்றாலும் நல்லகாலம் வரலாமென அவன் எதிர்பார்க்க வைக்கப்பட்டிருந்தான். ‘இவ்வளவு காலமும் எனக்கு வியாழன் எட்டிலை இருந்தது; நான் குழம்பிப் போயிருந்தேன். இப்ப ஒன்பதுக்கு மாறியிருக்கு; குழப்பங்களகன்று நல்ல காலம் வரும்’ 

நல்லகாலம் வருமெனவே அவனும் நம்பியிருக்கிறான். இந்தத் தொலைதூரத்திலிருந்து ஊருக்கு கிட்ட எங்காவது இடமாற்றம் கிடைக்குமென அவன் எதிர்பார்க்கிறான். ஊருக்கு கிடைக்கா விட்டாலும் ஊருக்குக் கிட்ட எங்காவது கிடைத்தால், வார விடுமுறைகளிலாவது ஊருக்குப்போய் வரலாம்; ஊரில் நடப்பவைகளை அறியலாம்; அண்டை அயலில் நடப்பவைகளை அறியலாம்; வீட்டில் நடப்பவைகளை அறியலாம்; உரிமைகளுக்காக சண்டை போடலாம். 

தொலைதூரத்தில் வேலைசெய்பவர்களுக்கு இந்த வார விடுமுறைகளும், பகிரங்க விடுமுறைகளும் பிரச்சினைக்குரிய நாட்களாகவே போய்விடுகின்றன. மேலதிக நேர வேலை செய்யத் தக்கவையாகவோ, அல்லது பதில் விடுமுறைக்காக வேலை செய்யத் தக்கவையாகவோ அமைந்துவிட்டால் பரவாயில்லைத்தான். பிரமச்சாரிகளுக்கு அவை சந்தோஷம் தருகின்ற நாட்களாக அமைந்து விடலாம். குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு அவை நட்பு நாட்களாகலாம். அவனைப் போன்றவர்களுக்கு அவை பாரமான நாட்கள்; என்ன செய்வதென்று தெரியாது தவிக்க வைக்கின்ற நாட்கள்; மிகுந்த பணச் செலவை வேண்டி நிற்கின்ற நாட்கள்; நிம்மதியைத் தராத நாட்கள். 

மழை தூறிக்கொண்டிருக்கிற இந்த ஞாயிற்றுக் கிழமையில் பதில் விடுமுறைக்காக வேலை செய்வதற்கான ஒரு நிச்சயமற்ற ஏற்பாடு ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் கையெழுத்து வைத்துவிட்டு வேலை செய்யலாம் – செய்யாதும் விடலாம். அதுபோல லீவு கிடைக்கலாம்- கிடைக்காதும் விடலாம். ஆனால் கையெழுத்து வைக்காது விட்டால் லீவு அறவே கிடைக்காது போகலாம். அவன் மழையைப் பாராது  புறப்பட்டான். முழங்காலளவிற்கு மடித்த முழுக்காற்சட்டை; நீலக்குடை ; பைல் கவருக்குள் பழைய பத்திரிகைகள்; காலைக்கடித்துக் கொண்டிருக்கும் புதுச் செருப்பு. 

இப்போது நாலைந்து நாட்களாகவே பெய்யும் மழையில் பூமி ஊறிச் சிலிர்த்திருக்கிறது. பாதையில் இடையிடையே கால் பதித்து நடக்க முடியாமல் வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது! வீதியை ஊடறுத்து குளத்தை நோக்கி ஓடும் வெள்ளத்தினால் வீதி குண்டும் குழியுமாய் கற்கள் மிதந்துபோய் பரிதாபமாய்க் கிடக்கிறது; முற்றி விளைந்த நெற்கதிர்கள், காலம் தவறிய மழையினால் தேங்கி நிற்கும் வெள்ளத்தினுள் தலை சாய்த்துக் கிடக்கின்றன. குளத்தை நோக்கி விரைந்தோடும் வெள்ளத்தில் கண்ணை ஈர்க்கும் ஒரு கவர்ச்சி இருக்கிறதுதான். தூரத்துக் குளத்து மேட்டில் – புகார் மூடிய வானத்துச் சரிவின் பின்னணியில் சந்தோசமாக நாலைந்து எருமைகள். 

மழை பெய்து கொண்டிருக்கிற வார விடுமுறை நாட்கள் இதமானவை போலும். கட்டுப்படுத்தப்பட்ட அன்றாட இயந்திர இயக்கத்தினின்றும் கிடைக்கும் விடுதலைக்கு, மழைக்கால ஓய்வு நாட்கள் புதிய ஒரு மெருகையும் பரிமாணத்தையும் கொடுக்கின்றன போலும். மழைக் குளிரின் சுகத்தில் விடிய விடிய கதகதப்பான படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தல் சுகம்; மிகு சுகம். குடும்பஸ்தனான அலுவலகச் சேவகன் அலுவலகத்தைத் திறக்கவில்லை. அலுவலகத்திலேயே யாருமில்லை. ஆளரவமற்று வெறிச்சோடிப் போயிருந்த அலுவலகத் தாழ்வாரத்தில் நாலைந்து மாடுகள்தான் மழைக்கு ஒதுங்கிப்போய் நின்றிருந்தன. மழை ஒரே சீராகப் பெய்து கொண்டிருந்தது!. 

பரந்த பெரிய மைதானத்தில் கால்வாசிப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, திட்டுத் திட்டாகக் கிடக்கும் அலுவலகக் கட்டிடத் தொகுதிகள் – ஆளரவமேயில்லாமல் மாடுகளுடன் அவன் மட்டுமே தனியனாய். மற்ற நாட்களில் எல்லாம் எத்தனை பேர் வருவார்கள்; எத்தனை கதைகள்; எத்தனை பேச்சுக்கள்; எத்தனை சிரிப்புகள்; எத்தனை வேதனைப் பெருமூச்சுகள்; எத்தனை ஆணவம், மிடுக்கு. அதிகார உறுமல்கள், அத்தனையும் இல்லாத மழை பெய்கின்ற ஞாயிற்றுக்கிழமை. 

தாழ்வாரத்தில் அவனுடன் ஒதுங்கியிருந்த பெரிய மாடொன்று வாலை உயர்த்தி மூத்திரம் பெய்தது. சீமென்ற் நிலத்தில் பட்ட அது அவன் மேலும் தெறித்தது. வீச்சான ஒரு மணம் அவன் புலனை ஊடுருவிப் போயிற்று. அவனும் இயற்கை உபாதைப்படுத்துவது போல உணர்ந்தான். இயற்கை உபாதையைத் தீர்ப்பதானால் தண்ணீர் வேண்டும். தண்ணீருக்கு என்ன செய்யலாம்? கொட்டும் மழையிலும் ஒரு வாளி தண்ணீருக்கான தவிப்பு. 

அலுவலகத்தில் சிவப்பு வர்ணத்துடன் உயர்ந்து நிற்கும் நீர்த்தாங்கி; அங்குமிங்குமாய் ஓடும் பைப் லைன்கள்; போதாததற்கு மேலும் மேலுமாய் புதிய பைப்லைன்களும் வோஷ்பேசின்களும். தண்ணீர் வராத பைப் லைன்கள் எப்போதோ பழுதான, பம்ப் பண்ணுகின்ற இயந்திரம் இன்னமும் திருத்தப்படவில்லைப்போலும். திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டால் எப்போதோ திருத்தப்படப் போகின்ற இயந்திரம். ஒருபோது ஆள் இருக்காது; ஒரு போது திருத்தும் கருவிகள் இருக்காது; ஒரு போது உடைந்த கருவிகளை மாற்றுவதற்கான பதிலீடுகள் இருக்காது; ஒருபோது குறித்த அலகேஷனில் ஒதுக்கிய பணத்தை இதற்கு மாற்ற முடியாது; “எல்லாம் ஒழுங்காக நடக்க வேணும்; எல்லாம் சட்டப்படி நடக்கவேணும்; எல்லாம் நேர்மையாக நடக்க வேணும்; ஆளுக்காள் வித்தியாசம் பார்க்கக்கூடாது.” 

ஒரு வாளி தண்ணீருக்கு என்ன செய்யலாம்? 

ஒரு யுக்தி தோன்றிற்று. பாத்ரூமில் இருந்த வாளியை – நல்ல வேளை வாளி இருந்தது -எடுத்துவந்து கூரையால் ஒழுகும் பீலியின்கீழ் வைத்தான். இரண்டொரு வினாடியில் வாளி நிரம்பிற்று. அவன் தங்கியிருக்கும் பழைய காலத்து பெரிய கல்வீட்டின்’ பழைய காலத்து மலசலகூட வசதிகள் பீலியால் ஒழுகிய நீர் உபாதையைத் தீர்க்க உதவிற்று. 

இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களில் பகல் நேரத்திலும் கூட, அலுவலகத்தைக் காவல் காக்கும் காவற்காரனுக்காய், அலுவலக விறாந்தையில் ஒரு நீள வாங்கு; ஒரு அலுமாரி; இரண்டொரு கதிரைகள்; இரண்டு சின்ன மேசைகள். எல்லாமே ஈரங்கசிந்து போய் இருக்க முடியாதனவாய் இருந்தன. இரண்டு சின்ன மேசைகளில் ஒரு புதிய மேசை மட்டும் ஓரளவிற்காயினும் இருக்கக்கூடிய விதமாய் ஒருவிதமான பளபளப்புடன் கிடந்தது. அதிலேறி அழுக்கான சுவர்தான் என்றாலும் அதில் சாய்ந்தான். 

‘இப்படி எல்லாம் நடக்கலாமென எதிர்பார்த்திருக்கின்றான்; நடந்தவைகள் நடந்தவைகளாக இருந்தும் நடக்காதவையாகச் சொல்லப்படுகின்றன; நடக்க முடியாதென்றும் வற்புறுத்தப்படுகின்றன; நம்ப வேண்டிய இடத்திலும் – நம்பிக்கை இல்லாதவர்களென்றும்…..’ 

ஆளரவமற்ற ஞாயிற்றுக்கிழமைத் தனிமையில் பெய்கின்ற மழை; ஓர் எதிர்பார்ப்பில் கொண்டுவந்திருந்த இலக்கிய இதழைப் புரட்டினான். விக்கிரமாதித்தியனின் கவிதை வரிகள். 

‘எது குறித்தும் எனக்கொன்றும் வெட்கமில்லை;
வெட்கப்பட நானொன்றும் குழந்தையில்லை;
வெட்கப்பட வேண்டியதும் நானில்லை; 
நான் பெய்யும்மழை; வீசுங்காற்று;
எரியும் தீ! வழங்கும் பூமி; கவியும் வானம். 
இங்கே இடங் கெட்டுக் கிடக்கலாம்; 
சூழல் நாறித் தொலைக்கலாம்;
இயல்பு அழிந்திருக்கலாம்; 
தன்மை மாறி இருக்கலாம்; 
முறைமை திரிந்திருக்கலாம். 
முட்டாள்களுக்கும் முரடர்களுக்கும் மத்தியில்
மூளையையும் மனதையும் முழுதாய்க்
காப்பாற்ற முடியாமல் போகலாம்…..’ 

மனதைக் கலைத்துக் கண்ணை விழிக்கையிலும் மழை பெய்து கொண்டிருந்தது. நேரம் நல்லாய்ப் போயிருந்தது! அலுவலகத்திற்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகி இருந்தது. தூரத்தில் மழையில் குளித்துக் கொண்டிருந்த தென்னை மரத்து ஓலைகள் தெரிந்தன. 

மங்கலான மழைக்காலப் பொழுதின் மத்தியான நேரத்துக் கிராமியம். ஒற்றையாய் சோடியாய் மௌனங்கொண்டு பறக்கின்ற பறவைகள். வீட்டின் புகைக்கூண்டினூடாக மெல்ல ஆடிச் செல்லும் புகை வளையங்கள். 

வாயில் புகைவளையங்களோடு எதிர்ப்பட்ட அலுவலகத்து முரட்டு நண்பன், அலுவலகச் சேவகனை ஏசிக்கொண்டேயிருந்தான். சமாதானப்படுத்தியதில் அந்த மழைகால ஞாயிற்றின் மெல்லிய குளிரைப் போலவே சமாதானமாய்ப் போனான். பேசிக்கொண்டு, மெல்ல நடந்து வந்து குச்சுக் கடையில் வெறும் தேநீர் அருந்தியதும் மேலும் குளிர்ந்து போனான். 

‘மனிதர்கள் எல்லாரும் நல்லவர்கள் போலத்தானிருக்கின்றது. எல்லாரும் வாழ ஆசைப்படுகின்றார்கள்; எல்லாரும் இன்பமாய் இருக்க விரும்புகின்றார்கள்; எல்லோரும் கனவு காண்கிறார்கள். பலரும் தம்மைப் பற்றியே, தம் வாழ்வைப் பற்றியே, தம் இன்பத்தைப் பற்றியே நினைப்பதால்தானோ துரோகி களாகவும்….!… ஏமாற்றுக்காரர்களாகவும்…… 

என்ன செய்யலாம்? 

மழை ஒரே சீராகப் பெய்துகொண்டுதானிருந்தது. நண்பனை அனுப்பிவிட்டு தனியே அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான். வீதி, வீதியோரத்துக் கடைகள், தியேட்டர் எல்லாமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. அங்குமிங்குமாய்த் தென்பட்ட இரண்டொருவரும், அந்த மழை நாளில் அப்படி இருப்பதற்காகவே படைக்கப் பட்டவர்களாய்த் தோற்றம் கொண்டார்கள். அவர்களும் அவனைப் போலவே ஏதேதோ அவஸ்தைகளைச் சுமந்துகொண்டு அலைகிறார்கள் போலும். 

பாரமாய்க் கனக்கின்ற வாராந்திர விடுமுறைகளின்போதும், மதிய உணவின் பின் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ‘அப்பாடா’ உடம்பை நீட்டி ஒரு குட்டித் தூக்கம் போடுகின்ற சுகம் அலாதியானதுதான். அதுவும் தொடர்ந்துவந்த அதிகாலைத் தூக்கக் கலைவுகளின் பின்னால், நாலைந்து நாளாய் பிசுபிசுக்கின்ற மழையுடன் சேர்ந்த ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகல். 

தூக்கம் கலைந்து எழுந்தபோது நாலு மணிக்கு மேலாகியிருந்தது. மழை ஓய்ந்திருந்ததென்றாலும், வானத்தை மூடிக் கவிந்திருந்த மேகக்கூட்டங்கள் கலைந்திருக்கவில்லை. வெளியே போக மனம் ஆசை கொண்டாலும் மழை வந்து பிடித்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயமாயும் இருந்தது. பார்த்துச் செல்வோமென்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். 

முதல்நாள் மழை பெய்தபோதும் நண்பன் அறைக்கு வந்திருந்தான். அவனிடம் பேசியதில் பொழுது போனதே தெரியாது போயிற்று. பலதும் பத்துமாய் பேசினார்கள். மாக்சீயமும் ஆத்மிகமும் பற்றி, வடதுருவமும் தென்துருவமுமாய் விவாதித்துக் கொண்டார்கள். விவாதப்போக்கில் ‘வளர்த்தால் கொண்டை வெட்டினால் மொட்டை’ என்று நண்பன் சொன்ன பழமொழி பிடித்துப் போயிற்று. பின்னர் அதில் தொற்றி வேறுவேறு எங்கெல்லாமோ போய்…. இலேசாக உணர்ந்த தலைவலிகூட இல்லாது போயிற்று. 

மழை பெய்து ஓய்ந்திருக்கின்ற இன்றுங்கூட நண்பன் வரலாம். வந்தால் பேசிக் கொண்டே இருக்கலாம். ‘பேச்சு – பேச்சு’ ஒரே பேச்சு. கண்களை உருட்டி நாக்கை நீட்டி பேசுகின்றவர்கள்; ஆற்றொழுக்கெனப் பேசி இடைஇடையே கவர்ச்சிகரமான புன்னகை வீசுகின்றவர்கள்; கட்டிடம் கட்டுவது போல இடையிடையே கைகளைக் காட்டிக் காட்டிப் பேசி நடிப்பவர்கள்; கண்களை வெட்டி வெட்டிப் பேசி ஜாலம் காட்டுகின்றவர்கள்; பேச்சுக்கள்தான் பின்னர் வினைகளாயும்….. விபரீதங்களாயும்….. 

ஒழுங்கையில் ‘றக்கு றக்கு’ என்று பழைய சைக்கிள் ஒன்று போகும் சத்தம் கேட்டு, நண்பனாக இருக்குமோ என்று சந்தோஷத்துடன் எழுந்து, ஜன்னலால் பார்த்து ஏமாந்துபோனான். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருந்தது. 

மழை காலப் பொழுதுகள் சந்தோஷமானவை தானென்றாலும், ஓயாத இந்த மழை சற்று எரிச்சலைத் தருவதாய்… 

‘சுறாங்கனி சுறாங்கனி..’ தந்தை எனக்கு வைச்ச பேரு; அஞ்சும் மூன்றும் எட்டு – மெல்ல மெல்ல மேளத்தைத் தட்டு’ 

அடக்க முடியாமல் எரிச்சல் கிளம்பிற்று. அறையால் வெளியே வந்து விறாந்தையில் எட்டிப் பார்க்கையில் ரூ இன் வன் பாட்டுக்கு ஏற்ப உடலை வளைத்து ஆடும் நாலைந்து விடலைகள். அவனைக் காணாது; ஒருவரும் இல்லை என்ற சந்தோஷத்தில் குறும்புக் கண்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்து ஆடும் விடலைகள். 

இந்த விடலைகள் எப்போதுமே தொல்லை தருபவர்கள் தான். அவர்களால் எத்தனையோ காரியங்கள் ஆகின்றன என்றாலும், அவர்களின் அடிகள் நேரான நொய்ந்த ஆத்மாவைத்தானே தாக்குகின்றன. ஒன்றுடன் ஒன்றிப்போக முடியாது தடுக்கும் அரக்கர்கள் அவர்கள். திண்ணைக்குத் திண்ணை வீட்டுக்கு வீடு திரிந்து வம்பளப்பவர்கள். வம்பளப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். ஆத்மாவில் அடிப்பதை அறியாதே செய்பவர்கள். அறிந்த பின்னும் அதுபோலவே செய்து துடிக்க வைத்து வேடிக்கை பார்ப்பவர்கள். 

அவர்கள் அவனை கண்டுவிட்டார்கள். ஒருவித பயத்தில் பின்னடைவதுபோல செய்து… 

‘பாவங்கள் விடலைகள்’ 

‘இரக்கமா? கையாலாகாத்தனமா?’ 

‘இரக்கம்தான் கையாலாகாத்தனமா?’ 

‘கையாலாகாததனம்தான் இரக்கமா? 

‘அல்லது இரண்டும் ஒன்று தானா?’ 

விளங்கவேயில்லை; ஒன்றும் விளங்கவேயில்லை. பருவந் தவறிய இந்த ஓயாத மழையைப் போலவே ஒன்றையும் புரிந்துகொள்ள முடியவேயில்லை.

– திசை 18-03-1989

– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.

ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு 1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். ஜீவநதி 2022.06 (174) (குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்)https://noolaham.net/project/1029/102876/102876.pdf இவரது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *