சரியா தவறா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 2,613 
 
 

உழைத்து முன்னேற வேண்டும் இதுதான் என் லட்சியம், என்னை பொறுத்த வரை கண்டிப்பாய் முன்னேறுவேன் என்று பட்சி, பட்சி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறது. பட்சி யாரென்று கேட்காதீர்கள், எல்லாம் மனசுதான். இந்த இருபத்தி நான்கு வயதில் “ராஜேஸ் என்கிற ராஜேந்திரன்” இப்படி லட்சிய வெறியோடு இருக்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது முன்னேற என்று கேட்டால் நான் ஒரு கலைப்பிரிவு பட்டதாரி. அது பி.ஏ, வோ பி.எஸ்.சியாகவோ வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த கலைப்பிரிவில் படித்த இவனெல்லாம் முன்னேறி..! இப்படி சிந்தித்தால் ஏமாந்து போவீர்கள். நான் கல்வியை ஒரு பிடிப்புக்காக வைத்திருக்கிறேனே தவிர அடிப்படையில் ஒரு வியாபாரியின் மகன். ஆனால் எல்லாவற்றையும் தொலைத்து வீட்டில் முடங்கிப்போய் இருக்கும் முன்னால் செல்வந்தர் “இராமலிங்கம் பிள்ளை”யின் ஒரே வாரிசு.(இது அறிமுகத்துக்காக சொல்கிறேன், நான் அந்த ஆளை மதிப்பதே இல்லை) எல்லாவற்றையும் பெண் சகவாசம், ஏமாந்து போனது, இவைகளால் என்னையும் அம்மாவையும் இந்த அளவுக்கு கொண்டு வந்தவரை என்ன சொல்வது. கடைசியில் மிஞ்சிப்போன ஒரு வீடு. கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் பணம், இதை வைத்து அம்மா என்னை இந்த சமுதாயத்தில் உருட்டி பிழைத்துக்கொள் என்று விட்டு விட்டாள்.

தம்பி ! அழைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். விலையுயர்ந்த கார் காருக்குள் ஓட்டுநர் இருக்கையில் ஒரு பெரிய மனுசர். பிளாட்பாரத்தில் லுங்கி, துணிமணிகள் போட்டு உட்கார்ந்திருந்த நான் எழுந்து காருக்கருகில் போனேன்.

“சுப்பிரமணிய சுவாமி” கோயிலுக்கு வழி எப்படி? அவரின் கேள்விக்கு நான் வலது, இடது, என கையை மாற்றி மாற்றி காண்பித்தது அவருக்கு புரியவில்லை என்பது அவரது முகத்தை வைத்து கண்டு கொண்டேன். நான் வேணா கூட வந்து காட்டட்டுமா? என் பணிவான கேள்வியில் அவர் கொஞ்சம் பிரகாசமாகி எனது பிளாட்பார்ம் கடையை பார்க்க, நான் அருகில் இதே போல் கடைவைத்து உட்கார்ந்து இருந்த பாலு அண்ணனிடம் அண்ணே கொஞ்சம் கடையை பார்த்துக்குங்க, சொல்லிவிட்டு அந்த விலையுயர்ந்த காரில் முன் பக்கம் ஏறிக்கொண்டேன்.

கோயிலில் அவருக்கு நல்ல மரியாதை என்பது அங்குள்ளவர்களின் வணக்கத்தை வைத்து தெரிந்து கொண்டேன். பயபக்தியாய் அவருடன் கோயில் பிரகாரம் முழுக்க சுற்றினேன். இறுதியில் வெளியே வந்தவர் கை நிறைய சில்லறை காசுகளை கொடுத்து எல்லோருக்கும் போட சொன்னார். அன்று அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்கு நான் வள்ளலாக தெரிந்தேன். இதுவரை எத்தனையோ முறை வந்துள்ளேன். பத்து பைசா போட்டதில்லை. இதுவும் அங்கிருந்த பல பி…காரர்களுக்கு தெரியும். முகத்தில் ஆச்சர்யம் பொங்க, என்னை பார்த்தவர்கள், பின்னால் பள..பள..என்ற உடையில் இவரை பார்த்தவர்கள் புரிந்து கொண்டது போல் தலையை ஆட்டினார்கள். கிடக்கிறான்கள், மனதுக்குள் நினைத்தவன் எல்லாம் முடிந்து அவரருகில் செல்ல, வா என்று அந்த ஊரில் வாசலை மட்டும் பார்த்து பெருமுச்சு விட்டு செல்லும் ஓட்டலின் முன் காரை நிறுத்தியவர் சாப்பிட்டுட்டு போகலாம் அழைத்தார். நான் தயங்கவும், சும்மா வா கையை பிடித்து அழைத்து சென்றவர் அங்கிருந்த ஒரு டேபிளில் அமர, கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருந்தவர் தன் தொந்தி குலுங்குவது கூட தெரியாமல் இவரிடம் ஓடி வந்து ஐயா..வரணும்..வரணும், கை கூப்பினார். எனக்கு ஆச்சர்யமாய் போய் விட்டது. யாருய்யா இந்த மனுசன்? யாரை பார்த்தாலும் கும்பிடறானுங்க..

அவரின் பார்வை என் மீது அசட்டையாய் விழுந்தாலும் ஒரு மரியாதை கண்களில் தென்பட்டது. உட்காரு எதிரில் உட்கார வைத்தவர் என்ன சாப்பிடறே? காலையில் வெறும் கஞ்சியை குடித்து வந்தவன் என்ன சொல்ல முடியும்? அதிக பட்சமாக எனக்கு தெரிந்தது இட்லி, தோசை, அவ்வளவுதான். அடுத்து பொங்கல். இந்த மூன்றையும் மெல்ல சொன்னேன்.அவர் சிரித்து முதல்ல இட்லியில ஆரம்பி.. அவருக்கும் இரண்டு இட்லி..அடுத்து எனக்கு……வேண்டாம்.. கண் வைத்து விடுவீர்கள்.!

திரும்ப காரில் வரும்போது என்னை பற்றி விசாரித்தார். நான் உண்மையை சொன்னேன். இராமலிங்கம் பிள்ளை பேரை சொன்னதும் சட்டென என்னை பார்த்தவர் அவர் பையனா நீ? அதிசயமாய் அவரது கண்களில் என் மீது மரியாதை தெரிந்தது. அபொழுதுதான் என் அப்பாவை பற்றி நல்ல அபிப்ராயம் மனதுக்குள் வந்தது.

இறக்கி விட்டவர், என்னிடம் ஒரு கார்டை கொடுத்து நாளை என்னை வந்து பார் என்றார். மனதுக்குள் பட்டாம் பூச்சி பறக்க அவர் போன பின்பு கார்டை பார்த்தேன். வாயில் சீட்டி தானாக கிளம்பியது. அந்த ஊரிலே பெரும் புகழ் பெற்ற “ரத்னாம்பிகை டெக்ஸ்டைல்ஸ்”முதலாளி பெயர் “பரம்சிவம் பிள்ளை” அடேயப்பா இந்த நகரிலே கிட்டத்தட்ட “ரத்னாம்பிகை” பேரில் நகை கடையில் ஆரம்பித்து பத்து பதினைந்து விதம் விதமான கடைகள் இருக்கலாம். அத்தனைக்கும் சொந்தக்காரனின் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறேன், காரில் போயிருக்கிறேன். வாழ்நாளில் இதை விட என்ன பாக்கியம் வேண்டும். ஆமாம் அப்படிபட்ட பெரிய ஆள் ஏன் டிரைவர் இல்லாமல், இதே ஊர்க்காரனாக இருந்தும் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரியாமல் ? மனதுக்குள் கேள்வி பிறந்தாலும், ராஜேஸ் எல்லாம் உன் நல்லதுக்குத்தான் என்று பட்சி உள்ளிருந்து கூவியது.

நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மறு நாளே அவரது கடைக்கு சென்றவன் இந்த கார்டை கொடுக்க, அங்கிருந்தவர்கள் பொறாமையுடன் அந்த கார்டை மேலும் கீழும் பார்த்து என்னை பல்வேறு கேள்விகள் கேட்டு (என் உடைகள்) உள்ளே அனுப்பி வைத்தனர். (அவர்கள் விட்ட பெருமூச்சு என் காதில் விழுந்தது) பத்து நிமிடம் அந்த குளிரான அறையில் உட்கார வைக்கப்பட்டு அவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

எதுவும் பேசாமல் அவரையே பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த என்னிடம் அவர் மீண்டும் சொன்னார். என்ன திகைச்சு போய் உட்கார்ந்துட்டே, நான் சொன்னது புரிஞ்சுதா? எனக்கு எங்கே புரியும்? அவர் சொன்னது அப்படிப்பட்ட வேலையல்லவா, “ சென்னைக்கு அருகில் புதிதாக தொடங்க போகும் “தனபாக்கியம்” பெயர் கொண்ட டெக்ஸ்டைல்ஸில் நிர்வாகத்தை பார்த்துக்கொள்”

எப்படி? எப்படி? நான் யார்? என்னை பற்றி இவருக்கென்ன தெரியும்? எனக்கு தகுதி இருக்கிறதா? இத்தனை கேள்விகள் மனதுக்குள் எழுந்தாலும் சட்டென தலையாட்டினேன். போ. நீ என்ன செய்ய வேண்டும் என்று வெளியே சொல்வார்கள். அதாவது விளக்குவார்கள் (இந்த மனநிலையில்தான் இருந்தேன்.)

அம்மாவிடம் பெருமையாக அதே டெக்ஸ்டைல்சில் (அவர்கள் கொடுத்த விதம் விதமான உடைகள்) போட்டு காட்டியவன் தந்தையிடம் எதுவும் சொல்லவில்லை, (அவரைத்தான் மனுசனாய் மதிப்பதில்லையே), நாளை சென்னைக்கு கிளம்புவதாக சொல்லி வைத்தேன். அம்மாவின் கையில் ஒரு கட்டு பணம் பத்தாயிரம் கொடுக்கவும் அம்மா மூர்ச்சை போடாமல் மயக்கத்திலேயே வாங்கிக்கொண்டாள்.

சென்னை கடையில் என்னை வரவேற்றவன் தன்னை ‘குமாரசுவாமி’ என்று அறிமுகப்படுத்தி கொண்டான். முதலில் என்னை ஒரு வீடு (பங்களா)வுக்கு அழைத்து சென்றான். அங்கு ஹாலில் உட்கார வைக்கப்பட்டேன். அம்மா வருவாங்க, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… பத்து நிமிடத்தில் ஒரு பெண் வெளியே வந்தார். சுமார் நாற்பதுக்குள் இருக்கலாம், அதை குறைப்பதற்காக ஒப்பனைகள் செய்திருந்தது கொஞ்சம் விகாரமாய் தெரிந்தது. நான் அதை கண்டு கொள்ளவில்லை (நம்புங்கள்) எழுந்து நின்றேன்.

நீதான் அந்த தம்பியா ? இந்த கேள்வி அந்த பெண்ணிடம் இருந்து வரவும், மம்மி..என்று ஒரு அம்மி (மன்னிக்கவும் ஒரு இளம்..மிக இளம் பெண்) அருகில் வர என்னடா..? நான் இருப்பதை லட்சியம் செய்யாமல் அவர்களின் கொஞ்சல் பேச்சுக்களை இங்கே சொல்ல மாட்டேன். சரி தம்பி இப்ப குமாரசாமி வருவான், உன்னைய கூட்டிட்டு போவான், பார்த்து சூதானமா கவனிச்சுக்க, மத்ததை எல்லாம் குமாரசுவாமி சொல்வான், அந்த பெண் அவளின் தோளில் தொங்க என்னை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றார்கள்.

கடை அப்படி ஒன்றும் பெரியதில்லை என்றாலும் நான்கைந்து ஆட்களை குமாரசுவாமியே அறிமுகப்படுத்தினான். இவர்தான் இந்த கடையோட நிர்வாகி, அவர்கிட்டே தான் நீங்க எல்லாரும் வேலை செய்யணும்..புரிஞ்சுதா ? அனைவரின் தலையாட்டலில் உண்மை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அந்த அம்மாளின் பெயர்தான் பாக்கியம் என்பதும் தெரிந்தது.

இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இப்பொழுது வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. நான் அடிப்படையில் ஒரு வியாபாரியின் பரம்பரையை சேர்ந்தவன் என்பதால் நெளிவு சுழிவுகள் வேகமாய் வந்து விட்டன.

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. கடையின் வருமானம் பாக்கியம் அம்மாளின் கையில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு மட்டும் என்னிடம் இருந்தது. அந்த பணம் தலைமைக்கு செல்வதாக எனக்கு தோன்றவில்லை.

தினமும் இரவு பத்திலிருந்து பதினொன்றுக்குள் கடையின் கணக்கு வழக்குகளை பாக்கியம் அம்மாளிடம் சமர்ப்பித்து விடவேண்டும், கூட குமாரசாமி இருப்பான். அவன் அவளுக்கு தம்பி முறை என்று அங்கிருந்த ஊழியர்கள் பேசுவதை கேட்டதால் தெரிந்து கொண்டிருந்தேன். பட்சி..மெல்ல அடுத்த சந்தேகத்தை தெளிவு படுத்த கேட்டது. பொறு..பொறு..அடக்கிக்கொண்டேன்.

மூன்றாம் மாதத்தில் விவரங்கள் கிடைத்து விட்டன. மேற்படி இந்த கடை கோயிலில் சாமி கும்பிட்ட பரமசிவம் பிள்ளையின் இரண்டாம் அல்லது மூன்றாம் (எனக்கு தெரியாது) குடும்பத்துக்கு அவர் சொந்தமாக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். என்னை எப்படி தேர்ந்தெடுத்திருக்கிறார்? இந்த கேள்வி மனதுக்குள் வர சந்தேகம்,

எண்.1. நான் இன்னாரின் மகன் என்று அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

எண்.2. என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை அவரே ஏற்பாடு செய்திருக்கலாம்.

எண்.3. அவருக்கு தெரிந்த யாரையாவது இந்த கடைக்கு அனுப்பினால், அவர்களுக்கு பாக்கியம் அம்மாள் அவரின்…..என்று தெரிந்து அவரது குடும்பத்துக்குள் புகைச்சலை உருவாக்கி விடலாம். (அவரின் எல்லா சொத்துக்களும் ரத்னாம்பிகை என்னும் பெயர் கொண்ட மனைவி பேரில் இருப்பதாகவும் கேள்வி)

என்னுடைய ஆறாம் அறிவு வேலை செய்ய மனதுக்குள் சுருண்டு கிடந்த என் வியாபார சூத்திர தந்திரங்கள் மெல்ல படம் எடுக்க ஆரம்பித்தன.

என்ன தம்பி இன்னைக்கு வசூல் கொஞ்சம் கம்மியா இருக்கு? பாக்கியம் அம்மாளின் இந்த கேள்விக்கு பதிலை தயாராய் வைத்திருந்தேன்.

அடுத்து கூட வேலை செய்பவர்களில் நம்பிக்கையான இரண்டு பேரை பொறுக்கி என்னுடன் வைத்துக் கொண்டேன். அவர்களுக்கும் கொஞ்சம் பங்கு அவ்வளவுதானே?

ஒரு வருடம் ஓடியிருந்தது, இப்பொழுது என் கையில் பணப்புழக்கம் நிறைய புழங்கியது. ஆனால் வெளியில் பஞ்சத்துக்கு அடிபட்டவன் போல் தான் இருந்தேன். காத்திருப்போம் முடிவு செய்தவன், கொஞ்சம் கொஞ்சமாக வியாபார தந்திரங்களின் கடலுக்குள் நீந்த ஆரம்பித்தேன். மனசாட்சி அவ்வப்போது (பட்சி) குற்றம் சொன்னாலும் ஒதுக்கி வைத்து விட்டு எனது வேலைகளில் கவனமாக செய்தேன். அவ்வப்பொழுது குமாரசாமிக்கும் தீனியை போட்டு அவனிடமே நீ ஏன் இந்த கடைக்கு முதலாளி ஆக கூடாது ? என்ற கேள்வியை விதைத்து மனதுக்குள் ஒரு பூகம்பத்தை உருவாக்கி வைத்தேன்.

இபொழுதெல்லாம் பாக்கியம் அம்மாள் என்னை நம்பவில்லை என்பதை கண்களில் காட்ட ஆரம்பித்தாள். அதை விட அவளது தம்பி குமாரசுவாமியையும் நம்பாதவளாய் இருப்பதும் தெரிந்தது. எனக்கு இதுதான் வேண்டும். அடிக்கடி கடைக்கு வர ஆரம்பித்தாள்.. நான் குமாரசாமியிடம் நீ உன் அக்காவின் மகளை பெண் கேட்டு திருமணம் செய்ய முயற்சி செய் என்று தூபம் போட அவன் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவள் தயவு தாட்சண்யம் இன்றி மறுத்து விட்டாள். அந்த கோபம் குமாரசாமியின் மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தது.

நான்கு வருடங்களில் அவர்களுக்குள் முட்டல் மோதல் பெரியதாகி அந்த பரமசிவம் பிள்ளை வந்து பைசல் பண்ண வேண்டியாகி விட்டது. அந்த பெண்ணின் வீட்டிலேயே விசாரணை தொடங்க, நான் ஏதும் அறியாதவனைப் போல் நின்று கொண்டிருந்தேன். குமாரசாமியையும், இந்த பையனையும் எனக்கு தேவையில்லை என்று அந்த பெண் அவரிடம் சொல்ல அவர் என் முகத்தை பார்த்தார்.(உண்மையை தெரிந்து கொண்டானோ? ) ஹூஹூம்..நான் முகத்தில் எந்த பிரதிபலித்தலையும் காட்டாமல் அப்படியே நின்றேன்.

பரம்சிவம் பிள்ளை என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அந்த பெண்ணை அழைத்து கொண்டு உள் அறைக்கு சென்றவர் ஏதோ பேச அந்த பெண் சற்று கோபமாய் பேசியவள் சரி..என்பது போல தலையசைத்தது இங்கிருந்து எனக்கு தெரிந்தது.

குமாரசாமியை ஊருக்கு அனுப்பி விட்டார்கள். ஓரளவுக்கு பணத்தை அவன் கையில் திணித்து திருப்தியான பின்னால்தான் நகர்ந்தான். இப்பொழுது மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்தார்.(வலை விரித்தார்) இந்த பெண்ணை மணம் செய்து கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். அதாவது உனக்கு இந்த பெண்ணை கட்டி கொடுக்க போகிறேன் என்பதை மறைமுகமாக சொன்னார்.

நான் சட்டென சொன்னேன், அவளை திருமணம் செய்வதென்றால் நானும் ஒரு டெக்ஸ்டைல்சின் முதலாளியாக கெளரவமாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அவர் யோசித்தவர் இந்த கடையை உன் பேரில் மாற்றி தருகிறேன். அந்த பெண் முகத்தை சுருக்குவதை பார்த்தும் பார்க்காதவர் போல் (எல்லாம் சமாதானப்படுத்தி கொள்வார்)

இரண்டு மாதங்கள் ஓடியிருந்தது, அந்த பெண்ணின் பெண் இப்பொழுது உரிமையாய் இந்த கடைக்கு வருகிறாள். நானும் அவளை திருமணம் செய்து கொள்வதாக அவருக்கு உறுதி கூறி கடையை என் பெயருக்கு மாற்றியும் இருந்தேன்.அடுத்த மாதம் எங்கள் திருமணம். அதற்கு முன் நான் செய்ய வேண்டிய காரியம்….ஒன்று இருக்கிறது

எனது ஊரில் பரமசிவம் பிள்ளை வீட்டு முன் ஹாலில் உட்கார்ந்திருந்தேன். வெளியே வந்தவர் என்னை பார்த்த்தும், அருகில் வந்து என்ன விசயம் என்றார். உங்கள் மனைவியையும் கூப்பிடுங்கள் என்றவுடன் கொஞ்சம் முகத்தில் பதட்டத்தை காண்பிக்க நான் நிர்மலமாய் என் முகத்தை வைத்திருப்பதை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாய் மனைவியை அழைத்தார். அந்தம்மாள் வெளியே வர இருவரையும் அருகில் நிற்க வைத்து காலில் விழுந்து வணங்கினேன். அந்தம்மாளுக்கு ஒன்றும் புரியாமல் எழுந்திருப்பா..எழுந்திரு என்று சொல்ல, பரமசிவம் பிள்ளை ஒன்றும் புரியாமல் விழித்தார்.

அம்மா நம்ம தெருவுக்கு அடுத்த தெருவுல “இராமலிங்கம்பிள்ளை டெக்ஸ்டைல்ஸ்”அப்படீன்னு கடை திறந்திருக்கோம். நாளைக்கு காலையில வந்து உங்க கையால விளக்கேத்தி வைத்து வாழ்த்தணும், கை கூப்பி வேண்டினேன். அதுக்கென்னப்பா தாராளாமா வர்றோம். சொன்னவர்களை வணங்கி விடைபெற்றன்..

“இராமலிங்கம் டெக்ஸ்டைல்ஸ்” கடை ஓரளவுக்கு பெரியதாக திறந்திருந்தேன். அதுவும் “ரத்னாம்பிகா டெக்ஸ்டைல்ஸ்”முதலாளி வந்து திறந்து வைக்கிறார் என்ற போது ஊரில் பிரபலமாகியது. ஆனால் பரமசிவம் பிள்ளையையும், என் அப்பாவையும் சந்திக்க வைக்கவில்லை. காரணம் பின்னால் சொல்கிறேன்.

அப்பாவை காலில் விழுந்து கூட்டி வந்து “இராமலிங்கம் பிள்ளை” டெக்ஸ்டைல்ஸ் கடையில் முதலாளியாய் உட்கார வைத்தேன். அவரது முகம் கெளரவத்தை திரும்ப பெற்ற சந்தோசம் தெரிந்தது. அம்மாவுக்கோ நிலை கொள்ளா சந்தோசம்..முகத்தில் தெரிந்தது.

சார் நான் முன்னால் சொன்னது போல் உழைப்பால் முன்னேறித்தான் இந்த கடையை திறந்தேன் என்று சொல்லாவிட்டாலும் நான் செய்தது ஏன் என்று உங்களுக்கு விளக்கி விடுகிறேன். இந்த பரமசிவம் பிள்ளை ஒரு காலத்தில் என்னுடைய அப்பா கடையில் வேலை பார்த்தவர், என் அப்பாவும் இதே போல் ஒரு பெண்ணை நம்பி அவளுக்கு உதவி பண்ண பரமசிவத்தை ஏற்பாடு செய்தார்.

அதன் பலன் பரமசிவம் இந்த ஊரின் பெரிய மனிதராகி என் அப்பா ஒன்றுமில்லாதவராய் ஒரு மூலையில் முடங்கி கிடக்க வேண்டியதாகி விட்டது. எனக்கு இங்கு வந்த பின்னால் குமாரசுவாமி மூலமாக எல்லாம் தெரிந்தது.

நான் செய்ததை நீங்கள் துரோகமென்றால், அந்த பரமசிவம் பிள்ளையைப் போல் என் அப்பாவை ஒன்றுமில்லாமல் “ஓட்டாண்டியாக்கி” விடவில்லை. அவரின் மகளை (சட்ட பூர்வமாய் இல்லாவிட்டாலும்) பெருந்தன்மையாய் மணம் முடித்தும் இருக்கிறேன்.

என் அப்பாவின் கெளரவத்தை மீட்க அவரை ஒரு கடைக்கு முதலாளியாக உட்கார வைத்திருக்கிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள் நான் செய்தது சரியா தவறா.?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *