பயிற்சிமுகாம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 2,680 
 
 

அத்தியாயம் ஐந்து: பாம்பு, செண்பகச் சமையல்!

அடுத்த நாளும் இதே பயிற்சிகள் தொடர்ந்தன. விரும்பின தோழர்க‌ள் இன்னொரு முறையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள். ஆறுதலாகக் குளித்து கொட்டிலினுள் புகுந்தார்கள். அரசியல் அமைப்பில் உறுப்பினர், ஆதரவாளர் என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஆதரவாளர் அதிக தளர்வுள்ளவர். விலகப் போகிறேன்; வெளிநாடு போகப் போகிறேன், கல்யாணம் முடிக்கப் போகிறேன்…எனக் கதைத்துப் பேசி இலகுவாக வெளியேறி விட முடியும். உறுப்பினர்கள் வெளியேற முடியா விட்டாலும் தீவிரமான விதி முறைகள் அமுலாக்கல்கள் இல்லை. ஆனால் பின்தளப்பயிற்சி பெற்றவர்கள் தளத்தில் பயிற்சி பெற்றவர்களிற்கு இறுக்கம் காணப்படுகின்றது. இந்த இறுக்கத்தால் அரசியலுக்கும், இராணுவத்திற்குமிடையில் மட்டத்தில் ஒருவகை ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இராணுவத்திற்கு உள்ளேயே தண்டனை வழங்கும் முறையும் இருக்கவே செய்கின்றது. ஒரு முறை, “காதல் கடிதம் கொடுத்தார்” என்ற முறைப்பாடு ஒரு தோழருக்கு எதிராகக் கொண்டு வரப்பட மூன்று மாசங்கள் பணியில் ஈடுபட முடியாது என்ற விலத்தலுடன் மொட்டையும் அடிக்கப்பட்டார். இப்படி பல நிகழ்வுகள் ஏ.ஜி.ஏ (A.G.A) பிரிவுகளிலே நிகழ்ந்துள்ளன. காம்பை விட்டு ஓடியதிற்காக கொட்டிலில் முழங்காலிருக்கும் தண்டனையில் இருத்தி விட்டு உடற்பயிற்சிக்குப் போய் விட்டார்கள். இரண்டு,மூன்று மணி நேரம் யாருமே கொட்டிலினுக்குள்ளே வரவில்லை.சமையல் குழு கவனிக்கவும் இல்லை. தவிர கவனிக்கலாமா என்பதும் தெரியாது.

பாரி வந்த போதே பார்த்தான். சிறுவர்கள் கள்ளம் செய்யப் பயந்து அப்படியே இருந்ததினால் ஒருத்தனுக்கு சிராய்ப்பு போல காயமும், மற்றவனுக்கு தோல் உரிந்து இரத்தம் வடிவது போன்ற நிலையிலும் இருந்தன. உடனேயே இருவரையும் எழுப்பி தண்ணீரால் கழுவிப் பார்த்தான். வலியால் அணுங்கவே பாவமாகப் போய் விட்டது. சமையல் குழுவிடம் தேனீர் போட்டுக் கொடுக்கச் சொல்லிப் போட்டு உடற்பயிற்சித் தளத்திற்கு வந்து சிவா ஆசிரியரிடம் தெரிவித்தான். ” திரும்ப பிடித்த போது நிறைய பயந்து போய் விட்டார்கள். வாய் இல்லாப் பூச்சிகள். கட்டுப்பாடுகள் இருக்கட்டும் இப்படி மணிக்கணக்கில் தண்டனை கொடுக்க வேண்டுமா? ” எனக் கேட்டான். ” மறந்தே போய் விட்டேன் ” என சிவா தவறை ஒப்புக் கொண்டார். விஜயனையும், செழியனையும் உடனேயே இருவரையும் சைக்கிளிலே ஏற்றிக் கொண்டு இராசைய்யா பரியாரியாரிடம் அனுப்பினான். கட்டுப் போட்டுக் கொண்ட அந்த தோழர்களிடம் எல்லாருக்குமே அன்பு பிறந்து விட்டது. அதுவரையில் விசாரிக்க முடியுமா ? எனத் தெரியாதிருந்த தோழர்கள் முதலில் சாப்பிட விட்டு விட்டு ” ஏண்டா ஓடினனீர்கள் ? ” எனக் கேட்டார்கள். ” அம்மாவைப் பார்க்க ” என்று கண்கலங்கக் கூறிய போது எல்லோருமே நெகிழ்வுக்குள்ளாகி விட்டார்கள். முதலில் இவர்களையே பயிற்சிக்கு எடுத்திருக்கக் கூடாது. ” டேய் ,இன்னமும் 15 நாள்கள் தானே இருக்கின்றன. பயிற்சி முடிந்த பிறகு தான் போக வேண்டும் ” .இனிச் சொல்லி என்ன பிரயோசனம்?. சிவா ஆசிரியர், பிறகு இருவரையும் பயிற்சியில் ஈடுபடுத்தவில்லை. “பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். புரிந்து கொள்வீர்கள். காயம் முதலில் மாறட்டும், ஈடுபடலாம் ” என்றார். அவர்களாகவே முயன்றால்… செய்ய விட்டும் பார்த்துக் கொண்டார்.

பின்தளத்தில்,தோழர்கள் தண்டனைகளைப் பெற்றுத் தான் பயிற்சிகளை மேற்கொண்டார்கள். அங்கேயும் ஓட்டங்கள் இடம் பெற்றன. இங்கே இருப்பதை விட பல மடங்கு பேர்கள் பயிற்சியில் ஈடுபட்ட‌ இடம். எல்லாத் தோழர்களுக்கும் சுக்கிரத்தசை அமைந்திருக்கவில்லைதான். மற்றைய இயக்கங்களின் பகமை இழைகள், பல்வேறான உணவு, பொருளாதாரப்பிரச்சனைகள், தொடக்கக்காலப் போராளிகளான‌ தலைவர்கள் சுயவிமர்சனங்கள் செய்யாட்டி எதுவுமே தெரிய வரப் போவதில்லைதான் . இயக்கங்களின் மேல் எத்தனை பெரிய விமர்சனம் வைக்கப்பட்டாலும் கூட , அவை பற்றிய செய்திகள் குருடன் யானையைப் பார்த்தக் கதையாகவே தொடர்கின்றன . சில தோழர்கள் மண்ணுக்குள்ளும் சென்றிருக்கிறார்கள். அப்படி கீறல்கள் விழாத இயக்கங்களே இல்லை . ‘ ஓடுவதும் ஒன்றும் தீர்வில்லை தான் ‘ என்பது லெனின் காலத்திலிருந்து கூறப்படுவதுண்டு. அவரது கட்சியிலும் உட்கொலைகள் விழுந்தன. நெல்சன் மண்டெலாவின் காங்கிரஸிலும் உட்கொலைகள் நிகழ்ந்தன. நியாயப்படுத்த வர‌வில்லை, அதேசமயம் தூயவாதமும் சரிப்பட்டும் வராது . குறைக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானது .

நாங்கள் மரணங்கள் மலிந்த பகுதியில் வாழ்கிறோம். மரணங்கள் விளையாடிக் கொண்டே இருக்கின்றன நம்மவர்கள் எல்லாருமே சைவர்களும் கிடையாது , அசைவமும் சாப்பிடுறவர்களும் இருக்கிறார்கள்தான். எல்லா விசயங்களிலும் இதே தன்மைகளும் இருக்கின்றனதாம். ஈழத்தமிழர்கள் வாழ்வில் எதிரியால் நிகழ்த்தப்படுகிறதோடு (அவற்றோடு) ஒப்பிடும் போது இயக்க மரண‌ வீதம் குறைவு தான். இது தூய்மை வாதம் இல்லை. இந்த நிபந்தனைகளுடனும் எம் பார்வை விரிய‌ இருக்க வேண்டும். எம்பகுதியில் எம்மவர்களால் நிகழ்த்தப்படும் மரணங்கள் அதிர்வலைகள் கூடியவையே என்பது மறுக்கப்படவில்லை. அதற்காக அவசரகால பிரேக்கை அழுத்தி நிறுத்துவது போல அழுத்தக் கூடாது, போகும் பயணத்திலேயே காரணங்கள் கண்டறிந்திக் களையப்பட வேண்டியவை .

அதேப் போல விடுதலைப் போராடத்தில் நம்பிக்கை இழப்பதும் தீர்வில்லை . பரவாயில்லையே நானும் ஒரு பேராசிரியர் போல அலச ஆரம்பித்து விட்டேனே ” ஜீவனுக்கு சிரிப்பும் வந்தது. நண்பன் சினிமாப்படத்தில் வாறதுப் போல ” டெண்டுல்காரை எஸ்.பி போல பாடச் சொல்வதும், எஸ்.பி யை கிரிக்கெட் ஆடச் சொல்வதும் எப்படி இருக்கும்.?…,அவரவர் வேலைகளை அவரவர்களே செய்யவே வேண்டும் !.ஈழத்தமிழர்கள் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது தான் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம். ” டீம்வேர்க் ” அது சுத்தமாக நம்மிடையே இல்லை, அது தான் நம் பலவீனம். ஒரு பெண்ணின் உள்ளத்தை அறிவதை விட இது படு சிக்கலாகவே நெடுக‌ இருக்கின்றது. நெப்போலியன் எப்படி சக்கரவர்த்தியானான்?, தமிழீழம் கிடைப்பதற்கு அவனைப் போல நாமும் மாற வேண்டும். அனைத்தையும் கண்டறியவும் வேண்டும். கண்டறியிற போதே எது தடைப்படுத்துகிறது என்பதைக் கண்டு எடுத்தெறிந்து விட்டு…பயணத்தையும் தொடர முடியும். சிறிலங்காவில் இனவாதத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு போகிற வரைக்கும் எம் கனவுகளுக்கும் நனவுத் தன்மைகளும் கிடக்கின்றனதான் .

சிந்தனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு உடற்பயிற்சியில் கவனத்தைப் பதித்தான். சிவா ஆசிரியர் புல்தரையில் அங்கும் இங்கும் எதையோ தேடினார்? அதைப் பார்த்து விட்டு ” வாத்தியார் எதையாவது தொலைத்து விட்டீர்களா? ” என்று தியாகு கேட்டான். ” வடக்கயிற்றை இன்றைக்குக் காணவில்லையே ” என்றார்.வடக்கயிறா?..ஓ !,.நம்ம நீயாப்பட நண்பனையா; சாரையையா தேடுகிறீர்கள். அது மத்தியானச் சாப்பாட்டை வெட்டி விட்டு அசைய முடியாது எங்கையாவது கிடக்கும் ” என்று பதிலளித்தவன் , அதைப் போய் போய் இவர் ஏன் தேடுகிறார்?…எனச் சந்தேகத்துடன் பார்த்தான். நண்பகல் பயிற்சி முடிய “இன்றைக்கு தடைப்பயிற்சி இல்லை ” என்று கூறிய ஆசிரியர் மூன்று குழுவக்களாகத் தோழர்களைப் பிரித்தார். பாரி தலைமையில் ஒன்று, செழியன் தலைமையில் ஒன்று என்று அனுப்ப ஜீவனும் அராலித்தோழர்களும் தியாகுவும் இவருடன் நின்றார்கள். திண்ணைப்பள்ளிப் போல பிரித்தது வேடிக்கையாய் இருந்தது. அதே புல்தரையிலே கூட்டங்கள் நடந்தன‌

சாரையின் ஆண் கொம்பேரி மூர்க்கன். படு விசம். எப்படி சாரையையும் அதையும் இனம் காண்பது ? தெரியாது. ஆனால், ஊரிலே யாருமே சாரையை அடிப்பதில்லை. மூர்க்கன் தன் இணையைக் கொன்றால் பழி வாங்காமல் விட மாட்டான் என்பது ஜதிகக்கதை. சிவா ஆசிரியர் பேசத் தொடங்கினார். “போராடுவதற்கு உறுதியான உடல், சுவர் தேவை. அதற்காகவே பயிற்சிகளை மேற் கொள்கிறோம். ஒருவேளை சாப்பிடாமல் விட்டால் உடல் சக்தியை இழந்து தளர்ந்து விடுகிறது. பின் தளத்தில் இந்த சாப்பாட்டு விய‌சத்திலே இந்திய அரசாங்களைலேயே தங்கி இருந்தோம். உங்களுக்குத் தெரியாத விசயம். இதையே சரிவரத் தராது அங்கே அரசியல் நடைப் பெற்றது. அதனாலும் ஏகப்பட்டக் குழப்பங்கள்”

ஜீவனும் கேள்விப்பட்டிருந்தான். ஊர்மனைகளில் இருந்து ஆடு,மாடுகள் திருடி சனங்களுடன் கொளுவுப்பட்டார்கள். நாய்களையும் கூடப் பிடித்துத் தின்றார்கள் என்கிறார்கள் , எந்தளவு உண்மை எனத் தெரியவில்லை.

“நம்போராட்டம் நீரிலும், நிலத்திலும் நடைபெறப் போகிறவை . வாயுவில் மிதந்து நடைபெறும் என்பதை நம்பி இருக்கவில்லை. எந்த இடர்பாடு நேரிட்டாலும் நடைபெற வேண்டியதொன்று. உங்களில் எத்தனைப் பேர் சைவம்? கையை உயர்த்துங்கள் ” என்றார்.

விமல் மட்டுமே உயர்த்தினான். ஐயர் பாரியின் குழுவில் சென்றிருந்தார்.

“உன்னைச் சாப்பிடச் சொல்லி சொல்லப் போவதில்லை. ஆனால் ,நெருக்கடியான நிலமையை எப்படிச் சமாளிக்கிறது என்று உனக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதுக்கான வகுப்பு தான் இது ” என்றார். பறவைகளிற்கு கண்ணி வைப்பதை பொதுவாகக் குறிப்பிட்டார். அதாவது அவருக்கும் சரிவரத் தெரியாது. வவுனியாப் பகுதித் தோழர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அங்குதான் காட்டுக்குள் வேட்டைக்குப் போறது…. அதிகமாக இருக்கின்றன.

” இங்கே பத்தைகள் ,வயல்களில் நிறைய பாம்புகள் ஊர்கின்றன. அதை மட்டுமில்லை எந்த உயிரியையும் … பறவை, முயல்களைப் பிடித்து பசியாற தெரிந்திருக்க வேண்டும் “.

” இதுக்கு தானா வடக்கயிறைத் தேடினீர்கள் ” என்று தியாகு கேட்க சிரித்தார். அவற்றை எப்படிப் பிடிப்பது , பதப்படுத்திச் சாப்பிடுவது என்பது எல்லாம் பள்ளிப்பாடம் போல படித்தறிந்திருக்கவே வேண்டும். முதலில் தியறி, பிறகு செயல்முறை…இரண்டிலுமே தேறி இருக்கவும் வேண்டும் ” என்றார்.

” சரி பாம்பைத் தேடுவோம் ” என கிளம்பத் தொடர்ந்தார்கள். மற்றக் குழுக்களும் சல்லடைப் போடத் தொடங்கி விட்டிருந்தன. பாம்பு கண்ணிலே படவே இல்லை. பட்டாலும் கூட தோழர்கள் காட்டிக் கொடுக்கவில்லையோ? தோழர்களையும் நம்ப முடியாதுதான். இவர்களதுக் கண்ணிலே ” குக் குறு ” , ” குக் குறு ” என்கிற செண்பகமே கண்ணில் அகப்பட்டது. புறா போல அதுவும் ஒரு சோம்பல் பிடித்தப் பறவை. காகத்தின் சகோதரி என்கிறவர்களும் இருக்கிறார்கள். இல்லை குயிலின் இனம் என்கிறார்கள். ஏதோ தொடர்பு இரண்டுமிடையில் இருக்க வேண்டும். சிலவேளை ஒரே குடும்பமாக இருந்து வேறுபட்ட இனங்களோ? , கிட்டப் போனாலும் கூடப் பறந்து தொலைக்காது. அராலித் தோழர் ஒருவர் எறிந்த தடியில் அடிப்பட்டு விழுந்தது.

பாம்பைத் தேடி களைத்துப் போய் இருந்ததால் வேட்டையை நிறுத்தி விட்டு செண்பகத்தோடுச் சென்றார்கள். உள்ளேப் போய் ஒருத்தன் கத்தியைக் கொண்டு வர, கழுத்தை வெட்டி உரிக்கச் சொன்னார். தோழர்கள் தயக்கம் காட்டவே ” இது சரிப்பட்டு வராது “என்று விட்டு கழுத்தை வெட்டி துண்டாக்கி , ரஜனியிடம் கொடுக்க அவன் கோழியை உரிப்பது போல உரித்தான். வெட்டித் துண்டாக்கி பொரிக்கச் சொல்ல சமையல்குழு பின்னடித்தது. தியாகுவும், ஆசிரியரும் , ரஜனியுமே பொறித்து எடுத்த பிறகு சிறிய ,சிறிய துண்டாக்கி சுவைக்கக் கொடுத்தார்கள். ஒரு பறவையை எத்தனைப் பேருக்கு கொடுக்க முடியும். அராலித் தோழர்களுக்குக் கிடைக்கவில்லை. கொழுப்பு அவ்வளவாக இல்லாதது. எனவே மணத்துடன் இருந்திருக்காது. இரவு நேரம் வேறு. வேறு வகுப்பு இருக்கவில்லை. சிவா ஆசிரியரும் அவர்களுடனே தங்கி இருந்தார். பாரியும் , செழியனும் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

” நீங்கள் எல்லாம் சுத்த மோசம். அங்கே எத்தனைப் பாம்புகள் சாப்பிட்டிருக்கிறோம். காகம், செண்பகம், இன்னும் என்னென்னோ பறவைகள் எல்லாம் (வயிரைக் காட்டி )இங்கே போய் இருக்கின்றன . ஒரு தடவை சுவைத்தீர்கள் என்றால் பிறகு நீங்களும் ஒ.கே ” என்றார்.

” அங்கத்தைக் காடுகளிலே சாரை மட்டும் கிடைக்காது. சாரை யாழ்ப்பாணத்துப் பாம்பு. விசப்பாம்புகள் தான் இருக்கும். பிடிக்கப் பழக வேண்டும். முந்தி இங்கே இருந்த நரிக்குறவர்கள் …அதைப் பிடிப்பதில் திறமைசாலிகள். இந்த சிங்கள அரசாங்கம் அவர்களையும் மலையக ம‌க்களைப் போல‌த் துரத்தி விட்டாலும் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியா சென்று பிடிக்கிற கலையை கற்று வரலாம் தான். போராளி தன்னை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும் . ஆளுமை மிக்கவனாக இருந்தால் தான் எம்மண்ணிலிருந்து படையினரையும் அறவே துரத்தி விட முடியும் ” என்றார். தோழர்களுக்கு, பள்ளியில் படித்தது கடுகளவாகவும். விடுதலைப் பள்ளியில் படிக்க வேண்டியவை மலையளவாகவும் இருந்து கலக்கமூட்டியது.

பாடுகிற மனநிலையில் யாருமே இருக்கவில்லை. வயிற்றிலே இருந்து ” செண்பகமே..” என்ற சினிமாப் பாட்டே வந்து கொண்டிருந்தது. இனவாத்ததால் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட போராட்டம் சுமையாய் அழுத்துவதாக‌வேப் பட்டது. தமிழீழத்திற்கும் சில கடமைகள் உண்டு என்று ஜீவன் நினைத்தான். பாரதி ,சுதந்திரமடைய முதலே ‘ சுதந்திரமடைந்த இந்தியாவை மனக்கண்ணில் கண்டு விட்டே போனான் . இவர்களாலும் ஏன் தமிழீழத்தையும் காண முடியாது ? . முடியும் தான்.

கனடாவில் இருக்கிற கியூபெக் மாகாணத்திற்கு நிலம், பொலிஸ் , வரி வசூலிக்கும்,நிதி சேகரிக்கும் உரிமைகளோடு விசேசமாக சுயமாக குடியுரிமை வழங்கும் உரிமையும் கூட அளிக்கப்பட்டு இருக்கின்றது. அதனால், பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாகப் போக வேண்டியது கனடாவின் ஒரு மாகாணமாகவே இருக்கின்றது. 72ஆம் ஆண்டுக்கு முன் இதுவும் ஒரு வடக்கு, கிழக்கு போல எரிகிறதாகவே இருந்தது. அன்றைய‌ கனடா பிரதம மந்திரியால் …புத்தர் வாழும் மாகாணமாக காப்பாற்றப்பட்டிருக்கின்றது . மாறி இருக்கின்றது. அதனால் ஏனைய‌ மாகாணங்களிற்கும் கூட அடிப்படை உரிமைகளான அடிப்படை உரிமைகள் என்கிற‌ பேச்சு,எழுத்து… சுதந்திரங்களுமே கிடைக்கவும் பெற்றுமிருக்கின்றன. பொதுநலவாய நாடான இதற்கு மகாராணியாரின் அனுமதியும் கிடைத்திருக்கின்றது. இலங்கையும் அதே போல ஒரு பொதுநலவாய நாடு ! நம் தமிழீழத்திற்கும் , இந்த அரசாங்கத்தால் துரத்தப்பட்ட‌ மலையகத் தமிழர் அனைவருக்கும் பிரஜா உரிமை வழங்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அவர்களின் சந்ததியினருக்கும் வழங்கப்ப வேண்டிய கடமையும் இருக்கின்றது. இரட்டை பிராஜாவுரிமை உள்ளவர்களாகவே …வாழ வேண்டியவர்கள் ” .ஜீவனுக்கு இப்படிச் சிந்தனைகள் பறக்கும் , நிறுத்தி விட்டு , விமலைப் பார்த்தான். அவன் ஆசிரியர் சொல்வதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். சைவம் பாம்புப் பிடியைக் கவனிக்கிறது. இவனிடம் என்னவோ கிடக்கிறது .

காந்தியையும் , புத்தரையும் நினைத்துக் கொண்டிருந்தால் பிடிக்கிற பாம்பையும் சாப்பிட முடியாமல் இருக்கும். அந்தச் சிந்தனைகளையும் மூட்டைக் கட்டி பரணில் எறிந்து விட்டு ஜீவனும் சிவா ஆசிரியர் சொல்வதைக் கவனித்தான். எப்படி பாம்பை பிடிக்கிறது ?… என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அதைத் தான் இந்த விம‌லும் ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கிறான். இது தியறி.பருமட்டான …வரைபடம் போன்றது. பிடிக்கிறது… வரைபடத்தினுள் இறங்கிப் போவது போன்றது. அடுத்த நாள் உடற்பயிற்சியின் போது பாம்பு சர சரவென இவர்களின் புல்வெளியின் பக்கத்திலே நெளிந்தது. ” டேய் நாளைக்கு பயிற்சியைப் பார்க்கலாம். இப்ப பாம்பைப் பிடியுங்கடா ” என ஆசிரியர் கத்தினார்.

தோழர்கள் ஓடினார்கள். ஆசிரியர் கூறியபடி பாம்பின் வாலை யாருமேப் பிடிப்பதாகத் தெரியவில்லை. படையே தொடை நடுங்கியது. குறளி, ஜீவனின் பக்கத்தில் வந்து காதிலே .”ஓட்டப் பந்தயம் தான் நடக்கிறது ” என்றுக் கூறிச் சிரித்தான். ஆனால், விமல் விலத்திக் கொண்டு ஓடி வந்து துணிவாய் பாம்பின் வாலைப் பிடித்து ஒரு சுற்று சுற்றினான். சிவா ஆசிரியர் ” விடாதே, மேலும் , மேலும் சுற்று ” என்று கத்தினார். பிடித்தது தெரிந்ததும் ரஜனி கொட்டிலிற்குப் பறந்து போய் கத்தி ஒன்றையும் எடுத்து வந்தான். பாரி ” சரி கீழே போடு ” என்று சொல்ல , நிலத்தில் விட்டான். பாம்பு அசைவற்றுக் கிடந்தது. சிவா ஆசிரியர் ” அதன் கண்ணிலிருக்கிற சுழற்சி எடுபட நேரம் எடுக்கும் ” என்றார். செழியன் , ரஜனியிடமிருந்து கத்தியை வாங்கி தலையை வெட்டி உடலை வேறாக்கினான். அதற்குப் பிறகே உடல் துடிக்கிறது பகிடியாக இருந்தது. ” எந்த விசப்பாம்பையும் இப்படிச் சுற்றினால் கிறுக்கத்திலே உடனே வீழ்ந்து விடும் . தலையிலே மட்டும் தான் விசம் இருக்கிறது. உயிரோட இருக்கிற போது தான் வெட்டவும் வேண்டும் .பாம்பின் விசம் உடலுக்குள் இறங்காது. பாம்பை அடித்து செத்திட்டுது என்றால் சாப்பிடவே முடியாது “என்றார். அடித்து சாகிற போது விசம் உடலினுள்ளும் பரவி விடும் என்கிறாரா? ,அதிலே தெளிவு கொஞ்சம் மயக்கம் . எந்தப் பாம்பையுமே மயக்க நிலையில் வெட்டுற போது சாப்பிடலாம் என்கிறார். ஆனால் ,அதற்கு முதல் பாம்பை பிடிக்க வேண்டுமே, சுற்ற வேண்டுமே. நாகமோ சீறும். ரகம். கடைசியிலே பாம்பு தான் எங்களைத் துரத்தப் போகிறது. நரிக்குரவர்கள் நம்ம யாலுவாக்கள். அவர்களை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சென்று சந்தித்து பாம்பு பிடிக்கும் கலையைக் கற்றே வர‌ வேண்டும். விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு அடியுமே சவாலாகத் தான் இருக்கின்றது.

ஜீவனுக்கு மறுபடியும், மறுபடியும் இவனுள் என்னவோ இருக்கிறது என்ற சிந்தனையே எழுந்து கொண்டிருந்தது. ‘ சைவம் ‘ தான் அசைவத்தையும் துணிவாய்ப் பிடிக்கிறது. அவனுடைய அப்பாவிடமும் நேரேயே போய் “என்ர நண்பர்கள் எல்லோரும் போய் இருக்கிறார்கள் நானும் போகப் போறேன்”என்கிறான். ஜீவனோடப் படித்த நண்பன், ஒருவன் முருகன் முன்பு ,அடிக்கடி ” உலகிலே ஆயிரம் ஜாதி இருந்தாலும் நானும் நீயும் ஒரே ஜாதி. ‘ஆசிரியர் ஜாதி ‘ ” என்று கூறிச் சிரிப்பான். இந்த விமலும் நானும் ஒரே ஜாதி ! , இவனுடைய புத்திசாலித்தனம் எனக்கும் வர வேண்டும் . ” இனிமேல் நானும் இவனைப் போலவே பாம்பைப் பிடிக்க வேண்டும் , துணிவாய் நடக்க வேண்டும் ‘ என தீர்மானித்துக் கொண்டான்.‌

பாம்பின் செட்டையை உரித்து வெட்டி இறைச்சியுடன் சமையல் குழுவை அணுகினார்கள். ” நாம் சமைக்க மாட்டோம் ” என அடம் பிடிக்க ” தள்ளுங்கடா ” என்று விட்டு ஆசிரியர், மிளகாய்த் தூள், உப்புப் போட்டு பிரட்டி விட, பாரி ” வெங்காயமும் ,பச்சை மிளகாய்யும் வெட்டிப் போடுங்கள் ” என்கிறான். பிறகென்ன, கறிவேப்பிலையும் போட்டு தியாகு பொரித்து எடுத்தான். ” சாப்பிட்டால் அந்த மாதிரி ருசியுடன் சாப்பிட வேண்டும். ” திறமான‌ கொள்கை ! .செழியன் அந்த துண்டை மேலும் துண்டாக்கி, விமல் பிடித்ததால் அராலிப் பெடியளிடமே முதலில் நீட்டினான். தோழர்கள் பலே ஆட்கள். ஜீவனைப் பார்த்து ” தோழர், கெதியாய் ருசி பார்த்துச் சொல்லுங்கள் ” என்றார்கள். சிவா ஆசிரியர் சிரித்தார் . ” பொறுப்பாளர் சாப்பிடலாம், வேற வழி இல்லை ” என்றார். விமலிடம் இருக்கும் தைரியம் கொஞ்சம் கூட என்னிலே இல்லையா? என அவனுக்கே தன்னைக் குறித்து அவனுக்கு வெறுப்பு ஏற்பட்ட, எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டு சப்பினான். மிளகாய்த்தூள்..பொறியல் தன்மை தூக்கலாத் இருந்தன. மணம் இருந்தாலும் தெரியவில்லை. ஆனால் மீன் பொறியலைச் சாப்பிட்டது போலவே இருந்தது. மூக்கை பொத்துறதை விட்டு ” இதை யாருமே மீன் பொறியல் என்று தான் சொல்லுவார்கள், வித்தியாசமே இல்லை ” என்றான். மள , மள வென ஒவ்வொருத்தரும் ருசி பார்த்து ” மீன் பொறியல் தான் ” எனச் சொல்ல‌ , தட்டிலிலே கிடந்த பாம்புப் பொறியல்கள் முடிந்தே விட்டன. பல அராலிப் பெடியள் ருசி பார்த்திருந்தது அவனுக்குப் பெருமையாகக் கூட‌ இருந்தது. அசிரியர், பாரி, செழியன், தியாகு, குளறி, ரோபேர்ட் கூட ருசி பார்த்திருந்தார்கள். ஒரு பாம்பு அந்தக் கூட்டத்திற்கு எள்ளுப்பொரி. பலருக்குக் கிடைக்கவில்லை தான். விமல், ஐயர் இருவருமே சாப்பிடாதவர்கள். அவர்களுக்கு ஒன்றுமில்லை . மற்றவர்கள்…? எவருமே, தம்தம் கிராமத்திற்குச் சென்ற பிறகு சாப்பிடவும் சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை .

சிவா ஆசிரியர் , ” பாம்பின் தொடக்கம் நீர் நிலை தான் ” என்றார். முரலைப் பார்த்தால் நீளமாக இருக்கின்றது. அதிலே சதையே இருக்காது முள்ளு மட்டும் தான் இருக்கும் போல கிடக்கிறது . விலாங்கு மீன் மேலும் நீளம் கூட‌ .கிட்டத்தட்ட பாம்பு ரகம் . ‘ நீர்ப்பாம்புகள் ‘ குளங்களில் நீந்துகின்றன. இருக்கலாம். ஆனால், பாம்புக்கு முள்ளு இருந்தது போலத் தெரியவில்லை. முரலில் வளையக்கூடிய நார் போன்றவை. இதிலேயும் இருந்திருக்கலாம். சிறு துண்டையே நல்லாய்ப் பொரித்துச் சாப்பிட்டதால் அய்தாய் இருந்தாலும் தெரிய வராது தான்.

அடுத்த நாள், வழமை போல உடற் பயிற்சிகள். ‘ கிடங்கினுள் தவழ்ந்து செல்கிற தடைப்பயிற்சி’….இப்படியே ஒவ்வொரு நாள்களாக நகர்ந்து கொண்டிருந்தன. ஓரிரவு ஜி.ஆ..பிரிவைச் சேர்ந்த குணாத் தோழர் , ‘துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டும் வகுப்’ பை நடத்தினார். நீளக்குழாயை துப்பரவு செய்யும் கம்பியும் துவக்குடனே பொருந்திக் கிடந்ததாக நினைவு. கழற்றிப் பூட்டி ,துப்பரவு செய்து வந்தாலே சுடுகிற வேலையை நல்லாய்ச் செய்யும். சைக்கிள் ஒன்றைக் கழற்றிக் கொட்டுறது போல இதையும் சிறுசிறு துண்டுகளாக கழற்றி விடுவார்கள். சரியாக பொறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதையும்,” நீங்கள் ஐந்து நிமிசத்திற்குள்ளாகச் செய்தாக வேண்டும்” என்று எல்லையும் இருப்பதாகக் கூறினார். காலையிலே, அந்தச் சனியனை முகாமிலே விட்டு விட்டுச் சென்று விட்டார். தடைப்பயிற்சி நேரத்தில் 4,5 பேர்களிற்கு சுடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. குட்டித் தோழர்,வாய்க்கு ருசியாய் சமைத்துப் போட்டதால் சேகருக்கு முதல் சந்தர்ப்பம். ” அதோ பார் ! , பனையிலே உயரத்திலே பொந்து தெரிகிறது. அதை நோக்கிச் சுட வேண்டும் ” என்று விட்டு எப்படி நிலை எடுத்து காலை வைத்துக் கொண்டு நிற்கிறது , இலக்கைப் பார்ப்பது … எப்படி என்பதை ஒன்றுக்கு இரண்டு தரம் கூறினார் . மற்றத் தோழர்களும் ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தார்கள். ” சுடு ” என்றார். சேகர் குறி வைத்தான். பொந்தின் சிறு மரத்துண்டு பறந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. எல்லோருமே கைதட்டினார்கள் .ஜீவனுக்கும் ஒரு சந்தர்ப்பம் . இன்னொரு இலக்கைக் காட்டி ” சுடு ” என்றார். கண்ணைக் குறுக்கிப் பார்ப்பதில் பயிற்சி நிச்சியமாக வேண்டும் என்று தோன்றியது. இலக்கில் இருப்பது போலவும் இருந்தது. தள்ளி நிற்பதுப் போலவும் இருந்தது. கண்னை ஆடாமல் அசையாமல் மூடாமலே வைத்திருக்க வேண்டும். அவனால் சிறிது நேரம் கூட முடியாமல் மூடித் திறந்து கொண்டிருந்தது. வாசிகசாலை வழியே , ‘அம்பு எய்கிற போட்டிகளை திரும்ப கொண்டு வரவே வேண்டும் ‘ என்று நினைத்துக் கொண்டான் . ” பழமை ” என்றுமே கழிக்கப்பட வேண்டியவை இல்லை. புதுமைமைக்கு இரத்த ஓட்டத்தைப் பாய்ச்சுவ‌தே பழமை தான் ! . இப்படி ஒரு ஞானம் .

பழமை பேசுறது தவறில்லை. ‘ அம்பு எய்யிற‌ப் பயிற்சி ‘யை எடுத்திருந்தான் என்றால் ஜீவனுக்கும் இலக்கை சுடுவது இலகுவாக இருந்திருக்கும். சுடுவதற்கானப் பாடம் விரைவாக நடைபெறவில்லை .துவக்கில் மகசீனைக் கழற்றி விட்டு, சுடுவதற்கு முதல் நிலை எடுப்பது , இலக்குக்கு வைப்பது என …. பல‌ தோழர்களிடம் துவக்கைக் கொடுக்கப்பட்டப் பிறகே , மசீனைப் பொறுத்தி விட்டு “சுடு பார்க்கலாம்”என மேலும் மூன்று தோழர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டன. சுட்டார்கள். அதிலேயும் ஒருத்தனின் குறியே இலக்கையும் தாக்கியது.

அடுத்தடுத்த நாள்களிலும் சுடுவதற்கான பயிற்சிகளே நடந்தன. உயிரைக் குடிக்கிற (துவக்கு) ரவைகளே பறந்த‌ன. சிவா ஆசிரியர் பறவையைச் சுடு எனச் சொல்ல‌வேயில்லை. மரப்பட்டை நிறத்தில் குட்டி முயல் ஒன்றும் அடிக்கடி நின்று கண்களை மளங்க ,மளங்க மளாத்தி இவர்களை பார்த்து , பார்த்து விட்டு ஓடியது. ” அதைச் சுடு ” எனச் சொல்லவில்லை .யாழ்ப்பாணத்தில் வெள்ளை நிறத்தில் காட்டு முயலைக் காணவில்லை . குறிப்பிட்ட எல்லையில் வேறு நின்று கவனித்தது . வேணும் என்றால் சிவா ஆசிரியர் ” துரத்திப் பிடி அல்லது தடியால் எறிந்து அடி ” அதையும் வெட்டிச் சாப்பிடுவோம் ” என்றார். அதுவோ, இவர்களின் சிறு அசைவையும் கவனித்தது. அந்த முயலைப் பிடித்திருப்பார்கள் என்றால் தழிழீழத்தையே இத்தரைக்கும் வென்றிருப்பார்கள்.

உயிரிகளைச் சுட அனுமதித்திருந்தால் அதுவே ஒரு பலவீனமாகி காடுகளில் , எதிரிக்கும் இடத்தைக் காட்டிக் கொடுப்பதோடு, வயற்புறங்களில் பதுங்கி இருக்கிற போது சுலபமான வழி என தோழர்கள் பாம்பை, பறவையை,மிருகத்தைக் கொல்றதுக்கு ” மருந்து ” போல கிடைக்கிற ரவைகளையும் பயன்படுத்தி விடுவார்கள். .எதிரியை விட வேற எவரையுமே சுடக் கூடாது என்பது பிரதான விதியாய் எல்லா இயக்கங்களிலுமே நிலவுகின்றன. கழுகு பல தோழர்களைச் சுட்டு விட்டு ” தவறுதலாகச் சுடப்பட்டு விட்டது ” என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சகோதரக் கொலைகள்; மக்கள்க் கொலைகள் அங்காங்கே தொடங்கி விட்ட சைகைகளும் தெரியவேச் செய்தன. ஏற்கனவே, உயிரிகளை கொன்று சாப்பிடுறப் பாடமும் முடிந்து விட்டிருந்தது. ஆசிரியர் திரும்பவும் அந்த அத்தியாயத்தைத் திறக்க விரும்பவில்லை. அன்றும் , ஐந்து பேர்களுக்குச் சுடுவதற்கான‌ சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன‌ .சுட்டதில் இருவரே இலக்கைச் சுட்ட அருட்சுனங்கள்.

அடுத்த நாள் காலை குணா வந்து ஆயுதத்தை எடுத்துச் சென்று விட்டார். அடுத்து தடை நிலைகளில் ஏறி, விழுந்து, எழுந்து …ஓடுற முழுமையான‌ ஓட்டம் தொடங்கி விட்டது. நிறுத்தற்கடிகாரம் ஒன்றை வைத்துக் கொண்டு பாரி, செழியன் உட்பட அமைப்பைச் சேர்ந்த வேறு பல தோழர்களும் ஒவ்வொரு நிலைகளிலும் நின்று , ஓரளவுக்கு பயிற்சிகளை ஒப்பேற்றி ஓட வைத்தார்கள். ஆனாலும் பலரால் நேரத்திற்குள் ஓடி வர முடியவில்லை. திரும்ப , திரும்ப ஓட விடப்பட்டார்கள். இருசாராருமே, அதில் நிறையக் களைத்துப் போனார்கள். அதிகளவு ஓய்வு கொடுக்கப்படாது நடை பெற்றதால், அதுவும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை…. நாலு ,ஆறு கிலோ மீற்றராகச் சுற்றுவதென்றால், என்ன பிரச்சனை என்றால் ஓடுற கால்களுக்கு உடனே ஓய்வு கொடுக்கக் கூடாது, தசைகள் இறுகி கிராங் என்கிற பிடிப்பு ஏற்பட்டு விடும், பிறகு ஓடவே முடியாது போய் விடும். எனவே , தொடர்ச்சியாகவே களைத்திருந்தாலும் , இரண்டு , மூன்று தடவைகள் ” ஓடு ” , ” ஓடு ” என விரட்டி , ஒருவாறு ஒப்பேற்றினார்கள். இன்னொரு முறை நேரிடும் என்ற பயமே விரைவைக் கூட்டின‌ . இருபது நிமிசத்திற்குள் சரிவரச் செய்யப்படாத தடைப் பயிற்சிகளை மற்றவர்களின் ஓட்டம் நடைபெறுகிற போது கிடைத்த‌ இடைப்பட்ட ச‌ந்தர்ப்ப‌ங்களில் பிறிம்பாகவும் செய்து காட்டச் சொல்லப்பட்டன. செய்தவர், செய்யாதவர் என …இருக்கவே செய்தார்கள். சின்னத் தோழர்களின் கத்தல்களுடன் பயிற்சிகளை முடி தார்கள் .ஜீவன் , வலது பக்கமாக தடியை வைத்துக் கொண்டு ஓடிய போது நேர எல்லைக்குள் வரவில்லை. ” ஓடு ” என ஆசிரியர் விரட்டி விட , ” என்னடா இது சனியன் ” என இடது பக்கமாக தடியைமாற்றிக் கொண்டு ஓட நேரத்திற்குள் வந்து விட்டான். பயிற்சிகளும் சிறுசுகளின் கத்தலால் ஓரளவுக்கு ஒப்பேற நேர‌ எல்லைக்குள் வந்து விட்டான். பாரி ” உனக்கு இடதுபக்கம் தான் வலமானது , துவக்கை இடது பக்கமாகவே பிடி ” என்றான்.

எல்லாத் தோழர்களுமே கட்டாயமாக ஓடவே வேண்டும். ஆனால், நிற்சாமப்பெடியள்களால் ஓட முடியவில்லை . இருவருக்கும் விலக்கு. ஒருத்தனின் காயம், பெருக்கவில்லை தான்,ஆனால் மாற இல்லை. மற்றவனிற்கு … காய்ந்து இருந்தது . பயிற்சியில் இறக்கினால் திரும்ப ஏற்பட்டு விடுமோ எனப் பயந்து ” ஓடு ” எனச் சொல்லவில்லை. ஆசிரியர் ” உன்னால் , தடைப் பயிற்சியை விட்டு ஓட முடியுமா? ” எனக் கேட்டார். ” ஏலும் வரையில் ஓடி வா. எவ்வளவு நிமிசத்தில் முடிக்கிறாய்? எனப் பார்க்கிறேன் ” என்று ஓட விட்டார். அவனோடு கூட சேர்ந்து ராஜா என்றத் தோழரும் ஓடினார். சும்மா ஓடி நடந்து வந்தான். ஓடி முடிக்காததிற்கு தண்டனை இல்லை. மற்றவனால் முடியவில்லை. தன்னைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்று தெரிகிற போது ஒரு வித‌ நட்பு பிறந்து விடுகிறது. அது தான் புத்தர் கூறினார். ” பரிகாரம் செய் ” செய்யவே வேண்டும் ! ” என வலியுறுத்தினார். தவறிழைத்து விட்டால் ” மன்னித்து விடு “என மன்னிப்புக் கேட்பதும் அந்த வகையே . இல‌ங்கை அரசாங்கம் பல தமிழர்களைக் கொன்று நிலத்தில் புதைத்து விட்டது . அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். குறைந்தப் பட்சம் ‘ மன்னிப்பா’ வது கேட்க வேண்டும் . ” நாம் எதுவுமே செய்யவில்லை ” என தெனாவட்டாக மற‌ப்பது நாகரீகமாகாது. அவன் முகத்தில் மலர்ச்சி நிலவியது .

திருவிழாகளின் கடைசி நாள்களில் இரவில் ” சுயவிமர்சனம் ” என்கிற சுயம் சொல்லல்களும் நடந்தன. பலருக்கு, மேடைக் கூச்சம் போல‌ பலர் மத்தியில் சொல்ல வெட்கம். பலவித இடர்களுடன் , தணிக்கைகளுடன் ஒரோர் சம்பவங்களை மட்டும் எடுத்துக் கூறினார்கள். அது பெரிதாகக் களைக் கட்டவில்லை.

சில தோழர்கள் ஏதோதோச் சொன்னார்கள். சிலர் நிறைவேறாத காதலைப்பற்றியும் குறிப்பிட்டார்கள். ஐயர் போன்ற தோழர்கள் எதுவும் கூறவில்லை. ” எதைக் கூறுவது ?, எனத் தெரியவில்லை ” என்றார்கள். பாடசாலையில் கட்டுரை எழுதுவது போலவே விமர்சனமும் அமைந்து விட்டது. அரசியல் நகர்வில் எமக்கு சரியான விமர்சனங்கள் இருக்க வேண்டும். அது ஒரு கலை. கட்டம் ,கட்டமாக பிரித்து ஆராயப்படுவதோடு, பலவீனங்களையும் தயக்கமின்றி கூறக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஜீவன், தொட்டு அனைத்துத் தோழர்களிற்கும் அனுபவங்கள் இல்லை என்றில்லை . நிறைவாக இல்லை,குறைவாக‌ இருக்கவேச் செய்கின்றன. அவற்றிற்கு நீர் ஊற்றி பாத்திக் கட்டி வளர்ப்பது எப்படி எனத் தான் தெரியவில்லை. தொழிற்சங்கத் தோழர்களின் அவசியம் பெரிதாகத் தெரிகின்றது.

அரசியலை போதிக்கக் கூடிய ஆசிரியர்களாக அவர்களே இருந்து வந்தவர்கள். இராணுவப்பிரிவினர் விட்ட தவறுகளால் இயக்கமற்று விட்டதும் , அவர்களோடு சேர்ந்து தம் பணிகளையும் நிறுத்திக் கொண்டு விட்ட மகளிர் அமைப்புகளின் தேவைகளும் தோழர்களுக்கும் சமூகங்களுக்கும் வேண்டியவையாய் இருந்தும் கிடைக்காமல் தான் இருக்கின்றன. இவ்இரண்டையுமே இயக்க அமைப்புகளிற்குள் அடக்குவதில்லை. அவற்கு இராணுவப்பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. அவை சுயாதீன அமைப்புகள் . அதாவது இயக்கம் இல்லாத‌ வேளையிலும் தம்பணிகளைச் செய்யிற ஜனநாயக‌ அமைப்புக்கள். ஆனால் எம்மோடு சேர்ந்து இயங்கியதால்….கொலைகளின் காரணமாக ஏற்பட்டு விட்ட முகம் கொடுக்க முடியாத நிலைமை பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்தின‌ . சீர் செய்யப்பட வேண்டிய ஒன்று . நாடுகளில் இராணுவ ஆட்சி ஏற்பட்டால் என்னவாகும் என்ற அனுபவத்தையே எம் இயக்கமும் காட்டி வருகின்றது . ” காந்தியமும் ” ஒரு ஜனநாயக அமைப்பு. அதை அரசு தடை செய்ததில் அதன் இனவாதத்தையேக் காட்டி நிற்கிறது. இங்கே,பொதுவாக ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாததே இலங்கையர் எல்லாரின் துன்பங்களிற்கும் காரணம் . அந்த பயிற்சி முகாமும் முப்பத்தொரு நாள்களோடு மேலும் நாலு நாள்களை கூடுதலாக‌ எடுத்து …முடிவடைந்தது.

– முற்றும் –

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *