பந்தாடிய குகை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 1,515 
 
 

தூங்கும் பெண்ணின் பெருங் குகை எங்கே உள்ளது?

உயர் வகுப்பு சரித்திர ஆசிரியையின் இக் கேள்வியால் கதிரையின் நுனிக்கு நகர்ந்தது வகுப்பு.

நாம் படிப்பது சரித்திரமா? பூகோளமா? உடலியலா? – யாரோ ஒரு மாணவன் சிறு துண்டில் கிறுக்கியது வகுப்பில் அவசர சுற்றறிக்கை போலாகியது.

தாம் லுவாங் குன் நும் நங் நன் என்றதன் தமிழ் வடிவம்தான் இது. தாய்லாந்தின் நான்காவது பெரியது இந்தக் குகை! – சிறிது இடைவெளியின் பின் ஆசிரியையே பதிலையும் கூறினார்.

தாய்லாந்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, தாய்லாந்திற்கு செல்பவர்களும் செல்ல விரும்பும் பிரதேசமாக சரித்திரம் மாற்றியமைத்த பெருங்குகைதானே என்றனர் வகுப்பிலிருந்த அனைவரும்.

“சரி.இப்பொழுது ஐந்து குழுக்களாக பிரிக்கின்றேன். இந்தக் குகை பற்றியோ, உலகின் பார்வை அதன் மீது படர்ந்தது ஏன் என்றோ, வரலாற்றில் இடம் பெறும் வகையில் அங்கு என்னதான் நடந்தது குறித்தோ தாயாரித்து வருமாறு கடந்த வாரம் கூறியிருந்தேன். எனவே தெரிந்தவற்றை சொல்லுங்கள். ஒரு குழு தெரிவித்த கருத்தை மறுபடி சொல்பவர்கள் தண்டனை செலுத்த வேண்டும் என்பது நிபந்தனை.அதனால் கவனமாகக் கேளுங்கள்” என்றார் ஆசிரியை.

எஸ்.ஜெகதீசன்

“இந்தக்குகையை பார்ப்பதற்கு மியான்மர் – தாய்லாந்து – லாவோஸ் எல்லைக்கு செல்ல வேண்டும். ஆசியா கண்டத்தின் பத்து நாடுகளை ஊடுருவும் ஆசிய நெடுஞ்சாலை 2 வழியே சென்று சியாங்ராங் என்ற மாகாணத்தில் 1388 மீ (.86 மைல்) உயரம் உள்ள தோய் நங் நன் மலைத் தொடரின் அடிவாரத்தை அடைய வேண்டும். தாம் லுவாங் குன் நும் நங் நன் என்பது இதன் முழு பெயர். ஆறு ஒன்றுக்கு பிறப்பிடமாக உள்ள தூங்கும் பெண்ணின் பெருங் குகை என்பது இதன் அர்த்தம். தாய்லாந்தின் நான்காவது பெரிய குகையான இதன் நீளம் 10.316 மீட்டர்(6.42 மைல்). ஏராளமான நீர் வீழ்ச்சிகளும் அடர் அடவிகளும் சூழ்ந்த பகுதியாக வெளியேயும் காற்றின் சுதந்திரம் குறைந்த இயற்கையின் சிக்கலான பகுதியாக உள்ளேயும் இக் குகை அமைந்துள்ளது.” என்றது முதலாவது குழு!

முதலாவது குழுவை குறுக்கீடு செய்த இரண்டாவது குழு நிபந்தனையை மீறியதால் தண்டனை செலுத்த வேண்டும் என்று ஆட்சேபித்தது.

“ஒரு குழு தெரிவித்த கருத்தை மறுபடி சொல்பவர்கள்தான் தண்டனை செலுத்த வேண்டும் என்பதே நிபந்தனை. ஆசிரியை சொன்னதை சொல்லாம் என்பதால் எம்மை யாரும் தடுக்கவும் முடியாது.கெடுக்கவும் முடியாது” என்று முதலாவது குழு மறுப்பு தெரிவித்தது.

முதலாவது குழுவின் மறுப்பை ஏற்றுக்கொண்ட ஆசிரியை இரண்டாவது குழுவை தொடருமாறு பணித்தார்.

“2018 ம் ஆண்டு யூன் மாதம் காட்டுப்பன்றிகள் எனும் பெயருடைய கால்பந்தாட்ட குழுவின் 11 வயது முதல்16 வயதுக்குட்பட்ட 12 சிறார்கள் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங்குடன் இந்தக்குகைக்குள் சிக்கிக் கொண்டதற்கு திடீர் மழையால் ஏற்பட்ட காட்டு வெள்ளம் குகையின் உற்புற வாசலை 4.9.மீ (16 அடி) உயரத்துக்கு அடைத்தது காரணமானது.”

“வழமையாக பயிற்சி எடுக்கும் மைதானத்திலிருந்து 45 நிமிட சைக்கிள் சவாரியில் அமைந்துள்ள இக்குகைக்கு ஏன் சென்றார்கள் என்பதற்கு சாகச பயணம் மேற்கொண்டனர் என்பதே பரவலாக கூறப்பட்ட காரணம். எனினும் இது பயிற்சியின் ஒரு பகுதி அல்லது குழு உறுப்பினர் ஒருவரின் பிறந்த நாளுக்கான இன்ப அதிர்ச்சி அல்லது மழைநாளில் குகைக்குள்அணியினரின் பெயரைப் பொறித்தால் எதிர்காலத்தில் தாய்லாந்தின் தேசிய அணியில் விளையாடலாம் என்ற மூடநம்பிக்கை போன்ற காரணங்களும் கற்பிக்கப்பட்டன.”

எழுதியதை வாசித்தது போல கடகடவென ஒப்புவித்தது இரண்டாவது குழு.

“இந்தக் குகை தோய் நங் நன் மலையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. மலை உச்சியிலிருந்து 800 மீட்டர் (2625 அடி) ஆழத்தில் சிறார் மாட்டியிருந்தனர். குகையின் உட்பகுதி சில இடங்களில் 10 மீ (33 அடி) உயரமானது.சில இடங்கள் மிகவும் குறுகலானது.”

மூன்றாவது குழு தமக்குள் கிசுகிசுப்பதாக நினைத்தது வகுப்பறை முழுவதும் கேட்டது.

வகுப்பை இடையூறு செய்த காரணத்தாலும், மலையின் பெயரை மீண்டும் உச்சரித்ததாலும் மூன்றாவது குழு அடுத்ததாக கலந்து கொள்ள முடியாது.

எனவே நான்காவது குழு தொடரலாம் என்றார் ஆசிரியை.

“உலகை உதறி விட்டு ஓரிரு மணித்தியாலங்களாவது குகைக்குள் நிற்கலாம் என்று சென்ற பந்தாட்டச் சிறாரை யூன் 23 முதல் யூலை 10 வரை இருவாரங்களாக குகையே பந்தாடியது உலகமே பதறி உயிரில் வரவு வைத்த நாட்கள்.

யூன் 23 பகல் 11 மணியளவில் 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் குகைக்குள் புகுந்தனர். பெருகிப் பாய்ந்த காட்டு வெள்ளம் குகை வாசலை அடைத்த போது மதியம் ஒருமணி. மாலை 4 மணிக்கு உள்ளே சிக்கியவர்களின் அடையாளமாகியது வெளியே அனாதரவாக கிடந்த அவர்களின் சைக்கிள்கள். நள்ளிரவில் தேடுதல் பணி ஆரம்பிக்கப்பட்டது.”

பின்பு எதைச் சொல்வது எனத் தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்தது நான்காவது குழு.

இப்பொழுது வலை ஒளி ஒன்றை சிறிது நேரம் பார்ப்போம் என்றவாறே அதனை சுவரில் விரியவிட்டார் ஆசிரியை.

உள்ளே சென்றவர்களை வெளியே வர விடாது வெள்ளம் மிரட்டியது.

வெளியே இருந்தவர்களை உள்ளே செல்ல விடாது வெள்ளம் விரட்டியது.

தொடரவுள்ள தொடர் மழை காரணமாக அவர்கள் முக்குளிக்க கற்றுக் கொண்டு வெளிவர வேண்டும் அல்லது குகைக்குள் பெருகும் வெள்ளம் வடியும் வரை 4 மாதங்களுக்கு அங்கு தாக்குப்பிடிக்க வேண்டும் என்றது தாய்லாந்து ராணுவம்.

வௌவால், எலி, நத்தை, பூரான், பூச்சி புழு போன்றன உணவாவது தாய்லாந்தில் விநோதமல்ல. அதனால் 4 மாதங்களென்ன 4 வருடங்கள் கூட அவர்கள் அங்கு தாக்குப்பிடிப்பார்கள் என கற்பனையில் கனவு கண்டவர்களும் உலகெங்கும் இருந்தனர்.

கைவசம் உள்ளே இருந்த உணவு குறைந்தது.

கைவசம் வெளியே உணவு இருந்தும் உண்பது குறைந்தது.

வெளியே இருந்தவர்களை ஏக்கம் தாக்கியது.

உள்ளே உள்ளவர்களை தாக்கம் ஏங்க வைத்தது.

குதுகலம் மறைந்த துயரம் வெளியே.

துயரத்தை மறக்க குதுகலம் உள்ளே.

வெளியே பார்வையாளர்கள் வீரர்கள் ஆனார்கள்.

உள்ளே வீரர்கள் பார்வையாளர்கள் ஆனார்கள்.

வலை ஒளியை இருளச் செய்த மின் தடையால், இரண்டு நிமிடங்களிலே இடை நிறுத்திக் கொண்டது அந்த விவரண நாடா.

பாண் துகள் ஒன்றை தனது சின்னஞ்சிறு வாயால் கௌவி வந்து குகைக்குள் இருந்த மாணவன் ஒருத்தனின் மடியில் போட்ட ஒரு குட்டி எலி அந்த வலை ஒளியில் பலரது கவனத்தை ஈர்தது!

அதன் கருணையை மெச்சினர் சிலர்.

அது பயத்தில் நழுவவிட்டது என்றனர் சிலர்.

“மூன்றாவது குழுவிற்கு இந்தச் சிறு தண்டனையே காணும். அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை இனிக்கேட்போம்.” என்றார் ஆசிரியை.

“தாய்லாந்து கடற் படை வீரர்களும், பேரிடர் மீட்புப் பணியினரும், ஆழ்கடல் சுழியோடிகளும் குகைக்குள் தேடுதலை ஆரம்பித்தனர். மீட்புப் பணியில் அமெரிக்க, பிரித்தானிய நீரடி ஆய்வு குழுவினர் நால்வருடன் சர்வதேச நீரிடர் மீட்பு நிபுணர்களும் சேர்ந்தனர். குகைக்குள் உயரும் வெள்ளப் பெருக்கினை குறைக்க பாரிய நீரிறைக்கும் இயந்திரங்கள் இயக்கப்பட்டன. குகைக் கூரையில் படக்கருவிகளைப் பொருத்தி குகைக்குள் அவதானிக்க வசதியாக்க ஆங்காங்கே 100 துளைகள் தோண்டபட அதன் ஊடே கொஞ்சம் காற்றும் அதை விடக் கொஞ்சமாக சூரிய ஒளியும் உட்புகுந்தது. வழி நெடுக வழிகாட்டவென கயிறு போடப்பட்டது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா நிலமையை நேரில் அவதானித்தார்.

உள்ளே அதிகதூரம் குகைக்குள் முன்னேறிய சுழியோடிகள் செயற்பாட்டு முகாமொன்றை தற்காலிகமாக அமைத்தனர். சிறார் யோகா, ஆசனம், தியானம், மூச்சுப் பயிற்சி மூலம் மனதை ஒருமுகப்படுத்தி சோர்வை தவிர்க்க ஆரம்பித்தனர்.

குகை வாயிலிருந்து 3.3 கி.மீ (2.0 மைல்) உள்ளே அவர்கள் உயரமான பாறைகளில் உயிருடன் இருப்பதை முதலில் பிரித்தானிய சுழியோடிகள் குழு கண்டு ஆக்ஸிஜன் உருளைகள விநியோகித்தது.”

எங்கே தமக்கான சந்தர்ப்பம் நழுவி விடுமோ என்ற பதட்டத்திலிருந்த மூன்றாவது குழு கொட்டித் தீர்த்தது.

குகை மிட்பின் அடுத்த மாதம் தனிப்பட்ட விஜயமாக கனடாவிற்கு சென்றிருந்த தாய்லாந்தின் பிரதமருடன் ரொரண்ரொவிலிருந்து கல்கரி வரை சுமார் நான்கு மணி நேரம் அருகருகேயிருந்து எனது மாமாவிற்கு பயணிக்க நேர்தது என்றான் ஒரு மாணவன்.

நம்பிட்டோம் என்றான் இன்னொருவன்.

நல்லிணக்கம் அபிவிருத்தி பற்றி கதைத்துக் கொண்டிருப்பார்கள்களோ? என்றான் மேலும் ஒருவன்.

வகுப்பறை சிரிப்பொலியில் நிறைந்தது!

அடுத்தது ஐந்தாவது குழு என ஆசிரியை அழைக்க முன்பாகவே எழுந்த அக் குழுவின் பேச்சாளர் “சற்று முன் மின் தடையால் இடை நிறுத்தப்பட்ட வலை ஒளியை ஏற்கனவே பார்த்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மனதில் பதிவானவற்றை சொல்லப் போவதாகவும் தெரிவித்தார்.” தொடர்ந்தார்.

“ஏசாதீங்கம்மா என்ற வார்த்தை உள்ளிருந்தும், பசியை தாங்கினாயா என்ற வார்த்தை வெளியிலிருந்தும் அதன்பின் பலமுறை குகைச்சுவர்களில் எதிரொலித்தது.

மருத்துவர், தாதி உட்பட ஏழு பேர் கொண்ட சுழியோடிகள், மருந்துகளுடனும் உணவுகளுடனும் சிறார் இருந்த பகுதிக்கு சென்று தங்கி், முகத்தை மூடும் வகையில் மூச்சுக்கவசம் அணியும் பயிற்சியையும், முக்குளிப்புப் பயிற்சியையும் ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு சுழியோடி வீரர்கள் உடன்வரவும், மீட்கப்படும் சிறுவனுக்கான காற்றுக் குடுவையை ஒருவர் சுமக்கவும், அடுத்தவர் அவனுடன் கயிற்றால் இணைக்கப்படவும் திட்டமிடப்பட்டது.

மீட்புப் பணியில் ஈடுபட்ட சமன் குணன் என்ற தாய்லாந்தின் கடற்படை வீரர் உள்ளே ஆக்ஸிஜன் தீர்ந்து போன நிலையில் சகதியில் சிக்கி உயிரிழந்தார்.

சர்வ தேச சுழியோடிகள் 18 பேர் நான்கு சிறாரை பாதுகாப்பாக முதலிலும் மேலும் நான்கு சிறாரை அடுத்த நாளிலும் மீட்டனர்.

அதற்கும் அடுத்த நாளான யூலை 10 ம் திகதி மிகுதி நான்கு சிறாரும் பயிற்சியாளரும் மீட்பு பணியாளர்களும் பவுத்திரமாக குகையை விட்டு வெளியேறியனர்.”

சகல குழுக்களும் ஏற்கனவே தயாராகவும் அதனால் உசாராகவும் இருந்தபடியால் ஒன்றுக் கொன்று சோடை போகாத வகையில் தத்தமது பங்களிப்பை செவ்வனே செய்தனர். சக்தியும் புத்தியும் மிக்க உங்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன் என்றவாறே தனது முடிவுரையை ஆரம்பித்தார் ஆசிரியை.

தாய்லாந்தின் 10 000 மக்கள், 2 000 ராணுவ சிப்பாய்கள், 900 பொலிஸார், 100க்கும் மேற்பட்ட சுழியோடிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.10 பொலிஸ் உலங்குவானுர்திகள், பொலிஸாரின் 7 நோயாளர் ஊர்திகள், 700 பிராணவாயு உருளைகள், நூறு கோடி லீட்டர் நீரை வெளியேற்றும் இயந்திரங்கள் மீட்பு பணியில் செயற்பட்டன.

பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், இஸ்ரேல், பெல்ஜியம், செக் குடியரசு, டென்மரார்க், பின்லாந்து, நெதர்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகள் கரை சேர்க்கும் பணியில் கரம் கொடுத்தன.

வௌவால் எச்சங்களால்வரும் நோய், எலிகளின் சிறுநீர் தரும் வியாதி, ஈரநிலப் பூஞ்ஞைகள் மூலம் உருவாகும் பிணி, இருட்டுக்கு பயம் போன்ற எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய உபாதைகளிலிருந்து – ஆண்டவா அவர்களை காப்பாற்று என பிரார்த்திக்கத் தொடங்கிற்று உலகு!

மொத்த உலகமும் திரும்பிப் பார்த்து வாழ்வோடு வரவுவைக்கும் வரலாறானது பந்தாடிய குகை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *