கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 13,928 
 
 

“என்னம்மா சொல்றே?” ராமதாஸ் கேட்டான்.

“பின்னே என்னடா? ஒவ்வொருத்தன் ஒரு மணி நேரத்துக்கு நுhறு, ஐம்பதுன்னு வாங்கறான்கள். நீ என்னடா என்றால் தம்படி இல்லாமல் ஓசிக்கேஸ்களுக்காக உயிரைக் கொடுக்கிறே. இதுகளும் ஓசின்னதும் கரெக்டா ஐந்து மணிக்கே வந்துடறதுகள். ஆதாயம் இல்லாமல் எதுக்கு இதுகளைக் கட்டிட்டு மாரடிக்கிறே?”

அண்டை அயல் வீடுகளில் உள்ள நாலைந்து சிறுவர்கள் அவனிடம் பாடம் படிக்க வருவார்கள். அவனும் சொல்லிக்கொடுப்பான். அதுதான் அவன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.

அம்மா சொல்வதும் நியாயமாகத்தான் பட்டது ராமதாஸுக்கு. ட்யூஷன்பீஸ் இருபது ரூபாய் என்று வைத்தால் கூட மாசம் நுhறு ரூபாய் கிடைக்குமே ஐந்து பையன்களுக்கு, வீட்டுச் செலவுகளுக்கு உபயோகப்படுமே!

அன்று மாலையே அதைச் செயல் படுத்தினான். பையன்களிடம் சொல்லியனுப்ப, அவர்களின் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டு, ரெகுலர் ட்யூஷனாகவே வைத்து விட்டார்கள்.

ஒரு மாதம் சென்றிருக்கும்.

ராமதாஸ் கடைத்தெருவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கையில் விவேக்கின் அம்மா கூப்பிட்டாள்.

“சார்! ஒரு நிமிடம்.” என்று அவனை நிறுத்தியவள், தினமும் ட்யூசன் போறேன்னு சொல்லிட்டுப் போறானே தவிர விவேக்கிற்கு ஸ்கூலில் மார்க் ஒன்றும் ஏறவில்லை. கொஞ்சம் கவனிச்சு சொல்லிக் கொடுங்க” என்றாள். அதற்குள் அவளுடன் இருந்த சதீஷின் அம்மா குறுக்கிட்டாள்.

“நான் கூடக் கேட்கணும்னு இருந்தேன். என் பையன் அங்கே வந்து படிக்கிறானா, இல்லே உங்களை ஏமாற்றிவிட்டு விளையாடப் போயிடறானா? கணக்கிலே முன்னைக்காட்டிலும் கம்மியா மார்க் வாங்கியிருக்கிறானே?”

ராமதாசுக்குச் சுருக்கென்றது. சமாளித்துக்கொண்டு, “கவனிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு விருவிருவென்று நடந்தான். இருந்தாலும் அவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்தது.

“சும்மாவா? மாதம் இருபது ரூபாய் அழுகிறோம்! ஒழுங்கா சொல்லிக் கொடுக்காமல் என்ன பண்றார் இவர்? அதான் உறைக்கட்டும் என்று சொன்னேன்…..”

ஒருமாதத்திற்கு முன்பு வரை அவன் எதிரில் வரக்கூடத் தயங்கியவர்களா இப்படிக் கன்னத்தில் அறைவது போல் பேசுகிறார்கள்!

அவனுக்குப் புரிந்தது.

இலவசமாய்ச் சொல்லிக் கொடுத்த போது மதிப்பும், மரியாதையும் இருந்தது. இப்போது ……. பணம் வருகிறது மரியாதை போய்விட்டது. இரண்டில் ஏதாவது ஒன்றுதான் கிடைக்கும் போலிருக்கிறது!

அடுத்த மாசமே அவன் ட்யூஷன் பீஸ்களைத் திருப்பியனுப்பிவிட்டான்.

– 12-03-1987

பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன் புனை பெயர்: மன்னை சதிரா ஊர்: மன்னார்குடி இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *