படிச்சப்புள்ள…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,145 
 
 

‘ இன்றோடு வயசு முப்பதா…!!? வேலைக்கென்று நம்பி இருந்த வேலை வாய்ப்பு அலுவலகமும் இன்றோடு நம்மைக் கைகழுவி விட்டதா.? ச்சே..!! ‘ – மனசு வலிக்க மண்வெட்டியை வயல் வரப்பில் வைத்துவிட்டு சோர்வுடன் உட்கார்ந்தான் கோபால்.

‘படிச்சப் புள்ள ! வேலை செய்ய முடியல… ‘ – நினைத்துக்கொண்டு அவன் அண்ணன்கள் இருவரும் மற்ற ஆட்களோடு வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

‘இவ்வளவு படித்து என்ன பிரயோஜனம்..? படிக்காத அண்ணன்களுடனும் , இந்த பாமர மக்களுடனும் தானே வயல் வேலை செய்ய வேண்டியதாய் இருக்கின்றது.! வயல் வேலைக்குப் படிப்பா..?!

இதற்குப் படிக்காமலேயே இருந்திருக்கலாம் ! அப்பா கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை. அம்மா பத்துப் பாத்திரம் தேய்த்திருக்க வேண்டியதில்லை. அண்டா குண்டான்கள் அடகிற்கும் போயிருக்க வேண்டிய அவசியமில்லை.

படித்த படிப்பு உதவாக்கரையாகிவிட்டது.

படிப்பிற்குச் செலவழித்த பணத்திருக்கும் காலத்திற்கும் …. இப்போது முடிகின்றாற்போல் அப்போதே வயல் வேலையோ , எதோ ஒன்று செய்ய ஆரம்பித்திருந்தாலாவது அண்ணன்களைப்போல் இரண்டிரண்டு ஏக்கராவிற்குச் சொந்தக்காரனாய் ஆகி இருக்கலாம். அல்லது அந்த வேலையிலாவது தேர்ச்சி பெற்றிருக்கலாம். இப்போது அதுவும் கெட்டு , இதுவும் கெட்டு……’ நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது கோபாலுக்கு.

அப்பாவிற்கு ரொம்ப ஆசை. கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பையன் கல்லூரி வரைக்கும் சென்று வருவதில் பெருமை. இல்லையென்றால் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வைத்திருப்பாரா..?!

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. பெற்ற மூன்றில் இரண்டுதான் மக்காக இருந்து மண்ணோடு மண்ணாகக் கிடக்கின்றதே… கடைக்குட்டியாவது படித்து வேலைக்குப் போய் வெள்ளையும் சள்ளையுமாய் முன்னேறட்டுமே என்கிற ஆசை. அந்த ஆசை பொய்யாகிவிட்டது. வாழ்க்கை உழவு மண்ணோடு என்றாகி விட்டது .

‘எவ்வளவு வேகமாகப் படித்தோம்..! ஒரு வகுப்பில்கூட தங்காமல் எவ்வளவு ஊக்கமாய்ப் படித்தோம்…! அடுத்தவனை முந்தவிடாமல் போட்டிப் போட்டுக்கொண்டு படித்தோம்.. ! அந்த உழைப்பு அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்.

இந்த பி.ஏ படிப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேலைக்கென்று எத்தனைப் படிகள் ஏறி இறங்கியாகி விட்டாச்சு. சிபாரிசு , அது இஇதுவென்று ……. மந்திரி ,சட்டமன்ற உறுப்பினர் என்று எத்தனையோ பேர்களைப் பார்த்தாகி விட்டது. தன் தகுதிக்கு எவ்வளவு பணம் விரயம் செய்தாகிவிட்டது. எல்லாம் பணம் கொடுத்து வாங்கும் நிலையில் தகுதி , திறமைக்கு எங்கே மதிப்பிருக்கின்றது.

பணமிருந்தால் படித்த படிப்பிற்கு ஏதாவது செய்யலாம். அதற்கும் நேரம் காலம் நன்றாக இருக்கவென்றும் இல்லையென்றால் பணத்திற்குப் பணமும் போய் … நிம்மதி இல்லாமல் போய்விடும்.

ஆக… என்னைப் பொறுத்தவரையில் படிப்பென்பது பயன்படாமல் போய்விட்டது. சாதகமில்லாமல் ஆகிவிட்டது. ம்ம்…. உழவு மண்ணில் உழலச் சொல்லி விதி சதி செய்து விட்டது. ‘ – உடல், மனசு வலிக்க.. மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு நடந்தான் .

வீட்டில் இவன் தலையைக் கண்டதுமே…

” சித்தப்பா ! இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்க…” – அண்ணன் மகள் ஒருத்தி நோட்டும் பென்சிலுமாக ஓடி வர…. பளிச்சென்று இவனுக்குள் ஒரு மின்னல். !

தன் படிப்பை தன் பிள்ளைகளுக்கு உபயோகப்படுத்தி அவர்களுக்குக் கல்விக் கண் திறந்து முன்னுக்குக் கொண்டு வரச் செய்தாலென்ன…?

அவ்வளவுதான்… ! அடுத்த வினாடி….

” இதோ.. சொல்லித் தர்ரேன்ம்மா.. ” என்று ஆசை ,ஆவலுடன் தன் அண்ணன் மகளை இழுத்தான் கோபால்.

அவன் பிள்ளைகள் அந்த குழந்தை உருவத்தில் இவன் கண்முன் விரிந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *