மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க மேலாளர் காவலாளி மணியிடம்,
ஓடிப்போய் திறந்தான் மணி முதலாளிதான் வந்து இருந்தார், தனது திரையரங்கத்திற்கு மாதம் இருமுறை வந்து பார்வையிடுவது அவரது வழக்கம். புதுப்புது சினிமாவா எடுத்துப்போட்டும் கையிலே நாலு காசுப் பார்க்க முடியலை, என்ன படமா எடுக்கிறானுங்க, நம்ம உசிரைத்தான் எடுக்க்றாஙக என்றும் திட்டுவார், ஏதோ இதை நம்பி ஐந்து குடும்பங்கள் இருக்கே என்றும், ஊரில் வாடகைக்கு விட்ட பல கடைகள், தொழில்கள், விவசாயம், என ஊர் கெளரவத்திற்காக வலுக்கட்டாயமாக நடத்திக்கொண்டு இருக்கும் பலரில் ஒருவர் மாணிக்கம், பெயருக்கேற்றபடி சுத்தமானவர், நேர்மையானவர்.
பள்ளிக் கூடத்துப் பசங்க மூன்று பேர் வந்து படம் பார்த்துவிட்டு இருக்கானுவோ, ஐயாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்று பயந்தபடி வந்து மேலாளரிடம் புலம்பிக்கொண்டு இருந்தார் டிக்கெட் கொடுப்பவர்.
பள்ளிக்கூடத்துப் பசங்க சீருடையில் வந்தால் டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பது முதலாளியின் உத்திரவு, அதை நினைத்து அவர்கள் புலம்பிக்கொண்டு இருக்கும்போதே,
என்னய்யா? எவ்வளவு டிக்கெட் படம் பார்க்குது? எனக் கேட்டார்.
கீழே மூன்று பேர், மேலே இருபது பேர் என்றார் மேலாளர்.
ஏசி போட்டிரா? என்றார்.
கூட்டம் இல்லை அதான், என்று தலை சொறிந்தார் மேலாளர்.
ஏன்யா, வாங்குற காசிற்கு அதை போடுய்யா, கூட்டம் வரலைன்னா, அவங்க என்ன பண்ணுவாங்க? இவங்க காசு கொடுக்கலை? படம் நல்லா இருந்தா தானா கூட்டம் வரும்யா கூட்டம், வந்த மக்களையும் கஷ்டப்படுத்திட்டு படத்தை யாருக்கு ஓட்டுவே என அதட்டினார்.
படம் போடுகிற நேரம் மதியம் சரியாக இரண்டு மணி
மூன்று பள்ளி மாணவர்கள் மட்டுமே அரங்கினுள் அமர்ந்து இருந்தனர், டிஜிட்டல் சினிமா ஆரம்பமாகி முதலில் தேசிய கீதம் இசைத்தது,
அரங்கத்தின் உள்ளே சென்றவர் அப்படியே நின்றபடி பாடல் முடிந்ததும் வெளியே வந்தார்.
முகம் ஏனோ இறுகி போய் இருந்தது, மேலாளரை அழைத்தவர், அந்த பள்ளிக் கூடத்துப்பசங்க எந்த பள்ளி என்று கேட்டுகிட்டு வாங்க, என்றார்.
வந்தார், மேலாளர் சொன்னார்.
அப்படியே அந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்,அவங்க பெற்றோரிடமும் பேசனும் பள்ளியிலே பெற்றோர்களது எண் கேட்டு வாங்கி என்னிடம் கொடுங்கள் நான் பேசுகிறேன் என்று தொலைப்பேசியில் அவர்களை அழைத்துப் பேசினார்,
படம் விடும் நேரமான ஐந்து மணிக்குள் திரை அரங்கத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து விட்டு , மாணவர்களை வெளியே விடாதே, நான் நாலரை மணிக்கு வருவேன் என்றுக் கூறி வெளியே சென்றார்.
டிக்கெட் கொடுத்தவர், மேலாளர் அனைவருக்கும் உதறல் எடுக்க, நாம வசூல் ஆகட்டுமே என்று நினைக்கின்றோம், இப்பவெல்லாம் மதிய நேரத்திலே பசங்கத்தான் தியேட்டருக்கே வருவாங்க,
அவங்களையும் வரக்கூடாதுன்னா அவங்க என்ன செய்வாங்க?
இவர் ஒழுக்கமா, நேர்மையா இருக்கிறார் என்றால் அனைவரிடமும் அதை எதிர்பார்க்கிறார், பாவம் பசங்க, என பரிதாபம் காட்டி,
இதெல்லாம் நாம ஒன்றும் செய்யமுடியாது, டிக்கெட் கொடுக்கலை என்றால் அவங்க நம்மளை திட்ட மாட்டாங்களா?என்று பேசியபடி இருக்க,
பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர், மூவரின் பெற்றோர் என ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்து வந்து சேர்ந்து இருந்தனர். எல்லோரையும் வரவேற்று அலுவலகத்தில் அமர வைத்து இருந்தார் மேலாளர்.
முதலாளி மாணிக்கம் ஐயாவும் சரியாக படம் விடுவதற்கு ஐந்து நிமிடம் முன்னே வந்து அனைவருடனும் நலம் விசாரித்து பேசியபடி அமர்ந்து இருந்தார்.
படம் விட்டதற்கான நீண்ட ஓசை அடித்து மாணவர்கள் மூவரும் தியேட்டரை விட்டு வெளியே வரவும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதலாளி, ஊழியர்கள் என அனைவரும் வாயிலில் கூடி நின்று அவர்களைப் பாராட்டும் விதமாக கைத்தட்டினர்.
இவர்கள் வெட்கத்தில் கூனிக்குறுகி திருடத் தெரியாதவன் திருடி தலையாரி வீட்டில் தஞ்சம் புகுந்தவன் போல் அசட்டு சிரிப்பு சிரித்தபடி ஒன்றும் புரியாமல் வெளியே வந்தனர்.
மாணிக்கம் ஐயாவே முன் வந்து தனது கரங்களால் மூன்று பேருக்கும் பரிசு பொருள்களை அளித்தார்.
இது எதற்காக என்று யூகிக்க முடிகிறதா? என்று அவர்களிடம் கேட்க, அவர்கள் மேலும் விழித்தனர்.
தேசிய கீதம் ஒலிக்கும் போது நீங்கள் எழுந்து நின்றீர்கள் அல்லவா! அதற்குத்தான் இந்தப் பரிசு என்றார்.
இதில் என்ன இருக்கிறது? அது எங்கள் கடமை என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூறியதையே கூறினர்.
மாணிக்கமே தொடர்ந்தார், நன்றாகச் சொன்னாய் அது கடமைதான்.
நம்மை யாரும் கவனிக்கவில்லை என்ற மன நிலையில்தான் இன்று குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தான் ஒழுக்கமாக இருப்பதுபோல் நடிப்பதை விட, எந்த சந்தர்ப்பத்திலும் தனி மனித ஒழுக்கம் கெடாமல் இருப்பது மிகவும் நல்லது. அதுதான் இன்றைய மற்றும் எதிர்கால சமூகத்திற்கு தேவையானது.
மூவர் மட்டும் அரங்கில் இருந்தபோதும் தனி மனித ஒழுக்கத்தை காத்து இவர்கள் எழுந்து மரியாதை செய்தது எனக்கு வியப்பளித்தது,
சந்தோஷமடையச் செய்தது, எதிர் கால மாணவர்களைப் பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது,
ஆகையால் இவர்களை பாராட்டுவதன் மூலம், ஒட்டு மொத்த மாணவச் சமுதாயத்திற்கு இதை செய்தியாக உங்களின் மூலமாக நான் சொல்ல விரும்பியே உங்கள் அனைவரையும் அழைத்தேன் என்று முடித்தபோது மாணிக்கம் அவர் பெயரில் மட்டுமில்லாமல் செயலிலும் உயர்ந்து ஜொலித்தார்.