பசிக்கு நிறமில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2022
பார்வையிட்டோர்: 2,019 
 

தில்லை எனது பால்ய நண்பன், பள்ளித் தோழன். சின்ன வயதுச் சில்மிசங்களுடனும், வளரிளம் பருவத்து வம்பு தும்புகளுடனும் வாழ்ந்துவந்த எங்களிருவரையும் பிரித்து வைத்த பாவம், போர்ச் சூழலுக்கே போய்ச் சேரும்!

துப்பாக்கிகள் எங்களூர்க் குச்சொழுங்கைகளில் எப்போது கால் முளைத்து நடக்கக் கண்டேனோ, அப்போதே நாட்டை விட்டு வெளியேறிய துணிச்சல் கட்டை, நான்!

ஆனால் தில்லை, அப்படிச் சொல்லிவிட முடியாத ஒரு தீரன்! எட்டுப் பிள்ளை பெறும்வரை, ஓர்மத்துடன் குடியும் குடித்தனமுமாய் ஊரிலேயே வாழ்ந்துவந்த குட்டிக் குசேலனவன்!

மூன்று ஆண் புத்திரர்களையும் பதினாறு வருடங்களின் பின்னர் பார்த்துப் போவதற்கென்று, விசிற்றேர்ஸ் விசாவில் ஊரிலிருந்து கனடா வந்திருக்கிறான். புத்திரர்கள் மூவரும் ஆளுக்காள் மாறிமாறி ஒன்ராறியோ, குபெக் மாகாணங்களின் மூலை முடுக்கெங்கணும் திருத்தல யாத்திரை போலக் கூட்டிச் சென்று தில்லையைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.

சும்மா சொல்லக்கூடாது, பொன்னான மூன்று மாதங்களும் பொசுக்கென்று போய்விட்டன!

அடுத்த மாதம் அவன் ஊர் திரும்ப உத்தேசித்திருக்கிறான். ஊரிலுள்ள பெண் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் நெஞ்சில் நினைந்து நினைந்து நெக்குருகிக்கொண்டு, எவ்வளவு காலம்தான் அவனால் கனடாவில் நிம்மதியாகக் காலங்கழிக்க முடியும்?

‘ஊருக்கு வெளிக்கிட முன்னம், தமிழ்ச் சாப்பாட்டுக் கடையொண்டிலை நீயும் நானும் தனியப் போயிருந்து ஒரு வெட்டு வெட்டவேணும், மச்சான்’ என்று வெட்கத்தை விட்டுத் தொலைபேசி வழியாக ஒருமுறை விருப்பம் தெரிவித்திருந்தான்.

அதன் பிரகாரம், கெனடி றோட்டிலுள்ள காரைக்குடி உணவகத்தில் டீரககநவ டுரnஉh சாப்பிடவென்று தில்லையைக் கூட்டி வந்தேன். நிற்பன, நடப்பன, நீந்துவன, பறப்பன, ஊர்வன, உறங்குவன உட்பட, சகல வகையறா உணவுகளையும் வயிறார உண்டு திளைத்தோம்.

கூடவே, முப்பது வருட நிலுவையிலிருந்த புதினங்களையும் பேசிக் களித்தோம்.

தில்லை இயல்பாகவே ஒரு தின்பண்டப் பிரியன் என்பதனால், வாலிபப் பருவத்து முற்பகுதில் அவனும் நானும், கள்ளப் பூனைகள் போல மெல்லப் போய், கடைகளில் இரகசியமாகச் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்ட சம்பவங்களே எமது கதைகளுக்குள் நிறைய வந்துபோயின.

பொழுது மைம்மல் படும்வரை பொறுத்திருந்து, சைக்கிளிலேறி வல்வெட்டித்துறைச் சந்தியில் சுடச்சுடக் கொத்துறொட்டி வங்கிக் கொண்டுபோய், நெடியகாட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு வடக்காக உள்ள கடற்கரை மணலில் வைத்துப் பாதி பாதியாகப் பகிர்ந்து உண்டமை –

கனடாவில ‘Tim Hortons,’ ‘McDonalds’ போன்ற உணவகங்களில் அண்மைக் காலங்களில் அறிமுகமான, காருக்குள் இருந்தபடியே உணவு, குடிபானம் வாங்கும் ‘Drive-Thru’ போல, 50 வருடங்களுக்கு முன்னமே பருத்துறை ஓடக்கரையில், ரோட்டோரத் தட்டிக் கடைகளில் வரிசையாகச் சயிக்கிளில் நின்று, வெள்ளையப்பம், பாலப்பம், தோசை, தட்டைவடை வங்கிக் கொண்டுபோய், தபாற் கந்தோர்க் கடற்கரையில் வைத்துச் சுவைத்தமை –

லக்ஷ்மி பவான் போண்டாவும், மலாயன் கஃபே உழுந்து வடையும், சுபாஸ் கஃபே ஃப்ருட் சலாட் ஐஸ் கிறீமும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வாங்கி ருசித்தமை –

நண்பர்கள் பலருடன் பரிவாரமாகச் சென்று, கீரிமலைக் கேணியில் குதித்துக் குளித்து விளையாடிப் பின், கூவில் சோமபானம் வாங்கிக் குடித்தமை –

என, கலிங்கத்துப்பரணியின் பேய்கள் கூழுண்டமையை நினைவுகூரும் வகையில், பெரிதும் சாப்பாட்டுச் சங்கதிகளையே மிக நீண்ட நேரமாக எமக்குள் பேசிக்கொண்டோம்!

ஒரு கட்டத்தில் தொண்டனுக்கும் தோன்றவல்ல உண்டகளை மேலிடத் துவங்கவே, எனது துணைவிக்கென்றொரு பார்சலைக் கட்டியெடுத்துகொண்டு, காரைக்குடி உணவகத்தை விட்டு இருவரும் வெளியேறுகிறோம்.

ஆடிக் கோடை வெயிலின் காங்கையில் கார் வெந்து வெதும்பிக்கொண்டிருக்கிறது. கதவுகளைத் திறந்து வெப்பக் காற்று வெளியேற வழி செய்கிறேன். குளிரூட்டியை அருட்டியெழுப்பி, இருவருமாக ஏறி அமர்ந்துகொள்ள ஐந்து நிமிடமெடுக்கிறது. நீல்ஸன் – ஷெப்பார்ட் சந்திப்பை அண்டி வசித்துவரும் தில்லையின் இளைய மகனின் வீடு நோக்கி, எழுதுமட்டுவாளிலிருந்து நெல்லியடி திரும்பும் கிடுகு வண்டில் போல, கார் தன்பாட்டில் ஊர்ந்து செல்கிறது.

கெனடியிலிருந்து 401 நெடுஞ்சாலையில் ஏறி, சுமார் ஐந்து நிமிட ஓட்டத்தின் பின், நீல்ஸன் றோட்டை நோக்கி, நெடுஞ்சாலையை விட்டு வெளியேறுகிறது. வீதிக்கட்டுமானப் பணியின் நிமித்தம், வடக்காகச் செல்லும் நீல்ஸன் றோட்டில் வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்கின்றன.

நெடுஞ்சாலைக் கிளை வீதியும் வடக்கு நோக்கிச் செல்லும் நீல்ஸன் றோட்டும் சந்திக்கும் இடப்புற மூலையில் தில்லையின் கண்கள் சடுதியாக நிலைகுத்தி நிற்கின்றன.

அழுக்கேறி உக்கியுலர்ந்து கிழிந்துபோன ஆடைகள், காலடியில் ஒரு கந்தல் பை, பலகாலம் தண்ணீரின்றி வாடும் தலை முடி, தாறுமாறாய் வளர்ந்து தொங்கும் தாடி, அருகருகான இரண்டு கருங்குவளைகளில் காணாமல் மறைந்துபோயிருந்த கண்கள், மெலிந்து வாடிய மேனி சகிதம், கார்ட்ப்போர்ட் அட்டை ஒன்றைக் கழுத்தில் தொங்க விட்டபடி, மானுடன் ஒருவன், வாகனசாரிகளிடம் கையேந்திக்கொண்டிருக்கிறான்!

ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த வெள்ளை நிற மேனியன், மண்டையைப் பிளக்கும் கொதி வெயிலையும் பொருட்படுத்தாதவனாய், ஒவ்வொரு வாகனத்தில் உள்ளவர்களையும் நோக்கிக் கெஞ்சியவாறு, பிச்சை கேட்டுக்கொண்டிருக்கும் காட்சி தில்லைக்குப் புதினமாயிருந்திருக்க வேண்டும்!

‘கனடாவிலுமா?’ எனுமாப்போல, அவனது முகம் ஓடிச் சுருங்கிக் கறுக்கின்றது!

நவீன உலகின் உன்னதமான நாடுகளின் வரிசையில் கனடாவுக்கு முக்கிய இடம் உண்டு. அரசியல், சமூகவியல், பொருளியல், கல்வியியல், பண்பாட்டியல், வாழ்வியல் அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒப்பீட்டாய்வுகளின் முடிவுகள் இதனை உறுதி செய்கின்றன.

மக்கள் வாழ்வுக்கு உகந்த மிகச் சிறந்த நாடுகளுள் ஜேர்மனி முதலிடத்திலும், கனடா இரண்டாம் இடத்திலும் இருப்பதாக U.S News & World Report அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது.

இவ்வாறே மக்கள் வாழ்வதற்கேற்ற மிகச் சிறந்த நகரங்கள் எவை எவையென, உலகின் முக்கிய நகரங்களுக்கிடையிலான ஆய்வு ஒன்றை Economist Intelligence Unit மேற்கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர் முதலிடத்தையும், அவுஸ்திரியாவின் வியன்னா இரண்டாவது இடத்தையும், கனடாவின் வன்கூவர், ரொறன்ரோ, கல்கரி ஆகியன முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களையும் வகித்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

2016 மே 26-27 ஆம் திகதிகளில் ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவில் G7 உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த 7 நாடுகளும் உலகப் பொருளாதார வல்லரசு நாடுகள்; உலகின் கைத்தொழில் அபிவிருத்தி அடைந்த நாடுகள்; உலகளாவிய செல்வத்தின் 64 சதவீதத்தினைத் தமதாக்கி வைத்திருக்கும் நாடுகள்; உயர்ந்த தேசியச் சொத்தினையும் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணையும் கொண்ட நாடுகள். இந்த பG7 அணியின் முக்கிய உறுப்பு நாடாகிய கனடா, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் பொருளாதா வளர்ச்சியில் ஏனைய 6 நாடுகளையும் விஞ்சியிருந்த ஒரு நாடு.

இத்தகைய செல்வந்த நாடான கனடாவில், பிச்சையெடுத்தல் ஒரு பிரச்சினைக்குரிய சமூக நடத்தையாக இருந்து வருவதை வெளியுலகத்தவர், குறிப்பாக அந்நாளைய, ‘மூன்றாம் உலகத்தவர்’ அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!

பிச்சைக்காரர்கள், பிச்சையெடுத்தல் என்ற எமக்குப் பரிச்சயமான சொற்பதங்களை, Pandhandlers என்றும் Panhandling என்றும் இங்கு கூறுகின்றனர். Pan என்பது பாத்திரம், Handle என்பது கைப்பிடி, Handling என்பது கையாள்வது எனும் அர்த்தங்களின் அடிப்படையில், Panhandling என்பதைப் ‘பிச்சா பாத்திரம் ஏந்துதல்’ எனப் பொருள் கொள்ளல் பொருத்தமல்லவா?

வேலைவாய்ப்பின்மை, வருமானமின்மை, வதிவிட வசதியின்மை, போதைவஸ்து – மதுபானப் பாவனை, மனிதவுரிமை – அடிப்படையுரிமை மறுப்பு, மனநலக் கோளாறு, குடும்பப் பிரச்சினை, போரச்சவுணர்வு, தனிமைப்படுத்தல், தூரப்படுத்தல், பிரிவுத்துயர், புலச்சிதறல், விரக்தி, சோம்பல் போன்ற பல்வேறு காரணிகளின் விளைவாக கனடாவில் பொது இடங்களில் பிச்சையெடுப்போரின் எண்ணிக்கை பெருகி வருவதாகக் கூறப்படுகின்றது.

வதிவிட வசதியின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதனூடாக, பிச்சையெடுத்தலைக் கட்டுப்படுத்தலாம் என்று Canadian Homelessness Research Network கூறுகின்றது. பிச்சையெடுப்போர், கனடாவின் கடுமையான சமூக, பொருளாதார நடைமுறைகளின் பலிக்கடாக்கள் என்று 31 சதவீத கனடியர்கள் கருதுகின்றனர். அதேவேளை, பிச்சையெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்றும், பிச்சையெடுத்தலைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றும் 48 சதவீத கனடியர்கள் கருதுவது, ஏழைகள் மீதான சகிப்புத் தன்மையைக் கனடியர்கள் இழந்து வருவதன் அறிகுறி எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

இவ்வாறாக பிச்சைக்காரர்கள் பற்றிய சர்ச்சைகள், விவாதங்கள், ஆய்வுகள், சட்டவாக்கங்கள் போன்றவை இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதிலும் கட்டுக்கடங்க மறுக்கும் புற்று நோயாக, இவர்களது எண்ணிக்கை பெருகி வருகின்றதே அன்றி, அருகி வருவதற்கான அறிகுறிகளேதுமில்லை.

மேலும் கனடாவின் சகல பகுதிகளிலும் – விசேடமாக நகரங்களில் – பெருமளவில் பரவிக் காணப்படும் இவர்கள், புதிய மூலோபாயங்கள் சிலவற்றைக் கையாண்டு காசு சேர்க்கப் பழகியுள்ளனர் எனவும், பிச்சை கேட்கும்போது, எப்படிக் கேட்கவேண்டும் என்ற சூட்சுமத்தைச் சிலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனவும், கலைநயம் மிக்க புனைவு நுட்பங்களுடன்கூடிய, உத்தி முறைகளைக் கையாண்டு எப்படிப் பணம் சேர்க்கலாம் என்ற நுணுக்கத்தைச் சிலர் அறிந்து வைத்திருக்கிறார்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

சனசந்தடி மிக்க ரொறன்ரோ நகரச் சந்தி ஒன்றில், பிச்சைக்காரி ஒருத்தி தன் முன்னால் எழுதி வைத்துப் பெருந்தொகைப் பணம் திரட்டிக்கொள்ளக் காரணமான இந்தச் ‘சுலோகம்’ ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம் –

“Travelling, Hungry, Sick and too Ugly to Prostitute, Please Help!”

என்னை நோக்கி அவன் நடந்து வருகின்றான்.

கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த கார்ட்ப்போர்ட் அட்டையில் I AM HUNGRY எனக் கோணல் மாணலாக எழுதிய வாசகம் இப்போது துலக்கமாகத் தெரிகிறது. முகத்தில் ஆங்காங்கே வியர்வை துளிர்த்திருக்கிறது. பசிக் களைப்பில் சோர்ந்து, இரந்து, யாசிக்கும் அவனது கண்கள் என் மனதைப் பிழிந்தெடுக்கின்றன.

காரின் எனது பக்கக் கண்ணாடியைச் சற்று கீழிறக்கி, டாஷ் போர்ட்டிலிருந்து ஐந்து டொலர் தாள் காசை எடுத்துக் கொடுத்துவிட்டு, பின்னிருக்கையில் வைத்திருந்த பார்சலையும் எட்டி எடுத்து அவனது கையில் வைக்கிறேன்.

ஏழு செஞ்சூரியர்கள் அவன் முகத்தில் தோன்றி மறைகின்றனர்!

மலர்ந்த முகத்துடன் தலை சாய்த்து நன்றி தெரிவித்தவன், பின்னாலுள்ள கார்களை நோக்கி நகர்ந்து, தன் காரியத்தில் கண்ணாகிறான்.

தற்காலிகமாகத் தடைபட்டு நின்ற பாதை மெதுவாகத் திறக்கவே, நீல்ஸன் றோட்டில் வடக்கு நோக்கி எனது கார் விரைகிறது.

நிசப்தம் ஒரு நிமிடத்தை மென்று விழுங்குகிறது!

‘தானதர்மம் தேவைதான். இருந்தாலும் மச்சான் …… இது கொஞ்சம் ஓவர்.’ தில்லை சொல்கின்றான்.

‘இது என்ரை வழமைக்கு மாறானது எண்டதை ஒப்புக்கொள்ளுறன். ஆனால் நீயும் நானும் இண்டைக்குச் சாப்பிட்டதும் ஓவர்தானே. பசிக்கு மேலாகச் சாப்பிடுறது ஒருவகையில் பாவம். அது இன்னொருவனின் உணவைப் பறிக்கிறதுக்குச் சமம். அந்தக் குற்ற உணர்வுதான், அவனுக்கு நான் கொஞ்சம் கூடக் குடுக்கக் காரணம் ….. பாவம் மச்சான்… ‘

சில வினாடி சிந்தனையின் பின், ‘அந்த ‘வெள்ளைக்காரப் பிச்சைக்காரன்’ உன்னை ஏமாத்தியும் இருக்கலாமில்லையா?’ என்று கேட்கிறான்.

‘பசியெண்டு வந்திட்டால் வெள்ளையென்ன, கறுப்பென்ன, மஞ்சளென்ன, மண்ணிறமென்ன, மச்சான்? சரி …… அது போகட்டும். …… நீ சொல்லுற மாதிரி அவன் என்னை ஏமாத்தியிருந்தால், அது அவன்ரை பிரச்சினை. நான் அவனுக்குச் செய்தது ஒரு சின்ன உதவி. அதாலை எனக்குக் கிடைச்சது ஒரு பெரிய திருப்தி, மனச் சந்தோசம். ஒரு வகையிலை, இது ஒரு சுயநலம்…… நீ நினக்கிற மாதிரி நான் ஏமாந்து போகவில்லை.’

தில்லை மீண்டும் எதையோ யோசித்தபடி மௌனமாகின்றான்.

ஒரு சொற்ப வினாடிகளில் அவன் தங்கியிருந்த வீட்டைச் சென்றடைந்து, வந்தவழி நோக்கிக் காரைத் திருப்பி நிறுத்தி, விடைபெற முன்னர், அவனது தோளைப் பற்றி உலுப்பிவிட்டுச் சொல்கிறேன் –

‘கனடாவிலை இப்ப தமிழரும் பிச்சையெடுக்கினம்’

– மகுடம் – கனடாச் சிறப்பிதழ், டிசெம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *