கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 16,073 
 

சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு வரச் சொன்னாரு. ரொம்ப அவசரமாம், நா அப்புறமா வரன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே ஓடினாள். “நின்னு நெதானமாகூட சொல்லாம ஓடுறாப் பாரு நாதாரி” என்று சுமதி சொன்னாள். சொம்பை எடுத்து அண்டாவுக்குள் விட்டாள். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை என்று தெரிந்ததும் கோபத்தில் சொம்பை விட்டெறிந்தாள். “சனியன் புடிச்ச ஊட்டுல குடிக்கிறதுக்கு ஒரு வாய்த் தண்ணீ இருக்கா பாரு” என்று சொன்னாள். கோபத்துடன் வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தாள்.

சந்திரன் எதற்காக வரச் சொல்லியிருப்பான்? புதுப்பழக்கமாக ஐயனார் கோயிலுக்கு வரச் சொல்லியிருக்கிறானே? போவதா வேண்டாமா என்று பல முறை யோசித்துப்பார்த்தாள். குழப்பம்தான் கூடியது. எப்போது சொன்னான் என்பதைக் கேட்கவில்லையே என்று தன்மீதே கோபப்பட்டாள். கமலாமீதும் கோபப்பட்டாள். காட்டில் வேலை செய்துவிட்டு, நடந்து வந்தது ஒரே களைப்பாக இருந்தது. தண்ணீர் குடிக்கலாம் என்றால் அதுவும் இல்லை, வெறுப்பில் வீட்டுக்குள் போய் அண்டாவை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்போது தண்ணீர் குடத்துடன் எதிரில் வந்த கமலா “இன்னும் போவலியா நீ?” என்று கேட்டாள். “நான் போனா என்ன, போவலன்னா ஒனக்கென்ன? எதுக்காக நீ அக்கறபடுறவ? ரெண்டு வாத்த நெதானமா சொல்லக்கூட ஒனக்கு நேரமில்லெ” என்று சொல்லிச் சலித்துக்கொண்டாள் சுமதி. “எங்கப்பாருக்கு சோறு போட்டுக்கிட்டு இருக்கும்போதுதான் நீ காட்டுலயிருந்து வந்தது தெரிஞ்சிச்சி. சோறு போடுறதுக்குள்ளார எங்க ஓடுறவன்னு எங்கப்பா கேக்க மாட்டாரா? அதான் ஓடிப்போயிட்டன். நீ ஒரு எட்டுப் போயிட்டு வந்துடு” என்று கமலா சொன்னாள்.

“அப்பிடி என்னா அவசரமாம்? சும்மா ஊர சுத்துற ஆளுக்கு நேரம் காலம் வாணாம்? எல்லாரயும் அவர மாரியே எண்ணிக்கிட்டாராக்கும்?”

“அவர திட்டாத. அவரப் பாக்கவே பாவமா இருக்கு. மறந்திடாதேதுன்னு பல முற

சொன்னாரு.”

“என்னா வெசயமாம்?”

“தெரியலியே. பேயறஞ்ச மாரி இருந்தாரு” என்ற சொன்ன கமலா கிணற்றை நோக்கி நடக்க

ஆரம்பித்தாள்.

சுமதிக்குக் குழப்பமாகிவிட்டது. என்ன செய்தியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே வீட்டுக்கு வந்தாள். வீட்டில் எவ்வளவோ வேலைகள் இருந்தன. ஆனாலும் ஒரு வேலையையும் அவளால் செய்ய முடியவில்லை. நேரமாகநேரமாக குழப்பமும் கோபமும்தான் பெருகியது. என்ன விசயமென்று விபரமாகக் கேட்காததற்காகத் தன்னையே நொந்துகொண்டாள். சட்டென்று வெளியே வந்து கமலா வீட்டுக்குப் போனாள். ஆள் இல்லை என்று தெரிந்ததும் கோபம் தலைக்கு ஏறியது. வெறுப்புடன் வீட்டுக்கு வந்தாள்.

நேரமாக நேரமாக சுமதிக்குக் கோபமும் எரிச்சலும் அதிகமாயிற்று. வீட்டு வேலை செய்யாதது வேறு கடுப்பாக இருந்தது. எதற்காக வரச் சொல்லியிருப்பான்? ஐயனார் கோயிலுக்கு யாராவது வரச் சொல்வார்களா என்று சந்திரன் மீது கோபப்பட்டாள். மறுநொடியே, நினைத்தபோதெல்லாம் வரச் சொல்கிற ஆளில்லை அவன். ஏதாவது வம்பு தும்பில் மாட்டியிருப்பானோ என்று சந்தேகப்பட்டாள். அந்த மாதிரியான ஆளுமில்லையே என்று நினைத்தாள். நேரமாகிக்கொண்டிருப்பது அவளைக் கூடுதலாக எரிச்சலடைய வைத்தது. அந்த எரிச்சலில் வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள். பிறகு பாத்திரங்களை எடுத்துவந்து கழுவ ஆரம்பித்தாள். அப்போது ஐயனார் கோயிலுக்குப் போக முடியுமா என்ற எண்ணம் உண்டாயிற்று.

சாதாரணமாக, பகல் நேரத்தில்கூட ஐயனார் கோயில் பக்கம் யாருமே போக மாட்டார்கள். பெண்கள் சுத்தமாக போக மாட்டார்கள். பொழுதிறங்கும் நேரத்திற்கு வயதுக்கு வந்த பெண் போவது என்பது நடக்கிற காரியமில்லை. மீறிப் போனாலும் யாருடைய கண்ணிலும் படாமல் போவது சாத்தியமில்லை. காட்டிலிருந்து ஆட்கள் திரும்புகிற நேரம். போகும்போதும் சரி, வரும்போதும் சரி, ஒருவரும் பார்க்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு ஆளுடைய கண்ணில் பட்டுவிட்டால் போதும், ஊருக்கே தெரிந்துவிடும். ஊருக்குத் தெரிந்தால் தூக்குப் போட்டுக்கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரே சாதியாக இருந்தால்கூடப் பிரச்சனையில்லை. அப்படியும் சொல்ல முடியாது. போன வெள்ளிக்கிழமை கிழக்குத் தெரு ராணி மூன்றாவது வீட்டுக் குமாருடன் கொத்தமல்லிக் காட்டில் பேசிக்கொண்டிருந்தாள் என்று அவளுடைய அண்ணனும் அப்பாவும் அடித்ததால் அரளி விதையை அரைத்துத் தின்றுவிட்டு செத்துவிட்டாள். போன சனிக்கிழமைதான் பிணத்தை எடுத்தார்கள். அந்த மாதிரிதான் தன்னுடைய கதை ஆகப்போகிறதோ என்று நினைத்தாள், சுமதிக்கு நடுக்கமேற்பட்டது. ராணி செத்ததுப் பற்றியே யோசித்தாள். ஐயனார் கோயிலுக்குப் போக வேண்டாம் என்று நினைத்தாள். மறுநொடியே அடுப்பைப் பற்றவைத்தாள்.

“நேரத்திலேயே போயி சோறாக்கி வையி” என்று சொல்லிக் காட்டிலிருந்து வீட்டுக்கு அனுப்பிய தன்னுடைய அம்மாமீது சுமதிக்கு அளவற்ற எரிச்சல் உண்டாயிற்று. அந்த எரிச்சலில் அடுப்பில் நிறைய விறகைத் திணித்துவிட்டாள். அரிசியில் கல் இருக்கிறதா உமி இருக்கிறதா என்று கூடப் பார்க்கவில்லை. அப்படியே தூக்கி உலையில் கொட்டினாள். கொடி அடுப்பில் பருப்பை வேகப்போட்டாள். பிறகு புளிச்சக்கீரையை எடுத்து ஆய ஆரம்பித்தாள்.

சுமதி வேலை செய்துகொண்டிருந்தாலும், அவளுடைய மனம் சந்திரன் எதற்காக வரச் சொல்லியிருப்பான் என்பதையே யோசித்துக்கொண்டிருந்தது. அவனுடைய வீட்டில் ஏதாவது சண்டை நடந்திருக்குமோ என்று சந்தேகப்பட்டாள். ஒரு வருசமாக அவனுடைய வீட்டில் சண்டையில்லாத நாள் இல்லை. இந்த ஊரிலேயே அவன்தான் பெரிய வேலைக்குப் போவான் என்று ஊரே பேசியது. ஏழெட்டு வருசம் படித்திருப்பான். படிப்பு முடிந்து வந்து வீட்டில் தங்க ஆரம்பித்தபோதுகூட அவன்தான் பெரிய வேலைக்குப் போவான் என்று எல்லாரும் சொன்னார்கள். அந்தப்பேச்சு கொஞ்சகாலம்தான் இருந்தது. பிறகு எல்லாம் தலைகீழாகிவிட்டது. “என்னாத்த படிச்சான்?” என்று கேலி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இவளுக்குத் தெரிந்தே மாசத்திற்கு இரண்டுமூன்று மனுவாவது போட்டுக்கொண்டுதான் இருந்தான். மனு போட பணம் கேட்கும்போதெல்லாம் அவனுடைய வீட்டில் சண்டை நடக்கும். அந்தச் சண்டை பெரிதாகி வளர்ந்து அவன் கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் இருப்பதில் வந்து முடியும், அந்த மாதிரி ஏதாவது நடந்திருக்குமோ என்று யோசித்தாள். யோசனையில் அடுப்பைக் கவனிக்காமல் பருப்பைத் தீய்ந்துப்போக விட்டுவிட்டாள். குழம்பில் தீச்சல் வாடை வருகிறதே என்று கேட்டுச் சண்டை நடக்குமே என்று கவலைப்பட்டாள்.

சோற்றை வடித்தெடுத்தாள். புளிச்சக்கீரையை வேகப்போட்டாள். பிறகு பருப்பைக் கடைய ஆரம்பித்தாள். கத்திரிக்காயை எடுத்து அலசி நறுக்கிப்போட ஆரம்பித்தாள், சந்திரன் இன்னும் ஐயனார் கோயிலில் உட்கார்ந்திருப்பானா, வீட்டுக்கு வந்திருப்பானா என்ற சந்தேகம் உண்டாயிற்று. கோயிலிலேயே உட்கார்ந்திருந்தால் என்ன செய்வது என்று யோசித்தாள். எவ்வளவு நேரமாக உட்கார்ந்திருக்கிறானோ என்று கவலைப்பட்டாள். “ஒலகத்தில் இருக்கிற பொட்டச்சிவோகிட்டெ இல்லாதது எங்கிட்டெ மட்டும் அப்பிடி என்னா இருக்குன்னு சுத்திச்சுத்தி வருது. பேசாம ஊட்டுல சொல்ற மாரி செஞ்சா என்ன? ரவ செவப்புத் தோலு. வேறன்ன எங்கிட்டெ இருக்கு?” என்று முனகினாள். லேசாகக் கண்கலங்கியது.

சந்திரன் வீட்டில் நாளெல்லாம் ஓயாத சண்டைதான். “வேல வர்றப்ப வரட்டும். கல்யாணத்தக் கட்டு. ஒனக்குப் பின்னால நாலு உருப்படிவோ இருக்கு” என்று சொல்லியும் கேட்காததால் சந்திரனுக்கு அடுத்த பையனுக்குக் கல்யாணத்தை முடித்தார்கள். அதற்கடுத்த பையனுக்கும் ஒரு வருசத்திற்கு முன்புதான் கல்யாணம் நடந்தது. இரண்டு மாதத்திற்கு முன்புதான் பெண்பிள்ளையையும் கட்டிக்கொடுத்தார்கள். சந்திரன் மட்டும் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை. “அதுக்கு அவன் லாயக்கு இல்லியோ என்னமோ” என்றுகூட ஊரில் பேச்சு அடிபட்டது. அதற்கும் அவன் அசைந்துகொடுக்கவில்லை. “வேல வந்தாத்தான் கல்யாணம்” என்று இரண்டு வருசமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு வேலை வருமா? வேலை கிடைத்தாலும் தன்னைக் கல்யாணம் செய்துகொள்வானா என்று நினைத்ததுமே திகில் ஏற்பட்டது. எப்படி நடக்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள். பத்து இருபது வருசத்துக்கு முன்பாக இருந்தால்கூட நடந்திருக்கும் என்று நினைத்தாள். முன்பைவிட இப்போதுதான் சாதி சண்டைகள் அதிகம் நடக்கின்றன. அதிலும் இவளுடைய சாதிக்கட்சியும், அவனுடைய சாதிக்கட்சியும்தான் அடிக்கடி மோதிக்கொண்டு ஜெயிலுக்குப் போகிறார்கள். அப்படியிருக்கும்போது எப்படிக் கல்யாணம் நடக்கும்? ஒரு வருசத்திற்கு முன்பு சாதிமாறிச் சேர்ந்துவிட்டார்கள் என்பதற்காக புதுக்கூரைப்பேட்டை என்ற ஊரில் இரண்டு பேரைப் புளியமரத்தில் கட்டிவைத்து விசத்தைக் கொடுத்து குடிக்கவைத்துச் சாகடித்தார்கள் என்றும் ஊரே கூடித்தான் பிணத்தைப் புதைத்தார்கள் என்றும் ஊருக்குள் பரப்பரப்பாகப் பேசிக்கொண்டார்கள். அப்படித்தான் தன் கதையும் முடியுமோ என்று நினைத்தாள். அழுகை வந்தது. அதனால் சந்திரனைப் பார்ப்பதற்குப் போக வேண்டாம் என்று நினைத்தாள். கோபத்தில் வேலைகளை வேகம் வேகமாக செய்ய ஆரம்பித்தாள். அப்போது கமலா மீது அவளுக்கு அளவற்ற எரிச்சலும் கோபமும் உண்டாயிற்று. அவளால்தான் எல்லாச் சிக்கலும் வந்தது என்று நினைத்தாள். அவள் இல்லை என்றால் இவளுக்கும் சந்திரனுக்கும் பழக்கமே ஏற்பட்டிருக்காது. பழக்கத்தை நெருக்கமாக்கிவிட்டதும் அவள்தான். சந்திரன் வீட்டுக்குப்பரம்பரை பரம்பரையாக அவளுடைய குடும்பம்தான் வேலை செய்துகொண்டிருந்தது. அதனால் வீட்டு வேலையாக இருந்தாலும் காட்டு வேலையாக இருந்தாலும் அவள்தான் முன்னே நின்று செய்வாள். அப்படிப் போகும்போது சுமதியையும் அழைத்துக்கொண்டு போவாள். அப்படிப் போகும்போதுதான் இவளுக்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “வெளயாட்டுக்குப் போனன். செனயாயிடிச்சிங்கிற கதெதான்” என்று சொல்லி முனகினாள். ஆரம்பத்திலேயே வெட்டிவிட்டிருக்க வேண்டும் என்று இப்போது நினைத்தாள். “சின்னப்பட்ட கழுதக்கி செனப்பட்டெ கழுததான் வப்பாட்டி.”

வேலைகள் முடியமுடிய ஐயனார் கோயிலுக்குப் போகலாமா என்ற எண்ணம் பலம்பெற ஆரம்பித்தது. அதனால் முன்பைவிட வேகமாக வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். புளிச்சக் கீரையை அவசரக் கடையல் கடைந்தாள். லேசாகக் குழம்பு கொதிக்க ஆரம்பித்ததுமே இறக்கி வைத்தாள். வீட்டைக் கூட்டுகிறேன் என்று விளக்குமாறால் இப்படியும் அப்படியுமாக இரண்டு விசிறு விசிறினாள். பிறகு குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுப்பதற்காகக் கிளம்பினாள்.

சந்திரன்மீது அவளுக்குச் சட்டென்று கோபம் உண்டாயிற்று. நேரம் பார்த்து வரச் சொல்லியிருக்கிறான் பார் என்று சலித்துக்கொண்டாள். “திடீர்னு நெனப்பெடுத்திருக்குமா?” என்று சந்தேகப்பட்டாள். மறுநொடியே அவன் அப்படிப்பட்ட ஆளில்லையே என்று எண்ணம் உண்டாயிற்று. இருவருக்கும் நான்கு வருசமாகப் பழக்கம் என்றாலும் இந்த ஒரு வருசமாகத்தான் அதிக நெருக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் இதுவரை ஒருமுறைகூட இவளை அவன் தொட்டுப் பேசியது கிடையாது. “அதுலயெல்லாம் பெரும்போக்கான ஆளுதான்” என்று முணுமுணுத்தாள். நேரில் பார்க்கும்போதுகூட அதிகம் பேச மாட்டான். இவளாலும் பேச முடியாது. இருவருமே கமலாவிடம்தான் பேசுவார்கள். குறுக்க நெடுக்க போகும்போதுகூட பேசிக்கொள்ள மாட்டார்கள். அவன் வெறுமனே சிரிக்க மட்டுமே செய்வான். வேலைக்குப் போகிற இடங்களுக்குக் கூட வருவான். ஆனால் ஒருவார்த்தை பேச மாட்டான். ஊரிலுள்ள பெண்கள்கூட அவனை நல்ல ஆள் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவனுடைய வீட்டுச் னங்களுக்குத்தான் அவனைப் பிடிக்கவில்லை. கல்யாணம் கட்டவில்லை, வேலைக்குப் போகவில்லை என்று ஒரே குறைபாடு. அவனுடைய சாதியில் இந்த வட்டாரத்திலேயே அதிகம் படித்தவன் அவன்தான். அதனால் பெண் தருவதற்கு எத்தனையோ பேர் செய்தி சொல்லிப்பார்த்துவிட்டார்கள். எதற்கும் அவன் மசியவில்லை. அதனால்தான் அவனுடைய வீட்டில் சண்டையும் சச்சரவும்.

சந்திரனோடு படித்தவர்கள் எல்லாருமே குழந்தை குடும்பம் என்று ஆகிவிட்டார்கள். எதற்குமே உதவ மாட்டான் என்று சொல்லப்பட்ட செந்தில்கூட வேலைக்குப் போய்விட்டான். ஆனால் சந்திரனுக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை. அதற்கான காரணம்தான் சுமதிக்குப் புரியவில்லை. வேலை கிடைத்ததும் தன்னைக் கல்யாணம் கட்டிக்கொள்வானா, இல்லை தன்னுடைய சாதியிலேயே கட்டிக்கொள்வானா என்ற கேள்வி வந்ததும் திடுக்கிட்டுப்போனாள். எதுவும் நடக்கலாம் என்று அவளுடைய மனம் சொல்லிற்று. தன்னுடைய கதி நிர்க்கதிதான் என்ற எண்ணம் உண்டானதும் அழுகைப் பொங்கிக்கொண்டு வந்தது. கிணற்றுக்கு அருகில் வந்துவிட்டதால் கண்களை துடைத்துக்கொண்டாள்.

தண்ணீர்ப் பானையுடன் வீட்டுக்குத் திரும்பும்போது ஏழெட்டுப் பேர் கொண்ட கூட்டம் ஒரு பசுமாட்டை இழுத்துக்கொண்டு போனது. என்னவாக இருக்கும் என்று நினைத்த சுமதி வேகமாக நடந்தாள். அவளுக்கு பின்னால் அழுதுகொண்டே ஓடிவந்த முருகனுடைய பெண்டாட்டியிடம் என்ன விசயமென்று கேட்டாள். முன்பைவிட வேகமாக அழுத மஞ்சாயி “பயிர்க்காட்டுல மேஞ்சிப்புடிச்சின்னு வாலப் புடிச்சி அறுத்துப்புட்டானம்மா, அந்த புளியமரத்து ஊட்டுப் படாச்சி” என்று சொல்லி அழுதுகொண்டே கூட்டத்தை நோக்கி ஓடினாள். சுமதிக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. மாட்டுக்கே இந்த கதியா என்று நினைத்தாள். அடுத்த அடியை எடுத்து வைக்க அவளால் முடியவில்லை.

வீட்டுக்கு வந்த மறுநொடியே அலுத்துப்போய் வரகு மூட்டைமீது பொத்தென்று உட்கார்ந்தாள். எதிரில் கிடந்த முறத்தை ஒரு எத்து எத்தினாள். ஐயனார் கோயிலுக்கு போக வேண்டாம் என்று நினைத்தாள். அந்த கோபத்தில் வீட்டை ஒழுங்குப்படுத்த ஆரம்பித்தாள். என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது புரியாமல் செய்ததில் கடலை எண்ணெய் பாட்டில் கீழே விழுந்து உடைந்துவிட்டது. அதைச் சுத்தப்படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. அப்போது இருந்த கோபத்தில் தன்னுடைய அப்பா, அம்மா, சந்திரன் என்று எல்லோரையும் திட்டியதோடு, அவனுடைய சாதியையும் தன்னுடைய சாதியையும் சேர்த்துவைத்துத் திட்டினாள். எவ்வளவு திட்டியும் அவளுடைய ஆத்திரம் குறைந்த பாடில்லை.

“இன்னும் நீ போகலியா? என்று கேட்டுக்கொண்டே வந்தாள் கமலா. “மசுருல போறாங்க” என்று சொல்லிக் கத்தினாள் சுமதி. “ஒனக்கென்ன புத்திக்கெட்டுப்போச்சா. காலயில இருந்து அவுரு அங்க குந்தியிருக்காரு. அது தெரியாம பேசற?” என்று பதிலுக்குக் கமலா கத்தினாள். “அதெ ஏன் மின்னாலியே சொல்லல?” என்று கேட்டு முறைத்தாள். அதோடு “இந்நேரம் போயிருப்பாரு” என்றும் சொன்னாள். “எந்நேரமானாலும் வரச் சொல்லுன்னு சொன்னாரு. ஒடம்பு சரியில்லப்போல இருக்கு.”

“எல்லாச் சனியனயும் இப்பத்தான் சொல்லுவியா?”

“நேரத்த வளத்தாம போறதுக்கு வழியப் பாரு.”

“வெளக்கு வைக்கிற நேரத்துக்கா?”

“கோவத்திலெ ஏதாவது செஞ்சிக்கப் போறாருடி. போயி என்னான்னு கேட்டுட்டு வா. காலயிலியே அவரால பேச முடியல. பிரச்சனப்போல இருக்கு. உலயில அரிசிய போட்டுட்டு வந்தன். போயிப் பாத்துட்டு வரன் இரு” என்று சொல்லிவிட்டு சுமதி சொல்வதைக் நின்றுகூட கேட்காமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள் கமலா.

சுமதிக்குத் தலையே வெடித்துவிடும்போலிருந்தது. வீட்டுக்கும் வாசலுக்குமாகப் பல முறை நடந்தாள். காட்டில் வேலை செய்துகொண்டிருப்பவர்கள் நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தாலாவது ஏதாவது சொல்லிவிட்டு வெளியே போக முடியும். அதற்கும் வழியில்லை, அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. கோபத்தில் தரையில் இருந்த சொம்பை ஒரு எத்து எத்திவிட்டு வந்து வெளியே பார்த்தாள். நேரமிருப்பதுபோல தோன்றியது, அவளுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. “போனதும் திரும்பிடலாம்” என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாள். பேய் பிடித்த பெண் மாதிரி சட்டென்று கதவைச் சாத்திவிட்டுத் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஊரைத் தாண்டும்வரை சுமதிக்கு ஒன்றும் தெரியவில்லை. ஊரைத் தாண்டிச் சிறிது தூரம் வந்த பிறகுதான் அவளை பயம் பிடித்தாட்ட ஆரம்பித்தது. பயத்தில் வேகமாக நடக்கக்கூட முடியவில்லை. வெயில் இல்லை என்றாலும் வியர்த்தது. கைகால்களில் லேசாக உதறல் இருந்தது. ஆட்கள் யாராவது வருகிறார்களா, தென்படுகிறார்களா என்று பார்த்துக்கொண்டே நடந்தாள். போகும்போது யாருடைய கண்ணிலும் மாட்டாமல்போனாலும், வரும்போதும் மாட்டக் கூடாதே என்று கவலைப்பட்டாள். இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டாள். வேண்டிக்கொண்ட மறுநொடியில்தான் வடக் காட்டிலிருந்து மூன்று பேர் வருவது தெரிந்தது. திகைத்துப்போனாள். மறைவதற்கு இடமிருக்கிறதா என்று பார்த்தாள். சட்டென்று இடது புறமிருந்த கொல்லையில் உட்கார்ந்தாள். இந்நேரம் பார்த்திருப்பார்களோ, அடையாளம் தெரிந்திருக்குமோ என்று நினைக்கும்போதே உடம்பு நடுங்க ஆரம்பித்தது. சோளக்கொல்லையாக இருந்தால் தெரியாது. வரகு விதைத்ததற்காக நிலத்துக்காரனைத் திட்டினாள். உட்கார்ந்திருப்பதற்குக் காரணம் கேட்டால் என்ன சொல்வது என்ற கேள்வி எழுந்ததும் “மோசம் போனனே” என்று முனகிகொண்டே சுற்றும்முற்றும் பார்த்தாள். கொஞ்ச தூரத்தில் பெரிய வாரி இருப்பது தெரிந்தது. வாரியை நோக்கி ஓடினாள். அவசரஅவசரமாக, காய்ந்த குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்தாள். பிறகு ஆட்களைப் பார்த்தாள். வருகிறவர்கள் வெளியூர் ஆட்களாக இருந்தால் நல்லது என்று நினைத்தாள். உள்ளூர் ஆட்கள் என்றால் பதில் சொல்லி மாளாது. யாருக்குத் தெரிந்தாலும் தன்னுடைய அண்ணன் கணேசனுக்கு மட்டும் தெரியக் கூடாது என்று நினைத்தாள். அவன் சாதாரணமாகப் பார்ப்பதே பாம்புப் பார்ப்பதுபோலத்தான் பார்ப்பான். இருட்டான பிறகு தண்ணீர் எடுக்கப் போனாலே தெரு என்றுகூடப் பார்க்காமல் அடிக்க வருவான். தான் வந்து இப்படி நிற்பது அவனுக்குத் தெரிந்தால் உயிரை எடுத்துவிடுவானே என்று நினைத்தாள், திரும்பி வீட்டுக்குப் போய்விடலாமா என்று யோசித்தாள். வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்ததுமே அவளுக்கு லேசாக நிம்மதி வந்தது போலிருந்தது. அந்த நிம்மதியில் ஆட்களைப் பார்த்தாள். ஆட்கள் நேராக வராமல் வேறு பாதை வழியே போவது தெரிந்தது. வாரியைவிட்டு வெளியே வந்தாள். எங்கே போவது என்று ஒரு நொடி யோசித்தாள். அவளுடைய கால்கள் தானாகவே கோலை நோக்கி நடந்தன.

இந்நேரம் தன்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் எல்லாரும் வீட்டுக்கு வந்திருப்பார்களா, தன்னைக் காணவில்லை என்று தேடுவார்களா, வீட்டைத் திறந்துபோட்டுவிட்டு வந்ததற்காக திட்டுவார்களா, என்ன நடந்துகொண்டிருக்கும் என்று நினைத்தபோது உயிரே நின்றுவிடும் போலிருந்தது. இப்படியே திரும்பிப்போய்விடலாமா என்று நினைத்தாள். ராத்திரி நேரத்தில் சற்று நேரம் இவளைக் காணவில்லை என்றாலும் இவளுடைய அம்மா அலை மோதி போவாள். தெருவையே கூட்டிவிடுவாள். இவள் என்ன தவறு செய்தாலும் “புள்ளெ பெத்திருக்கா பாரு. தட்டுவாணிப் பொழப்ப தண்ணியிலெ பாரு, ஊதாரி பொழப்ப உப்புல பாருன்னு சும்மாவா சொன்னாங்க?” என்று சொல்லி அப்பா அம்மாவைத்தான் போட்டு அடிப்பார். அண்ணன் அம்மாவை வறுத்து எடுத்துவிடுவான். அதனால் வீட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்தாள். மறுநொடியே இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என்று நினைத்தாள். பட்டென்று கோயிலை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று சந்திரன் எதற்காக வரச் சொல்லியிருப்பான்? அவனுடைய வீட்டில் கல்யாணம் கட்டிக்கொள்ளவில்லை, வேலைக்கும் போகவில்லை என்று சொல்லிப் பெரிய சண்டை நடந்து, கோபத்தில் “ஊர வுட்டு ஓடிப்போவலாம் வா” என்று சொல்வதற்காக கூப்பிட்டிருப்பானோ என்று நினைத்ததுமே அவளுடைய உடம்பு குளிர்ந்துப்போனது. வாய் உலர்ந்துபோயிற்று, அடுத்த அடியை எடுத்துவைத்து நடக்க முடியவில்லை. தான் நினைத்ததுபோல்தான் நடக்கப்போகிறதா? அப்படி நடந்தால் என்ன செய்வது என்று நினைத்தாள். அவளுக்குப் பயத்திலேயே உயிர் நின்று விடும்போலிருந்தது. தானாக வந்து வம்பில் மாட்டிக்கொண்டோமே என்று எண்ணினாள். “அதுதான் விசயமின்னா, நான் செத்தாத்தான் அப்பிடி நடக்கும்” என்று முனகியவள் வீம்பாக முன்னோக்கி நடந்தாள்.

சுமதி நான்குப் பக்கமும் பார்த்துக்கொண்டே நடந்தாள். நடந்துகொண்டிருந்தாலும் யார் பார்க்கப்போகிறார்களோ, வீட்டில் போய் என்ன சொல்லப்போகிறார்களோ என்ற கவலை ஒரு புறமும், சந்திரனுக்கு என்ன ஆனதோ, என்ன சொல்லப்போகிறானோ என்ற கவலை மறுபுறமும் அவளைப் பொசுக்கிக்கொண்டிருந்தது. கோயிலை நெருங்கநெருங்க அவன் இருப்பானோ போயிருப்பானோ என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. பதட்டத்தில், கவலையில் பாதைகூட அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை. பைத்தியம் மாதிரி நடந்துகொண்டிருந்தாள்.

ஐயனார் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி நின்றிருந்த கொடுக்காப்புளி மரத்தை நெருங்கநெருங்க சுமதிக்கு எப்போதையும்விட அதிக பயமும் கவலையும் உண்டாயிற்று. பயத்தில் கால்கள் பின்னித் தடுமாறின. கொடுக்காப்புளி மரத்திற்கு கீழேயே நின்றுகொண்டு கோயில் பக்கம் பார்த்தாள். வரிசையாகக் கட்டப்பட்டிருந்த குதிரைகளின் பக்கமும் பார்த்தாள். கோயிலுக்கு முன்புறம், பின்புறம் என்று எல்லாப் பக்கமும் பார்த்தாள். சந்திரனைக் காணவில்லை. உட்கார்ந்து பார்த்துவிட்டுப் போயிருப்பானோ என்று சந்தேகப்பட்டாள். அதோடு கமலா பொய் சொல்லியிருப்பாளோ என்ற சந்தேகமும் உண்டாயிற்று. அப்படிச் செய்ய மாட்டாளே என்றும் நினைத்தாள். ஒரு நொடி நேரம் சந்திரன் போயிருந்தால்கூட நல்லதுதான் என்று நினைத்தாள். என்ன நினைத்துக் கொண்டுபோயிருப்பான், கமலா சொல்லியிருக்க மாட்டாள் என்று நினைத்திருப்பானா என்று யோசித்தாள். ஒரு சந்தேகத்தில் இரண்டு மூன்று குரல் கூப்பிட்டுப்பார்த்தாள். அரவம் இல்லை. பத்து தப்படி முன்னே நகர்ந்துசென்று மீண்டும் கூப்பிட்டுப்பார்த்தாள். எந்தச் சத்தமுமில்லை. அதனால் அவளுக்கு அடக்க முடியாத அளவுக்கு ஆத்திரமும் எரிச்சலும் உண்டாயிற்று. கோபத்தில் கோயில் என்று கூடப் பார்க்காமல் மேலும் சில தப்படிகள் முன்னே வந்துப் பார்த்தாள். குள்ளக்கருப்பு சாமி குதிரையின் அடிப்பீடத்தில் சந்திரன் படுத்திருந்தான். அவனைப் பார்த்ததும் உயிர் போன மாதிரியும் இருந்தது, போன உயிர் திரும்பிவந்த மாதிரியும் இருந்தது.

நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு மூன்று நான்கு முறை கூப்பிட்டுப் பார்த்தாள். பிறகு சிறுசிறு கற்களைப் பொறுக்கியெடுத்து சந்திரனை நோக்கி விட்டெறிந்தாள். அவனிடம் எந்த அசைவுமில்லை. சுமதிக்கு எதையாவது தின்றுவிட்டுச் செத்துக்கிடக்கிறானோ என்று சட்டென்று சந்தேகம் வந்தது. அடுத்த நொடி சாமி, கோயில் என்பதையெல்லாம் மறந்துவிட்டு பாய்ந்தோடினாள். அவனுடைய வயிறு ஏறி இறங்குவதைப் பார்த்த பிறகுதான் அவளுக்கு மூச்சு விடவே முடிந்தது. இரண்டாவது குரலுக்குத்தான் அவன் கண் விழித்துப் பார்த்தான். சுமதிக்குக் காரணமின்றி அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. வந்த அழுகையை அவள் அடக்கவில்லை. “உட்காரு” என்று சந்திரன் சொன்னான். “இது கோயிலு, அதிலியும் இந்தக் கோயிலுகிட்டெ நாங்க வரக் கூடாது. யாராவது பாத்தா அவ்வளவுதான். பஞ்சாயத்திலெ யாரு நிக்குறது” என்று சொல்லிவிட்டு சுமதி கோயிலுக்கு பின்புறமாக இருந்த புதரை நோக்கி நடந்தாள். கொஞ்சம் நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்த சந்திரன், என்ன நினைத்தானோ எழுந்து நடந்தான். அப்போது சூரியன் மறைய ஆரம்பித்திருந்தது.

சந்திரன் புங்க மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தான். அவன் பல முறை சொல்லியும் உட்காராமல் அவனுக்குச் சற்று தள்ளி சுமதி நின்றுகொண்டிருந்தாள். அவனைப் பார்க்கப்பார்க்க அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. காலேஜில் படித்துக்கொண்டிருக்கும்போது ஊருக்கு வந்தான் என்றால் ஊரே கூடி வேடிக்கை பார்க்கும். அவ்வளவு அழகாக இருப்பான். எப்போதுமே மடிப்புக் கலையாத சட்டைதான் போட்டிருப்பான். அவனை உட்காரவைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். அவனா இவன்? ஆறு மாதப் பட்டினியில் கிடந்தவன் மாதிரி இருக்கிறானே. அவனுக்கு என்ன குறை வந்துவிட்டது? ஓரளவு வசதியான குடும்பம்தான். சோற்றுக்கு, துணிக்குப் பஞ்சமில்லாத குடும்பம். இவனுடைய சம்பாத்தியத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் குடும்பம் இல்லை. ஊர் மெச்சுகிற மாதிரி வேலை இல்லை. காலத்தில் கல்யாணம் கட்டவில்லை என்பதுதான் குறை. அதற்காகப்போய் பித்துக்குளி மாதிரி இருப்பானா என்று நினைத்தாள், அவனை உற்றுப் பார்த்தாள். அவன் தரையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். “என்னாச்சு?” என்று கேட்டாள். அந்தக் கேள்விக்காகவே காத்திருந்தது மாதிரி அவனுடைய கண்கள் கலங்கின. அதைப் பார்த்ததும் சுமதிக்கு மனம் பதறிப்போயிற்று. பதட்டத்துடன் மீண்டும் “என்னாச்சு?” என்று கேட்டாள்.

“ஒண்ணும் ஆவல.”

“எங்கிட்டெ சொல்றதுக்கென்ன?”

“சொல்றதுக்கு ஒண்ணுமில்லெ” என்று சொல்லும்போதே அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அவன் அழுவதைப் பார்த்த சுமதிக்கும் அழுகை வந்தது. சட்டென்று உட்கார்ந்து “நடக்காதது நடந்தாலும் இப்பிடி வந்து பூதம் காக்கிற எடத்திலெ படுத்திருக்கிறது நல்லதா?” என்று கேட்டாள்.

“எல்லாம் முடிஞ்சி போச்சி” என்று சொன்ன சந்திரனுக்கு அதற்கு மேல் பேசமுடியவில்லை. தலையைக் கவிழ்த்துக்கொண்டான். அவனுடைய கையை எடுத்துத் தடவிக் கொடுக்க வேண்டும் போலிருந்தது. இதுவரை அப்படிச் செய்ததில்லையே என்ற நினைவு வந்தது, வைத்த கண்வாங்காமல் அவனையே பார்த்தாள். இரண்டு வருசத்திற்கு முன்பு இருந்த சந்திரன் அல்ல இவன். ஊரிலுள்ள பெண்களும், ஏன் சுமதிகூட, அந்த சந்திரன் மீதுதான் ஆசைப்பட்டார்கள். கல்யாணம் கட்டிக்கொள்ளப் போட்டி போட்டார்கள். அந்த மிடுக்கு, தோரணை எல்லாம் என்னவாயிற்று? கிழவன் மாதிரி கன்னம் ஒட்டிப்போய் நடப்பதற்கே தெம்பில்லாதவன்போல் உட்கார்ந்திருக்கிறானே என்று கவலைப்பட்டாள். அவனைத் தேற்ற நினைத்தவள் அடங்கின குரலில் “என்னா நடந்தது?” என்று கேட்டாள்.

“இனிமே நடக்கிறதுக்கு ஒண்ணுமில்லெ.”

“ஊட்டுல சண்டயா?”

“எம் மேல என்னா குத்தம்? நல்லா படிக்கலியா? பாசுதான் ஆவலியா?”

“அதெப் பத்தி இப்ப என்னா?”

“வேலெ கெடைக்கலங்கிறதுக்காக நான் என்னா பண்ண முடியும்?”

சந்திரன் வீட்டில் சண்டை நடந்திருக்கிறது. அதற்காகத்தான் கோபித்துக்கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறான் என்று தெரிந்ததும் சுமதிக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. சாதாரண சண்டைக்காக இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறவன் மனசு என்ன மனசாக இருக்கும் என்று ஆதங்கப்பட்டாள். பிறகு “நேரம்காலம் கூடிவந்தா எல்லாம் சரியாப்பூடும். ஊடுன்னு இருந்தா சண்ட வரத்தான் செய்யும்” என்று சொன்னாள். அவள் சொன்ன விதம் அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அதனால் கடுப்புடன் “ஊடாம் சண்டயாம்” என்று சொன்னான்.

“ஒனக்கு ஒலகம் புரியல.”

“தோத்துப்போனவனுக்கு ஒலகத்திலெ என்னா இருக்கு?”

“இதான் நீ படிச்சித் தெரிஞ்சிக்கிட்டது.”

“ஒனக்குப் புரியாது.”

“எப்ப சாப்புட்டெ?”

“சாப்படாம என்னா?”

“சரி எயிந்திருச்சி வா. மத்தத ராத்திரிக்குப் பேசிக்கலாம்.”

“நான் மெட்ராசுக்குப் போறன். ஒங்கிட்டெ சொல்லிட்டுப் போவத்தான் நேத்திலெருந்து

குந்தியிருக்கன்.”

“திடுதிப்புன்னு எதுக்கு மெட்ராசுக்கு?”

“முடிவு பண்ணியாச்சு. இனிமே இந்த ஊர்ல என்னால இருக்க முடியாது.”

“ஒனக்கென்ன பித்தா புடிச்சியிருக்கு?”

“ஆமாம். இந்த ஊருல எனக்குன்னு யாரு இருக்கா?”

“ஏன், நானில்லியா?” என்று கேட்டவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. முடிந்தவரை அழுகையை அடக்கிக்கொண்டு “இந்தச் சுத்து வட்டாரத்திலேயே நீதான் பெரிய வேலக்கிப் போவன்னு ஒம்மேல ஆசப்பட்டவளுவோ எல்லாம் இப்ப புருசன், புள்ளென்னு போயிடல? நான் அப்பிடியாப் போயிட்டன்? நான் இல்லாதவனுக்குப் பொறந்தவதான். நாலாம் சாதியில பொறந்தவதான். இல்லங்கல. பணக்காரப் பொண்ணுவள, படிச்சவளுவள, மெத்த ஊட்டுக்காரிவுள வுட்டுட்டு இந்த ஈனச்சாதிக்காரிக்கூட குந்திப் பேசிக்கிட்டிருக்கிறியே, அதெ நான் மறந்துடுவனா? எஞ்சத்துக்கு ஒனக்குக் களவெட்டி சோறுபோட மாட்டனா? என்னா பண்றது? நம்பப் பொறப்பு சரியில்லியே?” என்று சொல்லும்போதே அவளுக்கு அழுகை வந்துவிட்டது. கொஞ்சம் நேரம் கழித்து “நேரமாவலியா?” என்று கேட்டாள்.

“நீ போ” என்றான் சந்திரன்.

“நீ வல்லியா?”

“நீ போ.”

“கோவம் சாவுறமுட்டும் இருக்கப்போறதில்லெ. எழுந்திருச்சி வா ஊட்டுக்கு.”

“முடிவு பண்ணியாச்சி.”

“இதான் நீ ஊர் ஊராப் போயிப் படிச்சதா?”

“ஒனக்குப் புரியாது.”

“ஆமாம், எனக்கு எப்பிடிப் புரியும்? எயிதப் டிக்கத் தெரியாதவளுக்குக் கட்டுக்கட்டா கவி எயிதி அனுப்புன நீதான் பெரிய அறிவாளி” என்று சுமதி சொன்னதும் வெடுக்கென்று தலையைத் தூக்கி அவளை முறைத்துப் பார்த்தான். சட்டென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.

“இப்பிடி ஒவ்வொருத்தரா ஓடிப்போயிருந்தா, இப்ப ஊருன்னு ஒண்ணு இருக்குமா?”

“இதான் பொட்டச்சிங்கிறது. ஆம்பள என்னா சொல்றான்னுப் புரிஞ்சிக்காம.”

“இதுக்கு முன்னாடி ஒங்க ஊட்டுல சண்டயே நடந்ததில்லியா?”

“நேத்து நடந்தது வேற.”

“எது நடந்தாலும் வா ஊட்டுக்கு.”

“இனி நான் அந்த ஊட்டுல அடி வைக்கமாட்டேன்.”

“சண்ட பெரீசா பூடுச்சா?”

“ஒண்ணும் நடக்கல. நீ போ. யாரும் யாருக்காகவும் இல்லெ. ஒலகம் யாருக்காகவும் நிக்காது.”

“நிக்கும்ன்னு யாரு சொன்னா? சினிமாவுல ட்ராமாவுல மட்டும்தான் நெனக்கிறதெல்லாம் நடக்கும். பெத்தவங்கள உத்தவங்கள வுட்டுட்டுப் போயி அப்பிடி எந்த ராச்சியத்தப் புடிக்கப்போற?” என்று சுமதி சொன்னதும் வெடுக்கென்று அவளைத் திரும்பி எதிரியைப் பார்ப்பதுபோலப் பார்த்தான். பிறகு கெஞ்சுவது மாதிரி “கொஞ்சம் புரிஞ்சிக்க” என்று சொன்னான்.

“நீ என்னெ இந்தியிலியா சொல்ற, எனக்குப் புரியாம இருக்கிறதுக்கு.”

“ஐயோ, கடவுளே” என்று தலையில் அடித்துக்கொண்டான். கொஞ்சம் நேரம் பேசாமலிருந்துவிட்டு “எனக்கு ஐநூறு ரூவா பணம் கொண்டாந்து கொடு” என்று சொன்னான்.

“நீ எந்த ஊருக்கும் போவக் கூடாது.”

“பணம் தர்றியா, இல்லியா? அதெ மட்டும் சொல்லு.”

“பொட்டச்சிக்கு எங்கிருந்து அம்மாம் பணம் வரும்?”

“தோட்டெ வித்துக் கொடு.”

“ஊட்டுக்குத் தெரிஞ்சிப்போவுமே.”

“ஒனக்குத் தோடுதான் பெருசு இல்லெ.”

“ஒனக்கு மூள நேராவே வேல செய்யாதா?”

“சரி, நீ ஊட்டுக்கு போ. எனக்கு எல்லா வழியும் அடச்சிக் கெடக்கு.”

“ஒம் மூளதான் அப்பிடிக் கெடக்கு. ஊட்டுக்குத் தெரிஞ்சா என்னா ஆவறது?”

“ஒண்ணும் ஆவாது. நான் பாத்துக்கிறேன்.”

“என்னோட பொணத்தியா?” என்று சுமதி கேட்டதும் சந்திரனுக்குக் கோபம் சர்ரென்று ஏறியது. அவளைச் சலிப்புடன் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு தலையைத் தாழ்த்திக்கொண்டான்.

சந்திரன் பிடிகொடுத்துப் பேசாதது சுமதிக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. சூரியன் மறைந்து இருள் இறங்க ஆரம்பித்தது தெரிந்ததும் பதட்டமடைய ஆரம்பித்தாள். தன்னுடைய வீட்டு ஆட்கள் வீட்டுக்கு வந்திருப்பார்களே என்ற கவலை அவளை வாட்ட ஆரம்பித்தது. அந்தக் கவலை நேரமாக நேரமாக வளர்ந்துகொண்டேயிருந்தது. ஆட்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். சலிப்புடன் “நேரமாவறது தெரியலியா?” என்று கேட்டாள்.

“நான் வரல, நீ போ.”

“என்னா பேசுற நீ?”

“அந்த ஊட்டுல இனி நான் அடி வைக்க முடியாது.”

“அறியாப் புள்ளெ மாதிரி பேசிக்கிட்டுயிருக்கிறியே, இது நல்லதா? கொலயா பண்ணிப்புட்டெ?”

“கொல பண்ணல. எங்கப்பாவ, எங்கம்மா, தம்பிய, அவன் பொண்டாட்டிய எல்லாரயும் செருப்பால அடிச்சிப்புட்டன்.”

“ஐயோ கடவுளே” என்று பதறிப்போனாள். “நடக்காதது நடந்திருந்தாலும் பெத்தத் தாய் தவப்பன அடிக்கலாமா? செருப்பாலியா அடிச்ச?” என்று கேட்டாள். அவன் வாயைத் திறக்கவில்லை. திரும்பத்திரும்பக் கேட்டாள். அவளுடைய தொந்தரவு தாங்க முடியாமல் “அவுங்க எல்லாரும் சேந்துகிட்டு என்னா சொன்னாங்க தெரியுமா?” என்று கேட்டான்.

“ஆயிரமே நடந்திருந்தாலும் நீ செஞ்சது தப்பு. வேலக்கிப் போவல. கல்யாணம் கட்டலன்னுதான் சண்ட நடந்திருக்கும். அதுக்காகப் போயி இப்பிடிச் செய்யலாமா?”

“வேலக்கிப் போவல. இனிமே பணம் தர முடியாது. ஒருத்தனுக்கே எத்தன வருசம் செலவு செய்யுறது? படிப்புச் செலவுக்காக வித்த நெலத்தத் திருப்பித் தா. ஒனக்கு இனிமே பங்கு கெடயாது. படிக்க வச்சதுக்கே சரியாப்போச்சி. எங்கியாச்சும் ஓடிப் போயிப் பொயச்சிக்கன்னு சொல்லித் திட்டுனதுக்கெல்லாம் நான் கோபப்படல. டாஸ்மார்க் சாராயக் கடைக்கு ஆள் எடுக்கிறப்ப அந்த வேலக்கி போவ முடியாதின்னு சொன்னப்பக்கூடதான் சண்ட நடந்தது. அதுக்காக வருத்தப்பட்டனா?”

“செருப்பால அடிக்கிற அளவுக்கு அப்பிடி என்னாதான் சண்ட போட்டாங்க.?”

“பன்னித்தின்னவளோட சூத்த நக்கத்தான் ஊர வுட்டுப் போகாம இருக்கனாம்”என்று சொன்ன சந்திரன் பக்கத்திலிருந்த செடியின் இலையைப் பறித்து வேகமாக விட்டெறிந்தான். சுமதி சந்திரன் சொன்னதைக் கேட்டு விதிர்விதிர்த்துப்போனாள். அவளுக்குப் பேசவே வாய் வரவில்லை. அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. தான் செத்துவிடலாம் என்ற எண்ணம் அவளுக்கு சட்டென்று உண்டாயிற்று. அந்த எண்ணத்தைப் பற்றியே கொஞ்சம் நேரம் யோசித்தாள். பிறகு ஒரு நிதானத்திற்கு வந்தவள் மாதிரி அடங்கின குரலில் “என்னத்தான பேசுனாங்க. பேசுனாப்போறாங்க. அதுக்கு நீ ஏன் கோபப்பட்டெ.”

“அவுங்க என்னா பேசுனாங்கின்னு ஒனக்குத் தெரியாது.”

“சரி வா. ஊட்டுக்கு.”

“நான் வரல. இஷ்டப்பட்டா பணம் கொண்டாந்து கொடு. இல்லாட்டி போ.”

“அது என்னால முடியாது.”

“ஒனக்குத் தோடுதான் பெருசு இல்லெ?”

சுமதிக்கு எங்கிருந்து அவ்வளவு கோபமும் அழுகையும் பொங்கிக்கொண்டுவந்ததோ. ஆத்திரத்தில் “ச்சீ வாய மூடு. தோடு என்னா மசுரு தோடு” என்று சொல்லிக் கத்திவிட்டு வேகவேகமாக காதிலிருந்த இரண்டு தோடுகளையும், மூக்குத்தியையும் கழற்றி சந்திரனின் மடியில் போட்டாள். “நீ ஆம்பள நெனச்ச நேரத்துக்கு நெனச்ச எடத்துக்கு ஓடிப்போயிடுவ. நான் பொட்டச்சி, அப்பிடி செய்ய முடியுமா?” என்று கேட்டாள். வேகவேகமாக மேல்சட்டையின் இரண்டு பொத்தான்களை நீக்கிவிட்டு இடது பக்க மார்பகத்தின் மேல் ‘சந்திரன் சுமதி’ என்று பச்சை குத்தியிருந்ததைக் காட்டினாள்.

“இப்பிடி நெஞ்சிமேல பச்சகுத்திக்கிட்டு இன்னொருத்தன் ஊட்டுலப் போயி நான் வாயிக்க செய்ய முடியுமா? பொட்டச்சிக்கு மட்டும் மனசு இல்லியா? ஆச இல்லியா? ஏதோ எம் புத்தி பேதம் ஒம்பேர்ல ஆசப்பட்டுட்டன். கூடிப் பழவுன இத்தன வருசத்திலெ நீதான் என்னெ தொட்டிருப்பியா, இல்லெ நாந்தான் ஒன்னெத் தொட்டிருப்பனா? படுத்தாத்தான் ஒறவா? நீ படிச்சதிலெ அப்பிடித்தான் அச்சடிச்சி இருக்கா? கூடிப்பழவுலன்னாலும் அந்தியிலே சந்தியிலெ. அங்க இங்கின்னு மொவத்தயாவது பாத்துக்கிறமே, அதுவே போதுமின்னு இருந்தன். இப்ப அதிலயும் நெருப்பப் போட்டுட்டுப் போறங்கிற, போ” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்.

சந்திரன் எழுந்து நின்று பார்த்தான். சுமதி நடந்துபோன ஒற்றையடிப் பாதையில் இருள் கவிழ்ந்திருந்தது. வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங்கள் பூக்கத் தொடங்கியிருந்தது தெரிந்தது. அவனையும் அறியாமல் “கடவுளே” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *