நேர்க்கோடு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 5,817 
 

இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல்.

சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன், மிராசுவின் மனைவி செண்பகம்…. என்று குரல்கள் மாறி மாறி கேட்டது.

கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரத்தின் மகன் ராமு என் வீட்டிற்குள் நுழைந்தான்.

படித்துக்கொண்டிருந்த என்னிடம் வந்து , ” சார் ! அப்பா உங்களைக் கையோட கூட்டி வரச் சொன்னாங்க. ” நின்றான்.

அவருக்கு ஏதாவது சிக்கல், பிரச்சனை என்றால் என்னை உடனே அழைப்பார். எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். முடிந்த அளவிற்கு செய்வேன்.

இப்போது, ” வர்றேன்ப்பா ! ” சொல்லி எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு அவனுடன் புறப்பட்டேன்.

அவர் வீட்டு வாசலில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது.

ஆடு பயிரைத் தின்றதின் விளைவு….வேலை ஆள் சங்கன் ஓட்டி வந்து கட்டி இருக்கிறான். புரிந்தது.

படியேறினேன்.

” வாங்க சார் ! ” சோமசுந்தரம் வரவேற்றார்.

” என்ன விசயம் ..? ” எதிரில் அமர்ந்தேன்.

” வாசல்ல ஒரு ஆடு கட்டி இருக்கு பார்த்தீங்களா. .? ”

” பார்த்தேன். ”

” அது யார் ஆடு அடையாளம் தெரியுதா. .? ”

விழித்தேன்.

” பத்து நாளைக்கு முன்னாடி இந்த வீட்டிலேர்ந்து காணாமல் போனதில்லே. ! அது. .! ” நிறுத்தினார்.

புரிந்தது.

” எ . .. எப்படி இங்கே. .? ” இழுத்தேன்.

” திருட்டுப்பயல் ஒருத்தன் சாராயக்கடையில மலிவு விலையில் வித்திருக்கான். நம்ம ஆள் சங்கன் சத்தம் போடாம வாங்கி வந்து இங்கே கட்டி இருக்கான். ” விபரம் சொன்னார்.

‘ அப்படியா. .? ! ‘ என்பது போல் அவனைப் பார்த்தேன்.

அவன். ..

” ஆமாம் ஐயா ! அங்கே. .எதுடா. . இந்த ஆடுன்னேன். சொந்த ஆடுன்னான். நமக்குத்தான் ஐயா வீட்டோட ஆடு மாடெல்லாம் தெரியுமே. .! வாக்குவாதம் பண்ணினால் முழிச்சுப்பான்னு நெனைச்சு அவன் சொன்ன விலையைக் கொடுத்து வாங்கி வந்திருக்கேன். ஐயாவும் அம்மாவும் இந்த வீட்டு ஆடுதான்னு உறுதியா சொல்லிட்டாங்க. ” சொன்னான்.

” சரி. பிரச்சனை. .? ! ” விசயத்திற்கு வந்தேன்.

” திருடனைப் புடிச்சி போலீஸ்ல ஒபபடைக்கனும் . ” செண்பகம் சொன்னாள்.

” போய் புகார் கொடுத்தால் தானா வந்து அள்ளிட்டுப் போறாங்க. ” என்றேன்.

” இங்கேதான் சிக்கல். அவன், தன் ஆடுங்குறான். புகார் கொடுத்தாலும் அங்கேயும் இதையேதான் சொல்வான். வாக்குவாதம், வீண் சங்கடம். மொதல்ல இது நம்ம ஆடான்னு ஊர்ஜிதம் பண்ணிக்கிட்டோம்ன்னா திருடனை வகையாய் உள்ளே தள்ளிடலாம். ” என்றார் சோமசுந்தரம்.

” எப்படி நிரூபிக்கிறது. .? ”

” நம்மக்கிட்ட அச்சு அசலாய் இதோட தாய் இருக்கு. வித்தவன் வீட்ல இதோட தாயைப் பார்த்தோம்ன்னா வேலை முடிஞ்சுது. ”

” பத்து மாசத்துக் குட்டி. இதோட தாய் இருக்குன்னு அவன் சொல்றான். ” சங்கன் இடையில் சொன்னான்.

” இப்போ நான் என்ன செய்யனும். .? ”

” வித்தவன் வீட்ல போய் இதன் தாயைப் பார்த்து வரனும். ”

” நானா. .? ”

” ஆமா சார். எனக்கு கண்ணு கொஞ்சம் பழுது. ”

” அவன் வீடு. .? ” இழுத்தேன்.

” எனக்குத் தெரியும். பக்கத்து ஊர்தான். மைனாகுடி ! ” சங்கன் சொன்னான்.

” சரி. புறப்படலாம். ” எழுந்தேன்.

அங்கு. ..அவன் மனைவி நாகம்மாள் காட்டிய தாய்க்கும் குட்டிக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை.

” காலையில் இந்த ஆட்டை ஒட்டிக்கிட்டு சோமசுந்தரம் வீட்டுக்கு வா. ” சொல்லி திரும்பினோம்.

காலை ஆறு மணிக்கெல்லாம் நாகம்மாள் ஆட்டோடு சேர்த்து புருசனையும் தள்ளிக்கொண்டு வந்துவிட்டாள்.

சோமசுந்தரம் திருடனோடு சேர்த்து அவன் மனைவியையும் எகிறப் போகின்றார் என்று நினைக்கும்போதே.. எதிர்பாராதது நடந்தது.

அவர் அப்படி செய்யவில்லை.

” குட்டி உங்களுதுதான். ஒட்டிப்போங்க. ” சொன்னார்.

நாகம்மாள் அதை அவிழ்த்து செல்ல. . எனக்கு, சங்கன், அவர் மனைவி அத்தனைப் பேருக்கும் அதிர்ச்சி.

‘ பொருளுக்கு உடையவரே மனதார ஒட்டி விடும்போது யார் என்ன சொல்ல முடியும். .? ‘ அவர் மனைவியும் சங்கனும் அதிர்ச்சியில் உறைய. .எனக்குப் பொறுக்க வில்லை.

ஆடுகளுடன் அவர்கள் தலை மறைந்ததும். .

” என்ன சார் இப்படி செய்ஞ்சுட்டிங்க. .? ” ஆதங்கப்பட்டேன்.

” சொல்றேன். ராத்திரி திருடனைப் பத்தி ஒருத்தன் சொன்னான். அஞ்சாறு வருசமா சரியான மொடாக்குடியனாம். காரணம் ..? புள்ளை இல்லாத குறையாம். போதையோட விடாம பொண்டாட்டியையும் போட்டு அடி, உதை, மிதியாம். குடிக்க காசு கிடைக்கலைன்னா. .. வீட்ல பண்டம், பாத்திரம் சுருட்டலோட நிக்காம…. இப்படி ஆடு மாடுன்னு அங்கே இங்கே கைவைப்பானாம். மனைவி நாகம்மாள் சமாளிச்சு பொருள், ஆளை மீட்டு வருவாளாம். இவ்வளவுக்கும் விலக்காம, விலகாம அவள் குடித்தனம் பண்றதுக்கு ஒரே காரணம். .. புள்ளை சாக்கை வச்சி புருசன் அடுத்தவளைத் தொடாதது, வேறொரு திருமணம் செய்துக்காதது தானாம். தன் விருப்பமில்லாம தொட்டாலே கணவன் கற்பழிப்புன்னு மனைவி கோர்ட்டுக்குப் போய் விவாகரத்து வாங்குற இந்தக் காலத்துல தனக்கு குழந்தை இல்லே என்கிற சோகம் தாங்கி, இதே காரணமாய் குடியில விழுந்து….அநியாயம், அக்குறும்பு செய்யிற கணவனைப் பொறுத்து…. அவன் தன்னை இல்லாம வேறொருத்தியைத் தொடலை என்கிற நூலிழையைப் பிடிச்சு வாழறவள் சாதாரணப் பெண்ணில்லே. அவளுக்கு இந்த ஆட்டுக்குட்டி என்ன இன்னொரு குட்டியையும் பரிசா தரலாம்ன்னு முடிவு பண்ணினேன். அதனால்தான் எதுவும் பேசாம ஒட்டிப்போகச் சொன்னேன். ” சொன்னார்.

எனக்கு ஏற்பில்லை.

” உங்க முடிவு சரியா இருக்கலாம் சார். ஆனா. ..உங்க மன்னிப்பும், கொடுப்பும் அவுங்களைத் தப்பு செய்ய ஊக்கமளிக்காதா. .? ” கேட்டேன்.

” வாய்ப்பில்லே ! சொன்ன பையனிடம்…. என் மனசைச் சொல்லி, ஊர் பஞ்சாயத்துள் கண்டிக்கச் சொல்லி இருக்கேன். கெட்டவங்களைக் கெட்ட முகத்தோட அணுகாம அவுங்ககிட்ட உள்ள நல்லதை எடுத்துக்காட்டி திருத்துறதும் ஒரு வழி. நம்பிக்கைதான் வாழ்க்கை. ” முடித்தார்.

கேட்ட எனக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியாய் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *