நேரம் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 6,944 
 

‘மணி எட்டாகிறதே…எழுந்திருக்காம இன்னும் படுக்கையிலேயே…?’

“ம்..ம்..இன்னும் பத்து நிமிடம்…”

‘ஆறு மணிக்கே எழுந்திருக்க போவதாய் நேற்றிரவு சொன்னாயே…’

‘ஆமா, சொன்னேன்…அப்போ விழித்திருந்தேன்…’

‘இப்போ?’

“தூக்கத்தின் சுகம்…பத்து நிமிடம்தானே…”

‘நேரம் வீணாகவில்லையா?’

“கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு…”

‘வருந்தினா மட்டும் போதுமா? அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?’ எழுந்திரு…எழுந்திரு…’

எனக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியது யார் என்று படுக்கையிலிருந்தே பார்த்தேன்.

அறையில் என்னைத் தவிர வேறு யாருமில்லை…நிம்மதியாக தூங்கலாம் என்றால்…

யாருடைய குரல் என்னை எழுப்பியது?

ஒரு வழியாக எழுந்தாயிற்று.

கையில் சூடான காபியுடன் உட்கார்ந்தேன். மீண்டும் அதே குரல்…

‘நீ ஒரு கதை எழுதப் போவதாய் சொன்னாயே…?’

‘எப்போது சொன்னேன்?’

‘மறந்து விட்டாயா?’

“ஞாபகப் படுத்த நீ இருக்கும்போது மறக்க விடுவாயா?”

‘நீ சொன்னது இரண்டு மாசத்துக்கு முன்னால்’

‘ம்…ம்…இப்போ ஞாபகம் வருது…’

‘ஏன் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை?’

“உனக்கு தெரியாதா என்ன? எனக்கு நேரமே இல்லையே…”

‘எனக்கு புரியலே…’

நான் பெரிதாக சிரித்தேன். பிறகு, ‘உனக்கு புரியாததும் உண்டா?’

‘நீ முரண்பாடாக பேசுவது புரியலே’

“எதை முரண்பாடு என்கிறாய்? இதுதான் எனக்கு புரியலே…”

‘சில சமயம் நீ நிறைய நேரம் இருக்கே, பிறகு செய்கிறேன் என்கிறாய்… மற்ற சமயங்களில்

நேரமே இல்லைஎன்கிறாய்…இதுதான் முரண்பாடு…’

“உன்னிடம் வாதம் செய்து எனக்கு நேரம் இன்னும் வீணாகிறது”

ஒரு போய் சிரிப்பு சத்தம்… கேலியின் உச்ச சிரிப்பு… கேட்டது போலிருந்தது…என் குணத்தை சுட்டிக்காட்டுவது மட்டுமில்லை கேலி வேறா? நான் கதை எழுதினால் என்ன,

எழுதாவிட்டால் என்ன? எனக்குஅறிவுரையா? பொறுத்துக் கொள்ள முடியவில்லை…

‘கோபப்படுகிறாய்…’

“மறுபடியும் நீயா? என்னை சும்மா விடமாட்டியா?”

‘நீ எனக்கு சொந்தம்…மறந்துவிட்டாயா?’

“ஹா…ஹா…ஹா…”

‘என்னை அலட்சியப் படுத்தலாம்… ஆனால், நான் யாருக்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை…’

‘யார் நீ…?’ என் குரலில் அலட்சியம் நீங்கி, உடல் வியர்த்தது…

‘இன்னுமா புரியவில்லை? யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் இந்த உலகத்தை ஒரே திசையில் நடத்திப்போவது தான் என் வேலை… நான் உன்னை மதிக்கவே மாட்டேன்…ஆனால் நீ என்னை எப்போதும் மதித்துநடந்து கொள்ளவேண்டும் இப்போது புரிந்ததா நான் யார் என்று?’

‘ஆ…ஆ…அது நீயா? நீயேதானா?’

‘இனியாவது என்னை மதிக்கக் கற்றுக் கொள்… என்னைப் பற்றி ஒரு கதை எழுதப் போவதாய் சொன்னாயே…அதை எழுது…’

‘நேரம்’ என்ற தலைப்பில் கதையை எழுதி முடித்தேன்! நீங்கள் படித்திருக்கிறீர்களா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *