வீணில்லை அன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 8,725 
 

“இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!”

“அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?”

`உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் போய் சத்யாவைப் பார்க்கும்போது, தலையில் பட்ட பலத்த அடியில் அவனது குணாதிசயமே மாறிவிட்டிருந்தது தெரிந்தது. காரணமில்லாமல் சிரித்தான். சம்பந்தம் இல்லாது ஏதேதோ பேசினான்.

பரிதாபமாகத் தோற்றம் அளித்த அந்நிலையில் அவனுக்கு ஆதரவாக இருக்கத் தீர்மானித்தாள். சிறு குழந்தை மாதிரி, சாப்பிடுவதற்கு அவன் முரண்டு பிடித்ததோ, மாத்திரை கொடுக்க வந்தவளை பிடித்துத் தள்ளியதோ பெரிதாகப் படவில்லை அவளுக்கு.

`எப்படி இருந்தவர்!’ அழுகைதான் வந்தது.

“ஹலோ, கலா! குட் மார்னிங்! எப்படி இருக்கே இன்னிக்கு?” மேலதிகாரி என்ற படாடோபம் இல்லாது, சத்யா வலிய வந்து, மரியாதை தவறாது சிறுகச் சிறுகப் பேசியதால்தானே அவள் மனதளவில் அவனுடன் நெருங்கிப் போனாள்!

முதலில் எட்டடி தூரத்தில் நின்று உரையாடியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, இரண்டடி தொலைவில் நின்று, தாழ்ந்த குரலில் மனம்விட்டுப் பேசும் அளவுக்கு முன்னேற ஓராண்டு பிடித்தது.

அலுவலகப் பிரச்னைகள், சண்டை பூசல்கள், பிறகு டி,வி, பிடித்த இசையமைப்பாளர், பத்திரிகை என்று பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு, மெள்ள மெள்ள அவரவர் குடும்பப் பின்னணி என்று முன்னேறியது.

கலாவின் வாழ்வோடு பார்த்தபோது, தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பிரமிப்புதான் ஏற்பட்டது சத்யாவுக்கு.

`எங்கப்பா குடிப்பாரு!’ என்று ஒரு நாள் ஆரம்பித்தவளை அலட்சியமாக இடைமறித்தான் சத்யா. `இங்க எவன்தான் குடிக்கலே? உலகத்திலேயே பெரும்பாலான ஆண்கள் குடிக்கிறது மலேசியாவிலேதான்னு பேப்பரிலே போட்டிருந்தாங்களே!’

அப்பாதான் எப்படி அடிப்பார் அம்மாவையும், அவளையும்! அவர் வீட்டுக்குள்ளே நுழையும்போதே இருவரும் மேசை அடியில் ஒளிந்துகொண்டதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!

எலிகள் செத்துக் கிடந்த ஏதோ மட்டமான சரக்கைக் குடித்ததன் விளைவாக பார்வையிழந்து, இப்போது கையாலாகாதவராக இருந்தாலும், அப்பா உண்டாக்கிய பாதிப்பு என்னவோ நீங்கவே இல்லை.

இதையெல்லாம் சத்யாவிடம் சொல்லலாம் என்று தோன்றியது. சொன்னால், தன்னை மட்டமாக நினைக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.

தயங்கத் தயங்கி அவள் பேசியபோது, அக்கண்களையே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு, அவளுடைய நான்கு வாக்கியங்களுக்கு ஒரே வாக்கியம் குரல் அதிராமல் அவன் பேசியபோது, அதுவே அவளுடைய நொந்த மனத்துக்கு அருமருந்தாக அமைந்தது.

அவனுடன் பேசும் அந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கலா.

`தன்னை எப்படியாவது வளைத்துப் போடுவதற்காகத்தான் இப்படி, தன் நலனில் அக்கறை உள்ளவர்போல் நடிக்கிறாரோ!’ இரவின் தனிமையில் அவனைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டும், தனக்குத்தானே சிரித்துக் கொண்டும் இருக்கும்போது, இப்படி ஒரு சந்தேகம் தலைகாட்டும்.

`நாளையிலிருந்து வளவளவென்று பேசாது, ஒரு அளவோட பழகணும்!’ என்று முடிவெடுத்துக் கொள்வாள்.

ஆனால், மறுநாள் அவனுடைய கண்களை, அதில் காணப்பட்ட கபடின்மையை, அன்பை உணர்கையில், தன்மேலேயே எரிச்சல் வரும் — இப்படி ஒரு பண்பாளரைத் தவறான நோக்குடன் எடைபோட்டதற்கு. அவளையும் அறியாமல், அவர்களது உறவு பலப்படும்.

இரண்டு ஆண்டுகள் இவ்விதம் பழகிவிட்டு, `நம் இருவருக்கும்தான் ஒத்துப்போகிறதே! வாழ்நாளெல்லாம் இணைந்தால் என்ன?’ என்ற ஒரு கேள்வியைப் போட்டான் சத்யா. எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதிர்ச்சியாக இருந்தது கலாவிற்கு.

தன் தாயின் அலங்கோலமான வாழ்க்கையைக் கண்டு மனம் வெறுத்துப்போய், தானாவது சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே இரவு பகலாக உழைத்துப் படித்து, வேலையிலும் அமர்ந்தாள்!

அவளால் உடனே பதில் கூற முடியவில்லை. சத்யாவும் வற்புறுத்தவில்லை.

இரண்டு மாதங்களுக்குப்பின் மீண்டும் அவன் அதே கேள்வியைச் சற்றுக் கெஞ்சலாகக் கேட்டபோதும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. `கல்யாணம், குடும்பம்னாலே பயமா இருக்கு, சத்யா!’ என்று உண்மையை ஒத்துக்கொண்டாள்.

`நான் குடிக்கறதில்ல. ஆல்கொஹால் அலர்ஜி. கட்டினவளை அடிக்கவும் மாட்டேன்!’ என்று அவன் சிரித்தான்.

ஆனால் அவள் கண்களில் நம்பிக்கை காணப்படவில்லை. “நீங்க என்ன சொன்னாலும், பயமாத்தான் இருக்கு!” என்றாள்.

சற்று யோசித்து, `இப்படிச் செஞ்சா என்ன? ஒரு ஆறு மாசம் நாம்ப ரெண்டு பேரும் பேசிக்காம இருக்கலாம். அப்புறம் பார்ப்போம்!’ என்ற அவனுடைய திட்டத்தை கலா ஏற்றுக்கொண்டாள்.

சில நாட்களிலேயே அவன் குரல் எங்கே கேட்டாலும் மனம் துடிக்க, அவள் பக்கமே திரும்பாது அவன் அவளைக் கடந்து போகையில், இருவருமே தமது படபடப்பை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தபோது, முதலில் வேடிக்கையாக இருந்தாலும், நாளடைவில் ஏக்கமாக மாறியது.

இரண்டு மாதம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது அவளால்.

அந்தச் சமயத்தில் அவள் தந்தை இறக்க, அவள் குடும்பத்தில் ஒருவனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, எல்லா விஷயங்களிலும் அவளுக்குப் பக்கபலமாக இருந்தான் சத்யா. அதன்பின், தங்கள் போட்டியின் முடிவைப்பற்றி எந்த ஒரு சந்தேகமும் இருக்கவில்லை இருவருக்கும்.

கல்யாணத்துக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தாம் இருக்கையில், ஒரு புதிய குழப்பம்!

ஏன்தான் அப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததோ!

இரவு பத்து மணிக்கு, ஒரு டோல் அருகே சத்யா பல கார்களுக்குப் பின்னால் காத்திருந்தபோது, இரண்டு பேர் அவனை வெளியில் இழுத்துப் போட்டு, அவனுடைய கைகடிகாரம், பர்ஸ், காரின் முன்னிருக்கையில் இருந்த மடிக்கணினி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதோடு நில்லாது, தலையில் பலமாகத் தாக்க, மூர்ச்சையடைந்தவன் கோமாவில் கிடந்தான் மாதக்கணக்கில்.

ஒரு வழியாக, சத்யா மீண்டும் ஆபீசுக்கு வந்தபோது, அவனுடைய இடத்தில் சின் என்பவர் அமர்த்தப்பட்டு, அவனுக்குப் பெயரளவில் ஏதோ எளிதான வேலை கொடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தான்.

எல்லாரும் தன்னைக் கேலியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவனுக்கு.

`உனக்கு மூளை கெட்டுவிட்டது!’ என்று சொல்லாமல் சொல்கிறார்களா?

இதுவரைக்கும் குடும்பம், படிப்பு, காதல், எதிலும் ஒருவித குழப்பமும் இல்லாத வாழ்க்கை அமைந்ததெல்லாம் இப்படி ஒரு பேரிடியைத் தாங்க வேண்டும் என்பதற்காகத்தானா? மண்டைக்குள் எரிச்சல் உண்டாக, தலையே பிளந்துவிடுவதைப்போல ஒரு வலி.

அந்தச் சமயத்தில்தானா சின்னுடைய அறையிலிருந்து கலா வெளியே வரவேண்டும்!

தன் வேலையைப் பறித்ததும் இல்லாது, எதிர்கால வாழ்க்கையையே சூறையாடுவது என்று எல்லாரும் தீர்மானித்திருக்கிறார்களா?

இந்த உலகத்தின் மேலேயே பொதுவாக ஆத்திரம் வந்தது.

“ஏ கலா! `இவன் எப்படி தொலைவான்’னு காத்துக்கிட்டு இருந்திட்டு, என் தலை மறைஞ்சதும், இன்னொருத்தனை வளைச்சுப் போட்டுட்டியா?”

அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்த்திராத கலா விக்கித்துப்போய் நின்றாள். அவள் கையிலிருந்த ஆவணங்கள் சிதறின. அவைகளைத் திரட்டக்கூட தோன்றாமல், அசையாமல் நின்றாள்.

“மொதல்லேயே ஒனக்கு சிவப்பா, உயரமா இருக்கிற ஒருத்தனைக் கட்டிக்கணும்னு மனசுக்குள்ளே இருந்திருக்கு. அதனாலதானே என்னை அவ்வளவு தூரம் கெஞ்ச வெச்சே?”

அவனுடைய கத்தல் அருகேயிருந்த மலாய், சீனர்களுக்குப் புரியாவிடினும், `காதலர்களுக்குள் ஏதோ தகறாறு!’ என்று அனைவரும் ஓடிவர, அவமானத்தால் சிறுத்த முகத்துடன், “இவருக்கு இன்னும் உடம்பு தேறவில்லை,” என்று ஆங்கிலத்தில், குரலே எழும்பாது மன்னிப்புக் கேட்டவள், அங்கிருந்து விரைந்தாள்.

பகல் சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன்பாகவே எழுந்து, கலாவின் மேசைக்கருகில் தயங்கி நின்றான் சத்யா.

அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். வேலை ஓடவில்லை.

“சாப்பிடப் போகலாமா?” அவனது தாழ்ந்த, ஆழமான குரல் அவள் மனதைத் தொட்டது. அந்தக் கண்களில் தெரிந்த வேதனை அவளை என்னவோ செய்தது. தன்னையுமறியாமல் எழுந்தாள்.

வழக்கம்போல் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடுகையில், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனுடைய பார்வை அவ்வப்போது தன்மேல் நிலைத்ததை கலா உணர்ந்தாலும், அவளால் நிமிர முடியவில்லை. எந்த நிமிடமும் அழுதுவிடுவோமோ என்று பயமாக இருந்தது.

“கலா! என்னை விட்டுட்டுப் போயிட மாட்டியே?” கெஞ்சலாக ஒலித்த அவன் குரல் அவள் கண்களில் நீரை வரவழைத்தது.

எவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள்! உடல் நெருங்கினால்தானா உறவு? `பிணைப்பு’ என்பது மனதைப் பொறுத்துத்தானே இருக்கிறது!

எதுவும் சொல்லாமல் எழுந்துகொண்டாள். அவள் மனதில் ஓயாது எழும்பிய கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும்.

`கல்யாணமே வேண்டாம்!’ என்றிருந்தவள் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா?

இப்போது, தாயின் வாழ்க்கையைப்போல தன்னுடையதும் ஆகிவிடுமோ?

மூளை கலக்கம் அடைய எத்தனை வழிகள் இல்லை!

குடித்தால்தான் கத்துவார்களா, அடிப்பார்களா, என்ன!

இப்படியெல்லாம் அடுக்கடுக்காக யோசனைகள் வந்தபோதே, தன் சுயநலம் கலாவை வெட்க வைத்தது.

முன்பெல்லாம் சத்யா எத்தனை வகைகளில் தனக்கு ஆதரவாக இருந்தார்! எதை எதிர்பார்த்து அப்படி நடந்துகொண்டார்?

தான் அப்படி ஒன்றும் பிரமாதமான அழகி என்று அவள் நம்பத் தயாரில்லை. தானும்தான் அவரிடம் எதைப் பார்த்து மயங்கி, உறுதி குலைந்து, மணக்கச் சம்மதித்தோம்?

அவனுடைய அதிக உயரமில்லாத உருவமும், கறுப்பில் சேர்த்தியான நிறமும் அவளை எங்கே பாதித்தது! உள்ளத்தையே ஊடுருவது போன்ற அந்தக் கண்களின் கூர்மையும், அவள் சிறிது மன அயர்ச்சி கொண்டிருந்தாலும் அதைக் குறிப்பாலேயே உணர்ந்து, உடனே அவள் பக்கம் விரையும் அவனது ஆண்மைத்தனமும்தானே, இயற்கையாகவே இன்னொருவரைச் சார்ந்து நிற்கவைக்கும் அவளுடைய பெண்மையை விழிக்கச் செய்தது?

இது என்ன உணர்வு?

எந்தப் பெயராக இருந்தால் என்ன!

ஆனால், தங்கள் இருவரின் நிலையும் இப்போது தலைகீழாக மாறி இருப்பது என்னவோ விளங்கியது.

சத்யாவுக்கு இப்போது பக்கபலம் அவசியம். தலையில் அடிபட்டால், இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சில சமயம், பத்தாண்டுகள்கூட பொறுக்க முடியாமல் வலிக்குமாமே! பாவம்! அதை எப்படித் தாங்கப் போகிறார்?

ஜூர வேகத்தால் அழுது அமர்க்களம் செய்யும் குழந்தையை அதன் தாய் மடியில் கிடத்திக்கொண்டு, இரவெல்லாம் — தன் உறக்கம் கெடுவதை நினைத்தும் பாராது — அதற்கு ஆறுதலாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பதில்லையா?

குழந்தையாக இருந்தால் என்ன, கணவராக இருந்தால் என்ன! அன்பு செலுத்துவது என்று வந்துவிட்டால் அதில் யார், எவர் என்ற பேதம் ஏது!

சத்யாவால் பழையபடி வேலைப் பளுவுக்கோ, அன்றாட வாழ்க்கையின் அவசரத்துக்கோ ஈடு கொடுக்க முடியாதுபோக, அதனால் பிறந்த ஆத்திரமே சிறுமை உணர்ச்சியாக மாறியிருக்கிறது என்று கலா புரிந்துகொண்டாள்.

மூளையில் ஒரு பகுதியிலுள்ள அணுக்கள் அழிந்துவிட்டால், அவை திரும்ப தோன்ற முடியாது; ஆனால், வேறொரு பாகம் பழைய வேலைகளைச் செய்யப் பழகிவிடும் என்று அவள் படித்திருந்தாள்.

இந்த வேளையில் சத்யாவுக்கு முக்கியமாக வேண்டியது அவருடைய உள்ளக் குமுறலைப் புரிந்துகொண்டு, உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பொருட்படுத்தாது, தனது பலத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு துணை.

பிறருடைய நலனுக்காக நாம் செலவிடும் அன்போ, பணமோ, எதுவுமே வீணில்லை என்றுதான் கலாவுக்குத் தோன்றியது.

“ஏம்மா? என்னோட வெளிர் மஞ்சள் புடவையை கஞ்சி போட அனுப்பியிருந்தேனே! வந்திடுச்சா?” என்று உரக்கக் கேட்டவள், `சத்யாவுக்கு அதில என்னைப் பாத்தா, எப்பவுமே சந்தோஷமா இருக்கும்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

(மயில், 1992)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *