ஓலம்மா அலறல் அன்று வேறு மாதிரி ஒலித்தது. வழக்கமாக அது கழுத்தறுந்த ஆட்டின் கடைசி உயிர் வேட்கை போல உள்ளிருந்து வெளியே பிளிரி பின் அடங்கும். அம்மா அப்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் போட்டதைப் போட்டபடி குசினிக் கதவைப் பரபரப்புடன் திறப்பாள்.
குசினிக் கதவுக்கு மூன்று தாழ்ப்பாள்கள். அதை இணைப்பதற்கும் கழட்டுவதற்கும் விசேட உக்திகள் இருந்தன. தாழ்ப்பாளை போடும்போது கீழிறிருந்து தொடங்கி படிப்படியாக மேலேற வேண்டும். கழற்றும்போது நடுவில் தொடங்கி கீழே தொடர்ந்து முதல் தாழ்ப்பாளில் முடித்தால்தான் கதவு திறக்கும்.
அது கதவின் தவறு இல்லை.
குசினிக்கதவை பொறுத்தியபோது மொச்சை போதையில் இல்லை. அப்பா எவ்வளவோ அவரை வற்புறுத்தியும் “சனிக்கிழம சாராயம் குடிக்கிறதில்ல ஐயாவு” என அழுத்தமாக மறுத்துவிட்டார். விளைவு அவரைப் போலவே குசினிக் கதவும் கோணலாகிவிட்டதாக அப்பா ஊதியத்தில் பத்து வெள்ளியைப் பிடித்துக்கொண்டார். மொச்சை அதுக்கெல்லாம் அப்போது கவலைப்படவில்லை. திருநீரை தண்ணீரில் குழைத்து நெற்றியில் அப்பியிருப்பார் போல. பக்தி மாறாமல் எஞ்சிய தொகையை அப்பாவிடமிருந்து பெற்றுக்கொண்டு கண்ணில் ஒத்திக்கொண்டார். சனிக்கிழமை மட்டும்தான் அவர் சமத்து. ஞாயிறு வட்டியும் முதலுமாக படு சூரோடு மீண்டும் வீட்டின் முன் ஆஜராகி பத்து வெள்ளிக்கு அதிகமாகவே கொச்சை வார்த்தைகளை எங்கள் குடும்பத்துக்கே சொல்லிக்கொடுத்துவிட்டுப் போனார்.
***
ஓலம்மாவின் அலறல் இம்முறை தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு பின்னர் தம்பிடித்து வெளிவந்து மிஞ்சிய ஓலம் எங்கள் வீடு வரை தவழ்ந்து வந்து சேர்ந்தது. பின்வாயிலில் பொத்துக்கொண்டுவரும் அம்மாவைப் பார்த்ததும் சாக்கடையைத் தாண்டாமலேயே தலையை அடித்துக்கொண்டு புல்லில் அமர்ந்தாள். வழக்கமாகச் சாக்கடையைத் தாண்டுவதுதான் அவள் கொய்தியோ மணியத்திடம் தப்பிக்கும் ஒரே உபாயம். எங்கள் இரு வீட்டுக்குமான எல்லைச் சுவர் அது. வயது முதிர்ந்து, கண்பார்வை மங்கிய பின்பும் உயிர் பயத்தால் அவளால் விரைவாகவே மரப்பாலத்தைத் தாண்ட முடிவது ஆச்சரியமாக இருக்கும். எவ்வளவு போதையில் இருந்தாலும் கொய்த்தியோ மணியம் அந்தச் சாக்கடையைத் தாண்டி வந்து ஓலம்மாவை அடிப்பதில்லை. ராஜநாகங்கள் தங்கள் இணைக்காக எவ்வளவு மூர்க்கமாகச் சண்டையிட்டாலும் மூன்று அடிக்குமேல் தலையைத் தூக்குவதில்லை என்ற நிபந்தனையை வைத்திருப்பது போலதான் அவரும். கொய்த்தியோ மணியமும் ராஜநாகம் போலதான்.
கள்ளுக்கடை தைக்கோவாகத்தான் கொய்த்தியோ மணியம் பொது வாழ்க்கைக்கு அறிமுகமானார். முழு பியர் போத்தல் ஒரு ரிங்கிட்டுக்கும் முக்கால் போத்தல் 75 காசுக்கும் விற்கப்பட்ட சூழலில் கொய்தியோ மணியம் போன்ற தினக்கூலிகளுக்கு ஒரு குவளை 35 காசுக்கு விற்கப்பட்ட கள்ளே சாத்தியப்பட்டது. சாராயம் அவருக்குச் சரிபடாது. உடலை குழைக்கும் எதிலும் அவருக்கு அப்போது ஆர்வமில்லை. யூ.பி. தோட்டத்தில் அன்றைய ஆனந்தகிருஷ்ணனாக அறியப்பட்ட ஆறுமுகம் பிள்ளையை எதிர்த்ததால் அவர் நாடு கடத்தப்பட்டவர் என்று கம்பத்தில் பொதுவாக ஒரு பேச்சு உண்டு. ஒரே மாநிலத்தில் இருந்த இன்னொரு தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு ‘நாடு கடத்தப்பட்டவர்’ என்ற பதம் முதலில் குழப்படியாக இருந்தாலும் கொய்தியோ மணியத்தைப் பற்றிப் பேசும் போது அவர் மேல் ஓர் இனம் புரியாத அச்சத்தை உண்டு பண்ண அந்தக் குறிப்பு துணையாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டார்கள்.
கொய்த்தியோ மணியம் எவ்வளவு கள் குடித்தாலும் 35 காசுதான் விலை. யார் என்ன இறைச்சிக்கு ஆர்டர் கொடுத்தாலும் அதில் ஒரு பிளேட் கொய்த்தியோ மணியத்தின் மேசைக்கு வந்து விடும். கள்ளுக்கடைக்கு வருபவர்கள் தொலைவிலேயே கொய்த்தியோ மணியம் இருக்கிறாரா எனப் பார்த்துவிட்டே நுழைவர். பலவீனமானவர்களுக்கு அவர் இருப்பு பாதுகாப்பு. சில்லரை ரௌடிகள் சூராகும் முன்பு வாலைச் சுருட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என மன ஆழத்தில் மனனம் செய்துகொள்வர் அல்லது அவர்களின் வீரிடும் ஆற்றல் கொப்பளிக்கும் முன்பே அவ்விடத்தை விட்டு அகன்று விடுவார்கள். ஆறடிக்குக் குறையாத உயரம், அகன்ற மார்பு, உரமேறிய கரங்கள் என உடல் முழுவதும் திமிரைப் பொருத்தியிருக்கும் கொய்த்தியோ மணியத்திடம் மல்லுக்கட்ட செட்டிக்கம்பத்தில் ஒருவரும் இல்லை. சட்டென மேலேறி துரிதமாக இணையும் புருவங்களும் காலில் தொடங்கி தலை வரை சுருண்டிருக்கும் மயிரும், வயிற்றுப்பகுதியின் கட்டான மடிப்பும் சமாதானப் பேச்சுக்குக் கூட அச்சமூட்டுபவை. கள்ளுக்கடைக்குக் கொய்த்தியோ மணியம் அதிகமே தேவைப்பட்டார்.
கடைகளுக்கு அரிசி மூட்டையை இறக்குவதுதான் மணியத்தின் வேலை. அப்போதெல்லாம் ஒரு மூட்டை நூறு கிலோ. வழக்கமாக ஒரு மூட்டையத் தூக்க இரண்டு பேராவது மெனக்கெடுவர். ஆனால் அவர் ஒற்றை ஆளாக மூட்டையைப் பரபரவென இறக்கி விடுவார். சம்பளம் போக சீன தௌக்கே பக்கத்துக் கடையில் மணியத்துக்குக் கொய்த்தியோ வாங்கி கொடுப்பான். அப்போதெல்லாம் கொய்த்தியோ கோரிங் விரிந்த பரப்பளவைக் கொண்ட ஒரு காட்டு இலையில்தான் பரிமாறப்படும். மணியத்துக்காகப் பிரட்டப்படும் கொய்த்தியோவில் கூடுதலாக பன்றிக் கறியும் காரமும் சேர்க்கப்பட்டு சட்டியில் கதறும். சீனர்கள் பொதுவாகவே காரம் விரும்பாதவர்கள். கொய்த்தியோ மணியம் ‘லாகி தம்பா’ என மிளகாய் சாந்தை அதிகரிக்கச் சொல்லும் போது, பிரட்டுபவன் உட்பட அமர்ந்திருக்கும் சீனர்களுக்கும் குதம் எரியும். எத்தனை பிளேட் சாப்பிட்டாலும் தௌக்கே பணம் செலுத்தி விடுவான் என்பதால் பல ரவுண்டுகள் ஓடும் கொய்த்தியோ கோரிங். இதனால்தான் அவருக்குக் ‘கொய்த்தியோ’ என்ற அடைமொழி வந்ததாக லுனாஸ் வரலாற்று ஆசிரியர்கள் சாராயம் குடித்தபின் பேசிக்கொள்வதுண்டு.
கொய்த்தியோ மணியத்துக்கு நண்பர்கள் இல்லை. சிஷ்யப்பிள்ளைகள் மட்டும்தான். எப்போதாவது மணியம் அவர்களுக்கு சிலம்பம் சுற்றச் சொல்லிக் கொடுப்பார். சொல்லிக் கொடுப்பார் என்பதைவிட சுற்றி சிஷ்யப்பிள்ளைகளை அமர வைத்து அனல் பரக்க ஒரு தரம் கழியைச் சுழற்றிக் காட்டுவார். குறிபார்த்து லஸ்டிக்கில் குருவி அடிக்கத்தெரியாத சிஷ்யப்பிள்ளைகள் “துப்பாக்கி தோட்டாகூட மணியத்தோட கம்ப தாண்டி போகாது டோ” என கூச்சலிடுவார்கள். உண்மையில் மணியத்தின் கழி வேகம் அசாத்தியமானதுதான். அதை கவனமாகப் பார்த்திருந்து சிஷ்யர்கள் சுழற்ற வேண்டும். விளையாட்டாகச் சுழற்றத் தொடங்கி சிஷ்யப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். மணல் பரக்க, சிலம்பக் கம்பின் வீச்சு ‘சொய்ங் சொய்ங்’ என உக்கிர ஓசையில் கண்ணில் அகப்படாமல் சுழல , மோதிக்கொள்ளும் கழிகளின் ஓசை பற்களை நடுங்க வைக்கும். அப்படி கழியுடன் கழி மோதும் சத்தம் இல்லாமல் வேறு விதமான ஓசை எழுந்தால் மோதியவர்களில் ஒருவனின் உடலில் ஏதோ ஒரு இடம் செத்துவிட்டதென பொருள். மணியத்துக்கு அதுதான் பொழுதுபோக்கு. கைதட்டி ஆரவாரமாகச் சிரிப்பார். ஆனால் உண்மையான சண்டையென வந்துவிட்டால் அவருக்கு ஆயுதமெல்லாம் தேவைப்பட்டதே இல்லை.
கூர்மையான ஆயுதங்களைக் கூட வெறுங்கையில் தடுக்கும் லாவகம் தெரிந்தவர் கொய்த்தியோ மணியம். இரு கருவிழிகளும் தன்னை நோக்கி வரும் எந்த ஆயுதத்தையும் கனநேரத்தில் அளந்து அதன் போக்கை அறிந்து விலகவும் தடுக்கவும் திருப்பவும் கரங்களுக்குக் கட்டளையிடும் கூர்மைகொண்டிருந்தன. கை மூட்டுகள் ஒவ்வொன்றும் ஆட்டுக்கொம்புகள் போல நீண்டு மிரட்டும் மணியத்துக்கு. கம்பத்தில் சகஜமாக உலவும் நாகங்களின் நஞ்சு அவர் உடலில் பரவாமல் இருக்கவும் உடலில் தினவு நிரந்தரமாக தங்கியிருக்கவும் ஏதோ ஒருவகை இரகசிய மூலிகையைக் காட்டில் பரித்து உண்கிறார் என அவரது சிஷ்யப்பிள்ளைகள் கூறுவதுண்டு.
அவர் போட்ட சண்டைகளில் மிகப் பிரபலமானது சூத்து சண்டை. செண்ட்டு போர்ட்டை ஓட்டி வந்த இளைஞன், கோயில் உபயத்துக்காக வந்து இருட்டுவதற்குள் ஊர் சேர குறுக்குப் பாதையில் தணித்து நடந்த வெளியூர் இளம் பெண்ணின் பிட்டத்தைத் தட்டப்போக அவள் ஊரைக்கூட்டிக் கத்தத் தொடங்கினாள். செண்ட்டு போர்ட்டுக்காரன் முதலில் வண்டியில் குப்பையை ஏற்றாமல் ஊரைவிட்டு ஓடிவிடலாம் என்றுதான் நினைத்தான். ஆனால், உடல் முழுதும் பருவம் பூத்திருந்த ஒருத்தி இவ்வளவு கத்தியும் யாரும் அப்பக்கம் வராத நிசப்த சூழல் மேலும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். கூட வந்த இரண்டும் கெட்டான் வயது சிறுவனின் துணையுடன் அவளை வண்டியில் ஏற்றி குப்பை மீது கிடைத்தினான். சிறுவன் ‘வேணாமண்ணா வேணாமண்ணா ‘ எனச் சொல்லிக்கொண்டே காட்சியை ஆர்வமாக பார்த்ததோடு குப்பைக்குள் கிடந்த கயிற்றை எடுத்து அவள் காலைக் கட்ட முனைந்தான். “அஞ்சடிக்கார நாய… இதுக்கு கால கட்டினா வேலையாவுமா மசிரே… வாய கட்டுடா” என இளைஞன் கத்தவும் கயிறு இடம் மாறியது.
ஒரு முரட்டு ஆடு குப்பை லாரியில் திணறுவதைப் போல லாரி குலுங்கவே அவ்வழியாக வந்த கொய்த்தியோ மணியத்துக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். அவர் உயரத்துக்கு லாரியை எக்கிப் பார்க்கவெல்லாம் சிரமப்பட வேண்டியதாய் இல்லை. ‘சத்தேரிக்க…’ என அவர் உள்ளே எகிரி குதிக்க, குறியில் ரத்தம் ஒழுக ஓடிய செண்ட்டு போர்ட்டுக்காரன் உதவிக்கு வந்த யாரிடமும் உண்மையைச் சொல்லாமல் கதறியழுததாக மட்டுமே பின்னாளில் செய்தி கிடைத்தது. காரியமாய் குறியை பிடித்துக்கொண்டு நின்ற சிறுவன் , இச்சம்வத்துக்குப் பின் சுருங்கிப்போக லபக்கென அதை கால்சட்டையினுள் விட்ட பின்பும் கொய்தியோ மணியத்தின் முழு அறையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. “ஆத்தா…” என அலறியபடி லாரிக்கு வெளியே விழுந்தான். கலைந்திருந்த உடையோடு அந்த இளம்பெண் கையெடுத்து நன்றியோடு கூம்பிட, கொய்தியோ மணியம் அவள் இரு கரங்களையும் தன் ஒரு கையால் அடக்கி அவள் மேல் படர்ந்தார். வெளியிலிருந்து அரைமயக்கத்தில் பார்த்த சிறுவனுக்கு ஒரு மத யானை குப்பை லாரியில் திணறுவதைப் போல இருந்தது.
ஊர் பஞ்சாயத்தின் முடிவுபடி அப்பெண்ணை திருமணம் செய்ய கொய்த்தியோ மணியத்துக்குத் தடையொன்றும் இருக்கவில்லை. “மேரா எஸ்டேட்டுல அவய்ங்க என்னா அளுங்கன்னு தெரியுமா மணியம்? ” என மட்டும் பஞ்சாயத்தில் ஒரு தரம் எச்சரிக்கை குரல் எழுந்தது. பெண்கள் விசயத்தில் கொய்த்தியோ மணியத்துக்கு சாதியெல்லாம் ஒரு இடையூரே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கொய்த்தியோ மணியத்துக்கு அப்போது பெண்ணின் வாசனை அவசியமாய் இருந்தது. அவரது இரவுகளைக் கொடூரமாய் விரித்துக்காட்டும் வயது அப்போது. “கோழி பழசா இருந்தா என்ன… பறையா இருந்தா என்னா அப்பு… கொழம்பு ருசிக்குதே”. பெண் வீட்டார் முதலில் மறுத்தனர். ஆனால் அவர்களால் அதற்குப் பின் தங்கள் தோட்டத்தில் நுழைய முடியவில்லை. வெறுத்த வாழ்வோடு அத்தோட்டத்தில் காலடி வைத்ததும் முனியாண்டி கோயில் பூசாரிதான் உடலை முறுக்கி முதலில் அலரத்தொடங்கினார். மண்ணை அள்ளி அவர்களை நோக்கி வீசி அடித்தார். நாக்கை வெளியே தொங்கப்போட்டவாரே புரியாத சப்தங்களை எழுப்பி முறைத்தார். முனியாண்டி சாமியின் மொழியைப் புரிந்துகொண்ட ஊர் பெருசு, கன்னி கழிஞ்ச பெண் அதை கழிச்சவனோடுதான் வாழவேண்டும் எனவும் அப்படி இல்லாத பட்சத்தில் தோட்டத்துக்கே பெஞ்சாதியாக வாழலாம் எனவும் குறியைச் சொறிந்தபடி கூறினார். சூழ்ந்திருந்த ஒத்துஊதிகளும் ‘ஆமாமா’ என அவளின் சதைப்பற்றை வெறித்தபடி கூவினர். சாவு செய்தி சொல்பவனின் மகளுக்கு அதுவே அவர்கள் காட்டும் அதிகபட்ச கருணையாக இருந்தது. பெற்றவர்கள் கொய்த்தியோ மணியத்திடமே அவளை தலைமுழுகினர். மணியத்தின் பிடியில் அகப்படாமல் மண்வாரி இறைத்தப்பின்தான் ஊர் திரும்பினர்.
ஆனால், அவளை கல்யாணம் செய்ய இருந்த ஒடிசலான தாய்மாமன் நியாயம் கேட்க, கம்போங் செட்டிக்கு வந்ததும்தான் சிக்கல் சண்டையில் முடிந்தது. வந்தவன் சதையில்லாதவன். பேச்சு பேச்சாக இருக்கும்போதே கொய்தியோ மணியம்தான் முதலில் அவன் சட்டையை கிழித்தெரிந்து தோலைப் புடைத்துக்கொண்டு தெரிந்த எலும்புக்கூட்டை பார்த்துச் சிரித்து “பள்ளிக்கூட புள்ளைங்க கணக்கு பண்ணலாம்டெ” என அவமானப்படுத்தினார். முன்மண்டை மூக்கைத் தாண்டி இருந்ததாம் தாய்மாமனுக்கு. முதலில் சாதாரணமாக இருந்த அவரின் ஒற்றைநாடி உடம்பில் உஷ்ணம் ஏறியவுடன் திடீரென ஒரு மாற்றத்தை ஊரார் பார்த்துள்ளனர். “நல்ல கூரான கத்திய எடுத்து முதுவு பக்கம் சொறுகிவிட்டு அதோட முனை நெஞ்சை துருத்தியமாதிரி மாரோட தோலை தள்ளிக்கிட்டு கூரா நிக்கிதோன்னு இருந்துச்சி, அந்த ஆளோட சட்டை கிழிஞ்சி போயி கொய்தியோ மணியத்தை எதுத்து நின்னப்ப. அத்தன அடி வாங்கியும் எதுத்து நிக்கிறான். அவன் நெஞ்சுக்கூட்டை ஊரே பார்க்குது. எங்கேருந்துடா இவனுக்கு புதுசா ஒரு எலும்பு பொத்துக்குட்டு வந்துருக்குன்னு முழிக்கிறாங்க. கோவத்துல மணியம் எதையும் எங்கனயும் சொருவிட்டாரோன்னு கூட பேசிக்கிட்டாய்ங்க… ஏதோ காண்டா மிருகத்தோட கொம்பாட்டம் நெஞ்சிக்கு நடுவுல நீட்டிக்கிட்டு நிக்குது ஒத்த எலும்பு… அதெல்லாம் பொறப்பு” அம்மா சின்னப்பிள்ளையில் பார்த்த சண்டையின் மனப்பதிவை முன்பு ஒருதரம் சொல்லியிருக்கிறாள்.
என்ன எலும்பு துருத்தி நின்றாலும் கொய்தியோ மணியத்திடம் பலிக்குமா? “என்னடா கீழ நீட்ட வேண்டியத நெஞ்சில நீட்டிக்கிட்டு” என நடுநெஞ்சில் மிதிக்க மூச்சடைத்து சரிந்தவனை உள்ளூர்வாசிகளே காப்பாற்றினர். நீட்டியிருந்த கத்தி எலும்பு கொய்த்தியோ மணியத்தின் விரலை தீண்டியிருக்க வேண்டும். கொஞ்ச நேரம் மணியம் காலைப் பிடித்து அமர்ந்தார். பின்னர் விரலை பரக் பரக்கென மண்ணின் தேய்த்து நொண்டுவதை மறைக்க சிரமப்பட்டு நடந்தார். அதற்குப்பின் தாய்மாமன் அவ்வூர் பக்கம் வரவே இல்லை. அவமானம் கப்பிய முகத்துடன் அவள்தான் கம்பத்தில் நுழைந்தாள். நிதானமான ஆனால் அழுத்தமான நடை. வெற்றுக்காலில் பூமி அதிர அவள் வைத்த அடியில் விழுந்த நிலத்தின் வடு இறுக்கமும் திடமும் நிரம்பியுள்ளதாக மாரியம்மன் கோயில் பூசாரி அன்று இரவு போதையில் உளறினான். “வந்தது யாருண்ணு நெனச்சிகினீங்க… ஆத்தா டே… அருள் வந்த ஆத்தா பூமியில வைக்கிற அடிடே அது”. பிட்டத்தில் அடித்ததிலிருந்து உருவாகிய சண்டையில் மணியத்துக்குத் திருமணம் நடந்ததால் ‘சூத்து சண்டையை’ ஊரில் யாரும் மறக்கவில்லை. அந்தச் சின்னஞ்சிறிய வீட்டுக்குள் ஓர் இளம்பெண் துணி மூட்டையுடன் நுழைந்த தினமே கொய்த்தியோ மணியத்துக்கு திருமண நாள் ஆனது. ஆனாலும் குழந்தை பிறப்பேனா என ஐந்து வருடங்களாகியும் அடம் பிடித்தது.
வந்த சில நாள்களிலேயே ஓலம்மா சில அன்னாசி செடியை நட்டுவைத்தது கம்பத்துக்குப் புதிது. பெரும்பாலோர் அதுவரை அன்னாசி செடியைப் பார்த்ததே இல்லாததால் தொட்டுப்பார்க்கிறேன் என ரம்பம் போன்ற அதன் இலைகளில் காயப்பட்டுக்கொண்டனர். ஓலம்மாவை அன்னாசி விரும்பியாகவே கம்பத்தில் பலர் குறிப்பறிந்து வைத்திருந்தனர். அவளும் வீட்டைச்சுற்றிலும் அதன் இனத்தைப் பெருக்கினாள். அனேக நேரங்களில் அவளது நேரம் அன்னாசிச்செடிகளுடன்தான் கழிந்தது. ஆனால், அதில் கிரீடம் வைத்த அரசன்போல மஞ்சள் ஒளிவீசும் அன்னாசி பழத்தைக் கம்பத்தில் யாரும் கண்டதில்லை. “என்ன அங்கலாப்பு புள்ள… நீ வாயில வைக்கிறதுக்குள்ள நாங்க நாக்க வச்சிருவோமாக்கும்…” என கனியும் முன்பே காயைத் திண்ணும் அவளை சிலர் இடிப்பதுண்டு. செடியைப் பார்க்க அவர்களுக்கு அனுமதி உண்டே தவிர காயைப் பழமாக்குவது பற்றி யாராவது கேட்டுவிட்டால் கேட்டவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை முறைப்பாள். ஓலம்மாவின் சில செயல்களைப் புரிந்துகொள்ள முடியாமல்தான் கம்பத்துவாசிகளுக்கு இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஓலம்மா தூமை துடைத்த கைலியை வீட்டு வாசலில் காயப்போடுவதை கம்பமே அருவருப்பாகப் பேசினாலும் மணியம் வீட்டு விவகாரத்தில் தலையிட யாருக்கும் துணிவில்லை. மணியம் வீட்டைக் கடப்போரெல்லாம் சற்று சங்கடமாகவே பார்வையைத் திருப்பிக்கொள்ள ஒரு எதிர்க்கட்சி கொடியின் கம்பீரத்துடன் காற்றில் படபடக்கும் தூமைத் துணி.
மற்ற சங்கதி என்றால் மணியம் கொஞ்சம் காரசாரமாகவே அணுகுவார். குழந்தை விசயம் அவர் நினைப்பது போல இல்லை. பெருசுகள் ஆலோசனை பேரில் டவுனில் டாக்டரைப் பார்த்துவர மூட்டை முடிச்சோடும் மனைவியோடும் கிழம்பியவர் இரண்டு நாள்களுக்குப் பின் தனியே திரும்பினார். குறைத்துபேசும் மணியம் மௌன சாமியாரானது அனேகமாக அதற்குப் பிறகுதான். ஒரு மாதம் கழிய சில தினங்கள் இருக்கையில்தான் அவள் இரவோடு இரவாக வந்து சேர்ந்தாள். மணியம் எதுகுறித்தும் வாய் திறக்காதது கம்பத்துக்கே ஆச்சரியமாக இருந்தது. கேட்பவர்களிடம் அப்படியே குலதெய்வ வழிபாட்டுக்குப் போனதாக அவள் சொல்லி வைத்தாள். திரும்பி வந்த இரு மாதங்களில் அவள் கர்ப்பமானாள். தாய்வீடு செல்லாமல் கம்பத்தில்தான் குழந்தை பெற்றுக்கொண்டாள். முதல் குழந்தைக்கு ஓலை எனப் பெயரிட்டாள். மணியம் பெயர் சொல்லி அழைக்காமல் ஊரும் அவளை கொய்த்தியோ பெஞ்சாதி என அழைத்து வந்தச் சூழலில் ஓலை பிறந்ததும் ஓலையின் அம்மா என்பது ஓலம்மா என அவளுக்குப் பெயராக மாறியது. ஓலை பிறந்ததிலிருந்து அவள் முற்றிலும் மாறியிருந்தாள். நடந்த மண்ணில் தடங்கள் இல்லை. தூமை கைலிகள் தொங்கவில்லை.
மணியத்திடமும் நிறைய மாற்றங்கள் இருந்தன. ஓலம்மாவை அடிக்கத் தொடங்கியதெல்லாம் அதற்குப் பின்தான். “புள்ள பொறந்தோனே ஆம்பளய விட்டு வெலவ சொல்லும் ஒடம்பு… கொஞ்சம் அணுசரிக்கோ… அடியெல்லாம் அதுவாயிடுமுல்ல” என அவளுக்கு மாத்ருபூதிகள் ஆலோசனை சொல்லாத நாளில்லை. இள வயதில் ஓலம்மா எவ்வளவு அடியையும் தாங்குவாளாம். ரத்தம் ஒழுகினாலும் சத்தம் வருவதில்லை. மூப்பு அவளை சோர்வடைய வைத்திருந்தது. அவள் ஆதரவு தேடி ஓடுவதெல்லாம் மூப்பின் தளர்வில்தான்.
***
ஓலம்மாவின் அலறலை அம்மா சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறாள். நான் பிறந்த பின்பு ஏதாவது குறும்பு செய்தால் கொய்த்தியோ மணியத்திடம் பிடித்துக்கொடுத்து விடுவதாகவே பயமுறுத்துவார். பள்ளிக்குச் செல்ல நான் அவர் வீட்டைக் கடந்தாக வேண்டும். வீட்டினுள் எப்போதும் இருண்டிருக்கும். மணியமோ ஓலம்மாவோ அதனுள் இருந்து நான் பார்த்ததில்லை. அனேகமாக அவர்கள் அதை படுக்க மட்டும்தான் பயன்படுத்துவார்கள் போல. வெளி வரண்டாவில்தான் மணியம் அமர்ந்திருப்பார். ஒரு பெரிய பிடி குவளை அருகிலேயே இருக்கும். அதில் எப்போதும் ஏதாவது ஒன்றை ஊற்றி பருகிக்கொண்டே இருப்பார். அவர் உறுமும் தோரணையைப் பொருத்து அது என்னவாக இருக்கலாம் என ஊகித்துவிடலாம். கள் குடித்திருத்திருந்தால் நா பிரளாது. சாராயம் என்றால் உறுமல் அதிகமாக இருக்கும். அந்தச்சின்ன சத்தத்தைக் கொண்டு கொய்த்தியோ மணியத்தின் மொத்தக் குரலையும் கற்பனை செய்துக்கொள்வேன். புலியில் உறுமல் அது. அப்படியானால் அன்று ஓலம்மாவுக்கு கச்சேரி இருக்கிறது என்று அர்த்தம். தொடக்கத்தில் சாராயம் குடிக்காமல் இருந்த அவர் பியர் மற்றும் கள்ளின் விலை கிடுகிடுவென உயர, இதையே மாற்று வழியாகத் தேடிக்கொண்டார் என சிலர் சொன்னாலும், 35 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கும் போதையினால்தான் மணியம் மலிவான சாராயத்தை நாடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின. முதுமைக்குப் பின் அரிசி மூட்டை தூக்கும் வேலை தடைப்பட அவ்வப்போது வேட்டையில் கிட்டும் சம்பாத்தியமே இரு வயிற்றுக்கு தீவனம் கொடுத்தது.
ஒரே புத்திரன் ஓலையால் அக்குடும்பத்துக்குச் சம்பாத்தியம் ஒன்றும் இல்லாத நிலையில் ஓலையை ஊரில் உள்ளவர்கள் பரிதாபத்துடன் பார்ப்பார்கள். எந்த நேரமும் சாராயத்தில் மிதப்பான். ஒட்டினால்போல உடல். எப்போதும் பேச்சில் தெளிவிருக்காது. தாயின் வழிக்காட்டலில் லுனாஸில் சாவு செய்தி சொல்வதை தனது தொழிலாக அவரே ஏற்றுக்கொண்டான். ஒவ்வொரு முறையும் சாவு செய்தி சொல்லும் வீடுகளிலும் சாவு விழுந்த வீட்டிலுமாகச் சேர்த்து எப்படியும் பத்து ரிங்கிட்டுக்கு மேல் கிடைக்கும். இன்னும் சில எடுபிடி வேலைகள் செய்தால் மாதம் முழுக்க சாராயம் குடிக்க தட்டுப்படாத பணம் உண்டு. ஆனால் கொய்த்தியோ மணியத்தின் உடல் உரம் ஓலையிடம் இல்லை.
ஒரு வீட்டில் சாவு சேதி சொல்லியப்பின் ஒப்புக்கொண்ட கூலி தராததால் இறந்தவரின் பழைய ஹெர்குளஸ் சைக்கிளை எப்போது ஓலை எடுத்தாரோ அப்போதிருந்தே அதுதான் அவர் வாகனமாகிவிட்டது. பொதுவாக ஓலைக்கு எல்லாமே இலவசமாகவே கிடைத்துவிடும். சைக்கிளை பஞ்சர் பார்க்கும் கட்டையன், டீக்கடை பிளாக்காயன், கள்ளுக்கடை வீரன் என எல்லாருமே தங்களுக்கும் சாவு வரும் என்றும், அதை சொந்த பந்தங்களுக்குச் சொல்ல ஓலை தேவை எனவும் உணர்ந்திருந்தனர். ஒருவேளை ஓலையைப் பகைத்துக்கொண்டால் தங்கள் மரணச் செய்தியை அவன் எவ்வளவு அலட்சியமாகச் சொல்லி செல்வான் என நினைக்கும் போது வயிறு கலக்கும். தங்கள் சாவை ஒரு கொண்டாட்ட மன நிலையில் ஓலை சொல்லாமல் இருக்கவாவது அவரை அணுசரித்துப்போக வேண்டியிருந்தது.
மதியம்தான் கொய்த்தியோ மணியத்தின் உற்சாகமான பொழுது. துடிப்புடன் வேட்டைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பார். இரண்டு வேட்டை நாய்கள், ஒரு கத்தி, லாஸ்டிக் இவைதான் வேட்டைக்கான ஆயத்தங்கள். எங்கள் கம்பத்துக்கு அருகில் இருந்த காட்டில் அதிகபட்சம் ஆபத்தான விலங்கு உடும்புதான். லாலான் புலிகள் இருந்தாலும் அவை மனிதனைத் தாக்குவதில்லை. அவற்றுக்கு வீட்டில் வளர்க்கும் கோழிகளே வேட்டை. மனிதன் வாடைபட்டாலே தூர ஓடிவிடும். உடும்புகள் அப்படியல்ல. எதிர்க்கும்; தாக்கும். கொய்த்தியோ மணியத்தின் கட்டை விரல் உடும்பு வாயில் அகப்பட்டே பிய்ந்து போனது. வாயில் தன் விரலை வைத்திருந்த உடும்பை லாவகமாகப் பிடித்து, கொன்று, பிளந்து விரலை எடுத்து உடும்பு இறைச்சியுடன் இணைத்து விற்றுவிட்டதாக ஒரு பேச்சு உண்டு. ஒவ்வொரு வேட்டைக்குப் பின்பும் உடும்பின் பித்தை லாவகமாக எடுத்து வைப்பார். இரவில் வேட்டை நாய்களின் மூக்கில் அதை தேய்த்துக் கட்டிப்போடுவார். வேட்டை நாய்கள் தாளாத கசப்பில் கத்தும். கத்தல் உறுமலாகும். உறுமல் மறுநாள் வெறியாகியிருக்கும். அப்போது அதன் தேடல் முழுக்க உடும்பாகவே இருக்கும்.
உடும்பைத் தவிர்த்து அழுங்குகளுக்கு நல்ல மவுசு இருந்தது. தடித்த செதில்கள் சூழ்ந்த அழுங்கை ஆய்வது சிரமம் என்பதால் அதை வாங்குபவர்கள் பொறுப்பிலேயே விட்டு விடுவார். ஆனால், நல்ல விலைக்கு வருகிறதென சீன தௌக்கேவுக்காக அதை கொதிநீரில் போட்டு ஆய்ந்த போது ஓடுகளற்ற அழுங்கு ஒரு குழந்தை போல அவர் கையில் சிவப்பாகக் கத்திக்கொண்டு பிசுபிசுத்தது. ‘கொழந்தடி’ என்ற மணியத்தின் கூச்சலுக்கு ஓலம்மா வந்து நின்றாள். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ஓலம்மாவிடம் போதையில் இல்லாமல் பேசிய முதல் வார்த்தை அது. ஓலம்மா எங்கோ பார்த்துக்கொண்டு “உன்னது இல்ல…” என்றாள் வெறுப்பாக. மணியம் அதிக நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இறந்த அந்தச் சதைப் பிண்டத்தை வீட்டுக்குப் பின் புறம் புதைத்து ஒரு செடி நட்டார். அன்றிரவு முழுவதும் அங்கேயே காவல் இருந்தார்.
***
அம்மா, ஓலம்மாவை அடைந்த போது அவர் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருக்கிறதா எனத் தேடினார். வழக்கமாக அப்படி ஏதாவது இருக்கும். ஓலம்மா மார்பில் அடித்துக்கொண்டு கதறியபடி தரையில் சாய்ந்தபோது வேறென்னவோ என ஓலம்மா வீட்டை நோக்கினார். நான் அம்மாவுக்கு முன்னமே ஓடும் திறன் பெற்றிருந்தாலும் வீட்டை நெருங்க பயமாக இருந்தது. எங்கு ஒளிந்திருந்து என்ன ஆயுதத்துடன் வருவாரோ மணியம்!
நான் நினைத்தது போலல்லாமல் மணியம் சரிந்து கிடந்தார். சுவாதீனம் இல்லை. மூச்சு எங்கெங்கோ இடித்து பின்னர் நாசியில் திணறியது. உடலில் மணல் படிந்திருந்தது. மொச்சை நல்ல வேளையாக அந்த வழியில் வந்தார். சனிக்கிழமையாக இல்லாமல் போதையில் இருந்ததால் உடனடியாக அடுத்து செய்ய வேண்டிய காரியத்தில் இறங்கினார். அம்மா, வீட்டுக்கு ஓடி புளியைக் கரைத்து வாயில் ஊற்றி முதலுதவி செய்தாள். அம்மாவால் அவ்வளவு துரிதமாக ஓட முடிவது ஆச்சரியமாக இருந்தது. நான் என் பங்குக்கு என்ன செய்வது என தெரியாமல் திணரிக்கொண்டிருந்தேன்.
ஓரிரு நாள்களில் கொய்த்தியோ மணியம் வீடு திரும்பியிருந்தார். யாரிடமும் பேசாமல் வெளி வராண்டாவில் படுத்திருந்தார். அவரிடம் எதையும் கேட்க யாருக்கும் துணிவில்லை. பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டவர்கள் அந்தக் காலத்தில் பிழைப்பது சிரமம். மணியத்துக்கு உடல் போல உயிரும் கெட்டி என ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டனர். “கொவளையில ஊத்தி குடிக்கிறது சாராயமா பூச்சி மருந்தான்னா கூட உனக்கு தெரியலயா ஓலம்மா… ஏதோ விரத்தியில அவருதான் குடிக்கிறார்னா தடுக்கிறதில்லையா நீ…” என வருவோர் போவோரெல்லாம் கருத்துக்கூறிச் சென்றனர். ஓலம்மா ஒன்றும் பேசாமல் சூனியம் பிடித்தவள் போல இருந்தாள்.
அன்றிரவு நான் அம்மாவின் பின் பதுங்கியபடி கொய்தியோ மணியத்தைப் பார்க்கச் சென்றேன். நிதானமாக எழுந்தமர்ந்தார். அம்மா, “என்னண்ண இது?” என்றார் கரிசனத்துடன். உயிரைக் காப்பாற்றிய உரிமை அம்மாவின் குரலில் இருந்தது. “வார்த்த பேச்சாயி… வார்த்த…” அம்மாவின் பெயரை அவர் மட்டும்தான் சொல்லி அழைப்பது வழக்கம். பொதுவாக போதையில் இருக்கும்போது கால்வாய்க்கு மறுபுறத்திலிருந்து ஓலம்மாவை அனுப்பச் சொல்லி கத்துவார். அப்போது பேச்சாயி என்ற பெயர் அவர் வாயிலிருந்து கொடூரமாக அதிரும். இப்போது அது ஒரு குழந்தையை அழைப்பது போலிருந்தது. அம்மா, அங்கிருந்த படியே ஓலம்மாவிடம் , “என்ன சொன்னீங்க அண்ணண…” என்றார். அம்மா குரலில் மிரட்டலும் எரிச்சலும் கலந்திருந்தது. காலம் முழுதும் ஓலம்மாவின் மீதிருந்த கரிசனம் ஒரு மரணத்தின் அனுபவத்துக்குப் பின் திசைமாறிப் போயிருந்தது.
ஓலம்மா சூனியத்திலிருந்து விடுபடவில்லை. கண்ணீர் வற்றியிருந்தது. கொண்டு வந்திருந்த உணவை கொடுத்துவிட்டு அம்மா புறப்படும் நேரம் மணியம் மீண்டும் சொன்னார், “வார்த்த… ஒரு வார்த்த சொல்லிட்டா பேச்சாயி…”
***
மறுநாள் ஓலை வீட்டின் முன் நின்று, மீண்டும் மணியம் பூச்சிக்கொல்லியைக் குவளையில் ஊற்றிக்குடித்து நேற்று நள்ளிரவுக்குப்பின் மாண்டுவிட்டதாக சாவு செய்தி சொன்னான். அவன் குரலில் எவ்வித வருத்தமோ பதற்றமோ இல்லை. ஆனால் பார்வையில் ஒரு தீவிரம் இருந்தது. அப்போதுதான் மருள் வந்து அடங்கிய கண்கள்போல சிவந்திருந்தன. அம்மா சாவு செய்தி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமர்ந்துவிட்டபோதும் ஓலை தனது கூலிக்காக நெடுநேரம் வெளியே காத்துக்கொண்டே இருந்தான். மேலே அடிக்கடி பார்த்து பெருமிதமான ஒரு முகபாவனை செய்து , தலையை இறக்கும் போது சராசரியாக வைத்துக்கொண்டான்.
“சாவு சேதி சொல்லியிருக்கேன் கூலி கொடுக்கா…” என மீண்டும் உற்சாகத்தில் ஓலை உரத்து கத்தியபோது வெக்கையில் நனைந்துவிட்டிருந்த அவன் பனியனின் நெஞ்சுப்பகுதியில் மேலெலும்பி பின் அடங்கியது என்னவென்று அம்மாவிடம் கேட்டுவர உள்ளே ஓடினேன்.
– புதுவிசை, 2014 (நன்றி: http://vallinam.com.my)