”வாலிப காலத்து நெருங்கிய நண்பர்களுக்கு ஓர் அழைப்பு ,எனது கடைசி மகளின் திருமணம் எதிர்வரும்…..திங்கள் கிழமை நடைபெறுவதற்கான சூழலை இறைவன் ஏற்படுத்தியுள்ளான் அன்று எமது வீட்டில் நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்தில் தாங்கள் கலந்து கொள்வதை மிகவும் விருப்பத்துடன் எதிர்பார்க்கின்றேன்.(ஞானப்பிரகாசம்)”
ஞானம் சார் என்று எல்லோரும் செல்லமாக அழைக்கும் ஓய்வுபெற்ற அரசநிதி நிர்வன முகாமையாளர் ஞானப்பிரகாசம் அவர்களின் வட்ஸப் மூலமான மகளின் திருமண அழைப்பிதழ் அது, இருந்தபோதும் நேரடியாக அழைப்பது மாதிரி இருக்காது என்று யாராவது நினைக்க கூடாது என்பதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஏற்கனவே தொலைபேசி வாயிலாகவும் அழைத்திருந்தார்.
ஊரில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கப்பால் இருக்கும் ஞானம் சார் அவர்களின் ஊருக்கு செல்ல வேண்டும், தனியாக செல்வதைவிட ஞானம் சார் சொல்வதுபோல் வாலிப காலத்து நண்பர்களுடன் சேர்ந்துபோனால் பிரயாணக்களைப்பும் இருக்காது கடந்துபோன நாட்களின் சுவாரஸ்யமான நினைவுகளை மீட்டிக்கொண்டு செல்லலாம்.
நண்பன் அபாருக்கு அழைப்பு விடுக்கிறேன் உடன் எதுவித மறுப்பும் தெரிவிக்காமல் “என்ன வேலை இருந்தாலும் விட்டுவிட்டு ஞானம் சாரின் அழைப்புக்கு கட்டாயம் போகத்தான் வேண்டும்” என்று உடன்பட்டுக்கொள்கிறான்.
மதிய சாப்பாடுதான் என்றாலும் காலை பத்து மணிக்காவது ஊரில் இருந்து புறப்பட்டால்தான் வேளைக்கு செல்லலாம்.
நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் ஞானம்சார் அவர்கள் அந்த நிதிநிறுவனத்தின் முகாமையாளராக இருந்தார்கள் எனது எழுதுவினைஞர் நியமணக்கடித்ததை கண்டதும் ஒரு புன்முறுவலுடன் அவரின் எதிரே இருந்த கதிரையில் அமரச்செய்து ,அந்த நிறுவனம் பற்றிய நான் அறிந்திராத சில விளக்கங்களையும் விபரித்ததோடு மட்டுமல்லாமல், கடமைக்கு,நேர காலத்தோடு சமுகமழிக்க வேண்டியதிலிருந்து வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் சக ஊழியர்களோடு எவ்வாறு பழகவேண்டும் என்பதுவரை மறக்கமுடியாத அவசியமான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் ஒரு ஆசிரியர் எப்படி மாணவணுக்கு புரியவைப்பாரோ அவ்வாறு அன்று கூறிய அறிவுரைகள் நான் கடமையில் இருந்து ஓய்வுபெற்ற காலத்திற்கு அப்பாலும் பின்பற்றி வருகிறேன் என்பதற்கு மதியசாப்பாட்டுக்கு காலையிலேயே புறப்படும் எனது செயற்பாடுகள் ஒரு எடுத்துகாட்டுதான் என்றுதான் சொல்லவேண்டும்.
நானும் நண்பன் அபாரும் ஞானம் சார் அவர்களின் இல்லத்தை அடைந்த பின்னர்தான் சார் குறிப்பிட்ட வாலிபகாலத்து ஊறவுகள் தங்களின் வரவுகளை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்கள், அவர்களுள் ஒய்வுநிலையை அடந்த முகாமையாளர்கள்,பொதுமுகாமையாளர்கள்,மாவட்ட,மாகாண முகாமையாளர்கள்,இறுதிவரை எதுவித பதவிஉயர்வுகளும் கிடைக்காமல் ஏக்கத்துடன் ஓய்வுபெற்றவர்கள் என்று ஒரு கூட்டமே மரநிழலுக்குகீழ் ஒன்றாக குழுமியிருந்தார்கள்.
இன்றைய ஒற்றுமையான ஒன்றுசேரல் அண்றைய காலக்கட்டத்தில் நடந்ததாக நினைவில் இல்லை என்பதை நினைக்கும்போது மனதிற்கு சங்கடமாகவே இருந்தது ,ஏதோ சந்தித்துவிட்டோமே என்பதற்காக கைகுலுக்கலும் வருந்திஅழைத்துக்கொண்டபுன்னகைகளும் ஒரு நாடகமாகவே அரங்கேறிக்கொண்டிருந்தது
எப்படி மறக்கமுடியும் அந்த நாட்களை..இன்று.. அதோ பார்ப்பதற்கு ரஜனீஸ் சுவாமி மாதிரி இருக்கின்றாரே அவர்தான் அவரேதான் மிஸ்டர் பாக்கி என்று அழைத்த பாக்கீர் அவர் தொழிச்சங்கதலைவராக இருந்துகொண்டு செய்த அட்டூழியங்கள் ஒன்றாரெண்டா, அவருக்கு பிடிக்காத அல்லது ஒத்துழைக்காத ஊழியர்களுக்கு செய்த இடமாற்றங்கள் ,பதவிஉயர்வின்போது நடைபெற்ற வெட்டுக்குத்துகள் இப்படி அடுக்கிகொண்டேபோகலாம், அதோ அவரோடு கைலாகு செய்து புன்னகைத்துகொண்டு செல்கின்றானே..அந்த சகோதர நண்பனின் உள்மனம் சொல்லும் வார்த்தைகள்அவருக்கு புரியாது ஆனால் எனக்கு புரியும் ஏனென்றால் நானும் அவரால் பதிக்கப்பட்டவனாயிற்றே.
ஒருகாலம் இருந்தது தொழிச்சங்க தேர்தல் நடக்கும் யாருக்கு வாக்குப்போடுவது என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை போட்டித்தன்மை இல்லாத ஒரு காலக்கட்டம்அது, காலப்போக்கில் அந்த நடைமுறை இல்லாமல் எதோ பாராளுமண்றதேர்தள் போன்ற நிலைக்கு மாறி ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ளும் அளவிற்கு சென்றிருந்தது.
அந்த நாட்களில் மிஸ்டர் பாக்கியை பகைத்துக்கொண்டிருந்தால், வேண்டப்படாத இடத்திற்கு இடமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகவேண்டும் அல்லது எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளில் சில குழறுபடிகளுக்கு முகம்கொடுக்கவேண்டி இருக்கும்.
நீண்ட நாடகளின் பின்னரான சந்திப்பு, நலம் விசாரனைகளின் இடையே “ஏதாவது சாப்பாட்டில் குறை இருந்தால் மன்னித்துகொலள்ளுங்கள் நான் நினைக்கவே இல்லை, எனது குறுகிய அழைப்பை ஏற்று பல சிரமங்களின் மத்தியில் ஓரிருவரை தவிர எல்லோரும் வந்திருந்தீர்கள், எல்லோருக்கும் நண்றியை பகிர்ந்துகொள்கிறேன் இன்று நடந்தது எனது கடைசி மகளின் திருமணம் இனி இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று..சொல்லவேமுடியாது நான் ஏதாவது பிழைசெய்திருந்தால் கடவுளுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள்..” அதற்குமேல் ஞானம் சார் அவர்களாள் பேச முடியவில்லை வார்த்தைகள் தடுமாறின, சில வினாடிகள் ஈரமாகிப்போன விழிகளுடன் விடைபெற்றுக்கொண்டோம்,
இனிஇருப்பது வாழ்க்கையின் கடைசி கட்டம் மிஸ்டர்பாக்கி போண்றவர்களின் பட்டங்களும் பதவிகளும் மரணஅறிவித்தல்களில் ஒரு முறை வாசிக்கப்பட்டு அன்றோடு மறந்துவிடக்கூடும்,ஆனால் இனவாதம் இல்லாத, பிரதேசவாதம் இல்லாத, “கொஞ்சக்காலம்தான் வாழ்ப்போகிறோம் அதற்குள்ள என்னடா சாதி சமயம் பிரதேசம் எல்லாம் வேசம்டா மனிதனாக வாழப்பழகு வாழ்க்கை உனக்கு சொர்க்கம்” இப்படி அடிக்கடி சொல்லும் ஞானம்சார் போண்றவர்கள் தங்களின் மரணத்தின் பின்னும் நீண்ட நாட்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
(கற்பனை)
– “தமிழன்” வார இதழ் (16/10/22)