நான் தேசத்துரோகி அல்ல!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2021
பார்வையிட்டோர்: 2,621 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணியாகியும், இன்னும் அவர்களைக் காணவில்லை . கடற்கரையோரப் புதர்களுக்கு மத்தியில் கருங்கல்லில் நான் குந்தியிருக்கிறேன். மங்கிய நிலவு வெளிச்சத்தில் நீலக்கடலலைகள் வெள்ளை வெல்வெட் துணிகளாகப் பளிச்சிடுகின்றன. தூரத்தில் காலி விதியில் எதோ வாகனம் உறுமிக்கொண்டே விரையும் சத்தம் கேட்கின்றது. ஸ்டேசனில் நிற்காமல் ஏதோவொரு சாமான் வண்டி ஓடு கின்றது . ஆழ்ந்த இரவின் மௌனத்தில் இனம் புரியாத ஒலிகள் புதரில் கேட்டுக்கொண்டிருந்தன. ஒளிப்புள்ளிகளாய், நாலைந்து மீன் பிடி வள்ளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன.

NaanDesa

அவைகளிலொன்று நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வள்ளமாகவும் இருக்கலாம். முன்னேற்பாட் டின்படி துறைமுகத்திற்கு வெளியே நிற்கும் கப்பலிலிருந்து, வள்ளத்தின் மூலம் அவர்கள் நானிருக்குமிடத்தை அடைவார்கள். அவர்கள் வள்ளத்தின் அடையாளமாகப் பச்சை ஒளிப்புள்ளி தெரியும்.

அவைகளிலெதுவும் நானெதிர்பார்த்திருக்கும் வள்ளமல்ல.

நான் கனவுகளில் மிதக்கிறேன். அவர்கள் வள்ளம் வந்ததும்- என் கைகளில் கனமாய்க் கனக்கும், எங்கள் நாட்டு இரகசியங்கள் அடங்கிய பார்சலை அவர்கள் கையில் கொடுத்ததும் என் கைகளில் இருபத்தையாயிரம் ரூபாய்-கால் இலட்சம். இவ்வளவு காலமும் நான் பட்ட இன்னல்கள்-என் குடும்பத்தினர் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றிற்கும் விடிவு; விடிவு; விடிவு.

இந்த இரகசியங்களைச் சேர்க்க நான் எவ்வளவு பாடுபட்டிருப்பேனென உங்களுக்குத் தெரியாது. எத்தனையோ கனவுகளைச் சுமந்து பட்டப் படிப்புப் படித்து வெளியேறியதும் என்னை என் குடும்பத்தைப் பற்றிய-என் எதிர்கால வாழ்வு பற்றிய, கனவுகள் சிதைய வருடக்கணக்காக வேலையில்லாமல் அலைந்து திரிந்ததும், சிலகாலத்தின் பின் சிலரின் தொடர்பால் இந்த வேலை எனக்குக் கிடைத்ததும்………..

இந்த வேலையைப் பூரணப்படுத்த எனக்கு ஆறு மாதங்கள் சென்றன. இதற்காக நான் எத்தனையோ இடங்களில், எத்தனையோ வேஷங்களுடன் அலைந்திருக்கிறேன்: எத்தனையோ மாய் மாலம் பண்ணியிருக்கிறேன்; எத்தனையோ ஆபத்துகளிலிருந்து தப்பியிருக்கிறேன். எங்கள் நாட்டின் பாதுகாப்புப் பலவீனங்கள் பற்றிய எத்தனையோ குறிப்புக்களும், முக்கிய கேந்திர ஸ்தானங்களைப்பற்றிய எத்தனையோ அரிய படங்களும் இப்போது என் கைகளிலுண்டு. இன்னும் சிறிது நேரத்தில் அவற்றின் பரிமாற்றத்தில் – என் கை களில் இருபத்தையாயிரம் ரூபாய். எனது சோகங்கள் நிறைந்த வாழ்வில் திருப்பு மையமாக அமையப் போகின்ற இருபத்தையாயிரம் ரூபாய்.

இன்னமும் பச்சை சமிக்கையைக் காணவில்லையே?

நான் எதிர்கால வாழ்வு பற்றிய இன்பக் கற்பனைகளில் ஆழ்ந்திருக்கிறேன். மகாவலிகங்கையோரமும், பேராதனைப் பூந்தோட்டமும், பனி மூடிய மலைச் சிகரங்களும் நினைவரங்கில் மின்னுகின்றன. அங்கெல்லாம் அவளுடன் சுற்றிய நாட்கள்……..;

இனியென்ன அவளுடன் தான் வாழப் போகின்றேனே.

பொத்தென்று ஏதோ சத்தம் கேட்கின்றது. திடுக்கிட்டேன்; பார்சலை என் வாழ்வில் விடிவை ஏற்படுத்தப் போகின்ற பார்சலை, என்னை யறியாமலேயே மார்புடன் அணைத்துக் கொள்கிறேன். தேங்கா யொன்று என்னருகில் உருண்டு வந்து கிடக்கின்றது. மேலே நிமிர்ந்து பார்க்கின்றேன். தென்னோலைகள் நிலவொளியில் மின்னுகின்றன. நீலக்கடலலைகள் தமது நித்திய ஓங்காரத்துடன் கரையில் மோதுகின்றன.

நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றேன்.

பச்சைச் சமிக்ஞையை இன்னும் காணவில்லை.

இன்னமும் காணவில்லையே என்று என் மனதில் தவிப்பு……. பாடு பட்டதின் பலனை அடைய அவ்வளவு அவசரம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எது வித சலனமும் இல்லை.

என் காதுகளில் கலீர் கலீர் சலங்கையொலி கேட்கிறது. முன்னிரவில் பார்த்த நாட்டியத்தின் காட்சிகள் மனதில் திரையிடுகின்றன. மஞ்சள் –பச்சை – சிகப்பு- நீல வௌச்சத்தின் பின்னணியில் அவள் ஒயிலாக ஆடுகின்றாள்; அங்கம் குலுங்க, நீண்ட கரும்பாம்பாய் பின்னல் வளைந்து வர, முகமும் கண்களும் ஆயிரம் செய்திகளைச் சொல்ல, காலைத்தூக்கி, கையில் அபிநய முத்திரை காட்டி சுற்றிச் சுழன்று ………..

அப்பப்பா! என்ன இலாவகம்; என்ன அழகு. சங்கீதமும் நாட்டியமும் ஓர் உலக அதிசயம் என்று ஒரு கிறுக்கன் சொன்னான். அதில்தான் எவ்வளவு உண்மை .

அவர்கள் வரமாட்டார்களா? மணிக்கூட்டைத் தூக்கிப் பார்க்கின்றேன். மங்கிய நிலவு வெளிச்சத்தில் நேரம் ஒன்றரையை அணுகுவது போலத் தெரிகின்றது. எதோ நடக்கப் போவது போன்று இதயத்தில் எதோ குறுகுறுப்பு;

அந்தத் தவிப்பை மறப்பதற்காக முனனிரவு நாட்டியத்தில் மனதைத் திருப்புகின்றேன்.

இனிய கீத அலைகளாய் அந்தப் பாடல்-அவள் இறுதியாக அபிநயம் பிடித்த மகாகவி பாரதியாரின் அந்தப் பாடல் மனதில் ஒலிக்கிறது.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து
குலாவி இருந்ததும் இந்நாடே
அதன்-முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே
இதை வந்தனை கூறி மனத்திலிருத்தியென்
வாயார வாழ்த்தேனோ –இதை வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்று வணங்கேனோ?”

திரும்பத் திரும்ப இந்த பாடலை அதே இராகக் குழைவுகளுடன் பாட வேண்டும் போல ஒரு உணர்ச்சி. என்னை மறந்த நிலையில் வாயை அசைத்து மெல்லிய குரலில் அதைப் பாடுகின்றேன். இராக ஏற்ற, இறக்கக் குழைவுகளுடன் பாடுகின்றேன் .

பிரமை மயக்கம்.

என் முன் அவள் நின்று ஆடுகின்றாள். நான் செய்யப்போகின்ற காரியத்தை, அதனால் நான் என் நாட்டுக்குச் செய்யப்போகும் துரோகத்தை, அதனால் ஏற்படப் போகும் விளைவுகளைக் காட்டி என்னை எச்சரிப்பவள் போல ஆடுகின்றாள்.

நான் படித்தவனா என்று கேட்பவள் போல ஆடுகின்றாள்;

உனக்கு உன் பாரம்பரியப் பெருமைகள் தெரியப் போகின்றதா என்று கேட்பவள் போல ஆடுகின்றாள்;

உனக்கு நாட்டுப் பற்று உண்டா என்று கேட்டு ஏளனச் சிரிப்புச் சிரிப்பவள் போல ஆடுகின்றாள்;

NaanDesa-pic

மங்கிய நிலவொளி என் முன்னால் பரந்து கிடக்கிறது: இனிமையாய் மெல்லிய காற்று ஊருகின்றது. என் வீட்டுக்கருகில் வளர்ந்து நிற்கும் அந்தப் பெரிய பழைய இலுப்பை மரமும், அதன் கீழ் திட்டு திட்டாய் விழுந்திருக்கும் நிலவொளியும்…… எனது தந்தை தாயாரின் இளமைப் பருவங்களும்….ஏதோவோர் உருவொளித் தோற்றமாய் என் மனக்கண்ணில் தெரிகின்றன.

அந்தப் பாடல் வரிகள் மீண்டும் ஒலிப்பது போல…..

அவள் சுழன்று சுழன்று ஆடுவது போல…….

“வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனே?”

தூரத்தில் பச்சைச் சமிக்ஞை தெரிகின்றது.

எனது கையிலிருக்கும் பார்சல் ஏன் இவ்வளவு கனமாகக் கனக்க வேண்டும்?

என்னுள் ஒரு வெறி, என் கைகளில் ஒரு நடுக்கம். நான் தேசத் துரோகியா? ஆரவாரிக்கும் கடல் ”ஓம்; ‘ஓம்” என்று கத்துகிறது.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

கடலை நோக்கி எறிகிறேன்; என்னைத் தேசத் துரோகி என்று சொன்ன கடலை நோக்கி எறிகின்றேன். அந் தப் பார்சலைக் கடலில் எறிந்து விட்டேன். இருபத்தையாயிரம் ரூபாயை எனது-குடும்பத்தினரின் கஷ்டங்கள் சோகங்களைத் தீர்க்க வந்த வரப்பிரசாதத்தை நான் கடலில் எறிந்து விட் டேன் .

நான் தேசியப்பற்றுக் கொண்ட வன்; தேசத்துரோகியல்ல.

கடலலைகள் அமைதியாகக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. காற்று இதமாக ஊதியது. தென்னோலைகள் நிலவொளியில் பளபளத்தன.

பச்சை வெளிச்சமும் கரையை அண்மிக்கொண்டிருந்தது.

நான் எழும்பி நடக்கிறேன். “எந்தையும்… தாயும்……..” என்ற பாடலை முணுமுணுத்தவாறு நடக்கின்றேன். என் மனதில் வெறியில்லை; வேலையில்லையே என்ற ஆதங்கம் இல்லை; இருபத்தையாயிரம் ரூபாயை இழந்து விட்டேனே என்ற கழிவிரக்க மில்லை .

நான் ‘தேசத் துரோகி’ யாகாமல் காப்பாற்றப்பட்டுவிட்டேன்.

முன் இரவில் நடமாடிய அந்த மங்கை என்னை காப்பாற்றிய தெய்வமாக என் மனதில் பிரகாசிக்கிறாள். அந்தத் தெய்வத்தை நினைத்துப் பிரதிக்ஞை செய்கின்றேன். “எனக்கு என் குடும்பத்தினருக்கு எத்தனை எத்தனை இடர்கள் வந்தாலும்- நான் பட்டினி கிடந்து செத்தாலும் என் எதிர்காலக்கனவுகள் சிதைந்தாலும் – என் வாழ்க்கை வளம் காணாமலே அழிந்து பட்டாலும், நான் என் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் தேசத் துரோகச் செயலைச் செய்ய மாட்டேன். என் முன்னையோரின் காவிய வாழ்க்கை நிகழ்ந்த இந்தப் புண்ணிய பூமியை நான் களங்கப்படுத்த மாட்டேன்; என் நாட்டுச் சுதந்திரத்துக்காகப் போராடிய பவித்திரமான ஆத்மாக்களுக்குத் துயரத்தைத் தேடித்தரமாட்டேன். இது சத்தியம். முக்காலும் சத்தியம்”.

எனது பிரதிக்ஞைக்குச் சான்று கூறுவதுபோலக் கடலின் இரைச்சல் அண்மையில் கேட்கின்றது. குளிர் காற்று ஊ ஊ என்று காதில் இரைந்து செல்லுகின்றது. பக்கத்து வீட்டுப் பண்னையிலிருந்த கோழியொன்று சிறகடித்துக் கூவுகின்றது.

நான் நடக்கிறேன். எல்லையில்லாத நிம்மதியை, அமைதியை, ஏன் ஒரு பெருமையை மனதில் தாங்கியவனாய் நடக்கிறேன்.

‘வந்தே மாதரம்’ என் காதில் ஒலிக்கின்றது.

பச்சையொலி கரையை அடைய இன்னும் சில நிமிடங்கள் செல்லலாம்.

அப்போது நான் அவர்களை வரவேற்க மாட்டேன். சில போலீஸ்காரர்கள் அவர்களை வரவேற்பார்களென்று நினைக்கின்றேன்.

அவர்கள் பாவம் தான்; நான் அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டேன் தான்! ஆனால், அதற்கு நானென்ன செய்யமுடியும்!

நான் தேசத்துரோகியல்ல!

– அஞ்சலி மாத சஞ்சிகை – மார்ச் 1971

– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *