நன்னயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 2,090 
 
 

(“நன்னயம் செய்தாரை ஒறுக்க அவர் நாண இன்னா செய்து விடாதீர்”)

ஆட்டோ டிரைவர் மாணிக்கம் மனதுக்குள் நொந்து கொண்டார். இப்படி ஒரு அவமானம் அவர் வாழ்க்கையில் எப்போதும் ஏற்ப்பட்டதில்லை. காலையில் சவாரிக்குக் கிளம்புமுன் மனைவியிடம் கல்பனா எழுந்துட்டாளா? என்று கேட்டார். கல்பனா அவர் மூத்த மகள்; தலைப் பிரசவத்துக்காகத் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள். “இல்ல இன்னும் தூங்கறா” என்று சொல்லிவிட்டு, அவர் எதோ சொல்லத் தயங்குவதை உணர்ந்த அவர் “என்ன?” என்றார்.

“சம்பந்தியம்மா போன் பண்ணினாங்க”. “என்னவாம்”. “தாம்பூல தட்டில் பழங்கள், தேங்காய்,, வெத்தல, பாக்கு, உங்க மகளுக்கு ஐய்யாயிரமும் 9 வகை சாப்பாடும், பிறந்த குழந்தைக்கு செயின், மோதிரம், கொழுசு 5ம் மாதத்தில் குங்குமப்பூ கொடுக்கும் நிகழ்ச்சி ன்னு பட்டியல் போட்டுனே போறாங்க; என்னங்க இது?” “ சரி சரி பொண்ணைப் பெத்துட்டோம் செஞ்சி தொலைப்போம்” என்றவர் அதே நினைப்பில் வண்டியை எடுத்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற அந்த மருத்துவமனையில் சவாரியை இறக்கிவிட்டுத் திரும்பிய வேளையில் அரை மயக்கத்தில் ஓர் இளம்பெண்ணைத் தாங்கலாக அழைத்து வந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட தெருப் பெயரைச் சொல்லி ஆட்டோ போகுமா? எனக்கேட்க நூறு ரூபாய் ஆகும் என்றார் மாணிக்கம். என்னப்பா வரும்போது எண்பது ரூபாய் தான் தந்தேன் என்ற அப்பெண்மணியிடம், எண்பது ரூபாய் கட்டுபடி ஆகாது வேறு ஆட்டோ பாருங்க என்றார். அங்கிருந்த செக்யூரிட்டி வண்டி எடு வண்டி எடு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த பெண்மணி இளம்பெண்ணை ஏற்றிவிட்டுத் தானும் ஏறி உட்கார்ந்துகொள்ள வேறு வழியின்றி வண்டியை ஓடவிட்டார். என்னம்மா? பாப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையா? என்றார். ஆஸ்பத்திரிக்கு வேறு எதுக்கு வருவோம் ? என அப்பெண்மணி கேட்க வேறு ஏதும் பேசாமல் வண்டியை ஓட்டினார்.

மகளுக்கு முதுகின் விலாப்பகுதியில் மிக அதிகமான வலி. சிறுநீர்க் கழிக்கும் போது வலி எரிச்சல், ரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறுதல் வாந்தி மற்றும் குளிர் காய்,ச்சல் என்ற அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்களிடம் சிறுநீரக கற்களை கண்டுபிடிக்கும் பரிசோதனைகள், சிறுநீரில் தாதுப்படிவங்கள் இரத்தத்தில் கால்சியம், மற்றும் யூரிக் அமில அளவுகள். மற்றும் இரத்தக் கசிவை அறியும் பரிசோதனைகள் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யும்படி எழுதிக் கொடுத்திருந்தனர். அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துவிட்டு அவர்கள் இப்போது வீடு திரும்புகின்றனர்

குறுகலான ஒரு சாலையில் ஒரு பள்ளம் வர சற்று தாமதமாகக் கவனித்துத் திருப்புவதற்குள் ஆட்டோ பள்ளத்தில் இறங்கி ஏற, ஏம்பா பாத்து ஓட்ட மாட்டியா? பேஷியண்ட ஏத்திகிட்டு வரும்போது இப்படித் தான் ஓட்டுவியா? என்று அந்தப் பெண்மணி சீற, மன்னிச்சுக்குங்க கவனிக்கலை என்றார்.

குறிப்பிட்ட இடம் வந்து அந்தப் பெண்மணி இறங்கி விட்டு இளம் பெண்ணை இறக்க முயற்சிக்க, மாணிக்கம் நான் உதவட்டுமா? எனக் கேட்க, உன் வேலையை மட்டும் பார் என்று கூறிக்கொண்டே கேட் அருகே இருந்த வாட்ச் மேனிடம் என்னய்யா பண்ணற கமலாவைக் கூப்பிடு என்ற அப்பெண்மணியின் கூச்சலைக் கேட்டு அந்தக் கமலா வெளியே வந்து கைத்தாங்கலாக அப்பெண்ணை அழைத்துச் சென்றாள். பிரதான சாலைக்கு வந்தபோது இரண்டு பெண்கள் கை காட்டி ஆட்டோவை நிறுத்தி இடம் சொல்ல பேரம் முடிந்து ஏற இருந்தவர்கள் உள்ளே ஏதோ ஹான்ட் பேக் இருக்கே என்றபோது தான் போன சவாரி இறங்கும் அவசரத்தில் விட்டு விட்டுப் போன பையைப் பார்த்தார். படபடப்பான அந்தப் பெண்மணி பையை எடுக்க மறந்திருந்தாள். வண்டியைத் திருப்பிய மாணிக்கம் அந்த வீட்டு முன் சென்று கைப்பையுடன் இறங்கி உள்ளே செல்ல இருந்தவரை வாட்ச் மேன் தடுத்தான். ஏம்பா பையை விட்டுட்டு இறங்கிட்டாங்க கொடுக்கத்ததான் வந்தேன் என்று சொல்லிக்கொடிருக்கும் போதே அந்தப் பெண் மணி வெளியே வந்தார். அவரிடம் விவரம் சொல்லிப் பையைக் கொடுக்க, கொஞ்சம் நில்லு என்று பையில் கை விட்டுத் தேடி விட்டு அடப்பாவி உள்ளே இருந்த செயினை என்ன பண்ணினே என்று அந்தப் பெண் அலற மாணிக்கத்துகுத் தலை சுற்றியது.

என்னம்மா சொல்லறீங்க. உங்க பையை அப்படியே தாம்மா கொடுத்திருக்கேன். அத நான் திறந்து கூட பாக்கலம்மா. என்றவரைப் பொய் சொல்லாதடா. அப்போ இதுல இருந்த செயின் என்னாச்சு? கால் முளைச்சுப் போயிடிச்சா? நாலரைப் பவுன் தங்கச் சங்கிலிய்யா, என்று அந்தப்பெண் கூச்சலிட ஒரு சிறு கூட்டம் அங்குக் கூடி விட்டது. கூட்டத்தில் சிலர் ஏம்மா! திருடுறவன் பையக் கொண்டு வந்து திருப்பித் தருவானா? நல்லா தேடித் பாரும்மா.. ஏம்பா இவங்களுக்கு அப்புறம் வேறு ஏதாவது சவாரி ஏற்றினியா? என்று அவருக்கு ஆதரவாகப் பேச, இவன் கிட்ட என்னய்யா பேச்சு மொதல்ல இவன போலீசுல ஒப்படைப்போம். மொதல்ல இவன் ஆட்டோவைச் செக் பண்ணுங்க. இவன் பாக்கெட்ட பாருங்க. என்று ஆளாளுக்குச் சொல்ல நிலைமை விபரீதமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த மாணிக்கம் இந்தம்மா சொல்லறது எதுவும் உண்மையில்லப்பா நான் எந்த செயினையும் எடுக்கல என்றவரை ஆளாளுக்கு அவர் சட்டையைப் பிடித்து இழுக்க, அவர் சட்டை கிழிய – (நம் ஊர் மக்களிடம் ஒரு பழக்கம் உண்டு; எடுத்ததுமே எதையும் தீர விசாரிக்காமல் கை நீட்டுவது -) ஒருவன் அவர் வாய் மீது ஓங்கி ஒரு குத்து விட உதடு கிழிந்து இரத்தம் கொட்டியது.

அப்போது இங்க என்னம்மா நடக்குது? என்ன சத்தம்? என்றபடி வெளியே வந்த இளம்பெண்ணின் குரல் கேட்டு அந்த நடுத்தரப் பெண்மணி சட்டென்று திரும்பி நீ ஏம்மா எழுந்து வந்தே. என்று கேட்டுவிட்டு ஏய் கமலா என்னடி பண்ணிட்டிருக்கே என்றவள் முகம் திடீரென மாறியது. இ… இந்த செயின் எப்படி உன் கழுத்திலே…

மகள் சொன்னாள்: ஸ்கேன் முடிஞ்சு வந்ததும் நீ தானம்மா என் கழுத்தில போட்டு விட்ட. அதுக்குள்ள மறந்திட்டியா?

உரையாடல் கேட்டவர்கள் என்னம்மா? என்று அதிர்ச்சியாய்க் கேட்க, அந்த ஆளை விட்டுடுங்கப்பா செயின் இருக்குது என்றவளைப் பார்த்து ஏம்மா! ஒரு அப்பாவி மனுஷனை அநியாயமா அடிக்க வெச்சுட்டியே என்ன பொம்பளம்மா நீ என்றபடி அவரவர் நகர்ந்தனர்.

அடிபட்ட வலி அவமானத்துடன் தலை குனிந்து நின்ற மாணிக்கத்திடம் மன்னிச்சுக்கப்பா தெரியாம நடந்துடுச்சி. இதை வெச்சிக்கோ என்று ஓர் ஐந்நூறு ரூபாய் நோட்டை நீட்டிய அப்பெண்மணியை வெறுப்புடன் நோக்கிய மாணிக்கம், அடச்சீ என்ற ஒற்றை வார்த்தையுடன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார்.

– March 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *