கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,086 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வடக்குத் தெற்காக ஓடும் மெயின் வீதியில் அந்தக் கிராமம் அமைந்திருந்தது. வீதியின் வலது பக்கமாக மோட்சத்தின் திறவுகோலைக் கையில் பிடித்துக்கொண்டி ருக்கும் இராயப்பர் கோயில். கோயில் அருகாமையில் பாதையின் இரு பக்கத்திலும் சில மக்கள் குடியிருப்புக்கள்.

கோயிலின் எழுவான் கரைப் பக்கமாக உப்பு நீர்வாவி. வாவிக்கரையில் சிறிய தோணிகளும், கண் ணாடியிழைப் படகுகளும் இழுத்து வைக்கப்பட்டிருக்கும். கோயிலின் அருகாமையிலுள்ள எல்லா வீடுகளிலும் இரண்டு தென்னை மரங்களை இணைத்துக் கட்டிய நீண்ட கழிகளில் வலைகள் தொங்கும். தோணிகளின் சுக்கானாகிய ‘சவள்’களும், தோணியைச் செலுத்த உதவும் தண்டு மரங்கள் என்ற துடுப்புக்களும் சார்த்தப் பட்டிருக்கும்.

வாவிக்கப்பால் எழுவான் கரையில் வங்காளக் குடாக்கடல் குமுறிக் கரையில் மோதிக் கொண்டிருந்தது. கோயிலடியில் நின்று பார்த்தால் கடலின் குமுறல் மிக்க பயங்கரமானதாகத் தோன்றியது.

மார்கழி மழை வஞ்சகமின்றிப் பெய்ததால் வாவி நிரம்பிவிட்டது. வாடைக் காற்றின் அகோரத்தினால்கரை புரண்டடித்த கடலலைகளின் தாக்கத்தில் வாவி முகத்

துவாரம் திறபட்டு விட்டது. வாவியில் நிறைந்த காட்டுத் தண்ணீர் கடலை நோக்கி ஓடிக் கொண்டி ருந்தது. |

முகத்துவாரம் திறப்பட்டது கோயிலைச் சூழ இருந்த மக்களுக்கு ஒரு சுப செய்தி. கடல் நீர் வாவியோடு கலந்த தால் கடல் மீன்களும் இறால்களும் வாவிக்குள் வரும். அடுத்த வருடப் பிழைப்பு அமோகமானதாக இருக்கும் என அம்மக்கள் எல்லாருமே நம்பினார்கள்.

மார்கழி மாதம் பிறந்ததுமே கிராமத்தவர்கள் தங்கள் தொழிலைச் சுருக்கிக் கொண்டார்கள். ஒரேமழை கொட்டிக்கொண்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம், அதற்கும் மேலான காரணம் அவர்களுக்கு நத்தார் பிறக்க இருந்ததே.

முந்தைய நாட்களில் மார்கழி மாதம் முதலாந்திகதி யன்றே பட்டாசுகளைக் கொளுத்தி முழக்கி நத்தார் வரப் போவதை அறிவிப்பார்கள். ஆனால் இப்போது அதைச் செய்ய முடியாது. ஏ. கே. வேட்டுக்கும் பட்டாஸ் வெடிக் கும் வித்தியாசம் தெரியாமல் ஆமிக்காரன் அவர்கள் வீடுகளை ஆக்ரமித்துக் கொள்வான். மேலும் பட்டாசு களை எங்கே விற்கிறார்கள்?

பட்டாஸ் இல்லாவிட்டாலும் கிராமத்தவர்களுககு நத்தார் பிறந்தே விட்டது. அயற் கிராமத்துச் சேனைக் காடுகளிலிருந்து சோளன் குலைகள் வந்து விட்டன. பத்து ரூபாய்க்குப் பத்துப் பன்னிரண்டு என்று மலிந்தும் வீட்டன. காடெல்லாம் வெள்ளக் காடாகி விடத் திடரை நாடி வந்த மான்களையும், மரைகளையும் அடித்தே கொன்றதினால் ஊரிலே இறைச்சியும் மலிந்து விட்டது. இவைகள் எல்லாம் நத்தார் வந்துவிட்டது என்பதை உறுதிப் படுத்தின.

இத்தனைக்கும் மேலாக கோயில் பாடற் குழுவின் தலைவரான பறங்கிக் கிழவர் பீற்றார், ஆர்மோனியத்தை மீட்டுக் குழுவினர்க்கு நத்தார்க்கீதம் பழக்கினார்

கால மாற்றத்திற்கேற்பக் கர்நாடக இசையில் எத்தனையோ தமிழ்ப் பாடல்களும் பஜனைகளும் வந்து விட்டாலும் பீற்றர்க் கிழவருக்கு லத்தீன் பாட்டுக்களில் தான் மோகம்! அவர் தன் பால்ய வயதில் லத்தீன் பாடல்களையே பாடியவர். லத்தீன் மொழியிலேயே ஒப்புக் கொடுக்கப்பட்ட பூசைகளுக்குப் பரிசாரகனாக இருந்து லத்தீன் மொழியிலேயே செபித்தவர். இன்றைக் கும் அந்தத் தொடர்பை விட்டுக் கொடுக்காமல், லத்தீன் பாடல்களுக்குத் தமிழுருவம் கொடுத்து அதே இசையில் பாடப்படும் பாடல்களை அவர் கற்றுக் கொடுத்தார்.

வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே

வாரும் வணங்குவோமே பாலனை என்று அவர் கற்பித்துக் கொண்டிருக்கும் பாடலின் இசை ஊரை நிறைத்தது.

கடைசியாக இருபத்தினான்காந்திகதி – வந்து விட்டது. இன்றைய நள்ளிரவில் கிறீஸ்து பாலன் பிறப்பார்.

ஊர்ச் சிறுவர்கள் கிறீஸ்து நாதர் பிறந்த மாட்டுக் கொட்டிலைக் கட்டினார்கள். கொட்டிலிலே தாம் பத்திர மாக வைத்திருந்த யேசுபாலன், மேரிமாதா, சூசையப்பர், இடையர்கள், மிருகங்கள் ஆகிய உருவங்களை வைத் தார்கள். ஆனால் அக்கொட்டிலுக்கு ஒளியூட்ட பற்றறி கள் கிடையாதது அவர்களுக்கு மனவேதனையாக இருந்தது. ‘பற்றறி’ தடைபண்ணப்பட்ட பொருள்.

தாங்கள் கட்டிய கொட்டிலின் முன்னால் யூக்கலிப்ரஸ் மரக் கிளைகளை வெட்டி நட்டு அதிலே பலூன்களைக் கட்டிக் கிறீஸ்மஸ் மரம்’ உண்டாக்கினார்கள்.

ஊரின் அந்தத்திலே இருந்த ‘ஆமிக்காம்’ பின் தளபதி கோயிலிலே நடுச்சாமப் பூசை நடத்த உத்தரவு கொடுத்திருந்தார். அது மக்களுக்குக் குதூகலத்தைக் கொடுத்தது.

ஆனால் செபமாலைக் கிழவிக்கு மட்டும் அன்று அதி காலையிலேயே யோசனை பிடித்துக் கொண்டது!

செபமாலைக் கிழவி ஊரில் பிரபலமான புள்ளி. அவளுக்கு அது பிறந்த ஊர் இல்லாவிட்டாலும், ஊரில் எல்லாருமே அவளின் உறவினர். எப்போதோ ஒருகாலத் தில் அவ்வூருக்கு ஆசிரியப் பணி புரியவந்தவள் அவ்வூரவர் ஒருவரையே மணஞ்செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வருகிறாள். வயது எழுபது ஆகிவிட்டாலும் இன்னமும் கூன் விழவில்லை. – தலை நரைத்து விட்டாலும் திடகாத் திரமாகவே இருந்தாள்.

விதவையான அவளது இரு ஆண் பிள்ளைகளும் எப்போதோ கனடாவில் குடியேறி விட்டார்கள். இரண்டு பெண்களும் கொழும்பிலே குடியும் குடித்தனமு மாக அமோகமாக வாழ்கிறார்கள். செபமாலைக் கிழவி மட்டும் தன் பென்னம் பெரிய வீட்டில் தன்னந்தனியனாக வாழ்கிறாள். கோயிலோடொட்டிய தொண்டுகளே அவள் பொழுதுபோக்கு. பல பக்திச் சபைகளின் தலைவி.

அந்த ஊரிலே காலங்காலமாக ஒரு வழக்கம் இருந்தது. நத்தாரின் முதல் நாட் சாயந்தரம், சென்ற ஆண்டு நத்தா ரின்போது உலகிலே வாழ்ந்து இந்த ஆண்டு நத்தாருக் கிடையில் உலகைவிட்டுப் போனவர்களை நினைத்து, அப்படி இறந்தவர்களின் வீட்டில் ஒரு சில நிமிடங்களுக்கு ஒப்பாரி சொல்லி அழுவதான வழக்கம், எப்போது தொடங்கியதோ? அதற்கான சரித்திரத்தை ஆராய்வதில் எவருமே சிரத்தை எடுக்கவில்லை!

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் செய் மாலைக் கிழவிதான் அந்த ஒப்பாரிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினாள்.

நூற்றைம்பது இருநூறு குடும்பங்கள் வாழ்ந்த அந்த ஊரில் இரண்டு மிஞ்சினால் மூன்று வீடுகளில் ஒப்பாரி சொல்லி அழவேண்டியிருக்கும்.

சாயந்தரம் நான்கு மணியளவில் வீட்டை விட்டுக் கிளம்பினால் அவள் வயதொத்த பத்துப் பன்னிரண்டு பெண்களைச் சேர்த்துக்கொண்டு சென்ற நத்தாருக்கும் இந்த நத்தாருக்குமிடையில் இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, வட்டமாகக் குந்திக்கொண்டு இரண்டு பக்கமும் இருப்பவர்களின் தோள்களில் கைகளை விரித்து அணைத் துக் கொண்டு முகத்தைத் தரையை நோக்கித் தொங்கப் போட்டபடி ஒப்பாரி சொல்லி… ‘

பத்து நிமிடங்களுக்கு ஒப்பாரிச் சப்தம் ஊரை நிறைத்து நிற்கும்!

ஒப்பாரி சொல்லி அழுத கூட்டம், பின்னர் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டு நிமிர்ந்தார்களாயின் அவர்கள் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட இருக் காது. முகத்திற் சோகமே இராது.

ஒப்புக்கு அழுத பெண்கள் வட்டமாகக் கூடியிருந்து கழுத்துறைப் பாக்கையும், கழுதாவளை வெற்றிலையை யும் சுவைத்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேச்சில் நத்தார்ப் பலகாரம் தொடக்கம் சாமப்பூசைக்கு உடுத்தும் சேலைவரை பல விஷயங்கள் அடிபடும். அவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்புகையில் இருட்டி விடும். பட்டாஸ் வெடிகளின் ஓசையூடே, தென்னங் கள்ளை மாந்திய சுதியில்

ஆதி ஆதாம் செய்த கோதினை நீக்கவே
அற்புதன் வெல்லை மலை ஓரம்
ஆடடையும் குடில் மார்கழிக் கூதலில்
ஆண்டவன் வந்து பிறந்தாரே – எம்மை
மீண்டவன் வந்து பிறந்தாரே

கிழடுகள் பாடிக்கொண்டே தள்ளாடித் தள்ளாடி நடப்பார்கள்.. வலைக்கம்பான்களால் வேப்ப மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல்களில் சிறுவர்கள் தேவன் மானிட னானாரே-சென்று பணிந்திடுவோம் வாரீரே! எனக் கீதம் பாடி ஆடிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த வருடம் எங்கு அழப் போவது? செப மாலைக் கிழவிக்கு விடை தெரியாத வினா வாகவே இது அமைந்து விட்டது!

சென்ற ஆண்டு உள் நாட்டுப் போர் தொடங்கிய போது ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஊர் அமைதி யாகவே இருந்தது. சண்டை நடந்த இடங்களிலிருந்தெல் லாம் மக்கள் அகதிகளாக ஓடி இங்கேதான் வந்தார்கள. படிப்படியாக இராணுவம் அவ்விடங்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்ட பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் தான் கடைசியாக இங்கு வந்தார்கள்.

அமைதியாக இருந்த அந்தக் கிராமம் அல்லோல கல்லோலப் பட்டது. வங்காளக் கடலிலிருந்து போர்க் கப்பல்கள் வேட்டுக்களைத் தீர்த்தன. மேலே ஆகாய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன. தரைப்படையினர் ‘ஷெல்’ அடித்து வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டே முன்னேறி வந்தனர்.

இந்த வேட்டுக்களினாற் சிலர் இறந்தார்கள். தரைப் படையினர் ஊரைப் பிடித்துக் கொண்ட பின்னர் நடந்த தேடுதலில் பலர் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று எவருக்குமே தெரியாது. இதற்கும் மேலாகப் படையினர் வந்தபோது. தாங்கள் கொல்லப் பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இளைஞர்கள் பலர் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள். அவர்களிற் பலர் ஆனை யிறவுப் போரிலே இறந்து விட்டதாக ஊரிலே பேசிக் கொள்ளப் படுகிறது.

இப்படியாக ஊரிலே ஒவ்வோர் வீடும் யாரோ ஒருவரை இழந்தேயிருக்கிறது! இந்த லட்சணத்தில் எந்த வீட்டுக்கென்று சென்று அழுவது? யாருக்காக அழுவது? செபமாலைக் கிழவிக்கு இந்த வினாவிற்கு விடை தெரியவேயில்லை.

மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. தன்னுள்ளே யோசித்து மறுகிய செபமாலைக் கிழவி அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று தன் ஒப்பாரிக் குழுவினரை அழைத்துக் கொண்டு நேரடியாகக் கோயிலுக்கே சென்றாள்.

அழைத்து சென்று தலைக் கிழவி கோயிற் பீடத்தின் ஒரு பக்கத்தில் சிலர் மாட்டுத் தொழுவத்தைச் சிருட்டித்துக் கொண்டிருந்தனர். பீற்றர்க் கிழவர் சாமப் பூசைக்கான பாடல்களுக்குக் – கடைசியாக ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தார்.

செபமாலைக் கிழவி தன் கூட்டத்தினருடன் நடுக் கோயிலிற் கைகளை விரித்து நெடுமுழந்தாளிலிருந்து கொண்டு, “பூலோகத்தில் நல்ல மனதுள்ளவர்களுக்குச் சமா தானத்தைக் கொண்டு வந்த இரட்சகரே! எங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளும்” என்று உருக்கமாகப் பிரார்த்தித்தாள.

அவள் கண்கள் உண்மையாகவே கண்ணீரைச் சொரிந்தன.

– வீரகேசரி 93

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *