கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,895 
 

(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழக்கப்படாத புது இடம். மார்கழி மாதத்து வாடைக்குளிர். நுளம்புக்கடி. எல்லாமாகச் சேர்ந்து எனக்கு விழிப்பு வந்துவிட்டது.

ஆனாலும் எழுந்திருந்து படிக்கவோ எழுதவோ முடியாத சூழ்நிலை. எனக்குப் பக்கத்து மேசைகளில் என் உதவியாளர்கள் துயில்கின்றனர் எதிர்த்த மேசையிலே போலீஸ்காரர் துயின்று கொண்டிருக்கிறார். அகாலத்தில் எழுந்து விளக்கை ஏற்றி அவர்கள் துயலைக் கலைக்க நான் விரும்பவில்லை. விழித்துக்கொண்டே படுத்தபடியிருக்கையில் என் மனம் எங்கெங்கோவெல்லாம் ஓடுகின்றது.

இப்படியான விடியற்காலை அறிதுயில் வேளைகளில் என் மனம் எழுதாக் கிளவியாய் எத்தனையோ கதைகளைச் சிருஷ்டித்திருக்கிறது. அவைகள் எல்லாமே உருவம் பெற்றிருப்பின், ஈழத்துப் பிரசுரகளங்கள் அத்தனையுமே என் சிருட்டிகளைத் தாங்கிக்கொள்ளப் போதுமானதாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இன்றும் இந்த அறிதுயில் நிலையில் என் மனம் கதை எழுதிக் கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களையும் கதைக்கருவையும் தேடி எங்கும் அலையவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை . கடந்த மூன்று நாட்களாகப் புதிய இடத்தில் நான் பெற்ற அனுபவங் களே கதையாக என்னுள் விரிகின்றன.

ஆமாம். க. பொ. த. பரீட்சை நிலையத்தின் இணைப்பதிகாரியாக மூன்று நாட்களின் முன்னர் வந்தேன். எனக்கு உதவியாக இரண்டு ஆசிரியர்கள். எம் மூவரையும், நாம் காவல் பண்ணும் வினாப்பத்திரங் களையும்—ஏன் விடைப்பத்திரங்களையும் பாதுகாக்க ஒரு போலீஸ்காரர், எங்கள் நால்வரைச் சுற்றியும் அப்படியுமல்ல, நானொழிந்த மற்ற மூவரையும் சுற்றிச் கருள் விரியும் அந்தக் கதை…

இந்த இணைப்பதிகாரி உத்தியோகமே சோம்பேறித் தனமான வேலை. காலையிற் பரீட்சை தொடங்கமுன்னர் சுமார் எட்டு மணியளவில் பரீட்சை மேற்பார்வை யாளரிடம் அன்றைக்கான வினாப் பத்திரங்களைக் கொடுக்க வேண்டும். சாயந்தரம் பரீட்சை முடிவடைந்ததும் மேற்பார்வையாளரிடமிருந்து விடைப்பத்திரங் களை வாங்கிக் கொண்டு பற்றுச் சீட்டுக் கொடுக்க வேண்டும். பின்னர் குறிப்பிடப்படாத ஒரு நேரத்தில் வரும் மேலதிகாரி ஒருவரிடம் விடைப்பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். மொத்தமாக அரைமணித்தியால வேலைகூட இருக்காது ஒருநாளில். மற்றையப் பொழுதை யெல்லாம் தடுப்புக் காவற் கைதியைப்போல சோம்பேறித் தனமாகக் கழிக்க வேண்டும். அந்தச் சோம்பேறித்தனம் இன்றைக்கு அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது!

நான் ‘கை காவலாகக்’ கொண்டு வந்த புத்தகங்களை எடுத்துப் படிக்கவும் முடியாத நிலை. மற்றவர்களின் துயிலைக் கலைத்து விளக்கேற்ற என் மனம் ஒருப்படவில்லை. ஆகவேதான் படுத்த படுக்கையிற் கிடக்கிறேன். ஆனால் மனதிற்குத்தான் சும்மா இருக்கின்ற திற மில்லையே!

வாசகர்களுக்கு என் கதாபாத்திரங்கள் மூவரையும் பற்றி இவ்விடத்திற் சொல்லத்தான் வேண்டும்.

எனது உதவியாளர்களான ஆசிரியர்களிருவரும் 1956 ற்குப் பிந்திய பண்டார நாயகா யுகத்தில் தங்கள் கல்வியை ஆரம்பித்து, எமது கிராமத்துப் பாடசாலை களில் க. பொ. த. சித்தியடைந்து ஆசிரிய நியமனம் பெற்று-அவர்கள் ஆசிரிய நியமனம்பெற்றதே சுவாரஸ்ய மான கதையாக அமையலாம்- எழுபதுகளுக்குப் பின்னால் ஆசிரிய பயிற்சியை முடித்துக் கொண்டவர்கள் இக்கால கட்டங்களைச் சரித்திர ஆசிரியன் போலக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. அந்த இருவருக்கும் அங்கிலமோ, சிங்களமோ தெரியவே தெரியாது. ஆமாம். ஐம்பத்தாறாம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம்வந்ததின் பின்னால், தமிழ்ப் பாடசாலைகளில் இருந்த சிங்கள ஆசிரியர்கள் எல்லாருமே போய்விட்டார்கள். ஆசிரிய ராக இல்லாமற் கிளாக்கராகியிருந்தால் உத்தியோகத் தைக் காப்பாற்றவேண்டிச் சிங்களம் படித்திருக்கலாம்.

ஆம். ஐம்பத்தாறாம் ஆண்டுச் சம்பவங்கள் சிங்கள வரையும் தமிழரையும் தத்தமது தாய்மொழியிலேயே எழுதவும் பேசவும் ஊக்கமளித்தன. அதுவரை காலமும் தமது சகோதரர்களது மொழியான சிங்களத்தைத் தாமாவே விரும்பிக் கற்ற தமிழரிடையே அம்மொழியின் மேலே வெறுப்பையும் துவேஷத்தையும் வளர்த்தன.

சிங்கள மக்களிடையே இது எம் நாடு. சிங்களமே இந்நாட்டின் மொழி; என்ற எண்ணம் துளிர்விட்டது. தமிழைக் கற்பதை அவர்கள் எண்ணிக்கூடப் பார்க்க வில்லை இந்தக்கால கட்டத்திற் பிறந்து வளர்ந்தவர் தான் மற்றைய கதாபாத்திரமான போலீஸ்காரர், இருபதைத் தாண்டிய இளைஞரான அவருக்குத் தமிழோ ஆங்கிலமோ கொஞ்சங்கூடத் தெரியாது!

ஐம்பத்தாறாம் ஆண்டில் ஏற்பட்ட விரிசலின் அகண்டமான பிளவை இன்று நான் சந்திக்கிறேன்.

ஐம்பத்தாறுக்கு முன்னே நான் மலைநாட்டில் ஆசிரியராக இருந்ததினால் எனக்குச் சுமாராகச் சிங்களம் பேசவரும். எனது ஆங்கில அறிவிற்கு இவ்விடத்தில் எவ் வேலையும் இருக்கவில்லை. தெரிந்த சிங்களத்தை வைத்துக் கொண்டு எனது உதவியாளர்களான ஆசிரியர் களுக்கும் போலீஸ்காரருக்கு மிடையில் ‘தர்ஜுமா’த் தொழில் பண்ணும் ரசமான பொழுதுபோக்கு என் தலை யில் விடிந்திருந்தது.

நேற்று …. வேறு எந்த வேலையும் இல்லாததினால் என் உதவி யாளர்கள் சமையல் செய்வதென்று தீர்மானித்தார்கள். முதல் நாள்லரை கடையிலிருந்து வந்த எடுப்புச் சாப்பாட் டிற்குப் பிரியாவிடை. சொல்லியாயிற்று. ஆசிரியர்கள் இருவரும் சமையலில் மிக உற்சாகமாக ஈடுபட்டார்கள்.

பொலிஸ்காரருக்கு அந்தக் கவலையில்லை. பக்கத்தில் இருக்கும் பொலிஸ் நிலையத்திலிருந்து அவருக்குச் சாப்பாடு வந்து விடுகின்றது.

“தெருவாற் செல்லும் மீன்காரனை மட்டும் வர வழைப்பது உங்கள் பொறுப்பு’ என்று எனக்குச் சொல்லி விட்டு மற்றைய அலுவல்களை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் வெளியே தாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு கையிற் கம்பராமாயணத்துடன் தெருவையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறேன். சைக்கிள்காரன் “மீன்” எனக் கத்தியதும் நான் அவனை வரவழைத்தேன்.

கடற்கரையோரத்திலிருந்து சற்று உள்ளே விலகி யிருக்கும் கிராமமாகையால் மீன் சற்று விலையாகத்தான் இருக்கும் என்று தெளிந்துகொண்ட நான் மீன்கார னுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் ‘நெருப்பு விலை’ சொல்லிக் கொண்டிருக்கிறான்.

அறைக்குள்ளிருந்து பொலிஸ்காரர் வருகிறார். மீன் காரன் என்ன நினைத்தானோ தெரியாது. ‘ஆறு ரூபாய்க்கு ஒரு சதம் குறைத்தாலும் இல்லை’ என்று அடம்பிடித்தவன் ஐந்து ரூபாய்ச்கே மீனைத் தந்து விட்டான்!

மீன்காரனின் வருமானத்தில் ஒரு ரூபாயைத் தட்டிப் பறித்த உணர்வு என் மனதிலே மிஞ்சியது. ஆயினும் மீனை வாங்கிக் கொண்டேன்.

பொலிஸ்காரர் மீன்காரனோடு பேசிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களில் ஒருவர் சொன்னார். “பொலிஸ் காரனாலதான் றாத்தல் ஐஞ்சு ரூபாய்க்குத் தந்தான்.”

இந்தச் சிங்களப் பொலிஸ்காரங்க இப்படித்தான் நம்ம மக்களைக் கொள்ளையடிக்கிறாங்க” என்றார் அடுத்தவர்.

“கொள்ளையடிக்கிறதில தமிழன் சிங்களவன் எண்ட வித்தியாசமில்ல. நாமகூட அவன் கேட்ட ஆறு ரூபாயக் குடுக்கத் தயாரில்ல” என்றேன் நான்.

“ஆனாலும் இந்தப் பொலிஸ்காரங்க மிச்சம் மோசம். அதிலயும் சிங்கள வங்கள் நம்ம மக்களை மிரட்டிப் பிடுங்கிறாங்க.” என்றார் முதல் உதவியாளர்.

“ஓமோம். காக்கிச் சட்டை க்கும் மொறட்டுச் சிங்களத்துக்கும் பயந்து நம்ம மக்களும் காசை கொடுக் குதுகள்” என்றார் அடுத்தவர்.

பொலிஸ்காரர் ஆசிரியர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். தன்னைப் பற்றி அவ்விருவரும் ஏதோ குறைவாகக் கதைப்பதாக அவர் எண்ணியிருக்க வேண்டும். என்னிடம் கேட்டார். “என்ன சொல் றாங்க?”

“உங்களைக் கண்டுதான் அஞ்சு ரூபாய்க்கு ஒரு றாத்தல் மீன் தந்தாகச் சொல்றாங்க.”

என் மொழி பெயர்ப்பிற் திருப்தியடைந்தவர் போலத் தோன்றிய பொலிஸ்காரர் தன் பாட்டிற் சொல்விக் கொண்டார் “தராட்டா நான் விடன், அவன் யாபாரமே செய்ய முடியாது.”

அவர் பேச்சிலே ஒரு அகம்பாவம் தொனித்தது. புதிய தலைமுறையினரான சிங்கள வரிடம். அதிலும் ஆயுதப் படையினரிடம் இந்த அகம்பாவம் இருப்பது அனுபவத்திற் கண்டது தான்!

இதன் காரணந்தான் என்ன? என் மனம் எங்கோ தாவுகிறது.

சுதந்தரோதய காலம். தெற்கு மலை நாட்டிலே, தேயிலைத் தோட்டங்களின் சந்தை நகரத்திலே நான் ஆசிரியர்! என் மனம் நிறையத் தீவிர இடதுசாரித் தத்துவங்கள்.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அந்நகரின் வைத்தியசாலை, தபாற்கந்தோர், பகிரங்க வேலைப்பகுதி, சுகாதாரத் திணைக்களம், புகையிரத நிலையம், ஆங்கிலப் பாடசாலை என்ற அத்தனை அரசாங்கக் காரியாலயங்களிலும் தமிழ் உத்தியோகத்தர்கள்! ஏன்? கடைத்தெருவிலும் தோட்டங் களிலுங்கூடத் தமிழர்களின் ஆதிக்கந்தான்!

இந்த நிலையில் இங்குள்ள சிங்கள மகன் ஒருவன் ‘ஏன், இந்த உத்தியோகங்களுக்கெல்லாம் எம்மவர் வரக்கூடாது? என்று நினைப்பானாயின், அவன் எண்ணம் வகுப்புவா தமல்ல என்றுதான் என் இடதுசாரி மனம் சொல்லிக் கொண்டது! எப்போதாவது ஒரு காலத்தில் அந்த நிலமை வரத்தான் போகிறது என்றும் நான் நம்பினேன். ஆனால் அந்த மாற்றம் வந்த முறை…

“நாங்கள் பார்க்க வேண்டிய உத்தியோகங்களை எல்லாம் சுப்பையாவும், கந்தையாவும் பிடித்துக் கொண் டார்கள். தொழில் வாய்ப்புக்களையெல்லாம் ‘அந்திய ரான’ தமிழர் அபகரித்துக் கொண்டார்கள்” என்று தேர்தல் மேடைகளில் இடது சாரிகளின் தந்தை என்று வர்ணிக்கப்பட்டவர்களே முழங்கினார்கள். அந்த முழக்கம் என் காதிலே இப்போதும் தெளிவாகக் கேட் கிறது!

சிங்களம் மட்டும் என்ற சட்டத்திற்கு மூல காரணம் உத்தியோக வேட்கைதானா?

சிங்களம் கற்ற எல்லோருக்கும் உத்தியோகமில்லை என்ற நிலை நாளாவட்டத்தில் ஏற்படுகையில் இந்தத் துவேஷம் மறைந்து விடுமென்றுதான் நான் நம்பினேன்.

ஆனால் நீரினடியிலே வலோத்காரமாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த கிடைச்சி, கையை எடுத்ததும் திமிறிக் கொண்டு உத்வேகத்துடன் வெளிவந்ததைப் போல – ஒன்றரை நூற்றாண்டு காலமாக அடங்கிக் கிடந்த மக்கள், சிங்களம் மட்டும் கற்றுக்கொண்டு – நாட்டின் மற்றைய தேசிய மொழியை அறிந்து கொள்ள விரும்பாமல்-உத்தியோகத்திற்கு வந்த சிங்கள மக்கள், ஒருவித அகம்பாவத்துடன் தான் கிளம்பியிருக்கிறார்கள். தேசீய மென்ற வார்த்தைக்கே அவர்கள் சிங்களத் தேசியமென்று தான் அர்த்தப்படுத்துகிறார்கள். தாம் ஆளும் இனம் என்ற உணர்வு எப்படியோ அவர்கள் மனதில் பதிந்து விட்டது.

நடுத்தர, மேற்தட்டு வர்க்கத்தினரிடையே ஊடு மொழியாக இருந்த ஆங்கில அறிவும் குன்றி, ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இப் பிளவு மேலும் விரிவடைந்து விட்டது. சிங்களப் புதிய தலைமுறையினர் மற்றையவர்களைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறார்கள். மற்றைய சமூகத்தை அடக்கி ஒடுக்குவது தம் புனிதமான கடமை என்றும், அப்படியாக அடக்கி வைத்திராவிட்டால் அவர்கள் எப்போதாவது ஒருநாள் மீண்டும் தம்மீது குதிரை விடுவார் களென்று அவர்கள் எண்ணுகிறார்களா?

என் மனம் 1958லும், 1977லும் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களை எண்ணிப் பார்க்கிறது.

முன்னைய கலவரத்தில் ஆயுதப் படைகள் குண்டர் களை அடக்கின. காரியாலயங்களிற் சிங்கள உத்தியோ கத்தர் தமிழ் உத்தியோகத்தர்களுக்குப் பாதுகாப்பு அளித், தார்கள்.

பிந்தியதிற் கலகத்தை நடத்தியவர்களே பொலிஸ் காரர்கள் தாமே. துவேஷம் நடுத்தர வகுப்பாரிடமும் பரவிக் காரியாலயங்களில் எந்தத் தமிழருக்குமே பாது காப்பு இல்லை.

மாரியம்மன் கோயில் ஒலிபெருக்கி அலறித் திருவெம் பாவை தொடங்கி விட்டதை அறிவிக்கின்றது.

பக்கத்து டெஸ்குகளில் படுத்திருந்த ஆசிரியர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து, கைவீளக்கை ஏற்றி வைத்துவிட்டு மார்கழி நீராடப் ‘பங்கயப் பூம் புனலை’ நோக்கிச் செல்கிறார்கள். கைவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது!

விழித்துக் கொண்ட பொலிஸ்காரர் என்னிடம் கேட்கிறார் “ஏன் ஒலி பெருக்கி சப்திக்கிறது?”

நான் அவருக்குத் திருவெம்பாவைப் பூசை பற்றி விளக்குகிறேன்.

பொறுமையற்றவராக என் விளக்கத்தைக் கேட்டவர் வெளியே சென்று சலம்விட்டு வந்த பின்னர், கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கைவிளக்கைப் படீர் என்று அணைத்து விட்டுக் கட்டிலிற் சரிகிறார்.

“குளிக்கச் சென்றவர்கள் இங்கு வந்துதான் கோயி லுக்குச் செல்வார்கள்” என்று அவருக்கு விளக்கிய நான், எழுந்து சென்று கதவை வெறுமனே சாத்திவிட்டு வரு கிறேன். மீண்டும் படுக்கையிற் சரிவதைத் தவிர வேறு வழியில்லை. விளக்கையும் ஏற்றவில்லை.

மீண்டும் என் நினைவுக் கொடிகள் எங்கெங்கோ படர்கின்றன.

சனத் தொகைக்கு ஏற்பச் சிங்கள மக்களுக்கு அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்படத்தான் வேண் டும். அதற்காக மற்றைய சமூகங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைகளை மறுப்பது தான் தார்மீகமா? பதவி உயர்வுகள், புதிய நியமனங்கள் சம்பந்தமாக எதிர்க் கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் எடுத்துக்காட்டும் புள்ளி விவரங்களை நினைத்துக் கொள்கிறேன். பொலிஸ், இராணுவம் போன்ற ஆயுதப் படையணி யினரில் சிறுபான்மையினரான தமிழருக்கு இடமே கிடை யாதா? ஏன் நான் பிறந்து வளர்ந்த திருக்கோணமலை வட்டாரத்திற்கு அரசாங்க அதிபராக ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ வர முடியுமா? அரசாங்க அதிபர் ஏன்? எந்தத் திணைக்களத்தை எடுத்துப் பார்த்தாலும் இது தானே கதை. அரசு முன்னெச்சரிக்கையாக எமது மாவட்டத்தை ஒரு ‘அல்ஸ்ரர்’ ஆக்கிக்கொண்டு வருகிறதா? சிங்கள சமூகம் ஆளப் பிறந்தது என்பதுதான் பொருளா?

வெளியே காலடி ஓசை கேட்கிறது. நான் தலைமாட் டிலிருந்த ரோச்லைற்றை எடுத்துக் கதவுப் பக்கமாக ஒளியைப் பாய்ச்சினேன். நீராடி விட்டு வந்த இருவரும் உள்ளே வந்து மீண்டும் விளக்கை ஏற்றிக் கோயிலுக்குப் புறப்பட ஆயத்தமானார்கள்.

“யார் மாஸ்ரர் விளக்கை அணைத்தது?”

“நான் தான் மற்றவருக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதல்லவா?”

எதிரே படுத்திருந்த பொலிஸ்காரர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குப்புறப் படுத்துக் கொண்டார். கடிகாரம் மணி நான்கரை என்று சொல்லிக் கொண்டி ருந்தது.

உடையணிந்து கொண்டு என் உதவியாளர் இரு வரும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். எனக்கும் கோயிலுக்குப் போக ஆசைதான்! ஆனால் நான் இணைப்பதிகாரி! வினாப் பத்திரங்களைப் பாதுகாக்கும் தலையாய பொறுப்பு என்னுடையது! எனவே எழுந்து உட்கார்ந்து கொண்டு கம்பனைப் புரட்டினேன். வாடைக் காற்று சில்லென்று ஊதிக் கொண்டிருந்தது.

பொலிஸ்காரரும் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந் தார். வெருகலுக்குப் புறப்படும் முதல் பஸ்ஸின் உறுமல்-தேனீர்க் கடைஅலுமீனியக் கரண்டி பித்தளைக் குவளையைத் தட்டும் ஓசை-திருப்பள்ளி யெழுச்சிப் பாடலின் சுநாதம் – எல்லா மண்ணுலகத்து நல்லோசைகளும் என் காதை வந்தடைகின்றன.

“மாஸ்ரர் நான் வெளியே போய் வாறன்”

‘சரி. போய் வாங்க”

“துவக்கு இருக்கிறது மாஸ்ரர். பார்த்துக் கொள்ளுங்க.”

“சரி, பாத்துக்கிறன்”

“எனக்குப் பயமா இருக்கு.”

“ஏன்?”

“துவக்கை விட்டுப் போவதற்கு”

“அப்படியானால் கையோட அதையும் எடுத்துக் கொண்டு போங்க.”

“உங்களிட்ட எனக்குப் பயம் இல்லை .”

“அப்படியானால்…”

“மற்றவர்களிடம்.”

“எவருமே அதைத் தொட மாட்டார்கள்”

“இல்லை. அவர்கள் இருவரும் என்னேரமும் என்னைப் பற்றித்தான் கதைக்கிறாங்க.”

“அப்படியில்ல. மொழி விளங்காததினால் நீங்க அப்படி நினைக்கிறீங்க.” நான் பலமாகச் சிரித்தபடி மீண்டும் சொன்னேன்.

“பொது மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய நீங்கள் தமிழையும் கொஞ்சம் படிக்க வேண்டும்.”

“நாங்க ஏன் தமிழ்ப் படிக்க வேணும். நீங்க சிங்களம் படியுங்க.”

“சிங்களப் பொது மக்கள் தமிழையும், தமிழ்ப் பொதுமக்கள் சிங்களத்தையும் படிக்கத் தேவையில்லை. ஆனால் அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க உத்தியோகத்தர்கள் இரு மொழிகளையுந் தெரிந்திருப்பது நல்லது:”

“இல்லை, நாங்கள் பெரும்பான்மையினர். உத்தி யோகத்திற்கு வரும் தமிழர்கள் தான் சிங்களம் படிக்க வேணும். சரி, மாஸ்ரர் நான் வாறன், தேத்தண்ணி குடிக்க வேணும்” என்று கூறிவிட்டு அவர் வெளியே போகிறார்.

என் மனம் மீண்டும் அலைபாய்கிறது. சிங்கள மகன் ஒருவனின் உண்மையான மனோ நிலையே இதுதானா?

பேராசிரியர் ஜெயதேவா ஹெட்டியாராய்ச்சி அவர் களின் ஆய்வு என் மனத்துள் நெளிகிறது.

“நாட்டின் உயர் கல்விப் பீடமான சர்வ கலாசாலைச் சிங்கள மாணவர்களில் மிக மிகக் குறைந்த விகிதத்தினரே தமிழ் மாணவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருக்கின்றனர். இத்தோழமை யுணர்வு சிங்கள மாணவர்களை விடத் தமிழ் மாணவர்களிடம் அதிகமாகவுள்ளது.”

நம்மிடம் தோழமையுணர்வை வைத்துக் கொள்ள விரும்பாத ஒரு சமூகத்தினரிடம் நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?

“பந்தியிலிருந்து எழும்பு” என்பவர்களிடம் நாம் ஏன் “கல்லை பொத்தல்” என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்?

பிரிந்து போவது ஒன்றேதான் நாம் கௌரவமாக இருப்பதற்கு ஒரே வழியா?

1956ல் சிங்களம் மட்டும் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது கலாநிதி கொல்வின் ஆர்.டி.சிக்வா அவர்கள் பேசியது என் ஞாபகத்திற்கு வருகிறது.

Parity: Mr Speaker, we beleive is the road to freedom of our nation and the unity of its components. Otherwise two torn little bleeding states may yet arise of one little state, which has compelled by a large section itself to treason.

ஆமாம் ஒரு மொழி இரண்டு நாடு என்று அன்று அவர் சொல்லியது நிறைவேறத்தான் போகிறதா? கோயிலிலிருந்து திருவெம்பாவைப் பாடல் கேட்கிறது.

“எம்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க” என்ற அடிகளுக்கு என்னுள்ளே புதிய அர்த்தம் தொனக்கிறது. ஞாயிறு உதயமாகிக் கொண்டு வரும் அடிவானத்திற் செம்மை படர்வதை என் கண்கள் ஜன்னலூடே வெறிக்கின்றன.

– அலை ‘82

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *