தூரத்தில் தெரிந்த கடலின் அலைகளைவிட அதிகமாக அலைபாய்ந்து கொண்டிருந்தேன் நான். நான் நாராயண், நண்பர்களுக்கும் அலுவலகத்திலும் மாடர்னாய் நரேன். அமர்ந்திருந்தது ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் அந்த பெரிய ஹோட்டலின் மொட்டை மாடி பார். உடன் என் நண்பன் ஈஸ்வர்.
“என்னடா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே?”
“இல்ல ஈஸ்வர், கம்பெனியில சேந்து போன ஜனவரியோட மூணு வருசம் முடிஞ்சிடுச்சி. இன்னமும் எந்த மாற்றமும் இல்லை. அதே டெஷிக்நேஷன், அதே சம்பளம், அதே வேலை.. ரொம்ப கடுப்பா இருக்குடா”
“ஏன் சலிச்சிக்கிற நரேன்? இப்ப நீ சீனியர் கன்சல்டன்ட்டா இருக்க, ஆனா வேலை பாக்குற ரோல் என்னவோ ப்ராஜக்ட் மேனேஜர்தான். ஏறத்தாழ ஒன்றரை வருசமா இந்த 15 பேர் டீமை கட்டி மேச்சிட்டு இருக்குற. பெரிசா பிரச்சினைகளும் ஒண்ணும் வரலை, அதனால இந்த முறை உனக்கு கண்டிப்பா ப்ரோமோஷன் கிடைச்சிடும் கவலைப்படாத”
ஈஸ்வருக்கு எல்லா விசயமும் தெரிவதற்குக் காரணம் அவன் என் நெருங்கிய நண்பன் என்பது மட்டுமல்ல, அவனும் என் கம்பெனியிலேயே வேலை செய்பவன். இரண்டு வருடங்களுக்கு முன் என் ரெஃபரல் மூலம் என் கம்பெனியில் சேர்ந்தவன், ஏற்கனவே ஒரு டியர் ஒன் கம்பெனியில் வேலை செய்தவன் ஆகையால் சுலபமாக மேனேஜர் டெசிக்நேஷனிலேயே சேர்ந்தவன். சேர்ந்த ஒரே வருடத்தில் ப்ரோமொஷனுடன் அசோசியட் டைரக்ட்ராகி 120 மெம்பர் அக்கவுன்ட்டை வழிநடத்திக் கொண்டிருப்பவன்.
“நீ என் அக்கவுன்ட்ல இருந்தா பிரச்சினையே இல்ல, பிஸினஸ் யூனிட் ஒண்ணாவே இருந்தாலும் நீ வேற அக்கவுன்ட்ல இருக்குற, அது மட்டுமில்லாம நாம ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ்னு ஊருக்கே தெரியும். அதனால என்னால உனக்கு பரிஞ்சு பேசவும் முடியாது, ஸாரிடா நரேன்”
“ச்சீ.. இதுக்கு எதுக்கு ஸாரி எல்லாம் கேட்டுகிட்டு? எனக்கு கவலை என்னான்னா நம்ம பி.யூ.வோட சைசே ரொம்ப சின்னது. இதுல சீனியர் கன்சல்டன்ட்ல இருந்து மேனேஜர் ப்ரொமொஷன் அதிகபட்சம் ஒருத்தருக்குதான் கிடைக்கும். அதுதான் கவலையா இருக்கு”
“நல்லதே நடக்கும்னு நினை. ஏன் எதுனா பிரச்சினை இருக்கும்னு நினைக்கிறயா?”
“ஒரே விசயம்தான் அரிச்சிட்டு இருக்கு. போன அக்டோபர் டூ டிசம்பர் க்வார்டர்ல நான் குடுத்த ரெவின்யூ ஃபோர்காஸ்ட்டை அச்சீவ் பண்ண முடியலை. ரெண்டு டெவலப்பர்ஸ் கல்யாணம்னு மூணு மூணு வாரம் லீவு போட்டுட்டாங்க. அதுல ரெண்டு வாரம் கோஇன்சைட் ஆனதுனால நான்பில்லபிள் ரிசோர்ஸசை வெச்சிம் பில்லிங்கை சரி பண்ண முடியலை. எப்படியோ அப்ப பேசி சமாளிச்சிட்டேன். இப்ப ப்ரோமொஷன் ரேட்டிஃபிகேஷன்ல இதைப் பேசுனா பிரச்சினையாகுமேன்னு பாக்குறேன்”
“அட விடுறா.. பி.யூ லெவல் மேனேஜர் ப்ரோமொஷன் ரேட்டிஃபிகேஷன் மீட்டிங்ல நானும்தான் இருப்பேன். பாக்கலாம் உங்க ஆளு உன்னை எப்படி டிஃபன்ட் பண்ணுறாருன்னு, சரி கிளம்புறேன்டா நானு”
“ஓகே.. பை”
ஒரு மாதத்தை மன அழுத்தத்துடனே ஓட்டிய பின், அன்று மாலை என் அக்கவுன்ட் ஓனர் சுந்தர் என்னை அழைத்தார். உள்ளுக்குள் ஏதோ குறுகுறுவென ஏறத்தாழ அவரது கேபினுக்கு ஓடினேன்.
சம்பிரதாயமான ப்ராஜக்ட் அப்டேட்ஸ், நல விசாரிப்புகள் முடிந்ததும் அவரே மேட்டருக்கு வந்தார்.
“நரேன், நீ இந்த கம்பெனியில சேந்து மூணு வருசமாச்சி. ஏறத்தாழ கடந்த ரெண்டு வருசமா இந்த ப்ராஜக்ட்டை அழகா ஹேண்டில் பண்ணிட்டு இருக்க”
“தேங்க் யூ சுந்தர்”
“நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். நான் இந்த அக்கவுன்ட்டுக்கு சார்ஜ் எடுத்துட்ட கடந்த ஒரு வருசத்துல எனக்கு அதிகமா பிரச்சினையே குடுக்காம, ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் எவர் க்ரீனா இருக்குற ஒரே ப்ராஜக்ட் உன்னோடது”
நிமிர்ந்து பெருமையாக உட்கார்ந்தேன்.
“ஐ நோ.. நீ உன்னோட ப்ரோமொஷனை எதிர்பார்த்துட்டு இருக்குற. என்னைக் கேட்டா, ஐ வுட் ஸே யூ டிஸர்வ் தட்”
சில விநாடிகள் என் கண்களையே தீர்க்கமாக பார்த்தார் சுந்தர்.
“பட், ஐ’ம் ஸாரி நரேன்.. இந்த முறை என்னால உனக்கு ப்ரோமோஷன் வாங்கித்தர முடியலை”
காலுக்கு கீழே பூமி நழுவியது. கண்களில் எதாவது நீர் திரையிடுவது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தலையை கீழே கவிழ்த்தேன்.
“ஐ நோ ஹவ் இட் ஃபீல்ஸ்.. நான் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். இந்த முறை ப்ரோமோஷன் ப்ராசஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நம்ம பிஸினஸ் யூனிட்ல இருந்து ஒரே ஒருத்தரைத்தான் மேனேஜரா ப்ரோமோஷன் பண்ணமுடியும்னு சொல்லிட்டாங்க. இருந்தது நாலு கன்டெஸ்டென்ட்ஸ். லாஸ்ட் ரெண்டு வரைக்கும் நீ ரேஸில் இருந்த, பட்..”
தலையைக் குனிந்தவாறே கையை உயர்த்தி அவர் பேசுவதை இடைமறித்தேன்.
“இந்த அக்கவுன்ட்டுக்கு மூணு வருசம் உழைச்சதுக்கு எனக்கு இவ்வளவுதான் மரியாதை இல்லையா? ஒருவேளை ஈஸ்வரோட அக்கவுன்ட்ல இருந்திருந்தா இந்நேரம் எனக்கு கண்டிப்பா ப்ரோமோஷன் கிடைச்சிருக்கும் இல்லையா சார்?” அந்த சார் என்பதில் இருந்த கேலி அவருக்கும் புரிந்திருக்கும்.
சிறிது நேரம் அவர் எதுவும் பேசாமல் போக, தலையை உயர்த்தி அவரைப் பார்த்தேன். எந்த உணர்ச்சியும் காட்டாத வழக்கமான போக்கர் ஃபேஸுடன் என்னையே தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன அமைதியாகிட்டீங்க சுந்தர்? உங்ககிட்ட இதுக்கு பதில் கிடையாதுன்னு தெரியும். நான் சீட்டுக்கு போறேன்” என்று வெறுப்பாக பேசிவிட்டு எழுந்து திரும்பி கதவில் கை வைத்தேன்.
அவர் இப்போது பதில் பேசினார் “நான் இப்ப என்ன சொன்னாலும் உனக்கு மனசு ஆறாதுன்னு எனக்கு தெரியும். ஆனா ஈஸ்வரோட அக்கவுன்ட்னு சொன்னது என்னை ஹர்ட் பண்ணினதால நான் இதை சொல்றேன். நான் இப்போ சொல்லப் போறது கான்ஃபிடன்ஷியல் விசயம், ஆனாலும் சொல்லுறதுக்குக் காரணம் உன் திறமை மேல எனக்கு இருக்குற மரியாதைதான்”
கதவில் இருந்து கை எடுக்காமல் அப்படியே நின்றேன்.
“லாஸ்ட் டூல இருந்து நீ வெளியப் போனதுக்குக் காரணம் போன வருசம் கடைசி க்வார்ட்டர்ல நீ ரெவின்யூ டார்க்கெட்டை அச்சீவ் பண்ண முடியாம போனதுதான். உன்னோட ரெவ்ன்யூ ஃபோர்காஸ்ட் வெர்சஸ் டார்கெட் அச்சீவ்டு க்ராஃபை காட்டி, உன்னை விட தன்னோட டீம்ல இருக்குற ஷர்மிளாதான் பெஸ்டுன்னு ப்ரூஃப் பண்ணி, ஷர்மிளாவுக்கு இந்த ப்ரோமோஷனை வாங்கிக் குடுத்ததே ஈஸ்வர்தான்”
– ஜூன் 2010