நட்பதிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 5,604 
 
 

குமரேசனுக்கு சொந்த ஊர் தென்காசி.

சென்னையின் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலையில் இருக்கிறான். ஒருவாரம் முன்பு புதிதாக வந்து சேர்ந்த தன்னுடைய டீம்லீடர் கவிதாவின் மீது அவனுக்கு காதல் துளிர்விட்டது. ஒரு நாளில் குறைந்த பட்சம் பன்னிரண்டு மணிநேரம் அவளுடன் இருந்து வேலை செய்வதில் புளகாங்கிதம் அடைந்தான். ஞாயிறுகளில் ஏன் விடுமுறை என்று எரிச்சலாகக்கூட வந்தது.

கவிதா தன்னுடைய பாஸ். தன்னைவிட ஒரு வயது பெரியவள். ஸோ வாட்? தினமும் அவளை நினைத்து நினைத்து ஏங்கினான். வேலையில் கவனமுடன் செயல்பட்டு அவளிடம் நல்ல பெயர் எடுத்தான்.

மூன்று வருடமாக திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனில் தன்னுடன் தங்கியிருக்கும் அறை நண்பர்கள் சுந்தர் மற்றும் சிவாவிடம் கவிதாவைப் பற்றி அடிக்கடி புலம்பினான். அவர்கள் இருவரும், காதலை வெளிப்படையாக அவளிடம் சொல்லச் சொல்லி குமரேசனை உசுப்பேத்தி விட்டனர். கவிதாவுக்கு ‘சூப்பர்ஸ்டார்’ என்றும் பட்டப் பெயர் வைத்தனர்.

நண்பர்கள் வார இறுதியில் தண்ணியடிக்க கிண்டி எம்ஆர்ஸி செல்வார்கள். அவ்வளவுதான் சுதி ஏறிவிட்டால் ‘சூப்பர்ஸ்டார்’ பற்றிதான் நிறைய பேசுவார்கள். தண்ணியடித்த பிறகு, சுந்தரும், சிவாவும் குமரேசனை மட்டும் மேன்ஷனில் கழட்டி விட்டுவிட்டு பெண்சுகம் தேடிச் செல்வார்கள். குமரேசனுக்கு அது பிடிக்காது. “அதெப்படி காதலே இல்லாமல் ஒரு பெண்ணை அணுகி உடல்சுகம் அடைய முடியும்? அது அசிங்கத்தின் உச்சம்.” என்று அவர்களிடம் ஆர்க்யூ செய்வான்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ஏதோ ஒரு பதிய ஆங்கிலப் படத்திற்கு சுந்தரும், சிவாவும் செகண்ட் ஷோ சென்றனர். குமரேசன் அவர்களுடன் போகவில்லை.

தனியாக அவன் மட்டும் அறையில் படுத்திருந்தான். தூக்கம் வரவில்லை. அவனது நினைவுகள் கவிதாவையே சுற்றிச்சுற்றி வந்தன.

அதெப்படி ஒரு மின்னல் மின்னுவது போல தன்னுள் கவிதாவைக் கண்ட மாத்திரத்தில் எதிர் விளைவு நிகழ்ந்து விட்டது? ஆச்சர்யம் ஆச்சர்யமாகவே இருந்தது! அதைப் போல தன்னைப் பற்றியதான எதிர் விளைவு கவிதாவின் மனத்திலும் உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக அரும்பக் கூடிய சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வியை குமரேசன் எழுப்பிப் பார்த்தான்.

முயற்சி செய்தாவது தான் அவளைக் கவர்ந்து விடமுடியுமா என்று சந்தேகமும் ஆசையும் கொண்டான். கவர்வது சாத்தியமில்லை என்றே தோன்றியது. ஏன் சாத்தியமில்லை என்று அவனால் பகுத்துப் பார்க்க முடியவில்லை. கவிதாவை மணப்பவன் மிகுந்த பாக்கியசாலி என்று இரக்கத்துடன் நினைத்தான். கவிதாவை அம்மாவாக அடையும் குழந்தைகள் புண்ணியம் செய்தவர்கள் என்று துயரத்துடன் நினைத்தான். உடனே அவனுக்கு விசனமும் அழுகையும் ஏற்பட்டன.

தான் இந்த உலகத்தில் பிறந்ததே வீண் என்ற மனக்கலவரம் வந்தது… ‘தன்னை ஏன் அம்மா பெற்றாள்? ஏன் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பே செத்துத் தொலைத்தாள்?’ என்ற வெறுப்பும் பொருமலும் ஏற்பட, எழுந்து போய் வெறுமே கதவைச் சாத்திவிட்டு விளக்கை அணைத்தான். கண்களில் இருந்த நீரைத் துடைத்துக்கொண்டு பொத்தென்று படுக்கையில் விழுந்தான். வெகுநேரம் கழித்தே தூங்கினான்….

பொதுவாக தூக்கத்தில் குமரேசன் கும்பகர்ணன்தான். அவன் தூங்கி விட்டால் எந்த ஓசையும் சந்தடியும் அவனை விழிப்படையச் செய்வதில்லை. ஆனால் அன்று ஒரு உணர்வு நெரிசலோடும் விரக்தியோடும் தூங்கி விட்டிருந்ததால் ஏதோ சின்னச் சின்ன காலடி சப்தம் கேட்டதும், சட்டென அவனுக்கு தூக்கம் கலைந்துவிட்டது! சில நிமிஷங்களுக்கு இருளில் ஒன்றும் புரியாமல் படுத்திருந்தான்.

ரொம்பவும் மெல்லிய குரலில் பேச்சு சப்தம் கேட்டது. அவற்றில் ஒரு குரல் பெண்ணின் குரல் போலிருந்தது. ‘சினிமாவுக்குப் போனவர்கள் வந்து விட்டார்களா? மணி என்ன இருக்கும்?’ என்றெல்லாம் நினைத்தபடி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான்.

மறுபடியும் சிரிப்புச் சப்தம். இந்த சப்தம் நிச்சயமாக ஒரு பெண்ணின் குரல்தான்! அதுவும் அதே அறைக்குள் சரியான இருட்டில்! குபீரென்று வியர்த்துவிட்டது குமரேசனுக்கு.

படுக்கையில் இருந்து எழுந்து நின்றான். இருட்டில் தட்டுத்தடுமாறி நடந்துபோய் ஸ்விட்சைப் போட்டான். சுந்தரும் சிவாவும் திட்டமிட்டிருந்த விபரீதச் செயல் பளிச்சென்று புரிந்தது. மையமாக ஒரு பெண்; அவளுக்கு இருபுறமும் சுந்தரும் சிவாவும் அவளை இடித்தாற்போல் உட்கார்ந்திருந்தனர். அவசியமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். மூவரும் குடித்திருப்பது தெரிந்தது. குமரேசனால் இந்த கயவாளித்தனத்தை தாங்கவே முடியவில்லை.

குமரேசன் மிக மிகத் தணிந்த குரலிலும், உறுதியான தொனியிலும், “டேய் சிவா எண்ணிப் பத்தே பத்து நிமிஷம் தரேன்… அதுக்குமேல அந்தப் பொண்ணு நம்ம ரூமுக்குள்ள இருக்கக்கூடாது. மீறினா நானே கீழே இறங்கிப்போய் மானேஜர்கிட்ட சொல்லி உங்களை கையும் களவுமா பிடிச்சுக் கொடுப்பேன். இம்மீடியட்டா அவளை வெளியே அனுப்பு.” என்றான்.

பதில் இல்லை.

“பதில் சொல்லுடா சிவா. இப்ப நீ அவளை வெளியில அனுப்பப் போறயா இல்லையா?” குமரேசன் கோபத்தில் கர்ஜித்தான்.

சுந்தர் ஈனஸ்வரத்தில் கெஞ்சினான். “சத்தமா பேசாதடா குமரேசா.”

“சரி சத்தமா பேசலை. அவளை மொதல்ல வெளியில அனுப்பு.”

“இந்த அர்த்த ராத்திரில எங்கேடா கொண்டுபோய் இவளை விடறது?” சிவா எரிச்சலுடன் கேட்டான்.

“எங்க இருந்து கூட்டிட்டு வந்தியோ, அங்கேயே போய் விட்டுட்டு வா.”

“சும்மா உளறாதேடா… சினிமா தியேட்டர்ல இருந்து பாத்து கூட்டிட்டு வந்திருக்கேன். அதுக்காக இப்பவும் தியேட்டர்ல கொண்டுபோய் விடச் சொல்றியா என்னை?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சிவா.”

“அவ்வளவு ஆத்திரம் இருந்தா நீயே கொண்டுபோய் விட்டுட்டு வா.”

குமரேசனுக்கு மனத்தில் வெறி மூண்டது. “ராஸ்கல், கண்ட கண்ட சனியனை ரூமுக்கு இழுத்திட்டு வந்துட்டு திமிராவாடா பேசற?”

சுந்தரும், சிவாவும் தணிந்த குரலில் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஹைரோடு போனால் ஆட்டோ கிடைக்கும்; அவளை ஏற்றி மைலாப்பூரில் உள்ள அவளுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விடலாமென்று தீர்மானித்தார்கள். அவள் எழுந்து நின்று புடவையை சரிசெய்து கொண்டாள். சிவாவின் கைகளைப் பற்றிக்கொண்டு புறப்படத் தயாரானாள்.

சிவா செருக்குடன் குமரேசனைப் பார்த்து, “உன்னோட இஷ்டப்படியே கொண்டுபோய் விட்டுட்டு வரோம்… போதுமா? வா நளினி போகலாம்.” என்றான். வெளியே சென்றார்கள்.

அவர்கள் மூவரும் போனதும் தன் தூக்கம் கலைந்துவிட்ட எரிச்சலில் லைட்டை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான் குமரேசன். வேறு அறை பார்த்துப் போய்விடலாமா என்று யோசித்தான். சிவாவுடன் வந்த பெண்ணை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வந்தது. ச்சே! வாழ்க்கை எப்படியெல்லாம் மலினமாகிப் போயிருக்கிறது என்று எண்ணியபடி அவர்கள் இருவரும் பத்திரமாகத் திரும்பி வருவதற்காக காத்திருந்தான்.

அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

பொழுது விடிய சிறிது நேரம்தான் இருந்தது. ஆனால், குமரேசனுக்கும் சிவாவுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த வாக்குவாதத்தின் உக்ரம் இன்னும் தணிந்தபாடாக இல்லை.

ஆற்றாமையுடன் கோபம்கொண்டு கத்தினான் குமரேசன், “கல்யாணம் ஆகாத சின்னப் பசங்ககிட்டே பணம் பறிக்கிரதுக்குன்னே கழுதைங்க கேடுகேட்டுப்போய் அலையுதுங்க பார்…!”

“அவளைப் போய் ஏண்டா திட்றே? என்னைச் சொல்லு கேட்டுக்கிறேன்… நிறைய சம்பாரிக்கிற திமிர், ரத்தத் திமிர்; ஆம்பளைங்கற திமிர்.. பாவம் அவ என்ன பண்ணுவா? சோத்துக்கும், துணிக்கும் இல்லாமே, வேற எந்தக் க்வாலிபிகேஷனும் இல்லாமே, வேற எந்த வழியுமே இல்லாமத்தாண்டா வர்றா… உனக்குத் தெரிஞ்சா நீதான் ஒரு வழி சொல்லேண்டா அவளுடைய பொழைப்புக்கு…”

குமரேசன் சட்டென மெளனமாகிவிட்டான். சிவா விடவில்லை. “நீதான் உன் சூப்பர்ஸ்டார் கிட்ட சொல்லி அந்த ஆபீஸ்ல ஒரு வேலை வாங்கித் தாயேன் அவளுக்கு பாக்கலாம்…”

“நான் ஏண்டா வேலை வாங்கித் தரணும் இந்த மாதிரி கழுதைங்களுக்கு?”

“அப்ப வாயை மூடிட்டு கம்னு இரு. இல்லாத கொடுமையில கெட்டு அலையறவளுக்கு உன்னால ஹெல்ப் பண்ண முடியலைன்னா உன் வேலையைப் பாத்துகிட்டு சும்மா இரு. நான் ஹெல்ப் பண்றேன் அவளுக்கு.” சிவா புதிய ஆக்ரோஷத்துடன் சொன்னான்.

“பண்ணு பண்ணு, நல்லா ஹெல்ப் பண்ணு. ஆனா உன்னோட ஹெல்ப்பை இந்த ரூமுக்குள்ள கூட்டிட்டு வந்து பண்ணாத…” குமரேசன் இடக்காகச் சொன்னான்.

“நெனச்சா என்னால அவளைக் கல்யாணமே செய்துக்க முடியும். அந்த அளவுக்கு எனக்கு கட்ஸ் உண்டு. முடியுமா உன்னால?” சிவா சவால் விட்டான்.

“எனக்கு என்ன தலைவிதியா ஒரு இவளைப் போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு?”

“தலைவிதின்னு சொல்லி தப்பிச்சுக்காதே! உன்னால முடியாது. ஆனா என்னால முடியும் தெரிஞ்சுக்க.”

“ரொம்ப சந்தோஷம்டா.”

இருவருக்குள்ளும் ஒரு வேதனை மூண்டிருந்தது. தெரிந்தோ தெரியாமலோ நகர வாழ்க்கையின் சில ஆபாசமான பக்கங்களைப் பார்த்துவிட்ட அவஸ்த்தை இருவருக்குள்ளும் அரும்பியிருந்தது. அந்த அவஸ்தையின் நெருடலைத் தாங்க முடியாமல் குமரேசன் படுக்கையில் கவிழ்ந்து விட்டான். சிவா ஸ்டீரியோவை ஆன் செய்தான். தரையில் மல்லாந்து படுத்தபடி கூரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜன்னலுக்கு அப்பால் காகங்கள் பறக்கத் துவங்கியிருந்தன.

வெகுநேரம் வரைக்கும் ஓசையற்றுப் போயிருந்தது அந்த அறை. சுந்தர் மட்டும் எழுந்து குளித்து முடித்து, ஆபீசுக்குக் கிளம்பிச் சென்றான். சிவா வெறுமனே கண்களை மூடிக் கிடந்தான். ஆபிஸிற்குப் போகாமல் படுத்துத் தூங்கலாம் போலிருந்தது. சில கணங்கள் யோசித்தான். லீவு போடுவது அனாவசியமாகத் தெரிந்தது. குமரேசன் யார்? என் நண்பன். அவனுக்கு என்னை அதிகாரம் பண்ண உரிமையில்லையா.. அதுவும் நான் தவறு செய்யும்போது…! ஒரு சின்ன விஷயத்திற்குப் போய் ஏன் மனசில் இந்தப் பதட்டமும் வியாகூலமும் என்ற சஞ்சலம் எழுந்த வினாடியே படுக்கையிலிருந்து சிவா துள்ளிக்குதித்து எழுந்தான். குமரேசனை அடித்து எழுப்பினான்.

“குமரேசா, எந்திரிப்பா. எட்டேகால் ஆகுது மணி. எந்திரிச்சு சட்டுபுட்டுன்னு ஓடு ஆபீஸுக்கு…”

குமரேசன் எழுந்து உட்கார்ந்தான்.

“நேத்திக்கி நைட் நடந்ததுக்கு ரொம்ப சாரிடா குமரேசா! ஏதோ ஒரு மூட்ல பண்ணிட்டேன். மன்னிச்சுக்க.”

“பரவாயில்லடா சிவா. வழக்கமா எந்த விஷயத்துக்குமே ரொம்ப ஷார்ப்பா ரியாக்ட் பண்ற மாதிரியே நேத்திக்கும் பண்ணிட்டேன். ஸாரி… உன்னை நான் ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சிடு என்னை… ஆனா எதையும் வெளில வச்சுக்க. ரூமுக்கு கூட்டிட்டு வராதே ப்ளீஸ்…”

“நமக்குள்ள என்னடா? வரட்டுமா.. ஈவ்னிங் பார்ப்போம்.”

“ஓயெஸ்.”

“உன் பாஸ்னு பாக்காம சும்மா உன் சூப்பர் ஸ்டாரை சைட் அடி! பயப்படாதே, எது வந்தாலும் நான் பாத்துக்கறேன். என்னிக்கும் அழற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்! சும்மா ஓங்கி அழு!!”

குமரேசன் சிரித்தபடியே “ஓகே ஸி யூ” என்றான். மனம் சிறிது லேசாகி இருந்தது.

ஆபீஸ் புறப்படலாம் என்ற நினைப்பில் நேற்றுக் கழற்றி ஹேங்கர்களில் தொங்க விட்டிருந்த பேண்டையும் ஷர்ட்டையும் எடுத்தவன், திடீரென யோசித்தான். பேண்ட் ஷர்ட் வேறு மாற்றிக் கொண்டால் என்னவென்று தோன்றியது.

கவிதா தினசரி என்னென்ன புடவைகளில் வருகிறாள் என்று தான் பார்ப்பது போல; தான் என்னென்ன ஷர்ட்களில் வருகிறேன் என்பதை அவள் கவனிக்க மாட்டாளா என்ற சந்தேகம் வந்தது. ஓர் அழகான புடவையில் வருகிற எந்தப் பெண்ணையும் கவனித்துப் பார்க்கிற ஆர்வம் ஓர் ஆடவனுக்கு வருவதுபோல; அழகான உடையணிந்து வருகிற ஆடவனைக் கவனித்துப் பார்க்கிற ஆர்வம் பெண்ணுக்கும் வருவது இயல்புதானே என்று குமரேசன் அர்த்தம் பார்த்தான். இனி தினம் ஒரு ஷர்ட்.. தினம் ஒரு மேட்சிங் பேண்ட்! உடனே புதிய உடைகளை அணிந்தான். கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்தான். கச்சிதமாக இருந்தது.

தன் தோற்றம் தந்த திருப்தியோடு குமரேசன் ஆபீஸுக்கு கிளம்பி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தான். தெருவில் போவோர் வருவோர் எல்லாம் – குறிப்பாக இளம் பெண்கள் தன்னுடைய ஷர்ட்டையே பார்ப்பது போலிருந்ததில், குமரேசனில் என்றைக்குமே தோன்றியிராத வினோத உணர்வுகள் தோன்றித் தளும்பின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *