தேவதைகள் காத்திருப்பார்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 6,401 
 
 

20 வருடங்களுக்கு பிறகு

சொந்த ஊரில் யாரோவாக நிற்பது என்ன மாதிரி மனநிலை என்று தெரியவில்லை.

எனக்கு முதலில் போக வேண்டும் என்று தோன்றிய இடம் ‘முத்துகுமாரா’ திரையரங்கம். பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு 50 அடி தூரத்தில் இருக்கும் அந்த திரையரங்கைத்தான் நான் அரை மணி நேரமாக தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த இடம்தானா என்று எத்தனை கூர்ந்து பார்த்தாலும்….அங்கே திரையரங்கம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்

கட்டப் பட்டிருந்தது. என்னால் உணர முடிந்தது. இந்த இடத்தில்தான் டிக்கெட் கவுண்ட்டர் இருக்கும். இந்த வழியாகத்தான் உள்ளே சென்று சைக்கிள் பாஸ் போட வேண்டும். அங்கே கேன்டீன் இருக்கும். இந்த இடத்தில்தான் திரை இருக்கும். இதற்கு முன் வரை 2 ரூபாய் டிக்கெட் சீட்டுகள். மேலே பால்கனிக்கு 2.50 பைசா.

நான் நின்று கண்கள் சுழல சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அழுக்கு படிந்த நீலத்தில்… கிரீடம் வைத்தது போன்ற முகப்பு இருக்கும். அட்டையில் செய்து வைத்தது போல தான் முகப்பின் வடிவம் இருக்கும். ஒரு முறை பால்கனியில் அமர்ந்து ஜன்னல் வழியாக கையை வெளியே நீட்டி சுவற்றைத் தட்டிகூட பார்த்திருக்கிறேன்.

கால மாற்றத்தில்…. எல்லாமே மாறி போயிருக்கிறது. காம்ப்ளக்ஸ்குள் நிறைய சின்ன சின்ன கடைகள். உலகமே விற்பதற்கு தான் என்பது போல… எதை எதையோ விற்றுக் கொண்டிருந்தார்கள்.

என் கண்கள்… ஆழமாய் ஊடுருவி தேடின. நான் தேடி வந்த அந்த வட்ட தகரம் எங்கே. திரை இருக்கும் இடத்துக்கு பின்னால் தானே அந்த இடம் இருக்கும். நான் கண்களைத் தேய்த்துக் கொண்டே தேடினேன். மங்கிய யாவும் மூளையின் சரிவில் மெல்ல துளிர் விட்ட நினைவுகளாகின.

அந்த சம்பவம் நடக்கும் போது ஏழாவது கால் பரீட்சை லீவ்ல நான் ‘திருமூர்த்தி’ படம் பார்க்க வந்திருந்தேன். பாட்டி அடிக்கடி சொல்ற.. அந்த விஷயம் நினைவுக்கு வந்துச்சு. முத்துகுமாரா கொட்டாயிலருந்து மைசூர் திப்பு சுல்தான் கோட்டைக்கு……சுரங்க பாதை இருக்குனு சொல்றது. ஒண்ணுக்கு போற இடத்துக்கு பின்னால தான் இருக்குனு பசங்க பேசிக்கிட்டது நினைவுக்கு வந்துச்சு. இன்னைக்கு எப்படியாவது அதை பாத்தரணும்னு யோசனை வர… இடைவேளை முடிஞ்சு படம் மும்மரமா ஓடிட்டுருக்கும் போது மெல்லமா எந்திரிச்சு வெளிய போயி பின்னால போனேன். அப்டியே தேடிகிட்டு திரைக்கு பின்னாலருக்கற சந்துக்குள்ள போய்ட்டேன். ரெண்டு பேரு நடந்து போற அளவு சந்து அது. கால்ல எதோ தட்டு படுதேன்னு பார்த்தா பெயிண்ட் டப்பா ப்ரஸ் கிடந்துச்சு. அப்டியே இன்னும் கொஞ்சம் முன்னால எட்டிப் பார்த்தா…. திக்குனு ஆகிடுச்சு.

சந்துக்குள்ள இருட்டு படபடன்னு விலகிடுச்சு. இப்போ நல்லா பாக்க முடியுது. ஒரு சின்னப் புள்ள அஞ்சு வயசு இருக்கும்…..அழுதுட்டுருக்க….அது வாய பொத்தி ஒரு ஆளு… மடில உக்கார வெச்சு….. என்னமோ பண்ணிட்டு இருந்தான். என்னோட நிழல் அவன் கவனத்தை திருப்ப டக்குனு அந்தப் புள்ளையை தள்ளி வெச்சிட்டு என்னை பார்த்து ஓடி வர எட்டு வெச்சான். அதுக்குள்ள நான் கத்திகிட்டே… பின்னால் திரும்பி ஓட…..என் கால் பெயிண்ட் டப்பாவுல மாட்டி கீழே விழுந்துட்டேன். அவன் என்னை புடிச்சு இழுத்து….. நான் பயந்து விழுந்தமாதிரியே அவனை எட்டி உதைச்சு தள்ளி… உருண்டு……தடுமாறிட்டு இருக்கும் போதே…. இடது பக்கம் திறந்திருந்த குழி மாதிரி எதுக்குள்ளயோ விழுந்துட்டான். நான் கத்தினது அவன் கத்தினது அந்த சின்னப்புள்ள அழுதது எதுமே யாருக்கும் கேட்ருக்காது. பின்னால திரையில் ஓடற பட சத்தம் அவ்ளோ சத்தமா கேட்டுட்டு இருந்துச்சு.

நான் பயந்துகிட்டே மெல்லமா எட்டி பார்த்தேன். பாட்டி சொன்ன அந்த சுரங்க பாதை இது தான் போல. பெயின்டிங் வேலை நடந்துருக்கு. சட்டுனு
பக்கத்தில கிடந்த மூடியை எடுத்து….நகர்த்தி….. அந்த பாதை மேல போட்டு மூடிட்டேன்.

அந்த சின்னப்புள்ள பாவாடையை தூக்கி வயித்து பக்கம் பிடிச்சிகிட்டே என்ன பார்த்து சத்தம் வராம அழுதுட்டே இருந்துச்சு. நான் கிட்ட போய் அங்க கீழ கிடந்த ஜட்டியை எடுத்து போட்டு விட்டு பாவாடையை கீழே இறக்கி விட்டு…” யாரு பாப்பா நீ….. இது யாரு” என்றேன்.

“அப்பா….அப்பா…..” என்று அழுதது.

“அப்பாவா……..” என்று உள்ளே பயம் தோன்ற…. “சரி.. சரி.. சத்தம் போடாம வா..” என்று அதோட கையைப் புடிச்சு இழுத்துட்டே வேகமா தியேட்டர்க்குள்ள போயி உக்கார்ந்து மடில உக்கார வெச்சிகிட்டேன். எனக்கு என்ன செய்றதுன்னு தெரில. மூளை ஸ்தம்பிப்பது இது தான் போல. நடுங்கிட்டே உக்கார்ந்திருந்தேன். ஒரு வழியாக படம் முடிய…. கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்து…..” வீடு எங்க இருக்கு” என்றேன்.

மலங்க மலங்க பார்த்தது. ‘சரி வா’ என்று கூட்டிட்டு போயி போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல விட்டுட்டு ஓடி வந்துட்டேன்.

அந்த சந்து என் கண்களில் விழவேயில்லை. அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. இனம் புரியாத நடுக்கம் உடலில் திகுதிகுவென வேகமாய் பரவுவதை உணர முடிந்தது. போய்டலாம் என பட படவென திரும்பி நடக்கையில்…. யாரோ பட்டென என் கையை ஆதுர்யமாய் பற்றியதை உணர்ந்தேன். அனிச்சையாய் திரும்பினேன். உஷ்ணம் என் திரும்பலில் தகித்தது.

மூச்சிரைக்க.. முகம் சிவந்த ஒரு பெண் நின்றிருந்தாள்.

“யாரு என்பது போல… அவளை உற்றுப் பார்த்தேன்.

அந்த குட்டி பெண் கண்களுக்கு பக்கத்தில் இருந்த இரண்டு அடுத்தடுத்த மச்சங்கள் இவள் கண்களின் பக்கத்திலும் இருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *