தயிலை மலைகளையும் லயங்களையும் மூடி கவிந்திருந்த கும்மிருட்டு கலைந்து பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பசி கொண்ட நாயைப் போல் ஊளையிடும் பாக்டரிச் சங்கும் ஊதி ஆயிற்று.
அந்தத் தோட்டத்தின் அந்த டிவிஷனில் உள்ள பெண்கள் கூடைகளையும் முதுகில் போட்டுக் கொண்டு கணக்குப்பிள்ளை நிற்கும் பிரட்டுக் களத்திற்குப் போக சில நிமிஷங்கள் ஆகி விட்டன. இன்னும் சிலர் அங்கிருந்து அவதி அவதியாகப் பிரட்டுக் களத்தை நோக்கிப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பால் கொடுத்தது பாதி, கொடுக்காதது பாதியாகப் பிள்ளைக் காம்பராவில் கொண்டு போய் எறிந்து விட்ட பிள்ளைகள் அழுது கத்திக் கொண்டிருந்தார்கள்.
கரும்பாயி இன்னும் பிரட்டுக் களத்திற்குப் போகவில்லை. தன்னுடைய காம்பரா வாசலில் ஓரத்தில் கிடந்த கொழுந்துக் கூடையை எடுத்து வாசலில் வைத்து விட்டு அரையில் படங்குச் சாக்கைச் சுற்றிக் கட்டித் தலையில் போடும் சேலைத் துண்டையும் கையில் எடுத்துப் போவதற்கு ஆயத்தமாகத்தான் நின்று கொண்டிருந்தாள். ஒரு நிமிஷம் பிந்தி விட்டாலும் மலைக்குப் போவதற்கு துண்டு கிடைக்காமல் திரும்பி வரவேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். ஏனோ அவளது மனம் காலெடுத்து வைப்பதற்கு பயந்து சாகிறது. கலங்கிக் கொள்கின்றது.
விடியற் காலைப் பொழுது புலர யந்திர வாழ்க்கையில் இணைந்து போன தொழிலாளர்கள் எழுந்து “சட் புட்” என்று சகல வேலைகளையும் முடித்துக் கொள்ள சத்தம் சந்தடிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அதுவும் ஓய்ந்து விட்டது.
அவள் கலவரமடையாமல் காம்பராவின் ஸ்தோப்பு வாசலில் வெளி நிலத்தைப் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றாள்.கைவிரல்கள் ஒன்றையொன்று பிசைந்து கொண்டிருந்தன.
சூரியன் மங்கியும் வெளிச்சம் பட்டுக் கொண்டிருந்த மலைமுகடுகள் மலைபுகார்களினால் சாம்பல் குளித்துக் கொண்டிருந்தன.
“ஏ, சங்கூதியாச்சுத்தானே? அப்புறம் ஏன் நிக்கிறே? இண்ணைக்கும் ஒன்னையை வெரட்டப் போராங்களே. நேத்தும் வெரட்டிப் போட்டாங்க வேசமவங்க” அவளுடைய கணவன் பழனி அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவன் காம்பராவின் இருளான மூலையில் கம்பளியால் போர்த்துள்ள கால்களைத் தடவியவாறு கத்தினான். அவனுக்குப் பக்கத்தில் குழந்தை கிடந்து விரல் சூப்பியபடி கைகால்களை அடித்துக் கொண்டது.
கரும்பாயி நின்ற நிலையில் யோசனையோடு கணவனைத் திரும்பிப் பார்த்தாள். காம்பரா இருளில் அவனுடைய முகம் தெரியவில்லை.
பழனி மலைக்குப் போகாமல் விட்டு ஒரு வருஷமாகிறது. அவன் மலையில் பட்ட சவுக்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த போது மரம் அவனுக்கு மேல் விழுந்து காலிலும் கையிலும் பலத்த காயம்பட்டு தொடை எலும்பு முறிந்து விட்டது. தப்ப மாட்டான் என்ற நிலையில் “கவர்மெண்டு” ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் மூன்று மாதங்கள் இருந்து உடைந்த எலும்புகள் பொருத்தப்பட்டாலும் அவனால் நடக்கவோ, நிமிரவோ, குனியவோ, முடியாது. இப்பொழுது தொடை எலும்பில் ஏற்பட்ட வெடிப்பில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. வேதனையும் உளைவும். அவன் இனி வேலைக்குப் போகவே மாட்டான்.
அவனுக்கு நஷ்ட ஈடாகத் தோட்ட நிர்வாகம் கொடுத்த சிறிய தொகைப் பணம் ஆஸ்பத்திரிச் செலவுடன் முடிந்து மேலும் கடனாகியது.
கரும்பாயி அவனுக்குப் பதில் கூறவில்லை . அவளின் கண்கள் அவன் உருவத்தில் வெறித்திருந்தன.
அவள் காலையில் எழுந்து ரொட்டி சுட்டு அவனுக்கும் கொடுத்து காலுக்கும் மருந்து கட்டாமல் காம்பராவை விட்டு வெளியில் வரமாட்டாள். இன்றைக்கு அவனுக்குக் காய்ச்சற் குணமாக இருந்தது. அதற்குச் சுக்குத் தண்ணி வைத்துக் கொடுக்க கொஞ்ச நேரஞ் சென்று விட்டாலும் உடனே ஓடியிருந்தால் பீரட்டுக் களத்துக்குக் குறிப்பிட்ட நேரத்தில் போயிருக்கலாம் தான். –
அவளால் போகவே மனம் ஏவுதில்லை.
அவள் பலி பீடத்துக்குச் செல்லத் தயங்கும் செம்மறியாட்டுக் குட்டியைப் போல் தயங்கி நிற்பதும் நெஞ்சு உயர்ந்து தாழ்வதும், அதன் உள்ளே போரிடும் துல்லியமான ஆத்மார்த்தமான மனச் சங்கடங்களும் அவனுக்குத் தெரியாது. அவற்றை அவளால் அவனுக்குக் கூறவும் முடியாது.
“கரும்பு நீயேன் நிக்கிறே? நீ மலைக்குப் போகலயா? இந்த மாசத்திலே எத்தனை நாள் ஒன்னை விரட்டிப்புட்டானுக, இண்ணக்கும் விரட்டிப்புட்டா எத்தினை நாளாவுது? நம்ம காலம் எப்படிப் போறது? ஒன் உழைப்பிலேதானே இந்தக் குடும்பமே உயிர் வச்சிருக்கு!”
அவனுக்குக் கோபமும், வாழ்க்கையின் பயமுறுத்தலால் எழுந்த கலக்கங்களும், நோகும் கால்களைக் கைவிரல்களால் அழுத்தித் தடவிக்கொண்டு கரும்பாயியின் பின் உருவத்தைப் பார்த்தவாறு இருந்தான்.
பழனியின் தாய்க் கிழவி மீனாட்சி ஸ்தோப்பு மூலைக்குள் கிடந்தாள். அவளுக்கு வயது போய் கை நடுக்கமும் ஏற்பட்டு விட்டது. கொழுந்து எடுக்க முடியாது. அவள் கரும்பாயி கொடுப்பதைச் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடப்பாள்.
அவளுடைய உழைப்பில்தான் அந்தக் குடும்பத்தின் உயிரிருக்கிறது. அவன் சொன்னது சரி அவளுக்கும் அத் தோட்டத்தில் வேலை இல்லாவிட்டால் இப்பொழுது எங்காவது தெரு வீதிகளில் தான் ஒதுங்கிக் கிடக்க வேண்டும். அதைத்தான் கரும்பாயியும் சிந்திக்கின்றாள். அத் தோட்டத்தில் வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதனால் தன் ஆத்துமாவையே கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தச் சூழ்நிலையில் அந்தரப்படும் போது அதைக் கணவனிடம் எப்படிக் கூறுவது, அவனிடம் கூறி சம்மதம் பெறக் கூடிய காரியமா?
“என்ன கரும்பு ஏன் கலங்கறே?”
அவளுடைய வளைந்து சிவந்த மென்மையான கன்னங்களில் கண்ணீர் உருண்டு மினுங்குவதை அந்த இருளினூடும் கண்டு விட்டான் பழனி. அவன் உள்ளம் நடுங்கிற்று.
கரும்பாயி மெதுவாகப் போய் அவனுக்கு முன்னால் இருந்து அவனுடைய வாடி உறங்கிய முகத்தை வாஞ்சையோடு நோக்கினாள். அவளுடைய கைவிரல்கள் பழனியின் கால்களைத் தடவிக் கொண்டிருந்தன.
பழனிக்கு அவளைப் பார்க்கும் போது மனது பூரித்துவிடும். சகல துன்பங்களும் அதில் கருகிவிடும். அவளைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதினால் அவன் பெருமிதம் கொண்டான். அத்தோட்டத்தில் அவள் எல்லார் கண்களையும் கறுக்கி விழுத்தி விடும் அழகி. குறுகுறுத்து வாளித்திருக்கும் மென்மையின் திமிர் ஒவ்வொரு அங்கத்திலும் மிஞ்சி விழுகின்றது. வெளியில் உருண்டு விழுவது போல் மயக்கமாய்த் துள்ளும் மீனாட்டம் அமைந்துள்ள அவளது கண்கள். எத்தனை பேருக்கு மன இடறலைக் கொடுத்திருக்கிறது. ஆனால் அவை கிட்ட நெருங்க முடியாத திராணி கொண்ட கண்கள். பழனி அவளைக் காதலித்த காலத்தில் அவள் மேல் கண்போட்டு திருமணம் செய்து கொள்ள முயற்சித்த பலர் அவனோடு சண்டையும் பிடித்துக் கொண்டார்கள்.
“என்ன அப்படி பாக்கிறே கரும்பு? நான் இப்படி போயிட்டேனா?”
“அவளது கண்களும் கலக்கமுறப் பார்க்கின்றன. உனே அவன் குனிந்து தன் பக்கத்தில் கிடக்கும் தன் குழந்தை ஜானகியை கையால் தடவிக்கொண்டிருந்தான்.
“நீ தான் என் உசிரு!” கரும்பாயியின் கண்கள் துடிதுடித்துப் படபடத்துக் கொண்டிருந்தன. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உதட்டுக்குள் சிரித்தான்.
“அப்புறம் ஏன் கலங்குறே?”
“ஒண்ணுமில்லை!”
நெட்டுயிர்ப்பு நெஞ்சைப் பிளந்துவர, அவள் எழுந்து கையில் வைத்திருந்த சேலைத்துண்டை தலையில் போட்டுக் கொண்டு நடந்தாள். அவளுக்கு, தான் விரைவாக நடப்பதாக நினைப்பு. ஆனால் வழமையான துரிதம் இல்லாமல் மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்.
கடுங்குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.
தேயிலைக் கொழுந்துகள் பச்சைக் கம்பளம் செய்து எல்லா மலைகளையும் ஒன்றாக மூடி இருக்கின்றன. அந்த மலைத்தேரிகளில் மழை முகில்கள் குழந்தை களைப் போல் விழுந்து புரண்டு கொண்டிருந்தன.
பிரட்டுக் கலைந்து விட்டது. கணக்குப்பிள்ளையைக் காணவில்லை. அவர் பெரிய துரையின் பங்களாவுக்கருகில் உள்ள ஐந்தேக்கர் மலைச்சரிவிலேதான் நிற்க வேண்டும். நேற்றுக் கரும்பாயி அந்த மலைச்சரிவில் இருந்துதான் முத்தல் இலை எடுத்து விட்டாள் என்று லயத்துக்கு விரட்டப்பட்டாள்.
அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். கணக்குப்பிள்ளை அதே மலையில் கொழுந்தெடுக்கும் பெண்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். ஓங்கி அடித்துக்கொள்ளும் நெஞ்சத்துடன் கண்களைச் சரித்து பங்களாவோடு அண்டியுள்ள வாகை மரத்தின் கீழே கண்களை அசைத்தாள்.
அங்கே பெரிய துரை நின்றான். நேற்றும் அதே வெறிக் கண்களுடன் அதிகாரத் திமிர் பிடித்த கோலத்தில், கடும் பசியுடன் மானைப் பிடிக்க வலை விரித்துக் காத்து நிற்கும் ஒரு வேடனைப் போல தனியாக நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் கரும்பாயி அந்த மலையை நோக்கி வருவதை துடிதுடிப்புடன் அவதானித்துக் கொண்டிருந்தன.
விரிந்து உயர்ந்த குடை போல் இலைகளால் கவிந்து பரந்து நிற்கும் அந்த வாகை மரம் தன் ஆசை தீர சென்னிறப் பூங்களைக் குவித்துக் குவித்துப் பூத்திருக்கின்றன.
அவளுக்கு இருதயம்கூட இடித்துக்கொண்டது. முகத்தில் இயல்பான கவர்ச்சி வாடி பய உணர்வுகள் அழுத்திக் கொண்டிருந்தன. மனம் வெறுப்பில் புரண்டு வந்தது. என்றாலும்……..
அவள் தன் கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேலை வேண்டும். அந்த மலையை நோக்கித்தான் கால்கள் இழு பட்டுக்கொண்டிருந்தன.
உள்ளம் பழைய நினைவுகளில் உருண்டு வந்தன.
கரும்பாயி முன்பு ஒரு பெரிய துரைக்குக் கொழுந்துக் கூடையால் அடித்து பல் உடைத்து விட்டாள். அது இந்த துரைக்கும் தெரியும். இவன் அந்தந் துரையைப் போல் முரடனல்ல. அவள் பழனியைக் காதலித்துக் கொண்டிருந்த காலத்தில் அது நடந்தது. அன்று அவள் அழகில் குளித்துக் கொண்டிருந்தாள். அவளை அனுபவிக்க நினைத்த துரை மலையில் கொழுந்தெடுக்கும் நேரத்தில் தனியாக வரவழைத்து சேஷ்டை விட்டான். உடனே கரும்பாயி கூடையால் அவனுடைய முகத்தில் அடித்து விட்டு, ஓடி வந்து விட்டாள். அவமானம் அடைந்த அந்தத் துரையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொழுந்து எடுக்கும் பெண்கள் இதைப் பார்த்து விட்டார்கள். அவனால் ஏதாவது பொய் கூறி அவளைத் தண்டிக்க முடியவில்லை.
அடைக்கலங் குருவி தனக்கு வேண்டிய உணவுள்ள இடத்துக்கு பறந்து பறந்து செல்வது போல் அவளுடைய நெஞ்சம் அந்த நினைவில் சிறகடித்துக் கொண்டிருந்தது.
அவள் கணக்குப்பிள்ளைக்குப் பக்கத்தில் சென்று நின்றாள். கணக்குப்பிள்ளை நிமிர்ந்து பார்த்தான்.
“இது உன் அப்பன் வுட்டுத் தோட்டமா? நீ நெனச்ச நேரத்துக்கு வர்றத்துக்கும், போறத்துக்கும். வேலை இல்லை போ!”
தான் கூறு மட்டும் கரும்பாயியை தொடர்ந்து ஒரு மாதத்தில் ஏழு நாளைக்கு மேல் லயத்துக்கு விரட்ட வேண்டுமென்பது கணக்குப்பிள்ளைக்கு துரையின் உத்தரவு. உத்தரவை மீறினால் …
“என்னய்யா நீங்க? என்வூட்டுக் கஷ்டம் உங்களுக்குத் தெரியாதா?”
கணக்குப்பிள்ளைக்கு அவளின் நிலைமை தெரியும். அவன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவன் அனுதாபப்பட்டு என்ன நடக்கப் போகுது?
“நமக்குத் தெரியாது. அந்தா தொரை நிக்கிறாரு போய்க் கேளு!” கரும்பாயி குனிந்த தலை நிமிராமல் கண்களை நிமிர்த்தினாள்.
அந்த வெள்ளைக்காரத் தொரை வாகை மரத்தின் கீழ் அமைதியாக நின்றான். அவனுக்கு எந்த விதத்திலும் காரியத்தைக் குழப்பும் நோக்கமுமில்லை. அவன் சகலமும் உணர்ந்தவன். அவன் தேயிலைச் செடிகளைக் கரிசனையோடு பார்த்துக் கொண்டு நிற்கிறானாம். அவன் கைகளை விரிக்கும் எல்லைக்குள் இருக்கும் தேயிலைச் செடிகளில் பூத்திருப்பன புனிதமான வாசம் நிறைந்த சின்னஞ் சிறிய தேயிலைப் பூக்கள். அவன் சின்ன ராஜாவைப் போல நடை பழகும் போது விரும்பிய பூக்களை பிடிங்கிக் கசக்கி எறிந்தால் அவை மீண்டும் அவன் காலடியில் தானே விழுந்து கிடக்க வேண்டும்.
துரையின் கண்களின் கெடுவையும் அவற்றின் ஏக்கத்தையும் அவள் அறிந்திருந்தாள்.
“இப்படியே தினமும் விரட்டப்பட்டால் நம்ம வாழ்க்கையை எப்படி ஓட்டுறது”
இதயத்தின் உதைப்பு அவளுடைய காதுக்குள்ளே கேட்கிறது. தேயிலைக் கொழுந்தைப் பறித்துக் கொள்ளும் கைகள் நடுங்கின. திரும்பி கணக்குப் பிள்ளையைப் பார்த்தாள். பின்பு துரை நிற்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
கணக்குப்பிள்ளையின் இதயமும் துடித்துக் கொண்டது.
இவ்வளவு காலமும் அவளை வீட்டிற்கு விரட்டியும் அவள் துரையிடம் போகவேயில்லை. இன்றைக்குப் போகிறாள்.
ஆச்சரியாமாக அவளைப் பார்த்து விட்டுத் துரையைப் பார்த்தான் கணக்குப்பிள்ளை. அவன் இறைச்சித் துண்டை நினைத்துவிட்ட நாயைப் போன்று கண்வெட்டாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏய் வேகம் வேகம் தொரை வர்றாரு!”
கணக்குப்பிள்ளை கொழுந்தெடுக்கும் பெண்களை துரிதப்படுத்தி, கொழுந் தெடுப்பதில் அவர்கள் கவனத்தை திருப்பி விட்டான்
கரும்பாயி துரையின் பக்கத்திலே சென்று குனிந்த கண்களால் நிமிர்ந்து அவனையே பார்த்தாள். அந்தக் கண்களில் அச்சத்தின் கனம் நிறைந்திருந்தது.
“நீ நல்ல பொண்ணு இன்ணைக்குத்தான் ஒனக்கு புத்தி வந்ததா?”
அவன் வெள்ளைக்காரன், நன்றாகத் தமிழ் பேசுவான். நன்றாகச் சிரித்தான்.
அவள் பேசவில்லை. அவனுக்கு முன்னால் அவளுடைய வனப்பான மார்பகங்களையுடைய நெஞ்சம் கீழிருந்து உருகி வரும் அக்கினி குழம்பால் மேலுயர்ந்து தாழும் பூமியைப் போல் அசைந்து கொண்டிருந்தது.
கரும்பாயியின் அந்தக் கண்களைப் பார்க்க முழுதாக நோக்க துரைக்கு உள்ளே எழும் சின்ன உணர்ச்சிகளால் மூக்கு சிவந்தது. அவளை மெதுவாக நெருங்கி வந்தான். அவளின் மார்பகங்கள் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன. “கிறுக்கம்” கொண்ட துரை அவளின் கைகளை ஆவலாகப் பிடித்தான்.
“மிருகமே! சீ! சனியன்” அவள் தன் கைகளால் ஆவேசங்கொண்டு அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தாள்.
அவளின் முதுகின் பின்னால் தொங்கிய கூடை விழுந்து மலைச்சரிவில் உருண்டு கொண்டிருந்தது.
துரை திகைத்து விட்டான். அவன் எதிர்பார்க்கவே இல்லை.
கரும்பாயியின் கைகள் நடுங்க, மூச்சு வாங்க, கண்ணீர் கசிய உருளும் கூடையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“இரு இரு ஒன்னை ஒரு கிழமையில் தோட்டத்தை விட்டுத் துரத்திப் போடுன்”
துரை கன்னங்களைத் தடவியவாறு திரும்பிக் கோபத்துடன் நடந்தான். “தொரே, மன்னிச்சுடுங்க, நான் சம்மதொம்”
அவன் நின்று திரும்பிப் பார்த்தான். உதட்டுக்குள் சிரித்தான்.
அவளின் உள்ளத்தின் தீர்ப்பு, அவளோடு. அதன் நீதி அவளுக்கு மட்டும் தான் புரியும்.
கரும்பாயி தானே அவனை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
– சிந்தாமணி 1967 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995