கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 1,966 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாக்குதலுக்குப் பயந்து மக்கள், கடலோரப் பகுதி களிலிருந்து நாட்டின் உட்புறத்துக்கு ஓடினார்கள். கோட்டை யில் பீரங்கிகள் கடல் முகம் திரும்பித் தயாரில் நின்றன. ஆகாயங்களில் ராப்பகலாய் விமான ரோந்து. கப்பல் கப்பலாய்த் துருப்புகள் இறங்கி நடமாடின. வாயடைப்பு. அவசரச் சட்டங்கள். உன் நண்பனே சத்துருவாய் இருக்கக் கூடும். யாரையும் நம்பாதே. ஏன், நீயே அவனாய் இருக்கக் கூடாது?

பட்டணம் ‘வெறிச்’. எதிரும் புதிருமாய்க் காலி வீடு களின் வரிசைகளினிடையே தெருத் தெருவாய், ஓர் ஆசாமி கூடக் கண்ணுக்குப் படாமல், மணிக்கணக்கில், தன்னந்தனி யாய் நடந்து செல்லலாம். உன்னைக் கண்டு நீயே பயந்து போவாய். சென்னைக்குச் சாவுக் களை வந்துவிட்டது.

பகலே இப்படி ஆயின், இரவு ஏன் வருகிறது? ஆனால் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் ஒன்றும் தெளிவா யில்லை. பகலில் சில பயங்கள் பார்வைக்குத் தெரிகின்றன. இரவில் கண்ணுக்கும் புலப்படா…. பயங்கள். பயம், பயம், பயம்… மயம்…. மயம்… மயம்…. பயத்தைத் தொட்டுவிடலாம் போன்ற பரிமாணத்தில் பிரம்மாண்ட சிலிர்ப்பு கண்டது.

ஆகாயத்திலிருந்து மின்னல்கள் விழுந்தாற்போல, பூமி யில் அந்தப் பள்ளங்கள் (trenches) பாளம் பாளமாய்த் தோன்றின. பரந்த வெளிகளில், ‘பார்க்குகளில், பெரிய கட்டடங்களின் பின் புறங்களில், மறைவின் அணைப்பு இல்லாத இடங்களில், இந்தப் பள்ளங்கள் ஏறக்குறைய ஆள் உயரத்துக்கும் மேல், மார்பகலத்துக்குத் தோண்டப்பட்டு உள்பக்கம் செங்கல் சுவர்கள் எழுப்பி, இரண்டு மூன்று Zகள் அல்ல Mகள் கோர்த்தாற் போல், வங்கி வங்கியாகக் கோணிக்கொண்டு, கோணங்கள், சிமிட்டிப் பூச்சில் கன கூர்ப்பாய், தோன்றிய புதிதில் சற்று வேடிக்கையாய், ஏன், அழகாய்க்கூட விளங்கின. அபாயச் சங்கு ஊளையிட ஆரம் பித்ததுமே, மக்கள் ஓடி வந்து இந்தப் பள்ளங்களில் பதுங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு ஜனங்களைப் பழக்கவே விமானத்தாக்குதல் பாதுகாப்புப் படையினரின் ஏற்பாடுகள், பிரசாரங்கள், ஒத்திகைகள், அத்துக்கள், அமல்கள் நடந்தன.

ஆனால் அசல் தாக்குதல் நேராதவரை, ஜனங்களுக்குக் குளிர்விட்டுப் போனதும், இந்தப் பள்ளங்களை வேறு காரியங்களுக்கும் பயன்படுத்தினர். ஆகாயமே கூரையென வாழும் ப்ளாட்ஃபாரம் மக்கள், இந்தப் பள்ளங்களில் கழித்துக் கொப்புளித்து, தோய்த்துக் குளித்துச் சமைத்து, குடித்தனமே நடத்தினர். என்னதான் பாரா போட்டாலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை . நாளடைவில், காவல் காரனே, இந்தப் பள்ளம் வாழ் மக்களிடமிருந்து, அவர்கள் சுட்ட தோசை, இட்லி, இடியாப்பம், காய்ச்சினது சாயாவோ, சாராயமோ, லஞ்சமாவோ, உபசரிப்பாவோ, காசுக்கோ வாங்கிச் சாப்பிட்டான்.

இது தவிர இரவு வேளைகளில், அவைக்கே உரித்தான வேறு பிழைப்புகள் விழித்துக் கொள்கின்றன. அ- ஹெம் – அவைகளுக்கு இந்தப் பள்ளங்கள் சௌகர்யமாயிருந்தன.

இரண்டாவது உலக யுத்தம் போது, சென்னை பூண்ட போர்க் கோலத்தின் பூணாரம் இது.

மாலைச் சூரியன், அழுத களையில், மொட்டை மாடி களினிடையே விழுந்து கொண்டிருந்தான்.

என்னைத் ‘திலோ’ன்னு அளைப்பாங்க. நொம்ப நாளைக்கு அப்படின்னா என்னான்னு தெரியாது. லச்சுமி, முனியம்மா, காத்தாயி, ராஜாத்தி, ரேணுகா என்கற மாதிரி பளகின பேராயில்லேன்னு தெரியதுகண்டி;

அறிஞ்சுக்க அக்கறையுமில்லே.

அப்புறம் ஒரு நாள் பேரம் ஒண்ணு என்னைப் பேர் கேட்டது. எல்லாமே பேர் கேக்குதா ? வந்தோமா, வேலைய முடிச்சோமா, மூஞ்சிலே முக்காடு போத்திக்கிட்டு ஓடினோ மான்ன அவசரத்துலே தானே வருதுங்க! எங்கே விட்டேன்? ஆ. பேர் கெட்டுது. “திலோ ? ஓ திலோத்தமையா? அட, பேருக்கேத்தாப்பிலே தான் இருக்கே. என்ன முளிக்கறே? ரம்பை, திலோத்தமை கேட்டதில்லேயா?”

ரம்பை கேட்டிருக்கேன். ‘அட பார்றா இவளை! ரம்பைன்னு நெனப்போ?’ன்னு ஒத்தரையொத்தர் ஏசிப்போம்.

“திலோத்தமை ரம்பையை விட அழகு. அவளுக்குத் தனிக்கதையே இருக்கு. சரிசரி, கதைக்கிப்போ நேரமில்லே.”

அட, சொல்லாட்டிப் போயேன். கதை வேணும்னா, மூணுமணியாட்டத்துக்குப் போறேன். ஆனா, ஆறுமணிக்குத் திரும்பிடணும். தொழிலுக்குத் தயார் ஆவணுமில்லே, சீவி, முடிச்சிசிங்காரிச்சு –

ஆனா ஒண்ணு. என் பேர் என்னென்னு தெரிஞ்சிக் கிட்டப்புறம் நான் கொஞ்சம் ஜிலுக்குக் கூடத்தான். அப்பப்போ கைக் கண்ணாடிலே பார்த்துப்பேன். புருவத் துலே மை இன்னும் கறுப்பா தீட்டிக்கிட்டேன். உதட்டுலே சிவப்பு கூட பூசிக்கிட்டேன். உம், இப்ப பேட்டை சக்களத்திங்க என்னண்டை என்ன செஞ்சுக்க முடியும்? கண்ணாடி தான் சொல்லுதே!

என்னய்யா சிரிக்கிறே? இப்பத்தான் பல் விளுந்து, மயிர் உதிர்ந்து போச்சி. பவிஷு அளிஞ்சுப் போச்சு. ஏன்ய்யா, யுத்தம் வந்து போய் அம்பது வருஷம் ஆவப்போவுது, இல்லே ஆயிடிச்சா? அன்னி மாதிரியே இருக்க முடியுமா? உனக்கும் தான் – பொக்கை வாயிலே ஜொள்ளு கொட்டுது. ஆனா, ஆசைதான் விடல்லே. இல்லே?

உனக்கே இப்படியிருக்குமோ, அப்போத்தி ஆண்களுக்கு எப்படியிருக்கும்! அவங்க நாட்டையும் வீட்டையும் விட்டுட்டு இந்த ஜோல்ஜருங்க வந்தாலும் வந்தாங்க, நான் பேப்பர் படிக்கல்லே ரேடியோ கேக்கல்லே -ஆன எனக்கே தெரிஞ்சி போச்சு – குண்டு விளாமலே நாடு நாசமாப் போச்சு . வந்து மேஞ்சுட்டுக் கொளந்தையைக் கொடுத்துட்டுப் போயிட் பாங்க. இந்த வேண்டாத வினைங்களே என்னா செய்யறது? பெத்து ப்ளாட்ஃபாரத்திலே விட்டுட்டு யார் வீட்டு வாசல் லேனும் வளர்த்துட்டு , இல்லே குப்பைத் தொட்டியிலே கடாசிட்டுப் போ வேண்டியதுதான் ! இந்த மாதிரி எத்தினி நானே பார்த்திருக்கேன் தெரியுமா?

அடிப்போடீ! மஞ்சாக்கயித்துக்குப் பொறந்தது கந்தல் பாயிலே ஆவ் ஆவ்னு துடிச்சிட்டுக் கிடக்குது. இந்தப் பாலை அதுக்கு ஊட்டினாலும் அது புளைச்சுக்கும். இதைக் கட்டிக்கிட்டு மாரடிக்கச் சொல்றியா? உனக்குப் பாவம் பொங்குதுன்னா நீயே வெச்சு சீராட்டிக்கோயேன்!

அந்தப் பேச்சும் நியாயம் தானே! வவுத்துப் புள்ளையே பாப்பியா? வேணாமிலே முளைச்சதை வளப்பியா? சுமந்து பெத்ததாச்சேன்னு நியாயம் பேசறியா? சிரிப்பு வருது. சுமக்காமலே பெக்க முடியுமாய்யா?

இப்போ பேச்சுக்குச் சொல்றேன். ஆனா நிசமான பேச்சு. யுத்தம் முடிச்சு அப்பனும் ஆயும் தெரியாத புள்ளே ஒண்ணு அஞ்சு வயசுலே ப்ளாட்பார்த்துலே கிட்டுப் புள்ளி ஆடிச்சுன்னா அது என் மவனாக் கூடயிருக்கலாம். பாண்டி யாடினால் என் பொண்ணு, என் மக்கள்னு நெஞ்சுலே நெனைக்கலாம். வெளியே சொல்லிக்க முடியுமா?

யுத்தம் வந்தாலும் வந்தது, பட்டணம் இப்பிடித்தான் சிரிச்சுப் போச்சு. யுத்தப் பொறப்புங்கன்னு ஒரு தனிப் புள்ளைப் பயிரே நாட்டுலே உயிராயிடுச்சு. இந்தப் புள்ளைங்க, கருவிலேயே கலைச்சுது போக, பொறந்தவுடனே செத்தது இல்லே சாவடிச்சது போக மிச்சம் எங்கெங்கே எப்டி எப்டி வளந்தாங்களோ, நல்லபடியா வளந்து உருப்படியா ஆள் ஆனாங்களா, இல்லே கேடிங்களா மாறி

ஜெயிலுக்குப் போய்ப் போய் வராங்களா, குத்து கொலையே செஞ்சுட்டுத் தூக்கிலே தொங்கினாங்களா , கொடுத்தவ னுக்கும் தெரியாது பெத்தவளுக்கும் தெரியாது. எங்களுக்கு அந்த நேரத்துக்கு ஒடம்பே வித்ததுதான் தெரியும்.

ஒரு நெனப்புலே ஐயா, மனசு ஐயோன்னுதான் இருக்குது.

ஆனா ஒண்ணு. யுத்தக் கணக்குலே நல்லா சம்பாரிச் சோம். நேரம்தான் பத்தல்லே. தண்ணி தாண்டி வந்தவன் துட்டை எண்ணிப் பாக்கமாட்டான். அள்ளி வீசி எறிஞ் சுட்டுப் போவான். நம்மவன் தான் சாவு கிராக்கி.

சம்பாரிச்சதெல்லாம் சேத்து வெச்சிருந்தால் இப்போ ஒரு குடிசையானும் போட்டு, கலியாணம் கட்டி, கொளந்தே குட்டி பெத்துகிட்டு கௌரவமா வாழலாம். ஆனால் அத்தினியும் பாவப் பணமாச்சே, தக்குமா? இப்போ ஒரு சுருட்டுக்குத் துட்டுக்கு உன்னைக் கேக்கற நிலவரத்துலே இருக்கேன். கொடேன் ! ஓ, சுருட்டுப் புடிப்பேனே! இப்போ நான் பொம்பளையுமில்லே ஆம்புளையுமில்லே, எதுன்னு எனக்கே தெகப்பாயிருக்குது.

***

மாலைச் சூரியன் அழுத களையில் எட்டப் பெரிய மொட்டை மாடிகளிடையே விழுந்து கொண்டிருந்தான்.

குட்டைப் பிரம்பால் தொடையைத் தட்டிக்கொண்டு பள்ளங்களை நோட்டம் விட்டுக் கொண்டு அவைகளி னிடையே அவன் நடந்தான். அவனுடைய ப்ரஸன்னம் இந்தப் பள்ளம் சேரியில் ஒவ்வவில்லை. அவனை அவர்கள் வியப்புடன் பார்த்தனர். தங்களிடையே தோளிடித்துக் கிசுகிசுத்துச் சிரித்துக் கொண்டனர். “பொலிமாடு அலையுது பார்!”

நேரே ஸ்திரிப்பெட்டி அடியிலிருந்து புறப்பட்டாற் போல், கஞ்சி விறைப்பில் மிடுக்காயிருந்தான். மொட மொடக் காக்கி யூனிபாரத்தில் பித்தளைப் பொத்தான்கள் ‘பாலிஷ்’ஷில் பளபளத்தன. இந்த வெயில் அவனுக்கு ஆகவில்லை. மேல் தோல் வரண்டாற்போல் முகத்தின் கன்றிய செவப்பில் கண்களின் கடல் நீலம் அளாவியது. மாலைதான் என்றாலும் முகத்தில் வேர்வை கொப்புளித்த படி கைக்குட்டையால் அழுத்தித் துடைக்கத் துடைக்க, முகம் இன்னும் சிவப்பானது. எரிந்தது. கைக்குட்டையை ஒரு தடவை பிழிந்தான்.

திடுக்கென இரண்டு நாய்கள் பயங்கரமாய்ச் சண்டை யிட்டுக் கொண்டு, குரைத்துக் கொண்டு அவன் மேல் விழுந்தன. சட்டென எட்ட நகர்ந்து கொண்டான். ஒன்றன் கண் குதறிய பாதியில் அறுந்து தொங்கிற்று. ரத்தத்தைத் தரைமண் திட்டுத் திட்டாய் உறிஞ்சிற்று. வசியத்தில் அவை களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ரத்த வசியம்.

கண் இழந்த நாய் ஊளையிட்டுக் கொண்டு ஓடிற்று.

கன்றிய செயன்றாலும் முகதில் துடைக்கத் துடையை ஒரு மற்றது உடலை நக்கிக் கொண்டே குரைத்தது. அதுவும் ரத்த விளாறுதான். சற்று எட்டக் கிடந்த எலும்புத் துண்டை நோக்கி ஓடிற்று.

“Oh all this only for this?” அவனுக்குச் சிரிப்பு வந்தது. நகர்ந்தான். நடந்தான்.

“Dogs!”

பள்ளங்களின் அசூயைகளைப் பார்க்கக் கோபம் வந்தது. அருவருப்பாயிருந்தது. மூக்கையும் வாயையும் கைக் குட்டையுள் புதைத்துக் கொண்டு நடந்தான். கண்கள் அலைந்தன.

“Ah!” அவன் கண்கள் ஒளீரிட்டன.

பள்ளத்துள் அவள் நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளுடைய மேட்டு விழிகள் அழைத்தன. ஆனால் முகத்தில் இத்தனை பவுடரும் உதட்டில் இத்தனை சாயமும் அப்பியிருக்க வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் அதிகப்படிதான் அவர்கள் அறிந்த அலங்காரம்.

பள்ளத்துள் குதித்து வந்து அவள் எதிரே நின்றான்.

புள்ளி நல்லாத்தான் இருக்குது, சர்க்கஸ் புலியாட்டம். ஆனால் அம்மாகிட்ட இப்பத்தான் பால் உண்ண மூஞ்சியா யிருக்குது? ஆனால் அதுபத்தி எனக்கென்ன?

புன்னகை புரிந்தாள். அவனும் இளித்தான். அவன் தோளைத் தொட முயன்றான். அவன் கையை உதறினாள்.

“நோ, நோ, நோ! ரூப்பி, ரூப்பீ!” விரல்களைச் சுண்டிக் காட்டினாள்.

பான்ட் பைக்குள் கைவிட்டு ஒரு நோட்டை எடுத்து நீட்டினான்.

“நோ! நோ!” தலையைப் பலமாய் ஆட்டினாள். இவங்க கிட்ட சமயத்துலே கறந்தாத்தான் உண்டு.

இன்னொரு நோட்டு. “நோ? நோ?” சிரித்துக்கொண்டே இரண்டு வெள்ளி ரூபாய்களை அவள் கையுள் திணித்துத் தன் கையை விரித்தான்.

பணத்தை இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அசட்டுச் சிரிப்பில் நின்றனர். சுற்றுமுற்றும் காலியாத்தானிருந்தது. ஆள் இல்லை. அவங்களுக்குத் தெரியும். புரிஞ்சுக்கிட்டு ஒதுங்கிடுவாங்க. ஒரு புளைப்பு நடக்குதில்லே?

அவள் கையைப் பற்றி இழுத்தான். இப்போது அங்கே ஒரு சொந்தமும் முரட்டுத்தனமும் தெரிந்தன. நேரத்தை விலைக்கு வாங்கியாச்சில்லே?

அவன் கண்கள் கொதித்தன. அவள் தலைமயிரை பற்றித் தன் பக்கமாய் இழுக்க முயன்றான். அங்கு கட்டிய செண்டு மல்லியின் மணமயக்கம் அவனை வெறியனாக் கியது.

அவளுக்குக் கொஞ்சம் பயமாயிருந்தது. அருவருப்பு வேறே. தவளைக் குடலை அறுத்த மாதிரி இதென்ன நிறம்?

அப்போது பின்னாலிருந்து அவன் தோளில் ஒரு கை விழ, திரும்பினான்.

இவன் வந்த சந்தடியே கேட்கவில்லையே! பள்ளத்தில் எப்படி இறங்கினான்? குதித்தால் பூட்ஸ் சத்தம் கேட்கல்லியே?

ஆனால் வந்தவனின் வழி வழி வர்க்கம் அதன் மூலத்திலிருந்தே நிழலுடன் ஐக்கியமாகப் பழகினவர்கள். காலடியில் கசங்கிய சருகின் காற்றசைவிலேயே அதை மிதித்தது இரையோ, எதிரியோ, அதன் திக்கையும் விவரங் களையுமே படிக்கத் தெரிந்தவர்கள். அரவத்தை அடக்கி ஆள்பவர்கள். கானகத்தின் மோனத்தை, இரவின் நிசப்தத்தை அவை தம்முள் அடக்கிய ரகஸ்யங்களைத் தமக்கு மட்டும் பேச வைப்பவர்கள்.

ஒழுங்கு உடை, கறுப்பு நீலம் கசங்கியிருந்தது. இரும்புக் குண்டு போன்ற உருண்டைத் தலையோடு தலையாய்க் குல்லாய் போன்ற குட்டைப் பொடிச் சுருட்டை மயிர், பெரிய கண்களில் அவன் வந்த இருள் கண்டத்தின் அடவி களின் இருளும் அவைகளில் பதுங்கிய ஆபத்கரமும், இவை யிரண்டையும் மீறி ஓர் அகண்ட சோகமும் கவிந்து விழிகளே அரைக்கண்ணில் சொக்கியிருந்தன. உடல் பூரா விலங்கு லாகவம் சோம்பிற்று.

ஜன்மேதி ஜன்ம நிறப்பகை முகத்தில் சிந்த, இருவரும் எதிர் எதிர் நின்றனர். இடையே இடம் விறுவிறுத்தது.

முதலில் ஆங்கிலேயன்தான் தாக்கினான். நீக்ரோவின் தோளில் பிரம்பால் அடித்தான். உடனே வயிற்றில் ஒரு குத்து விட்டதும் நீக்ரோ வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருள்கையிலேயே அவன் முகத்தில் அடுத்தடுத்து இரண்டு குத்துக்கள். திலோ பயத்தில் உளறியபடி அவர்களிடையே பாய்ந்து பள்ளத்தின் சுவரோரமாய் ஒடுங்கி ஓடிப் போனாள்.

நீக்ரோ தலையை உதறிக்கொண்டான். மூக்கிலிருந்து ஒரு சிவப்பு நூல் புறப்பட்டது. மறுபடியும் வெள்ளையன் கை வீச இடம் கொடாமல் அவனை இரு கைகளாலும் அணைத்தான். நீக்ரோ இரண்டு அங்குலம் கூடவே உயரம்.

அதற்கேற்ப நீண்ட கைகள். அந்தக் கரடி ஆலிங்கனத்தில் வெள்ளையன் திணறினான். சடக்கென மின்னல் வேகத்தில் இரு கைகள் அவன் குரல்வளையில் விழுந்து நெரிக்கத் துவங்கின.

வெள்ளையன் அந்தக் கைகளைப் பியக்க முயன்றான். தன் முழங்காலால் நீக்ரோவின் வயிற்றில் இடிக்க முயன்றான். ஆனால் அந்த மரணப்பிடி கிணுங்கவில்லை. அது தனக்கென்றே தனி உயிர் பெற்று விட்டது. கைகளின் வீச்சுக்கோ உடலின் நகர்ச்சிக்கோ, பள்ளத்தின் குறுகல் இருவருக்குமே இடம் கொடுக்கவில்லை.

வெள்ளையனுக்கு விழிகள் பிதுங்கின. வெளிவந்து விடுமோ? பியத்துக்கொண்டு வெளிவந்துவிடும் போல், ரத்தம் முகத்தில் சதைக்கடியில் முட்டிற்று. மூச்சு! மூச்சு!! திண்டாடினான்.

தன் முகத்தை, கண்களை, விரல்களுக்குக் கிடைத்த இடத்தில், வெள்ளையன் கைகள், மூழ்குப்பிடியில் பிராண்டின இடங்களில், ரத்தம் பாளம் பாளமாய்க் கசிவதை அந்த வலியை நீக்ரோ உணரவில்லை. அவன் உடல், ஆவி, அகம், புறம் எல்லாம் ஓர் எண்ண ம், ஒரே எண்ணத்தின் குறி – கழுத்தின் முறிவின் முனைந்த தருணத் தின் தவமாகி, ஒருவிதமான பரவசத்தில் ஆழ்ந்தான்.

சட்டென்று ஒரு தும்மல் சத்தம்.

நீக்ரோவின் முகம் ஆச்சர்யத்தில் கோணிற்று. பற்கள் இளித்தன. கழுத்தின் மேல் அவன் பிடி தளர்ந்தது. எதிரி மேல் சாய்ந்தபடி, மெதுவாய்ச் சரிந்து, காலடியில் பஸ்பமாய் குமுங்கிப் போனான்.

ஆங்கிலேயனுக்கு மூச்சு இரைத்தது. சிதறுண்ட நினைவு கூட யுக நேரம் கண்டது. பார்வை நிலையுற்றதும் கையில் ரிவால்வரும், அதன் குழாயினின்று சுருண்ட புகைநூலும் புதிதாயிருந்தன. துப்பாக்கியைப் பான்ட் பையுள் திணித்துக் கொண்டான். தலை மயிருள் கைவிட்டுக் கோதிக் கொண் டான். வேர்வை கொட்டிற்று. பிரம்பு போன இடம் தெரிய வில்லை. அதுபற்றி நினைவுமில்லை. உடல் பூரா, ரணமாய் வலித்தது.

நீக்ரோவின் உடல் மேல் கால் வைத்து ஏறி – இட மில்லை – தாண்டுகையில் கடைசி வலிப்பில் நீக்ரோவின் உடல் புரண்டு நீண்டதும் வெள்ளையனுக்குக் கால் பிசகி இரண்டு கைகளும் பிடிக்கு அந்தரத்தில் துழாவின… பிடரி, பள்ளத்தின் கோணத்தில் பலமாய் மோதிய வேகத்தில் அதன் சிமெண்ட் கூரில் கழுவேறிற்று. கால்கள் தரை யில் படாமல் உடல் தொங்கிற்று. கால்கள் உதைத்துக் கொண்டன.

ஆகாய நீலத்தைக் கட்டாயமாய் மல்லாந்துவிட்ட முகத்தில் மாலைச் சூரியன் கண்களை நேரே பறித்தான். மேலே வேகம் படப் பெருகிக்கொண்டே வரும் அவனுடைய தனியிருளில், மரணாவஸ்தையையும் தாண்டி, பல ஆயிரங் கல் தூரமும் நேரமும் தாண்டிவிட்டு வந்திருக்கும் காதலி யின் முகத்தைக் கடைசி நினைவு, முழு முயற்சியுடன் கூட்ட முயன்றது.

ரேடியோவைத் திருப்பிவிட்ட முழு இரைச்சலில் –

“In the mirror of my eyes
Lemme feel the see of you
as you’d be seeing you
in my eyes!”

என்கிற பாட்டுக்கு ஏற்ப

மாற்றான் கட்டித் தழுவிய இறுகலுள்
மார்பில் மார்பகம் குழைந்து குலைய
தொடைக்கு மேல் ஏறிவிட்ட
உள்ளாடையின் ஓரத்து லேஸ்
அந்தரங்கங்கள் களவு காட்ட
ஜிக் ஜிக் ஜிகு ஜிகு
ஜக் ஜக் ஜகு பிகு
ஜிட்டர்பக்.

அவள் ஆடிக் கொண்டிருந்தாள்.

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *