திருப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 2,528 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நீலா, தனது சபதத்தை இப்படி நிறைவேற்றிக் காட்டுவாள் என்று ராமலிங்கம் நினைக்கவே இல்லை. அரசுப் பயணமாய், டில்லி சென்ற இருவாரக் காலத்திலும், அவள் சபதம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அப்படியே சிற்சில சமயம் வந்போது ‘பைத்தியக்காரப் பொண்ணு’ என்று மனதிற்குள்பேச, அந்தப்பேச்சே வாய் மத்தியில் கோடிட்டது. வீட்டுக்கு வந்ததும், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் என்றுகூட நினைத்திருந்தார். அந்தப் புறா, தனது குஞ்சுகளோடு, பறந்துபோனதை, இன்னும் அவரால் நம்ப முடியவில்லை.

நம்பித்தான் ஆகவேண்டும் என்பது போல் அந்த பெரிய கதவில் ஒரு சின்னப் பூட்டு, ஒரு பெரும் உறவை, ஒரு சின்ன விவகாரம் சிதைத்து விட்டது என்பது போல் காட்டும் காய்ப்பு பிடித்த பூட்டு. மூன்றடுக்கு தேக்குத் தாமரைப்பூக்கள் பொறித்த அந்த கதவிற்கு வலது பக்கமாய் திறந்திருந்த ஒற்றைச் சன்னல் வழியாய் கண்களை ஊடுருவவிட்டார். முன்னறை முழுவதும் விதவிதமான காகிதச் சுருள்கள்…. துண்டுப்பட்ட சணல்கயிருகள். எல்லாவற்றிற்கும் மேலாய், முன்னால் – துருத்தி, பின்னால் வளைந்து கலைப்பாடாய்த் தோன்றும் சீனப் பொம்மையைப் போல் தேக்குச் சட்ட வேலியிட்ட கண்ணாடிப் பேழை வெறுமையாய் தோற்றம் காட்டியது.

ராமலிங்கம், அந்தச் சாளரத்தின் இரும்புப் புருவங்களை ஒரு குத்துக்குத்தியபடியே. காரில் சூட்கேஸ், பெட்டிப்படுக்கை வகையறாக்களை, முதலைபோல் வாய் திறந்த டிக்கியிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த டிரைவருக்கு. கைகொடுக்கும் வழக்கத்தை மறந்தவராய், மாடிப்படிகளில் குதித் தோடினார். வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக ‘நீலா’ என்று அவர் இழுத்தபோது, மங்கையர்க்கரசி ‘இப்போ உங்களுக்கு திருப்திதானே’ என்று சொல்லிவிட்டு, அவர் ஏறிட்டுப் பார்க்கக்கூட தகுதியற்றவர் என்பதுபோல் உள்ளே போய்விட்டாள்.

ராமலிங்கம், ஒற்றைச்சோபா இருக்கையில் தொப்பென்று விழுந்தார். பின்னர் அதிலிருந்து எழுந்து நீண்ட சோபாவில் கைவிரித்து கால்விரித்துக் கிடந்தார். அந்தம்மா தண்ணீரோ மோரோ கொண்டுவந்து, அந்தத் தம்ளரை அவரது கரங்களில் திணிக்காமல் டொக்கென்று டீபாயில் வைத்தாள். நீலா, சென்னையில் இருக்கிறாளா அல்லது கோவைக்குப் போய்விட்டாளா என்று அவர் கேட்கப் போனார். அவள் கோவைக்குப் போகவில்லை என்று பதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக, எதிர்ப் பதிலை, தாங்க முடியாதவர் போல், அந்தக் கேள்வியைத் தள்ளிப்போட்டார்.

இவ்வளவிற்கும், நீலா அவர்களுடைய மகளல்ல. ஒட்டுப்புல்லாய் ஒட்டிக் கொள்ளும் உறவுப் பெண்ணும் அல்ல. கீழ்த்தளத்து வீட்டின் வாடகைக் காக வந்தவள்தான். இரண்டாண்டுகளுக்கு முன்பு, பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஏழுவயது மகனோடும், நாலு வயது மகளோடும், இந்த வீட்டிற்குள் வந்தாள். ‘எவ்வளவு சார் வாடகை… எவ்வளவு சார் முன்பணம்’ என்று வாசலில் நின்றபடியே கறாராகச் கேட்டாள். கட்டுபடி ஆகவில்லையானால், அப்படியே போய்விடலாம் என்பதுபோல் நின்று கொண்டிருந்தாள். இவர், அவளை உட்காரச் சொன்னார். அவரே எழுந்து பிள்ளைகளை உட்கார்த்தினார். ஆனாலும் ஒரு வீட்டுக்காரர், குடித்தன வீட்டை, கேள்வி முறையில்லாமல் விட்டுவிட முடியுமா?. எதிர் வீட்டுக்குண்டன், மாடிவீட்டை வயதான கிழவி என்று ஒருத்திக்குவிட, அவள் ஏழெட்டு பேத்திகளைக் கூட்டிவர, அப்புறம் மாமூல் பாக்கியால், போலீஸ் சோதனை, ஏற்பட்டு அந்தப் பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு, இந்த வீட்டிற்குள் ஓடிவந்த போது, இவரே அப்படியொரு தொழில் செய்வதுபோல, காவலர்கள் அதட்டினார்கள்.

ராமலிங்கத்தின் அத்தனைக் கேள்விகளுக்கும், நீலா யோசனை செய்யாமலேயே பதிலளித்தாள். நாசூக்கானக் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்கள்…. பெரிய இடத்துப்பெண்… காதல் திருமணம்…. பெற்றோர் தண்ணீர் தெளித்தல்…. அதே சமயம் சென்னையில் உள்ள ஒரு சின்னத் தொழிற் சாலையை விட்டுக்கொடுத்தல்….

ராமலிங்கம், ‘இதெல்லாம் சகஜம்மா’, என்று சொன்னபடியே, அவளுடைய மஞ்சள் கயிரை நோட்டமிட்டார். அவள் முகத்தையும் அதனையும் மாறிமாறிப் பார்த்தார். அதைப்புரிந்து கொண்டது போல், அவள் தலை கவிழ்ந்தாள். வீடு கிடைக்காது என்ற அனுமானத்தில் எழுவதற்கு முயற்சியாய் இருக்கையில் கையூன்றினாள். ஆனால் ராமலிங்கம், அவளை ஆசுவாசப்படுத்திய படியே அகமகிழ்ந்தார். ‘ஆண் துணையற்ற – அனாதரவான – அதே சமயம் வாடகை பாக்கி வைக்காத ஒரு குடித்தனம் எந்த வீட்டுக்காரருக்கும் ஒரு வரப்பிரசாதம் அல்லவோ?’ இப்படித்தான், தெற்கு வீட்டுக்காரன், தீரவிசாரிக்காமல், அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு, ஒருத்தனுக்கு வீட்டை விட, அந்த ஒருத்தன் பின்பத்தியிலிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தபால் அலுவலகத்திற்கு நடந்து போய், முன்பத்தியிலுள்ள வீட்டுக்காரருக்கு, மணியார்டர் செய்கிறான். அந்த ரசீது நகல்களை கண்கொத்திப்பாம்பான மாநகராட்சிக்கும், கழுகுக் கார வருமானவரித்துறைக்கும் அனுப்பப் போவதாக மிரட்டுகிறானாம். இந்தப் பின்னணியில், நீலாவுக்கு வரவேற்பு வளையம் கூட வைக்கலாம்.

என்றாலும், கீழ் வீட்டிற்கு குடித்தனமாய் வந்த ஒருமாத காலத்திற்குள், நீலா இவர்களுடன் ஒன்றி விட்டாள். பள்ளிக்கூடம் அற்றுப்போன நாட்களில், அவள் பிள்ளைகள், இதே இந்த சோபா செட்டில் உருண்டு புரள்வதோடு, மங்கையர்கரசியை டிஸ்கோவுக்கு கூப்பிடுவார்கள். உடனே அந்தம்மா நாணிக்கோணி இவரைப் பார்ப்பது. அந்த டிஸ்கோவிற்கு இவரையும் கூப்பிடுவதுபோல் இருக்கும். அதோடு, யார் வீட்டில் யார், அதிகமாக சாப்பிட்டு இருப்பார்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். நீலாவுக்கு ‘சார்’ அப்பாவானார். ‘மேடம்’ , அம்மாவானாள். ஒரு தடவை ‘எப்பா, எம்மா – நான் உங்களுக்கு வாரிசு இல்லாத மகள்’ என்றாள். பிறகு ஒரு குமிழ்ச் சிரிப்போடு. ‘கவலைப்படாதீங்க அப்பா… அம்மாவுக்கு இப்பகூட குழந்தைப் பிறக்கலாம்…. ஐம்பது வயதிலும் பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கு’ என்ற போது, அந்த உச்ச வரம்பு வயதைத் தாண்டிப்போன மங்கையர்கரசிக்கு, அதிலும் ஓரிரு ஆண்டுகள் விலக்குக் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அதிலிருந்து இந்த ராமலிங்கத்தை தனியாக படுக்கவிடுவதே இல்லை.

ராமலிங்கம், அவசர அவசரமாய், பல் தேய்த்து விட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே திரும்பி உட்கார்ந்து, அனிச்சையாய் குடைசாய்ந்த கைகளை வெறுமையாய் வீசிப் போட்டார். அந்தக் ககைகள் சாய்வதற்கு, நீலாவின் குழந்தைகள் இல்லை. செவ்வரளி மொட்டுக்களாய் அவரது தோளுக்கு ஒன்றாய் தலைபோட்டு கங்காரு மாதிரி தலையாட்டும் பிள்ளைகள். அவரை தாத்தாவகாமலேயே தாத்தாவாக்கியப் பிள்ளைகள்.

ராமலிங்கம், மலரும் நினைவுகளை கருக்கிக் கொண்டிருந்தபோது, திரைமறைவில் உள்ள சாப்பாட்டு மேஜையில் பல தடவை டொக்குச் சத்தங்கள்… இவர் சாய்ந்து பார்த்தால், மங்கையர்கரசி, அவரை கூப்பிடா மலேயே வாழையிலையில் பறிமாறியபடியே தன் பாட்டுக்குச் சொல்வதுபோல் சொன்னாள்.

‘எதையுமே நினைத்துப் பார்க்கணும்… வீடு… ஆபிஸ் இல்ல…. குடித்தனக்கார்ங்க… சபார்டினேட்டும் இல்ல… அதோட, அந்தப் பாவிப்பொண்ணு, குடித்தனக்காரி மாதிரியா நடந்துக்கிட்டாள்?. கோயம்பத்துர்ல பெத்தவங்க, தங்களோட வந்து இருக்கும்படி கடந்த ஆறுமாசமா வற்புறுத்துனாங்களாம். இவள்தான் ‘எங்க அப்பாம்மா, மெட்ராஸ்ல இருக்காங்கன்னு’ சொன்னாளாம். அப்படிப்பட்ட பொண்ண, துரத்தியாச்சு…. இனி இந்த வீட்டுல என்னைத் துரத்த வேண்டியதுதான் பாக்கி….’

வாழையிலையில் குவியலாய்ப் போட்ட அரிசிச் சோற்றை சமப்படுத்தியபடியே, மங்கையர்கரசி, பேசிக்கொண்டே போனாள். போயும் போயும் ஒரு நாய்தானர் எதிரி என்று ஒரு கேள்வியைப் போட்டு, அதற்குப் பதிலையும் சொல்லிக்கொண்டிருந்தாள் ஒரு நாய்க்குரிய நல்ல குணங்களையும், மனிதனுக்கு குறிப்பாக இந்த ராமலிங்கத்திற்கு உள்ள கெட்ட குணங்களையும் ஒப்பிட்டுக் கொண்டே போனாள்.

அநியாயமான கோபத்திற்குப் பழக்கப்பட்ட ராமலிங்கத்திற்கு, இப்போது நியாயமான கோபம், வாய் புரண்டோடப் போனது. ஆனாலும் அடக்கிக் கொண்டார். புதுடில்லியில் இந்த டூரில், ஓர் இரவில், அவர் ‘மப்பில்’ இருந்தபோது, இவர் நீட்டிய கிளாசை வாயில் கவிழ்த்துக்கொண்டே, இவரது உதவியாளர் ‘சார் நீங்க நல்லவர்தான்… ஆனாலும் டென்ஷன் பிடிச்ச ஆசாமி… சின்ன விஷயத்துக்கும் குதியாய் குதிப்பிங்க’ என்று சொன்னதை நினைத்துக் கொண்டார். ‘இதோ இவள் பேசுகிற பெரிய விஷயத்துக்குக்கூட டென்ஷன் ஆகல… பாருடா’ என்று கிளாஸ்மேட்டிடம் மானசீகமாகப் பேசிக்கொண்டார். அந்தம்மாவின், ஏச்சுக் கலந்த பேச்சு, மேலே மேலே, போக இவரும், தான் பெருந்தன்மையானவன், பொறுமைசாலி என்று தன்னைத்தானே மேலேமேலே நினைத்துக் கொண்டார். பொறுமையிழந்து, பலூன் மாதிரி அவர் வெடிக்கப் போனபோது, அந்த அம்மா ஆறிப்போன குழம்பை சுட வைப்பதற்காக சமையல் அறைக்குள் போய்விட்டாள். ‘நாமளும் ஒரு காலத்துல தெருவுல கிடந்ததை நினைத்துப்பார்க்கணும். தெரு நாயின்னு இளக்காரம் கூடாது’ என்று அவரை எதிரித்தனமாய் பார்த்துப் பேசியபடியேதான், உள்ளே போனாள்.

ராமலிங்கம், தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார். நாய்களை வெறுப்பதில், அவருக்கு வர்க்கபேதம் கிடையாது. எல்லா நாய்களுமே இனத்துரோகிகள். இந்தப் பட்டியலில் ‘மானமிகு பங்களா நாயும், மாண்பற்ற தெரு நாயும் இடம் பிடித்தவை.’ இன்னும் சொல்லப்போனால், முதலாளித்துவ பங்களா நாய்களையே அதிகமாக வெறுத்தார். இப்படித்தான் அடுத்தத் தெருப்பயல் – முடியே இல்லாத உரித்தக் கோழி நிறத்திலான ஒரு மொக்கை நாயை இரும்புச் சங்கிலியால் பிடித்துக் கொண்டு, இந்தத் தெருவுக்கு வருவான். சரியாக இவர் வீட்டு வாசலுக்கு முன்னாலேயே அந்த நாயை ‘வெளிக்கிப்’ போக வைப்பான். இவர் ஒரு நாள் தட்டிக் கேட்டார். உடனே இவரை பகையாய் பார்த்தபடியே ‘உன் வீட்டுக்குள்ளயா வந்து விடுறேன்.’ இது ‘பப்ளிக் ரோடு’ என்றான். இளமையிலேயே, பஸ்கி, தண்டா எடுத்தவர் ராமலிங்கம், அப்போதெல்லாம், தெருவில் எவனாவது உருண்டு திரண்டவன் எதிரே வந்தால் அவனை தன்னால் அடித்து விடமுடியுமா என்று யோசிப்பார். எப்படி அடித்து அவனை வீழ்த்தலாம் என்றுகூட நினைப்பார். இப்போதும் அடுத்தத் தெருப் பயலை அப்படித்தான் நினைத்தார். அதேசமயம் வள்ளுவர் வாக்காக்கிய மாற்றானின் துணைவலியை – அதாவது இன்னும் வெளிக்கி போய்க்கொண்டே இருக்கும் அந்த நாய் வலியை நினைத்து, பின்வாங்கி விட்டார். ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று மங்கையர்கரசி சொன்னபோது, நிராகரித்தவர்.

சூடான குழம்பை சுமந்த கிண்ணத்துடன், சாப்பாட்டு மேஜைக்கு மீண்டும் வந்த மங்கையர்கரசி, விட்ட இடத்தைத் தொடர்ந்தாள்.

‘எத்தனை தடவ சொந்தக் கார்ல கோவில் குளத்திற்கு கூட்டிப்போயிருப்பாள்? எத்தனை தடவை, நான் முடியாம முடங்கும்போதெல்லாம், என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போறதும், இந்த வீட்டுல இருக்கிறவருக்கு ஆக்கிப் போடறதுமா இருந்திருப்பாள்? கோயம்புத்துருக்கு போகும்போது, என் கழுத்தை கட்டிக்கிட்டு… அவள் அழுத அழுகை இருக்குதே… அந்த பிள்ளைகள் துடித்த துடிப்பு இருக்குதே… அது பிள்ளக்குட்டி பெத்தவங்களுக்குத்தான் தெரியும்.’

பிள்ளைக்குட்டி பெறாத நிலைமைக்கு, அவர் மட்டுமே பொறுப்பு என்பதுபோல அந்தம்மா பேசப்பேச, ராமலிங்கம் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். பின்னர், அந்தப் பொண்ணு, கோவைக்குப் போய்விட்டாள் என்ற தகவல் அறிந்து, குற்றவாளிபோல் குமுறினார். நீலாவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட நாய் விவகாரம், இப்போது, நாய்த்தனமாகத் தெரிந்தது. நடந்து போன நிகழ்வுகளை பாதி நினைத்து மீதியைத் தொடரமுடியாமலேயே அவர் கண்களை மூடினார்.

எந்த நாயும் இல்லாத அந்த தெருவிற்கு, எங்கிருந்தோ வந்தது ஒரு தெருநாய். கருப்புத் தோலும் வெள்ளைத் திட்டுக்களும் கொண்ட அனாதை நாய். ஆரம்பத்தில் எந்த வீட்டிற்குள்ளும் நுழையாமல், அந்த தெருவிற்குள்ளேயே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு, உலா வந்தது. நீலாவிற்கு, இந்த நாய் பிடித்துப் போய்விட்டது. தெருவெங்கும் சுற்றி இந்த நாயைத் தேடிப்பிடித்து மூன்று வேளையும் உணவுக்குவியலைப் போடுவாள். இதுகெட்டக் கேட்டிற்கு ரோஸி என்று வேறு பெயரிட்டாள் அந்தச்சாக்கில், அந்த நாய் இந்த வீட்டு வளாகத்திற் குள்ளேயே வந்துவிட்டது. காருக்கு அடியில் கிடக்கும். கார் மக்கார்டில் படுத்தபடி வாலை கார்க்கண்ணாடியில் வைபர் மாதிரி ஆட்டும். வீட்டு ஒனரான இவரைப்பார்த்தே குலைக்கும். இவரால் கண்டுக்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு சின்னக் கல்லாய் எடுத்து எறிவார். குறி தவறும்போது, நாய்மாதிரியே பல்லைக் கடித்து உறுமுவார். போகப்போக, அந்த நாயும் அவரைப்பார்த்ததும் பயப்பக்தியோடு, ஒரு தடவை மட்டும் வாலாட்டிவிட்டு காம்பெளண்ட் சுவரில் குதித்து தெருவுக்குத் தாவிவிடும்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், இவர், நீலாவிடம், இது கடித்தால், தொப்புளில் நாற்பது தடவை ஊசி போட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாய் மாதிரியே குரைக்க வேண்டியது இருக்கும் என்றும் விளக்கினார். நீலா சிரித்து மழுப்பினாள். ரோஸி நல்ல பெண் என்று சான்றிதழ் கொடுத்தாள். அது நல்ல பெண்ணோ… கெட்ட பெண்ணோ… பெண் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இரவில் ஏழெட்டு ஆண் நாய்கள், இந்த வளாகத்திற்குள்ளே வந்து விடும். அவைகளுக்கும் இந்த நாய்க்கும் இந்த இடம் மன்மத பூமியானது. இவை வெளிப்படுத்துகிற காதல் சத்தங்களும், சமிக்ஞைகளும், இவரை படாத பாடுபடுத்தும். இவரது தூக்கம் கெட்டதோடு, ஐம்பதைத் தாண்டிய மங்யைர்கரசியின் தூக்கமும் கெட்டது. இனிப் பொறுப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.

இப்படித்தான் ஒரு நாள்… லேசான மழைத்தூரல்…. வானம் நீர்த்துளிகளை ஒளித்துளிகளாக இறக்கிக் கொண்டிருந்தத வேளை…. ராமலிங்கம், ஒரு குடையோடு கீழே இறங்கினார். கீழ்வீட்டுப் படிக்கட்டில், செமத்தையாக வைக்கப்பட்ட உணவு வகையறாக்களை, அந்தத் தெருநாய், கவளம் களவமாய் கவ்வி, தலையை மேலும் கீழுமாய் ஆட்டி உள்ளே அனுப்புகிறது. கோழித்துண்டுகள் வாய்க்குள் போகும்போ தெல்லாம், வாசல் படியில் சாய்ந்தபடியே ஒரு தாயின் பூரிப்போடு பார்க்கும் நீலாவைப் பார்த்து வாலாட்டியது. ராமலிங்கத்திற்கு, கோபம் வந்தது. இதன் வயிறு இருபக்கமாய் புடைத்து நெளிவதைப் பார்த்தால் அது சாப்பாட்டால் மட்டும் அப்படி உப்பிப்போகவில்லை என்பதும் புரிந்தது. இரவுநேரக் களியாட்டத்தின் பகல் நேரச் சாட்சிள். இது, ஐந்தாறு குட்டிகளையாவது போடும். அந்த ஐந்தாறுக்கும் இந்த நீலா ஸ்வீட்டி, ராமு, ராணி, ஜானி, மோனி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வாள். பெயரிட்டவள் என்பதற்காக அந்த நாய்க் குட்டிகளுக்கும் உண்டி கொடுத்து உயிர்கொடுப்பாள். மாநகராட்சி நாய் வண்டியின் உபயத்தால், இந்தத் தெரு, இந்த நாய் வருவதற்கு முன்பு வரை துப்புரவாக இருந்தது. இது குட்டிகளைப் போட்டுவிட்டால், இந்த இரண்டாவது கிராஸை, நாய்தெரு என்றே கூப்பிடப் போகிறார்கள்.

ராமலிங்கத்திற்கு தெருப் பக்தி தீவிரமானது. அந்த நாய் அளவிற்கு சிறிது குனிந்து போப்போ என்றார். அது கண்டு கொள்ளவில்லை. அவரைக் கண்டவுடன் மரியாதையோடு விலகிக்கொள்ளும் அந்த நாய், ‘நீ என்னடா சொல்வது’ என்பது போல் ஒரு தடவை அவரை அலட்சியமாகப் பார்த்து விட்டு, மறுதடவை, நீலாவை பார்த்து வாலை ஆட்டியது. இது, ராமலிங்கத்திற்கு அவமானமாகப்பட்டது. அவரை சினக்க வைத்தது. உடனே, குடைக்கம்பால் அதன் தலையை ஒரு தட்டுத் தட்டினார். கழுத்தில் ஒரு இடி இடித்தார். அவ்வளவுதான்…. அந்த நாய் சரணடைந்ததது போல், வாலை பின்னங் கால்களுக்கு இடையே சொருகிக் கொண்டு, வலி தாங்க முடியாமல், சுற்றிசுற்றி வந்தது. ராமலிங்கம் வெற்றிப் பெருமிதத்தில், அதன் காலில் ஒரு தட்டுத்தட்டினார். அந்த நாய் நொண்டியடித்து நீலாவை அனுதாபம் தேடிப்பார்த்துவிட்டு, சுற்றுச் சுவரில் தாவப் போனது. இயலாது போகவே லேசாய்த் திறந்திருந்த இரும்புக் கிராதிக் கதவை தள்ளியபடியே ஓடியது.

நீலாவிடமிருந்து, வார்த்தைகள் சிவந்து விழுந்தன.

‘என்னப்பா நீங்க….. இடுவார் பிச்சையை கெடுவார் கெடுப்பார் மாதிரி…. ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி அடிச்சிட்டிங்களே. அது கோபத்தில கடிச்சா என்ன செய்வீங்களாம்?’

‘போகிற போக்கைப் பார்த்தால், நீயே நாயை ஏவி, என்னை கடிக்க செய்வ போலிருக்குகே’

‘ஏன் கோபம் கோபமாக பேசுறீங்க’,

‘நான் கெடுவார் இல்ல. லேன்ட் லார்டு… இந்த வீட்டோட ஒனர்… சில கட்டுப்பாடுகளை விதிக்க, எனக்கு உரிமை உண்டு’.

‘அப்படிங்களா சார்…. ஒரு பதினைந்து நாள் டைம் கொடுங்க. நானே வீட்டைக் காலிசெய்து விடுவேன். எனக்கும் சுயமரியாதை இருக்குது.

‘அவரவர் இஷ்டம்’

ஆக்குவதற்கு வருடங்கள், அழிப்பதற்கு நிமிடங்கள் என்பது கண் முன்னாலேயே நிகழ்ந்து விட்டது. அச்சாணி கழன்ற தேர்போல அப்பா – மகள் உறவு, ஒரு சின்ன விவகாரத்தில் சிதைந்து போனது. ஐந்து நிமிடங்களிலேயே, அன்னியோனியமாய் பழகிய இருவரும் அந்நியர் ஆனார்கள். அவள் கதவைச் சாத்தினாள். இவர் குடைவிரிக்க மறந்து மழையில் நனைந்தபடியே தெருவில் நடந்தார்.

இப்போது நினைத்துப் பார்க்கும் ராமலிங்கத்திற்கு, மனம் தாளவில்லை. அந்த மனதை மழுப்புவதற்காக, ‘சொந்த மகளாக இருந்தால் இப்படிப் போயிருப்பாளா’ என்று மனம் கேட்டது . ‘உன் மகளாக இருந்தால் இப்படிப் பேசியிருப்பாயா’ என்று மூளை பதிலடி கொடுத்தது. மனம், மூளையையும், மூளை மனதையும் சீண்டிக் கொண்டன. கைகள் உதறிக் கொண்டன. கண்கள் சொருகிக் கொண்டன.

மங்கையர்கரசி. வாழையிலைச் சோற்றில், மீன்குழம்பை ஊற்றினாள். அது பருக்கைகளில் ஊடுறுவி, செஞ்சிவப்பாய் கசிந்தது. அவள் கையில் இருந்த மீன் துண்டுகள், பாளம்பாளமாய் இலையில் இறங்கின. பச்சைத் தளத்தில் அந்த செந்நிறத் துண்டுகள் இலையை மரகதப்பச்சையாக காட்டின. மங்கையர்கரசி அவரை அழைப்பதற்காக திருப்பினாள். அப்போது பல்வேறு குமுறல்கள். அவளிடமிருந்து வெளிப்பட்டன. ஒவ்வொரு குமுறலும், அவரை பல செக் ஷன்களில் குற்றஞ்சாட்டி கூண்டில் ஏற்றியது. பிராணிகளை வதை செய்த குற்றம்… ஒரு பெண்ணின் மனதை புண்படுத்தி வெளியேற்றிய குற்றம்… வீட்டுக்காரர் என்ற நிலப்பரப்பத்துவ மனோபாவம்… அதிகாரி என்ற பூர்ஷ்வாத்தனம்… இப்படி விதவிதமான குற்றச்சாட்டுகளை அந்தக் காலத்திலேயே பட்டதாரியான அந்தம்மா அடுக்கிக்கொண்டே போனாள். இறுதியில் ஒரு எச்சரிக்கையும் விடுத்தாள்.

“நீலா போனபிறகு, அந்த நாய் துடித்தத் துடிப்பு மனுசங்களுக்குத்தான் புரியும். ரெண்டு நாள், இந்த வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தது. ஊளையிட்டு அழுதது. அப்புறம் பத்து நாளா இந்த வீட்டையே வெறிச்சப் பார்த்துக்கிட்டு அந்த குப்பமேட்டுல, வாடி வதங்கிக் கிடக்குது. அந்தப் பாவம், இந்த வீட்டை என்னெல்லாம் செய்யப்போகுதோ…”

ராமலிங்கம், துள்ளி எழுந்தார். இவ்வளவு அக்கறையாகப் பேசுகிறவள். நீலா காலிசெய்கிறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாலாவது, விவகாரத்தை தன்னிடம் டெலிபோனில் சொல்லாததில் ஒரு கோபம். அந்த சாப்பாட்டு மேஜையை நோக்கி, கைவீசி கால்வீசி நடந்தார். அந்தம்மாள் பயந்து போனாள். பேச்சை நிறுத்திவிட்டு, அவரை பீதியோடு பார்த்தாள். காட்டுத்தனமாய் கத்துவாரேயன்றி, இதுவரை கைநீட்டியதில்லை. அந்தக் குறையையும் நீக்கிவிடுவாரோ, என்ற அச்சம்.

ராமலிங்கம், மீன் மயமான வாழையிலையை வாரிச்சுருட்டி எடுத்து, பட்டை மாதிரி ஆக்கிக் கொண்டு, அந்தம்மாவை திரும்பிப் பாராமலேயே திரும்பி நடந்தார். அவள் பால்கனி வழியாக எட்டிப்பார்க்கும் போது இவர் குப்பை மேட்டுற்குப் போய்விட்டார்.

இருபக்கத்து நிலத்திலும் வீடுகட்டத் தோண்டப் பட்ட மண்குவியல்கள் அந்த நடுநிலத்தைப் புதைத்துவிட்டது. அதன் மேல் மண் சமாதி உருவாகி அதுவே குப்பை மேடானது. அந்த உரத்தில் தழைத்த எருக்கஞ் செடிகளின் வளைவுக்குள், அதே நாய் முன்னங்கால்களை நீட்டி அதில் முகம் புதைத்து கிடந்தது. அதன் வயிறு விம்மிப் புடைத்து அங்குமிங்குமாய் நெளிந்தது. ராமலிங்கம், அதன் முன்னால் போய், அந்த வாழையிலையை கீழே வைத்தார். அந்தச் சோற்றின் மீன்வாசனை அவரையே உட்கார வைக்கப்போனது. ஏகப்பட்டக் காகங்கள், நாய்க்கும் அவருக்கும் பயந்து, குய்யோ முறையோ என்ற பசி ஒலத்துடன் அரை வட்டமாய் பறந்தன. கால் முளைத்த மேகம்போல் ஒன்றாய் திரண்ட காகங்களை துரத்தியபடியே, அந்த நாய் அருகே போய் ‘தோ… தோ…. சோ… சோ… சுச்சுச்சு… சாப்பிடுப்பா, சாப்பிடு, சோச்சோச்சோ…. சாச்சோ..’ என்றார். அந்த நாய்க்கு முன்னால் கையைக் கொண்டு போய், சுவையான சோறிருக்கும் இலையை சுட்டிக்காட்டினார்.

அந்த நாயோ, வாயருகே உள்ள அந்த சாதத்தைப் பொருட்படுத்தாமல் அப்படியே கிடந்தது. மீன் வாசனைக்கு தடைவிதிப்பது போல் அதன் மூக்குத் துவாரங்கள் இடுக்கிக் கொண்டன. அவர் அங்கே இல்லாதது போல் கண்களை மூடிக்கொண்டன.

ராமலிங்கம் நின்று பார்த்தார். சொல்லிப் பார்த்தார். காகங்களை விரட்டிப் பார்த்தார். அந்த நாயின் கண்படும் தொலைவில் போய்ப்பார்த்தார். அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்த்தவர்களை பொருட் படுத்தாது அந்த நாயை மட்டுமே பொருட்படுத்தினார். ஆனாலும் அந்த நாய், அவர் வரவை அங்கீகரிக்காமல் அப்படியே கிடந்தது.

அதிர்ச்சியுற்ற ராமலிங்கத்திற்கு, ஒரு கிராமத்துச் சொல்வடை, அவரைமீறி, ஒரு சுய பரிசீலனையாக, மனதிற்குள் பெருக்கெடுத்தது.

அவனை நாய்கூட திரும்பிப் பார்க்காது என்பர்களே…. அந்த அவன் நான்தானோ…!

– மின்னம்பலம் – செப்டம்பர், 1999

– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *