கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2021
பார்வையிட்டோர்: 6,998 
 

நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும்.
கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.

கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் வாஸ்து புரோகிதர்கள் உழக்கிற்குள்ளும் ஈசானமூலை, கன்னிமூலை, அக்னிமூலை என வாய்ப்பாடு சொல்வார்கள்.

பிள்ளையார் பிடிக்க பசுமாட்டுச் சாணம் வேண்டும். கிடேரியானால் சாலவும் நன்று. வேண்டுமானால் நகரெங்கும் கேட்பார் கேள்வி இன்றியும் ஓட்டுவாரும் மேய்ப்பாரும் இன்றியும் சேணமும் கடிவாளமும் இன்றியும் தள்ளாடித் திரியும் கிழட்டுக் குதிரைகளின் லொத்திகள் கிடக்கும் அங்காங்கே. எருமைத் தொழுவங்களில் கோரேகாவ், ஜோகேஸ்வரி தாண்டிப் போனால் மழை பெய்யும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் அன்றிக் குளிக்காத எருமைகளின் சாணம் கிடைக்கலாம். கிராமத்து பசுமாடுகளின், அரைத்து உருட்டிய எள்ளுத் துகையல் போல கெட்டிச் சாணமாக இராது அது. ஓட்டல் கழிவு இலைகள், சந்தைக் குப்பை, பாலிதீன் பைகள், சாக்குப் படுதாக்கள், வால் போஸ்டர்கள், மக்காச்சோளத் தாள்கள், முட்டைக்கோசு, பூக்கோசு கழிவு இலைகள், தின்று செரித்தும் செரியாமலும் கெட்டியாகக் கரைத்த கம்மங் கூழ் போலக் கழியும் எருமைகள். உருட்டி வார முடியாது. அகப்பையால் கோரி வாரலாம். அதற்கும் மாட்டுக்காரப் பையாக்கள் தயவு வேண்டும்.

பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு வீட்டில் மஞ்சள் பொடி இருக்காது. எந்த மாவானால் என்ன என்று ‘மௌனாத் பஞ்சன் வீர் ஹனுமான் சக்கி’யில் அரைத்த கோதம்பு மாவு கணிசமாக இருந்தது. வெல்லப் பிள்ளையார், படிகப் பிள்ளையார், கற்கண்டுப் பிள்ளையார் போல, அது கோதம்பு மாவுப் பிள்ளையார். தும்பு வாழை இலையில் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். ஒரு சீப்பு மோரீஸ் வாழைப்பழம், ஊதுபத்தி, சின்ன அலுமினியத் தட்டில் எரிந்துகொண்டிருந்த சூடச்சதுரங்கள். உடைத்து மலர்ந்து கிடந்த தேங்காயில் ஊதுபத்திச் சாம்பல் கனிந்து விழுந்தது.

தலைகுனிந்து தாலி ஏற்க நின்றிருந்த பாலம்மாள் அதிக விலையில் லாத முகூர்த்தப்பட்டு சுற்றி இருந்தாள். புல்லுப்போல ஒரு சங்கிலி, காதில் பழைய மங்கல் கம்மல்கள். கைகள் இரண்டிலும் கண்ணாடி வளையல்கள். தலையில் கனகாம்பரமும் ஜாதி மல்லியும். விளக்கைத் தூண்டி நிமிர்ந்த பாலம்மாளின் அம்மாவின் கண்களில் தாலிச் சர்ப்பம், பிளந்த நாக்கை நீட்டித்துழாவியது.

“கட்டு தம்பி… நேரமாகுல்லா ?”

நேரம் பொழுதடைந்து ‘சாயாகத்’ ஒடிக்கொண்டிருந்தது தோலைக் காட்சி டப்பாக்களில், கொட்டில்லை, முழக்கில்லை, குரவை யில்லை ,மஞ்சள் மங்கல அரிசியும் உதிரிப் பூவிதழ்களும் தூவிச் சொரி வாரில்லை, ‘மாங்கல்யம் தந்துனானே’ இல்லை, ‘கெட்டி மௌம் கெட்டி மௌம்’ இல்லை, கலைந்த சிகையை ஒதுக்குவாரில்லை, வியர்வை ஒற்றியெடுக்க பூங்கைக்குட்டைபிடித்த பொன் வளைக்கரங்கள் இல்லை, புத்தாடைகளில் கல்யாணப் பந்தலைச்சுற்றி அலையும் சிறுவர் சிறுமியர் இல்லை …

பாலம்மாள் என்ற பதினைந்து வயதுச் சிறுமி சுமந்து நின்ற நான்கு மாதக் குழந்தையின் கனம் தொங்கியது அடிவயிற்றுப் பரப்பிலா, முலைக் குவடுகளிலா, மனதின் ஆழ்கடல் சலனங்களிலா என்று தெரியவில்லை .

தாலியேந்தி நின்றார் புலவர் முத்தனேந்தல். அவர் முகத்திலும் ஒளியோகளையோ இல்லை. உள்ளுறை உவமமாய் ஒரு தவிப்பு. அணிந் திருந்த பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் தோளில் கிடந்த சால்வை யும் கணக்கற்ற கவியரங்குகள் கண்டவை. கையில் இருந்த கைக் குட்டைக்குப் பதில் காகிதச்சுருள் இருந்தால்,

‘தாயைப் பாடித் தமிழ்பாடி
தானைத் தலைவன் அடிபாடி
சேயைப் பாடச் சொல்கின்றீர்
செவியைத் தாரும் சிங்கங்காள்’

என்று தொடங்குவதற்கோர் ஒலிவாங்கி வேண்டும் முன்னால்.

கவிக்களம் பல கண்ட புலவர் முத்தனேந்தல் மனதில் நுங்கும் நுரையுமாய் உணர்ச்சிப் பேராறு சீறிப் பாய்ந்து கொண்டிருக்கலாம்தான்.

பாலம்மாளின் அம்மாவின் கண்கள் எந்த நேரமும் பொங்கிவிடும் போலக் கலங்கிச் சிவந்த வண்ணம். யார் முகத்தையும் கூர்ந்து பார்க்க முடியவில்லை. கார்த்திகை மாதக் குளிரிலும் உள்ளிருந்து கிளர்ந்து சீறியது வெப்பம். மணப்பெண்ணை அருகணைந்து தாலிக்கொடியின் முடிச்சுக்களைப் போட்டார் புலவர்.

இரத்தம் செத்துப் போன கிழவர்கள் கடைசிக் காலத்தில் தன்னைப் பார்க்க ஆளில்லை என்றோ, மருமக்கள்மாரின் உதாசீனம் தாங்காமலோ, பதினாறு வயது பாவப்பட்ட குமருகளை வயலும் தோப்பும் எழுதிக் கொடுத்து ‘அடுக்களைத் தாலி கட்டி இரவோடிரவாகக் கூட்டிக்கொண்டு வருவார்கள் வில்வண்டிகளில்.

“விழுந்து கும்பிடம்மா மாமாவை.”

மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்டிருந்த தாலி, மஞ்சள் குங்குமப் பொட்டுக்களும் சூடிய பூவுமாய் பொலிவாய் தொங்கியது. இரண்டு தோள்களையும் பற்றித்தூக்கி நிறுத்திய புலவர்கண்கள் கலங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

“போட்டும் தம்பி… இனிமே அவளைப் பொன்னு போல வச்சுக் காப்பாத்து…” என்றாள் புலவரின் அக்காவாகிய, பாலம்மாளின் தாய்.

“அண்ணன் காலையும் தொட்டுக் கும்பிடம்மா…” என்றாள். எரிந்தவிந்திருந்த சிதையின் சாம்பல் போல் திருநீறு காந்தியது.

இலைபோட்டுப் பரிமாறினார்கள். புலவரும் அவனும் அருகமர்ந்து புலவர் வீட்டில் உண்பது அது முதல் முறை அல்ல. பதினைந்து வயதுச் சிறுமிக்கு என்ன ஆக்கி அரைக்கத் தெரியும்? குழம்புத் தோதில் ஒன்றிருக் கும், உப்பும் புளியும் உறைப்புமாக. எப்போதாவது புலவரைப் பார்க்கப் போய்விட்டு சாப்பாட்டு நேரம் கடந்து விடுமே எனப் புறப்பட்டால், பாலம்மாள் என்ற சிறுமி சொல்வாள், “இருந்து சாப்பிட்டுப் போங் கண்ணே …”

“உனக்கென்னம்மா வைக்கத் தெரியும்? நான் போறேன் மெஸ் ஸுக்கு .”

“அட, சாப்பிட்டுத்தான் பாருங்கண்ணே … மாமாவே சாப்பிடுது பேசாம…’

நிறையப் புளி கரைத்து புளியின் நிறத்தில் ரசம். புடலங்காயோ முட்டைக்கோசோ பொரியல். வடித்த சோறு சுடச்சுட இருக்கும்.

புலவர் சங்ககாலக் கனவுகளில் முறத்தை வைத்துப் புலியைத் துரத்திய வீரக்கடல்களில் ஆடிக்கொண்டிருப்பார். அது புலிதானா எனக் கேட்க சண்டை வந்து விட்டது ஒரு நாள். புலியை அடித்துத் துரத்தினாளா இல்லையா என்பதல்ல முக்கியம், அடித்து விரட்ட முடியும் என்கிற மனோபாவம் முக்கியம் என்பார்.

சற்றுத் தீவிரமான நீண்ட முகம். வீரத்தமிழ் மீசை. பழைய காலத் தூண் கிருதா. கைப்பையில் படிக்கத் தீவிரமான புத்தகம். ஆழ்ந்த பெரியாரிய வாசிப்பும் தோய்வும் உண்டு. மதுரைத் தமிழ்ச் சங்கம். தென்னிந்திய கல்விக் கழகம் நடத்திய உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர், தமிழாசிரியர் என்றால் சட்டியிலும் இல்லை , அகப்பை யிலும் இல்லை எனும் கடனுக்கு மாரடிக்கிற ரகமல்ல. அவர் அடிக்கடி சொல்லும் கவிதை வரிகள்,

‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்
சாம்பல் தமிழ் மணத்துச் வேக வேண்டும்.’

நகரம் சுற்றும் வேலை அவனுக்கு. எப்போதாவது புலவர் வேலை பார்க்கும் பள்ளியருகில் போனால், “தோழர், இங்கேயொரு மலையாளத் தான் மெஸ் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்பார்.

அவருக்கு கல்யாணமாகியும் பிரம்மச்சாரி வாழ்க்கையாக இருந்தது. அக்காள் எவ்வளவு சொல்லியும் தட்டிவிட்டு புலவருக்குப் படித்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறவு விட்டு, சாதி விட்டுக் கட்டிக்கொண்டார். புலவருக்குப் படித்த பொண்ணுக்கு நல்ல சம்பளமும் இருந்தது. புலவரை விடவும் முதிர்ந்த கன்னி.

அவருக்கும் எவ்வளவோ கனவுகள் இருந்திருக்கும். அரசு வேலையை விட்டுவிட்டு பம்பாய்க்கு வர மனைவிக்குப் பிரியமில்லை. கணவன் என்பதே சிறுவர் விளையாட்டின் ‘தாச்சி’ தானோ என்னவோ? பொருள் வயிற் பிரிந்து, ஆண்டுக்கொரு முறை விடுப்பில் வந்து, வயிற்றில் பிள்ளை கொடுத்துவிட்டுப் போய்விடுவானோ என்ற கவலை மாமனாருக்கும் மைத்துனன்மாருக்கும். சொல்வார்களல்லவா, மனை வியைப் புணர மாமானாருக்குச் சும்பனம் செய்ய வேண்டும் முதலில் என்று. அது போல. புலவர்காற்றோட்டமாக முன்னறையில் மைத்துனன் மாருடன் படுத்தார் தினமும்.

பையாக்கடை சாயும் மலையாளத்தான் கடை சாப்பாடுமாய் காலம் கழிந்ததில், நெஞ்சுக்கூடு முட்ட இரும ஆரம்பித்தார்.

“தோழர், வாங்க, டாக்டரைப் பார்த்து வரலாம். இருமித்துப்பினால் ரத்தம் வருது சில நாளாய்” என்றார் ஒரு நாள்.

அந்த ஆண்டு தமிழ் மன்றக் கவியரங்கத் தலைமையேற்க புலவர் இங்கில்லை, தாம்பரம் டி.பி. சானிடோரியத்தில் இருந்தார். என்றாலும் வாழ்த்துக் கவிதை தபாலில் வந்தது. புலவருக்குப் படித்த பத்தினி போய்ப் பார்த்தாளா அல்லது நோய் தொற்றிக்கொள்ளும் என்று ஒளிந்து கொண்டாளா என்று தெரியவில்லை.

ஆறு மாதங்கள் பொறுத்து, தாம்பரத்தில் இருந்து குணமாகி வந்த போது, பொங்கல் வீட்டிலிருந்து மாறி, மாகிம் லேபர் கேம்பில் ‘ஒன் ரூம் கிச்சன்’ வீடு பார்த்துக் குடியேறினார். தபாலில் சேர்க்கச் சொல்லி ஒரு நாள் அவர் கொடுத்த உள்நாட்டுக் கடிதம் உமிழ்நீரில் ஒட்டியதால் சரியாக ஒட்டப்படாமல் இருந்தது. மனம் வழக்காடிய தர்மங்களை மீறிப் படித்த போது, ‘அடி… காந்தா! நான் புழுத்துச் சாகிறேன். நீ கொழுத்துத் திரிகிறாய்’ எனும் பாங்கில் வரிகள் ஓடின. ஏன் படித்தோம் என்றிருந்தது அவனுக்கு.

பத்து நாட்களில் ஊரில் இருந்து அக்காள் பெண் பாலம்மாளை கூட்டிக்கொண்டு வந்தார். பெருக்க, துடைக்க, துவைக்க, சமைக்க, தண்ணீ ர் பிடிக்க, பாத்திரம் கழுவ, பால் வரிசையில் நிற்க…

முதன்முறையாக அவனை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போன போது பாலம்மாள் கண்களில் ஊர்க்கிணற்றில் ஊறிய நீர். அது பெரு நகரத்தூசிபட்டுக் கலங்கியது.

வாரந்தோறும் ஞாயிறுகளில் புலவரைத் தமிழ் மன்றப் படிக்கட்டுக் களில் காணுவது தவறாது. உளுத்து, பொடிகள் உதிரும் சங்கப் பலகை.

ஒரு ஞாயிறு மாலையில், வழக்கமான நான்கு மணிச் சந்திப்பில் சொன்னார்.

“தோழர், முக்கியமான வேலை ஏதும் இருக்கா?” “இல்லை , புலவரே!” “வாங்க போகலாம்.”

நடந்து மாதுங்கா வந்து, தென்னிந்திய பொற்கொல்லர் கடை யொன்றில் ஏறி அமர்ந்து, தாலி ஒன்று வேண்டும் என்றார்.

அவனுக்குப் பரபரப்பாக இருந்தது. பலவும் பார்ப்பனத் தாலிகளாக இருந்தன. சில மராத்தியத் தாலிகள், கொங்கணித் தாலிகள். புலவர் என்ன சாதியென்று அவனுக்கு ஊகம் ஒன்றுமில்லை . அவர் மனதில் இருந்த தாலியைத் தட்டான் கண்டுகொள்ள முடியாத திரை அடர்ந்திருந்தது. பென்சிலால் உத்தேசமாக வரைந்து காட்டினார்.

“ஒ… நீங்க ராமநாதபுரம் ஜில்லா …ங்களா? அது இங்க கிடைக் காதுங்க. உங்க ஆளுங்க பம்பாயிலே குறைவு. ஆர்டர் கொடுத்தா ஊரிலே சொல்லி செய்துகொண்டு வரலாம். அட்வான்ஸ் கொடுத்தா ரெண்டு வாரம் ஆகும்.”

புலவரின் அவசரம் பதினைந்து நாட்கள் பொறுக்காதெனத் தோன்றியது. குப்பை போலக் கண்ணாடி மேசை மீது தாலிகள் கிடந்தன. விற்ற தாலிகள், அடமானத் தாலிகள், அறுத்த தாலிகள், கள்ளத் தாலிகள் ஆர்டர் கொடுத்துப் பெற்றுக்கொள்ளப்படாத தாலிகள்.

எதைத் தெரிவு செய்வதென்று தெரியவில்லை. கவியரங்கச் சொற் களில் எதுகையும் மோனையும் உவமையும் உருவகமும் தேர்வது போலி ருந்தது. ஒப்புதலின்றித் தலையசைத்தார். அடமானக் கடையொன்றில் இருந்து மேலும் தாலிகள் வந்தன.

‘தமிழர் திருமணத்தில் தாலி’ என்ற புத்தகத்தின் தலைப்பு ஒன்று அவசியமற்று நினைவில் ஒடியது அவனுக்கு. புலவரிடம் ஒன்றும் பரிந்து சொல்ல இயலவில்லை. தன் சாதித் தாலியேதும் தென்படுகிறதா என்று பார்த்தான். கணக்கெடுத்தால் இந்திய நாட்டில் இருபது முப்பதினாயிரம் வகைத் தாலிகள் இருக்கக்கூடும். தாலி வகைக்கென்றோர் அரசியல் கட்சியும் இருக்கக்கூடும். மாம்பழங்களே ஆறாயிரம் வகைகள் இருக்கும் போது தாலிகள் இருக்கக்கூடாதா?

முழுத் திருப்தி இல்லாமல் வேறு வழியும் இல்லாமல், கிடந்த வற்றில் கிட்டத்தட்ட சொந்தத் தாலி போலத் தோன்றிய ஒன்றை எடுத்து விலைபோடச் சொன்னார்.

குங்குமம் வைத்து, ரோஸ் காகிதத்தில் பொதிந்து, எழுந்து நின்று, சாமி படங்களை நோக்கித் தொழுது, எடுத்துக் கொடுத்தார் பொற் கொல்லர், வாங்கிச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டார் புலவர். காட்டுமிராண்டி, வெங்காயம் என உள் மனது ஊளையிட்டது.

பிறகு கொஞ்சம் பூ, மோரீஸ் வாழைப்பழம், வாழை இலை, மஞ்சள் கயிறு, சூடம், சாம்பிராணி, வெற்றிலை பாக்கு… கொஞ்சம் கொஞ்சமாகத் துலங்கி வந்தது.

பாலபிஷேகம் கொள்ளும் அம்மன் சிலையின் முகமும் மூக்கும் கண்களும் நாடிக் குமிழும் தோள்களும் முலைகளும் இடுப்பும் அடிவயி றும் நாபிக்குழியும் துலுங்கி வருவதைப் போல…

புலவரிடம் கலகலப்பில்லை . அவனுள் வெறுப்பு, இரக்கம், சங்கடம் எல்லாம் குமிழியிட்டுப் பொங்கிப் பொங்கி வந்தன.

எப்போதும் புலவர் வீடு நாடி நடக்கும் பாதைதான். வழியெங்கும் மௌனத்தின் முட்கள் கீறிய நீண்ட பயணம்.

“கூச்சப்பட்டாம வவுத்துக்குச் சாப்பிடு தம்பி” என்றாள் அக்காள்.

நிமிர்ந்து பார்த்தான். சிரிக்கத் தோன்றவில்லை. சேமியாப் பாயசம் இனிப்புப் பெய்த சுடுகஞ்சி போலிருந்தது. புறப்படுகையில் சொன் னாள், ”நான் ரெண்டு நாள்ளே ஊருக்குப் புறப்படுவேன் தம்பி, நாலு மாசம் செண்ணு வாறேன். கூடப் பொறப்பா இருந்து பாத்துக்கிடணும். உன்னை நம்பித்தான் விட்டுக்கிட்டுப்போறேன்.”

கண்களின் அன்றைய முக்கியமான வேலை கலங்குவதென்றா யிற்று. பெண்கள் சாப்பிடட்டும் என்று புறப்பட்டவன் கூடப் புலவரும் கீழிறங்கி நடந்து வந்தார். வழக்கமான கடையில் சிகரெட் பொருத்திக் கொண்டார். சற்றுத் தயங்கி கையைப் பிடித்து உடைந்து அழுதபடி சொன்னார்.

“எல்லாம் நடந்து போச்சு… ரொம்ப வெக்கமா இருக்கு… நீங்க யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம் தோழர்… என்ன?”

மாகிம் லேபர் கேம்பில் இருந்து கோலிவாடா சி.ஜி.எஸ்’, காலனிக்கு நெடுந்தூரம் நடக்க வேண்டியதிருந்தது. வெறுமை, சீமைக் கருவை போலக் கவியலுற்றது. நுரைத்துப் பொங்கியும் வந்தது.

பாலம்மாள் சுலபமாக உண்மை பேசியிருக்க முடியும். ஆனால் அவளுக்கும் இரண்டு உண்மைகள் இருந்திருக்கும் போல.

– நவம்பர் – 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *