தாஜ்மஹால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 1,780 
 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காடும் கடலும் களி வயலும் சேர்ந்த ஒரு அழகிய கிராமம். சுமார் எழுபத்தைந்து வருடங்களிருக்கும். கடற்கரையில் கயல்கள் துள்ளி விளையாடும் காட்சியை சிறிய பிள்ளைகள் பார்த்து மகிழ்ந்த காலம் அது. கடற்கரையிலே இரவு வேளையிலே அந்தக் கிராமத்தின் மாடுகள் எல்லாம் சேர்ந்தே ஓய்வெடுக்கும். சோலையின் பழங்கள் கனிந்திருக்கும். பறவைகள் களித்திருக்கும். வயல்களெல்லாம் பனியினால் குளித்திருக்கும். குளங்களில் விரால்களும் ஏனையவும் துள்ளிக்களைத்த பொழுது கரைக்கு வந்து கதைத்திருக்கும். அந்தக் கிராமத்திலே அப்போதிருந்த ஓரிரு குடும்பங்களுக்கு தேவையானவைபோக மீதியெல்லாம் தேங்கி வழிந்த காலம் அது.

அப்படி இருக்கையில் ஒரு நாள்! மிசனிலே படித்த ஒரு இளைஞன் அங்கு வந்தான். அவனுக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் மட்டுமல்ல சமஸ்கிருதம் கூட அத்துப்படி. இயற்கையாகவே மாட்டெருவிலே பயிரான பிஞ்சுச் சோளத்தின் இனிப்பு அவனைப் பூரிக்க வைத்தது. பறக்காத பறவைக்கூட்டங்கள் விலகிச்செல்லாத மிருகங்கள் எல்லாமே அவனைப் பிரமிக்க வைத்தன.

கிராமத் தலைவரை அவன் சந்தித்த போது இன்னும் பல ஆச்சரியங்கள். அவனை விஞ்ஞானத்திலிருந்து மெஞ்ஞானத்திற்கும். மெஞ்ஞானத்திலிருந்து அஞ்ஞானத்திற்கும் கொண்டு சென்றது. மூலிகைக்குப் பஞ்சமில்லாத அக்கிராமம் அவனது ஆராய்ச்சித் தளமாகியது. இமயமலைச் சாரலின் பூண்டுகள்தானே இங்கிலாந்து தேசத்தின் நவீன மருத்துவத்திற்கு அடிப்படை என்கிறார்கள். அந்தக் கிராமத்திலே அப்போதிருந்தவர்களுக்கு மூலிகைகளே மருந்தாகின. அக்கிராமத்தவர்களுக்கு முதுமை வந்த போதும் கூடத் தலைநரைக்கவோ பற்கள் விழவோ இல்லை என்பதை அந்த இளஞன் கண்டு கொண்டான். ஆதர்சீக் கிளார்க் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே உலகிற்கு தந்தசெய்தி எல்லாம் அந்த நூற்றாண்டின் முதற் பகுதியிலேயே அந்த இளைஞனிடம் இருந்தது. மனித உடலின் மாற்றங்களை நரம்பின் மூலம் செயற்படுத்தும் போது அவை மிகுந்த சக்தி வாய்ந்தனவாக மாறுவதையும் அந்த இளைஞன் கண்டுகொண்டான். சிறிது காலத்தின் பின் கிராமத் தலைவரும் அவனும் நண்பர்கள் ஆகிவிட்டனர். அவரவர் அனுபமும் அறிவும் பரிமாறப்பட்டன. பரிசோதிக்கப்பட்டன. ஆனால் நடந்த விடயங்களில் ஒரு விடயம் மாத்திரம் இளைஞனுக்குப் புரியவில்லை .

தலைவரின் வீட்டைச்சுற்றி ஒவ்வொரு மாசமும் ஒன்றோ இரண்டோ மூன்றோ என ஓலைக்குடில்கள் அமைக்கப்படும் மீண்டும் அவை எரிக்கப்படும். அந்த விடயம் பற்றி ஒரு நாள் அவன் தலைவரிடம் கேட்டபோது அது தமது உரையாடலுக்கு அப்பாற்பட்டது எனக் கருத்துக் கூற மறுத்துவிட்டார். இளைஞனுக்கு இருப்புக் கொள்ளமுடியவில்லை. ஆனால் அவனுக்கோ அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதிகிடைக்கவில்லை.

காலம் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தவேளை. தலைவருக்கு எட்டாவது பெண் குழந்தை பிறந்தது. அந்த இளைஞன் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தையுடன் விளையாடுவான். பஞ்சமில்லா அந்தக் கிராமத்திலே அந்தக் குழந்தை வாளிப்பாக வளர்ந்தது. இளைஞனதும் குழந்தையினதும் நட்பு ஒன்றிரண்டு வருடமல்ல பன்னிரண்டு வருடங்கள் பிரியாமல் இருந்தது. பாசப்பிணைப்பு அதிகரித்த அந்த நாளிலே திடீரென பிரிவு.

இப்பொழுது அவன் இளைஞன் அல்ல. பிரிவைத்தாங்க முடியாத அவன் பித்தனானான். தலைவரிடம் அவருடைய குழந்தையை பற்றி அவன் கேட்டபோது அவளை இனிமேல் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார் அவர். அவனால் உறங்க முடியவில்லை. எழுந்து நடந்தான். கடற்கரைக்குச் செல்லலாமா என நினைத்து சற்றுத்தூரம் சென்ற போது அவனுடைய கால்களை ஏதோ சுற்றிப்பிடித்தது. உதறநினைத்தான் முடியவில்லை . அது உதற முடியாத ஒரு பரிசம். வழமை போல் தூக்கி எடுத்தான். பசைப்பரிமாற்றம் நடந்திருக்க வோண்டும்.

கடல் பறவைகள் கடல் கரையிலே நுரைக்குப் பக்கத்திலே சந்தோசமாகப் பேசிக்கொண்டிருந்தன. முழுநிலவு கடற்கரை மணல் மட்டுமல்ல மந்தைகள் சோலைகள் எல்லாமே ஜொலித்திருந்த வேளை. அவர்கள் கடற்கரையை நோக்கிச் செல்கின்றார்கள். தலைவரின் எட்டாவது குழந்தையின் குடில்மட்டும் இன்னும் தீ வைக்கப்படாமல் இருக்கின்றது. அது அந்தக் கிராமத்தின் தாஜ்மகால்.

– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைசசேனை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *