தோற்றப் பிழை

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,033 
 

ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை. பைக்கை நிறுத்தினான். காலூன்றினான். விநாடிகள் டிஜிட்டல் எண்களாய் கரைந்து கொண்டிருந்தன. பத்து விநாடிகளுக்குள் வாகனங்கள் நெருக்கமாக வந்து நின்று காத்திருக்க ஆரம்பித்தன.

மக்கள் தொகை பெருக்கம்போல் வாகனங்களும் சரிவிகிதத்தில் பெருகிவிட்டன போலும், என எண்ணிக்கொண்டான்.

அப்போது-

தோற்றப் பிழை

அவனுக்கு மிக அருகில் அவன் தோளைத் தொட்டு, “”அய்யா, பசிக்குது ஏதாவது காசு குடுங்கய்யா….” என்ற குரல் கேட்டது.

நேர் எதிரே அம்புக் குறியிட்ட பச்சை விளக்குக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரவி, குரல் கேட்டு தன்னைத் தொடுதலை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.

நாலு முழ வேட்டியை துண்டு மாதிரி இடுப்பில் சுற்றியிருந்தான். அது வெள்ளை வேட்டிதானா என்ற சந்தேகத்திற்குரியதாய் நிறமிழந்து அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஏகப்பட்ட கறை. முழங்கையைத் தாண்டி நீண்டிருந்தது அவன் அணிந்திருந்த அரைக்கைச் சட்டை. சட்டைப் பையில் ஒரு கிழிந்த துணி சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. முக்கால்வாசி முகத்தை மூடியிருந்தது தாடியும் மீசையும். எண்ணெய் காணாத தலை, பரட்டையாய்க் கிடந்தது.

என்ன என்பது போல் அவனை முறைத்தான் ரவி.

“”பசிக்குது.. ஏதாச்சும் காசு குடுங்கய்யா..”

அவனுடைய தோற்றம் ரவியை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அவன் தன்னைத் தொட்டுக் கேட்டது கோபத்தை மூட்டியது.

“”ஏய்… உனக்கென்ன குறைச்சல் இப்போ? ஏதாவது வேலை செஞ்சி பிழைக்க வேண்டியதுதானே…” என்றான் கொஞ்சம் கோபத்தோடு.

“”எந்த வேலைன்னாலும் செய்வேன் சார்.. யாரும் குடுக்கமாட்டேன்கிறாங்களே…”

“”நீ பார்க்க இப்படியிருந்தா எவன் வேலை கொடுப்பான்? ஓட்டல்ல இலை எடுக்குற வேலைகூட கிடைக்காது…”

“”என்ன செய்யுறது சார்… அய்யா அம்மான்னு கை நீட்டிக் கேக்குறதுக்கு இப்படியிருந்தாதான் ஏதோ நாலு காசு கெடைக்குது. அதுல அரை வயித்தக் கழுவுறதே பெரும்பாடா போயிடுது….” என்றபோது மஞ்சள் விளக்கு எரிந்தது.

வாகனங்கள் புறப்படத் தயாராயின. ஸ்டார்ட் செய்து பச்சை அம்புக் குறிக்காக காத்திருந்தன.

ரவியும் தன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். ஸ்டார்ட் ஆகவில்லை. மீண்டும் மீண்டும் உதைத்தான். ம்கூம்… சிக்னல் விழுந்து மற்ற வாகனங்கள் “விர் விர்’ என்று பறந்தன.

என்னவாயிற்று இதற்கு, திடீரென்று மக்கர் பண்ணுகிறதே. இவ்வளவு நேரமும் நன்றாகத்தானே வந்தோம். முகம் வேர்த்தது. தனக்கேற்பட்ட சங்கடத்தில் பிச்சை கேட்டு நின்றவனை முறைத்தான் ரவி. அதேசமயம் இவனுக்குப் பின்னால் நின்றவர்கள் இவனை முறைத்தார்கள்.

“‘வண்டியை ஓரமா நிறுத்திட்டுப் பேசுப்பா. போறவங்களுக்கு வழியை விடு…” என்று முணு முணுத்துக் கொண்டே போனார்கள்.

“”என்னா சார் ப்ராப்ளம்? வண்டி ஸ்டார்ட் ஆகலையா?” அவன் கேட்டான்.

வாகனங்கள் பரபரப்பாக விரைந்து கொண்டிருக்கும் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சிக்னலில் மற்ற வண்டிகளுக்கு இடைஞ்சலாக நிற்க வேண்டியதாயிற்றே என்ற அவமானம் உள்ளுக்குள் உறுத்த, “”ஆமாம், இப்போ தெரிஞ்சி என்ன செய்யப்போறே?” என்றான் எரிச்சலுடன்.

“”வண்டியை இப்படி ஓரமா ஸ்டேண்ட் போட்டு நிறுத்துங்க சார்.. என்னான்னு பாக்கலாம்…” என்ற அந்த அழுக்கு மனிதனை வியப்புடன் பார்த்தான் ரவி.

“”உனக்கு ரிப்பேர் செய்யத் தெரியுமா?” என்று கேட்டபடி, மற்றவருக்கு இடைஞ்சலின்றி ஓரமாக நிறுத்தி ஸ்டாண்ட் போட்டான்.

“”ஏதோ கொஞ்சம் தெரியும் சார்…” என்றவன், வண்டியிலிருந்து டூல்ûஸ எடுத்துக் கொண்டு வண்டியை ஆராய்ந்தான். சில கேபிள்களை இழுத்துப் பார்த்தான். ஆட்டிப் பார்த்தான். ஏதோ ஒரு நட்டை லூஸ் பண்ணி வயரை எடுத்து பல்லால் கடித்துத் துப்பி மீண்டும் அவ்வயரை அதில் பொருத்தி நட்டை டைட் செய்தான். ஸ்பார்க் ப்ளக்கை கழற்றி தன் வேட்டியில் துடைத்துவிட்டான்.

“”என்ன படிச்சிருக்கே?”

“”ஐ.டி.ஐ.ல படிச்சேன். அப்புறம் ஆட்டோ ஒர்க் ஷாப்ல கொஞ்ச நாள் வேலை…”

“”ஏன் வேலையைவிட்டு நின்னுட்டே?”

“”இந்த சிக்னல்ல நின்னு சொல்ற அளவுக்கு என்னது சின்ன கதை இல்லே சார்…. நம்ம கதை வேணாம். உங்க ஜோலிய பாத்துக்கிட்டு போங்க சார்..”

டூல்ûஸ வண்டியில் எடுத்த இடத்தில் வைத்தான். அழுக்கான கைகளை தன் வேட்டியில் துடைத்து கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு, வேட்டியை மேலும் அழுக்காக்கிக் கொண்டான்.

“”இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க சார்..”

ஸ்டார்ட் செய்தான். ஆனது! அவன் முகத்தில் சந்தோஷம், பாக்கெட்டில் கைவிட்டான், பணம் எடுத்து அவனுக்குக் கொடுக்க, பிறகு என்ன நினைத்தானோ என்னவோ, “”வா.. என் பின்னால் உட்கார்..” என்றான்.

“”ஏன் சார்… ஏதாவது காசு குடுத்துட்டுப் போங்க சார்.. என் பொழப்பை நான் பாத்துட்டுப் போறேன்…

“”பரவாயில்லை உட்கார்…” அவன் குரல் அவனை உட்காரச் சொன்னது.

உட்கார்ந்தான். நேரே வீட்டுக்குச் சென்றான். நல்ல வேலையாய் இவன் போன போது வீட்டில் அம்மாவும் மனைவியும் இல்லை. இருந்திருந்தால், “இவன் யாரு இவனை ஏன் இங்கே அழைச்சுட்டு வந்தே?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்திருப்பார்கள்.

தன்னிடமிருக்கும் வேறு சாவி போட்டுத் திறந்து உள்ளே நுழைந்தான். பின்னால் தயங்கி நின்றவனையும் உள்ளே அழைத்தான்.

“”வேண்டாம் சார் நான் இப்படியே போறேன்…”

“”பேசாம வா…” என்றழைத்து துண்டொன்று கொடுத்து முதலில் அவனைக் குளிக்கச் செய்தான். குளித்து வந்த பிறகு தன்னிடமிருந்த உடைகளில் அவனுக்குப் பொருந்தக் கூடியதாய்ப் பார்த்து அணியச் செய்தான்.

“”ஏன் சார் இதெல்லாம்? என்ன சார் பண்றீங்க. புரியலையே..”

“”உன்னை மாத்தப் போறேன். உன்னையே உனக்கு அறிமுகப்படுத்தப்போறேன். பேசாம நான் சொல்றபடி செய்!”

அடுத்து அவனை அழைத்துக் கொண்டு சலூன் கடைக்குச் சென்றான்.

அடுத்த அரைமணியில், அவன் பரட்டை தலைமுடி சீராக்கப்பட்டு, தாடி மழிக்கப்பட்டு, மீசை முகத்திற்குத் தகுந்தாற்போல் அளவாக நறுக்கப்பட்டு புதிய மனிதனாய் புது இளைஞனாய் தோற்றமளித்தான். இப்போது அவன் தோற்றம் அவனுக்கே வியப்பாய் இருந்தது. கல்லூரியில் படிக்கும் வாலிபன் போலவும் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞனாகவும் தோன்றினான். அப்படியிருந்த நானா இப்படியிருக்கிறேன்! வியந்து போனான்.

“”சார்…” நன்றி சொல்லமுடியாமல் தடுமாறினான். கண்களில் நீர் சுரந்தன.

“”இவ்வளவு நேரம் உன்னோடு பேசியும் பழகியும் உன் பேரை தெரிஞ்சிக்கலை பார் நான், உன் பேரென்ன?” கேட்டான் ரவி.

“”மூர்த்தி….” என்றான் அவன்.

“”சரி, என்னோடு வா மூர்த்தி..” மீண்டும் அவனை அழைத்துச் சென்றான்.

இந்தத் தடவை அவனை அழைத்துச் சென்றது ஒரு ஒர்க்ஷாப்புக்கு! ரவி, தன் வண்டியை அங்குதான் பழுது சரிசெய்ய விடுவது வழக்கம். மேலும் அந்த ஒர்க்ஷாப் ஓனருக்கு கடையை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்க நிறைய உதவிகள் செய்திருக்கிறான். அதன்காரணமாய் ரவி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.

இரண்டு சக்கர வண்டியை பழுது பார்க்க மட்டும் சிறிய கடையாகவும் இரண்டு பையன்களோடும் ஆரம்பித்த அந்த ஒர்க்ஷாப், இன்று பத்து பேர் வேலை செய்யவும் டூவீலர் மட்டுமின்றி கார்களும் பழுதுபார்க்கும் சிறந்த ஒர்க்ஷாப்பாக இரண்டு கிரெüண்ட் இடத்தில் பரந்து விரிந்து கிடக்கக் காரணம், ரவியின் பேருதவி. ரவியின் சிபாரிசால் வங்கிக்கடன் கிடைத்தது முக்கியக் காரணம்!

அந்த ஒர்க்ஷாப் அருகே போய் நின்றான் ரவி.

அந்த இடத்தையும் ஒர்க்ஷாப்பின் பெயரையும் பார்த்த மூர்த்தி, “”சார் இங்கேயா!” என்றான். அவன் முகத்தில் பயம் தெரிந்தது.

“”ஏன்?”

“”இங்க ஒருதடவை வந்து வேலை கேட்டேன் சார். என்னைப் பாத்ததுமே போ அப்பாலன்னு முகம் சுளிச்சாங்க. என்னைப் பைத்தியம்னு நெனச்சாங்களோ என்னவோ நாலடி பின்னால போனாங்க. இந்தா டீ குடிச்சிட்டுப் போன்னு ரெண்டு ரூபா குடுத்தாங்க..”

“”அப்படியா?”

“”ஆமாம் சார். திரும்பவும் இங்கேயே வரவேண்டியதாயிருச்சே…”

“”பயப்படாதே இந்தத் தடவை அப்படியெதுவும் நடக்காது. நான் பார்த்துக்கிறேன்…”

“”வாங்க சார். என்ன சார் வண்டில ஏதாவது ப்ராப்ளமா?”

ரவியைப் பார்த்ததும் இருக்கையிலிருந்து எழுந்து வந்தார். ஒர்க்ஷாப் ஓனர்.

“”அதெல்லாம் ஒண்ணுமில்லே. உங்களைத்தான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். உங்ககிட்ட ஒரு உதவி வேணும்..” என்றான் ரவி.

“”ஒண்ணு என்னா சார்… ஒம்போது கூட செய்யறேன்… சொல்லுங்க…”

பக்கத்தில் நின்ற மூர்த்தியைக் காட்டி, இவர் எங்களுக்கு வேண்டியவர். மெக்கானிக். டூவீலர்லே நல்ல அனுபவம் இருக்கு. உங்ககிட்ட ஏதாவுது வேலையிருந்தா கேட்கலாம்னு வந்தேன்..”

“”நிச்சயமா சார், உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன். அதுவும் உங்களுக்கு வேண்டியவர்னு சொல்லிட்டீங்க, கொடுக்காம இருப்பேனா…” என்றபடி மூர்த்தியைப் பார்த்தார். அவர் பார்வை அவனை முன்னமேயே பார்த்தது போலன்றி இப்போதுதான் முதல் தடவையாய்ப் பார்ப்பது போலிருந்தது.

“”சார் பேரென்ன?” என்றார்.

“‘மூர்த்தி..”

“”சார பார்த்தாலே தெரியுது, நல்ல வேலை தெரிஞ்சவர்னு. நம்மகிட்ட இருக்கட்டும். கார் மெக்கானிக்கெல்லாம் கூட கத்துக்கிரட்டும். நீங்க கவலைப்படாதீங்க சார், நான் பார்த்துக்கிறேன்…”

ஓனரின் கள்ளங்கபடமில்லாத தெளிவான பேச்சு மூர்த்திக்குப் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட நல்ல குணமும் பண்பும் கொண்டவரா அன்றைக்கு விரட்டினார் என்ற எண்ணமும் அவன் மனதின் ஓரத்தில் வந்து போனது.

“”ரொம்ப நன்றிங்க. அப்படியே இன்னொன்னு….” என்ற ரவி சற்று தயங்கி, பின், “”சார் கூட்டிட்டு வந்தவராச்சே இவர்கிட்ட எப்படி வேலை வாங்குறது என்ன வேலை கொடுக்கிறதுன்னு தயக்கம்லாம் வேண்டாம். உங்க முறைப்படி என்ன வேலை கொடுக்கணுமோ கொடுங்க. அதேசமயம் வேலை தெரியலேன்னாலும் சொல்லிக் கொடுங்க…” என்றான்.

“”நம்மகிட்ட கொண்டாந்து விட்டுட்டீங்கள்ல… கவலையை விடுங்க. பெரிய மெக்கானிக்கா ஆக்கிடறேன்…”

கை குவித்து நன்றி சொல்லி புறப்பட்டான் ரவி.

“”என்ன மூர்த்தி இந்த வேலை பிடிச்சிருக்கா. இங்கே வேலை செய்ய இஷ்டம்தானே? சாரி, உன்னோட விருப்பம் தெரிஞ்சிக்காமலேயே இந்த வேலைல இழுத்துவிட்டுட்டேன்…”

“”சார்… சார்… ஏன் சார் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. சிக்னல்ல நின்னு உங்ககிட்ட பிச்சை கேட்ட எனக்கு எதுவுமே கொடுக்காம, இப்போ அட்சயபாத்திரத்தையே கொடுத்திட்டீங்களே சார்! இதை யாரும் வேண்டாம்பாங்களா சார்…” என்ற மூர்த்தியின் கண்கள் நீரால் நிரம்பின.

கண்களைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தான். “”இதே இடத்துக்கு அன்னைக்கு வந்தப்ப என்னை விரட்டுனாங்க.. கேலியா பார்த்தாங்க, இன்னைக்கு எல்லாம் உங்க ராசி! உங்க நல்ல

மனசு!”

“”இல்ல மூர்த்தி, உன் தோற்றம்தான் காரணம்! அன்னைக்கு இருந்ததும் இன்னைக்கு இருப்பதும் ஒரே மூர்த்திதான். உன் தோற்றத்தில்தான் பிழை. பலாப்பழத்தைப் பற்றி தெரியாதவனும் அதன் சுவை அறியாதவனும் அதை முதல் தடவையாய்ப் பார்க்கிறப்ப, முள்ளு முள்ளாய் இருக்கிற அதன் மேல் தோலைப் பார்த்துட்டு அருவருப்பா நெனப்பாங்க. அதுபோலத்தான் நீ அவங்களுக்குத் தெரிஞ்சிருக்க அப்போ. ஆனா இப்போ, எல்லாருக்கும் பிடித்த பலாச்சுளை போல இருக்கே!”

“”சிக்னல்ல உனக்கு நான் காசு கொடுக்கலேன்னாலும் என் வண்டி ரிப்பேர்ன்னு தெரிஞ்சதும் உடனே உதவி செய்தியே, அந்த நல்ல மனசும் திறமையும் உன் தோற்றத்தால வெளியே தெரியாமப் போயிருச்சு. இப்போ எல்லாரும் பார்க்கக்கூடிய மதிக்கக்கூடிய சராசரி மனிதனா மாறியிருக்கே…”

“”மாத்தினது நீங்கதானே சார்…”

“‘யெஸ், ஒண்ணு தெரிஞ்சிக்க, படிக்காதவனாயிருந்தாலும் நல்ல உடையும் தோற்றமும்தான் மனிதனுக்கு பிளஸ் பாயிண்ட்…”

“”ஆமாம் சார்… நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான்!”

“”உனக்கொரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன். இதை நழுவவிட்றாம உன் வாழ்க்கையை நீதான் அமைச்சிக்கணும்… சரியா? அப்போ நான் புறப்படுறேன். அடிக்கடி வந்து பார்க்கிறேன்….” மூர்த்திக்கு கை கொடுத்து புறப்பட்டான் ரவி.

மனசுக்குள் கை கூப்பி ரவி சென்ற திசை நோக்கி நன்றி மலர்களைத் தூவினான் மூர்த்தி!

– காஞ்சிபுரம் மீனாசுந்தர் (ஜூலை 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *