மந்திரியின் தந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 105,290 
 

இளவரசி அழைத்தார் என்று வெளியே காத்திருந்த அமைச்சர், சிறிது சலிப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இளவரசி வீட்டு வாயில்காப்போன் அமைச்சரின் சலிப்பான நடையை கண்டு ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.

இந்த நாட்டுக்காக என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது, என்று ஒரு கணம், சிந்தித்த அமைச்சர், தன்னுடைய எண்ணத்தை உடனே மாற்றி கொண்டார்.இளவரசி அழைக்கிறார்,என்று ஒரு பெண் பணியாள் வந்து சொல்லவும் உள்ளே சென்றார்.

மன்னிக்கவேண்டும் அமைச்சரே, தங்களை அழைப்பதற்கு நேரமாகிவிட்டதால் தாங்கள் தயவு கூர்ந்து என்னை தவறாக கருதக்கூடாது.
ஒரு புன்னகையுடன், தந்தை தன் மகளிடம் ஒரு போதும் கோபம் கொள்வதில்லை.

நீங்கள் காட்டும் பாசத்திற்கு ஒன்றும் குறைவில்லை, ஆனால் நாடு என்று வரும்போது நீங்களும், என் தந்தையும் ஒன்றாகி விடுகிறீர்கள்.

இளவரசி தங்களை என் மகளாக நான் கருதினாலும், நான் நம் நாட்டு அரசனுக்கு சேவகன் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஒரு இளம்பெண்ணின் மனத்தை புரிந்துகொள்ளாத ஒரு நாடு இருந்தென்ன? போயென்ன? இதற்கு ஒரு மன்னர், மந்திரி. வெறுப்புடன் வார்த்தைகளை கொட்டினாள் இளவரசி.

மந்திரி சிரித்துக்கொண்டு, உங்கள் மன நிலை புரிகிறது, ஆனால் நம் நாடு இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இது ஒன்றுதான் வழி, அதைத்தான் நானும் மன்னனும் செய்து கொண்டிருக்கிறோம்.

என்ன செய்தீர்கள்? படையெடுத்து வந்து விடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு காமுகந்த அரசனுக்கு என்னை மணம் முடிக்க பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாயில்லை.

கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள், அவன் நம் நாட்டை விட பல மடங்கு பெரியவன், அது மட்டுமல்ல நம் நாட்டு வீர்ர்களை போல் இரு மடங்கு வீர்ர்களை வைத்துள்ளான். இந்த சூழ்நிலையில், நம் நாட்டில் பஞ்சம் வேறு வந்து விட்டது. இப்பொழுதுதான் கொஞ்சம் மழை பெய்து ஓரளவு நிமிர்ந்துள்ளோம். இந்த கால கட்டத்தில் நம்மால் ஒரு போர் புரிய முடியுமா?

அப்படியே இருக்கட்டும் இந்த போர் எனக்காகவா?

இல்லை, அவன் கப்பமாக ஏராளமான பொன்னும் பொருளும் கேட்கிறான், அதை கொடுத்தால் போர் புரிய வரமாட்டானாம்.அதற்கு பதிலாகத்தான் உங்களை மணம் முடித்து உறவுகளாக்கிக்கொள்ள நினைக்கிறோம்.

மந்திரியாரே ! இதற்கு எதிர்காலம் உங்களை கோழைகள் என்று அழைக்காதா? கேவலம் வீரத்துக்கு ஒரு பெண்ணை விலை பேசி சமாதானமாகிக்கொண்டவர்கள் என்று என் தந்தைக்கும்,உங்களுக்கும் அவப்பெயர் வராதா?

உங்களது கோபம் புரிகிறது, உங்களை சமாதானப்படுத்தத்தான் மன்னர் என்னை இங்கு அனுப்பி இருக்கிறார்.அந்த மன்னனைப்பற்றி எனக்கும் தெரியும்,அவன் பெண் பித்து பிடித்தவன், ஏராளமான மனைவிகள் உண்டு.

தெரிந்தும், அந்த பாவப்பட்ட பெண்கள் கூட்டத்துக்குள் என்னையும் கொண்டு போய் சேர்த்து விட்டாள், உங்களுக்கும், உங்கள் மன்னனுக்கும் பொறுப்பு தீர்ந்து விடும் அல்லவா?

இல்லை, எனக்கு பொறுப்பு தீராது ! நான் என்ன நடந்தாலும் இந்த நாட்டை காக்கும் பொறுப்பில் உள்ளவன், இருந்தாலும் மன்னனுக்கு துரோகம் செய்ய முடியாது, ஆனால் இதே மன நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்றால் ஒரு உபாயம் செய்ய முடியும்.ஆனால் நான் குற்றவாளி ஆகிவிடுவேன், மன்னனுக்கு எதிரானவன் என்று சொல்வார்கள். என்ன சொல்கிறீர்கள்?

திகைத்து நின்ற இளவரசி, மந்திரியாரே உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? நான் இதிலிருந்து வெளியே வந்து விட முடியுமா? உங்களால் உபாயம் சொல்ல முடியுமா?

முடியும். உங்களுக்கு தைரியமும்,துணிச்சலும் மட்டும்தான் தேவை.

மந்திரியாரே, ஆண்களுக்கு குறைந்ததல்ல என் வீரம் இதை பல முறை நிருபித்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரியும்.

அதனால்தான் இந்த திட்டத்தையே உங்களுக்கு சொல்கிறேன். நன்றி, தன் பணிப்பெண்களிடம் இங்கிருந்து செல்லும்படி கட்டளையிடுகிறாள். அனைவரும் சென்ற பின் மந்திரியார் இளவரசியின் காதில் ஏதோ சொல்கிறார்.

மந்திரியாரே ! ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைகிறாள் இளவரசி.

இது நடக்குமா? நடக்கும், நடக்க வேண்டும்.அதுவும் இரண்டே நாட்களில்.அதற்குள் நான் நம் நாட்டில் உள்ள தலை சிறந்த கள்வர் கூட்டத்தை கூட்டப்போகிறேன்.கள்வர் கூட்டமா? மந்திரியார் சிரித்துக்கொண்டே, ஏன் திகைக்கிறீர்கள், தனக்காக திருடும்போது அவனுக்கு சட்டத்தின் பயம் இருக்கும், நாட்டுக்காக திருட சொன்னால் அவனால் சிறப்பாக செயல்பட முடியும்.அடுத்ததாக நாம் எடுக்க போகும் நடவடிக்கைக்கு ஆதரவாக நமது நாட்டின் கிழக்கில் இருக்கும் கோசல நாட்டின்உதவி நமக்கு கிடைக்க வேண்டும். அந்த நாட்டின் தளபதி உங்கள் மனம் கவர்ந்தவன் அல்லவா?

மந்திரியாரே ! வெட்கத்தால் அவள் முகம் சிவக்க இது எப்படி தங்களுக்கு தெரிந்தது.

நீங்கள் சந்தித்து கொள்வது, சில நேரங்களில் ஆண் வேடமிட்டு அந்த நாட்டுக்கு சென்று அவனுடன் அளவளாவி வருவது, அவனும் மாறு வேடத்தில் இங்கு வந்து செல்வது, எல்லாம் எனக்கு தெரியும்.

மன்னித்துக்கொள்ளுங்கள் மந்திரியாரே, உங்களை தவறாக எடை போட்டு விட்டேன். பரவாயில்லை, இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்காணித்துக்கொண்டிருப்பது ஒரு மந்திரியின் கடமைதானே.

இரண்டு நாட்கள் எந்த விதமான சம்பவங்களும் நடைபெறவில்லை. மூன்றாம் நாள் காலையில அந்த செய்தி நாட்டை உலுக்கியது. மன்னரும், ராணியும் சிறை பிடிக்கப்பட்டனர், சிறை பிடித்தது, அந்த நாட்டின் இளவரசி.

மக்கள், அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். இது எப்படி? என்றாலும் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை, காரணம் அந்த நாட்டின் இளவரசியின் மீது மக்கள் கொண்டிருந்த நன் மதிப்பு, அவளின் வீரம் பலமுறை நாட்டு மக்களுக்கு தெரிந்திருந்தது.

அன்று பகலிலேயே தன்னை மகாராணி என்று முடிசூட்டிக்கொண்டாள் அந்த இளவரசி. அது மட்டுமல்ல, அந்த பட்டாபிசேகத்துக்கு கோசல நாட்டு மன்னனே, தலைமை வகித்தான். அப்பொழுதே ஒரு அறிவிப்பை செய்தான்.தன்னுடைய மகனைப்போல வளர்த்த தங்கள் நாட்டு தளபதியை மகராணிக்கு மணம் முடித்து வைப்பதாகவும் அறிவித்தான்.

அப்பொழுது அவர்கள் நாட்டின் மீது படையெடுத்து வருவதாக இருந்த மன்னன், பெரும் குழப்பத்தில் இருந்தான். அவன் நாட்டில் இருந்த கஜானா முழுவதுமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. யார் செய்தது? அத்தனை காவல் இருந்தும் எப்படி கள்வர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

அந்த நாட்டு சபையில் இவர்கள் நாடு செய்த சதியாய் இருக்குமோ என்று சந்தேகம் எழுப்பபட்டது.மன்னன் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

இப்பொழுது அந்த நாட்டிலேயே பெரும் குழப்பம் உள்ளது, மன்னனையே அவர் மகள் சிறை பிடித்திருக்கிறாள்.அந்த சூழ்நிலையில், அங்கிருந்து கள்வர்களோ, வீர்ர்களோ, இந்த செயலை செய்ய வாய்ப்பில்லை.

நாம் அவர்கள் மீது படையெடுக்கும் திட்டம் இப்பொழுது கொஞ்சம் ஆற போடலாம், காரணம் கோசல நாடு அவர்களுடன் உறவு கொண்டாடுகிறது.அது போக நம்மிடமும் இருந்த சேமிப்பு களவாடப்பட்டிருக்கிறது. காத்திருப்போம்.

அங்கு இளவரசியாய் இருந்து மகாராணியாய் முடிசூட்டிக்கொண்டவள், கள்வர்கள் தலைவனுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் வழங்கி, கெளரவித்துக்கொண்டிருந்தாள்.

தன் வீரர்களிடையே அவள் உரையாற்றினாள், இனிமேல் போர் என்றால் போர்தான். எந்த பெண்ணின் விருப்பம் அறியாமல் பெண் கொடுத்து சமாதானம் செய்யும் பேச்சு என்பது இனி இந்த நாட்டில் இல்லை.

அரண்மனையின் உப்பரிகையில் ஒரு அறையில் மகாராஜாவும், மகாராணியும், மந்திரியுடன் உட்கார்ந்து அவரை பாராட்டிக்கொண்டிருந்தார்கள்.

எப்படி இந்த பிரச்சினையில் இருந்து மீளப்போகிறேன் என்ற கவலையில் இருந்தேன்.முடித்து கொடுத்துவிட்டீர்கள்.நன்றி மந்திரியாரே..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *