தற்பெருமையில் கணிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 1,869 
 
 

என்னைப்போல் ஒரு ஜோசியக்காரன் இந்த உலகத்தில் இப்பொழுது இல்லை. எதிர்காலத்தில் பிறக்கலாமோ என்னமோ, எனக்கு தெரியாது.

ஏன் அதையும் கணித்து சொல்லலாமே என்று கேட்கிறீகளா? சொல்லலாம், நானும் கணித்து பார்த்தேன் இப்போதைக்கு யாரும் இல்லை, எதிர் காலத்தில் உருவாகலாம் கோள்களின் கணக்கை வைத்து கணித்திருக்கிறேன். வெளி உலகிற்கு இதை பற்றி சொன்னால், என்னை கர்வம் பிடித்தவன் என்கிறார்கள், இல்லை என்றால் அகம்பாவம் பிடித்தவன் என்று சொல்கிறார்கள்.

யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும், நான் கணித்து அதை தவறு என்று சொன்னாலோ, இல்லை தவறுதலாக நடந்தாலோ அது கண்டிப்பாய் என் தவறாய் இருக்காது. அவனுடைய ஜாதக புத்தி அவனுக்கு இந்த சிரமத்தை கொடுத்திருக்கும். அவ்வளவுதான்.

இதனால் மற்றவர்கள் என் மீது பொறாமை படத்தான் செய்கிறார்கள். இப்பொழுது கூட பாருங்கள், என்னை பேட்டி காண அமெரிக்காவிலிருந்து பத்திரிக்கையாளர்கள் வந்திருக்கிறார்கள். என்னுடைய புகழ் உலகம் முழுக்க பரவி இருக்கிறது என்பது உங்களுக்கு புரிகிறதல்லவா?

சாதாரண ஜோசியக்காரனாக இருந்த இவன் எப்படி இந்தளவுக்கு பெரிய ஜோசியக்காரனாக ஆனான் என்று என் பழைய சகாக்கள் கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் நினைப்பது என்ன? இவன் இன்னும் மரத்தடி ஜோசியக்காரனாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா?

இன்னும் ஒரு சிலர் நான் வெறும் விளம்பரங்கள் மூலமும், பத்திரிக்கைகளில் பெயர் வர புரளி பேசி பெரிய ஜோசியக்காரனாக ஆனதாக கூட பல பேர் என் காது படவே பேசிக்கொள்வதுண்டு. இல்லை என்றால் பத்திரிக்கைகளில் தன்னுடைய வயித்தெரிச்சலை எழுதி தீர்த்துக்கொள்பவர்களும் உண்டு.

இவர்கள் எல்லோருக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், அவனவனுக்கு விதி எப்படி இருக்கிற்தோ அப்படித்தான் பெயரும் புகழும் கிடைக்கிறது. என்னுடைய் ஜாதகம் என்னை இந்தளவுக்கு உயருவான் என்று கணித்திருக்கிறது. நான் பேரும் புகழும் வாங்கி இருக்கிறேன். போன வாரம் பாருங்கள் என்னை மடக்க நினைத்த நிருபர் கேட்ட கேள்வி

ஏன் சார் உண்மையிலேயே நீங்கள் சொல்வது எல்லாம் நடக்கிறதா?

நீங்கள் பத்திரிக்கையாளர்தானே இதுவரை நடந்துள்ளவைகள் பத்திரிக்கையில் வந்திருப்பதை பார்ப்பதில்லையா, இல்லை…

அதற்கில்லை, உங்கள் கூட இருப்பவர்களே நீங்கள் இட்டு கட்டி விடுவதாக ஒரு பேச்சு…

யார் பேசுவது காட்டுங்கள் வெறும் பொறாமையினால் என்னை பற்றி பேசுபவர்களை பற்றி எனக்கு கவலையில்லை.

மற்றொரு நிருபர் சரி மழை ஏன் பெய்யாமலேயே இருக்கிறது?

இது என்னை கேட்கும் கேள்வி அல்ல?

இந்த நேரத்தில், தனிப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும், என்று அந்த கால சூழ்நிலைகளை வைத்து கணித்து சொல்வதுதான் என் தொழில்

அப்படியானால் என் பெயர் நிர்மல் வயது இருபத்தி ஐந்து, எனக்கு அடுத்து என்ன நடக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா?

இது வேண்டுமென்றே என்னை கேட்கும் கேள்வி, அவருடைய ஜாதமோ, இல்லை கைகளையோ காட்ட சொல்லுங்கள் நான் அவர் எதிர்காலம், நிகழ் காலம், இறந்த காலம் அனைத்தையும் சொல்கிறேன். ஆனால் இப்படி விளம்பரத்துக்கோ,இலவசத்துக்கோ இல்லை அனைத்திற்கும் அவர் கட்டணம் கட்ட தயார் என்று சொல்லுங்கள், நான் தயாராகிறேன்.

நான் தயார் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்

சிரித்தேன் சத்தமாக சிரித்தேன், கட்டணம் நீங்கள் வாங்கும் ஊதியம் போல் மும்மடங்கு தரவேண்டும்.

உங்களுக்கே இது அதிகம் என்று தெரியவில்லையா?

நான் இல்லை என்று சொல்லவில்லையே. இதற்கு கூட நான், நீ என்று வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதை பார்த்துத்தான் மற்றவர்கள் என் மீது பொறாமைப்படுகிறார்கள். இல்லாததும் பொல்லாததும் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள்.

சரி உங்களை பற்றிய கணிப்பு, உங்களுக்கு நாளை எப்படி இருக்கும் என்றாவது சொல்லுங்கள்.

என்னை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. மனிதன் என்பவன் பிறக்கிறான், வாழ்கிறான் இறக்கிறான், இது மட்டுமே எந்த காலத்திலும் நடந்து கொண்டே இருக்கிறது.

நாங்கள் கேட்டதற்கு பதில் உங்களிடமிருந்து வரவில்லை.

சரி என்ன கேட்கிறீர்கள், என்னை பற்றித்தானே, எழுதிக்கொள்ளுங்கள் நான் இரண்டு வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்வேன்.

என்ன சொல்கிறீர்கள் உண்மைதானா?

மறுபடி சொல்கிறேன், என் வாக்கு என்றும் தவறாது.

மன்னிக்கவும், உங்கள் முடிவை பற்றி கேட்கிறோமே என்று, உங்களால் அறுதியிட்டு சொல்லமுடியுமா?

மறுபடி மறுபடி சொல்கிறேன் இந்த நாள் இந்த வருடம் இந்த நேரம் நான் மறைந்து விடுவேன். சரி நான் வருகிறேன்.

மறு நாள் அனைத்து தினசரிகளிலும் “பிரபல ஜோதிடர் கணிப்பு” தன்னுடைய மரணத்தை தானே குறிப்பிட்டு கொடுத்திருக்கிறார்

அவ்வளவுதான் தொலைக்காட்சிகளிலும், செய்திகளிலும் என்னை பற்றி பேச்சேதான். மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் இதே பேச்சுத்தான். என் புகழ் உலகம் முழுக்க பரவுகிறது.

நாட்கள் உருண்டோட நான் மறந்தாலும் வெளி உலகம் நான் மறைவதற்கு குறிப்பிட்டிருந்த நாளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தன.

என் மனதுக்குள் பெரும் போராட்டம், “அவசரப்பட்டு சொல்லிவிட்டேனா? அன்று மறைவதற்கான கிரக பலன் இல்லாமல் இருக்கிறதே. சே..உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது என்பது இதுதானோ. இப்பொழுது நான் சொன்னது தவறு என்று சொன்னால் எல்லாமே தலைகீழாகி விடுமே. நான் குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக மறைந்து விட்டால்..!

குறிப்பிட்ட நாளில் நான் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது, காவல் துறை உடைத்து திறந்து பார்க்கயில் தூக்க மாத்திரை புட்டி என் அருகில் இருக்க நான்……படுக்கையில்

மறு நாள் பத்திரிக்கைகள் என் தற்கொலையை ஒட்டி செய்திகள் வெளியிட்டு “ஜோசியர் குறிப்பிட்டு கொடுத்த நாளில் மறைந்திருக்கிறார்” இது உண்மையில் அவர் வாக்கின் பெருமையை காண்பித்திருக்கிறது என்று எழுதியிருந்தார்கள்.

அவர் குறிப்பிட்டு கொடுத்த நாளில் இறந்தாரா? இல்லை அன்று இறந்து ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இறந்தாரா? எல்லா இடங்களிலும் இந்த பட்டி மன்றம்தான் நடந்தது.

அவர் சொன்னது நடந்து விட்டது என்று எண்ணுவதா? நடக்க வேண்டும் என்று அவர் இறந்தாரா?

(இது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்த செய்தியின் அடிப்படையில் புனையப்பட்ட கற்பனை கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *