தாத்தா தாத்தா கதை சொல்லு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 11,561 
 

இந்த தெருவுக்கு குடி வந்ததில் இருந்து இவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். எங்க பேரன் இரவு 8 மணி ஆனால் ஓடி வந்துவிடுவான். இரண்டு வீடு தள்ளி தான் என் பெண் வீடு. இவனோடு ஒரு குழந்தை பட்டாளமே வரும். தொலை காட்சியே கதி, கை பேசியே கதி என்கிற இந்த காலத்தில் குழந்தைகள் இவர் கதை கேட்க தினமும் வருவது ஆச்சர்யம் தான். ” தாத்தா தாத்தா கதை சொல்லு ” என்று எட்டு மணிக்கு ஆரம்பிச்சா பத்து மணியாகும் எல்லா குழந்தைகளும் வீடு போக. என் பேரன் இங்கு தாத்தாவுடன் தூங்கி விட்டு காலையில் தான் வீட்டுக்கு போவான்.

” பாட்டி எழுந்திருக்க மாட்டேன் என்கிறார். நான் போறேன் ” என்று குரல் கொடுத்து கொண்டே காலையில் ஆறு மணிக்கு ஓடிவிட்டான் என் பேரன் . எட்டு மணியாச்சு. பேரனை பள்ளிக்கு கொண்டு விட இவர் போவது வழக்கம். இவர் அசந்து தூங்குகிறார். சரி என்று வீட்டை பூட்டி கொண்டு நான் போனேன். பையனை பள்ளியில் விட்டு விட்டு வரும் பொழுது மணி 10. இவர் இன்னமும் எழுந்து இருக்க வில்லை. நேரம் போய் கொண்டே இருந்தது. ஏன் இப்படி தூங்குகிறார் என்று தோன்ற தொடங்கியது. என் மாப்பிளையும் பெண்ணும் ” அப்பா எழுந்து கொள்ள வில்லையா இன்னும் ” என்று தொலை பேசியில் கேட்க தொடங்கியதும் எனக்கு பயமாகப் போய்விட்டது. பேரன் பள்ளியிலிருந்து ஓடி வந்து ” தாத்தா தாத்தா எழுந்திரு ” என்று உலுக்கியது என்னையே உலுக்கியது மாதிரி இருந்தது. பெண், மாப்பிளை எல்லாரும் வந்து விட்டார்கள் மருத்துவரை கையோடு கூட்டி கொண்டு. என் பெண் அவரிடம் ” கோமா இல்லையே ” என்று கேட்க , அவரை பரிசோதித்து விட்டு ” சாதாரண தூக்கம் தான், கவலை படாதீர்கள் ” என சொல்லிவிட்டு போய்விட்டார்.

மாப்பிள்ளையும் என் பெண்ணும் கொஞ்சம் சமாதானம் ஆனார்கள். என் பேரனோ மிகவும் கவலைப் பட தொடங்கிவிட்டான். ” நேற்று கும்பகர்ணன் கதை சொன்னார். தாத்தாவிடம் கும்பகர்ணன் போல் ஆறு மாத தூக்கம் வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டேன், தூங்கி பார்த்து சொல்றேன் டா என்றார், எனக்காக தூங்க ஆரம்பிச்சு விட்டார் பாட்டி . தாத்தா எழுந்தரு தாத்தா , தூங்க வேண்டாம் “. அவன் அலறல் கேட்டு அவன் நண்பர் கூட்டம் ஓடி வந்து விட்டது. அக்கம் பக்கத்தில் ” அப்படி என்ன நீண்ட தூக்கம்” என துக்கம் விசாரிக்க வந்து விட்டார்கள். பால் கவர் வாங்கி வாங்கி மாளவில்லை. காபி போட்டு போட்டு என் பெண்ணும் மாப்பிளையும் சலித்து போய் விட்டார்கள். கூட்டம் போய் விட்டது.அழுது அழுது ஓய்ந்த பேரனை மகள் தூக்கி கொண்டு போய்விட்டாள்.

மறு நாள் காலை பணம் எடுக்க வீட்டை பூட்டிவிட்டு வங்கி போனேன். போன மாதம் ஒய்வு ஊதியம் அவர் கணக்கில் காணோம். கேட்டேன்.

வருடா வருடம் உயிரோடு இருக்கிறேன் என்று உறுதி கடிதம் கொடுக்க வேண்டும். உங்க கணவர் கொடுக்க வில்லையே. அதுதான் காரணம் என்றார்கள். வங்கி மேலாளரிடம் சென்று அவர் நீண்ட தூக்கத்தில் இருக்கிறார் என என் பிரச்னையை சொல்ல தொடங்கினேன். அவர் எங்கள் வீட்டிற்கு வந்து இருக்கிறார். நல்லா பேசினார். ஒரு குண்டை போட்டார். பென்ஷன் போடாது அரசாங்கம். ஆனால் இந்த கணக்கில் பணமே எடுக்க முடியாது. அதை நிறுத்தி வைத்து இருக்கோம் என்றார்.

இருவர் சேர்ந்த அக்கௌன்ட் தானே என்றேன், பென்ஷன் சம்பந்த பட்டது. ஒன்றும் செய்ய முடியாது என்றார். என்னடைய சம்பாத்தியமெல்லாம் இவர் கணக்கில் சில வாரங்களுக்கு முன்னால் தான் போட்டேன். தலை சுற்றியது , யார் யாரே தாங்கி பிடித்து ஆஸ்பிடலில் சேர்த்தார்கள். அவர் அலுவலகத்திலிருந்து அவர் நண்பர்கள் ஓடி வந்தார்கள். மாலை ஆஸ்பிடலில் உங்கள் மருத்தவ அட்டை செல்லாது. அதனால் பணம் காட்டுங்கள் என்று சொல்ல சில நண்பர்கள் பணம் கட்டி என்னை வீட்டுக்கு கூடி வந்தார்கள். வீட்டில் உறங்கி கொண்டு இருக்கும் கணவர் அருகில் உட்கார்தேன்.
மகள், மாப்பிள்ளை ஆறுதல் என்னையும் என் பேரனையும் தேற்ற வில்லை. நாங்கள் சாய்ந்து விட்டோம் ஓய்ந்து விட்டோம். மாதங்கள் ஓடின.

அவர் அலுவலகத்தில் இருந்து ஒரு பெரிய அதிகாரி வந்து சொன்னார் ” உங்க மருத்துவ கார்டு இப்பொழுது செல்லாது. அவர் இறந்து இருந்தால் உடனே உங்கள் கார்டு தொடங்கி இருக்கும். உயிரோடு இருப்பதை சொல்லாமல் விட்டார். இப்பொழுதும் அவரால் சொல்ல முடியாது.

வேறு எதாவது வழியில் உங்களுக்கு கட்டாயம் உதவுவோம் ” என்று போய் விட்டார்.

அடுத்து உள்ளவர்களுக்கு இது பழகி விட்டது. ஆனால் இது செய்தியாகி அமெரிக்க வரை போக, நீண்ட தூக்கம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்ய மாணவர்கள் டெக்ஸாஸ் பல்கலை கழத்தில் பதிவு செய்து நேரில் அனுப்பட என் வீட்டில் தங்க தொடங்கிவிட்டனர். வேலைக்காரி போட்டு சாப்பாடு. முதலில் என் கவலையில் அவர்கள் நல்ல துணை என்று விட்டு விட்டேன். தொலை காட்சி , பத்திரிக்கைகள் , இன்டர்நெட் என தூங்கும் கணவரை எழுப்பாமல் தூங்குவதை காட்டி காட்டி என்னை வதைத்து விட்டார்கள். வீடை விற்று விட்டால் இந்த கூட்டம் ஓடிபோய் விடும் என்று வீடை விற்க முனைந்தோம். அமெரிக்க தூதரகம் ஆராய்ச்சியை தடுப்பதாக என் மீது வழக்கு போட்டது. நல்ல மாதர் சங்கம் என் பக்கம் வாதாடி என்னை காத்தது. அவர் உயிர் நன்றாக எழுதி வைத்து இருந்ததால் வீட்டை விற்க முடிந்தது. அமெரிக்க ஆதிக்கம் தீர்ந்தது.

மாதர் சங்கம் , அவர் கதை கேட்கும் குழந்தைகளின் பெற்றோர், என் மகள், மாப்பிள்ளை எல்லோரும் முயற்சி செய்து எனக்கு வேலை வாங்கி கொடுத்து வேறு ஒரு வீடும் வாங்கி கொடுத்து ஒரு நல்ல நிலை வந்தது.

என் கணவர் தூங்கியதில் எல்லாமே கஷ்டம் என்று சொல்ல முடியாது.

என் மகள் அலுவலகத்தில் வெளி நாடு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது.

என் கணவரை பார்த்ததும் என் மகளுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று அந்த வாய்பை கொடுத்தார் அவள் மேல் அதிகாரி. என் மாப்பிளைக்கு ஒரு உயர்ந்த பதவி தட்டி போய் கொண்டே இருந்தது. தரவேண்டாம் என்று உறுதியாக இருந்த மேல் அதிகாரி என் கணவர் கோலத்தை பார்த்ததும் உருகிவிட்டார்.

எல்லாம் சரி, நானும் என் பேரனும் நம்பிக்கை இழக்க வில்லை.

ஒரு நாள் இரவு , மணி எட்டரை, ” தாத்தா தாத்தா கதை சொல்லு”

என் பேரன் குரல்.

” இராவணன், விபிஷணன், கும்ப கர்ணன் ….” என் கணவர் குரல்

” பாட்டி , தாத்தா கதை சொல்றார் ” என் பேரன் குரல்

” தாத்தா , கும்பகர்ணன் கதை வேண்டாம் , நீ ரொம்ப லூட்டி அடிக்கிறாய் ”

தாத்தா எழுந்ததை அவன் ரசிக்க தொடங்கிவிட்டான்.

“காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது
விலங்குகள் ஏது ?”

தொலைகாட்சியில் பாட்டு ஒலித்தது என் மகிழ்ச்சியின் துணையாக.

மகிழ்ச்சியில் என் மனம் துள்ளி துள்ளி துடிக்க தொடங்கியது. ….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *