(1947 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
[ராஜகுடும்பம்
கிளாடியஸ் – அண்ணனைக் கொன்று அரசாட்சி பெற்றவன்.
ஜெர்ட்ரூட் – அண்ணன் மனைவியாயிருந்த அவன் மனைவி.
ஹாம்லெத் – அண்ணன் மகன் அல்லாடும் மனத்தன்.
மந்திரி குடும்பம்
பொலோனியஸ் – அதிசாகசத்தால் அனாவசியமாக செத்தவன்.
லேயர்ட்டீஸ் – காரியத்தில் கருத்தும் பேச்சில் பட படப்பும் உள்ளவன்.
ஓபிலியா – தகப்பனை நம்பி, காதலித்தவனை இழந்து சித்தங் கலங்கி மாண்ட சிறுமி.
பள்ளித் தோழர்கள்
ஹொரேஷியோ – யோக்கியமான நண்பன் ஹாம் லெத்தின் பள்ளித்தோழன்.
கில்டன்ஸ்டர்ன் – அயோக்கிய நண்பர்கள் – அவர்களும் அவனுடன் படித்தவர்கள்தான்.
ரோஸன்
கிரான்ட்ஸ்
பிசாசு, சோல்ஜர்கள், பணியாட்கள் முதலியோரும் வந்து போவார்கள்.]
1
யார் அங்கே?
குரலிலே அதிகார தோரணையும் அதனுடன், பயமும் கலந்திருந்தது. கடுங் குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோல பாய்ந்தது அக்குரல்.
‘நீ யார்; முதலில் அதைச் சொல்லு’ என்று பதில் கேள்வி பிறந்தது, கன்னக்கனிந்து திரண்டு நின்ற இருள் பிழம்பிலிருந்து.
‘மன்னர் நீடூழி வாழ்க’.
‘என்ன பெர்னாடோவா’.
‘ஆமாம்’.
‘குளிரும் பல்லைக்கிடுக்கிறது; மனசும் ஒரு. நிலைகொள்ளவில்லை’.
‘எப்படியப்பா உன் பாராவிலே எதுவும்…’
‘ஒரு சுண்டெலிகூட அசங்கலெ……’
‘சரி பின்னெ போரேன்’.
‘வழியிலே மார்ஸெலஸும் ஹொரேஷி யோவும் வந்தா சீக்கிரம் வரச்சொல்லு’
டென்மார்க் ராஜ்யத்தில் தலைநகரில் வெளி மதில் பாராக்காரர்கள் இவர்கள். அதோ மார்ஸெலஸும் ஹொரேஷியோவுமே வந்துவிட்டார்கள். ராஜ்யத்திலே பரிசீலனை செய்து புரிந்து கொள்ளுவதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் புதிர்போல பல சம்பவங்கள் நடந்து விட்டன.
டென்மார்க் அரசனான ஹாம்லெத், ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தவர், திடீரென்று ஒருநாள் நந்தவனத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர் மாண்டு கிடந்தார்.
விட்டம்பெர்க் சர்வகலாசாலையில் படித்துக் கொண்டிருந்த இளைய ஹாம்லெத் பட்டத்துக்கு வராமல் அவனுடைய சித்தப்பாவான கிளாடியஸ் முடிசூட்டிக்கொண்டான். அதுமட்டுமா, ராணி ஜெர்ட்ரூடையும் கலியாணம் செய்து கொண்டான். மரணத்தின் காரணம் புரியவில்லை. இந்த அவசரப்பட்ட கலியாணம் என்ற கேலிக் கூத்தின் விபரீதமும் புரியவில்லை.
ஹொரேஷியோ இளைய ஹாம்லெத்துடன் சகபாடியாக வாசித்தவன். இந்த பாராக்காரர் கள் சொல்லும் ஒருவிபரீதத்தை நேரில் பார்க்க வந்திருக்கிறான். மெத்தப் படித்து விவகார ஞானம் பெற்ற அவனுக்கு ‘இது வெறும் கனவு’ என்றுதான் படுகிறது. தான் கண்ணாரக் கண்ட பெர்னாடோ மறுபடியும் விவரிக்கிறான்.
நேற்று ராத்திரி, அதோ அந்த நட்சத்திரம், ங் கே வரும்போது, இதோ இப்பொழுது பிரகாசிக்கிறதே அங்கே வரும்போது, நானும் மார்ஸெலஸும்…அப்பொழுது மணி ஒன்று அடித்தது…
‘சூ,பேசாமலிரு… ‘ என்று சுட்டிக்காட்டுகிறான் மார்ஸெலஸ்…
ஏதோ சாயாரூபம் மாதிரி ஒன்று தூரத்தில் தென்பட்டது. இறந்த மன்னனுடைய ஆவி. அதே நடை: அதே மிடுக்கு.
‘ஹொரேஷியோ, நீ படிச்சவனாச்சே. அதனுடன் பேசு’ என்று தூண்டுகிறான் மார்ஸெலஸ்.
ஹொரேஷியோ தெய்வத்தின் மீது ஆணை யிட்டு அதை வழிமறித்து ‘நீ யார்’ என் கேட்கிறான்.
அது முகத்தில் கோபத்தைக் காட்டி மிடுக்காக அகன்று விடுகிறது.
‘போய்விட்டது’ என்கிறான் மார்ஸெலஸ்.
‘இது ஏதோ ராஜ்யத்தில் கெடுதலுக்குத் தான் அறிகுறி. ரோம் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட ஜூலியஸ் ஸீஸர். விழுந்தபோதும் ரோமாபுரி தெருக்களில் பிசாசுகள் நடமாடி வாம்; வால்வெள்ளி தோன்றியதாம்; ரத்த மழை பெய்ததாம்… அதோ மறுபடியும் வந்து விட்டது.
அதை மறுபடியும் ஆணையிட்டு தடுத்து நிறுத்தி கேள்விகள் போடுகிறான்.
எங்கோ ஒரு கோழி கூவுகிறது.
ஆவி மறைந்துவிடுகிறது.
மூவரும் வழி மறித்து தடுக்கத்தான் முயற் சித்தார்கள். காற்றைப் பிடித்து கட்டிவைக்க முடியுமா?
இந்த அதிசயத்தை இளைய ஹாம்லெத்திடம் சொல்லுவதென்று தீர்மானமாகிறது.
2
இளைய ஹாம்லெத் உலகக் கவலை இல்லாமல் வூர்ட்டெம்பெர்க் சர்வகலாசாலையில் வாசித்துக் கொண்டிருந்தான். தந்தையின் மரணச் செய்தி வந்தது. மணி முடியின் பொறுப்பை ஏற்க சம்மதமில்லாதபடி திரும்பி வந்தான். வரு முன்னமே சிற்றப்பன் கிளாடியஸ் சிங்காதன மேறிவிட்டான். தாயார் அவனை அலங்கோல அவசரத்தில் கலியாணம் செய்துகொண்டு விட்டாள். ஹாம்லெத்துக்கு தந்தையின் மரணத்தைப்பற்றி சர்வ சந்தேகம். கொலையா, யார் கொன்றிருப்பார்கள்? கிளாடியஸ் கொலைகாரனானால் தன்னிடம் ஏன் இவ்வளவு பரிவு காட்ட வேண்டும். துரிதக் கலியாணம் செய்து கொண்டாலும் தாயார் பாசம் குறையவில்லை. ஆனால் அவனுக்கோ சர்வ சந்தேகமாக இருந்து வந்தது. ஒன்றும் புரியவில்லை. புரியாத புதிர்களும் தெரியாத எதிரிகளும் அவன் மனசை வாட்டிக் கொண்டிருந்தன.
இந்த ராஜ்யத்துக்கு பிரதான மந்திரி பொலோனியஸ் என்ற கிழவன். உடல் நைந்தது போல், விவேகமும் நைந்துவிட்டது. அடிக்கடி ஞாபகப்பிசகு, தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே என்ன பேசினோம் என்பது மறந்துவிடும். ஆனால் மனசில், தன்னை அபார சாணக்கியன் என்று நினைத்துக்கொண்டு, தான் இல்லாவிட்டால் டென்மார்க் ராஜ்யமே அழிந்து போய்விடும் என்ற மனப்பால் குடித்து தனக்கு வேண்டாத காரியங்களில் எல்லாம் தலையிட்டுக் கொள்ளுபவன். எல்லாவற்றிலும் சர்வ சந்தேகம்.
இவனுக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. மகன் பெயர் லேயர்டிஸ், மகள் பெயர் ஓபீலியா. ஓபீலியா, சாதுக் குழந்தை; உலகம் அறியாத வள்,வெளுத்ததெல்லாம் பால். ஆனால் லேயர்டீஸ் இதற்கு மாறானவன். விவகாரம் தெரிந்தவன், நினைத்த காரியத்தை செய்வதற்கு சற்றும் தயங் காதவன். எது சரி என்று அவனது புத்திக்குப் பட்டதோ. அதை செய்து முடிக்க என்ன விதமான பாஷையானாலும் அதைக் கையாளுபவன். ஓபீலியாமேல் இளைய ஹாம்லெம் காதல் வைத்திருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
பெரிய இடத்துப்பாசம் கெடுதலையே விளைக்கும். என்றும் ஏமாந்துவிடாதே என்றும் தங்கைக்கு. புத்தி சொல்லுகிறான். பிரான்ஸுக்குப்போக வேண்டும் என்று லேயர்டிஸுக்கு ஆசை. தகப் பனை வற்புறுத்தி அனுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு விடுகிறான். தகப்பனோ, பாரிஸில் போய் எப்படி கெட்டலையப்போகிறானோ என்று அவனது நடவடிக்கைகளை வேவு பார்க்க அந்த, ரங்கமாக வேறு ஒருவனை அனுப்புகிறான்.
3
தகப்பனார் மாண்ட துக்கத்திலிந்து தெளியாத இளைய ஹாம்லெத்துக்கு, கோட்டை மதி லில் ஆவி நடமாடுவதைப்பற்றி அவனது நண்பர்கள் அந்தரங்கத்தில் வந்து தெரிவிக்கிறார்கள். மனசில் ஏற்கனவே பலவிதமாக சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் ஹாம்லத்துக்கு இது புதிரை விளக்க வந்த புதுப்பாஷைபோலத்தெரிகிறது. நண்பர்கள் மார்ஸெலஸ், பெர்னாடோ, ஹொ ரேஷியோ ஆகியோருடன், நடுநிசிக் காவலுக்குச் செல்லுகிறான். பழையபடி அதே நேரத்தில், அதே உருவம் தோன்றுகிறது. ஹாம்லெத் தொடருகிறான். தான் இம்மண்ணுலகில் நட மாடியபோது தனக்கு நிகழ்ந்த கோர முடிவை ஆவி, அவனிடத்தில் வர்ணிக்கிறது. இப்பொழுது மன்னனாக மணி முடிதரித்திருக்கும் தனது சகோதரனான கிளாடியஸ், உத்தியானவத்தில் தான் சற்று அயர்ந்திருக்கையில், காதில் விஷத்தை ஊற்றி சாகடித்து விட்டதாகக்கூறுகிறது. ராணி ஜெர்ட்ரூடின் கள்ளக்காதல் வைத்த தீ, இந்தக் கொடுமையில் வந்து விடிந்ததாகவும் பழி வாங்கி விடவேண்டும் என இளைய ஹாம்லெத்திடம் சத்தியம் வாங்கிவிடுகிறது.
பேயைக்கண்டு திரும்பிய இளைய ஹாம்லெத் சித்தம் அதிர்ந்து விடுகிறது. பேயிடம் பேசிவிட்டு திரும்பிய நண்பர்களிடம் நடந்ததைச் சொல்ல மறுத்துவிடுகிறான். ஆனால் இந்த விவகாரத்தைப்பற்றி ஒருவார்த்தை மூச்சு விடக்கூடாது என்று சத்தியம் வாங்கி விடு கிறான். டென்மார்க் ராஜ்யமே தன்னை எதிர்த்து நிற்பதாக மலைக்கிறான், ஹாம்லெத்; அவன் எப்பொழுதுமே படிப்பிலும் நினைப்பிலும் பொழு தைக் கழித்தவன். செயலில் இறங்குவது என்பது இரத்தச் செடி வீசும் பாதையில் நடப்பது என்பது மனசை கிடுகிடுக்க வைக்கிறது. ஆனால் இந்தக் காரியத்தை நடத்தித்தான் தீர வேண்டும் என்று ஏதோ ஒரு உள்தூண்டுதல் அவனை உந்தித் தள்ளுகிறது. இந்த உலகைச் சீர்படுத்த என்னை ஏன் படைத்தாய்’ என்று ஏங்குகிறான்.
கிளாடியஸ்தான் கொலை செய்தவன். ஆனால் அவனும் ஒரு வீதத்தில் கோழை. முதலில், ஜெர்ட்ரூட் மேலிருந்த அபார மோகம், அதைத் தொடர்ந்து, சிங்காதனம் வரை தனது ஆசை விரித்த நடைபாவாடை, பழைய மன்னனை விஷம் வைத்துக் கொல்லும்படி. செய்துவிட்டது. கொன்ற பிற்பாடு மனசில் நிம்மதி கிடையாது. ஜெர்ட்ரூட் காட்டும் அன்பு தான் மனத் தணலுக்கு ஒரு ஆறுதலாக இருந்து வருகிறது. முதலில் கொலை செய்யும்போது இளைய ஹாம்லெத்தைப்பற்றி பிரமாதமாக. நினைக்கவில்லை. அவன் துக்கப் போர்வை போர்த்து, கவலைச்சிலுவையைச் சுமந்து வருவது வேஷமோ என்று சந்தேகிக்கிறான். சிறு போதில் இளைய ஹாம்லெத்தின் பள்ளிக்கூட சகாக்களும் அரண்மனை வாழ்வின் சீலைப் பேன்களுமான ரோஸன் கிரான்ட்ஸ், கில்ட்டன்ஸ்டர்ன் என் இருவரை, இளவரசனுடைய நடமாட்டங்களைக் கவனிக்க வேவு அனுப்புகிறான்.
ஜெர்ட்ரூட் யாரையும் நம்புகிறவள். அவளு. டைய வாழ்விலே, ஏற்பட்ட கள்ளக் காதல்தான் அவள் செய்த தப்பு. மன்னன் ஹாம்லெத்தின் திடீர் மரணம், காதலை ஒளித்து வைத்துக். கஷ்டப்பட்டுக்கொண்டிராமல், உலகம் ஒப்ப மணப்பாதை காட்டியதாகவே கருதுகிறாள். மன்னன் கொலை செய்யப்பட்டதாக அவளுக்கு. தெரியாது, அவ்வாறு சந்தேகிக்கவே இல்லை, சந்தேகிக்கவும் திறம் கிடையாது. அவசரக் கலியாணத்துக்கு முதலில் தயங்கினாலும், அவளது ஆசையும் கிளாடியஸின் வற்புறுத்த. லும் அவளை இணங்க வைத்துவிட்டன. கிளாடி யஸின் மீது எவ்வளவு அபார மோகம் இருக். கிறதோ, அதேமாதிரி, ஒரே மகனான இளைய ஹாம்லெத் அவள் கண்ணுக்கு கண்ணானபிள்ளை. மகன்மேல் அவளுக்கு சொல்லுக்கு மீறிய வாஞ்சை. இளைய ஹாம்லெத்தின் துக்கத்தைப் போக்கி மனசை தெளிவிக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதை முயலுகிறாள்.
பேயைக் கண்டுவிட்டு ஹாம்லெத் அந்த அலங்கோலமும், அதிர்ச்சியும் நீங்காமல், தன் காதலியைப்பார்க்க வருகிறான். தனது காரியத் தைச்சாதிக்க காதலையும் துறக்க வேண்டும் என்று மனசு சொல்லுகிறது. கடைசி முறை யாக அவளைப் பார்த்துவிட்டுப்போக வருகிறான். அதிகமாக பழக்கம் வைத்துக்கொள்ளக்கூடாது, என்று தடுக்கப்பட்ட ஓபிலியாவுக்கு இவனது வருகையும் பார்வையும் முழியும் திடுக்கிட வைக் கிறது. தன் தகப்பனாரிடம் ஓடோடியும் வந்து சொல்லுகிறாள். நம் நாட்டில் கைகூடாக்காதலை உலகுக்கு அறிவிக்க மடலேறும் பழக்கம் இருந்ததுபோல அங்கே அக்காலத்தில், நிராகரிக் கப்பட்ட காதலன், அலங்கோலமாக உடை தறித்து பித்துக்குளி மாதிரி தன் காதலை எடுத் துக்காட்டி, இறக்கும்படி செய்விக்க, காதலி முன் வருவது என்ற ஒரு சம்பிரதாயம் இருந்து வந்தது. ஹாம்லெத்துக்கு காதல் பைத்தியந்தான் ஏற்பட்டுவிட்டது என் று பொலோனியஸ் நிச்சயப்படுத்தி விடுகிறான். மன்னன் சமுகத் துக்கு தன் மகளுடன் சென்று தான் கண்டு பிடித்ததை அறிவிக்கிறான்.
4
இந்த நிலையில் கிளாடியஸின் தூண்டில் முள்களான கில்டன்ட்ஸ்டர்னும், ரோஸன் கிரான்ட்ஸும் இளைய ஹாம்லெத்திடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறார்கள். அவன் அவர்களை கிண்டல் பண்ணுகிறான். அவன் பேச்சில் பைத்தியத்தின் கமரல் அடிக்கிறது. புதிர்போன்ற அவனது வார்த்தைகள், அவர்களை உள்ளத்தைத் தொளைக்கவேண்டும், ஆனால் மரத்துப்போன மடங்களுக்கு அது புரியவில்லை, ஆனால் இரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேன் என்கி றானே என்ற கொதிப்பு, இந்தச்சமயம் பார்த்து தேசாந்திரியான நாடகக் கோஷ்டி ஒன்று அங்கு வருகிறது. ஹாம்லெத்துக்கு மின்வெட்டுவது மாதிரி ஒரு யோசனை தோன்றுகிறது. தன் தகப்பனாரின் கொலையை நாடகமாகத்தயார் செய்து கிளாடியஸ் முன் ஆடினால்…? நாடகந்தான் சரி, அதுதான் மன்னன் மனச்சாட்சியைப் பிடிக்க அதுதான் சரியான தூண்டில்.
இளைய ஹாம்லெத்துக்கு பிசாசு சொன்ன வார்த்தைகளின்மேல் கூட அவ்வளவு சந்தேகம். ஒருவேளை தன்னைப் பாழ்படுத்த சாத்தானின் சாபமோ என்று சந்தேகம். அதனால்தான் அவன் மனசு கிடந்து அலைமோதுகிறது. நாடகக்காரர் களின் வருகை, தெய்வமே தனக்கு வந்து காட் டிய வழிபோலத் தோற்றுகிறது. பழி வாங்குவது பற்றி ஊசலாடும் உள்ளத்தானாகிய இளைய ஹாம் லெத் முயன்ற முயற்சி இது ஒன்றுதான். மற்றப் படி தர்மதேவதை ரத்த சாந்தியை நோக்கிச் செல்லும் பாதையில் அவன் சிக்கி இழுபடுகிறான். அவ்வளவுதான்.
5
இந்த நிலையில் வேவுகாரர்கள் வந்து, வேலை தங்கள் சக்திக்கு மீறியது என்பதைச் சொல்லு கிறார்கள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பொலோனியஸ் வருகிறான். இளைய ஹாம்லெத்துக்கு காதல் பைத்தியமானதா அல்லவா என்பதை பரீட்சிக்க சமயம் ஏற்றதாக இருக்கிறது என்பதை சொல்லுகிறான். ஓபிலி யாவை தனி இடத்தில் உட்கார வைத்துவிட்டு மன்னனும் மந்திரியும் ஒளிந்து கொள்ளுகிறார்கள். இளைய ஹாம்லெத் அந்தப் பக்கமாக வருகிறான். ஓபீலியா அவனிடம் பேச்சுக் கொடுக்கிறாள். தனது ரகசியத்தைக் கண்டுபிடிக்க இது ஒரு வலை என்பது அவனுக்குத் தெரியும். முரட்டுத் தனமாக அவளிடம் பேசுகிறான். பேச்சில் பித்தம் தெறிப்பதாகவே ஓபீலியா எண்ணுகிறாள். அவ ளுக்கு வேறு எந்தமாதிரி தெரியும். தனக்கு வீசப்பட்ட வலையில், கவர்ச்சிப் பொருளாக அளவிட முடியாத மதிப்பு வைத்திருந்த தனது ஆசைக்கு உகந்தவளே இருக்கிறாள் என் பதில் ஹாம்லெத்துக்குக் கோபம். “உன் தகப்பனை வீட்டுக்குள் போட்டுப் பூட்டிவை ; மடமை வீட்டோடேயே அடங்கட்டும்’ என்று அவன் சொல்லுவதின் பொருள் அவளுக்கு புலப்படவில்லை.
கிளாடியஸுக்கு, இது காதல் வெறி அல்ல என்பது புரிந்துவிட்டது. இளைய ஹாம்லெத் துக்கு பைத்தியமே கிடையாது; அவன் ரகசியத் தில் ஏதோ சதி செய்கிறான். வேற்றூருக்கு அனுப்பிவிட்டால் நலம் என்று நினைக்கிறான்.
கொலை அட்டூழியம்பற்றி எதுவும் அறியாத. பொலோனியஸுக்கு இது காதல் பைத்தியந் தான் என்ற உறுதியான நினைப்பு. தாயாரைக் கொண்டு கண்டிக்கச் சொல்லுவோம்; அதன் மூலம் ரகசியத்தைக் கண்டுபிடிப்போம். என்கிறான்.
6
நாடகம் டென்மார்க்கில் நடந்த கொலைதான். கொன்ஸாலோ என்ற ட்யூக், அவன் மனைவி பெயர் பாப்டிஸ்டா. லூஸியானஸ் என்ற உறவினன், ட்யூக் உத்தியானவனத்தில் உறங்கும் போது காதில் விஷம் ஊற்றிக் கொல்லுகிறான்.
இந்த நாடகத்தை கிளாடியஸ், ராணி, ஹாம்லெத், ஹொரேஷியோ, ஒபீலியா பொலோனியஸ் யாவருமே பார்த்துக் கொண் டிருக்கிறார்கள். இந்த கட்டம் வந்ததும் மன்னனுக்கு புரிந்து விடுகிறது. ‘விளக்கு, விளக்கு’ என்று சொல்லிக்கொண்டே இடையில் எழுந்து புறப்பட்டுச் சென்றுவிடுகிறான். ‘நெருப்பு என்று சொன்னால் உடம்பு பத்திக்கொண்டு விடுமா’ என்று சிரிக்கிறான் ஹாம்லெத். அம்பு பட்ட மான் எங்கே போய் விழுகிறதோ’ என்கிறான் ஹொரேஷியோவைப் பார்த்து.
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு ‘நாம் கண்ட பேய் யோக்கியமான பேய் தானப்பா?’ என்கிறான்.
அதற்குள் கில்டன்ஸ்டர்னும் ரோஸன் கிரான்ட்ஸும் வந்து சேருகிறார்கள். ‘மகாராஜா மகா கோபமாக இருக்கிறார்; ராணிக்கு ஆத்திரமும் ஆச்சரியமுமாக இருக்கிறது; ராணியார் உங்களை வரச் சொன்னார்கள்’ என்கிறார்கள்.
கில்டன்ஸ்டர்ன் அவனைத்தொளைத்துத் தொளைத்து ரகசியம் என்ன என்று தெரிந்து கொள்ள முயலுகிறான்.
ஹாம்லெத்துக்கு கோபம் வந்துவிடுகிறது. அவன் கையில் ஒரு குழலைக் கொடுத்து ‘இதை வாசி’ என்கிறான்.
‘எனக்குத் தெரியாதே’ என்று சொல்லு கிறான் கில்டன்ஸ்டர்ன்
‘சும்மா ஊதிப்பாரு: துவாரங்களில் விரலை வைத்து அழுத்திக்கொண்டு காற்றை ஊத வேண்டியதுதானே’ என்கிறான் ஹாம்லெத்.
‘அது இசையாக இருக்காதே.’
‘இந்தக் குழலை பேசவைக்க முடியாதவனா என்னைப் பேச வைத்துவிடப் போகிறாய், அதை விட நான் மட்டமானவனா’ என்று அதட்டுகிறான்.
அந்தச் சமயத்தில் பொலோனியஸ் வந்து, தாயார் ஹாம்லெத்தை அழைப்பதாக சொல்லி விட்டுப் போகிறான்.
7
ராணியை சந்திப்பதற்கு இளைய ஹாம்லெத் வருகிறான். வழியிலே கிளாடியஸ் தெய்வத்தை நோக்கி அல்லாடும் மனதுடன் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதைப் பார்கிறான். கடவுளை நோக்கி நின்று மன்றாடுபவனைக் கொல்லுவதா, கூலிக்கு கத்தி தூக்குபவன் அல்ல என்று நினைத் துக்கொண்டு கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டு தாயார் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லுகிறான்.
மகனிடம் கண்டித்துப்பேசி மனசில் உள்ளதை அறிய வேண்டும் என்று யோசனை சொல் லிக்கொண்டிருந்த பொலோனியஸ், திறைக்குள் மறைந்துகொள்ள, தாயார், மகனை உள்ளே வரும்படி அழைக்கிறாள்.
இளைய ஹாம்லெத் பித்துக்குளிமாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஏறுக்குமாறாகப் பேசுகிறான்.
திறைக்குப்பின் சிறிது சப்தம் கேட்கிறது. “எலி. எலி.” என்று சொல்லிக்கொண்டே. கத்தியைச் சொருகி விடுகிறான். திறைக்குப்பின் அவன் எதிர்ப்பார்த்தது மன்னன்; ஆனால் மாண்டு கிடந்தது மந்திரி.
ஆத்திரம் பொங்க தன் தந்தை எப்படி, மன்னன் எப்படி என்பதை வேறுபடுத்தி வர்ணிக்கிறான். ஆவேசம் கொண்ட அவனது மன சுக்கு தந்தையின் உருவெனத் தோற்றம் தெரி கிறது. அது அவனிடம் பேசுகிறது. அவனைத் தூண்டுகிறது. ஹாம்லெத்தின் பேச்சு ஜன்னி வே கத்தில் செல்லுகிறது. கிளாடியஸை திருடன், கொலைகாரன், மணிமுடியைத் திருடி அடிமடியில் ஒளித்துக்கொண்டவன் என்று வைகிறான்.
ஆனால் ராணி தன் மகனுக்கு பைத்தியம் தான் என்று நினைக்கிறாள்.
“எனக்கு பைத்தியம் இல்லை, தந்திரக்காரப் பைத்தியம் என்று வைத்துக்கொள், உன் மன்னனிடம் வேண்டுமானால் சொல்லு, என்னை வேற்றூருக்கு அனுப்ப யோசனை ஆகியிருக்கிறது. தெரியுமா?” என்று சொல்லிவிட்டு பொலோனியஸ் சடலத்தை இழுத்துக்கொண்டு போகிறான்.
8
பொலோனியஸ் உடம்பை ஹாம்லத்திட மிருந்து வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அதை அவசர அவசரமாக இரண்டாம் பேருக்குத் தெரியாமல், புதைக்க ஏற்பாடாகிறது. ஹாம்லெத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி விட விரும்பிய மன்னனுக்கு இந்தக்கொலை, பாதையை சௌகரியமாக்குகிறது. கில்டன்ஸ்டர்ன், ரோஸன்கிரான்ட்ஸ் இருவருடைய பாதுகாப்பில் ஏதோ ஒரு நொள்ளைச்சாக்கைச் சொல்லி அவனை அனுப்பி விடுகிறான். கடிதம் கொண்டு வருவோ ரை விசாரிக்காமல் தீர்த்துவிட வேண்டும். என்பது இங்கிலாந்திலிருப்பவர்களுக்கு தாக்கீது. ஆனால் கொலைக்காக, ஹாம்லெத்தை நாடுகடத்தி விட்டதாக ஜனங்களை சாந்தம் செய்ய வெளிப் பகட்டு.
இங்கிலாந்துக்குப்போகும் பாதையில், நார்வே மன்னனுடை மருமான், பயனற்ற மண்ணைப்பிடிக்க போலந்தை நோக்கி படை திரட்டிப்போவதை பார்க்கிறான். நாலு காசு பெறாத மண், ஆனால் எத்தனை ஆர்ப்பாட்டம். போலந்துக்காரனும் படை திரட்டிக்கொண்டு நிற்கிறார்களாம். வெறும் ஒட்டைப்புகழுக்கு உயிரைவிட அத்தனை பேர்; தகப்பன் கொலைப் பழியைத்தீர்க்க அத்தனை தயக்கம். தன்னையே உறுதிப்படுத்திக் கொள்ளுகிறான் ஹாம்லெத்.
9
தகப்பன் தீடீரென்று கொல்லப்பட்டது; அதுவும் தன்னைக் காதலித்தவராலே கொல்லப் பட்டது, ஒபீலியாவின் மூளையைக் கலக்கி விடுகிறது. வாழ்வில் தந்தையையும் தமயனையும் உற்றவலமாக நம்பி வந்தவள். உலகின் கொடூர சாயைகள் விழாமல் காப்பாற்றக்கூடியவர்களில் ஒருவர் மாண்டார். மற்றவனோ பாரிஸிலிருக் கிறான். நிர்க்கதியாகிவிட்டதாக நினைத்து வெருண்டு போன ஒபீலியா, பைத்தியம் பிடித்து அலைகிறாள். எப்பொழுது பார்த்தாலும் தகப் பனைப்பற்றியே ஜெபம், அவன் அந்தி மக்கிரியை களைப் பற்றியே பாட்டு, அதிலே நசுங்கி முறிந்த காதலின் துன்பச் சோபை அடிக்கிறது.
லேயர்ட்டீஸ் அந்தரங்கமாக டென்மார்க்கு க்கு வந்துவிட்டான். தகப்பனார் துர்மரணம் அவனுக்கு எட்டிவிடுகிறது. கோபாவேசனாக வருகிறான். டென்மார்க் ஜனங்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்கள். முதலில் பெரிய ஹாம்லெத் மரணம், பிறகு அவசர கலியாணம், அவசரப்பட்டாபிஷேகம், பிறகு பிசாசு நட மாட்டம், இளைய ஹாம்லெத் பைத்தியம், பொலோனியஸ் மரணம், ஹாம்லெத் நாடுகடத் தப்படல்,-ஜனங்களுக்கு சந்தேகம் பலமாகிறது. எப்பொழுதுமே கிளாடியஸை பிடிக்காது. லேயர்ட்டீஸே மன்னன்’ என்று கோஷித்துக் கொண்டு ம்பல் அவன் பக்கம் சாய்ந்து விடுகிறது. நாட்டில் புரட்சி ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது. மணி முடி தலையுடன் சிதறி விழுந்து விடுமோ என்று பயப்படுகிறான் கிளாடியஸ்.
கதவு உடைபடுகிறது. கோபாவேசனாக லேயர்டிஸ் தந்தையின் உயிருக்கு உத்தரம் சொல்லும்படியாக கொதித்துக்கொண்டு பிரவேசிக்கிறான்.
அரண்மனையிலுள்ளவர்கள் நடுநடுங்குகிறார்கள். ஆனால் கிளாடியஸ் நிதானத்தை இழக்க வில்லை, லேயர்ட்டீஸ் குணம் அவனுக்கு மனப் பாடம். அவனுடைய கோபத்துக்குப்போக்குக் காட்டிவிட்டால், கைப்பொம்மை. கிளாடியஸ் அவனிடம் பேச்சுக் கொடுத்து சமாதானம் செய்ய என்ன வழி என்பதை மனசிற்குள் யோசித்துக்கொண்டிருக்கிறான்.
மறுபடியும் வாசலில் பேரிரைச்சல் கேட் கிறது. சித்தம் கலங்கிய ஒபீலியா பிரவேசிக் கிறாள். லேயர்ட்டீஸ் மனசு கொதிக்கிறது. பசலை, அவளை இக்கதிக்கு கொண்டு வந்து விட்டார்களே. ஒபீலியா அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவள் ஏதேதோ பிதற்றிக்கொண்டு பாடுகிறாள். நிதான புத்தியுடன் நீசத்தனத்துக்கு வஞ்சம் தீர்க்கும்படி அவள் நின்று தூண்டுவதைவிட, அவள் நின்ற நிலையே கோபத்துக்கு கூர்மை கொடுக்கிறது.
ஆனால் கிளாடியஸ் சமயோசிதமாக ‘குற்ற முள்ள பக்கத்தில் உன் கோபத்தணல் விழட்டும் என்று சமாதானப்படுத்தி விடுகிறான்.
10
“என்னை நீ மன்னிக்கவேண்டும். மகாராணி பேரில் நமக்கு அத்யந்த பிரீதி. அவளுக்கோ அசட்டுத்தனமானதொரு புத்திர வாஞ்சை. நான் என்ன செய்யட்டும். விஷயத்தை முழு வதும் கேள். உன் தகப்பனார் என்றால் என் கண்ணுக்கு கண், இருந்தாலும் அவருக்காக, உலகிற்குப் போக்குக்காட்ட தண்டனையை நாடு கடத்துவதாக மாற்றினேன்” என்று சமாதானப்படுத்துகிறான் கிளாடியஸ்.
“அதனால் நான் என் தகப்பனாரை இழந் தேன், உயிருக்குயிரான தங்கை சித்தம் கலங்கி திரிகிறாள்” என்கிறான் லேயர்ட்டீஸ்.
“அதுமட்டுமா? முழுவதும் கேள்…யார் அது, என்ன கடுதாசி?” வாங்கி வாசிக்கிறான் கிளாடியஸ்.
மன்னன் முகம் கருக்கிறது. கடிதம் ஹாம் லெத்திடமிருந்து: “தன்னந்தனியனாக இங்கு திரும்பி வந்துவிட்டேன். நாளைக்கு தங்களை நேரில் சந்திக்க வேண்டும். அப்பொழுது தங்களுக்கு நான் திரும்பி வரவேண்டி ஏற்பட்டதை விவரிக்கிறேன்.”
கடிதத்தை லேயர்ட்டிஸிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லுகிறான். படிப்படியாக அவனை வசப்படுத்தி கத்திச் சண்டையில் விஷம் வைத்த கத்தி கொண்டு குத்தி வஞ்சம் தீர்த்துக்கொள்ளும்படி தூண்டுகிறான்.
அந்தச் சமயத்தில், ஒபீலியா, ஒரு நீரோடையில் தவறி விழுந்து யிர்துறந்தாள் என்ற தகவல் வருகிறது.
11
துர்மரணத்துக்கு ஆளானவர்களுக்கு அந்தி மக் கிரியைகள் ஒருமாதிரி. கிருஸ்துவச் சடங்கு கள் யாவும் நடைபெறாது. ஓபீலியாவுக்கும் அதேமாதிரிதான் நடக்கிறது.
அவளுக்காக சமாதிக் குழியைத் தோண்டிக் கொண்டிருக்கும் இடத்தருகில் வந்த பிறகுதான் ஹாம்லெத்துக்கு ஒபீலியாவின் மரணம் தெரிய வருகிறது. ஹாம்லெத்தும் ஹொரேஷியாவும் தான் அங்கே வருகிறார்கள்.
அல்லாடும் மனசினனான ஹாம்லெத் வேதாந் தம் பேசுகிறான். பிரேத ஊர்வலம் வருகிறது.
சவச் சடங்கு நடக்கிறது. தூரத்தில் நின்றி ருக்கும் ஹாம்லெத் லேயர்ட்டீஸை அடையாளம் கண்டுகொள்ளுகிறான்.
இதற்குமேல் துர்மரணத்துக்கு ஆளானவர் களுக்கு சடங்கு கிடையாது என்று பாதிரி மறுக்கிறார்.
மன உளைச்சலுடன் ‘இன்னும் ஒரு பிரார்த் தனை கீதம், அவளது ஆத்மா சாந்தியடைய’ என்று மன்றாடுகிறான்.
பிரேதத்தை எடுத்து குழிக்குள் கிடத்துகிறார்கள். அப்பொழுதுதான் ‘ஒபீலியாவா’ என்று திடுக்கிடுகிறான் ஹாம்லெத்.
‘என் மகனுடன் மணவினையை எதிர்பார்த் தேன், மண் அள்ளி போடத்தான் கொடுத்து வைத்திருந்தது’ என்று சொல்லி ராணி ஒரு பிடி மண்ணை குழிக்குள் தூவுகிறாள்.
இனிமேல் மண்போட்டு மூடி விடுவார்கள். ஓபீலியாவின் முகம் மண்ணோடு மண்ணாக மக்கி மடிந்துவிடும். லேயர்ட்டீஸுக்கு, மண்போட்டு மூடுவதை பார்க்க சகிக்கவில்லை. ‘ இன்னும் ஒரு முறை முகம் பார்க்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு குழிக்குள் இறங்கியவன், ‘என் மேலும் மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள்’ என்று அலறுகிறான்.
திடீரென்று நெருங்கிவந்து குழிக்குள் குதிக் கிறான் ஹாம்லெத். என்னுடைய துக்கத்துக்கு சமம் உனக்குண்டா? ஏன் கத்துகிறாய். நான் தான் ஹாம்லெத் என்று கத்துகிறான் லேயர்ட்டீஸ் அவன் கழுத்தை எட்டிபிடித்து நெருக்குகிறான். இரண்டுபேரும் அடித்துக் கொள்ளுகிறார்கள். இடையிலிருந்தவர்கள் இருவரையும் பிரிதது சமாதானப்படுத்தி வெளியேற்றுகிறார்கள்.
12
இளைய ஹாம்லெத் கப்பலில் இங்கிலாந்துக் குப் போகும்போது மன்னனுடைய துரோகத் தைப் பார்க்கிறான். எழுதியிருந்த கடுதாசி அவ. னைத் தீர்த்துவிடும்படி இருந்தது. அதை எடுத்து. விட்டு வருகிற இருவரையும் தீர்த்துவிட வேண் டும் என்று மாற்றுக் கடுதாசி எழுதி வைக் கிறான். மறுநாள் கப்பல் கொள்ளைக் காரர்கள் இவன் சென்ற கப்பலைத் தாக்குகிறார்கள். அந் தக் கப்பலில் தொத்தி ஏறி, கள்ளர்களுக்கு. இணக்கமாக இருந்து தப்பித்து டென்மார்க் வந்து சேருகிறான்.
இதுதான் அவன் திரும்பி வந்த கதை.. நண்பன் ஹொரேஷியோவுக்கு இதை வர்ணித் துக்கொண்டிருக்கும்போது கத்திச் சண்டைக்கு. சவால் வருகிறது. ஹாம்லெத்துக்கு அவ்வளவு கத்திச் சண்டை தெரியாது. இருந்தாலும் அங்கீகரிக்கிறான்.
கிளாடியஸ், ராணி, ஹொரேஷியோ, மத், யஸ்தகர் ஆகியோர் முன்னிலையில் கத்திச் சண்டை ஆரம்பமாகிறது.
ஒருவன் கையில் விஷக்கத்தி, மற்றொருவன் கையில், திறமை இன்மை.
“ஒயின் எடுத்து வை ” என்று உத்தரவிடு கிறான் கிளாடியஸ்.
ஹாம்லெத் முதல் ரவுண்டில் எதிரியைக் காயப்படுத்தி விடுகிறான். வெற்றி முழக்கப்படுகிறது.
“உன் வெற்றிக்கு” என்று மன்னன் குடிக் கிறான். “நம்மகனுக்கே வெற்றி” என்கிறாள்.
“மூசு மூசென்று இளைப்பு வாங்குகிறதே, இந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துக்கொள், இதோ உன் வெற்றிக்காக என்று ஒரு பாத்திரத்திலிருந்த ஒயினைக் குடிக் கிறாள் ராணி.
“போச்சு, விஷத்தை குடித்துவிட்டாள்” என்று முனங்குகிறான்.
“அப்புறம் தாகம் தீர்த்துக்கொள்ளுகிறேன்” என்று சண்டை போடுகிறான். சண்டை சூடு பிடிக்கிறது.
கனவேகத்தில் மோதிக்கொண்டு மல்லாட இருவருக்கும் காயம் படுகிறது. அதே சமயத்தில் ராணி கீழே விழுகிறாள்.
“ரத்தத்தைக் கண்டு மயக்கம் ” என்கிறான் கிளாடியஸ்.
“குடிக்காதே. விஷம். விஷம்” என்று கொண்டே உயிர் துறக்கிறாள்.
“துரோகம், துரோகம், தாளையடை” என்று கர்ஜிக்கிறான் ஹாம்லெத்.
“ஆமாம் துரோகந்தான். மன்னனே துரோகி, அவன் வலையில் சிக்கினேன். என் வினை என்னையே கடித்துவிட்டது. நீயும் தப்ப மாட்டாய், நானும் தப்பமாட்டேன்; விஷம் வைத்த கத்தி” என்கிறான் லேயர்ட்டீஸ்.
“விஷமா. விஷமே, உன் வேலையைச் செய்” என்று மன்னனையும் குத்துகிறான் ஹாம்லெத்.
“மீதியிருக்கும் விஷத்தைக் குடித்து ராணியைத் தொடர்ந்து செல்” என்று கர்ஜிக்கிறான் ஹாம்லெத்.
மன்னனும் லேயர்ட்டீஸும் மடிகிறார்கள்.
“என்னையும் காலன் கூப்பிடுகின் என்று சோர்கிறான் ஹாம்லெத்.
“நானும் வருகிறேன், இதோ மீதி விஷம் இருக்கிறது” என்று எடுக்கிறான் ஹொரேஷியோ.
“மனுஷனைப்போல் நடந்துகொள், உலகிற்கு என் துயரக் கதையைச் சொல்,” என்றபடி ஹாம்லெத் ஆவி பிரிகிறது.
அன்று தர்ம தேவதை ஒரு துரும்பை வைத்து பழி தீர்த்துக்கொண்டது.
போலந்தின் வெற்றிபெற்ற பான்டிஸ் பிராஸ் வருகைக்காக டென்மார்க் சிங்காதனம் காலியாயிற்று.
கில்டன்ஸ்டர்னும் ரோஸன்கிரான்ட்ஸும் செத்தார்கள் என்ற ஓலையுடன் தூதனும் வருகிறான்.
மரணம் பலதிறப்பட்ட மக்களை உண்டு பசி ஆறியது.
– உலக அரங்கு (நாடகக் கதைகள்), ஷேக்ஸ்பியர், தமிழில் தருபவர்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: மார்ச் 1947, ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி.