தனாவின் ஒரு தினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 6,904 
 

பட்டினப்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் செல்லும் போது பேருந்தில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலைக் பலமுறை கடந்திருக்கிறான். உள்ளே எப்படி இருக்கும் என்கிற எண்ணம் கூட அவனுக்கு வந்ததில்லை. அதெல்லாம் அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் பெயர் தனசேகர். தான்யா என்கிற புனைப்பெயரில் ஏதாவது கவிதை எழுதுவான். ஏதாவது ஒரு சிற்றிதழ் அதை வெளியிடும்.

தனா பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றில் குடியிருக்கிறான். அது கட்டப்படும்போது அப்போதைய ஆளுங்கட்சியின் வட்டம் ஒன்று பினாமி பெயர்களில் வளைத்துப் போட்ட பல குடியிருப்புகளில் அதுவும் ஒன்று. அவனுடன் இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள். அசோக்ராஜா, பாரதிராஜா பாதிப்பில் சினிமாவுக்கு வந்தவன். பழுப்பேறிய காகிதங்கள் அடங்கிய நான்கைந்து பைல்களில் அவன் கதைகள் மக்கிக் கொண்டிருக்கின்றன. அவன் தினமும் ஏதாவது ஒரு ஷீட்டிங் சென்று வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறான். கிடைக்கும் பேட்டாவில் வாரக் கடைசியில் தண்ணி போட்டுவிட்டு கதை சொல்ல ஆரம்பித்துவிடுவான். அவன் இயக்குரானால் தனாதான் பாடலாசிரியர்.

அறையில் இன்னொருவன் பாண்டு. ஆனால் அவனை எல்லோரும் பல்லாண்டு என்று தான் கூப்பிடுவார்கள். அத்தனைக்கு அவன் முன் பல் துருத்திக் கொண்டு இருக்கும். முக்கால் மண்டை வழுக்கையுடன் நீள முடி வளர்த்து ரப்பர் பேண்ட் கொண்டு குடுமி போல் கட்டியிருப்பான். எப்போதும் கருப்பு கலரில் முஸ்லீம் கேப் அணிந்திருப்பான். அதில் இரண்டு சில்வர் கலர் பிச்சுவாக்கள் எக்ஸ் போல இருக்கும். அதிகம் பேச மாட்டான். அடிக்கடி இரண்டு மூன்று நாட்கள் காணாமல் போவான். வரும்போது கை நிறைய பணத்தோடு வருவான்.

இது தவிர பகலில் தூங்கிக் கொண்டே இருக்கும் ராமசாமி. ராமசாமி கொஞ்சம் வயசாளி. இரவு காவலாளியாக ஏதோ வங்கியில் பணி புரிகிறார். அதனால் பகலெல்லாம் தூக்கம். எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருக்கும் அவர் எப்போது சாப்பிடுவார் என்று தனா யோசித்திருக்கிறான். ஆனால் அவர் சாப்பிடுவது உண்டு என்பது எப்போதாவது மூலையில் கிடக்கும் வாழையிலை குப்பை சொல்லிவிடும்.

நம் கதையில் தனா தான் முக்கியம். மற்ற மூன்று பேர் இல்லை.

சோதனையாக அன்று அவன் போன பேருந்து அடையார் பார்க் ஓட்டல் முன் முனகிக் கொண்டு நின்று போனது. தனா முப்பது ரூபாய்க்கு சரவணாவில் வாங்கிய டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னமும் இருபது நிமிடங்களில் அவன் பட்டறையில் இருக்கவேண்டும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரது இல்லத்துக்கு எதிரில் கோட்டூர்புரம் பாலத்தின் இறக்கத்தில் கரையோரமாக இருக்கும் நான்கைந்து தகரக் கொட்டகையில் ஒன்றில் இருக்கிறது அந்த லேத் பட்டறை. ஒன்பது மணிக்குப் போனால் ஆறு மணி வரையில் நீளமான இரும்புத்துண்டங்களை கடைய வேண்டும். கை விட்டுப் போகும். ஆனால் வேறு வழியில்லை. அதுவே பூவாவுக்கு வழி. ஊரில் தம்பி தங்கை படித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா ஆடு மாடு மேய்த்து ஏதோ அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஓட்டுனர் எல்லோரையும் இறக்கி விட்டிருந்தான். அவனைச் சுற்றி ஏகக் கூட்டம். இதை எப்படி எதிர்கொள்வது என்று தனாவிற்குத் தெரியவில்லை.
மயில்சாமி சூப்பர்வைசர் சவுக்கு நாக்குக்காரன். லேத்துக்கு தோதாக “ஓ” போட்டு பேசுவான். அதில் தனா சங்கடப்பட மாட்டான். எதுகை மோனையை ரசித்து விட்டு விடுவான். எதிர்த்தால் சுண்ணாம்பு தடவி விடுவான் மயில்சாமி.

நிமிடங்கள் வினாடிகளைப் போல கரைந்து கொண்டிருந்தன. எல்லோருக்கும் அவசரம். ஆனால் அவனுக்கு அதுவே அவசியம். சால்ஜாப்பு சொல்ல முடியாது. ஜாபு போய் விடும்.

‘ எக்ஸ்க்யூஸ்மி ‘

குரல் வந்த திசையில் பார்த்தால் ஒரு இருபது வயசுக்காரி. படு ஸ்டைலாக இருந்தாள். நுனி நாக்கு ஆங்கிலம். டெல்லிக்காரியாம். ஊர் தெரியாதாம். ஆட்டோவில் போக பயமாம். கோட்டூர்புரம் வரை வரமுடியுமா என்றாள்.

‘ அட சாலைக்கருப்பா ‘ என்றான். ஆச்சர்யம் வரும்போது அம்மா அடிக்கடி சொல்வது. இவளுடன் ஆட்டோவில் சென்றால் நேரத்துக்கு வேலைக்கு சென்று விடலாம். ஆனால் பணம் கொடுக்காமல் ஓடி விட்டால்..

அவன் மனதை அவள் படித்திருக்க வேண்டும். ‘ ஆட்டோ ‘ என்றாள். கையிலிருந்த ஐம்பது ரூபாய் தாளை அவன் கையில் திணித்தாள். சிக்னலில் நிற்கும்போது ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிவிட்டால் ஐம்பது ரூபாய் லாபம் என்று எண்ணினான். அவள் எச்சரிக்கை பேர்வழியாக இருந்தாள். அவன் உட்கார விட்டு ஏறும் வழியில் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

பாலத்தில் அவன் இறங்கும்போது அவளும் இறங்கிக் கொண்டாள். டிரைவர் கொடுத்த முப்பது ரூபாயை கவனமாக பையில் போட்டுக் கொண்டாள். ஆட்டோ டிரைவர் அவன் பாலம் இறக்கத்தில் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதே அடையார் பார்க் ஓட்டல் முன்பாக அவளைப் பார்த்தான். இப்போது சேலை கட்டியிருந்தாள். தமிழ் பெண் போலத் தெரிந்தாள். எவனுடனோ பேசிக் கொண்டிருந்தாள். கையில் நூறு ரூபாய் தாள் இருந்தது. ஆட்டோ ஏறி அவர்கள் போய் விட்டார்கள். இம்முறை எதிர்புறம்.
பத்து நாட்களுக்குப் பின் தினச்செய்தியில் போட்டார்கள்.

ஆட்டோ டிரைவர்களை ஏமாற்றி கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு.

பக்கத்திலேயே ஏமாந்த ஆட்டோ டிரைவர்களின் படங்களைப் போட்டிருந்தார்கள். அதில் ஒன்றில் அவன் அவளுடன் போன ஆட்டோ டிரைவர் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.

தனசேகர் இப்போதெல்லாம் தாடியுடனே திரிகிறான். கண்களில் கறுப்புக் கண்ணாடி. ஆட்டோ டிரைவர்களைப் பார்த்தால் தலையை குனிந்து கொள்கிறான்.

– January 2012, திண்ணை

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)