டைகரும் நானும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,130 
 
 

டைகர் என்பது நாய். நாய் என்று பலரையும் நான் அழைப்பதால் டைகரை நாய் என்று சொல்ல முடியாது. அது என் நண்பன். அது என்று சொல்வதில் தப்பில்லை. அதற்கு எவ்வளவு அறிவிருக்க வேண்டுமோ அதனையும் தாண்டியிருக்கிறது. மனிதர்களைப் பற்றி பேசும் போதுதான் அறிவு பற்றிய சந்தேகம் எனக்கு வரும்.

டைகர் முதலில் என்னைக் கண்டபோது கோரைப் பல் தெரிய எச்சரிக்கை விடுத்தது. நான் அந்த வீட்டை வாடகைக்குப் பார்க்கப் போனபோது நடந்த சம்பவம் அது. எனக்கு என்றும் மிருகங்களிடம் பிரச்சனையில்லை. அவற்றை நான் அறிவேன். நான் நேராக அதனை நோக்கி நேராக, நடுக்கமின்றி நடக்க கொஞ்சம் யோசித்துவிட்டு ‘சரி, தப்பு நடந்தால் பார்க்கலாம்’ என்பது போல டைகர் சற்று அமைதியானான்.

வீட்டு உரிமையாளர் என்னுடன் வந்திருந்தார். ரொம்பநாள் பூட்டிக் கிடந்த வீடு அது. அது தனிக்கதை. அப்புறம் பேசலாம். அவர் என் முதுகுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டிருந்தார்.

அப்புறம் நான் அந்த வீட்டுக்குக் குடிவந்த பின்னர் கொஞ்ச நாள் எச்சரிக்கை உணர்வுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. நான் அதற்கு சோறெல்லாம் போடுவதில்லை. பொதுவாக நான் யாரையும் நெருங்க விடமாட்டேன். அதிலும் சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கை. எனக்கே சாப்பாடு இல்லாதபோது நாய்க்கு சாப்பாடு போட்டு பழக்கிவிட்டால் ரொம்ப சிக்கலாகிவிடும் என்று பயம்.

டைகர் ஏனோ மெலிந்து கொண்டு வந்தான் என்பது தெரிந்தது. விலா எலும்புகள் தெரிந்தன. பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டேன். ‘அவுங்க வூட்ல சோறு போட மாட்டாங்க’

’ஏன்?’

‘அவுங்க ரெண்டுபேரும் வேலைக்கிப் போனாங்க.. இப்ப அண்ணணுக்கு வேலை போயிடுச்சி. அக்கா மட்டும்தான் போறாங்க. முன்னாடி மட்டனா போட்டு பழக்கிட்டாங்க.. இப்ப சாதா சோறு சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்குதாம்.. திமிறுகார நாயி’

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவனுக்கு வேலை போனால், நாயுமா பாதிக்கப்படும்..? பொருளாதார மேதை மன்மோகனுக்கு இந்த விவரம் தெரியுமா என்று தெரியவில்லை.

டைகர் என் அருகே வந்து நின்றான். மூச்சு வாங்கியது என்ற தெரிந்தது. முடி கொட்ட ஆரம்பித்திருந்தது. சீக்கிரம் செத்துப்போகும் என்று தோன்றியது. வயதான காலத்தில் சோறு கிடைக்காவிட்டால் மரணம் அருகில் வந்துவிடும்.

அன்று இரவு வரும்போது 5ரூபாய் கொடுத்து பன் வாங்கிவந்தேன். வாசலை நெருங்கியவுடன் டைகர் வந்து வாலாட்டினான். பன்னிருந்த சவ்வுத்தாளைக் கிழத்து பன்னை எடுத்து கையில் பிடித்தேன். நிமிர்ந்து முகர்ந்து பார்த்தான். முகத்தைத் திருப்பிக்கொண்டான். லேசான ஓர் முனகல். ’என்ன தலைவிதிடா இது’ என்பது போன்ற முனகல்.

அப்புறம் யோசித்தவனாக என்னைப் பார்த்தான். பசியா அல்லது என் மீதான பரிதாபமா என்று தெரியவில்லை. பன்னை வாங்கிக்கொண்டு நகர்ந்து அதனைத் தரையில் வைத்தவன், வெறிகொண்டவன் போல அதனைக் கடித்து விழுங்கினான்.

விருப்பமும் தேவையும் மோதிக்கொண்டால் தேவையே வெற்றி பெறும் என்று நான் மனதுக்குள் தத்துவம் சொல்லிக்கொண்டேன்.

ஆனால், டைகர் விரும்பும் கறி சோற்றை என்னால் கொடுக்க முடியாது. பல நாட்கள் பிரட்டில் ஓட்டுபவன் நான். என்னால் பிரட்டைத்தான் பகிர்ந்துகொள்ள முடியும். பன் சாப்பிடாத டைகர் பிரட் சாப்பிடுமா?

ஒரு நாள் சோதனை செய்து பார்த்தேன். ரொட்டியில் முதல் மற்றும் கடைசித் துண்டுகள் எனக்குப் பிடிக்காது. அதில் ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். டைகர் விருப்பத்துடன் தின்றது. ஓஹோ.. பன்னைவிட பிரட் உயர்வானது என்ற இரகசியம் என்னைப் போல டைகருக்கும் தெரிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

இப்படி சில நாட்கள் செல்ல பக்கத்து வீட்டு தங்கச்சி லேசான குரலில் என்னிடம் சொன்னாள், ‘அண்ணே நாய்க்கு பிரட் போடாதீங்க. வீட்டுக்காரம்மா திட்டுறாங்க’.

எனக்கு நிறைய விஷயங்கள் புரியாது. அவற்றில் இதுவும் ஒன்று போல. ‘ஏன்’ என்று கேட்டேன்.

‘நீங்க பிரட் போடுறதால டைகர் அவங்க போடுற வெறுஞ்சோத்தை திங்க மாட்டேங்குதாம்.. திமிறு பிடிச்ச நாயின்னு திட்றாங்க’. அந்தப் பெண் என்னிடம் மிகப் பாசமானவள். ஞாயிறு அன்று அவர்கள் வீட்டில் சமைக்கப்படும் அசைவத்தில் எனக்கும் பங்கு தருபவள். வீட்டுக்கார அம்மாவின் திட்டு டைகருக்கு மட்டுமல்ல என்று அவள் சொல்கிறாள் என்று எனக்குத் தெரிந்தது.

அதற்கப்புறம் டைகருக்கு நான் பிரட் கொடுப்பதில்லை. சில நாட்களில் எனக்கே மனம் பொறுக்காமல், நள்ளிரவில் நான் தூங்கப்போகும்போது இரகசியமாக ‘டைகர்’ என்று கூப்பிட்டு பிரட் கொடுப்பேன்.

சில நாட்களில் எனக்கும் பிரச்சனை வந்தது. காசில்லை… சாப்பாட்டுக்கும். கணக்குப் போட்டுப் பார்த்தேன். நான் வாங்குவது ஹில்டாப் பிரட். அது கொடைக்கானலில் தயார் ஆவது. வெள்ளைக்காரன் குடியிருந்த நகரம் என்பதால் பிரட் தொழிலில் முன்னேறிய ஊர். நான் குடியிருக்கும் ஊரில் கிடைக்கும் கம்பெனி பிரட்டை விட நன்றாக இருக்கும். கொடைரோடு போய் ஹில்டாப் பிரட் வாங்கிவருவேன்.

டைகருக்கு ஒரு நாளைக்கு ஆறு ஸ்லைஸ் என்றால் என்ன கணக்காகிறது என்று கணக்குப் போட்டுப் பார்த்தேன். அந்த வார என் பொருளாதார நிலையில் கட்டுப்படியாகாது என்று தோன்றியது. நாய்க்கு ஒரு நாளைக்கு 12 ரூபாய் செலவு செய்ய முடியாது என்று தெரிந்தது. ஆனால், டைகர் பட்டினியாகக் கிடக்குமே.
ஒரு நாள் காலை டைகர் வாசலில் மறித்துக்கொண்டான். பசிக்கிறது என்று தெரிந்தது. ஆனால், என்னிடம் பிரட் இல்லை. வேறு வழியில்லாமல் நானே சமைத்து தயிர் போட்டு சாப்பிட்ட சாப்பாட்டில் மீதமிருந்ததைக் கொண்டுவந்து போட்டேன். முகர்ந்து பார்த்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையில் நீயெல்லாம் மனுஷனா என்ற கேள்வியிருந்ததாகப் பட்டது. சற்று தூரம் விலகிச் சென்று திரும்பிப் பார்த்து சாரி பாஸ் என்பதுபோல ஓர் குரல் கொடுத்தான்.

நான் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தேன். அப்புறம்தான் ஓர் இரகசியம் கண்டுபிடித்தேன். டைகருக்கு டைகர் பிஸ்கட் பிடிக்கும். பெயர் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. தற்செயலாக நான் வாங்கிவந்த (அன்றைக்கு அதுதான் எனக்குச் சாப்பாடு) டைகர் பிஸ்கட்டில் ஒன்று கொடுக்க அப்படி சாப்பிட்டான். முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அப்பாடி என்றிருந்தது எனக்கு.. டைகருக்கு டைகர் பிஸ்கட் வாங்கினால் ஒரு நாளைக்கு மூன்று ரூபாய்தான் செலவு… அய்யோ!

இதற்கிடையில் டைகரின் உண்மையான உரிமையாளருக்கு மீண்டும் வேலை கிடைத்துவிட்டது. அதன்பின் டைகரின் விலா எலும்புகள் தெரிவது குறைந்தது. மறுபடியும் பக்கத்து வீட்டு தங்கையிடம் கேட்டேன்.

‘இப்பல்லாம் வாரம் ஒரு நாள் அதுக்குன்னே எலும்பு கறி வாங்கிட்டு வந்து போடுறாங்கன்னே’ என்றாள் அந்தப் பெண்.

இதற்கிடையில் என்னுடைய பொருளாதாரத்திலும் சற்று முன்னேற்றம். ஒருவருக்காக டாக்டர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையைத் தயார் செய்து தர ஒப்புக்கொண்டிருந்தேன். அவர் ஓர் அரசு அதிகாரி. பல மனிதர்கள் போலவே அவருக்கும் அறிவு கொஞ்சம் குறைவு. ஆனாலும் அதிகாரியாக இருந்தார். டாக்டர் பட்டம் தேவையாக இருந்தது. ஒரு மாதிரி பேரம் பேசி தொகையை முடிவு செய்து அட்வான்ஸ் வாங்கிவிட்டேன்.

அன்று ஃபுல் பிரியாணி வாங்கிக்கொண்டு வந்து டைகர் முன் வைத்தேன். என்ன ஆச்சரியம்… அது வெறியுடன் பாய்ந்து பிடுங்கித் தின்னும் என்று எதிர்பார்த்தேன். மாறாக, முகர்ந்து பார்த்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்து வாலாட்டியது.. அப்புறம் என் மேல் வந்து உராய்ந்தது.

என்ன இவன்? பிரியாணி என்றால் பாய்ந்துபோய் சாப்பிடுவான் என்றல்லவா எதிர்பார்த்தேன்? தேவையை நிறைவேற்றிக்கொள்வதை விட தேவையை நிறைவேற்றியவனைப் பாராட்டும் டைகர் என்று யோசித்தேன். ஒருவேளை நான் யோசிப்பது மடத்தனமோ? அவனுக்குப் பசியில்லையோ?

பிரியாணியிடம் சென்று படுத்துக்கொண்டு முகர்ந்து பார்த்தது. அப்புறம் பசிவெறியால் விரட்டப்பட்டவன் போல கவ்வி கவ்வி சாப்பிட்டது. என்னைக் கண்டுகொள்ளவேயில்லை.

நான் படியிலேயே அமர்ந்துவிட்டேன். தேவை நிறைவேறும்போது உயிர்கள் எப்படி மகிழ்கின்றன. அதனைக் காண்பதைக் காட்டிலும் வேறு என்ன மகிழ்ச்சி மனிதனுக்கு வாய்க்கும்?

பௌர்ணமி நிலாவும் பேரூராட்சியின் எரியும் தெருவிளக்கும் எங்களுக்குத் துணையாக இருந்தன. தெருவே தூங்கிக்கொண்டிருந்தது.

நான் படியிலேயே அமர்ந்துவிட்டேன். ‘ஏன் லேட்?’ என்று பூட்டிய வீட்டிலிருந்து யார் கேட்பார்கள்? நான் சுதந்திரமான மனிதன்.

டைகர் ரொம்ப கவனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எலும்பை உடைக்க தலையைச் சற்று சாய்த்து கடிக்கும்போது என் மீது பார்வை பட்டு விலகியது. சற்றே வாலட்டிக்கொண்டு சாப்பாட்டில் கவனமாகினான்.

சரி என்று பூட்டைத் திறந்து உள்ளே சென்று லுங்கி அணிந்துகொண்டு வந்து மறுபடியும் படியில் அமர்ந்தேன். டைகரின் சாப்பாட்டுப் படலம் இன்னும் ஓயவில்லை.

டைகரும் பக்கத்து வீட்டு தங்கையின் மகனும்தான் என் விளையாட்டுத் தோழர்கள். நான் கல்லை எடுத்து பேரூராட்சி சிமெண்ட் தெருவில் உருட்டிவிடுவேன். பையனை முந்திக்கொண்டு டைகர் போய் கல்லைப் பிடிக்கப் பார்க்கும். கல்லை தடுத்து நிறுத்தி தன் முன்னங்கால்களின் இடையே நிறுத்திக்கொள்ளும். நான் போய் எடுக்கும் வரையிலும் யாரையும் கிட்டே விடாது. பையன் கிட்டே போனால், கல்லை கீழ் தாடையால் அமுக்கியபடியே உர்ர்ர் என்று எச்சரிக்கும்.

நாயோடு நான் விளையாடுவதை தெருவே வேடிக்கைப் பார்க்கும். கிண்டல் செய்வார்கள் என்று எனக்குப் பட்டது. நல்லதுதானே.. அவர்களும் மகிழ்ந்திருக்கட்டும் என்று நான் அதனைப் பற்றி கவலைபடுவதில்லை.

சாப்பிட்டுவிட்டு டைகர் நிமிர்ந்தான். வெளிச்சத்தில் இலையில் மீதமிருந்த கொழுப்பு தெரிந்தது. மீண்டும் இலையை முழுவதுமாக நக்கி முடித்தபின்பு டைகர் என்னை நோக்கித் திரும்பினான். உடலை நீட்டி நிமிர்த்தினான், அடுத்தது தூக்கம் என்பது போல இருந்தது அவன் உடல் மொழி.

அந்த மார்கழி தினம் மிகவும் குளிராக இருந்தது. இருந்தாலும் என்ன செய்ய? டைகரின் மகிழ்ச்சியை முழுவதும் காணாமல் விலக முடியுமா?

என்னை நெருங்கி என் இரண்டு முட்டிகளிடையே டைகர் அவன் தலையைக் கொடுத்தான். நான் சற்று யோசித்து தொடைகளைப் பிரித்தேன். அவன் தலை என் தொடைகளின் மத்தியில் இருந்தது. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பான் என்பார்களே அது எப்படி என்று எனக்கு அன்றுதான் புரிந்தது. மொத்த உடலையும் குறுக்கிக்கொண்டு நுழைந்து, விரிந்த என் தொடைகளுக்கு மத்தியில் உடலை வளைத்துப் படுத்துவிட்டான்.

என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு வாலை ஆட்டிக்கொண்டு முனகினான். என் இடது தொடையில் அவன் தலையிருந்தது. அப்படியோ ஆடாமல் அசையாமல் படுத்திருந்தான். எனக்கு அவனை விரட்ட மனமில்லை.

குளிருக்கு வெப்பம் தேவைப்பட்டதோ?

நானும் கதவில் தலையை சாய்த்துக்கொண்டேன். அன்று சற்று நேரம் டைகரும் நானுமாகத் தூங்கினோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *