செய்தி வேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 2,348 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காக்காய் பிடிப்பது ஒரு கலையென்றால், கயிறு திரிப் பதும் ஒரு கலைதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்தான் நமது நித்தியலிங்கம் அவர்கள். கயிறு திரிப்பது என்பது அவருக்கு வாலாயமாக அமைந்துவிட்ட கலை மட்டுமல்ல, தொழிலும்கூட.

நித்தியலிங்கம் ஒரு நிருபர். தினசரிப் பத்திரிகை யொன்றில் விசேஷச் செய்தி நிருபர். பங்குனி மாதத்துத் தாரை நீராக்கும் மதிய வெயிலில் பட்டணத்துத் தெருக்களில் இரண்டே இரண்டு ஜீவன்களைத் தான் பார்த்திருக்கிறேன். ஒன்று தெருசுற்றிப் பொறுக்கும் சொறி நாய்: மற்றது, அதையும் வேகத்தில் தோற்கடிக்கும் சாட்சாத் நித்தியலிங்கம்.

பங்குனி மாதத்துக் கொடுவெயிலாக இருந்தாலென்ன, கார்த்திகை மாதத்துக் கொட்டும் மழையாக இருந்தாலென்ன, வீட்டில் அடைப்பட்டுக் கிடக்காது, தெருக்களையே தனது திருவிடமாக்கிய மகாபிரபு அவர். நூற்கட்டையைத் தையல் இயந்திரத்தில் போட்டுத் தைக்கத் தொடங்கினால் அது எவ்வளவு வேகமாகச் சுழலத் தொடங்குமோ, அவ்வளவு சுறுசுறுப்புடன் பட்டணத்தைச் சுற்றிச் சுற்றி வலம் வருவார், நிருபர் நித்தியலிங்கம். அவரைப் போலத் தம் தொழிலிலே கண்ணும் கருத்துமாக இருப்பவரைக் காண்பது வெகு துர்லபம். செய்தி தம்மைத் தேடி வரட்ட டுமே என்ற மண்டைக் கனம் பிடித்த மனோபாவம் அவ ருக்குக் கிடையாது. தனது தொழிலை அங்குலம், காலம் கணக்கிலும், ரூபா சதத்திலும் கணக்கிடுபவரல்ல.. சில அபூர்வச் செய்திகளைச் சேகரிக்கும் பொழுது முதற் பிரச வத்தில் வெற்றியீட்டிய இளந்தாயின் பெருமிதம் அவரு டைய முகத்தில் பொங்கும். கிட்டாத இன்பமே தனது ஊற்றுப் பேனாவுக்குள் புகுந்துவிட்டதாக இன்புறுவார். சில ரகமான செய்திகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. அம்மாதிரிச் செய்திகளைச் சேகரிப்பதில் அவர் தன்னையே மறந்து விடுவார். சில செய்திகளைச் சேகரிப்பதற்கு அயராது சலியாது உழைப்பவர்.

பார்த்தனுக் கென்றே படைக்கப்பட்ட காண்டீபத்தைப் போல, அவருக்கென்றே படைக்கப்பட்டதாகத் தோன்றும் அவருடைய பிரசித்தி பெற்ற ‘உலக்கை சேப்’ ஊற்றுப் பேனாவாற் சுடச்சுடச் செய்திகளை விறுவிறு என்று எழுதும்பொழுது, அவருடைய முகத்தின் பாவங்களையும், கோணங்களையும், அசைவுகளையும் வைத்தே அந்தச் செய்தியினை ஒருவாறு நாம் வாசித்து விடலாம்.

நித்தியலிங்கத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவர் தான் நிருபர் நித்தியலிங்கம் என்பதை நீங்கள் அறியத் தவறியிருக்கலாம். அவரை இன்னும் அடையாளம் கண்டு பிடிக்காதவர்கள், பட்டணத்து வீதியை ஒரு தடவை வலம் வந்து விடுவீர்களேயானால், இவர்தான் நித்தியலிங்கம் என்பதைக் கண்டுவிடுவீர்கள்.

கையில் தொங்கிக் கொண்டிருக்கும் மான்மார்க் குடை; இடது தோளில் ஏகாவடம் விட்டிருக்கும் பரமாஸ். சால்வை; அதே பக்கத்துக் கமக்கட்டில் குந்தியிருக்கும் ஒரு பைல்; அதை நிறைமாதப் பிள்ளைத்தரச்சியாக்கும் காகிதக் கட்டுகள்; நெஞ்சப் பையில் கொலுவீற்றிருக்கும் உலக்கை மாடல் பாக்கர் பேனா; கால்களில் ‘கிறீச் கிறீச்’ சென்று ஓசையிடும் செருப்புகள்; இப்படியான அலங்காரங்களுடன் ஒருவரை நீங்கள் வீதியில் பார்த்து விடுவீர்களேயானால், அவர்தான் நித்தியலிங்கம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஊகம் நூற்றுக்கு நூறு சரியாகத்தானிருக்கும்.

அன்று அவருடைய உற்சாகம் குன்றியது. சாதாரண – மாக அவர் பொறுமையில் சகாராப் பாலைவனத்தில் பிரயாணம் செய்யும் ஒட்டகத்தைப் போன்றவர். எத்தனை நாட்களென்றாலும் உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்து, விடக் கூடியவர். அத்தகைய பொறுமைசாலி. ஆனால் இன்று?

கிடைக்காமலிருப்பது உணவும் தண்ணீருமல்ல; செய்தி!

பல நாட்களாகக் காய்ச்சலில் அடிபட்டவன் ஒரு கவளம் சோற்றை எண்ணி யெண்ணி எவ்வளவு ஆவல் படுவானோ, அவ்வளவு ஆவல் நிறைந்த வேகத்துடன் ஒரு செய்திக்காக, ஒரேயொரு செய்திக்காக- நிருபர் நித்தியலிங்கம் ஆலாய்ப் பறந்தார்; ஆவலாய்த் துடிதுடித்தார். அவரது காதுகள் ஒரேயொரு செய்தியைக் காதாரக் கேட்டுவிடக் குறுகுறுத்தன; அவரது வலது கைவிரல்களோ அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் உடனே எழுதிவிட வேண்டுமென்று துடிதுடித்தன.

ஆனால், அந்தப் பாழாய்ப் போன செய்தி மட்டும் அவர் முன்னால் தலைகாட்டவே பயப்பட்டது; எங்கோ ஒரு மூலை யிற்போய்ப் பதுங்கிக் கொண்டு கண்ணாமூஞ்சி காட்டியது!

விடாக்கண்டர் பரம்பரையைச் சேர்ந்த நமது நிருபர் நித்தியலிங்கம் அவர்கள் அந்தச் செய்தியை எப்படியாவது – சுருட்டியே தீரவேண்டுமென்ற வைராக்கியத்துடன் அவசர அவசரமாக ஒரு வீதியில் நடந்து கொண்டிருந்தார். எங்கேயோ சிக்கித் தவித்துக் கொண்டிருந்த செய்தியின்மீது மனம் புதைந்தது. உலகை மறந்தார். பின்னால் ‘ஹார்ன்’ சப்தம்தான் அவரை நிதர்சன உலகிற்குக் கொண்டு வந்தது. திரும்பிப் பார்த்தார்; கானுக்குள் பாய்ந்து விலகினார். மயிரிழையில் அவருக்கு நீண்ட ஆயுளைக் ‘காரண்டி’ பண்ணும் ஜாதகத்தின் உண்மை நிலைத்தது! பஸ் டிரைவர் நிருபரை ஒரு தடவை முறைத்துப் பார்த்துவிட்டு, பஸ்ஸைச் செலுத்தினான்.

அவனுடைய முறைப்பு நிருபரை ஒன்றும் செய்துவிடவில்லை. இந்த முறைப்புகளெல்லாம் அவருடைய தொழிற் துறையில் சகஜம்.

பஸ்ஸைப் பார்த்தது, தான் அதில் பட்டணத்திற்கு வந்தபொழுது நடந்த சம்பவமொன்று மனதில் நிழலாட்டமிட்டது.

பஸ்ஸில் இரு கிழவர்கள் சுவாரஸ்யமான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

“என்ன காணும்? உமக்கொரு சங்கதி தெரியுமா? அந்த முத்துத் தம்பீண்டை மகள்-அவள் தான் சீனியர் சூனியர் பாஸ் பண்ணி வீட்டோடு இருந்த இரண்டாம் பொடிச்சி, ஒண்டும் படிக்காத ஒரு காவாலிப் பொடியனோடை முந்தநாள் ஓடீட்டாளாம். போலிஸார் தேடுகினம்.”

நிருபர் காதைத் தீட்டிக் கொண்டார். கடலின் மேற்பரப்பைக் கொண்டு, அனுபவம் மிக்க மாலுமி அதன் ஆழத்தை அறிந்து கொள்வது போல, இந்தச் சிறு செய்தியைக் கேட்டதும், நிருபரின் கவனம் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள்பால் திரும்பியது. கட்செவி அவருக்கு!

“இதென்ன காணும் புதினம்? போன கிழமை ஒரு பதின்மூன்று வயதுப் பொட்டை முளைக்கைக்கு முன்னம்…” மற்றவர் கதையை முடிப்பதற்கிடையில், “காசை எடுங் கோ…” என்ற பஸ் கண்டக்டரின் குரல் கர்ண கடூரமாக ஒலித்தது.

அவர்களுடைய உரையாடல் அத்துடன் தடைப்பட்டது.

நிருபரைப் பொறுத்தவரை, ‘பெட்டிகட்டி’ப் போடக் கூடிய ஒரு முக்கிய செய்தி மண்ணாய்ப் போய்விட்டது.

சே!

நிருபருக்குக் கோபம் கோபமாக வந்தது. அந்தக் கண்டக்டர் மாத்திரம் ஒரு மேடைப் பேச்சாளராக இருந்தால் ? பேசாத பேச்செல்லாம் பேசினதாகப் போட்டு அவனுடைய மானத்தை வெளு வெளு என்று வெளுத்துக் கட்டியிருக்க மாட்டாரா என்ன? கூட்டத்தைச் சுண்டைக்காயாக்கி… ஒரு தடவை ஒரு பிரபலஸ்தருடைய கூட்டத்தை-பத்தாயிரம் பேர் கொண்ட கூட்டத்தை-பத்துப் பேர்கூடிய கூட்டமாகச் செய்தி பிரசுரித்து அவமானப் படுத்தியதையும், பின்னர் அவருடைய கோபக் கொதிப்பை மூன்று பூஜ்யங்களை அச்சரக்கன் விழுங்கியதென்று சாதித்துச் சமாதானப் படுத்தியதையும் நினைத்துப் பார்த்தார்.

அவனுடைய தலை தப்பியது! அவன் பேச்சாளனல்ல, வெறும் கண்டக்டர்.

அவர் நடந்த கொண்டே இருந்தார்.

***

அவருடைய மூளை மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. கிழங்கள் பேசிக் கொண்ட செய்திக்குச் சிறிது தலையும் வாலும் ஒட்டிக் கயிறு திரித்துவிட்டால் என்ன என்று யோசித்தார். அந்த யோசனையை மறுகணமே உதறித் தள்ளினார். ஏனெனில், இப்படிக் கயிறு திரிப்பதில் பல வகையான சங்கடங்களிருப்பதை அவர் உணருவார். அனு பவரீதியாகவே அந்தச் சங்கடத்தினால், வேலை மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, முதுகிற்கு ஈரச் சாக்குக் கட்டிக் கொண்டு திரியவேண்டியிருந்தது.

இப்படிப் பல நினைவுகளில் மிதந்து நடந்துகொண் டிருந்த நித்தியலிங்கம் ஒரு நாற் சந்திக்கு வந்துவிட்டார். அதன் பக்கத்தில் நின்ற அரசமரத்தைச் சுற்றிலும் ஜனக் கும்பல்; சிறிது ஆரவாரம். அவருடைய மனதில் மகிழ்ச்சி மின்னல் கீற்றென்னப் பளீச்சிட்டது. நம்பிக்கையுடன் கூட்டத்தை நெருங்கினார். எட்டிப் பார்த்தார். குரலொன்று கணீரென்று ஒலித்தது.

“ஐயா, தருமவான்களே! மந்திரமில்லை; தந்திரமில்லை; மாயமில்லை! ஜாலமில்லை; எல்லாம் வவுத்துக்காகத்தான் ஐயா செய்யிறது, எல்லாம் வவுத்துக்காகத்தான்…!”

செப்படி வித்தைக்காரன் வயிற்றைக் காட்டி, வாயைப் பிளந்து, வார்த்தை ஜாலம் செய்து கொண்டு நின்றான். அடுத்த நிமிஷம் நிருபர், நித்தியலிங்கத்தை அங்கு காணவில்லை! செய்தி சேகரம் செய்ய வந்த அவர், இதைக் கேட்டுக் கொண்டு நிற்பதற்கு, அவருக்குப் பைத்தியமொன்றும் பிடித்துவிடவில்லை.

மீண்டும் நடந்து கொண்டே இருந்தார்.

சென்ற வாரம் நடைபெற்ற ஒருசம்பவம், அவருடைய மனதில் குமிழ்விட்டது.

இவருக்கு வேண்டியவர்களான இரு பகுதியினர் தங்கள் தங்கள் பகுதியில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், கூட்டம் கூடி நிருபருக்கு ‘அவசியம் வரவேண்டும்’ என்ற குறிப்புடன் அழைப்பும் அனுப்பிவிட்டனர்.

அவர்களுடைய கூட்டத்திற்குப் போனால், இவர்களுக்குக் கோபம்; இவர்களுடைய கூட்டத்திற்குப் போனால் அவர்களுக்குக் கோபம். எந்தக் கோபத்தையும் சம்பாதிக்க விரும்பாமல், இரு கூட்டத்திற்குமே போக வில்லை. பலன்?

இரு பகுதியினரின் கோபத்தையும் சம்பாதித்து விட்டார்! பாருங்கள் அவருடைய கஷ்டங்களை. செய்திக்குச் செய்தி நட்டம்; நட்பிற்கு நட்பு நட்டம்; காசுக்கு காசு……..

எதிரே வந்த ஒரு ஹோட்டலின் முகப்பாக வீற்றிருந்த பெரிய கடிகாரமொன்று நான்கு அடித்து ஓய்ந்தது. அதன் ஓசையைக் கேட்ட நிருபரின் நெஞ்சம் துணுக்குற்றது. தபால் கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற நினைவு நெஞ்சை உறுத்தியது. இருப்பினும், ரெயில்வே தபாலில் அனுப்பி விடலாம் என்ற நினைவு மனதைச் சிறிது சமாதானப் படுத்தியது.

நித்தியலிங்கம் பரபரப்புடன் நடந்தார்; தீவிரமான வேகம். பீஜப்பூர் வட்டக் கோபுரத்தில் சிக்கிக்கொண்ட ஒலியைப் போன்று, ‘ஒரேயொரு செய்தி’ என்பது. எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஆங்கில நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் சிருஷ்டித்த நாடக பாத்திரமொன்று ‘ஒரு குதிரை; ஒரேயொரு குதிரை, ஒரு சாம்ராஜ்யத்திற்காக ஒரேயொரு குதிரை!’ என்று கதறியதாமே, அதேபோல – நித்தியலிங்கம் நடுத்தெருவில் நடந்தபடி மனக்குரலில் முணு முணுத்தார்……’ஒரு செய்தி…….. ஒரு செய்தி…… ஒரேயொரு செய்தி !’…

நம்பிக்கையும் அவநம்பிக்கையும் முட்டி மோதும் எல்லைக் கோட்டின் எல்லையிலே இன்று அவருடைய மனம் சஞ்சலப்பட்டது. இருப்பினும் நிருபருக்குரிய ‘அந்தத் தனிப்பெரும் பண்பாடு’ அவரை முற்றாகக் கைக்கழுவி விடவில்லை; பொறுமையை அவர் கைகழுவி விடவில்லை. பாலைவனத்து ஒட்டகத்தைப்போல, அல்லது குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட குணவதியான மனைவி தன் மன உணர்ச்சிகளை மனதிற்குள்ளேயே புதைத்துப் பொறுமை காட்டுவதுபோல, நிருபரான நமது நித்தியலிங்கமும்

“கணேஷ்! சங்கதி தெரியுமா?”

“……”

“என்ன மலைக்கிறாய்? விஷயம் தெரியாதா?”

இரு கல்லூரி மாணவர்கள், நிருபருக்குச் சற்று முன்பாகப் பேசிக்கொண்டே நடந்தார்கள். அவர் தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். வேகமாக நடந்து, பின்னர், வேகத்தைத் தளரவிட்டு, அவர்களுக்குப் பின்னால் அசை நடை போட்டார்.

“விஷயத்தைச் சொல்லாமல் என்ன அளக்கிறாய்?”

“யாரோ ஒரு சாமியாராம். கடற்கரைப் பக்கம் உண்ணாவிரதம் இருக்கிறாராம். போய்ப் பார்ப்பமா?”

“உண்ணாவிரதக்காரனைப் பார்ப்பதற்கு, நாம் முதலில் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.”

இருவரும் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தனர்.

நித்தியலிங்கம் துள்ளிக் குதித்தார். பாதையில் கிடந்த கல்லொன்று அவருடைய பெருவிரலைப்பதம்பார்த்துவிட்டது. அதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. மனதிற்குள் ‘சபாஷ்’ போட்டார். ஜய ஸ்தம்பம் ஒரு முழ தூரத்தில் இருப்பதாகப் படுகிறது. பெருமூச்சொன்று அவரிடமிருந்து விடை பெறுகிறது. அப்பாடா, மனப்பாரம் குறைகிறது… கடற்கரையை நோக்கி மிக விரைவாக நடையைக் கட்டினார்.

***

கடற்கரையில், பயபக்தியுடன் அந்தத் தாடி வளர்த்த சாமியாருக்கு முன்னிலையில் நின்றுகொண்டிருந்த நிருபர் நித்தியலிங்கம் அவர்களுக்குத் தேகமெல்லாம் புல்லரிப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மகிழ்ச்சி கரை புரண்டோடியது. அவர், ஆஸ்தீகப் பரம்பரையில் வந்த பக்திமான். ஆயினும், அந்நேரம் பக்தி உணர்ச்சியைக் கடமை உணர்ச்சி விழுங்கி நின்றது. ‘எவ்வளவு பெரிய செய்தி! நாளைக்கு மறுதினம் நாலு காலம் தலைப்பில் முன்பக்கத்தில் வெளி வரவேண்டிய பிரமாதமான செய்தியல்லவா. இது?’இந்த எண்ணம் மனமெனும் புழுதியில் வேரூன்றித் தளைக்க, ஒரு செய்திக்காக அன்றெல்லாம் அவர் பட்டபாடு களெல்லாம் வெறும் துச்சமாகத் தோன்றியது.

சுற்றுமுற்றும் பார்த்தார். காகக் கூட்டத்தைப் போன்று குழுமியிருக்கக்கூடிய சக பத்திரிகை நிருபர் யாரை யுமே காணவில்லை. ‘மற்றவர்களுக்கு நான் முந்திவிட்டேன்’ என்ற பூரிப்பு மனதில் நிறைந்தது.

பவ்வியத்துடன் பேட்டியை ஆரம்பித்தார், நிருபர்.

“சாமியார்! தாங்கள் எந்தத் தேசீயச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உண்ணா நோன்பு இருக்கின்றீர்கள்? அதைத் தயவு செய்து தெரிவிக்க முடியுமா?” என்ற வினாயகர் சுழியுடன் பேட்டியை ஆரம்பித்தார்.

பதிலில்லை. திரும்பவும், அதே கேள்வியைத் தொடுத்தார். மௌனம்.

‘ஓகோ! ஒருவேளை உண்ணாவிரதத்துடன், மௌன விரதமும் அனுஷ்டிக்கின்றாரோ?’ என்ற நினைவு தலைகாட்டியது.

‘பை’லிலுள்ள கடுதாசியொன்றினை உருவி எடுத்து, தன் னுடைய பிரசித்தி பெற்ற பேனாவால் ஏதோ கிறுக்கினார். தான் எழுதியதை வாசித்துப் பார்த்தார். ‘நானொரு பத்திரிகை நிருபர். தங்களைப் பேட்டிகாண வந்திருக்கிறேன். தாங்கள் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்? எந்தத் தேசீய மொழியை இருபத்திநான்கு மணிநேரத்தில் அரசாங்க மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்பதற்காக உண்ணாவிரத மிருக்கின்றீர்கள்? தமிழா? சிங்களமா? அல்லது எந்த இனத்தின் உரிமையைக் காப்பாற்ற உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்? சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது தான் தங்கள் இலட்சியமா? அல்லது… தயவு செய்து இதற்குப் பதில் எழுதித் தாருங்கள்…”

அதைச் சாமியாரிடம் மிகவும் விநயமாகச் சேர்த்தார்.

சாமியார் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அலட்சிய மாக மறுபக்கம் திரும்பிக்கொண்டார்.

நிருபருக்கு அவமானமாக இருந்தது. அவரை அப்படி அலட்சியப்படுத்திய முதல் மனிதர் அந்தச் சாமியார் தான்!

நிருபர் போர்த் தந்திரத்தை மாற்றினார். உரத்த குரலில் “சாமியாரே! நீங்கள் எதற்காக, எந்த நோக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள் ? தயவு செய்து பெரிய மனதுடன் அதை எழுதித் தாருங்கள்!”

“அட சரிதான், சும்மா தொந்தரவு செய்யாமல் போங் காணும். இரண்டு நாளாச் சாப்பாடு கிடைக்கவில்லை. பசி காதை அடைக்கிறது. சாப்பாடு, கிடைக்கிற வழியையும் காணோம். சும்மா காலாற இங்கே வந்து உட்காந்தால், யாரோ புரளி விடுறான். உண்ணாவிரதமாம் – உண்ணா விரதம்?” என்று சீறினார், சாமியார்.

நிருபரின் முகத்தில் அசடு வழிந்தது.

இருப்பினும் சிந்தனை சுறுசுறுப்பாக வேலை செய்தது.

“பசியைப் போக்க உண்ணாவிரதமிருக்கும் விந்தைச் சாமியார்” – தலைப்பு வந்து விட்டது. தலையும் காலும் முளைத்து ஒரு செய்தி அவருடைய மனதிலே கயிறு திரிக்கப்படுகின்றது….

– 18-9-1955 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *