சூழல், சூழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 3,938 
 
 

இரவு பனிரெண்டுக்கு மேல் இருக்கலாம், அநேகமாக அந்த நகரம் உறக்கத்திற்கு போயிருந்தது.

பாதையோரம், அல்லது உள்புறத்தில் இருக்கும் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருட்டுக்குள் போயிருந்தன.

அந்த நகரங்களுக்குள் நடுவில் சென்று கொண்டிருந்த பிரதான சாலைகளில் மட்டும் விளக்கு வெளிச்சங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன.

சர்..சர்..ரென கார்கள் அந்த சாலையில் வேகமாக சென்றும் கொண்டிருந்தன. மற்றபடி சரக்கு வாகனங்களோ, இரு சக்கர வாகனங்களின் வரத்துக்களோ, அந்த சாலையில் சத்தம் காட்டாமல் இருந்தன.

நகரத்தை விட்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் அங்கங்கு நிதானித்து நிதானித்து வந்து கொண்டிருந்த, கார் ஒன்று சற்று தொலைவில் ஹோட்டல் ஒன்று அடைபட போகும் அவசரத்துடன் பாதி “ஷட்டர்கள்” இறக்கி விடப்பட்டு உள்புறம் கழுவிக் கொண்டிருக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதையும் கண்ட அந்த கார் தயங்கி தயங்கி அந்த கடையோரம் ஒதுங்கி நின்றது.

காரில் பின் புற கதவை விட்டு இறங்கிய இருவர் தயங்கி தயங்கி பாதி மூடியிருந்த “ஷட்டரை” தட்டி நின்றனர்.

ஐந்து நிமிடங்கள் அமைதி. யாரது? கேள்வி உள்ளிருந்து வர, பாதி மூடியிருந்த ஷட்டர் சற்று மேலேறி ஒரு நடுத்தர ஆள் எட்டி பார்த்தபடியே தலையை காட்டினான்.

சாப்பிடறதுக்கு ஏதாவது? காத்திருந்த ஒருவனிடமிருந்து கேள்வி வரவும் உள்ளே இருந்த ஆள் இப்ப ஒண்ணும், இல்லை, இதோ கடை அடைக்கப்போறேன். ஷட்டரை உள் புறமாக இழுக்க முயற்சித்தான்..

அவன். இப்படி செய்வான். என்று எதிர்பார்த்திருப்பார்களோ என்னவோ, ஒருவன் சட்டென ஷட்டரை இறக்க முடியாமல் தாங்கி பிடித்தபடி நிற்க..

இங்க பாருங்க, ரொம்ப பசிக்குது, வழியில எல்லா கடையும் அடைச்சிருக்கு நாங்க நாலு பேரு வந்திருக்கோம், ஏதாவது ஒண்ணூ, எதுவா இருந்தாலும் பரவாயில்லை செஞ்சு கொண்டு வாங்க.

கடை உள்புறமிருந்த ஆளின் மனதுக்குள் திகில் வந்திருந்தது அவன் முகத்தில் தெரிந்தது.

இப்ப ஒண்ணும் இல்லை, சொன்னா கேளுங்க. இங்க பேக்கரி அயிட்டம் கூட வச்சிக்கறதில்லை. சின்ன கடை இது. புரிஞ்சுக்குங்க, அதுவுமில்லாமல் டிபன் எல்லாம் நாங்க வீட்டில இருந்து கொண்டு வந்து சப்ளை பண்ணறவங்க.

பரவாயில்லை, வீடு எங்கே இருக்கு? வந்தவர்களில் ஒருவனின் கேள்விக்கு இவர் சற்று திணறி அது வந்து..ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கு, சொல்வது பொய் என்பது அவன் முகத்தில் நன்கு தெரிந்தது.

என்னாச்சு? யார் கூட பேசிக்கிட்டிருக்கீங்க? கால நேரம் தெரியாமல் உள்ளிருந்து வெளியே வந்து அவனருகில் நின்று கேட்டாள் அவன் மனைவி.

நீ உள்ளே போ, இப்படி சொல்ல நினைத்தாலும் அவனால் சொல்ல முடியவில்லை, காரணம் அந்த இருவரும் சாவகாசமாய் ஷட்டரை மேலே தூக்கிவிட்டு உள்ளுக்குள் வந்து போட்டிருந்த டேபிள் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டனர்.

அதற்குள் நின்று கொண்டிருந்த காருக்குள் இருந்தும் இருவர் கதவை திறந்து கடைக்குள் வந்து சாவகாசமாய் உட்கார்ந்து கொண்டனர்.

இப்பொழுது கடைக்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மனைவி அவளும் இங்கு வந்து மாட்டிக்கொண்டாள்.

சே..”ஷட்டரை” அடைச்சு வச்சிருந்திருக்கணும். இவ பேச்சை கேட்டது தப்பா போச்சு, கடைய கழுவி விட்டுட்டு ஷட்டர் துறந்திருந்தா கழுவுன தண்ணிய தள்ளி விடறதுக்கு ஈசியா இருக்கும்,. இவள் பேச்சை கேட்ட பலன், நான்கு பேர் நேரம் காலம் தெரியாமல் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே நல்ல எண்ணதுடன் உட்கார்ந்திருக்கிறார்களா? நல்ல வேளை கடையின் உள்புறம் இவனின் ஒண்டு வீட்டுக்குள் மகளும், மகனும் தூங்குகிறார்கள்.

வந்தவர்களில் இருவர்களின் பார்வை அவ்வளவு சரியில்லாதது போல் இருந்தது. நின்று கொண்டிருந்த இவளையே உற்று பார்ப்பது போல இவனுக்கு தெரிந்தது.

இப்ப ஒண்ணுமே இல்லைன்னாலும் கேக்க மாட்டேங்கறாங்க? மனைவியிடம் மெல்ல முணு முணுத்தான்.

சொல்ல வேண்டியதுதானே?, நான் சொல்லட்டுமா? வேகமாய் கேட்ட மனைவியை முறைத்தான்.

இந்நேரத்துக்கு அவங்க முன்னாடி போய் நின்னு கேட்கணுமா?

அப்புறம் என்ன பண்ண சொல்றே? நீயும் அவங்க கிட்ட சொல்ல மாட்டே, என்னையும் சொல்ல விடமாட்டேங்கறே.

இந்த மரமண்டைக்கு எப்படி சொல்வது? “ஷட்டரை” இறக்கி விட்டால் அவர்கள் நாலு பேர், நாம என்ன பண்ண முடியும்? ஆளுகளை பார்த்தா வாட்ட சாட்டமா வேற இருக்கானுங்க.

போலீஸ்காரனுங்களா கூட இருக்கும், மனைவி முணு முணுத்து சொன்னாலும், அவர்களுக்கும் காது கேட்டிருக்கும் போல்தான் இருந்தது. ஒருவன் சத்தமாய் சிரித்தான்.

அது இதை விட இடைஞ்சல், சத்தமில்லாமல் முணுமுணுத்தான் கடைக்காரன்.

அவர்கள் எழுந்து போவதாய் தெரியவில்லை, இவனுக்கு இவர்களை அனுப்ப ஏதாவது செய்து அனுப்பி விட்டால் போதும் என்றிருந்தது. மனைவியிடம் வந்தவன், ஏண்டி உள்ளே போய் ரவை ஏதாவது இருந்தா உப்புமா பண்ணி கொடுத்துடேன், நான் எப்படியோ கொடுத்து அனுப்பிடறேன்

முறைத்து பார்த்த அவள் “இந்த நேரத்துல என் உசிரை எடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டே” சத்தமாய் திட்டி கொண்டே உள்புறமாய் போனாள்.

உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் சட்டென நாற்காலியில் இருந்து எழுந்து நின்றான். இவனுக்கு மனம் “ஐயோ” என்றது. உள்ளே வந்து விடுவானோ?

நல்ல வேளை நின்றவன் உட்கார்ந்து விட்டான். பத்து நிமிடம் சட சடவென ‘கடுகு வெடிக்கும்’ சத்தமும் ‘எண்ணெய் காயும்’ மணமும் வர உட்கார்ந்திருந்த இருவர் “ஹா” மூச்சை இழுத்து விட்டு நாற்காலியில் முதுகை இன்னும் சாய்த்து உட்கார்ந்தனர்.

அந்த சூழ்நிலை இந்த காய்ச்சிய எண்ணெய் மணம் வீசியதில் சற்று இளகினாலும் கடைக்காரனுக்கோ மனதுக்குள் இறுக்கம் தளரவில்லை. இருந்த சூழ்நிலை அப்படி. உள்புறமாய் சென்றிருக்கும் மனைவி, அவள் அணிந்திருந்த நான்கைந்து பவுன் நகைகள், தூங்கி கொண்டிருக்கும் வயது வந்த பெண், அடுத்து இவர்கள் என்ன செய்ய முயற்சித்தாலும் தான் என்ன செய்ய முடியும்?

“இந்தாய்யா” உள்ளிருந்து சத்தம் வரவும் இவன் பயந்து பயந்து உள்ளே போனான்.எங்கே இவர்கள் தன் பின்னால் வந்து விட்டால்..!

அவசரம் அவசரமாய் உப்புமா சட்டியை அப்படியே தூக்கி வந்தான். அவன் மனைவி நான்கைந்து தட்டுக்களை எடுத்து பின்னால் வரவும், இவனுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. அறிவு கெட்டவ, நான் வந்து எடுத்துக்க மாட்டேனா? இப்படி கழுத்துலயும் காதுலயும் போட்டுகிட்டு இவங்க முன்னாடி வந்து நிக்கறாளே. பார்ப்பதற்கு அழகாய் வேறு இருந்து தொலைக்கிறாள். ஒருத்தன் மனசு மாறினாலும் நம்ம எல்லார் கதியும்..கடவுளே.

நினைத்தாலும் மனைவியிடம் அந்த இடத்தில் எதுவும் சொல்லாமல் தட்டுக்களை வாங்கி வைத்தவன் சரி சரி..நீ உள்ளே போ. குழந்தைக தனியா இருக்கும், அவளை எப்படியோ அனுப்பி வைத்தான். அப்பொழுது கூட நால்வரின் கவனமும் உப்புமா பக்கம் இருக்கிறதா? இல்லை மனைவியின் பக்கம் போகிறதா? என்பதையும் கவனித்தான்.

சூழ்நிலையின் இறுக்கம் சற்று தளர்ந்திருந்ததாக இவனுக்கு பட்டது. காரணம் நால்வரும் அந்த உப்புமாவை சுவைப்பதில் ஈடுபட்டிருந்தனர். சூடு பொறுக்காத ஒருவன் உஸ்.உஸ். ஊதி ஊதி உப்புமாவை உருட்டி வாயில் போடுவதை கூட இவன் வேடிக்கையாக பார்த்தான்.

இருந்தாலும் உள் பக்கமாக இருந்த வீட்டு கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாளா தன் மனைவி, இப்படியும் ஒரு பக்கம் அவன் மனம் நினைத்து கொண்டது.

சாப்பிட்டு எழுந்தவர்கள் கையை எங்கே கழுவுவது? என்பது போல் அவனை பார்க்க, அவன் தண்ணீர் சொம்பை எடுத்து கொடுத்து வெளியே காண்பித்தான்.

பகலாக இருந்திருந்தால் இந்நேரம் சொம்பின் பக்கமே போயிருக்க மாட்டான். உடைந்த டிரம் ஒன்றில் நிரப்பிய தண்ணீரில் கையை கழுவ சொல்லியிருப்பான்.

இப்பொழுது சூழ்நிலை அப்படி.

எவ்வளவு?

அவர்களின் கேள்வி இவன் மனதுக்குள் இதுவரை இருந்த திகில் சற்று குறைந்தது போலிருந்தது.

நாலு பிளேட் உப்புமா, கொஞ்சம் சத்தமாக சொன்னவன், நூற்றிருபது ரூபாய். ஒரு பிளேட் முப்பது ரூபாய், ஐந்து ரூபாய், பிளேட் ஒன்றுக்கு சத்தமில்லாமல் ஏற்றியிருந்தான்.

மஞ்சள் நோட்டு ஒன்றை கொடுத்தனர், இரு நூறு ரூபாய், சில்லறை இல்லீங்களே, “குரலில் கொஞ்சம் இயல்பு வந்திருந்தது. “வச்சுக்குங்க” சொன்னவர்கள் விறு விறுவென கடையை விட்டு இறங்கி காரை எடுத்து கிளம்பினர்.

கடைக்காரனின் அனைத்து இறுக்கமும் தளர்ந்து மனம் அந்த இருநூறு ரூபாயை ஆனந்தமாய் பார்த்து இரசித்தது.

என்னடா கடையை இன்னும் திறந்து வச்சு வியாபாரம் பண்ணிகிட்டிருக்கியா?

அதிகாரமான குரல் கேட்கவும் ஐயா இல்லீங்க கடையை சாத்தப்போறதுக்காக வந்தேனுங்க, உள்ளே போக முயற்சித்தான்.

இருடா, சாப்பிட என்ன இருக்கு? அந்த குரல் அவனை உள்ளே போக விடாமல் நிறுத்தி வைத்தது.

ஒண்ணுமில்லீங்கய்யா, எல்லாம் முடிஞ்சிடுச்சு.

அவன் கையில் இருந்த மஞ்சள் நோட்டை “வந்த உருவம்” நோட்டமிட,

உன்னைய யாரு இந்நேரம் வரைக்கும் கடைய திறந்து வைக்க சொன்னது. “ரூல்ஸ்” என்னன்னு உனக்கு தெரியுமா?

ஷட்டரை சாத்தி விட்டு உள்புறமாய் இருந்த அந்த ஒண்டு வீட்டுக்குள் நுழைந்து படுத்தவனிடம் அவன் மனைவி தூக்க கலக்கத்திலேயே கேட்டாள், எம்புட்டு கொடுத்தானுங்க? வெளியே சத்தம் கேட்டுச்சு.

வாயை மூடிட்டு படுடி…அவனின் குரலில் தென்பட்ட எரிச்சல்.

பாடுபட்டு வந்த இருநூறு ரூபாய் பறிபோனதால் இருக்கலாமோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *