(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஏறுமயி லேறிவிளை யாடுமுகமொன்றே!”
“சபாஷ்!”
“மாறுபடு சூரரை வதைத்தமுகமொன்றே!”
“சபாஷ்!”
“கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகமொன்றே!”
“சபாஷ்!”
“குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே!”
“சபாஷ்!”
“சூரனே, சூரனைப் புறங்காட்டும் சுப்ரமண்ய தீரனே!”
“சபாஷ்!”
ஜல்! ஜல்!! ஜல்!!! ஜல்!!!!
எட்டுப் பேருக்கும் கடைசியில் முற்றுப்புள்ளி வைத்தாற் போன்ற அச்சிறுவனின் குரலோசையும். காற்சிலம்போசை யும்தான் தூக்கி நின்றது.
உண்ணாமலை, பிள்ளையார் கோவில் சந்து முனை யில், பெற்ற மனம் குளிர்ந்து பொங்கி வழிய , கையில் மதுரைச் செம்பை ஏந்திய வண்ணம், ஊர்கோலத்தின் வருகையை எதிர்ப்பார்த்து நின்றாள். அவள் நாட்டம் பிள்ளையை விட்டுப் பிரிந்திலது.
இடுப்பிலிருந்து முழங்கால் வரையில், சற்று இறுக லாகவே தைத்த பட்டு நிஜார், இடுப்பில் சதங்கை, கால்களில் சிலம்பு, தலையில் முன்னால் சரிகைப் பட்டை தெரியக் கட்டிய – சிவப்புத் தலைப்பாகை. காதில் இரத்தச் சொட்டுகள் போன்ற கடுக்கன். மைதீட்டி விசாலித்த கண்கள். நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு. மார்பில் பூணூல் (எத்தனை வடமோ?). அதன் மேல் இரு பக்கமும் குறுக்கே தரித்த காஞ்சீபுரத்து விசிறி மடிப்பு சரிகை அங்கவஸ்திரம். அவரவர் கழுத்தில், அவரவர் தாய்மாரின் நகையோ, தாரமாரின் நகையோ. ஒவ்வொருவர் கையிலும், உயரத் தூக்கி எதிரே பிடித்த உருவிய கத்தி. அதன் நுனியில் சொருகியதோர் எலுமிச்சம் பழம். முன்னால் கொட்டு முழக்கு; பின்னால் கோவில் குடை – இத்தகைய சின்னங்களுடன், ஊர்வலத்தில் ஒருவர், குமரேச சதகத்திலிருந்தோ, திருப்புகழிலிருந்தோ, அல்லது ஸ்வய கவியாகவோ பாட, ஒவ்வொரு அடிக்கும், “சபாஷ்! சபாஷ்!” என்று நெஞ்சு நரம்பு புடைக்கக் கத்திக் கொண்டு வரும் அந்நவ வீரரின் காட்சி மிகவும் உணர்ச்சி நிறைந்தே யிருந்தது.
ஊர்வலம் பிள்ளையார் கோயில் சந்து முனை திரும்பிற்று. உண்ணாமலை, கண் ஜாடையும், கை ஜாடையுமா, உடம்பையே ஆட்டி, மைந்தனைச் சைகை செய்து அழைத்தாள். சக்தி வேல், தாயின் சேஷ்டைகளைக் கண்டு, சற்றுச் சலிப்புடன், ஊர்வலத்தை விட்டுப் பிரிந்து,
அவளிடம் வந்தான். “என்னாம்மா?”
“ஏண்டா கொயந்தே, காலெல்லாம் நோவ நோவ, தெருவெல்லாம் சுத்தறையே, களைச்சுப் பூடுவியேன்னூட்டு, காப்பித் தண்ணி காய்ச்சிக் கொண்ணாந்திருக்கேன். இந்தா குடி!” என்று செம்பை நீட்டினாள்.
அவன் கண்களில் அலட்சியமும் கோபமும் ஒருங்கே எழும்பின.
“இதுக்குத்தான் கூப்பிட்டியா? சம்மாரமும், அதுவுமா? பச்சைத் தண்ணி கூட வாயிலே வார்க்கக் கூடாதுன்னு இருக்கச்சே, ஒன்னே யாரு காப்பித் தண்ணி யெடுத்தாரச் சொன்னது? போம்மா, வேலையில்லே!” என்று முறைத்து விட்டுப் போய் ஊர்வலத்துடன் கலந்து கொண்டான்.
“ஏண்டா சக்திவேல், ஒங்கம்மா என்னாத்துக்குக் கூப்பிட்டாங்க?” என்றான் அவன் பக்கத்தில் நின்ற வீரன்.
“காப்பித் தண்ணியாம், அவங்களுக்கு வேறே வேலையில்லே!”
“அடப்பாவி, விட்டுட்டு வந்துட்டியா! என்னைக் கூப்பிட்டிருந்தா, நானாவது குடிச்சிருப்பேனே. கத்தற கத்தலுக்குத் தொண்டையாவது நனையுமே!” என்று சின்னாண்டி வருத்தப்பட்டான்.
சக்திவேல், வெறுப்புடன் அவனை ஒருமுறை பார்த்து விட்டு, வாய் பேசாமல், காலை இன்னும் கொஞ்சம் விசிறிப் போட்டு நடந்தான்.
பத்து வயது இன்னும் பூரணமாக நிரம்பவில்லை. அவன் மண்டையில் இப்பொழுதே ‘ஒரே ஒரு ஊர்லேருந்து என்று ஆரம்பிக்கும் பழைய பாட்டன் கதையிலிருந்து அகோ வாரும் பிள்ளாய்’ என்று ஆரம்பிக்கும் புராணிகர் பிரசங்கக் கதை வரையில் நிரம்பியிருந்தது. தன் விரதத் திற்குப் பங்கமில்லாமல் தப்பித்துக் கொண்டதில் பரம சந்தோஷம். பெரியவருடன் பெரியவனாய் விட்டதாய் அவனுள் எண்ணம். இறுமாப்புடன் மேல் நடந்தான்.
இரு மருங்கிலும் கூட்டம். முன்னால் தீவட்டிகள் ஜ்வலித்துக் கொண்டு சென்றன. மைசூர், அவைகளுக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான். ஒரு கையில் எண்ணெய்ச் சட்டியை ஏந்திக் கொண்டு, இன்னொரு கையில் கந்தையை வைத்துக் கொண்டு, எண்ணெயைப் பந்தங்களின் மேல் பிழிந்தான். அவனைக் கண்டதும் சக்திவேலின் மூக்கு, வெறுப்பால் சற்று சுருங்கியது.
மைசூர் நல்ல தேகவளம் படைத்திருந்தான். தீவட்டி ஜ்வாலை அவனைச் சுற்றி ஆடும் பொழுது, அவன் மார்பிலும், புஜங்களிலும், முதுகிலும் கரணை கரணை யாய் நரம்புகள் விம்மிப் புடைத்தெழுந்து, அவன் தேக வன்மையை எடுத்துக் காட்டின. வியர்வையும் எண்ணெ யும் ஒழுகும் அவன் கருந்தேகம், தீவட்டி வெளிச்சத்தில் கருங்காலி போல் மின்னியது. சுருட்டை சுருட்டையாய்த் தலைமயிர், நெற்றி முன் வந்து விழுந்தது. அவனைச் சுற்றிக் கள் நாற்றம் வீசியது.
அவனைப் பற்றிய கதைகள் அனேகம். கலாட்டா, சண்டை நடக்கும் இடங்களில் அவனை முன்னால் காணலாம். சிலம்பமாடுவான். தீவட்டிக் கொட்டடி யடிப்பான். அவன் பெயரைக் கேட்டாலே, ஊரிலிருக்கும் பெண்களும் குழந்தைகளும் நடுங்குவார்கள். இப்பொழுது கூட, பந்தத்தைச் சரியாய்த் திருப்பிக் காட்டவில்லையென்று தீவட்டி பிடிப்பவர்களை அவன் கர்ஜிக்கும் வசை காது கொண்டு கேட்கக் கூடியதல்ல.
மைசூரைப் பார்த்தாலே ராக்ஷஸன் மாதிரியிருந்தது….
தெய்வயானை, தெருத் திண்ணைத் தூணைக் கட்டிக் கொண்டு, அவள் வீட்டு வாசலில் நின்றாள். கருவண்டை யொத்த அவள் கண்களும், குழந்தை வாயும், ஆச்சரியத்தால் மலர்ந்திருந்தன. அவள் கண்கள், முகத்திற்கு முகம் பதிந்து, பெயர்ந்து சென்றன.
அவளைக் கண்டதும் சக்திவேலின் தலையும் முதுகும் அவனையறியாமல் நிமிர்ந்தன. நடையின் முடுக்கும் அதிகரித்தது.
“இருக்கட்டும், அன்னிக்கு ‘டூ’ விட்டாளல்ல? இன்னிக்கு என்ன பண்ணுவ?”
இவ்வெண்ணம் அவன் மனசில் தோன்றிய அக்கணமே, அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. கண்களும் வாயும் புன்னகை பூத்தன. கை வளையல்கள் சற்று கிலுகிலுத்தன. அவள் ஜாதிக்கே சொந்தமான சாஹஸ குணங்கள் இப்பொழுதுதான் பிறக்க ஆரம்பித்திருக்கும் இச் சிறு வயதில், அவள் வெகு அற்புதமாக விளங்கினாள். அவள் சிரித்த சிரிப்பு, முன்னாலேயே இவனுக்கும் அவளுக்கும் அவர்கள் பெற்றோர் போட்ட முடிப்பை இறுக்கியது போன்றிருந்தது.
கத்தியை இன்னும் சற்று உயரத் தூக்கிப் பிடித்து, விறைப்பாய் நடந்தான்.
“சபாஷ்!” காலை முதல் பட்டினி. பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் அவன் மனத் தீவிரம் குறைந்தபாடில்லை .
கோவில் கோபுர வாசலண்டை வந்து நின்றனர். கூட்டம், கணத்திற்குக் கணம், அதிகரிக்க ஆரம்பித்தது. சம்ஹார வேளை நெருங்கி விட்டது.
“உஷ்…. …. ஷ்…” நாலைந்து அவுட்டு வாணங்கள் ஒரே சமயத்தில் ஆகாயத்தில் கிளம்பி வெடித்து, பச்சையும் சிவப்புமாக நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன. குடைகள் கவிந்தன. ஒரேயடி யாய்க் கரகோஷம், கூட்டத்தின் கோஷம். பகவான் கோபுரவாசலைக் கடந்து நாலுகால் மண்டபத்தில் வந்து நின்றார். அவரைத் தரிசித்ததும், அவனுள் இதுவரை தூங்கிக் கொண்டிருந்ததோர் பெருங்கடல் திடீரென்று விசையுடன் பொங்கி யெழுந்தது போன்றிருந்தது. கூட்டத்திலொரு கிழவர், “ஊம் – ஆவட்டும்….. சாமியாரைப் போய்ச் சேவிங்க…. நேரமாவுது…” என்று இரைந்தார்.
ஒன்பதின்மரும் கற்களும் மண்ணும் நிறைந்த தெருவில் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து நின்றனர். சக்திவேலின் அங்க வஸ்திரம் சற்று சரிந்து விழுந்தது. அதைச் சரிப்படுத்திக் கொண்டான். அவன் குழந்தை மனம், அவன் கண்களின் வழி வெளிப்பட்டு, பகவானிடம் கலந்தது.
“யாரோ தெற்குச் சீமை ஆசாமியாம்! இதுக்குன்னு ‘பெஷலா’ தருவிச்சாங்களாம் ! சாத்துப்படி நடக்கரப்போ, உள்ளே தலைகாட்ட முடியல்லே. பொத்திப் பொத்தி வச்சிக்கினாங்களே, அம்மாடி! இதேப் பாத்தியா?”
ஆயக்காலிட்டுப் பகவானை நிறுத்தி விட்டனர்.
அன்று எவன் அலங்கரித்தானோ, அவன் தன் பூரண சாமர்த்தியத்தையும் காட்டியிருந்தான். ஆறு முகங்கள்; யுத்த கோலம்; ஒரு காலை மண்டியிட்டு வில்லைக் கையில் கொடுத்து அதில் வேலைத் தொடுத்து விட்டிருந்தான். அது புறப்பட வேண்டியது தான் பாக்கி.
“அமரரிடரும் அவுணர் உடலும் மடிய விருகை வடிவேலா!”
“சபாஷ்!”
சக்திவேலின் பொட்டிடித்தது. விறுவிறு வென்று ஒன்பது பேரும் சுவாமியைப் பிரதட்சணம் செய்து, கீழே விழுந்து, நமஸ்கரித்து விட்டு, சூரனின் மர விக்ரஹம் நிறுத்தி வைத்திருக்கும் திக்கு நோக்கி நடையும் ஓட்டமுமாய்ச் சென்றனர்.
“அடே பசங்களா ! சண்டை கிண்டை போடாதீங்க. ஆளுக்கொரு தலை!”
அவனுக்கொன்றும் காதில் விழவில்லை. அவன் கண் கண்டது கைக் கத்தியின் பளபளப்புத்தான்; காது கேட்டது, வீராவேசத்துடன் தன் நெஞ்சிலிருந்து குமுறிக் கொண்டு வரும், ‘சபாஷ்! சபாஷ்!’ சப்தந்தான்.
“கடல் சுவற வேல் விட்ட கார்த்திகேயனே!”
“சபாஷ்!”
வீரர்களுள் மூத்தவன், ஓடோடியும் சென்று, சூரன் தலையை வெகு லாவகமாய், அப்படியே கத்தியால் கொந்தியெடுத்தது வெகு அழகாயிருந்தது. அப்படியே, மற்றைய எட்டுப் பேர்களும் பின் தொடர, பகவான் சன்னதிக்கு ஒரே ஓட்டம்.
“அவுணர் குலம் அழிய வந்த ஆறுமுக தேவா!”
“சபாஷ்!”
“தேவர் சிறை மீளவந்த தேவதேவா!”
“சபாஷ்!”
‘ஜல ஜல ஜல’ வென இடுப்புச் சதங்கையும் காற் சிலம்பும் குலுங்கின.
“சபாஷ்!”
சுவாமியைப் பிரதட்சணம் செய்து அவர் சன்னதியில் அத் தலையைச் சமர்ப்பிப்பது போன்று கீழே வைத்து நமஸ்கரித்தனர். உடனே கற்பூர ஹாரத்தி. சக்திவேலின் உடல் பரபரத்தது. உடனே மறுபடியும் உயரத் தூக்கிப் பிடித்த கத்தியும் ‘சபாஷ்! சபாஷ்!’ என்ற வீர கோஷமுமாய் ஒரே ஓட்டம். உடனே இன்னொரு வீரனின் முறை.
யானைத் தலை (மைசூர்தான், சூரன் பின்னால் நின்று கொண்டு, ஒவ்வொரு தலையாய் மாட்டியது)
ஆட்டுத் தலை
குதிரைத் தலை
மாட்டுத் தலை
சிங்க முகம் – ஒவ்வொரு தலையாய்க் கழன்றன.
“அடியே, இந்த உண்ணாமலை மவன் மூஞ்சியைப் பாத்தியாடி! சொரம் அடிக்கிறாப்போல இருக்குதே, கண்ணு மூஞ்சியும் செவசெவன்னு!”
ஆனால் அவனுக்கடிக்கும் ஜுரத்தைக் கண்டவர் யார் ? அவனுள் கொந்தளிக்கும் கடல் தண்ணீர் எல்லாம் திரண்டு உருண்டு ஒரு பெரும் அலையாகிக் கொண்டிருந்தது. சூரன் உடலிலிருந்து பிரியும் ஒவ்வொரு தலைக்கும், அவ்வலை ஒரு காத உயரம் உயர்ந்தது – சங்கடமும், சந்தோஷமும் சகிக்க முடியவில்லை.
கடைசித் தலை! அவன் முறை ! தன் மாயமெல்லாம் மறைந்து, மயிலும் சேவலுமாய் ஆவதன் முன் சூரன் கடைசி முறையாக, ஸ்வய உருவம் தோன்றும் தலை!
கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்.
கற்பூர ஹாரத்தி!
கற்பூர ஜ்வாலையில், பகவான் சார்த்தியிருந்த வைரப் பதக்கங்கள் விட்டுவிட்டு மின்னின. கிரீடங்கள் மின்னின. கையில் பிடித்த வில் மின்னியது. வில்லின் நுனியில் ஆடும் சிறுமணி மின்னியது. அதில் தொடுத்து விட்டிருந்த வேல் மின்னியது.
“கொடிய சூரன் உயிர் குடிக்க வந்த கூர்வேல்!”
“சபாஷ்!”
பகவானின் நெற்றித் திலகம் மின்னியது.
“கதிர்வேல்!”
“சபாஷ்!”
பகவான் கண்கள் உயிருடன் மின்னின. கருணையுடன் சக்திவேலை நோக்கின. சக்திவேலின் மார்பு விம்மியது. அவர் தன் நோக்கின் வழியே, அவனுள் தன் சக்தியைச் செலுத்தியதை அவன் ஸ்பரிசித்தான்.
“மணிவேல்!”
“சபாஷ்!”
“மாணிக்கவேல்!”
ஆகர்ண பரியந்தம் நாணை இழுத்தார்.
“சபாஷ்!”
“சக்திவேல்!” வேல் வில்லை விட்டுப் பிரிந்தது. சக்தி வேல் சக்தி வேலானான்.
“சபாஷ்!”
சக்திவேல் யுத்த களத்தில் பாய்ந்து விட்டான். அவனுள் எழும்பிய அப்பெரு அலை கரையெல்லாம் தகர்த்துத் தூக்கி யெறிந்தது.
கூட்டத்தின் பெருங்கோஷமெல்லாம் அவனுக்கு யுத்த கோஷமாய் விட்டது.
“இப்படியாக அந்த சூரபதுமனுக்கும் பால சுப்ரமண்யப் பெருமானுக்கும் நடந்த அந்த மகாயுத்தத்திலே, கவந்தங்கள் ஆடின. கழுகுகள் வட்டமிட்டன. இரத்தம் ஆறாய்ப் பெருகிற்று. அஸ்திர சஸ்திரங்கள் மழையாய்ப் பொழிந்தன.
சரக்கூடு சூரியனை மறைத்தது. சற்குரு சாமிக்கு ஜே!” என்று புராணிகர் பிரசங்கித்த காட்சியெல்லாம் அவன் இப் பொழுது பிரத்தியக்ஷமாகக் கண்டான். அவனே பாடிக் கொண்டு கிளம்பினான்.
“மாயமலை பிளந்த மணிவேல்!”
“சபாஷ்!”
“சிங்கனைச் சிதைத்த செவ்வேல் !”
“சபாஷ்!”
“மாமரமது பிளந்த மணிவேல்!”
“சபாஷ்!”
“சனன மரண மறுத்திடும் சக்தி வேல்!”
“சபாஷ்!”
“சக்திவேல்!”
“சபாஷ்!”
சக்திவேல் பறந்தான். அவன் கால் கீழ்ப்பட்டதாக அவனுக்குத் தெரியவில்லை.
மைசூர் பல்லை இளித்தான். “ஓஹோ, நம்ப சின்னத் துரை வராரோ? என்று பரிகசித்து, வேண்டுமென்று குறும்பாக, சூரன் கழுத்தின் மேல் கடைசித் தலையை மாட்டுவதற்குப் பதிலாகத் தன் தலையைச், சூரன் கழுத்தின் மேல் நீட்டிக் கொக்கரித்தான்.
“இப்படியாக, பகவானானவர் வேலாயுதத்தை மந்திரித்து விட்டவுடன், அந்த வேலாயுதமானது, திகுதிகு வென்று திக்குகளையெல்லாம் எரித்துக் கொண்டு, கடகட வென்று அண்டங்களெல்லாம் ஆட திடுதிடுவென்று அஷ்ட கஜங்கள் பயந்து ஓட, கரகரவென்று சுழன்று கொண்டு…”
“மாயமது அறுத்திடும் மெய்ஞ்ஞான வேல்!”
“சபாஷ்!”
“சூரனுயிர் கொள்ளை கொள் பரிசுத்த வேல்!”
“சபாஷ்!”
யாருக்கும் இன்னதான் நடக்கப் போகின்றது என்று தெரியவில்லை. கண்ணிமைத்து, கண் திறப்பதன் முன், மைசூர் தலை மண்ணில் புரண்டது. அவனுக்குத்தான் எப்படி அவ்வுடல் வன்மை வந்ததோ? அவ்வெண்ணெய் வெட்டும் கத்திக்குத்தான் எப்படி அவ்வளவு கூர்வந்ததோ தெரியவில்லை.
“ஹோ ஓ ஓ!”
ஒரே கோஷம், தேவர்களின் ஜயகோஷம், சூரசம்ஹாரம் ஆய்விட்டது.
“குக்குடக் கொடி கொண்ட மயில் வாஹா!”
“சபாஷ்!”
அவனையுமறியாமல் மேலடிகள் அவன் வாயை விட்டுக் கிளம்பின.
“வெஞ்சூர் உயிர் களைந்து, குஞ்சரியை வேட்ட வேல் முருகா!”
“சபாஷ்!”
பதினாயிரம் கைகள் அவனை ஒரே சமயத்தில் பிடித்து அமுக்கியது போன்றிருந்தது. மூச்சுத் திணறியது. அவனை லேசில் கட்டிப்பிடிக்க முடியவில்லை . பயங்கரமும் திக் பிரமையும் நிறைந்த ஒரே கூச்சல். ஒரே கலவரம்.
“உண்ணாமலை மகனுக்குப் பைத்தியம் பிடிச்சுகிச்சு!”
அவன் கண்கள் கொழுந்து விட்டெரிந்தன.
“குறவள்ளி சேர் குன்றனைய தோளா!”
“சபாஷ்!”
அவனைத் தூக்கி அறையில் எறிந்து கதவை இறுக்கி மூடி வெளியே பூட்டினர்.
வெளியில் கூச்சலும், கலவரமும், சத்தமும் வர்ணிக்க சாத்தியமில்லை!
சக்திவேலுக்கு, ஆச்சரியத்தால், கண்கள் சற்று மலர்ந்தன. ‘சூரனைக் கொன்ற பிறகு கூட, தேவர்கள் இன்னும் முறையிடுவானேன்!’ அவனுக்குப் புரியவில்லை.
– 1939, மணிக்கொடி இதழ் தொகுப்பு
– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை.