சுமங்கலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 5,624 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உள்ளத்தை வேதனைப்படுத்தும் அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ளப் பொன்னம்மாவின் மென்மையான இதயத்திற்கு கஷ்டமாக இருந்தது.

வேகவைக்கும் ஈயக்குழம்பு காதிற்கூடாகத் தசைகளை அறுத்துச் சென்று இதயத்தில் தேங்கிக் குமிழி பரப்பிக்கொண்டிருப்பதைப் போன்ற வேதனை.

வாழ்நாளில் அனுபவித்திராத துன்பம் அவளை வாட்டச் சிறிது நேரம் எதையும் சிந்திக்கும் சக்தியை இழந்துவிட்டாள். விழிகளை மேவிப் பெருகிய கண்ணீர் குழிவிழுந்திருந்த அவளது கன்னத்தின் சுருக்கங்களை நிரப்பி வழிந்துகொண்டிருந்தது.

நெற்றியிலே பட்டையாகத் தீட்டியிருந்த திருநீற்றைக் கரைத்துக் கசிந்திருந்த வியர்வைத் துளிகளைத் தன் சேலைத் தலைப்பினால் ஒற்றியபொழுது குங்குமம் அழிந்துவிடக்கூடாதேயென்ற கவனமும் அவள் நினைவில் வந்தது.

“பொன்னம்மா! சாத்திரியாருக்கு ஒருத்தினை தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வா.”

அடுப்பிற்கு முன்னால் வெகுநேரம்வரை தன்னை மறந்திருந்த பொன்னம்மா, புருஷனின் குரல் கேட்டுத் திடுக்குற்று அவசர அவசரமாகப் பன்னாடையை அடுப்பிற்குள் செருகினாள்.

சாத்திரியார் கூறிய செய்தி அவளின் மனச்சுவர்களை அரித்துப் புண்படுத்திக்கொண்டிருந்தது.

‘அவளது கணவன் சாதாசிவம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுவாராம்’.

எவ்வளவு இரக்கமற்றதனமாக அந்தச் செய்தியைச் சாத்திரியார் கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் பொய்த்துவிட்டால் பொன்னம்மா சந்தோஷத்தால் பூரித்துப்போவாள்.

ஆனால், சாத்திரியார் கூறும் வார்த்தைகள் ஒரு போதும் பொய்த்துவிடுவதில்லை என்பதைப் பொன்னம்மா நன்றாக அறிந்திருந்தாள்.

அவளுக்கும் சதாசிவத்திற்கும் கலியாணம் நடந்த புதிதில், அவர்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லையென்று சாத்திரியார் கூறியதை முதலில் பொன்னம்மா நம்பவில்லைத்தான். ஆனால் இன்றுவரை அது எவ்வளவு உண்மையாகிவிட்டது.

சாத்திரியாரிடத்தில் ஏதோ தெய்வம் நின்று பேசுகிறது என்று பலர் கூறுவதைப் பொன்னம்மா கேட்டிருக்கிறாள். உண்மையில் தெய்வந்தான் நிற்கிறதோ அல்லது சாத்திரத்தின் மகிமைதானோ அவர் கூறுவது மட்டும் உண்மையாகிவிடுவதைப் பொன்னம்மா பல முறை கண்டிருக்கிறாள்

செம்பிலிருந்த தேநீரை மூக்குப் பேணியில் ஊற்றிச் சாத்திரியாரிடம் கொடுத்துவிட்டு மிகுதியைக் கணவனின் பக்கத்தில் வைத்தாள் பொன்னம்மா.

ஏனோ சிறிது நேரம் அவ்விடத்தில் அமைதி நிலவியது. சதாசிவம் மனைவி கொணர்ந்துவைத்த தேநீரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். முகத்திலே தேங்கும் துன்பத்தைப் பொன்னம்மா பார்த்துவிடக்கூடாதேயென்ற பயம் அவருக்கு.

சாத்திரியாருடைய மனமும் வேதனையடைந்தது. அவர் கூறிய செய்தி அந்த இணைபிரியாத தம்பதிகளை எவ்வளவு தூரம் வாட்டி வருத்துகிறது. நீண்ட நாட்களாக அவர்களுடைய குடும்ப நண்பராக இருந்து அவர்களின் அன்புப் பிணைப்பை நன்கு அறிந்தபின்பும், தான் செய்த தவறுக்காக, மறைக்கவேண்டிய உண்மையைக் கூறியதற்காக, அவர் தன்னைத்தானே நொந்துகொண்டார்.

சாதகக் குறிப்புகள் அடங்கிய ஏட்டின் எழுத்துக்கள் சாத்திரியாரின் கண்களுக்கு மங்கலாகத் தெரிந்தன. வழக்கம்போல முருங்கையிலையின் தளிர்களைக் கசக்கி எழுத்துக்களின்மேல் அவர் தேய்த்தபொழுது, இலைச்சாறு எழுத்தின் வெட்டுக்களை நிரப்பி அவற்றைப் பச்சை வர்ணங்களிலே துலங்கச் செய்தன. ஆனாலும் அவரது கலங்கிய கண்களுக்கு இப்பொழுதும் எழுத்துக்கள் துலங்கவில்லை.

ஒரு கணம் இலைச்சாற்றின் நெடி அவ்விடத்திற் பரவியது.

அங்கு நிலவிய அமைதி சாத்திரியாருக்கு ஏதோ பயங்கரச் சூழ்நிலையாகி மனதிலே கொந்தளிப்பை ஏற்படுத்த, அந்த அமை தியைக் குலைக்கும் வகையில் அவரேதான் முதலில் பேசினார்.

“என்ன பொன்னம்மா சுகமில்லையோ? ஒரு மாதிரியிருக்கிறாய் கண்ணெல்லாம் சிவந்து போய்க்கிடக்கு.”

“இல்லைச் சாத்திரியார், தேத்தண்ணிக்கு அடுப்பு மூட்டேக்க, சாம்பல் கண்ணுக்குள்ளை பறந்திட்டுது.”

இதைச் சொல்லி முடிப்பதற்குள் அழுது புலம்பிவிடாமல் இருப்பதற்காகப் பொன்னம்மா எவ்வளவோ முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

2

சாத்திரியார் எழுந்து சென்று வெகுநேரமாகியும் சதாசிவம் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. தான் இறந்தபின் பொன்னம்மா இறக்கையொடிந்த பறவையாகத் துடித்துப்போவாளே என்பதை நினைத்த பொழுது, அவரது இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது.

இளமைப் பருவத்தில் பொன்னம்மாவுடன் கழித்த இன்ப நாட்கள் அவரது மனக்கண்முன் நிழலாடின.

வெகு காலத்துக்குப்பின் அன்றொருநாள் தனது மாமன் வீட்டுக்குப் போயிருந்த சதாசிவம் ஒருகணம் பிரமித்துப்போனார்.

நெற்றியிலே தோன்றும் வியர்வைத் துளிகளைத் தனது அழுக்குப் படிந்த சட்டையால் துடைத்துவிட்டு, மூக்கால் வழியும் சளியை நாக்கினால் உறிஞ்சிக்கொண்டு, அவருடன் சிறுவயதிற் கெந்திவிளை யாடிய பொன்னம்மா இன்று எப்படி வளர்ந்துவிட்டாள்!

சித்தாடை கட்டிய சிங்காரப் பெண்ணாக அவரைத்தன் கருவண்டுக் கண்களால் மருளவிழித்ததும், தன்னையும் மறந்து ‘அத்தான் வந்திருக்கிறாரம்மா’என்று அகமகிழக் கூவியதும், வதன மெல்லாம் செம்மை படரப் புன்னகைத்ததும், நிலத்திலே கால்விரலால் ஏதேதோ கோலமிட்டதும்…… அப்பப்பா! சதாசிவம் என்ற கட்டிளங் காளை கிறங்கிப்போனான்.

அன்று பொன்னம்மா ஒடியற்கூழ் காய்ச்சியிருந்தாள். அவளின் கைவண்ணத்திற்குத்தான் எவ்வளவு சுவை! சதாசிவத்திற்கு ஒடியற்கூழ் என்றால் கொள்ளை ஆசையென்று எப்படித்தான் அவளுக்குத் தெரிந்ததோ?

பெண்களே இப்படித்தான்; தாங்கள் யாரிடம் அன்பு செலுத்துகிறார்களோ அவர்களின் மனவிருப்பத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையிற் செயற்படுவதில் பெருஞ் சாமர்த்தியசாலிகள்.

மடித்துக்கோலிய பலாவிலைக்குள் பொன்னம்மா கூழை வார்க்க, அதை உறிஞ்சிச் சுவைப்பதுபோல் சதாசிவம் வாஞ்சையுடன் ஓரக்கண்ணால் அவளை நோக்க, ஆசை வழியும் கண்களால் கள்ளத்தனமாக சதாசிவத்தையே பார்த்துக்கொண்டிருந்த பொன்னம்மா வுக்கு வெட்கமாகிவிட்டது.

சதாசிவம் வீட்டிற்குப் புறப்பட்டபொழுது பொன்னம்மா அவரிடம் “அத்தான் … நான்…..’’ என்று ஏதோ கூற முயன்று, வெட்கித் தடுமாறி அதைக் கூறாமல் விட்டபோதிலும் தனது மனத்துடிப்பிலேதான் அவளும் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளச் சதாசிவத்திற்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.

“பொன்னம்மாவுக்கு ஏழிற் செவ்வாய் மணமுடித்தால் கணவனுக்குத்தான் கூடாதாம்”- ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் சதாசிவத்திற்கு புத்திமதி கூறினார்கள். ஆனால் அவற்றைக் காதில் வாங்கிக்கொள்ளக்கூடிய நிலையில் அப்போது சதாசிவம் இருக்க வில்லை. பொன்னம்மா இல்லாத வாழ்வு வரண்ட பாலைவனமாகிவிடும் போல் அவருக்குத் தோன்றியது.

அதன் பின் –

இந்நாள்வரை அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிமை நிறைந்ததாய், இன்பத்துள் இன்பமாய்க் கழிந்துவிட்டது.

ஆனால் இன்று சாத்திரியார் கூறிய வார்த்தைகள் – எதிர் காலத்தைத்தான் துன்பம் எதிர்நோக்கி நிற்கிறதா?

பொன்னம்மாவின் முன்னால் போடப்பட்டிருந்த வாழை இலையில் பிசைந்துவிடப்பட்டிருந்த சோறு அப்படியே கிடந்தது. அவள் தன்னை மறந்த நிலையில் எங்கோ பார்த்தபடியிருந்தாள். எவ்வளவு நேரந்தான் அப்படியிருந்தாளோ அவளுக்கே தெரியாது. உணவைக் கண்டால் அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தொண்டைக்குள் ஏதோ இருந்துகொண்டு உணவை உட்செல்லவிடாமல் தடை செய்வதைப் போன்ற ஒரு பிரமை. அவளுக்குப் பசியே எடுக்கவில்லை.

ஊரில் யாரோ இறந்திருக்க வேண்டும். எங்கோ பறைமேளம் கேட்டுக்கொண்டிருந்தது. பொன்னம்மா இடியேறு கேட்ட நாகம்போலத் தவிக்கிறாள். நெஞ்சு வேகமாகப் படபடக்கிறது. இன்னும் சில நாட்களில் அவளுடைய வீட்டிலும் இதயத்தைப் பிளக்கும் அந்த ஓசை கேட்கப் போகிறதா?

பொன்னம்மாவின் முகம் பயங்கரமாக மாற, மனதிற்குள் ஒரு செத்தவீடு நடந்து ஒய்கிறது.

எந்த நிமிடத்தில் அந்தப் பயங்கரம் நிகழ்ந்து விடுமோ வென்ற தவிப்பு மலைபோல வளர்ந்து, அவளது நெஞ்சை அடைத்துக்கொண்டு பெருஞ் சுமையாகக் கனத்தது.

பொன்னம்மா படுக்கையிற் புரண்டுகொண்டிருந்தாள். இரவில் படுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகப் படுத்தாளே தவிர, அவள் படுத்தாலும் படுக்கா விட்டாலும் ஒன்றுதான். பல நாட்களாக நித்திரை யில்லாததால் அவளது கண்கள் சிவப்பேறி மடல்கள் வீங்கியிருந்தன.

கலைந்திருந்த கூந்தலும், செம்மை படர்ந்த கண்களும், அழுக்குப் படிந்த உடையும், அவளின் பைத்தியக்காரத் தோற்றத்தை மிகைப் படுத்தின.

அவள் ஏக்கத்துடன் படலையை நோக்கியபடியே இருந்தாள்.

அருகில் இருந்த கைவிளக்கு காற்றில் அசைந்தாடுகிறது. நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எங்கோ சாமக்கோழி ஒலி எழுப்புகிறது.

அயலூருக்குச் சென்ற சதாசிவம் ஏன் இன்னும் திரும்ப வில்லை? மனைவி வீட்டில் தனியாக இருக்கப் பயப்படுவாளே என்று, பொழுது மங்கிவிட்டால் வீட்டைவிட்டு கிளம்பாத சதாசிவத்தை இன்று வெகு நேரமாகியும் காணவில்லை.

பக்கத்திலிருந்த பனை வடலிக்குள் பாம்பொன்று பயங்கரமாகக் கொறித்துக்கொண்டிருந்தது.

திடீரென்று பேரிரைச்சலுடன் வீசியகாற்று அருகிலிருந்த தீபத்தின் ஒளியைத் துடிக்கவைத்து அணைத்து இருளைக் கவித்தது.

பொன்னம்மாவின் நெஞ்சு ஒருகணம் விறைத்துப் போயிற்று.

“ஒரு வேளை அவருக்கு ஏதேனும்……….” இதயத்தைப் பிசைந்து எழுந்த எண்ணங்களைப் பொன்னம்மாவால் தாங்க முடியவில்லை.

“ஆயாக்கடவைப் பிள்ளையாரே, நீதான் அவரைக் காப்பாற்றவேணும்.” கண்களை மூடிக்கொண்டு பொன்னம்மா வேண்டுதல் செய்கிறாள்.

படலை கிறீச்சிடும் சத்தம். கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு அவள் பார்க்கிறாள். இருளில் மங்கலாகத் தெரியும் உருவம்……. சதாசிவம்தான்.

பொன்னம்மாவின் நெஞ்சிலிருந்து நிம்மதியான பெருமூச்சுக் கிளம்புகிறது.

பயம் என்பது ஒரு பிசாசு, அது மனதிற்குட் புகுந்து விட்டால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் தனக்குச் சாதகமாக்கி, விழுங்கி ஏப்பம்விட்டு விசுவரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கும்.

பொன்னம்மாவைக் கலங்கவைக்கும் வகையில் அடுத்த நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

சற்று முன்பு அவள் கேட்ட பயங்கர ஓசை….. ‘லொறி’யின் சக்கரங்கள் அவளது நெஞ்சைச் சிராய்ப்பதுபோலச் சடுதியாய்த் தெருவை உராசி நிறுத்தப்பட்டு…. ஐயோ! இப்பதானே அவரும் தெருவுக்குப் போனவர், ஒருவேளை சக்கரங்களுக்குள் சிதைந்து இரத்தக் களரியாகி… பொன்னம்மா தெருவை எட்டிப் பார்ப்பதற்கே அஞ்சினாள்.

ஒரு மாதத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுச் செல்லக் குஞ்சாச்சி ‘காரில்’ அடிபட்டு அந்த இடத்திலேயே செத்துப்போனது அவளின் நினைவில் வந்தபொழுது நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.

மறுகணம் பொன்னம்மா தெருவை நோக்கி ஓடுகிறாள்.

நிதானம் இழந்துவிட்ட அவளது கால்களைப் பாதையிலே கிடந்த கல்லொன்று பதம்பார்த்து விடுகிறது. அவள் நெஞ்சு அடிபட நிலத்திலே சாய்ந்தாள்.

“ஒரு மயிரிழை தப்பிவிட்டுது, இல்லாட்டில் சதாசிவத்தை உயிரோடை பாக்கேலாது.” யாரோ வழிப்போக்கன் கூறியது பொன்னம்மாவின் காதுகளிலும் விழுந்தது.

பொன்னம்மாவின் உணர்ச்சிகள் வெடித்துப் பெருமூச்சாகப் பிரதிபலிக்கின்றன. அவளது தலை சுற்றுகிறது. கண்கள் இருட்ட டைகின்றன. நெஞ்சுக்குள் பலமான வலியொன்று ஏற்படுகிறது. அவளால் எழுந்திருக்க முடியவில்லை.

நிலத்திலே விழுந்து கிடந்த பொன்னம்மாவைச் சதாசிவம்தான் தூக்கிச்சென்று கட்டிலிலே கிடத்துகிறார்.

நான்கைந்து நாட்கள் கழிகின்றன.

பொன்னம்மா புரண்டு படுக்கிறாள். அவளால் அந்தச் சோக நிகழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. சதாசிவத்தின் உடலை யாரோ துணியால் மூடிவிட்டார்கள். அயலவர்களின் ஒப்பாரி அந்தச் சுற்றுவட்டாரத்தையே துக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. சதாசிவத்தின் விசுவாசமான உழைப்பாளி ஒருவன் கலங்கிய கண்களுடன் பாடை கட்டுவதில் முனைந்திருந்தான்.

பொன்னம்மாவின் கண்களில் மட்டும் ஏன் கண்ணீர் துளிர்க்கவில்லை? அழுதழுது கண்ணீர் வற்றி விட்டதா? அவள் கணவனின் உடலையே வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தாள்.

நெற்றியிலே கசிந்த வியர்வையில் அவளணிந்திருந்த குங்குமம் கரைந்து வழிந்தது. அரக்கத்தனமாக அவளின் கூந்தலை யாரோ அவிழ்த்து விட்டார்கள். பொன்னம்மா இனிமேல் சபை சந்திக்கு உதவாதவள்; அறுதலி.

யாருமே இல்லாத வரண்டபாலைவனத்தில் தான் தன்னந்தனியனாக விடப்பட்டுக் கணவனையே நினைத்துக் கதறிக் கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது.

யாரோ அந்திமக் கிரியைகள் செய்கிறார்கள் . பாடை நகர்கிறது; பறைமேளம் நாராசமாய்க் காதில் விழுகிறது.

பொன்னம்மா கதற முயற்சிக்கிறாள்.

“ஐ…. …. ! ஐயோ…. ….”

கண்ணீர் கருமணிகளை அறுத்துக்கொண்டு பிரவகித்துப் பாய்கிறது. நெஞ்சுக்குள் ஏதோ கிழிந்து சிதறுவதைப்போல் இருந்தது. உலகமெல்லாம் இருண்டு வந்து சூனியப் பெருவெளியாகியது……..

“பொன்னம்மா ! எணை பொன்னம்மா ! என்ன குளறுகிறாய்? கனாக்கண்டனியோ?”

சதாசிவம் அவளின் தோள்களை உலுப்புகிறார்.

பொன்னம்மா இனிமேல் விழித்துப் பார்க்க மாட்டாள். அவளது தவிப்பு அடங்கிவிட்டது.

அவள் மேல்நோக்கிப் பறந்துகொண்டிருந்தாள், என்றுமில்லாத புத்தொளி அவளது வதனத்தில் நிறைந்திருந்தது. எங்கிருந்தோ மங்கல கீதங்கள் அவளது காதுகளில் விழுந்தன. வானத்திலிருந்து சொரிந்த நறு மலர்கள் அவளுக்கு வரவேற்புக் கூறின.

“பொன்னம்மா…. ….. !” உலகத்துச் சோகமெல்லாம் இழையோடிய சதாசிவத்தின் அலறல் அனாதரவாய் ஒலித்துக்கொண்டிருந்தது.

– ஈழநாடு 1964.

– கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *