சுந்தரும் புள்ளிவால் பசுவும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 96,165 
 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன.

கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்றான். ‘சுருள் கொம்பு’, ‘கருங்கண்’, ‘புள்ளி வால்’ என்று அவன் அவற்றுக்குப் பெயரிட்டிருந்தான். தனது உணவை ஒருபையில் வைத்து, அதைத் தன் தோளில் தொங்கவிட்டிருந்தான். அந்தப் பையில் அவனது கத்தியும் குழலும் இருந்தன. அவன் ஒரு கொம்பைக் கொண்டு பசுக்களை தூரத்திலிருந்த மேய்ச்சல் நிலத்துக்கு ஒட்டிச் சென்றான்.

மேய்ச்சல் தளம் பலவித மரங்களும் செடிகளும் மண்டி வளர்ந்த விசாலமான நிலப்பரப்பு. இவ்வருடம் வறட்சி ஏற்பட்டிருந்தது. எல்லாம் காய்ந்து கிடந்தன. மாடுகள் தின்பதற்கு அதிகமாக இல்லை. அவை கடிப்பதற்குச் சிறிது இலைகளே எஞ்சியிருந்தன.

மாடுகளை சுந்தர் அடிக்கடி மேய்க்கக் கொண்டுபோக நேராது. மழை பெய்தால், மாடுகள் தொழுக்களில் தங்கிவிடும். விளைச்சல் நன்றாக இருந்தால் அவன் உழைப்பு தேவைப்படாது; மாடுகள் வயல்களில் நெல் தாள்களைத் தாமே தின்று கொள்ளும் கோடை காலத்தில், மாடுகளுக்குத் தீவனம் அரிதாகிவிடும்போது தான், சுந்தர் அவற்றை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல நேரிடும். இதுவும் பதினைந்து நாட்களுக்கு மேல் போகாது. ஆனால் இதற்குள் சுந்தர் மாடுகளோடு மிக ஒட்டுதலாகி விடுவான்.
மேய்ச்சல் களத்தின் அருகில் வளமான காடு ஒன்று உண்டு. அங்கு நாலாவித மரங்களும் அடர்ந்து, பலவகைப் பிராணிகளுக்கும்-நரிகள், குரங்குகள், முள்ளம்பன்றி, முயல், காட்டுப்பன்றி, மான்கள் அனைத்துக்கும்-பாதுகாப்புத் தந்தன. அவ்வப்போது யானைகளும் தென்படும். ஆனால், காடு அரசின் காவலில் இருந்தது. அங்கு மேய்ச்சல் அனுமதிக்கப் படுவதில்லை.

அன்று காலை சுந்தர் மாடுகளை தடைசெய்யப்பட்ட எல்லைக்குள் போகவிட்டிருந்தான். அவன் ஒரு முந்திரி மரத்தில் ஏறி அமர்ந்து, சிறிது பருப்புகளைக் கொய்து தின்றான். பறவைகளைப் போல் கூவினான். பசுக்களுக்கு பூமாலைகள் தொடுத்தான். பசுக்கள் காட்டினுள் திரியத் தொடங்கவும், அவற்றை வரவழைக்க அவன் புல்லாங்குழில் இசைத்தான். அவற்றின் விலாவில் தட்டினான். காட்டில் அவை வழிதவறிப் போவது பற்றிக் கண்டித்தான். சுந்தர் ஒரு மெல்லிய நாணலை எடுத்து, அதில் ஒரு கொட்டையைச் செருகினான். நாணலின் ஒரு முனையில் ஊதவும், கொட்டை துப்பாக்கியிலிருந்து குண்டு புறப்படுவதுபோல் பாய்ந்தது. அதை அவன் பல்லிகள், அணில்கள் மேல் எய்தான். அவன் மரங்கள் மேல் ஏறினான், பறவைக் கூடுகளை எட்டிப் பார்த்தான்; இலைகளைச் சேர்த்து முட்களால் குத்தி குல்லாய் செய்தான். சில சமயம், கோயில் விழாவில் அவன் கண்டது போல், கருட நாட்டியம் ஆடினான்.

மேய்ச்சல் களத்துக்கும் காட்டுக்குமிடையே ஒரு சிறு நீரோடை ஒடியது. பசுக்களைக் குளிப்பாட்டப் போதுமானநீர் இல்லை. அவை தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், அவன் தன் சோற்றையும் கூட்டையும் தின்று குடிப்பதற்கும் போதிய தண்ணிர் இருந்தது.

பிற்பகலில் பசுக்கள் நிழலில் படுத்து அசை போட்டன. சுந்தர் ஒரு பாறை நிழலில் சாய்ந்தான். ஒரு குரங்கு பக்கத்தில் வந்தது. அவன் தன் நாணல் துப்பாக்கியால் சிறு கல்லை எறிந்து அது பயந்து ஒடும்படி செய்தான். அவனுக்குக் கிறக்கமாக இருந்தது. இலைகளைப் படுக்கையாக்கி நீட்டி நிமிர்ந்தான். இரவில் இழந்த தூக்கத்தை ஈடுகட்டினான்.

அவன் அருகில் நரிகள் ஊளையிடவே சுந்தரின் ஆந்த உறக்கம் கலைந்தது. அவன் திடுக்கிட்டு விழித்தான். இரவு வந்திருந்தது. எங்கும் காரிருள். அவன் தனது மூன்று பசுக்களையும் காண முடியவில்லை. நரிகள் அவற்றை அஞ்சி ஒடச் செய்திருக்கலாம். அல்லது நரிகள் அவைகளைக் கடித்துக் குதறியிருக்குமோ? அவற்றின் காதுகளையும் மடுக்களையும் நரிகள் கடித்திருக்குமோ? பசுக்கள் செத்திருக்குமோ? நரிகளுக்கு அடிக்கடி வெறி. பிடிக்கும். நரிகளால் கடிக்கப்பட்ட நாய்களும் பைத்தியமாவது உண்டு-பசுக்களுக்கும் அப்படி நேரலாம். பைத்தியமான பசுவை யாராவது தொட்டால் அவனும் பைத்தியம் ஆவான் என்று சொல்வார்கள். அல்லது அவை காட்டுக்குள் ஒட புலி அவற்றை தின்றிருக்குமோ? ஊர்ப் பெரியவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது; நரிகள் அவனையும் தாக்குமா?

சுந்தர் பயந்தான்; எனினும் அமைதியாக இருந்தான். மெதுவாகப் பாறையின் மறுபக்கம் வழுக்கி இறங்கினான். கைகளாலும் பாதங்களாலும் தரையைத் தடவினான். மூன்று கற்களை அவன் கண்டெடுக்க முடிந்தது. அவற்றைத் தன் பைக்குள் வைத்து, பாறையின் உச்சிக்கு ஊர்ந்து ஏறினான். நரிகள் நின்ற திக்கில் பெரிய கல்லை வீசினான். கல் குறி தவறவில்லை. தடாலென்ற ஒசையையும், ஒரு நரி வேதனையால் ஊளை யிடுவதையும் அவன் கேட்டான். தொடர்ந்து மேலும் இரண்டு கற்களை நாணல் துப்பாக்கி மூலம் எறிந்தான். அவையும் குறிப்பாய்த் தாக்கின. நரிகள் ஒடின. தூரப் போய் ஊளையிட்டன.

சுந்தர் பாறையில் வழுக்கி இறங்கினான். ஐந்தாறு அடிகள் நடந்திருப்பான். அதற்குள் அவன் கால்கள் ஒரு மரத்தின் வேரில் சிக்கிக் கொண்டன. அவன் கைகளால் தடவி அடிமரத்தை உணர்ந்தான். முரட்டுக் கொடி ஒன்று மரத்தைச் சுற்றியிருப்பதைக் கண்டான். அவன் மரத்தின் கிளைமீது ஏறி வசதியாக அமர்ந்தான். திடீரென்று ஒரு சாகுருவி, “அவனைச் சுடு! அவனைச் சுடு!” என்று கத்தியது. இது. அவனை அதிகம் அச்சுறுத்தியது. உடனே தன்னைக் காப்பாற்ற கடவுள் இருக்கிறார் என்று தனக்குள் கூறிக் கொண்டான். பிறை நிலவு மெலிதாக ஒளி சிந்தியது. அவன் நன்றாகப் பார்க்கமுடிந்தது. அடிமரத்தில் சாய்ந்தபடி குரங்குபோல் தோன்றிய ஒரு உருவம் நிற்பதை அவன் கண்டான். அவன் கள்ளத்தனமாகக் கிளைகளில் ஊர்ந்து, குரங்கிற்கு நேர் மேலே வந்தான்; தன் பையிலிருந்த கற்களை அதன் தலையில் கொட்டினான். குரங்கு அலறியடித்து ஒடியது. இதர கிளைகளில் குந்தியிருந்த கூட்டாளிக் குரங்குகளும் கத்திக் கொண்டு கீழிறங்கின. அதுவே சுந்தர் தப்புவதற்கு ஏற்ற தருணம். அவன் மரத்தில் நழுவி இறங்கினான். கத்தியால் ஒரு நீண்ட குச்சி வெட்டி, அதை உபயோகித்து நாணல்களை விலக்கி வழிகண்டான். மீண்டும் பாறையை அடைந்து, அதன் மேலேறி, சற்று நேரம் படுத்துக் கிடந்தான். இதற்குள் பிறை நிலா மறைந்து விட்டது. வானத்தில் ஒருசில வெள்ளிகள் மின்னின.

சுந்தரின் நினைவெல்லாம் பசுக்களைப் பற்றியே இருந்தன. அப்பாவிப் பிராணிகள் இருட்டில் வழி தவறிப் போயிருக்கும். அவை உதவியற்றவை. அவற்றின் அச்சமும் வேதனையும் அவன் அனுபவிப்பதை விட அதிகமிருக்கும். அவன் குழலை ஊதினான். ஆனால் நரிகளின் ஊளை அதை அமுக்கிவிட்டது.

பசியும் தாகமும் அவனை வாட்டின. ஏதாவது பழத்தைப் பறிக்கலாம் தான். இருட்டில் அவனால் தெளிவாய்ப் பார்க்க முடியவில்லை.

பிறகு வெளிச்சம் தெரிந்தது. அது மனிதர்களா அல்லது பிசாசுகளா? சுந்தர் வியர்த்து விறுவிறுத்தான்.

வெளிச்சம் மங்கலாக இருந்தது. திடீர் ஒசை ஒன்று அமைதியைக் குலைத்தது. சுந்தர் ஊன்றிக் கவனித்தான். அது மரம் வெட்டும் ஒசை அல்ல.

தைரியம் முழுவதையும் சேர்த்து, சுந்தர் மீண்டும் பாறையிலிருந்து நழுவிக் கீழிறங்கினான். கைகளாலும் கால்களாலும் நகர்ந்து வெளிச்சத்தை நெருங்கினான்.

நாலைந்து பேர் ஒரு செத்த பிராணியைத் தோலுரித்துக் கொண்டிருந்தார்கள். அது அவனது புள்ளிவால் பசுவோ? பாவம்-அது கன்று போட்டு நான்கு மாதங்களே ஆயின. நடப்பதைக் கவனிக்க சுந்தர் ஒரு மரத்தின் பின் பதுங்கினான். அந்த ஆட்கள் ஒரு புட்டி நிறைய மின்மினிப் பூச்சிகளை அடைத்து அதை விளக்காக உபயோகித்தார்கள். வெட்டுண்ட மாட்டின் தலையை அவன் பார்த்தான். அது அவனது பிரியமான புள்ளி வால் பசு இல்லை, ஏதோ வயதான வெள்ளைக் காளை. அவன் நிம்மதியாக மூச்சு விட்டான். இது அவனுக்குத் துணிவும் அளித்தது. அவன் செய்ய வேண்டிய காரியம் அந்த மின்மினிப் புட்டியைத் திருடுவது தான். திருடர்கள் அதை சாக்கினால் மூடியிருந்தார்கள். தங்களுக்குத் தேவைப் பட்ட போது ஒரு பக்கத்தை மட்டும் திறந்து காட்டினார்கள். அவர்கள் தங்கள் கொடிய காரியத்தில் முனைந்திருக்கையில், சுந்தர் ஒசைப்படாது, சாக்கால் மூடிய புட்டியை எடுத்து மரத்தின் பின் மெல்லப் போனான்.

கும்பலில் ஒருவன், “இங்கே கொஞ்சம் வெளிச்சம்” என்று கத்துவதை அவன் கேட்டான்.

கல்லின் மேல் வைத்த புட்டியை எடுக்க மற்றொருவன் திரும்பினான். அது இல்லை. புட்டி எங்கே போயிருக்கும்?

“நான் அதை இங்கே தான் வைத்தேன். நிச்சயமாக”

“நன்றாகப் பார் அங்கே தானிருக்கும்.”

“நான் கல் மேலே தான் வைத்தேன். சந்தேகமில்லை.”

“யாரோ நம்மைப் பார்த்து விட்டார்கள். நாம் கையும் களவுமாய் அகப்பட்டுக் கொள்வோம். தப்பி ஒடுவதே நல்லது.”

மாட்டிறைச்சியில் கிடைக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு வேகமாகச் செல்ல அவர்கள் தீர்மானித்தார்கள். செத்த மாட்டை வேகம் வேக மாக வெட்டத் தொடங்கினார்கள். திடீரென இருட்டில் புல்லாங்குழல் ஒசை மிதந்தது. அதைக் கேட்டு அவர்கள் பயத்தால் உறைந்தனர். கத்திகளைக் கீழே போட்டுவிட்டு, மரத்தின் மீது ஏற அவர்கள் ஒடினார்கள்.

குழலோசை ஒரு நரியின் காதிலும் விழுந்தது. அது தன் தலையை உயர்த்தி ஊளையிட்டது. மற்ற நரிகளும் கூட்டமாய் குரல் எழுப்பின. இறைச்சியை அவை மோப்பம் பிடித்தன. செத்த மாட்டை நோக்கி வந்தன. அதைப் பாய்ந்து குதறின. மரத்தின் மேலேயிருந்த திருடர்கள், தாங்கள் கொன்ற காளையை நரிகள் தின்பதை வருத்தத்தோடும், செயலற்றும் கவனித்தார்கள்.

இதற்குள் சுந்தர் தன்னிலை அடைந்தான். அவன் கண்கள் இருட்டில் பார்க்கப் பழகிவிட்டன. அவன் தன் பசுக்களை கூப்பிட்டபடி, குழலை இசைத்தான்.

காட்டின் பறவைகளும் மிருகங்களும் கலவரம் அடைந்தன. பறவைகள் கிளுகிளுத்தன, கீச்சிட்டன. சிறு பிராணிகள் அவனை கடந்து போயின. மானின் கவலை நிறைந்த கீச்சொலி காற்றை நிறைத்தது. ஆனாலும் அவனுடைய பசுக்களின் தடயமே கானோம்.

பயம் அவன் கால்களுக்கு வேகம் சேர்த்தது. அவன் ஒடலானான். முட்களும் புதர்களும் அவனது கைகளிலும் கால்களிலும் குத்தின; பிறாண்டின; அவனைக் காயப்படுத்தின. திடுமென ஒரு மரத்தின் வேர் தடுக்கி அவன் தலைகுப்புற விழுந்தான். அதிர்ஷ்டவசமாக, மின்மினிப் புட்டி உடையவில்லை. அதன் மங்கிய ஒளியில் தன் முழங்காலின் கீழே ஆழமான வெட்டுப்பட்டிருப்பதையும், அதிலிருந்து நிறைய ரத்தம் வடிவதையும் அவன் கண்டான். ரத்தப் பெருக்கை நிறுத்துவதற்காக, காயத்துக்கு உயரே சாக்குக் கயிற்றைக் கட்டினான். நோவு அதிகம் இருந்தது. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை.

அவனது இரத்தத்தின் வாடை ஏதாவது கொடிய மிருகத்தை கவர்ந்து இழுக்கும் தான் உயிரோடு விழுங்கப்படலாம் என்ற நினைப்பு அவனுள் அச்சம் புகுத்தியது. அல்லது, எறும்புகள் மொய்த்து அவனை அரித்துத் தின்னும்! என்ன பயங்கரம்!

அவன் மூலிகை இலைகளைக் கொண்டு தன் காயங்களை சுத்தம் செய்தான். தன் பலம் கொண்ட மட்டும் கூவி, தனது பிரியமான புள்ளி வால் பசுவை அழைத்தான். ஆனால் அவன் அழைப்பு உண்மையில் ஒரு முனு முனுப்பாகத்தானிருந்தது. முற்றிலும் களைப்புற்று சுந்தர் இருந்த இடத்திலேயே தூங்கி விட்டான்.

*⁠*⁠*

நடந்தது வெகு சாதாரணமானது. பசுக்கள் வயிறாற மேய்ந்தன. அசை போட்டன. பிறகு, வீடு திரும்ப நேரமாயிற்று என்று சுந்தருக்குச் சொல்ல சத்தமிட்டன. அவை கத்திய போது சுந்தர் தூங்கினான். புள்ளி வால் அவன் காலை நக்கிய போது, அதை அவன் ஓங்கி மிதித்தான். பசுக்கள் சுந்தர் இல்லாமலே ஊர் திரும்பின. அவை தொழுவங்களில் கட்டப்பட்டன.

இருட்டிய பிறகும் சுந்தர் வீடு திரும்பாததனால், அவன் தந்தை அவனை தேடிப் போனார். பசுக்கள் வந்துவிட்டன என அறிந்ததும், சுந்தர் கோயிலுக்கு திருவிழா பார்க்கப் போயிருப்பான் என்று தீர்மானித்து, அவர் வீடு திரும்பினார்.

மறுநாள் காலை, புள்ளிவால் யாரையும் பால் கறக்க விடவில்லை. தன் அருகே எவர் வந்தாலும் அது முட்டி உதைத்தது. அதுக்கு சீக்கு என்று ஊரார் கருதினர். ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லினர்.

“அதைப் பாம்பு கடித்திருக்கும்.”

“அது காட்டில் நச்சுத் தழையைத் தின்றிருக்கும்.”

அதுக்கு வழக்கமாகக் கொடுக்கும் எள்ளுப் புண்ணாக்கும் தவிட்டுத் தண்ணிரும் தராது, வெறும் உப்பும் தண்ணிரும் வைக்கும்படி வீட்டு எஜமானி உத்தரவிட்டாள். அதைப் பால் கறக்க வேண்டாம்; அதன் கன்றும் பட்டினி கிடக்கட்டும் என்றும், இரண்டையும் தனித்தனியே கட்டும்படியும் சொன்னாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் உப்புப் போட்ட கழுநீருடன் தொழுவத்துக்குப் போனாள். புள்ளிவால் பசு அங்கே இல்லை.

எஜமானி கலவரமடைந்தாள். அனைவரையும் திட்டினாள். “பசுவை வெளியே விடவேண்டாம் என்று நான் சொன்னேனா இல்லையா? அந்தப் பையன் சுந்தர் ஏன் என் பேச்சை மீறி அதை அவிழ்த்தான்?”

முளையில் கட்டிய கயிறு அறுபட்டுக் கிடப்பதை அவர்கள் கண்டார்கள். பசுவையும் காணோம்; பசுவை மேய்க்கும் சுந்தரையும் கானோம். சுந்தரின் தந்தையும் புள்ளிவால் பசுவின் சொந்தக்காரியும் அவர்களைத் தேடி போனார்கள். இந்தத் தேடலில் மற்றவர்களும் சேர்ந்தார்கள்.

முந்தின இரவில் சுந்தரை தூங்க விட்டுச் சென்ற இடத்துக்கு புள்ளி வால் போயிற்று. அங்கே அவன் இல்லை. அது அவனைத் தீவிரமாகத் தேடத்தொடங்கியது. சுந்தர் பையைக் கண்டது. பை அழுக்காகிக் கிழிந்து காணப்பட்டது. மேலும் தேடி, பசு சுந்தரை கண்டு கொண்டது. அவன் உடல் முழுதும் காயம் பட்டிருந்தது. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். பசு உரக்கக் கத்தியது. அவனை உடல் முழுதும் நக்கிக் கொடுத்தது. சுந்தரின் காயங்களில் மெர்ய்த்த எறும்புகளையும் ஈக்களையும் நக்கித் தள்ளியது. விசித்திரம் தான்! பசுவின் மடு கனத்து, பால் சுரந்தது. அவன் மடுக்களை எட்டக் கூடிய விதத்தில் அவற்றை சுந்தரின் முகத்தின் அருகே வைத்தபடி பசு படுத்தது. அவன், ஒரு கன்றுக்குட்டி செய்வது போலவே, பகவின் மடுவைத் தன் வாயினால் கவ்வி, பால் குடிக்கலானான். மெதுவாக அவன் உடம்பில் தெம்பு புகுந்தது. அவன் தலையைப் பசுவின் தாடையில் பதித்து, அதன் உடலோடு ஒட்டி ஒய்வாகக் கிடந்தான். தேடி வந்த கிராமத்தினர் இந்த நிலையில் தான் சுந்தரையும் புள்ளிவால் பசுவையும் கண்டார்கள்.

– காரூர் நீலகண்ட பிள்ளை, மலையாளக் கதை.

– சிறந்த கதைகள் பதிமூன்று, 13 இந்திய மொழிகளிலிருந்து சிறந்த கதைத்தொகுப்பு, முதற் பதிப்பு: 1935, தமிழில்: வல்லிக்கண்ணன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *