சுடுகாட்டு கிரிக்கெட் பிட்ச்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 8,571 
 
 

சனிக்கிழமை ஆனாலே காலை உணவை முடித்த கையோடு நாங்கள் தேடுவது பந்தையும் கிரோ ஹோண்டா பேட்டையும் தான். கங்குலி எங்கள் காலத்தில் ஒரு மறக்க முடியாத ஜாம்பவான் அவர் பயன் படுத்திய அதே கிரோ ஹோண்டா மட்டையை உபயோகிப்பது எங்களுக்கு ஒரு போதயை தரும் எப்போதும். நாங்கள் விளையாடும் சுடுகாட்டு பிட்ச் எங்கள் தெருவில் இருந்து எப்படியும் ஒரு இரண்டு மையில் இருக்கும். இடைப்பட்ட பயனத்தில் ஒரு குளத்தையும் சுடுகாட்டையும் கடந்து தான் போக வேண்டும். சைக்கிளில் செல்வது வழக்கம். கையில் மட்டை, விக்கட்டுக்கான கம்பு இவைகளோடு ஒரு சைக்கிள் பேரணிக்கு செல்லும் அளவுக்கு கூட்டம் போகும்.அந்த குளத்தை கடக்கும் போது ஒரு பசுமை கழந்த வாசணை வரும். அது அவ்வளவாக மக்கள் புலக்கம் இல்லாத குளம். நிறம்ப தண்ணீர் இருந்தாலும் மீன் பிடிப்பதை தவிர வேறு எதற்காகவும் யாரும் பயன்படுத்தி நான் பார்த்தது இல்லை. தாமரை செடிகளும் பாசமும் மூடியே இருக்கும். அவைகளே அந்த பசுமை வாசணைக்கும் காரணம். அதை கடந்தால் சுடு காடு. பெரும்பாலும் புதைக்கும் பழக்கம் கொண்ட மக்கள் உபயோகிக்க கூடிய சுடுகாடு அது. குறுகிய இடம் என்பதால் ஒரு பிணத்தை புதைத்த அதே இடத்தில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தோன்டுவார்கள். எனவே எங்கு பார்த்தாலும் மண்டை ஓடுகளும் கை கால் எழும்புகளையும் பார்க்க முடியும். இவைகளை பார்த்து விட்டு தூக்கத்தில் உளறியவர்களும், பயந்து போய் வீட்டில் அடிவாங்கியவர்களும் அதிகம். இருந்தாலும் கிரிக்கெட் மோகம் எங்களை விட்டதில்லை….

அந்த சுடுகாட்டை கடக்கும் ஒவ்வொரு நேரமுமே திகிலாக இருக்கும். ஏலே செத்து போன பாட்டி வெரட்டி வருதுலே என்று முன்னாடி செல்பவன் சொன்னதுமே பின்னால் வருபவன் எல்லோருக்கும் வயிற்றில் அட்ரிலின் அருவியே ஓடும். அடிச்சு பிடிச்சு ஓடுவோம். அங்கு ஒரு ஓடை இருக்கும். பால் நிறத்தில் மழைகாலத்தில் மட்டும் தண்ணீர் ஓடும். சைக்கிளின் பெடல் வரை தண்ணீர் இருக்கும். முன்னாள் செல்பவனை பின்னால் வருபவன் நனைய வைக்க கல் எறிவான் ஓடை மீது. அவன் கரையை கடந்ததும் தனக்கு பின்னர் வரும் அனைவரையும், நனைய வைப்பது அவன் கடமை. இவ்வாறு கடந்து சென்றால் நான்கு புறமும் வேளிகருவையாளும் பனை மரங்களாளும் சூழ்ந்த மிகப்பெரிய பொட்டல் காடு இருக்கும். மழையில் நனைந்த பனை மரங்கள் சர்விஸ் போய் வந்த கார் டயர் போல அடர் கரு நிறத்தில் இருக்கும். தலையில் குளிர தேய்த்த தேங்காய் எண்ணெய் ஓடும், வாயில் அசை போடும் பூமர் பபில்காம் சூவிங்கதோடு காத்திருப்போம். விளையாட வேறு யாரும் வருவார்களா என்று.

எப்போதாவது தான் கிரிக்கெட் விளையாட சரியான எண்ணிக்கையில் நபர்கள் வந்து சேர்வார்கள் எங்கள் சுடுகாட்டு பிட்ச்க்கு. சிலர் வரும் வழியிலேயே அவனுடைய தம்பியோ தங்கையோவந்து”ஏலே அண்ணன் அம்மா ஒன்ன தேடுது வீட்டுக்கு வருவியாம்” என்று சொல்லி அவன் அன்றைய தினம் அடிக்க கற்பனை செய்து கொண்ட சேவாக் சாட்டுகளை கற்பனையாகவே மாற்றி விடுவார்கள். ஒவ்வொருத்தனையும் ஒன்னு சேர்க்க ஒருத்தன் கண்டிப்பா மெனக்கெட்ருப்பான் அவனுக்கு இது போன்ற நண்பர்களின் இழப்பு மிகவும் மன உளைச்சளை கொடுக்கும். முதலில் ஆசை காட்டி வரவைக்க பார்ப்பான், வழிக்கு வரவில்லை என்றால், போலே! என ஆரம்பித்து சென்சார் போடே வியக்கும் இன்னும் பல வார்த்தைகளை பரிசளித்து அனுப்பி வைப்பான். இன்னும் சிலர் தெரு நாய்களை வம்பிழுப்பது, நாய் போன்ற குணம் கொண்ட மனிதர்களை வம்பிழுப்பது என்று ஓடி ஓடி வரும் வழியிலேயே அலுத்துப்போவார்கள். இந்த அலுத்துப்போனவர்கள் தான் அன்றைய தினத்தின் ரவி சாஸ்திரிகள். வேலி கருவை நிலலில் ஒருக்களித்து படுத்துக்கொண்டு வலதுகையை மடக்கி தலையை தாங்கி கொண்டு இடது கையில் பனைமரத்தின் பாலையை கையில் மைக்காக வைத்துக்கொண்டு பேச ஆரம்பிப்பார்கள். அலோ அலோ டாஸ் போட்டாச்சா. இன்னும் டீமே எடுக்கல அதுக்குள்ள உங்கய்யாவா டாஸ் போடுதாறு மூடிக்கிட்டு இரேம்ல நீ தான் வெளயாடலைல. என்று பதில் வரும்..

வர்ணணையாளர்கள் தங்கள் இருக்கைகளை உறுதி செய்து கொண்டு தயாராக இருந்தார்கள். குளுமைகொண்ட அந்த பொட்டல் நிலத்து குளிர்காற்று கருவேலமரங்களை கிச்சலம் காட்டி குளுங்கி குளுங்கி சிறிக்க வைத்துக்கொண்டு இருந்தன. மயில்கள் தங்களுக்கான காலை உணவை முடித்துக்கொண்டு பனைமரங்களில் தஞ்சம் புகுந்திருந்தன. காக்கைகள் கூட்டம் கூடி அந்த வாரத்திற்கான வரவு செலவுகளை சரிபார்த்து கொண்டன. தூரத்தில் இருக்கும் குளத்தில் மீனுக்காக காத்திருக்கும் நாரைகள் எழுப்பும் கருத்து பரிமாற்றங்கள் நன்றாகவே கேட்டது. விக்கெட்டுக்கான மூன்று குச்சிகள் கரிசல் நிலத்தில் ஆழமாக பேட்டை கொண்டு அடித்து இறக்கபட்டிருந்தது. ஆறு குச்சிகள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பந்து வீசுபவர் பக்கம் எப்போதும் ஒரு கல்லை மட்டுமே விக்கெட்டாக வைப்போம். பின்னர் சில காலம் கழித்து எங்கள் ஊரிலேயே இரண்டு விக்கட்டுக்கான குச்சிகளும். விக்கெட் கீப்பருக்கான கை உறைகளையும் வாங்கியது எங்கள் தெரு அணி தான். அவற்றை ஊர் வழியாக எடுத்து வரும் போதே எல்லோருக்கும் ஒரு கர்வம் இருக்கும். விளையாட எல்லாம் தயாராக இருந்தது, இரண்டு அணி தலைவர்கள் முடிவு செய்யபட்டிருந்தார்கள். டாஸ் போட வேண்டியது தான் மிச்சம். உலகளாவிய போட்டிகளை போல் ஒரு டாஸ் போடும் முறை எங்கள் அணியில் இல்லை இரண்டு டாஸ் போடுவோம். வீரர்களை யார் முதலில் தேர்ந்தெடுக்க ஆரம்பிப்பது என்பதற்காக முதல் டாஸ் போடப்படும். கேப்டன்கள் தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் வீரர்களை தேர்வு செய்வார். சிலர் நன்றாக விளையாடுபவர்களை எடுப்பார்கள், தன் பேச்சை கேட்பவர்களை எடுப்பவர்கள் சிலர். தன்னோடு சேர்ந்து ரன்களை ஏற்றி சொல்ல உதவுபவர்களை எடுப்பவர்கள் சிலர். வீரர்கள் தேர்வு முடிந்ததும் யார் பேட்டிங் என்பதற்கு ஒரு டாஸ் போடுவார்கள். டாஸில் வென்றவர்கள் பவுலிங்கும் தேர்வு செய்யலாம் என்று எனக்கு பின் நாட்களில் தான் தெரியும்.

கோவில்பட்டியிலிருந்து வந்த பஸ் கீழக்குளத்தருகே வந்து கொண்டிருந்தது. “கழுகுமலை பிள்ளையார் கோயிலே” என்ற வெண்கல குறலோடு உசிலடித்தார் கன்டக்டர். கார்த்தி மதுரையில் இருந்து அப்போது தான் வந்திருந்தான்.

வழக்கம் போல நைனா கடையில் கூட்டம் அலைமோதியது. காரவடை அப்போது தான் போட்டிருக்க வேண்டும். அந்த மொரு மொரு வாசனை இழுத்தது அவனை. சூடா ஒரு டீயும் வடையும் சாப்டா எப்புடி இருக்கும் என்று எச்சி முழுங்கிகொண்டான். இல்ல வேண்டாம் அஞ்சி ரூபா தான் இருக்கு பந்து வாங்க காசு கேப்பானுக. குடுக்கலனா கொமச்சி கொன்றுவானுக. என்று அந்த அஞ்சி ரூபா காயினை இரண்டு பக்கமும் திருப்பி பார்த்து விட்டு ட்ரவுசர் பைக்குள் போட்டு கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தான்.

“என்ன பாட்டி உங்க பேரன எங்க கானும்?”

“அந்த பெய புல்ல சேக்காளிக கூட சேர்ந்துட்டு கிளித்தட்டு வெலாட சுடுகாட்டுக்கு போயிருக்கு, இங்கன வெலாடுனா மாட்டேனுட்டு ஒடிட்டான்.”

“போயிட்டானா நானும் போறேன்”

“சரி போனினா உங்க அப்பன் உன்ன அடிக்க கம்பெடுத்து வச்சிருக்கானு சொல்லு அவன்ட்ட”

சைக்கிள் வேகமெடுத்தது, எதிர் காத்தில் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டே போக முடிந்தது.

சுடுகாட்டு பிட்சை அடைந்து விட்டான். ஏலே நானும் வாரேன், பர்ஸ்ட் பேட்டிங் ஆ! செகன்ட் பேட்டிங் ஆ! என்று கத்திக்கொண்டே சைக்கிளை நிப்பாட்டினான். செகன்ட் பேட்டிங் நீ அடுத்த மேட்ச்வா, இப்ப உக்காரு ஓரமா என்று வம்பிழுத்தார்கள்.

அப்டியானுட்டு ஸ்டெம்ப் முன்னாடி போய் உக்காந்துக்கிட்டான். சரி எந்திரி பர்ஸ்ட் பேட்டிங் தான். ஆல்ரெடி இருந்த உப்புக்குசப்பானி டபுள் சைடு ப்ளையற யாரும் எடுக்க விரும்பல. கார்த்தி சுழி சேட்டை செஞ்சிட்டே இருந்தாலும் யுவராஜ் மாதிரி நல்ல ஆல் ரவுண்டர். பேட்டை ஹேண்டில் ஓரத்தில் தான் பிடிப்பான் கில்கிறிஸ்ட் மாதிரி. பந்தை அடிக்கும் போது அடிபட்ட சத்தத்தை மிகைபடுத்துமாரு வாயால் “ச்ச்ச்சூ” என்று சொல்லிக்கொண்டே அடிப்பான். பீல்டிங், கேட்ச் என்று எதிலும் சோடை சொல்ல முடியாது. என்ன ஒரு கெட்ட பழக்கம், டக் அவுட் ஆயிட்டா போதும் தண்ணி குடிக்க போறேனு கெளம்பிருவான். ஏலே தண்ணி குடிக்க போறது சரி செம்ப எறக்காம குடிச்சிட்டே இருக்காத வந்துரு என்பதுண்டு. பெரும்பாலும் வரமாட்டான்.

எனக்கு தான் கார்த்தி உனக்கு இவன வச்சிக்க என்று பேச்சு வார்த்தை முத்தியது. சரி டாஸ் போட்டு பாத்திரலாம் என்றான் ஒரு அறிவாளி. “சரி காயின் யாருட்ட இருக்கு”. யார் காதிலும் இது கேட்காதது போல நின்றார்கள். அதில் ஒரு வில்லங்கம் உண்டு டாஸ் போட்ட காயின் திரும்ப உரிமை காரன் பைக்கு போகாது.

இது புரியாமல் ஆர்வ கோளாரில் பையில் இருந்த 5 ரூபா காயினை குடுத்து விட்டு, கார வடை திங்காதது நல்லதா போச்சினு பெருமூச்சு விட்டுக்கொண்டான். பேட்டிங் சைடுக்கே டாஸில் வெற்றி. வழக்கம் போல காசு எங்க போச்சோ தெரியல. பேட்டிங் சைடு எடுத்துக்கொண்டார்கள் அவனை. புங்க மரத்து நிழலில் உக்காந்து கொண்டான்.

இரண்டு ஓவர் பாத்தான் எவனும் அவுட்டாகுற மாதிரி தெரியல. கருவ ஆரம்பிச்சான்.

குச்சியால் ஒரு கட்டம் வரைந்து அதில் “ஓம் க்லீம் க்லீம் அவுட்டாகு” என்று மந்திரத்தை முனுமுனுத்தவாரே மண்ணை அள்ளி போட்டான். பக்கத்தில் இருப்பவன் “ஏலே இவன் கட்டம் போட்டு கருவிட்டு இருக்கான். மிடில் ஸ்டிக் புடுங்க போகுது பாரு உனக்கு” என்றவாறு சிரித்தான்.

தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *