சிவப்பு விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 5,057 
 
 

நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள், கேள்விப்படாதவர்கள் என யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ? என 200 ஆண்டுகளாக வரலாறு இருக்கிறது.மும்பையை சுற்றி பார்க்க வந்த எங்களுக்கு,இந்த பகுதியையும் பார்த்து,ரசித்து விட்டு வந்துவிடலாம் என்று நண்பன் விக்கியின் நச்சரிப்பால் மாலை வேளையில் அங்கு செல்ல நினைத்தோம்.”காமத்திபுரம் எப்படி போகனும்” என்று சிலரிடம் கேட்டால்,நம்மை ஏற இறங்க பார்க்கவோ!,தவறாக நினைக்கவோ! அங்கு யாரும் இல்லை.எந்தவித தயக்கமின்றி வழி சொல்லுவார்கள். காரணம் உள்ளூர்வாசியோ,வெளியூர்வாசியோ,அங்கு செல்வது சகஜமான ஒன்றாகிவிட்டது.

புறநகர் பகுதியில் சாலையில் பாய்ந்து செல்லும் ஆட்டோவை நிறுத்தி, “காமத்திபுரம் கித்தனா ஜனா ஹே?” என்று இந்தியில் கேட்டான் சிவா.

எங்கள் மூவரில் அவனுக்கு மட்டும் தான் சரளமாக இந்தி பேச வரும்.

எங்கள் மூவரையும் ஏறெடுத்து பார்த்த ஆட்டோ டிரைவர், புன்னகையுடன்,”மீட்டர் டெக்ஹ்வ் ஆர் வாஹ் ராகம் டூ” என்றார்.

பின் சில விவரங்களை மெதுவாக அவரிடம் விசாரித்து கொண்டிருந்தான். அந்த இடத்திற்கு எப்படியோ போக வேண்டும் என்ற ஆர்வத்தில்,அவர்கள் பேசுவதையே வெறித்து பார்த்தபடியே விக்கி இருந்தான்.
மொழி தெரியாமல் முகத்தை திருப்பி,சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன்.

ஒருவழியாக அவர்கள் பேச்சு முடிவுக்கு வந்தது. விக்கியை பார்த்து தோளில் தட்டியபடி, “உனக்கு செமையான விருந்துதான்”என்றபடி எங்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற சொன்னான் சிவா. பின்பு அவனும் ஏறிக்கொண்டான். ஆட்டோ புறப்பட,பின் சீட்டில் இருந்தபடியே அவரிடம் மகிழ்ச்சியாக பேசி வந்தான். இடையே “என்ன பேசின ?” என்று நான் சிவாவிடம் கேட்டேன். “இதெல்லாம் சின்ன பசங்களுக்கு சொல்லகூடாதுடா” என்றான் சிவா. “அட சொல்லுடா” என்றேன். “காமாத்திபுரம் ஏரியாவில் ரொம்ப சீப்பான ஓல்டு மாடல் வேணாம்.புதுசா,இலசா இருக்க இடத்துக்கு போகனும்னு தான் கேட்டேன்.’வாங்க சார்.எனக்கு தெரிஞ்ச இடத்தில புதுசா இருக்கு.விலையும் ரொம்ப குறைவுதான்னு’ சொன்னான்.அதான் அங்கதான் போக போறோம்” என்றான்.

“அட்டா! ஜாலி” குதுகலமாக வந்தான் விக்கி.

“ஏன்டா! இப்படி அலையுறீங்க!, இதெல்லாம் தப்பு. பேசாமல் திரும்பி போறது தான் நல்லதுன்னு தோணுது” என்றேன்.

இருவரும் என்னை திரும்பி ஏறெடுத்து பார்த்து,

“இதெல்லாம் நீ ஆட்டோவுல ஏறி உட்கார்ந்து வரதுக்கு முன்னாடி பேசனும்.இப்போ,சொல்லகூடாது” என்று நக்கலாக சிவா கேட்டான்.

“இந்த வயசுல பண்ணாம வேற என்னடா பண்ணப் போறோம்” என்றான் விக்கி.

“உனக்கு ஆசை இல்லாத மாதிரியே இருக்காதடா!” என்று கிண்டலடித்து இருவரும் சிரித்தார்கள்.

“சரி உங்களுக்காக வரேன்” என்றபடி சமாளித்தேன்.

“த்தோ..டா….” என்று கலாய்த்து சிரித்தபடியே பயணித்தோம்.

ஒருவழியாக ஆட்டோ டிரைவர் சொன்ன இடம் வந்தது. ஆனால் வந்து சேர்வதற்குள் இருட்டியது. நேரம் மணி ஒன்பதை நெருங்கியது. அந்த இடம் குடியிருப்பு பகுதி போல இருந்தது.பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருந்தது.குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடந்து கொண்டிருந்தது. இப்படி இருக்க அருகில் எப்படி குடும்பங்கள் வசிக்கிறார்கள் என்ற ஆச்சரியம் இருந்தது.என்னவோ! எனக்கு மனம் ஒப்பாமல் இருந்தது. “டேய்! ஏற்கனவே இருட்டிருச்சு.சட்டுபுட்டுன்னு முடிச்சிட்டு ஒரு மணி, இரண்டு மணிக்கு கிளம்பி விடலாம்.இதில் எந்த வீட்டில் ஐட்டம் இருக்கு” என்று சத்தமாக கேட்டான் விக்கி.

“மூன்று பேரும், வேறவேற பக்கமாக போகலாம்” என்றேன்.

“உஸ்ஸ்ஸ்……” அமைதியா இருக்க சொல்லி ஆட்டோ டிரைவர் சைகை செய்து,சிவாவிடம் பேசினான். என்னையும்,விக்கியையும் இங்கே நில்லுங்கள் என சொல்லிவிட்டு சிவா,ஆட்டோ டிரைவருடன் சென்று அங்கே ஒரு பெண்ணை சந்தித்தார்கள். அவள் பெண் என்று சொல்லக்கூடாது.அவள் வீட்டு முகப்பின் சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது அவளின் முகம் தெளிவாக இல்லை. அவளுக்கு சராசரியாக ஒரு 35 வயதுக்கு மேல் இருக்கும்.பின் அவளிடம் சிவா,எங்கள் இருவரையும் காட்டி பேசி கொண்டிருந்தான். அவள் சற்று முன் வந்து எங்களை பார்த்து சிரித்தாள்.சில அடி தூரத்தில் இருந்து,இப்போது அவளின் முகம் தெரிந்தது. அவள் தான் அந்தக் கூட்டத்தின் தலைவி.அவளிடம் பேசிவிட்டு ஆட்டோ டிரைவருக்கும் பணம் கொடுத்துவிட்டு,எங்களை கையசைத்து அழைத்தான் சிவா.

அளவுக்கதிகமான ஆசை என்னை முந்திக் கொண்டு விக்கி முன்னே சென்றான்.

சிவா அருகில் சென்றவுடன்,”என்டா விலை பேசிட்டீயா ?” என்றான்.

“ம்…” என்றபடி எங்கள் இருவரையும் பார்த்து,”டேய்,நான் சொல்லுறத கேளுங்க.இவங்க இப்பதான் இந்த தொழில் பண்ண ஆரம்பிச்சிருக்காங்கலாம். போலீஸ் யாருக்கும் தெரியாதாம். ஏன்னா,மாமூல் கொடுக்கிற அளவுக்கு இவங்க வியாபாரம் இன்னும் வளர்ச்சி அடையலையாம். இப்பதானே! இந்த வியாபாரத்துக்கு உள்ள வந்து இருக்காங்க” என்றான்.

“ச்….ச்….” என உச்சு கொட்டியபடி விக்கி கேட்டான்.

“கொஞ்சம் வளர்ச்சி அடைந்தது அப்புறம்தானே, அவங்களுக்குன்னு தனி போன்,ஆபீஸ், லாட்ஜ் எல்லாமே பண்ணனுமாம். அதனாலதான் ஒரு குடும்பம் இருக்கும் ஏரியாவுல ரகசியமா இந்த தொழில் பண்றாங்க. அங்க தெரியுது பாரு 8ம் நம்பர் வீடு. அந்த இடத்தில் தான் பொண்ணுங்க இருக்காங்களாம். அங்க போய் நம்ம பார்த்து யார் வேணுமோ! தேர்ந்தெடுத்து,அந்த ஒரு பொண்ணை மட்டும் கூட்டிக்கிட்டு அதோ தெரியுது பார் 3வது வீடு அங்க போயி சந்தோஷமா இருப்போம்.காலையில் 5 மணிக்குள்ள கிளம்பிடனும். இதெல்லாம் பேசிவிட்டேன் பணமும் பேசி கொடுத்துட்டேன். அதனால அமைதியாக போறோம். உனக்கு பிடிச்ச பொண்ணை செலக்ட் பண்ணி வீட்டுக்குள்ள போயிடுவோம்” என்றான் சிவா.

“சரிடா” என்று துள்ளியபடி விக்கி சென்றான்.சற்றுநேரம் இவர்கள் செய்வதை கவனித்தபடி, நானும் தலையசைத்துவிட்டு அவர்களோடு சென்றேன். அந்த தெருவே அமைதியாக இருந்தது.ஆள் நடமாட்டமும் இல்லை. அங்கு பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் உள்ளே சென்றோம். சிவப்பு விளக்கு என்பது இவர்களின் குறியீடு அதனால்தான் அந்த மூன்று வீட்டில் வாசல் முகத்தில் சிவப்பு விளக்கு தொங்க விடப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.வீட்டிற்குள் வந்ததும் கதவு தாழ்பாள் போட்டு, “மேனா கிரஹக் ஆ கயா ஹை. உன் சபி கோ ஆனே கே லியே கஹோ” என்றாள் முதலாளி ரீணா. ஏழு பெண்கள் வெளியே வந்தார்கள்.அனைவரும் இளம் வயது பெண்கள் தாவணியோடும்,சுடிதாரோடும், சேலை கட்டிய பெண்ணும் ஒரு 18 முதல் 23 வயதுக்குள் ஆன ஒரு ஏழு பெண்கள் வந்து நின்றார்கள். விக்கிக்கு ஏக சந்தோஷம்.”நான் தான் செலக்ட் பண்ணுவேன். நான் தான் செலக்ட் பண்ணுவேன்” என்று ஒவ்வொருவரையாக பார்த்து, தொடுவதற்கு சென்றான்.
செல்லும் போதும், “சுனென் அவுர் ஸ்பர்ஷ் கரேன்” என்று ரீணா சொன்னாள். “டேய்,முதல்ல கண்ட்ரோல் பண்ணுடா” என்றான் சிவா. புன்னகையோடு,”சரி” என்றபடி ஒரு பெண்ணை தேர்வு செய்தான். அந்த பெண்ணிடம்,”உன் பேர் என்ன ?” என்றான்.

“டேய் அவ ஹிந்தி கார பொண்ணா இருக்க போகிறா! அவர்கிட்ட போய் பேர கேட்க்குற” என்றான் சிவா சிரித்தபடி.

“சரிடா நீ தான் முதல்ல கூட்டிட்டு போ” என்றேன்.

“ம்…” என்று அவளை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு சென்றோம். மற்ற பெண்கள் அறைக்குள் செல்ல கதவு தாழிடப்பட்டது.

3 வது எண் வீட்டில் ரீணாவோடு ஹாலில் நாங்கள் இருவரும் வெளியில் காத்திருக்க, விக்கி அந்த பொண்ணோடு அறைக்கு சென்று கதவை அடைத்தான்.

ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தான்.”என்னடா! ஜாலியா” என்றான் சிவா.

சட்டென திரும்பி ரிணா வை பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் எங்களை பார்த்து,” சூப்பர்” என்றான்.

பின் சிவா உள்ளே சென்றான்.என் அருகில் அமர்ந்த விக்கி,அமைதியாக அருகிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.அங்கே தூரமாக டீக்கடை இருப்பதை கவனித்தான்.பின் மீண்டும் இயல்பான நிலையில் இருந்தான்.என்னவோ,சிந்தித்து கொண்டிருந்தான்.”எதையும் காணாத கண்டதை பார்த்த அதிர்ச்சியா ?,ஏன் இப்படி இருக்க ?”என்றேன்.

மெல்ல வந்து,”இப்ப சிவா போயிருக்கான்.அடுத்து நீ போவ!,அப்ப உனக்கு புரியும்” என்றான் விக்கி.நாங்கள் பேசுவதை கவனிக்காமல்,சட்டென்று ரீணா எழுந்து வெளியே போனாள்.அங்கு தன் ஆள் ஒருவனை அழைத்து,”கிடநீ ரிஃடியான்? கிஸ் கார் மெய்ன் க்ராஹாக் ஹேன்?” என பேசிக் கொண்டிருந்தாள்.அவள் வருவதற்குள் ஏதோ சொல்ல வந்து,அவள் வருவதை பார்த்து சட்டென்று பேச்சை நிறுத்தினான் விக்கி.நான்,”என்னடா” என்றேன்.ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.மீண்டும் வந்த ரீணா,எங்களை பார்த்து லேசாக புன்முறுவல் செய்து விட்டு,பக்கத்து அறைக்குள் சென்றாள்.வெளியே,சற்று தொலைவில் என இவளின் ஆட்கள் இருப்பதை விக்கி கவனித்தான்.எதிர் அடுக்குமாடியில் பல வீடுகளின் முகப்பில் சிவப்பு விளக்கு எறிவதை கவனித்து கொண்டிருந்தான்.சட்டென்று,அவன் செல்போனை எடுத்து ஏதோ குறுஞ்செய்தி எனக்கு அனுப்பினான்.என் செல்போனை எடுத்து,குறுஞ்செய்தியை படிக்க சொன்னான்.சட்டென்று கதவை திறந்து,சிவா வந்தான்.ரீணாவும் எழுந்து வந்தாள்.விக்கி பதட்டமாக சிவாவிடம் ஏதோ கேட்க வந்தான்.ரீணா வருவதையும்,விக்கியின் பதட்டமான முகத்தையும் கவனித்த சிவா,’கொள்’ என விக்கியை பார்த்து நக்கலாக சிரித்தான்.ரீணா,”என்னாச்சு” என்று சிவாவிடம் ஹிந்தியில் விசாரித்தாள்.

“இவன் புதுசு,அந்த பொண்ணை வெறும் உடம்பில் பார்த்து பயந்துட்டான்.முதல் தடவை அதனால பதட்டத்தில் முகமெல்லாம் வேர்க்க எதுவும் செய்யாம வெளிய வந்து இப்படி இருக்கான்.அதை அந்த பொண்ணு சொன்னாள்.அதான் இவனை பார்க்கவும் சிரிச்சேன்” என்று ரீணாவிடம் ஹிந்தியில் சொல்லி,விக்கி கன்னத்தை லேசாக தட்டினான்.

இவர்கள் ஹிந்தியில் பேசுவது புரியாமல் நானும்,சிவாவும் அவர்களை பார்த்தவாறு முழித்து கொண்டிருந்தோம்.

ரீணாவோ,விக்கியை பார்த்து சிரித்தவாறு,சிவாவிடம் ஏதோ பேச,

பின் சிவாவும் சிரித்தவாறு அவளிடம் ஏதோதோ பேச, நான் விக்கியை பார்த்து,”என்னடா,நடக்குதிங்க ?” என்றேன்.”இப்ப போவில்ல,அப்ப புரியும் உனக்கு” என்றான்.

“இவன் எதுக்கு இப்படி பயங்கர பில்டப் குடுக்குறான்.அப்படி என்ன அந்த பொண்ணுட்ட,இவன் பார்த்துட்டான்” என்று நினைத்து,சிவா பேசிக் கொண்டிருக்க,இடையில் நிறுத்தி,”நான் போகட்டா?” என்றேன்.நான் பேசியது புரிந்தது போல ரீணா சிரித்தாள்.”நீ போ,நான் விக்கியோட வெளிய போய் டீ குடிச்சிட்டு வரோம்.நீ முடிச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டு சிவா,விக்கியோடு வெளியே சென்றான். ரீணா அவளது அறைக்குள் சென்றாள்.நானும் அறைக்குள் சென்று கதவை தாளிட்டு,அந்த பெண்ணை பார்த்தேன்.அவளது முகம் வாட வில்லை.உடை கசங்கி இருக்கவில்லை.எப்படி அழைத்து வந்தமோ! அப்படியே இருந்தாள்.படுக்கையறை எதுவும் கலைந்து இல்லை.குழப்பத்தில் நின்று கொண்டிருந்த போது,சட்டென்று என் அருகில் வந்து,என் காலில் விழுந்து,”அண்ணா,என்னை காப்பாத்துங்க” என்று அழுதாள்.அவள் தமிழ் பேசும் பெண் என அறிந்தும் சற்று அதிர்ச்சியானேன்.அவளை தொட மனமில்லாமல் சற்று குனிந்து,”எழுந்திரும்மா” என்றேன்.

மெல்ல எழுந்தாள்.

“உன் பெயர் என்னம்மா ?”

“ஆரோக்கிய மேரிண்ணா” என்று கண்ணீரை துடைத்தவாறே கூறினாள்.

“அழுகாத,ஏன் இந்த மாதிரி தொழிலுக்கு வந்திருக்க ?” என்றேன்.

“அண்ணா,நான் அந்த மாதிரி பொண்ணு இல்லண்ணா,இவங்ககிட்ட மாட்டிகிட்டேண்ணா” என்றாள்.

“என்னாச்சு ?,நீ எந்த ஊரு ?,இவங்ககிட்ட எப்படி மாட்டின ?” என்றேன்.

“அண்ணா,எந்த சொந்த ஊர் ஈரோடு.எனக்கு அப்பா இல்லை.அம்மா,அக்கா மட்டும் தான்.அக்காவுக்கு கல்யாணம் ஆகாவும்,சென்னைக்கு குடி வந்தாங்க.கூடவே என்னையும் கூட்டிட்டு வந்துட்டாங்க.அங்க எப்பவும் அக்கா திட்டிட்டே இருப்பாங்க.நரக வேதனையா இருந்தது. அதனால் தான் அக்காகிட்ட சொல்லாமலே,வீட்டை விட்டு கிளம்பி,ஈரோட்டுக்கு வந்து அம்மா கூட இருக்கலாம்னு முடிவு பண்ணினேன்.பஸ் ஸடாண்ட் வந்துட்டேன்.ஆனால் பஸ்ஸில் போக காசு இல்லை.அப்போ,என்னோட கால் கொலுசை வித்து,அந்த பணத்தில் ஊருக்கு போக முடிவு பண்ணினேன்.அடகு கடைக்கு போனப்ப,”இது திருட்டு கொலுசான்னு” கத்தவும் ஓடி வந்துட்டேன்.அப்பதான் இம்ரான்னு ஒரு ஆட்டோ டிரைவர் வந்தார்.அவரா வந்து என்கிட்ட பேசி,எனக்கு “உதவி செய்றதா” சொன்னார். நானும் அப்போ இருந்த நிலைமைக்கு நம்பிட்டேன்.ஆட்டோவில் கூட்டிட்டு போறப்ப,”எனக்கு யாருமில்ல,”நீ என்னைய கல்யாணம் பண்ணிக்குறீயான்னு ?” கேட்டார்.யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன்.அவன் “தெரிஞ்ச அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு” சொல்லி,என்னைய ஒரு வீட்டில் விட்டு தங்க வச்சான்.அங்க இருந்த அக்காவும் என்கிட்ட நல்லா பேசுனாங்க.இரவு பொழுதில் என் அறைக்கு ஒருத்தரை கூட்டிட்டு வந்து,”இவர் கூட படுன்னு” சொல்லி கட்டாயபடுத்துனாங்க.அப்பதான் புரிஞ்சது,அவன் என்னைய பேசி,ஏமாத்தி இவங்ககிட்ட மூவாயிரம் ரூபாய்க்கு வித்துட்டு போயிருக்கான்னு,அப்போ,என்னைய அடிச்சு,விபச்சாரத்தில ஈடுபடுத்துனாங்க” என்று சொல்லிபடி அழுதாள்.

லேசான கலக்கத்தோடு,ஒருபுறம் நின்றேன்.

“அப்பறம்,மறுநாள்,எனக்கு ஊசி போட்டு வேற ஒருத்தரை அனுப்பினாள்.வேதனை தாங்காம இருந்தேன்.எதுவும் சாப்பிடாம உயிரை விட இருந்தேன்.உடல் முடியாம மயக்கம் போட்டேன்.ஆஸ்பிட்டல் எடுத்துட்டு போவாங்கன்னு நினைச்சேன்.கண் முழுச்சு பார்த்தப்பதான் நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சது” என்றாள்.

“அக்கா திட்டுனாங்கன்னு,இப்படியா! யாருன்னே,தெரியாதவனை நம்புறது” என்று திட்டினேன்.

“தப்புதான்.என்னைய எப்படியாவது காப்பாத்துங்கண்ணா!” என்றாள்.

“சரி,விக்கி,சிவாகிட்ட சொன்னீயா?” என்றேன்.

“ம்….” என்றாள்.

“ஓ….அதான் விக்கி,பதட்டமாவே,தெருவை பார்க்க,ரீணாவை பார்க்கன்னு,என்கிட்ட கூட ஏதோ! சொல்ல நினைச்சானோ!” என சிந்தித்தபடி,செல்போனை எடுத்து அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தேன்.அதில்,”மேரியை காப்பாத்தனும்.இவங்களுக்கு தெரியாம கூட்டிட்டு போகனும்” என்று அனுப்பியிருந்தான். சில நொடி யோசனைக்கு பின்,”விக்கி,சிவா என்ன சொன்னாங்க ?” என்றேன்.

“விக்கி அண்ணாகிட்ட சொன்னப்ப.அவர் முதலில்,”போலீஸ்கிட்ட சொல்லுறதா!”சொன்னார்.நான் தான் வேண்டாம்ண்ணா,இங்கயும் போலீஸ் வந்து போவாங்கன்னு சொன்னேன்.நீங்க போயிட்டீங்கன்னாலும்,வேற யாராவது வந்தாலும் உள்ள அனுப்பிருவாங்கன்னும் சொன்னேன்.அப்பறம் அவர் யோசிட்டு,எனக்கு அடுத்து வர என் நண்பர்கள் கிட்டையும் இத சொல்லு,கடைசியா போகும் போது,காரில் உன்னைய கூட்டிட்டு போறோம்னு சொன்னார்.அடுத்து வந்த சிவா அண்ணாகிட்டயும் சொன்னேன்.இந்த ஏரியாவுல அவங்க ஆட்கள் அங்கங்க இருக்காங்கன்னும் சொன்னேன்.அப்பறம் அவர் யோசிச்சு,விக்கியும்,நானும் போய் கார் கூட்டிட்டு வரேன்.கடைசியா நீங்க வருவீங்க,உங்க கூட சேர்ந்து வர சொன்னார்” என்றாள்.
அப்போது எனக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் “கார் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம்.மேரியும்,நீயும் தயாரா இரு” என்று அனுப்பியிருந்தான் விக்கி.
நான் “சரி.நாங்க தயார்” என பதில் அனுப்பினேன்.அப்போது வெளியே ரீணா அறை கதவை தட்டினாள்.

நாங்கள் இருவருமே பதட்டமானோம்.ஹிந்தியில் ஏதோ சொல்லி வெளியிலிருந்து கத்தினாள்.பதறி மெல்ல கதவை திறந்தேன்.சட்டென்று கதவை தள்ளினாள்.தவறி விழுந்தேன்.அவளோடு இரண்டு ஆட்களும் உடன் வந்தவர்கள் என்னை அடித்தார்கள். ஹிந்தியில் திட்டியபடி,மேரியை கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள் ரீணா.அவர்கள் என்னை எழுப்பி,இருவரும் அடித்து சுவரோரமாக தள்ளிய போது அங்கு ஒரு சிறு துவாரம் இருப்பதை கவனித்தேன்.அதிலிருந்து பக்கத்து அறையை பார்க்கலாம்.அப்போது எனக்கு புரிந்தது. எங்கள் மீது சந்தேகம் வர போய் பக்கத்து அறையிலிருந்து ரீணா,நாங்கள் பேசியதை கவனித்திருக்கலாம் என்று தோன்றியது.எது எப்படியோ, இவர்களிடமிருந்து தப்பிக்க வழி பார்த்த போது,சற்று வேகமாக வந்தவனை பிடித்து தள்ளி,அவன் பின் வந்தவனோடு மோதி அப்படியே எதிர் சுவர் கண்ணாடி மீது மோதி விழுந்தார்கள்.கடைசியில் மோதியவன் முதுகில் சிறு உடைந்த கண்ணாடி தகடு பட்டிருக்க,அவன் வலியில் கத்தினான்.பின் ரீணாவை தள்ளிவிட்டு,இருவரும் வெளியே ஓடி வர, அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே காரோடு வந்து நின்றார்கள் நண்பர்கள்.வேகமாக மேரியும்,நானும் காரில் ஏறி விரைந்தோம்.வெளியே வந்த ரீணா, ஏதோ சொல்லி கத்த,காரின் குறுக்கே,வேறு சிலர் ஓடி பிடிக்க வர,கார் நிற்காமல் விரைந்த்து. பின் அவர்கள் காரில் தூரத்தி வருவது தெரிந்தது.

“வேகமாக போக சொல்லி”ஹிந்தியில் சிவா ஓட்டுனரிடம் கத்தினான்.

குறுக்கலான சாலையிலிருந்து,நெடுஞ்சாலை வந்து, கார் விரைந்தது.அதிகாலை 4.30 மணி என்பதால்,அப்போது ஜனக்கூட்டமும் இல்லை.பின்னாடி அவர்கள் தூரத்திய வேகத்தை பார்த்த போது,எங்களுக்கு திகிலை ஏற்படுத்தியது.கார் ஓட்டுனர் பதட்டத்தில்,” நான் நிறுத்துறேன்.நீங்க இறங்கி போங்க” என்று ஹிந்தியில் கத்தினான்.

“நிற்காத போ” என ஹிந்தியில் சிவாவும் அவனிடம் பேசினான்.

பின் வந்தவர்கள் எங்கள் கார் முன்,அவர்கள் காரை நிறுத்த,சட்டென்று பிரேக் போட்டு கார் ஓட்டுனரும் நிறுத்தினான்.

ரீணாவோடு,நிறைய பேர் வந்து,கார் கதவை திறந்து,எங்களை தாக்கி,மேரியை இழுத்தார்கள்.நடு சாலையில் அரங்கேறியது இந்த சம்பவம்.காப்பாற்ற யாரும் இல்லாமல் கடுமையாக தாக்கபட்டோம்.அப்போது தான் ரோந்து போலீஸ் வாகனம் வந்தது, போலீஸார்கள் சிலர் வந்து தடுத்து நிறுத்தினார்கள்.

“சார் காப்பாத்துங்க,எங்க பிள்ளையை பணத்துக்கும்,நகைக்கும் ஆசைபட்டு,ஏமாத்தி கூட்டிட்டு போறானுங்க” என்று போலீஸாரிடம் ஹிந்தியில் பேசி ரீணா அழுதாள்.

“டேய்,நாம மேரிய கடத்திட்டு வந்துட்டோம்னு,போலீஸ்கிட்ட சொல்லுறாடா!” என சிவா எங்களிடம் கத்தினான்.

மேரி,போலீஸை பார்த்து கும்பிட்டு,”அவங்க பொய் சொல்லுறாங்க.என்னைய கடத்தி வச்சு,விபசார தொழில் பண்ணுறாங்க.காப்பாத்துங்க சார்” என கதறினாள்.

“ஆமா,சார்.இந்த பொண்ணை கடத்தி வச்சு,விபசாரம் பண்ணுறாங்க.இவளை காப்பாத்தி நாங்க கூட்டிட்டு வரோம். நாங்க படிச்சவங்க,ஐடி கம்பெனியில் வேலை பார்க்குறோம்.இங்க பாருங்க என் அடையாள அட்டை” என்று ஹிந்தியில் பேசியபடியே கம்பெனி அடையாள அட்டையை காட்டினான் சிவா.அவன் என்ன பேசினான் என்பதை அவனது செய்கை வழியில் உணர்ந்து நாங்களும் சட்டை பையிலிருந்த கம்பெனி அடையாள அட்டையை காட்டினோம்.

எங்கள் அடையாள அட்டையை பார்த்து கொண்டிருந்த போலீஸிடம்,”சார் இவங்கள நம்பாதீங்க.எல்லாம் உடம்புக்கு அலையுற பயலுங்க.என் பொண்ணை எனக்கு கொடுங்க” என ரீணா கதறினாள்

அப்போது ‘பளார்’ என அறை சத்தம்,சப்த நாடிகளும் ஒடுங்கும்படி ரீணாவுக்கு விழுந்தது.

“கப்.. சுப்…” என்று போலீஸ்காரர் ரீணாவை அதட்டி,எங்களையும்,மற்றவர்களையும் பிடித்து போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு போனார்கள்.

“அய்யோ! நம்மள கைது பண்ணி கூட்டிட்டு போறாங்க.பத்திரிகைகாரர்களை வர சொல்லி,போட்டோ போட்டு,செய்தியாய் வந்து,நாம அசிங்கபட போறோம்” என்று விக்கி அழுதான்.

“அதுதான் நடக்க போகுது” என்று நினைத்து நானும்,சிவாவும் கண் கலங்கினோம்.வேனில் போகும் போது,” சார்,நாங்க சொல்லுறத நம்புங்க” என்று சிவா ஹிந்தியில் அழுதவாறு கூற,உள்ளிருந்த போலீஸ்,அடிப்பது போல் வந்து நிறுத்தி,”அமைதியா வரனும்” என்று எச்சரித்தார்.

காலை 5.30 ஆனது.காவல் நிலையம் வந்தது.வேனிலிருந்து இறங்கி,உள்ளே சென்றோம்.

“சார்,நாங்க பெரிய குடும்பம் சார்.எங்களை ஏன் இப்படி அசிங்கபடுத்துறீங்க” என்று ரீணா ஹிந்தியில் ஏதேதோ பேசினாள்.

உள்ளே,பெண் போலீஸ்களும் பணியில் இருந்தார்கள்.

மேஜையில் முன் சற்று நின்று,ரீணாவை உற்று பார்த்த போலீஸ்,கண் மூலம் பெண் போலீஸை சமிக்ஞை செய்ய,அவர் லத்தி எடுத்து வந்து,ரீணாவை அடித்தார்.மற்ற ஆட்களை லாகப்பில் தள்ளி அடிக்க உத்தரவிட்டு,எங்கள் பக்கம் வந்து,”உங்களுக்கு எப்படிடா இந்த பொண்ணை தெரியும் ?” என்று தமிழில் கேட்டார்.

அவர் தமிழில் பேசியது.எங்களுக்கு மனதில் தைரியம் வர,நாங்கள் நடந்ததை விவரித்தோம்.

மேரியையும் விசாரித்து,சென்னை போலீஸ்க்கு தகவல் கொடுத்தார்.அப்போது சென்னை காவல்துறையினர், ‘மேரி காணாமல் போனது பற்றியும்,மேரி குடும்பத்தினர் கொடுத்த புகாரையும்’ கூறினார்கள். அவர்கள் ரீணாவை அடித்து விசாரித்து,பல பெண்கள் கடத்தி கொண்டு வரப்பட்டிருப்பது தெரிந்து கொண்டு,அவர்களை மீட்க ஒரு தனிப்படை விரைந்தனர்.

அன்று மாலை வரை போலீஸ் காவலில் அங்கேயே மேஜையில் அமர்ந்திருந்தோம்.அடியாட்கள் எங்களை அடித்த அடி,உடம்பில் ஆங்காங்கே வீங்கிய வண்ணம் இருந்தது.காயங்கள் வலித்தது
“நாம,அங்க போனது தப்புதானே!” என்றான் விக்கி.

“ம்….ஆனா! அதுவும் நன்மைக்கே!” என்றேன்.

அப்போது,எங்கள் அருகில் வந்த அதிகாரி,”ஏதோ,இளம் வயது பசங்கன்னு,உங்க பெயரெல்லாம் செய்தி,பத்திரிகையில் வராம பண்ணிட்டேன்.அப்பறம் மேரி சொல்லுச்சு,”உங்க விரல் கூட அவ மேல படலைன்னு”, இனிமேல் இந்த மாதிரி இடத்துக்கு போகாதீங்க” என்றார்.

“ஆமா,உங்க அரசாங்கம் நடத்த மட்டும் அனுமதி தருமோ” என்று முனங்கினான் விக்கி.

“ச்சூ…” என்று விக்கியை லேசாக தட்டிவிட்டு,அதிகாரியை பார்த்து,”சரி” என்றான்.

“உங்க முகவரி,வேலை பார்க்கும் இடத்தோட முகவரி எல்லாத்தையும் எழுதி கொடுங்க” என்றார்.

அவரிடம்,”சார்,மேரி…..” என்று இழுத்தேன்.

“பெண் போலீஸ் பாதுகாப்பில் இருக்காள்.வழக்கு பதிவு பண்ணியாச்சு.நீதிமன்றத்துக்கு கூட்டிட்டு போகனும்.சென்னையில முதன்முதலா இவளை,விபச்சாரத்தில் ஈடுபடுத்தினவங்களையும் சென்னை போலீஸ் கைது பண்ணிட்டாங்க.விசாரணை முடிஞ்சதும்,மேரியை விட்டுவிடுவோம்.அவளோட குடும்பத்துக்கும் தகவல் சொல்லியாச்சு.நாளை அவ குடும்பம் இங்க வராங்க. என்றார்.

“சரி” என்றவாறு மூவரும் சொல்லிவிட்டு, காவல் நிலையத்தை விட்டு மெல்ல வெளியே வந்தோம்.சற்று தூரம் சாலை வழியாக நடந்து,ஒரு பேருந்து நிறுத்தம் இடத்தில் அமர்ந்தோம்.அங்கே,ஒருவன் அருகில் வந்து மெல்லிய குரலில்,”ஐட்டம் வேணுமா”என்று ஹிந்தியில் கேட்டான்.அவனை வெறுப்போடு சிவா பார்க்க,மெல்ல நகர்ந்து வேறு ஒருவரிடம் சென்றான்.பக்கத்து பிரிவு பகுதியில் சிவப்பு விளக்கு எரிய வாகனங்கள் நின்றன.இருள் சூழும் நேரம் என்பதால்,அந்த பகுதியில் ஆங்காங்கே சிவப்பு விளக்கு பிரகாசமாக தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *