சில பெண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 5,000 
 

அது சென்னையின் ஒரு பிரபல ஐடி நிறுவனம்.

காலை பத்து மணி வாக்கில் ஹெச்.ஆர் ஜெனரல் மனேஜர் மயூர் பரத்வாஜின் இன்டர்காம் ஒலித்தது.

“ஹலோ மயூர் ஹியர்…”

“சார்.. நான் லோதிகா எராஸ்மஸ்.. ஐ வான்ட் டு மீட் யு நவ்”

“ஷ்யூர் கம் ஆப்டர் த்ரீ மினிட்ஸ்.”

மயூர் உடனே தன்னுடன் ஹெச்.ஆரில் மானேஜராக வேலை செய்யும் மஞ்சுளாவை இன்டர்காமில் அழைத்து உடனே அவளை தன் கேபினுக்கு வரச் சொன்னார்.

மயூர் பரத்வாஜ் தன்னுடன் வேலை செய்யும் எந்த ஒரு பெண்ணையும் தனியாக கேபினில் சந்திப்பது இல்லை. மஞ்சுளாவை தன் கேபினுக்கு அழைத்து கூடவே அமர வைத்துக் கொள்வார். இது தனக்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்று திடமாக நம்பினார். அதவும் லோதிகா போன்ற தாடாலடியான பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்.

அடுத்த நிமிடம் மஞ்சளா அவர் கேபினுக்கு வந்தாள்.

சற்று நேரத்தில் லோதிகாவும் அங்கு வந்தாள். மஞ்சுளாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, “மயூர், ப்ளீஸ் ரீட் திஸ் மெய்ல்…” என்று ஒரு ப்ரின்ட் அவுட்டை எடுத்து நீட்டினாள்.

ஆங்கிலத்தில் இருந்த அதன் தமிழாக்கம்:

ஹலோ லோதிகா,

எனக்கு உன் மேல் தீராக் காதல். தினமும் நீ அணியும் வித விதமான கவர்ச்சியான உடைக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அதுவம் நேற்று நீ உன் அழகிய தொடையும்; பெரிய மார்பும் தெரியம்படி போட்டு வந்த கறுப்பு உடையில் உன்னைப் பார்த்து நான் உருகி விட்டேன். எப்போதுமே உன்னுடன் இருந்து உன்னை என் வாழ்நாள் முழுதும் ஆராதிக்க ஆசைப் படுகிறேன். சம்மதமா சொல். கதிரேசன்.

மயூர் அதைப் படித்துவிட்டு மஞ்சுளாவிடம் நீட்டினான். அவளும் அதைப் படித்தாள்.

“நான் இதை விடப் போவதில்லை மயூர். யு மஸ்ட் டெர்மினேட் ஹிம் டுடே. அதர்வைஸ் ஐ ஆம் எஸ்கலேட்டிங் திஸ் டு அவர் சீஈஓ அட் லக்ஸம்பர்க்” என்று லோதிகா பட படத்தாள்.

“ப்ளீஸ் லோதிகா… அவசரப்படாதீர்கள் நான் இப்பவே கதிரேசனை கூப்பிட்டு விசாரிக்கிறேன். அதன்பிறகு மஞ்சுளாவுடன் மதியம் இரண்டு மணிக்கு வந்து என்னை சந்தியுங்கள். இன்றே உங்களுக்கு நியாயம் கிடைக்காவிடில், அதன்பிறகு நீங்கள் தாராளமாக சீஈஓவிடம் முறையிடலாம்…அதுவரை இதைப்பற்றி யாரிடமும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம் ப்ளீஸ்…”

“ஆமாம் லோதி… மயூர் சொல்வதில் நியாயம் இருக்கிறது.”.

லோதிகா ஒப்புக் கொண்டதும், இருவரும் இரண்டு மணிக்கு வருவதாகச் சொல்லி எழுந்து சென்றார்கள்.

லோதிகாவைப் பற்றி மயூருக்கு நன்கு தெரியும். அவள் தினமும் மிகக் கவர்ச்சிகரமான உடையில்தான் ஆபீஸுக்கு வருவாள். கோதுமை நிறத்தில் ஸிந்திப் பசு மாதிரி புஷ்டியாக ரொம்ப ஸ்டைலாக இருப்பாள். பாப் செய்யப்பட்ட தலைமுடியை அடிக்கடி ரெஸ்ட் ரூம் சென்று கோதிக்கொண்டு, பவுடர் ஒத்தியெடுத்து லிப்ஸ்டிக் காயாமல் பார்த்துக் கொள்வாள். கவர்ச்சியான மாடர்ன் உடைகளில் வருவாள். கார் ஓட்டுவாள். சிரித்து சிரித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள். சரியாக வேலை செய்யமாட்டாள். செய்யும் வேலைகளிலும் தவறுகள் அதிகம்.

மேலும் லோதிகா அலுவலக ஆண்களுடன் செளஜன்யமாகப் பேசுவாள். அலுவலக வேலை தவிர மற்ற விஷயங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். அதில் உதவும் மனப்பான்மைதான் அதிகம். வருடத்திற்கு இரண்டு முறை பிக்னிக் ஆர்கனைஸ் பண்ணுவாள், யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்றால் தன் காரில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாள். டென்டிஸ்ட், ஆப்தல், நியூரோ என டாகடர்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் பேசி வாங்கித் தருவாள். பேச்சில் அக்கறையும், கவனிப்பும் இருக்கும். அவள் அப்பா ஒரு பெரிய வியாபாரப் புள்ளி என்பதால் பணம் அவளுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. மற்றவர்களுக்காக பணம் தாராளமாக செலவழிப்பாள். அலுவலக ஆண்கள் அவளிடம் கொஞ்சிக் கொஞ்சி பேசுவார்கள். திருமணம் ஆகாத வாலிபர்கள் அவளிடம் ஏராளமாக ஜொள்ளு விடுவார்கள். ஆனால் அவள் அவர்களை தன்னிடம் ஒட்டவிடாது ஒரு எல்லையிலேயே சாமர்த்தியமாக நிறுத்தி விடுவாள்.

கதிரேசனைப் பற்றி நினைக்கையில் மயூருக்கு கோபம் வந்தது. அவன் வேலையில் சின்ஸியரானவன்; ஹை பர்பாமர்; வரும் ஜூலையில் அவனை டீம் லீடராக ப்ரொமோட் செய்ய அவனுடைய மனேஜர் பரிந்துரைத்துள்ளார். கம்பெனிக்கு அவனின் உழைப்பு மிக அவசியம். இந்த நேரத்தில் பைத்தியக்காரத்தனமாக இப்படி மெயில் அனுப்பி நல்ல வேலைக்கு அவனே உலை வைத்துக் கொள்கிறானே !?

தவிர மயூரும் கதிரேசனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் மயூருக்கு அவன் மேல் அதிக அக்கறை உண்டு. அவன் குடும்பத்தினரை நன்கு தெரியும். அவன் அப்பா ஒரு விவசாயி. கஷ்டப்பட்டுதான் கதிரேசனை பி.ஈ படிக்க வைத்தார்.

கதிரேசனை உடனே தன் கேபினுக்கு அழைத்தார். அவன் வந்தான்.

பிரின்ட் அவுட்டை அவனிடம் நீட்டி, “இந்த மெயிலை நீ அனுப்பினாயா?”

படித்தவுடன் அவன் முகம் மாறியது.

“ஆமாம்…”

“நீ லோதிகாவை விரும்புகிறாய் என்றால் என்னிடம் சொல்… நான் அவளிடம் நல்லவிதமாகப் பேசி அவளைச் சம்மதிக்க வைக்கிறேன். பிறகு நாளையே அவள் வீட்டிற்கு நானும் நீயும் போகலாம். அவளுடைய பெற்றோர்களிடம் பேசி முதலில் அவர்கள் சம்மதத்தை வாங்கி விடலாம். அப்புறமாக உன் வீட்டிற்கு நானும் வருகிறேன். அவர்களிடமும் சம்மதம் வாங்கி உங்கள் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்… சரியா?”

“வேண்டாம் மயூர்… நான் அவளை திருமணம் செய்ய துளியும் ஆசைப்படவில்லை.”

“பின்ன என்ன மயிருக்குடா அவளுக்கு இந்த மெயில் அனுப்பின?”

“………………….”

“அறிவு கெட்ட நாயே… அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துல உன்ன டெர்மினேட் பண்ண வேண்டிய காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கறேயே? வெட்கமா இல்ல? மவனே, உனக்கு இவ்வளவு சம்பளத்துல எவண்டா வேற வேலை தருவான்? டெர்மினேட் பண்ணப்பட்ட பயோடேட்டாவை ஒரு பய சீண்ட மாட்டன். ஊருக்குப் போய் சாணி அள்ளப் போறயா?”

தலையைக் குனிந்தபடி கதிரேசன் அமர்ந்திருந்தான்.

“பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு தூரம் இளக்காரமா போயிட்டாங்களா? உன் அக்கா பேச்சி; உன் தங்கச்சி முப்பிடாதியை ஒரு நிமிஷம் நினச்சிப் பாத்தியா? உன் குடும்ப வறுமையை உணர்ந்தியா?”

“ஐயாம் சாரி மயூர்…”

“உனக்கு இந்த வேலை வேணும்னா ரெண்டரை மணிக்கு என் கேபினுக்கு வா. லோதிகாவும் மஞ்சுளாவும் இங்க இருப்பாங்க. லோதிகாவிடம் மனம் விட்டு மன்னிப்புக் கேள்… அவ கால்ல விழுவியோ இல்ல கதறி அழுவியோ எனக்குத் தெரியாது ஆனா அவ உன்ன மன்னிச்சாதான், உனக்கு இங்க வேலை. புரியுதா? இப்ப நீ போகலாம்.”

‘வயசு… அரிப்பு. அவ வேற… இப்படியா தினமும் கவர்ச்சியான உடையில் ஒருத்தி ஆபீஸுக்கு வருவா? இவனை எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி விட வேண்டும்’ என்று உறுதி பூண்டார்.

இரண்டு மணிக்கு லோதிகாவும், மஞ்சுளாவும் வந்தனர்.

“லோதிகா, கதிரேசனை கூப்பிட்டு விசாரித்தேன். பிரின்ட் அவுட்டைப் பார்த்ததும் மன்னிப்புக் கேட்டு கதறி அழுதான். இந்த வேலை போனால் அவன் குடும்பமே நடுத் தெருவில் நிற்குமாம்… அவன் இங்கு வேலை செய்வதும், செய்யாததும் உன் கையில்தான் இருக்கிறது. நீ அவனை மன்னிக்காவிடில் இன்று மாலை ஆறு மணிக்கே அவனை நாம் டெர்மினேட் பண்ணிரலாம்… தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னித்து மறப்பதற்கு மிகப்பெரிய மனசு வேண்டும்… அது உன்னிடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். உன் கண்ணிலேயே அவன் படாமல் அவனை வேறு தளத்திற்கு மாற்றி விடுகிறேன். ஹில் இஸ் ஆல்ஸோ எ ஹை பர்பாமர். உன் முடிவுக்கே அவன் எதிர்காலத்தை விட்டு விடுகிறேன்.”

“புரிகிறது மயூர்…அவனை என்னிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு ஈ-மெயில் அனுப்பச் சொல்லுங்கள்…அது போதும்.”

மஞ்சுளா மிகவும் கண்டிப்பான குரலில் “லோதி யு ஷுட் ஆல்ஸோ சேஞ்ச் எ லாட்… ஆபீஸில் அணியும் கண்ணியமான உடை ஒரு பெண்ணுக்கு மரியாதையையும், பாதுகாப்பையும் கொடுக்கும். அணியும் உடைக்கும் கூச்சத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. உடல் கூச்சம் குறையக் குறைய நம் உடல் தெரியுமாறு உடைகளை அணிவது அதிகமாகும். உடை அளவு குறையக் குறைய உடல் கூச்சமும் நமக்கு குறையும். கவர்ச்சியான உடையை அணிய உனக்கு உரிமை இருக்கிறது. ஆனால் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அப்படி இருக்கலாமா என்பதை நீ யோசித்துப் பார். அதவும் கட்டுப்பாட்டுடன் வேலை செய்ய வேண்டிய ஒரு ஆபீஸில்… நடை, உடை, பாவனை என்கிற அம்சங்கள் கண்ணியமானவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்… அதிலும் பெண்களுக்கு நிச்சயம் பொருந்தும் லோதி.” என்றாள்.

மயூர் அமைதியாக அவள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தார்.

“கதிரேசன் இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பியதற்கு நீதான் காரணம்… நீ அணியும் கவர்ச்சியான உடைகள் அவனைத் தூண்டி விட்டன. பெண்மையின் கெளரவத்துக்கும், கண்ணியமான உடைக்கும் இருக்கும் உறவு என்றுமே மாறாதது. நம்முடைய இந்திய கலாசாரத்தில் கண்ணியத்தையும் பெண்களையும் பிரித்துப் பார்ப்பது கடினம். நீ மிகவும் நல்ல பெண். பிறருக்கு உதவுவதில் இன்பம் காணும் உன்னைப் போன்ற பெண்களை காண்பது மிகவும் அரிது லோதிகா. ஆனால் நீ உடையணியும் விஷயத்தில் கண்டிப்பாக உடனே மாற வேண்டும்.”

“ஷ்யூர் மஞ்சுளா… இதுவரை என்னிடம் யாரும் இப்படி அக்கறையுடன் எடுத்துச் சொன்னதில்லை. நான் கண்டிப்பாக உடனே மாறுகிறேன்.”

கதிரேசன் கேபின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான்.

“கம் இன் கதிர்…” மஞ்சுளா அழைத்தாள்.

உள்ளே நுழைந்த கதிரேசனின் முகம் சோகமாக இருந்தது.

“என்ன மன்னிச்சிருங்க லோதிகா மேடம். என் வாழ்நாள்ல இனிமே இப்படி ஒரு தப்பை செய்யவே மாட்டேன் மேடம். என் வேலையை எனக்கு மீட்டுக் கொடுங்க மேடம்…ப்ளீஸ்.”

கண்கள் கலங்க அவளைப் பார்த்து கைகளைக் கூப்பினான்.

“நோ நோ கதிர்… தப்பு என் பேர்லையும் இருக்கு. லெட் அஸ் பர்கெட் அபவுட் எவ்ரிதிங்…” லோதிகா எழுந்து நின்று கதிரேசனின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

இருவரும் நன்றி சொல்லிவிட்டு கேபினை விட்டு வெளியேறினர்.

“தேங்க்யூ வெரி மச் மஞ்சுளா…நீங்க சொன்ன அறிவுரைகளால்தான் லோதிகா தன்னை உணர்ந்து கொண்டாள். கதிரிடம் மன்னிப்பு மெயில் கேட்காமல் அவனிடம் கை குலுக்கினாள்… ஐயம் ரியலி ப்ரவுட் ஆப் யூ.”

மஞ்சுளா வெளியேறியதும், பெரிய ஆபத்திலிருந்து கதிரேசனை காப்பாற்றிய மயூர் நீண்ட பெருமூச்சு விட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *