கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 4,632 
 

செய்தி வெளியானதும் தமிழகமே அலறியது.

எதிர் கட்சித் தலைவரும், தேர்தலில் டெபாஸிட்கூட வாங்க முடியாத இன்னபிற லெட்டர் பேட் உதிரிக் கட்சிகளின் தலைவர்களும், தமிழக முதலமைச்சரை உடனடியாக ராஜினாமா செய்யச்சொல்லி கரடியாகக் கத்தினார்கள். தமிழகத்தில் பெண்கள் இனி பாதுகாப்பாக இருப்பது சாத்தியமில்லை என அறிக்கை விட்டனர்.

இது எப்படி எங்கே போய் முடியும் என்று தெரிந்துகொள்ள தமிழக மக்கள் மிகுந்த ஆர்வமாயினர். பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் சுறு சுறுப்பாயின.

ஆனால் தமிழக முதல்வர் எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தார்.

விஷயம் இதுதான்…

இரண்டு நாட்கள் முன்பு, பிரபல முன்னாள் நகைச்சுவை நடிகை மோகினி, முப்பது வருடங்களுக்கு முன்பு அப்போது நகைச்சுவை நடிகராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர், திருநெல்வேலி ஜானகிராம் ஹோட்டலில், ஒருநாள் இரவு குடித்துவிட்டு தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக me too வில் ட்வீட் செய்திருந்தார்.

மோகினிக்கு சக நடிகை, நடிகர்கள் ஆதரவு கொடுத்து உடனே அறிக்கை விட்டனர். தமிழக திரையுலகம் திடீரென ஒற்றுமையானது.

தமிழகம் முழுதும் மக்களிடையே இதே பேச்சுதான். மத்திய அரசிடமிருந்து முதல்வரிடம் விளக்கம் கேட்டு ரகசிய தாக்கீது வந்தது.

விஷயம் கை மீறிப் போவதை உணர்ந்த முதல்வர், உடனே ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தார். துணை முதல்வர், பிரஸ் மீட் முடிந்தவுடன் முதல்வரை காலி பண்ணிவிட்டு தான் முதல்வராக வந்து உட்கார்ந்து கொள்ளத் துடித்தார்.

மறுநாள் காலை பத்தரைக்கு நாடே எதிர்பார்த்து காத்திருந்த பிரஸ்-மீட் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமானது. முதல்வர் சிரித்த முகத்துடன் மிகவும் இயல்பாகக் காணப்பட்டார்.

“உங்களைப்பற்றி முன்னாள் நகைச்சுவை நடிகை மோகினி me too வில் செக்ஸ் புகார் கூறியுள்ளாரே?”

“ஆமாம், நானும் பார்த்தேன்…”

“அது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?”

“நடிகை மோகினி சொன்னது அனைத்தும் உண்மைதான். சில உண்மைகளை சொல்லாமல் மறைத்தும் விட்டார்.”

“அப்படியானால் அவர் சொன்ன செக்ஸ் புகார்களை தாங்கள் மறுக்கவில்லை…”

“ஆமாம், மறுக்கவில்லை.”

“எனில், தங்களின் ராஜினாமா எப்போது?”

முதல்வர் சிரித்தார்.

“முப்பது வருடங்களுக்கு முன்னால், என்னுடைய இருபத்திரண்டு வயதில், நான் சொன்ன காதலுக்கு, இப்போது எதற்கு எனக்கு தண்டனை?”

“சற்றுப் புரியும்படியாகச் சொல்லுங்களேன்.”

“என்னுடைய கட்சி நிறுவனர், முதலமைச்சர் ஆவதற்கு முன்னால் தமிழகத்தின் பிரபல சினிமா ஹீரோவாக கோலோச்சியது உங்கள் அனைவருக்கும் தெரியும்… அவர்தான் எனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம். வேலையில்லாமல் அலைந்த எனக்கு, அவரது படங்களில் சிறிய சிறிய நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்தார். அதிலிருந்து நான் பல படங்களில் தொடர்ந்து நடித்து ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு நல்ல நகைச்சுவை நடிகனாக வளர்ந்தேன்…. அவர் கட்சியிலும் இணைந்தேன்.

“அப்போதுதான் எனக்கு சக நகைச்சுவை நடிகையான மோகினியுடன் நடிக்க பல படங்கள் ஒப்பந்தமாயின. நடிகை மோகினி மீது எனக்கு காதல் துளிர்விட்டது. அதுதான் என் வாழ்க்கையின் பவித்ரமான முதல் காதல். அவரிடம் என் காதலைச் சொல்லி அவரை மணந்து கொள்ளத் துடித்தேன்….”

“……………………..”

“அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு ஷூட்டிங் நிமித்தம் நானும் மோகினியும் திருநெல்வேலி ஜானகிராம் ஹோட்டலில் எதிர் எதிர் அறைகளில் தங்க நேர்ந்தது. முதல்நாள் ஷூட்டிங் முடிந்த அன்று இரவு என் அறையில் தனிமையில் மது அருந்தினேன். என்னுடைய எண்ணங்கள் முழுதும் மோகினியையே சுத்தி சுத்தி வந்தன. மறுநாள் மதியம்தான் எங்கள் இருவருக்கும் குற்றாலத்தில் ஒரு நகைச்சுவைப் பாடல் ஷூட்டிங். உடனே அவளிடம் என் காதலைச் சொல்லி, அவள் சம்மதித்தால் மறுநாள் விடிகாலையில் அவளை திருச்செந்தூர் அழைத்துச்சென்று திருமணம் செய்துகொள்ளத் தயாரானேன்…

இரவு ஒன்பது மணி இருக்கும். குடி போதையில் இருந்த நான் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், உடனே எழுந்து சென்று மோகினி இருந்த அறையின் கதவைத் தட்டினேன்.

கதவைத் திறந்த மோகினியிடம், உங்களிடம் நான் தனியாகப் பேச வேண்டும் என்று வாய் குழறினேன்.

நான் குடித்திருப்பதை உடனே புரிந்துகொண்ட மோகினி, நான் கெட்ட நோக்கத்தில் வந்திருப்பதாக தவறாகப் புரிந்துக்கொண்டு, உடனே கதவை அடித்துச் சாத்தினார். நான் ஏமாற்றத்துடன் எனது அறைக்குத் திரும்பினேன்.

“எனது காதல் எண்ணங்கள், அவளைத் திருமணம் செய்துகொள்ளத் துடித்த ஆசைகள் நேர்மையானவையாக இருந்தாலும், நான் அன்று குடித்துவிட்டு அவளிடம் இதைச்சொல்ல விரும்பியது மிகப்பெரிய முட்டாள்தனம். நானே என் காதலை சொதப்பிவிட்டேன்… அன்று குடியினால் என் காதலையும் இழந்து ஏற்பட்ட அவமானத்தில், குடிப்பதை உடனே நிறுத்திவிட்டேன்…”

“சில உண்மைகளை சொல்லாமலும் மறைத்துவிட்டார் என்றீர்களே? அது என்ன விஷயம்?”

“ஆமாம்… அன்று மோகினி கதவைச் சாத்தும்முன், என் முகத்தில் காறித் துப்பினார்… அதை நாகரீகம் கருதி இப்போது சொல்லாமல் அவர் மறைத்துவிட்டார். தவிர, மறுநாள் ஷூட்டிங்கில், எதுவுமே நடக்காதது மாதிரி, மிக இயல்பாக நடித்தும் கொடுத்தார். அவர் அன்று நினைத்திருந்தால் எனது கட்சித் தலைவரிடம் என்னைப்பற்றி புகார் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால், உடனே கட்சியிலிருந்து நான் நீக்கப் பட்டிருப்பேன். இன்றைக்கு நான் முதல்வராக இருந்திருக்க முடியாது. ஏனோ அவர் பெருந்தன்மையுடன் அவ்விதம் புகார் செய்யவில்லை….

“தலைவரின் மறைவுக்குப் பிறகு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்சியை மீட்டெடுத்து, தேர்தலில் வென்று முதல்வரான அடுத்தவர் எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து, என்னைத் தேர்தலில் ஜெயிக்க வைத்து, மந்திரிப் பதவியும் தந்து அழகு பார்த்தார்.

அவரது அகால மரணத்திற்குப் பிறகு, நான் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூவத்தூர் கதை உங்களுக்குத் தெரியும். இதுதான் நடந்தது…”

“சரி… இப்போது நடிகை மோகினிக்கு உங்கள் பதில் என்ன?”

“அவர் சொன்னது அனைத்தும் உண்மைதான் என்று நான் உங்களிடம் சொல்லிவிட்டேனே… அதுதான் பதில். தவிர, கட்சி அரசியலில் நுழைந்தபிறகு, மக்கள் சேவையை மட்டுமே என் மனதில் இலக்காக கொண்டுள்ளேன். இதுவரை அப்பழுக்கற்றவனாகவே செயல் பட்டுள்ளேன். எனவே இளமையில் நான் செய்த தவறுக்காக ராஜினாமா என்கிற பேச்சுக்கே இடமில்லை.”

பிரஸ்மீட் முடிந்து முதல்வர் எழுந்துகொண்டார்.

நடிகை மோகினியை மறுநாள் நிருபர்கள் சந்தித்தனர்.

“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது முதல் காதலி நான்தான் என்கிற உண்மை இப்போது எனக்குப் பெருமைதான். நான் காறித் துப்பிய உண்மையை வெளியே சொல்லி, அவர் என்னைவிட மிக உயர்ந்துவிட்டார்.”

எதிர்கட்சித் தலைவர் “காமெடியனாக சினிமாவில் நுழைந்தவர், இப்போது தமிழக அரசியலில் நிரந்தரக் காமெடியனாகி விட்டார்…” என்று காட்டமாக அறிக்கை விட்டார்.

“யார் காமெடியன் என்பது சீக்கிரம் மக்களுக்குத் தெரியவரும்…” முதல்வர் பதில் அறிக்கை விட்டார்.

முதல்வர் ராஜினாமா செய்யாததால், நாக்கைச் சப்புக்கொட்டி காத்திருந்த துணை முதல்வரின் முகம் இஞ்சி தின்ற குரங்குபோல் ஆகிவிட்டது.

இது நடந்த ஒரு வாரத்தில், நடிகை மோகினிக்கு முதல்வர் அவரை உடனே ரகசியமாகச் சந்திக்க விரும்புவதாகவும், வீட்டில் காத்திருக்கும் படியும் நம்பகமான தகவல் வந்தது.

அன்று பகலில் ஒரு பலேரோ ஜீப்பில் முதல்வர் மோகினி வீட்டுக்கு ரகசியமாக வந்தார்.

மோகினி அவரை மரியாதையுடன் வரவேற்று அமரச்செய்தாள்.

“எப்படி இருக்கே மோகினி?”

“ரொம்ப நல்லா இருக்கேன் ஐயா. ஐயாம் சாரி… me too வில் உங்களைப்பற்றி சொன்னதற்கு…”

“பரவாயில்லை… நீ உண்மையைத்தானே சொன்னாய்… அதெல்லாம் மறந்துவிடு… எனக்கு இப்போது உன்னால் ஒரு மிகப்பெரிய ரகசிய உதவி வேண்டும். எனக்கு இது ஒரு டேமேஜ் கண்ட்ரோல் எக்ஸ்சர்சைஸ்….”

“சொல்லுங்க ஐயா… எதுவேண்டுமானாலும் உங்களுக்காக செய்யக் காத்திருக்கிறேன்…”

“உனக்குத் தெரியுமில்ல… இப்போதைய எதிர்கட்சித் தலைவர் அந்தப் பிரபல தமிழ் நியூஸ் ரீடர அந்தக் காலத்தில் என்ன செய்தார்னு…?”

“தெரியுமாவா… அதுதான் தமிழ்நாடு முழுக்க அந்தக் காலத்துல அதானே பேச்சே…”

“நீ அவளைப் போய் பார்த்து அந்த உண்மைகளை me too வில் அவளை உடனே பதிவேற்றச் செய்ய வேண்டும். எவ்வளவு செலவானாலும் சரி.”

“இவ்வளவுதானா ஐயா… அவ என்னுடன் சினிமாவுல நடிச்சிருக்கா. அவளை எனக்கு நன்கு தெரியும். அவ உண்மையைத்தானே சொல்லப்போறா? நான் இதை உங்களுக்காக கண்டிப்பாக ரகசியமா முடிச்சுத்தரேன்…”

முதல்வர் விடை பெற்றார்.

அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மீண்டும் பரபரப்பானது.

அந்த நியூஸ் ரீடர், “முப்பது வருடங்களுக்கு முன், தற்போதைய எதிர்கட்சித் தலைவர், அப்பாவின் அதிகார மமதையில் என்னை கடத்திச்சென்றார். இதுபற்றிய செய்திகள் அப்போதைய நாளிதழ்களிலும், பத்திரிக்கைகளிலும் தெளிவாக வந்துள்ளன.” என்று me too வில் ட்வீட் செய்திருந்தார்.

பத்திரிக்கை நிருபர்கள் எதிர்கட்சித் தலைவரின் வீட்டை நோக்கிப் படை எடுத்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *