சின்னான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,858 
 
 

சின்னான் ஊர் மந்தையை அடைந்தபோது பொழுது சாயத் தொடங்கி இருந்தது. அந்த நேரம் தான் பஸ் நிறுத்தத்துக்கு எதிரிலிருக்கும் மஹபூப் பாஷா டீ கடையின் உரிமையாளரும் அந்த ஊரின் ஏக போக அறுசுவை அரசுமான ரகீம் பாய் சூடான பஜ்ஜி வகைகளை எண்ணையிலிருந்து விடுவித்து அதற்கென வருடக்கணக்கில் இருக்கும் கண்ணாடி பெட்டியினுள் கொட்டத் தொடங்கினார். அதை எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்க சின்னானுக்கு பிடிக்கும். அவர் பஜ்ஜியை எடுத்து கொட்டுவதை தூண்டிலில் மீன்களைப் பிடித்து தொட்டியில் மாற்றுவதை போல இருக்கும் அவனுக்கு. என்றைக்குமே கொஞ்ச நேரம் அவர் பஜ்ஜி போடுவதை பார்த்து விட்டு தான் சாப்பிடுவது சின்னானின் பழக்கம்.

பஸ் நிறுத்தம் என்பதால் எப்பொழுதுமே கூட்டத்துக்கு குறை இருக்காது. சின்னானைப் பார்த்ததும் ரஹீம் பாய்க்கு நிம்மதியாயிருக்கும். கடையை பார்த்துக்கொள்ள அவனை நம்பலாம். தான் போய் அத்தனை நேர அலுப்பு தீர ஒண்ணுக்கு போய்விட்டு அப்படியே ஒரு கத்திரி சிகரட்டை இழுத்துவிட்டு திரும்பலாம்.

சின்னானுக்கு ஒரு டீயை அடித்து கையாலேயே அதன் அடிப்புறத்தை துடைத்துத் தந்தார் பாய். அதை ஒன்றும் பேசாமல் வாங்கி வைத்து விட்டு ஒரு பஜ்ஜியை எடுத்து கடிக்கலானான்.

“என்னத்தா, உடம்புக்கு முடியலையா..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?”என்றவரிடம்

“ஒண்ணுமில்ல மாமு…நீ மாத்திக்க….நான் கவனிச்சுக்கிறேன்”என்றான்.

இப்பொழுது அவன் டீயை முடித்து விட்டு கல்லாவை அடைத்தபடி நிற்க, அவனிடம் அதற்கு மேல் எதையும் கேட்காமல் ஒரு கத்திரி ஃபில்டரை எடுத்துக்கொண்டு நகர்ந்தார் ரஹீம் பாய். நல்ல பய என்று முணுமுணுத்தபடியே.

சின்னான் அந்த ஊரின் செல்லப் பிள்ளை. டவுனுக்கு போய் வருவதில் தொடங்கி, அந்த ஊரில் யார் வீட்டில் கல்யாணம் இழவு என்றாலும் சரி,சின்னான் அங்கே ஆஜராகி சகல கைக்காரியங்களையும் செய்து முடிப்பான். கொடுத்ததை சாப்பிடுவான். கிடைத்த கூலிக்கு மகிழ்வான். நேரம் தவறமாட்டான். கை சுத்தம். கேட்கவா வேண்டும்..? அந்த ஊரில் கவுன்சிலர் யார் யாரோ மாறி மாறி வருவார்கள். ஆனால்.. காரியஸ்த்தன் அவன் தான்.

அவன் டவுசரிலிருந்து வேட்டிக்கு மாறி ஒரு வருடம் தான் ஆகிறது. கரடியாய் இரண்டு தொடைகளிலும் முடி இருப்பதை கண்டித்து ரஹீம் பாய் தான் வேட்டிகட்ட சொல்லிக் கொடுத்தார். அதற்கு முன் வரை டவுசர் தான். அதன் இரண்டு பைக்கட்டிலும் பின்னால் இரண்டு பைக்கட்டிலும் பேப்பர்கள், பணம், ரப்பர் பேண்ட் சுற்றி சுற்றி வைத்திருப்பான். யார் எந்த வேலைக்கு கொடுத்தது,எவ்வளவு ஆயிற்று.. தனக்கு எவ்வளவு? எல்லாமும் அந்த பைகளில் தான். வேட்டிக்கு மாறிய பின் தான் சிரமமாகி விட்டது. எல்லாவற்றையும் சட்டையின் உள் வெளி பைகளில் பராமரித்து விட முடிந்தாலும் கூட பணத்தை உருட்டி ரப்பர் பேண்ட் சுற்றி வைக்க முடியாது போயிற்று. அது அவனுக்கு பிடிக்கவே இல்லை. கட்டுப் பணங்களை விட உருட்டி வைத்தால் தான் அது அவனைப் பொருத்த வரை பெருஞ்செல்வம்.

சொல்வதை விட நன்றாகவே சம்பாதிக்கிறான். போக்குவரத்து, சாப்பாடு எல்லாம் போக கமிஷன் வருகிறது தினமும் சொள்ளையாய்.அந்த ஊர் அவனைப் பயன்படுத்துகிறது. காலையில் எழுந்து கடங்களை தீர்த்து குளித்து முடித்து கிளம்புகையில் அன்றைக்கு யார் அவனுக்கு வேலை கொடுக்க போகிறார்களென அவனுக்கு தெரியாது.+2 வரை படித்தவன் கூடவே அவனுக்கு நிறைய விவரங்கள் அனுபவமும் கொடுத்து இருந்தது.

அந்த ஊரில் ஹிந்துக்கள், இஸ்லாமியர் சரிபாதியாக வசித்து வந்தார்கள். பண்டிகைகளுக்கு குறைவே இல்லை. மத ஒற்றுமை என்பதை விட இரண்டு தரப்பாரும் தொழில்களில் குத்தகைகளில், கட்சிகளில், ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்தார்கள். பொதுவுடமை கொள்கைக்கும் அந்த ஊரில் பெருங்கூட்டமொன்று இருந்தது.

சின்னான் ஒண்டிக்கட்டை. அவன் கல்யாணமாகி அவன் மனைவி ரஞ்சிதம் அவனுடன் 5 மாதம் நன்றாக தான் குடும்பம் நடத்தினாள். மதுரைக்கு சென்று விட்டு வரும் பொழுது லாரி அடித்து இறந்து போனாள். நல்ல அழகி. கறுப்புக்கே உரிய களை. அவளை சின்னான் வருடங்களின் உதவியோடு மறந்து கொண்டிருக்கிறான்.

எப்பொழுதாவது ரஞ்சிதத்தின் நினைவு வந்தால் கொஞ்சம் இறுக்கமாவான். மறுபடி நெகிழும் வரை அவன் யாரிடமும் எதும் பேச மாட்டான். அவனுக்கு எப்பொழுதும் ரஹீம் பாய் தான் உறவு, நட்பு எல்லாமும். அவனுக்கான நிழல் அலுவலகமும் அது தான். பாயும் அவன் மீது தனிப்பாசம் வைத்து இருப்பார்.

சிகரட் தந்த திருப்தியுடன் நுழைந்தார் ரஹீம் பாய். சின்னான் மறுபடி அந்த கடையின் வாசலில் கிடந்த பென்ச்சின் நுனியில் அமர்ந்து கொண்டான். வளர்ந்து வரும் கட்டிடக் காண்ட்ராக்டர் மூர்த்தி உடன் இன்னும் இரண்டு பேருடன் வந்து பென்ச்சில் அமர்ந்து கொண்டு மாலை முரசை கையில் எடுக்க, எழுந்து நின்றான் சின்னான்.

“வாங்க மருமகப்பிள்ளை.. என்ன வேணும்..? டீ தரவா?” என்ற பாயை பார்த்துப் புன்னகையுடன்

“ரெண்டை மூணாக்கி டீ தாங்க மாமா” என்றான். அவர் வழங்கிய டீயை குடித்து விட்டு எழுந்து கொண்ட மூர்த்தி காசை தர அதை வாங்கிய பாய் “என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பியாச்சு..?” என

“மதுரைக்கு போறேன்.. ஒரு கட்டிட்டவேலை கிடைக்கிறாப்பல இருக்குது மாமா..முடிஞ்சா நல்லது”என்ற படி கிளம்பினான் மூர்த்தி.

அவன் எழுந்து நடக்க அதுவரை தள்ளி நின்ற சின்னான் மூர்த்தியை கவனிக்காமல் குறுக்கே வர, சுதாரிக்காத மூர்த்தி பக்கவாட்டில் சரிய, சகதியுடன் எழுந்தவன் “அறிவு கெட்டவனே… கண்ணென்ன பிடனிலயா இருக்கு..?பரதேசி என்றபடியே ஒரு அடி வைத்தான் சின்னான் மீது.

அவனுடன் வந்தவர்கள் அவனை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்ல மூர்த்தி போவதையே பார்த்தபடி நின்றான் சின்னான். “விடு சின்னான், அவன் கோவக்காரப்பய, டக்குனு அடிச்சிட்டான். நீ எதும் நினைக்காத.. விட்றுடா.”என்ற பாயிடம் ஒன்றும் சொல்லாது கிளம்பினான் சின்னான்.

இது நடந்து மூன்று மாசமிருக்கும். வாத்தியார் ரமேஷ் தங்கை திருமணம் அந்த ஊரின் பெரிய்ய முத்து மஹாலில் நடந்தது. சின்னான் வாத்தியாருக்கு ரொம்ப செல்லம். அவன் மண்டபத்தின் எல்லா வேலைகளிலும் இருந்தான். கடைகளுக்கு போய் வந்தான். வந்தவர்களை உபசரித்தான். பந்தியில் நின்றான். சில பேரை வீடியோ எடுக்கையில் கூட கூட நிற்கவும் மறக்கவில்லை. மொத்தத்தில் சின்னான் பிசியாக இருந்தான்.

இரவு அனைவரும் கிளம்பிய பிறகு வாத்தியார் கொடுத்த பணத்தை பத்திரப்படுத்தி விட்டு அவர் ஸ்பெஷலாக தந்த மதுப்புட்டியை எடுத்து கொண்டு பாய் கடைப்பக்கம் வந்தான். இரவு நேரம் என்கிறபடியால் சுத்தமாக ஆள் நடமாட்டம் இல்லை. அந்த நேரத்தில் பாய் கடைக்குப் பின்புறமிருந்த தண்ணீர் ட்ரம்களுக்கு அடுத்த காலி இடத்தில் யாரோ அமர்ந்திருக்க தனது சரக்கை தயாராக்கி கொண்டு அங்கு சென்ற சின்னான் அமைதியாக குடித்தான்.கிளம்பும் பொழுது தான் கவனித்தான். அத்தனை நேரம் அங்கே குடித்து கொண்டிருந்தது மூர்த்தி என்று. அவன் முகத்தை ஒரு விநாடி பார்த்த சின்னான் நகரத் தொடங்க லேசான தள்ளாட்டத்துடன் வெளியே வந்த மூர்த்தி “நில்றா நாயே..” என்றான்.

மூர்த்தி நல்ல உயரம். பருமனும் கூட. அவன் நின்றது வேறு சரியாகப் படவில்லை சின்னானுக்கு. அவன் கேட்காதது போல நடந்தான்
.
“டேய்…சொல்றேன்..கேக்காம போறியா..?” என்றபடி முன்வந்து நின்ற மூர்த்தி வழியை மறித்தான்.

“எந்த நேரத்துல என் வழியை மறிச்சியோ… அன்னைலேருந்து எதுமே வெளங்கலை தூத்… என் முன்னால வராத… எப்பவாச்சும் வந்தே… உன்னை என்ன செய்வேன்னு தெரியாது.. ஓடுறா” என்றான்.

அமைதியாக நின்ற சின்னான் முகத்தில் அறைந்தபடி “ஓடுறாங்குறேன்….நிக்கிறே” என்றதும் பயத்தில் உடல் நடுங்கியபடிக்கு சின்னான் ஓடத்தொடங்கினான். தன் வீடு வரைக்கும் போதையில் எங்கே மூர்த்தி பின் தொடர்கிறானோ என்ற பயத்தில் ஓட்டத்தை நிறுத்தவில்லை. அவனுக்கு லேசாய்க்காய்ச்சல் வரும் போலிருந்தது. போதை வேறு தலை சுற்றியது.

அதன் பின் மூர்த்தியின் கண்ணில் படாமல் இருக்க பழகிக் கொண்டான் சின்னான். அன்றைக்கு பின் அவன் குடிப்பது இல்லை. அத்துடன் கூட பாய் கடைக்கே அவன் எப்பொழுது சென்றாலும் கூட அதிகபட்சம் 10 நிமிடத்தில் இடத்தை காலி செய்து விடுவான். யார் தம்மை அழைத்தாலும் சொல்கிற வேலையை அமைதியாகக் கேட்டுக் கொண்டு செய்து முடிப்பான். முன்பு போல சின்னான் யாரிடமும் பேசவில்லை. பாய் தான் மறுகினார். உண்மையிலேயே அவருக்கு உற்ற சகாவாக இருந்த சின்னான் முன்போல இல்லை என்பதில் அவருக்கு சொந்த இழப்பும் இருந்தது. அதைத்தவிர அவனது நடவடிக்கை மாற்றமானது அவர் விரும்பத்தக்கதாக இல்லை என்பதே உண்மை.

அதைப் பொருட்படுத்துபவன் இல்லை சின்னான்.என்ன செய்து தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை அவன் செலவழிக்கிறான் என்பதே தெரியவில்லை யாருக்குமே. அதற்கு ஆறு மாதங்கள் கழிந்த பிறகு ஒரு சனிக்கிழமை. எழத் துவங்கியிருக்கும் புதிய கட்டிடமொன்றின் வாயிலில் தனது நாற்காலியில் அமர்ந்தபடி கொத்தநார்களுக்கும் சித்தாள்களுக்கும் சம்பளம் போட்டுக்கொண்டிருந்தான் மூர்த்தி. அவனது மேஸ்த்ரி ஜெபமணி அருகில் நின்று கொண்டு பட்டுவாடாவை கவனித்தபடி இருந்தான்.

தனது சைக்கிளில் பின்னால் பலசரக்கு அடுக்கின பெட்டியுடனும் இன்ன பிறவற்றுடனும் வந்து கொண்டிருந்த சின்னான் மூர்த்தியை நேருக்கு நேராக பார்க்கும் சூழல் இயல்பாக உருவானது. அந்த இடத்தை விட்டு விரைவாக அகன்று விடும் நோக்கத்தில் வேகமாக அழுத்த தொடங்கினான் சைக்கிளை. அது அவனது வேகத்திற்கு ஒத்து வரவில்லை. மூர்த்தி சம்பள வினியோகத்தை முடித்து அனைவரையும் அனுப்பி விட, ஜெபமணி சரக்கை எடுத்து மிக்ஸ் பண்ணி கொடுக்க, கொறிக்க இருந்த சிக்கன் மற்றும் முட்டைகளை துணைக்கு கொண்டு குடித்து முடித்திருந்தான் மூர்த்தி. மிதமான அதே சமயத்தில் காத்திரமான போதை. போதும். இன்றைய இரவை கழிக்க இந்த திரவம் போதும் எனத் தோன்றியது.

ஜெபமணி கட்டிடத்திலேயே தூங்கத் தொடங்கினான். மூர்த்தி ஒரு சிகரட்டை பற்ற வைத்தபடி நடக்கலானான். அதே நேரம் பலசரக்குகளை டெலிவரி செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த சின்னான் முன்னால் செல்வது மூர்த்தி என்றறியாது மணி அடித்தபடி வர திரும்பிப் பார்த்த மூர்த்தி ரணம் போன்ற வேதனையை அடைந்தவன் “”எம் முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல..? இதுல மணியடிக்கிறியோ..?” என்றபடி சைக்கிளை வேகமாய்ப்பற்றி அதன் மணியை கைகளால் ஆட்டத் துவங்கினான். ஆனால் அது அவ்வளவு எளிதில் உடன்படவில்லை.

சின்னான் ஒன்றுமே பேசாமல் சைக்கிளை பிடிங்கிக்கொண்டு நடக்கத் துவங்க, அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போதை தந்த தளர்வையும் சமாளிக்க இயலாத மூர்த்தி “உங்கொம்மாளை………. நில்றா!” என்றான்.

அமைதியான வேகத்தில் சைக்கிளை உருட்டிக்கொண்டிருந்த சின்னான் சைக்கிளைக் கீழே போட்டான். திரும்பி வேகமாக வந்தவன் மூர்த்தியை தள்ளிவிட, இதை சற்றும் எதிர்பார்க்காமல் தவறி விழுந்தான். அவனுக்கு கொஞ்சமும் இடம் தராத சின்னான் இப்பொழுது மூர்த்தியின் நெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தான். அவன் கைகளில் ஓங்கியிருந்த உடைகல் மூர்த்தியின் தலையைக் குறிபார்த்தது “எங்கம்மா இப்போ உயிரோடயே இல்லை. இருந்தா வயசு எழுபத்தஞ்சு இருக்கும்… எங்கம்மாவைத் தெரியுமா உனக்கு..? அவ என்னை பெத்தவ வளத்தவங்குறதுக்காக சொல்லலைடா.. வாழ்றப்ப எந்த சந்தோஷத்தையுமே பாக்கலை. நானும் எங்கப்பனும் அவளை சந்தோஷமா வெச்சுருக்கலை. செத்ததுக்கு அப்புறம் அவளை தப்பா பேசுறியா… உன்னைக் கொன்னா என்னடா.?” என்றபடியே மூச்சு வாங்கினான்.

“டே சின்னான், விட்டுர்ரா….”என்ற மூர்த்தியின் முகத்தில் இப்பொழுது போதை இல்லை மாறாக மரணபயம் அங்கே தெரிந்தது. வேர்த்த முகத்தை துடைக்கவியலாது மூர்த்தி “சாரிடா.மன்னிச்சுர்றா.” என்றான். அவன் உதடுகள் மெலிதாக நடுங்கின.

“உனக்கு நான் பயந்தேன். அது முன்னாடி.நான் வாழணும்ங்கறதுக்காக பயந்தது. ஆனா அதை சாக்கா வெச்சுக்கிட்டு என்ன வேணா செய்யலாம்னு நெனைக்கிறியா… கொன்னே போட்ற்றுவேன். போ. போயி உன் வீட்டுல உன்ன பெத்தவ இருந்தா அவகிட்டே மன்னிப்பு கேளு” என்றவன் தன் கையிலிருந்த கல்லை தூர எறிந்தான். மெல்ல எழுந்தான். கிளம்பி நடக்கலானான்.

இப்பொழுதெல்லாம் சின்னானின் கண்களில் படாமல் இருக்க பழகிக் கொண்டான் மூர்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *