சாம்பல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 863 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமாவாசை இருட்டு, நாய்களின் சத்தமும் அடங்கிப்போய் இருந்தது. கரிச்சான் குருவிகளின் சத்தம் மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தது.ஏதோ ஒரு கரும்புக் காட்டுக்குள் நரி ஊளையிடும் சத்தம் கேட்டு, தெருநாய் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து வித்துவிட்டு வீதியோர குழிக்குள் படுத்துக்கொண்டது.

ஆள் அரவம் இல்லாமல் ஆதம்பட்டி கிராமம் நித்திரையில் முத்திரை பதித்துக்கொண்டு இருந்தது. தேர்தல் காலம் தவிர, வேறு எப்போதம் நாலு சக்கர வாகனங்கள் ஊருக்குள் வந்ததே கிடையாது.

இரவு ஒரு மணி, மண் சாலையில் புழுதி பறக்க ஒரு வெள்ளை நிற காரும், இரண்டு மூன்று இரு சக்கர வண்டிகளும் இருளை கிழித்துக்கொண்டு சென்றன.

“மாப்ள புளியங்கரைக்கு வண்டிய நேராவிடு” வண்டியில் இருந்த ஒருவன் சொன்னதும் கார் அங்கு தான் போய் நின்றது.

“கட்டுகள அவித்து விட்டுறாதிக…” தகாத வார்த்தையால் திட்டினான் ஒருவன்.

“ராத்திரிக்குள்ள எறிச்சானும். மசமசனு நிக்காம புளியமரத்து வாதுகள வெட்டுங்கப்பா” அழுத்தமாய் அதே நேரத்தில் மெதுவாக பேசினான் இன்னொருவன்.

வண்டிக்குள் இருந்து “ம்..ம்…’ சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டே இருந்தது.

“வேலு. அவ தலையில் அந்தக் கடப்பாரைனால ஒன்னு போடுடா…எரிக்கிறதுக்கு முன்னாடியே சாகட்டும்”அனலாய் கக்கினான் மருது.

“அவ தலையில மட்டும் போடக்கூடாது சகல. பக்கத்துல கெடக்குறான்ல அவனோட.. அதுலயே மிதிச்சாதான் என்னோட ஆத்திரம் தீரும்.

சொன்னபடியே செய்தான் வேலு.

நாலஞ்சு பேர் புளியமரத்துல ஏறி மரக்கிளைகளை வெட்டிக்கொண்டு இருந்தார்கள். புளியமரங்கள் அந்தக் குளத்துக் கரையில் அதிகம் இருப்பதால் அந்தக் குளத்துக்கு புளியக் கரைகுளம்னு பேரு.

அந்தக் குளத்துல வடக்குப் பக்கமாதான் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு சுடுகாடு. அந்தச் சுடுகாட்டுல தான் இப்ப அந்தச் சலசலப்பு கேட்டுக்கிட்டு இருக்கு.

வேகவேகமாய் வெட்டப்பட்ட மரக்கிளைகளை இடுப்பளவு உயரத்துக்கு அடுக்கினார்கள்.

“அந்த சாதி கெட்ட பயலையும், சிறுக்கி மகளையும் இழுத்து வாங்கடா” கொக்கரித்தான் முருகன்.

இழுத்து வந்து கீழே போட்டார்கள். “வாய் கட்ட மட்டும் அவித்து விடு; கத்தியே சாகட்டும்” மீண்டும் கர்ஜித்தான் முருகன்.

“அண்ணா விட்டுடுனா.. எங்காச்சும் போயற்றோம்..” வாயில் வழிந்த ரத்தததை விழுங்க முடியாமல் விழுங்கி கதறினாள் மீனாட்சி.

ரத்தத்தில் மூழ்கி கிடந்த கேசவனின் முகத்தைக் கூட அந்த இருட்டில் அவளல் பார்க்க முடியவில்லை.

கேசவனிடம் இருந்து “ம்… ம்…” ஒலி மட்டும் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தது.

“நம்ம சாதில ஆளே இல்லேனு… துப்புக்கெட்ட சாதில் பொறந்தவனுக்கு தூக்கி காட்டிருக்கா… இன்னும் என்ன மாப்ள நொண்ணே… வெண்ணேங்கிறா…” நெஞ்சுல ரெண்டு பக்கமும் மிதி மாப்ள உதட்டைக் கடித்தான் மருது.

சொன்னதுதான் தாமதம்.

அவர்களின் பேச்சுக்கு பலியாக்கினான் முருகன்.

ரெண்டு பேரையும் தூக்கி, அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகளில் போட்டார்கள்.

விறகு இடுக்குகளில் சிலர் லாரி டயர்களை சாய்த்து வைத்தார்கள்.

“அண்ணே… அண்ணே…” முனகல் சத்தம் நிற்கவே இல்லை.

இந்த கொடூர சாவுக்கு காரணம் காதலும் காமமும் தான்.

ஆதம்பட்டில பொட்டல் காடு முழுவதும் சீமைக்கருவ மரங்களும், வயல்வெளி தோறும் கரும்புத் தோட்டமும் தான் நிறைஞ்சு இருக்கும்.

மரம் வெட்டும் தொழிலும் கரும்பு வெட்டும் தொழிலும் தான் முக்கியமான தொழில்.

மரம் வெட்டும் தொழில் செஞ்சு வந்த மூக்கன் மகன் தான் கேசவன். இவன் கோயிலுக்கு ரொம்ப தூரத்துல நின்னு சாமி கும்புடுற சாதி.

கரும்பு வயல் பலவற்றுக்கும் சொந்தக்காரன் சுப்பையா. இவனுக்கு ரெண்டு பிள்ளைங்க. மூத்தவன் பேரு முருகன். அடுத்ததா பொறந்தவ தான் மீனாட்சி.

சுப்பையா, மீசைய முறுக்கி விடுற சாதில முக்கியமானவன்.

கரும்பு தோட்டம் பக்கமே கேசவன் மீனாட்சி காதல் மலர்ந்தது.

இலைமறை காயாகப் பழகிய காதலை முதலில் கண்டுபிடித்ததே மீனாட்சியின் உறவுக்காரன் மருதுதான். ஒருநாள்,

தோப்பு செய் ஓரமா புல்லு அறுத்துக்கொண்டு இருந்த மீனாட்சியின் இடுப்பை கிள்ளினான் மருது.

திடுக்கிட்டு திரும்பினாள் மீனாட்சி.

“மச்சான் எதும் பண்ணிடாதீங்க… வெலகிக்கங்க நா வீட்டுக்குப் போறேன்.”

“இங்க பாரு மீனாட்சி. இப்புடி வெளஞ்சு நிக்கிற உன்னப்பாத்தா எவனுக்குத்தான்டி சும்மா இருக்கத்தோணும். நீயா அந்த வரப்புப்பக்கம் வந்துரு… இல்ல இங்கேயே.. வேலைய முடிச்சுடுவேன்..”

“மச்சான் என்னய விட்டுரு. கதறினாள் காலில் விழுந்து.

கரும்புக்காட்டுக்குள்ளழுந்த கதறல் ஒலி எந்த செவிகளுக்கும் எட்டவே இல்லை.

“என்னடி… பத்தினிமாறி நடிக்கிற… சாதி கெட்ட பய மடில படுக்கத்தோனும்… எங்கள புடிக்காதோ… குச்சுக்குள்ள போன நாள்ல இருந்து ஒன்னப் பாத்துக்கிட்டு தான்டி இருக்கேன்.”

“மச்சான் அவர உசுரா நனச்சுருக்கேன். என்னய விட்டுருங்க…” மீண்டும் கதறினாள்.

“அவன் உசுரா வச்சுக்க… இல்ல… மசுரா வச்சுக்க.. எனக்குத் தேவை இப்ப படுக்கனும்” குரல்வளையை பிடித்தான் மருது.

தலையாட்டியவள்… வரப்புப்பக்கம் போவது போல் தலைதெறிக்க ஓடிவந்தாள் மீனாட்சி.

ஊருக்குள் வந்தவள் தன்னையே திடப்படுத்திக் கொண்டவளாய் வழக்கமான முகத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டாள்.

“என்கிட்டப் படுக்காதவ, எவன்கிட்டயும் படுக்கவே கூடாது சிந்தனையில் மூழ்கியபடி தென்னை மரத்தில் சாய்ந்திருந்தான் மருது. ஒவ்வொரு நாளும் மீனாட்சியை தொந்தரவு செய்துவந்தான் மருது.

ஒரு நாள் மாலை நேரம் வழக்கமாக அவள் வீட்டுக்கு வரும் வேலு மீனாட்சியிடம்…

“மீனாட்சி மருது உன்ன விடமாட்டான் போல.. அதுனால இன்னைக்கு ராத்திரி கேசவன கூட்டிட்டு எங்காச்சும் ஓடிடு கேசவன் கிட்ட சொல்லிட்டேன். ராத்திரி பதினோறு மணிய போல எனக்குத் தெரிஞ்சவன் ஒத்தக் கருப்பர் கோயில்கிட்ட “பைக்”ல நிப்பான். அவன்கூட போயிடுங்க. நா . முருகன ராத்திரி எங்காச்சும் கூட்டிப் போயிடுறேன் சொல்லி முடித்தான்.

வேலு சொன்னது போல் கேசவனும் காத்திருக்க, இருவரும் வேலுவின் நண்பனுடன் பைக்கில் சென்றனர்.

ஊரு எல்லையைக் கடந்து வண்டி ஏழு கிலோமீட்டர் தூரத்தில் நின்றது.

“என்னாச்சு… “பதட்டமானான் கேசவன்.

“வண்டில பெட்ரோல் இல்ல..” இதுக்கு மேல இப்ப யாரும் வரமாட்டாங்க.. எப்புடியாச்சம் நீங்க போயிடுங்க… அவன் சொல்லி முடிப்பதற்குள் எதிரே மூன்று வண்டிகளில் முருகன், மருது, வேலு இன்னும் சிலரும் நகரத்தில் இருந்து வந்து கொண்டு இருந்தனர்.

“இருங்க ஏதோ வண்டி வருது.. நீங்க அந்தப் பக்கம் ஒழுஞ்சுக்கங்க அவங்ககிட்ட பெட்ரோல் கிடைக்குதானு பாக்குறேன்”

“கை நீட்டினான்”

“மாப்ள வண்டிய நிறுத்து.. நவ்வா மரத்துப்பக்கம் யாரோ ரெண்டு பேரு போற மாறி இருக்கு” முருகனின் தோளைத் தட்டினான் மருது.

“மாப்ள நின்னு போயிட்டு வர்றேன்.” கிளம்பினான் மருது.

“நானும் வர்றேன் சகல…” வேலுவும் பின் தொடர்ந்தான். செல்போனில் இருந்த டார்ச் லைட்டை அந்த மரத்தின் பக்கமாக செலுத்தினான் மருது.

“மாப்ள ஓந்தங்கச்சியும் எச்சிக்ல பய மவனும்டா… கத்தினான் மருது. முருகனோ சாதிவெறியில் நித்தமும் குளிப்பவன்.

மருது, அடுத்து கத்துவதற்குள் பாய்ந்து வந்த முருகன் இருவரையும் தாக்கினான். எல்லோரும் தாக்க ஆரம்பித்தனர்.

வண்டியில் வந்தவனோ.. எதுவும் தெரியாதது போல் வண்டியை தள்ளிக்கொண்டு நகர்ந்து சென்றான்.

“மாப்ள இந்தக் கூத்து ரொம்ப நாளாவே நடக்குதுடா… இப்டியே விட்டா அந்த வேசி பயலுகளுக்கு கொழுப்பு வச்சப் போயிடும். ராத்திரியோட ராத்திரியா கொன்னு பொதச்சா தான் மானத்தோட வாழமுடியும்…” உசுப்பேற்றினான் மருது.

“பொதச்சா பின்னாடி சிக்கல் வந்துரும். எறிக்கிறது தான் நல்லது..”ஆலோசனை சொன்னான் இன்னொருவன்.

“இருவர் வாயையும் கைகளையும் கட்டி அங்குகிடந்த கட்டையில் ஆத்திரம் தீர அடித்தனர்.

மூச்சு மட்டுமே வந்தது. உடலை ரத்தம் நனைத்துக்கொண்டு இருந்தது.

மருது யாருக்கோ போன் செய்தான். சிலமணி நேரத்துக்குள் கார் ஒன்று வந்தது..

அந்தக் காருதான்… இப்போது புளியங்கரையில்…

“மாப்ள… உனக்கு புடிச்ச சனியன்.. இன்னையோட தொலையட்டும் இந்தப் பெட்ரோல ஊத்தி பத்தவையி.. சத்தமில்லாம எறிச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்போம்.. காரில் பிடித்த பெட்ரோலையும் தீப்பெட்டியையும் நீட்டினான் மருது.

“அண்ணே.. விட்ரு அண்ணே…. விட்ரு” முனகல் தொடர்ந்தது.

“இன்னும் சாகலடா…” பெரிய கட்டையால் ஓங்கி அடித்தான் ஒருவன்.

வேகமாய் பிடுங்கி பெட்ரோலை மருது ஊற்ற, பற்றவைத்தான் முருகன்.

தீ கொழுந்துவிட்டு எறிந்தது.

சேவல் கூவ ஆரம்பித்தது… தீயும் எறிந்து முடிந்திருந்தது.

“யாராச்சும் இது என்னனு கேட்டா… சீக்குப்பிடிச்ச மாட்ட எறிச்சுட்டதா சொல்லுங்க.. சந்தேகம் வராது..” முருகனின் கையை பிடித்துக்கொண்டு நடைபோட்டான் மருது.

தனது திட்டப்படி சாதித்தீயை கொழுத்திவிட்ட மகிழ்ச்சியில் வேலுவுக்கு கைகொடுத்து முருகனுடன் பம்பு செட்டுக்குப் படுக்கப்போனான் மருது.

காரும் கிளம்பியது…

ஆதம்பட்டியில் மட்டுமல்ல… பல ஊர்களில் இந்த சாம்பல் இரவோடு இரவாக சாதி வெளியர்களால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *