சாம்பல் குவியலில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 13,128 
 
 

காஸினோ தியேட்டர்.

எண்பத்தி நாலு பைசா டிக்கெட் க்யூ; மேட்னிக்காக…

தலைக்கு மேலே வெய்யில் கொளுத்துகிறது. பிளாட் ஃபாரம் சுடுகிறது. தார்ச்சாலை கொதிக்கிறது. சாலையில் சந்தடி அதிகம் இல்லை. பிரம்பு நாற்காலிக் கடை; ரேடியோ ரிப்பேர்க் கடை; வாட்ச் ரிப்பேர்க்கடை எல்லாமே தூங்கி வழிகின்றன. பான் புரோக்கர் கடையில் அட்டிகைக்கு பிரஷ் போட்டு தேய்த்துக் கொண்டிருக்கிறான்.

பக்கத்திலிருந்தவர் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறேன்…

மணி ரெண்டரையாகி யிருந்தது. ரெண்டே முக்காலுக்காம் டிக்கெட். படம்… ‘ரோமியோ அண்ட் ஜ்ஊலியட். ‘

அப்பா ‘ என்ன மாதிரியான காதல் ஓவியம்; எத்தனை முறை திரும்பத் திரும்ப வந்தாலும் அலுப்புத் தட்டாதாமே… ‘ என்ன அற்புதமான ஓவியமாக தீட்டிக் கொடுத்துப் போய் விட்டார் ஷேக்ஸ்பியர்; மகாகவி தான்… ‘ இளசுகளாகவே போட்டு தத்ரூபமாகவே படமெடுத்திருக்கிறாராமே இத்தாலிய டைரக்டர்… ‘

மனம் பார்க்கப் போகும் படத்தைப் பற்றி அசைபோடுகிறது. டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ… ‘ எனக்கு முன்னால் எத்தனை பேர் என்று தெரியவில்லை. கேட்டுக்குள் எத்தனை பேரோ… வெளியவே இவ்வளவு ‘ பின்னாலும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

‘சிவசங்கரனை பார்த்தியோ… ‘

பக்கத்தில் எனக்கு முன்னால் நின்றிருந்த ஒருத்தர் அடுத்தவரைக் கேட்கிறார். அவர்கள் ஒரு நாலைந்து பேர் ஒரே ‘குரூப் ‘ போலத் தெரிகிறது. அவர்களுக்குள் எதுவோ பேசிக் கொள்கிறார்கள்.

‘பார்த்தனே….அவா ஆத்துலே… ‘

‘சிட்டிக்கு வந்தேன்னா நேக்கு தங்கறதுக்கு செளகர்யமில்லியேன்னு கவலை கெடையாது. எவா ஆத்துலன்னாலும் தங்கிப் புடுவேன். ‘

‘பலராமன் கூட இங்கேதான் அக்கவுண்ட்ஸ் ஆபீஸ்லே வேல செய்யறாப்ல இருக்கு… ‘

‘ஆமா பார்த்தியோ…என்னமாய் ஆளாயிருக்கான். நல்ல ‘இன் கம் ‘ சைடு இன் கம். ‘

‘பார்க்கலே கேள்விப்பட்டேன். ‘

‘எங்க பிளாக்லே தாம்பா வருமானத்துக்கே ஒண்ணும் வழியில்லே எல்லாம் கஞ்சனுங்க. ‘

‘கஞ்சனுங்கன்னா…நோட்ட நீட்டாம கையெழுத்துப்போடக் கூடாது. எங்க ஆபீஸில அதெல்லாம் ஒண்ணும் கஷ்டம் கெடையாதுப்பா…எல்லாம் நம்ம ஹெட்க்ளார்க் கவனிச்சுக்குவான். ரொம்ப சாமர்த்தியம்…அவனே வாங்கி, டென் பிரசண்டோ…டொன்டி பிரசண்டோ எடுத்துக்னு குடுத்துடுவான். ‘

‘நான் இதுவரிக்கும் பணம்னு பைசா கைநீட்டி வாங்கனது கெடையாது. எது வேணும்னாலும் ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும்…வெறவா…அரிசியா…புளியா…எதுவாயிருந்தாலும் சொன்ன மறுநிமிஷம் ஊடு வந்து சேர்ந்துடும்… ‘

‘அதெல்லாம் ஏண்டாப்பா வெளியில் பேசிக்கிறேள். ‘

‘இந்தக் காலத்துல எவன் வாங்காத இருக்கான். ‘

அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேரம் நகர்கிற மாதிரியாய்த் தெரியவில்லை. விநாடி முள் கூட நொண்டித்தனமாய் அடியெடுத்து வைக்கிறது.

திடாரென்று க்யூவின் ஒரு பக்கம் சிரிப்பொலி…

என்ன சிலுமிஷமோ என்று திரும்புகிறேன்.

சாலையில் ஒரு பெண். பைத்தியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தளதளப்பான சதை வாடி வதங்கி ஒட்டிப் போய்விட்டால் எப்படியிருக்கும்…அந்த மாதிரி; அம்மணம் ‘ இடுப்பில் புடவை கிழிசலை துண்டு மாதிரி கட்டியிருக்கிறாள்…துண்டு மாதிரி ‘ மேலே எதுவும் இல்லை. கீழேயும் பிரயோசனப் படவில்லை.

குறுக்கும் நெடுக்குமாய் சாலையில் நடக்கிறாள். சிலர் சிரிக்கிறார்கள். சிலர் அருவருக்கிறார்கள். முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். சூள் கொடுக்கிறார்கள்.

அவள் இப்படியும் அப்படியும் சொஃபியாலாரன் மாதிரி நடக்கிறாள். மதர்ப்பான நடை தான் ‘ எப்படியிருக்கிறோம் என்பதையே மறந்த நடை; ஒவ்வொரு அடியிலும் கால் இடைவெளி அகல்கிறது. கறுத்த சரீரம். முகத்தில் எந்த வித உணர்ச்சி பாவமும் இல்லை. உயிர்க்காட்சி சாலைக்குப் போய் மிருகங்களை வேடிக்கை பார்ப்பது மாதிரி ஜனங்களைப் பார்க்கிறாள். க்யூவைப் பார்க்கிறாள். சற்று நின்று இடுப்பில் கை வைத்து ஆடிக் காட்டுகிறாள் ஐயோ…ஐயோ…

பக்கத்திலிருந்த நாலு பேரும் தலையைக் குனிந்து கொள்ளுகிறார்கள். ‘கர்மம்…கர்மம்… ‘

அவள் இடுப்பை ஆட்டி, உடம்பை ஆட்டி வாயை இளித்து ஆடிக் கொண்டிருக்கிறாள். சகிப்புத் தன்மையுள்ள துணிச்சலான கட்டைகள் சில வேடிக்கை பார்க்கின்றன.

நேரம் நகர்கிறது…மந்தமாய் அசிங்கமாய் ‘

திடாரென்று ஒரு சத்தம் பட்டாளத்தில் ‘பெரேட் ‘ வாங்குவது மாதிரி.

‘அட்டே…ன்ஷன் ‘

எல்லோருடைய கவனமும் அங்கே திரும்புகிறது.

நாற்பத்தைந்து வயதுக் கிழவன் ஒருத்தன். கிழிசல் காக்கி ‘பேன்ட் ‘ கிழிசல் மங்கல் சட்டை; மேலே அழுக்குக் கோட்டு. தடி ஒன்றை துப்பாக்கி மாதிரி தோளில் தாங்கி ‘சோல்ஜர் ‘ நடைநடந்து கொஞ்ச தூரம் போகிறான். சாலையை வலது காலால் உதைத்து நிற்கிறான்.

சடாலென்று திரும்புகிறான். பொட்டென்று தரையில் விழுந்து பட படவென்று துப்பாக்கியால் சுடுவது மாதிரி ஒலியெழுப்புகிறான். தடியை இரண்டு கையாலும் பிடித்து, குப்புறப் படுத்து…சுட்டுத் தள்ளுகிறான். தடிதான் துப்பாக்கி.

பிறகு தரையோடு தரையாக ஊர்ந்த படியே கொஞ்சதூரம் முன்னேறுகிறான். தலையைத் தூக்காமல் பதுங்கிப் பதுங்கி ரொம்ப எச்சரிக்கையாக…பட்டென்று எழுந்து மீண்டும் ‘மார்ச் ‘ பண்ணுகிறான்.

கம்பீரமான நடை; மெலிந்த உடம்பானாலும் உலக்கை மாதிரி வலுவான, நரம்புகள் புடைத்த கைகள். நரைத்துப் பழுத்த வறண்ட தலை. சுருங்கி ஒட்டிய முகம்.

‘லெப்…ரைட்…லெப்….ரைட்லெப்…லெப்… ‘

நடை வேகமாக முன்னேறுகிறது.

‘எபெளட் டர்ன்… ‘

நின்று திரும்புகிறான். மீண்டும் ‘லெப்…ரைட்… ‘ மீண்டும் பயரிங்.

பட்டாளத்துப் பைத்தியம் போலிருக்கிறது.

நான்கு பேரும் சிரிக்கிறார்கள். ரொம்ப ஸ்வாரஸ்யமாகவும் உற்சாகமாகவும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

சில கண்கள் திருட்டுத்தனமாய் பெண் பைத்தியத்தை நோட்டம் விடுகிறது. நாலுபேரி நம்மை பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்துடன். கூச்சத்துடன்…

பட்டாளத்துப் பைத்தியம் மும்முரமாய் சுடுகிறது. போர்க்கால நடவடிக்கை மாதிரி ஒரு தத்ரூபமான உணர்வு முன்னே எழுகிறது. எல்லோருக்குமே அது நல்ல வேடிக்கை…எங்கே பார்க்க முடிகிறது இந்த மாதிரி…

‘ஐயா ‘ ஒடம்பு செரியில்லாதவன்…ஐயா… ‘

இது புதுக்குரல்; பிச்சைதான். குண்டு பூசணிக்காய் மாதிரி கனமான ஒரு ஆள். இன்னும் கூட குண்டு என்று சொல்லலாம். எதுவோ கெட்ட நீர் ஏறி உப்பி விட்டாற் போலிருக்கிறது. கிழம்தான். ஊதிப்போன கிழம். கூனல் முதுகு நிமிர முடியாது போலிருக்கிறது. கையில் தடி ஊன்றி ஊன்றி வருகிறார். கூடவே ஒரு சிறு பெண்ணும் தடியைப் பிடித்துக் கொண்டு வருகிறாள். ஒரு கை ஏந்திக் கொண்டு இடது அக்குளில் ஒரு துணி மூட்டை கந்தல் அழுக்கு.

‘ஐயா…ஐயா… ‘ஒடம்பு செரியில்லாதவனுக்கு தருமம் போடுங்கையா… ‘

கிழவர் முகம் சரியாய்த் தெரியவில்லை. குனிந்தபடியேதான் கேட்கிறார். வழுக்கைத் தலைதான் தெரிகிறது. பக்கத்தில் கையேந்தி வரும் பெண்ணுக்கு நாலைந்து வயது இருக்கும். வெறும் பாவாடை கட்டியிருக்கிறாள். மங்கிய முகம். மங்கிய கண்கள். சின்னக் கைகள். பிச்சை காசுக்காக விரிந்து திறந்து ஏந்தியிருக்கிறது. வெள்ளையான உள்ளங்கை. சின்னச்சின்ன விரல்கள்–கொத்தவரை மாதிரி.

பக்கத்திலிருப்பவர்கள் கிழவருக்காக வழி விட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

கண்ணு தெரியுமா தெரியாதா என்று புரியவில்லை. கையை நீட்டித் துழாவி க்யூவிலிருப்பவர்களைத் தொட்டு ‘அம்மா…எம்புள்ள மாதிரி எம்புள்ள… ‘என்கிறார்.

உப்பலும் வெடிப்புமாய் கனத்திருக்கும், அருவருப்பூட்டும் கைகள் எங்கே தன் மேல் பட்டுவிடுமோ என்று ஒவ்வொரு வரும் நகர்ந்து வழி விடுகின்றனர். கியூ நெளிந்து பிதுங்கி வளைந்து ‘பெண்ட் ‘ ஆகிறது.

‘த பாப்பா…ஓரமா இட்டுக்னு போவமாட்டிய ‘ ‘

‘அப்பா…அப்பா…கோவிச்சுக்காத…நீ…என் புள்ள மாதிரி..கோவிச்சுக்காதப்பா… ‘

அவர் நகர்ந்து கொண்டே போகிறார். கையால் துழாவி தடவியபடி…கியூ முகம் சுளித்து உடம்பை பின்னுக்கிழுத்து அவர் தன்னைக் கடக்கும் வரை காத்திருந்து ஒரு ‘அப்பாடா ‘ ‘ போடுகிறது.

சிறுமி மெளனமாகவே கூடவே போகிறாள். என்னமோ மாதிரியிருக்கிறது. என்னிடம் மெய்யாலுமே சில்லரையில்லை. போய் மாற்றிக் கொண்டு வரலாமா என்றால் வெட்கமாக இருக்கிறது.

ரோட்டில் பைத்தியம் ஆடுகிறது. பாட்டுப்பாடி டப்பாங்குத்து ஆடிக் காட்டுகிறது. உயிரில்லாமல் இளிக்கிறது. அதைக் கடந்து போகக் கூச்சம்…

‘ஒடம்புக்கு முடியாதவன்யா ‘ பெரியவர் தடவிக் கொண்டே நகர்கிறார்.

எங்கிருந்தோ ரெண்டு பெண்பசங்கள் ஓடி வருகின்றன; சிகப்பு ஜாக்கெட், சிகப்பு நிக்கர். பிச்சடை போட்ட தலை. பார்ப்பதற்கு ரெண்டும் ரெட்டைப் பிறவிகள் மாதிரி தெரிகிறது. ஆனால் அக்கா தங்கைகளாகத்தான் இருக்கும். ஒரு வயது வித்தியாசமிருக்கலாம்.

இரண்டும் ஓடி வந்து ஆளுக்கொரு பக்கம் நிற்கின்றன–சர்க்கஸ்காரிகள் மாதிரி.

இரண்டும் பல்டி அடிக்கின்றன. இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி கால்களைத் தூக்கிப்போட்டு…தனித்தனியாய் பல்டி போடுகின்றன. தலைகீழாய் நின்று, தலைகீழாய் கைகளால் நடந்து…ரப்பர் மாதிரி வளைந்து உடம்பை முறுக்கி…மல்லாந்து இடது காலாலும் வலது கையாலும் நின்று…வலதுகாலாலும் இடது கையாலும் நின்று…மாற்றி மாற்றி என்னென்னவோ வித்தைகள். அந்த கொதிக்கும் வெய்யிலில்.

எல்லோரும் வியப்புடன் பார்க்கிறார்கள்.

சின்னப் பசங்களா யிருந்தாலும் இவ்வளவு தூரம் கற்று வைத்துக் கொண்டிருக்கின்றனவே…எப்படி தான் உடம்பு வளைகிறதோ…யார் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்…

தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் அது பாட்டுக்கு செய்கின்றன. பல்டி, பஸ்கி….கழைக்கூத்து மாதிரிபாலன்ஸ்…வித்தை…சட்டென்று இரண்டும் நிற்கின்றன. ஒன்றுக் கொன்று முதுகைத் தேய்த்துக் கொண்டு எதிரெதிர் திசையில் முகத்தைக் காட்டி, பின் வாட்டத்தில் கைகொடுத்து கோர்த்துக் கொள்ளுகின்றன. ஒன்று மாற்றி ஒன்று தூக்கி அடித்து சுழல்கின்றன. தடக்…தடக்…என்று வண்டிச் சக்கரம் மாதிரி….ரொம்ப நேக்கு வேண்டும்.

‘சார் ‘ ‘

வெறும் எலும்பாலேயே செய்து வைத்த மாதிரி ஒருவன். கிழிசல் சட்டை நீட்டமாய் கெளபீனத்தை மறைக்கும் அளவுக்கு. கீழே ஒன்றும் இல்லை. சம்சாரமோ எவளோ தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். துவைத்துக் கட்டிய சாயம் போன புடவை; ஜாக்கெட்; கழுத்தில் அழுக்கேறிய மஞ்சள் கயிறு. ஏறக்குறைய கருப்பாய். சீவி சிங்காரித்து பொட்டு வைத்திருக்கிறாள். குளிக்காமல் சிங்காரித்துக் கொண்டால் மூஞ்சியில் எண்ணெய் வழியுமே… பிசுபிசுக்குமே…அந்த மாதிரி சிங்காரம்.

ஒரு கையால் எலும்புக் கூட்டைத் தாங்கிக் கொண்டு கையை ஏந்திக் கொண்டே வருகிறாள்.

‘சார்…சார் ‘

எலும்பும் அவளும் மாற்றி மாற்றி குரல் கொடுக்கின்றன.

கையேந்தி நகர்கிறது.

பக்கத்திலிருப்பவர்கள் மூஞ்சை இறுக்கிக்கொண்டு பின்னால் தள்ளி சுவற்றை ஒட்டிச் சாய்ந்து விலகிக் கொள்ளுகிறார்கள்.

‘சார்…சார் ‘

உணர்ச்சியற்ற குரல். பழக்கப்பட்ட இயக்கம். லேசாய் நகர்கிறார்கள்.

நேரம் நத்தையாய் நகர்கிறது. அவர்களைப் போலவே. காலில் செருப்பு இருந்த போதிலும் வெய்யில் கணுக்காலெல்லாம் தகிக்கிற மாதிரி. மண்டைவேறு மயிரெல்லாம் பொசுங்கி விடும் போலிருக்கிறது.

யாரும் எதையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏதோ சாவி கொடுத்து இயங்கி விட்ட மாதிரி அது அது தன் காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றது.

சோல்ஜர் இன்னும் போரிலிருந்து ஓய்வு பெறவில்லை.

கோடியில் புதுசாக ஒரு உருவம். கையில் ஒரு படம். படமோ என்னவோ கண்ணாடி சட்டம் பிரேம் போட்டது. முகமெல்லாம் கனமாய் பெரிசு பெருசாய் அம்மைத் தழும்புகள்.அம்மையில் கண்கள் பறிபோய் விட்டிருந்தன. ஒற்றை நாடி தேகம். முழுக்கை சட்டை வேட்டி. குளித்து துவைத்து சுத்தமாய் இருந்தார். பிச்சைக்காக தயாராய் புறப்பட்டு வந்த மாதிரி தினப்படி டூட்டிக்கு புறப்படுகிறவரை போகிற அசப்பில் கண்டு கொள்ளலாமே அந்த மாதிரி.

‘சார்…சார்… ‘ என்று நடந்து வருகிறார் அவர். பக்கத்தில் வேஸ்டியைப் பிடித்துக் கொண்டு ஒருபையன்.

உள்ளே மணியடிக்கும் சத்தம் கேட்கிறது.

‘கியூ ‘ சுறுசுறுப்படைந்து உடம்பை முறுக்கிக் கொண்டு நிற்கிறது; அடுத்த பெல்லுக்கு டிக்கட் கொடுக்க ஆரம்பித்து விடுவான்.

மணி சத்தம் கேட்டதுமே எல்லா வித்தைகளும் நின்று விட்டன. சோல்ஜர் தன் போர்ப் பணியை முடித்துக் கொண்டு துப்பாக்கியோடு சேர்த்து இரண்டு கையாலும் கும்பிட்டு யாசகம் கேட்கிறார்.

பைத்தியம் கை நீட்டுகிறது–தூர நின்றபடியே.

பெண் பசங்களும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடி கையேந்த ஆரம்பித்து விட்டன.

ஆரம்பத்திலிருந்தே அதுகள் ரெண்டையும்தான் வியப்புடன் கவனித்துக் கொண்டு வருகிறேன். அதுகள் நிற்பது, நடப்பது, வளைவது, நிமிர்வது…எல்லாம், வித்தை இது தான். இதற்குமேலே யாருக்கும் முடியாது என்னைத் தவிர என்பது மாதிரி…கணக்குப் போட்டாற்போல செய்வதும், உடம்புவாகும்..அடடா ‘ ஆனால் அந்த கண்கள்…உலகத்தையே நொறுக்கி வாயில் போட்டு அரைத்து சாப்பிட்டுவிட வேகம் கொண்ட மாதிரி…எதைப் பிடுங்கலாமோ என்று …அதில் என்ன ஆவேசம் ‘ இவ்வளவு வித்தை செய்ததுகளே…நடுவில் ஒரு தடவையாவது அதுகளுக்குள் எதையாவது பேசிக்கொண்டிருக்குமா…இறுகின உதடு இறுகினதுதானே; அந்த நடையும், ஓட்டமும், கையேந்துவதும் எல்லாமே ஒரு பரபரப்புத்தான். உள்ளேயிருந்து எதுவோ பிடித்துத் தள்ளுவது மாதிரி வேகம். வயசானவர்கள் யாராவது பார்த்தால் கழுதைகளுக்கு ரொம்ப அலைச்சல். வெடியாததுங்க என்று தான் சொல்வார்கள். அப்படி…

அதுகள் கையேந்தி வருகின்றன.

அம்மைத் தழும்பு எதிர்கொண்டழைக்கிறது.

‘சார்…சார் ‘

கிட்டே நெருங்குகிறது. கையிலிருப்பது படமில்லை. என்னமோ சர்டிபிகேட். இரண்டு கையாலும் பிடித்து க்யூவுக்கு காட்டியபடியே வருகிறார்.

பக்கத்திலிருந்த நால்வரில் ஒருவர், டெரிலின் சட்டைப் பைக்குள் கையை விடுகிறார். ரொம்ப நேரமாய் வெளியே தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சதுர ஒற்றைப் பைசா ஒன்றை எடுக்கிறார்.

தன் நண்பர்கள் மூவரையும் பார்க்கிறார். ‘போடட்டுமா… ‘ என்று ‘சஜ்ஜஷன் ‘ கேட்கிறார் போலிருக்கிறது.

எல்லாம் பெரிய ஆபீஸர்கள். கசப்பாய் தலை ஆட்டுகிறார்கள். ‘ஏதாவது செய் உன் இஷ்டம் ‘ என்பது மாதிரி.

ஒற்றைப் பைசாவை இரண்டு விரல்களின் நுனியாலும் பிடித்து, அம்மைப் பெரியவரின் கையிலிருந்த கண்ணாடி போட்ட சர்டிபிகேட்டில் அழகாக வைத்து விடுகிறார் அவர். பைசா கொஞ்சம் வழுக்கி சரிந்து வந்து சட்ட ஓரம் தொத்தி நிற்கிறது.

‘யோவ் காசு உழுந்துடப் போவுது ‘ என் இடப்பக்கமிருந்த ஒருவன் குரல் கொடுத்தான்.

‘காசுப்பா ‘ வேஷ்டியைப் பிடித்துக் கொண்டிருந்த பையன். ‘என்னா ? ‘ அவிந்துபோன கண்களுடன் முகத்தை நிமிர்த்திக் கேட்கிறார் அவர்.

‘காசுப்பா; ஒரு பைசா ‘ ‘

‘யாரு போட்டது ? ‘ ஒரு விநாடி மெளனத்திற்குப் பிறகு கேட்டார். அவர் குரல் மாறியிருந்தது. அது வேதனையா…சூடா…என்பது தெரியவில்லை.

‘அதோ அவருப்பா… ‘

‘எங்க காட்டு… ‘

பையன் அம்மைக்காரரை பின்னோக்கி ரெண்டு தப்படி அழைத்து வந்து நிறுத்துகிறான்.

‘சார் நீங்கதானா போட்டது ? உங்கள என்னால பாக்க முடியாது. இருந்தாலும் இந்த ஒத்த பைசாவ எடுத்துக்குங்க ‘

நாலுபேர் மூஞ்சியிலும் அசடு வழிகிறது. ஜாடை மாடையாய் மற்றவர்களைப் பார்க்கிறான். பேசாமல் நிற்கிறார்கள். மூஞ்சியிலடிபட்ட மாதிரி.

‘ஒரு ரூபா போடுவாங்கன்னு பார்த்தியோ….. ‘ ‘

‘எனக்கு ஏன் சார் அந்த ஆசை…வேணாம் நீங்க எடுத்துக்கோங்க ‘ படத்தை சமமாக்கி விரலால் தடவுகிறார் காசை.

‘தொரை ஒரு பைசா வாங்க மாட்டாராமா… ‘ ‘

‘பிச்ச எடுக்கறதுல வேற ரோஷம் ‘

‘அதுக்கு பிச்ச எடுக்கறதுக்கு வரக்கூடாது ‘

‘ஏண்டாப்பா அவாள குத்தம் சொல்றேள். வாண்டான்னுட்டா திரும்ப வாங்கினுட வேண்டியதுதானே…… ‘

அம்மை தடவி எடுத்துப் போட்ட காசை அவர் கை நீட்டி வாங்கிக் கொள்கிறார்.

‘கோவிச்சுக்காதீங்க சார் நானும் ஒரு காலத்துல நல்ல படியாயிருந்தவன் தான். டாச்சரா உத்தியோகம் பார்த்தவன் தான். அம்ம வந்து எல்லாத்தையும் வாரிக்னு பூடுச்சு சார். சம்சாரத்தையும் கொண்டுக்னு பூடுச்சி…பி.எப்.பணம்….உத்தியோகத்துல இருந்த அப்பவே கடன் வாங்கி தின்னாச்சி..இருந்தா கூடம் எவ்வளவோ நாளைக்கு ?…பிச்ச எடுக்கறேன் சார் ‘ இந்த புள்ள கண்டி இல்லேண்ணா நானும் அவளோட போயிட்டிருப்பேன். ஒரு பைசா போடறீங்களே ‘

ஒரு பைசா…ஒங்களுக்கு என்னா தெரியும். பரவால்ல வச்சிக்கோங்க சார். ‘

சலிப்புடன் நகர்கிறார், அம்மை; கூடவே பையன். அப்பா முகத்தைப் பார்த்தபடி தொடை வேஷ்டியைப் பிடித்துக் கொண்டு…பாவம்.

ரெண்டாவது பெல் உள்ளிருந்து அடிக்கிறது.

‘கியூ ‘ ஸ்பிரிங் மாதிரி…இழுத்து விட்ட ஸ்பிரிங் மாதிரி…சுருங்குகிறது. தாராளமாய் இடம் விட்டு நின்றவர்கள் நெருக்கி ஒருவரையொருவர் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உள்ளே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டிருப்பான்.

கியூ லேசாய் அசைந்து நகர்கிறது.

‘சார்…சார் ‘

‘ஐயா ‘ எம்புள்ள மாதிரி… ‘

‘சார் அண்ணே… ‘

நேர நெருக்கத்தில் அவலங்கள் சுருதி கூட்டுகின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த இடம் காலியாய் வெறிச்சிட்டு விடும் என்ற பயமும் பதட்டமும் குரலில் தொனிக்கிறது.

கியூ லேசாய் கேட்டுக்குள் நுழைந்து நகர்கிறது. தொடர்ச்சி வெளியில் நீண்டு கிடக்கிறது. இன்னமும் நாங்கள் வெளியவேயிருக்கறோம்.

வித்தை காட்டிய பெண் பசங்களுக்குத்தான் வசூல் கொஞ்சம் அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். நிறையப் பேர் போட்ட மாதிரியிருந்தது. அது அது தனித் தனியே வசூலை முடித்துக் கொண்டபின் ஒன்றாக அப்பால் ஓடின.

சற்று தூரத்தில் அதுகள், ரெண்டும்…

‘உன்னிது எவ்வளோ… ? ‘

‘உன்னிது எவ்வளோ…சொன்னாத்தான் ‘

‘பதினாலு பைசா ‘

‘இரவத்தி ரெண்டு பைசா எனக்கு ‘ கையை விரித்துக் காட்டுகிறாள். ‘பன்னு துன்னப் போறேன். பட்டாணி வாங்கித் துன்னப்போறேன் ‘ கண்களில் எக்காளம் வெளிப்படுகிறது.

‘நானுக்கா… ‘ ஏக்கமாய்க் கேட்கிறாள்.

‘எப்பிடியாவது போ. பதினாலு பைசாதான வச்சிக்கீறே ‘

‘அப்ப நீ மட்டும் பன்னு துன்னப் போறியா ? ‘

‘ஆமா. ‘

‘ரெண்டு பேரும் ஒண்ணாதான சேஞ்சோம் ‘ ‘

‘நான் தான நெறைய காசு வச்சிக்கீறேன். எனக்குதான நெறைய போட்டாங்க ‘

ஒரு கணம் அமைதி. அந்த ஒரு கணத்தில் இரண்டும் ஒன்றையொன்று முட்டத் தயாராயிருக்கும் செம்மறிக் கடாக்கள் மாதிரி பார்த்துக் கொண்டு நிற்கின்றன.

‘அப்ப எனக்கு பன்னு வாங்கித் தரமாட்டியா ? ‘ உறுதியாய்க் கேட்டாள் அவள்.

‘ஊஹ்ஊம்…நீ எப்படியாவது போ ‘ ‘ கறாராய் வந்தது பதில். சடாலென்று ரோட்டில் பறந்தது சில்லரை. பதினாலு பைசாக்களையும் விட்டெறிந்தாள் சின்னவள்.

‘எல்லாத்தியும் நீயே பொறிக்கினுபோய் தின்னுபோ ‘ ‘

குறைந்த சில்லறையைப் பொறுக்கிக்கொண்ட சிறுமி, தங்கச்சியைப் பார்த்துச் சொன்னாள் ‘

‘சரி சரி சிணுங்காத; வா….வாங்கித் தர்ரேன் ‘

கூட்டம் பிதுங்கி வெளியே வந்தது. ‘ஹவுஸ்ஃபுல்லாம் ‘ ரொம்ப சந்தோஷம் ‘ அப்பால் நகர்ந்து நடந்தேன். ‘ரோமியோ வாவது ‘ ஜ்ஊலியட்டாவது… ‘

– ஏப்ரல் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *