கல்லூரி கனவுகளுடன் கார்கி காலை ஏழு மணிக்கே ஹாஸ்டலில் தயாரானதை உடனிருக்கும் மாணவிகள் ஆச்சர்யமாக பார்த்தனர்!
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்க்கிக்கு நன்றாக படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்ப நிலையை உயர்த்த வேண்டுமென்பது லட்சியமாக இருந்தது!
தாய்,தந்தை இரண்டுபேருமே வசதியில்லாததால் படிக்க முடியாதவர்கள்,தன் பெண்ணை படிக்க வைத்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்பதற்க்காக வேலைக்கு சென்று பெறும் சம்பளத்தை சிக்கனமாக செலவழித்து,சேமித்து,பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
பள்ளித் தேர்வில் முதலாவதாக தேர்ச்சி பெற்று மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்திலேயே முதலிடத்திலுள்ள தொழில்நுட்ப கல்லூரியில், கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்க சேர்ந்துள்ளாள்!
மிகவும் அழகான இளவரசி போன்ற தோற்றம் கொண்ட கார்க்கியைப்பார்த்து உடன் படிப்போரே பொறாமை கொள்ளச்செய்திருந்தது,அவளது செயல்கள். கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வதால் பேராசிரியர்களின் மனதில் சீக்கிரம் இடம்பெற்றது மற்ற மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவளை மற்ற எந்த நிகழ்வுகளிலும் முன்னிலைப்படுத்தாமல் பொறாமையால் தவிர்த்தனர்!
மூன்று மாதங்களில் பலர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் நிலையில், கார்க்கி மட்டும் வகுப்பறை கற்றல் முடிந்ததும் நூலகத்துக்கு சென்று படிக்கும் பழக்கத்தை வாடிக்கையாக்கியிருந்தாள்!
இவளைப்போலவே நளன் எனும் மாணவன் நூலகத்துக்கு வர நண்பர்களானார்கள். பாடங்களிலுள்ள சந்தேகங்களை பகிர்ந்து பலனடைந்தனர். மற்றவர்கள் இவர்களை காதலர்களாக சித்தரிக்கபோக,நளனுடன் பேசுவதையும் தவிர்த்தாள் கார்க்கி!
நளன் அடிக்கடி விடுமுறையெடுப்பதையும்,குடித்து விட்டு ரோட்டில் கிடப்பதையும் கண்டு அவனது நிலையறிய அவனை சந்தித்தாள். நளன் தன்னை காதலிப்பதாக கூறியது கார்கிக்கு பிடிக்கவில்லை!
“நான் உன்னை மற்ற பசங்களுக்கு மாற்றான லட்சிய மாணவனா தான் நினைச்சு பழகினேன். கல்லூரிக்கு வருவது பாடம் படிக்கத்தான். காதல் பண்ண இல்லை. ஆமா நான் தெரியாமத்தான் கேட்கிறேன். ஒரு பொண்ணு,ஓர் ஆணோட பேசினாலே காதல்,கல்யாணம் என கற்பனையில் குடும்பம் நடத்திட வேண்டியது தானா…? நீங்க மட்டுமே விரும்பற பெண் பேசலைன்னா,தண்ணியடிச்சிட்டு படிக்காம லீவு போட்டா படிப்பு..? எதிர்காலம்..? உங்களை குறை சொல்ல என்ன இருக்கு? எல்லாம் சினிமா பண்ணற வேலை. சினிமால பறந்து,பறந்து பத்து பேரை கதாநாயகன் அடிக்கிற மாதிரி உங்களால அடிக்க முடியுமா…?”
என கார்க்கி நளனைப்பார்த்து கேட்டது அவனுக்கு சிந்தனையை திருப்பிப்போட்டது போலிருந்தது!
“இத பாருங்க நளன், நான் படிக்கத்தான் காலேஜ்ல சேர்ந்திருக்கேன். எங்க பரம்பரைலயே முதன் முதலா நான் தான் காலேஜ் வாசலையே மிதிச்சிருக்கேன். என்னோட அப்பா,அம்மா உழைக்கிற பணத்தில அவங்க சாப்பிடறத கூட குறைச்சுட்டு எனக்கு பீஸ் கட்டறாங்க. நான் படிச்சு நல்ல வேலைல சேர்ந்து,எனக்குன்னு சில குறிக்கோள்,லட்சியம்னு இருக்கறத நிறைவேத்திட்டு பணம் சேர்த்துட்டு, அந்த சமயம் என்னோட தகுதிக்கேற்ற பையனை கல்யாணம்பண்ணி வாழலான்னு இருக்கேன். படிக்க வந்ததே பாடத்தோட சேர்த்து ஒழுக்கம்,பண்பை வளர்த்துக்கத்தான். அதை இழக்கறதுக்கில்லை. இந்த தண்ணி அது இதுன்னு மிரட்டி பரிதாபம் தேடி ,என்னை பணியவச்சு உங்களோட விருப்பத்துக்கு என்னை பயன்படுத்த நினைச்சிடாதீங்க. அந்த மாதிரி சராசரி பொண்ணு நாங்கிடையாது”என நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லிச்சென்ற கார்க்கியை ஆச்சர்யமாக பார்த்ததோடு,ஒரு நல்ல நட்பை இழந்ததை எண்ணி வருந்தினான் நளன்!