கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 1,629 
 

மாலை வேளை ! பேருந்தை எதிர்பார்த்து நிறைய பேர் காத்திருந்தனர்

போக்கு வரத்து நெரிசலும் மிகுந்து இருந்தது. நானும் பேருந்துவை எதிர்பார்த்து காத்திருந்தே.

எதிரில் ஒரு கூட்டம், சுமார் நான்கைந்து பேர்கள் இருக்கலாம். ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டுக்கொண்டு வெடிச்சிரிப்புடன் நடந்து வந்து கோண்டிருந்தனர்.

அவர்கள் நடந்து வரும் தோரணையை பார்த்து எனக்கு இரத்தம் கொதித்தது, என்ன ஒரு அகம்பாவம், வருவோரையும் போவோரையும் இடித்துக்கொண்டு முறைப்பவர்களை பார்த்து நக்கலான பார்வை, அவர்களுக்குள் கிண்டல், சத்தமிட்ட சிரிப்பு.

இது பொது இடம் என்று கூட தெரியாத ஜடங்கள் ! இதே வெளி நாடாய் இருந்தால் இப்படி எல்லாம் பொது இடத்தில் நடந்து கொள்ள முடியுமா? ஐந்தே நிமிடத்தில் போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு போய்விடாதா? சே நம்ம நாட்டுல மட்டும் தான் இப்படி !

வரட்டும் என் பக்கம், சூடாய் இரண்டு வார்த்தை பேசி விடவேண்டும். என்ன நினைச்சுகிட்டு இருக்கறீங்க? இது என்ன உங்க வீடுன்னு நினைச்சுகிட்டீங்களா? அப்படீன்னு கேட்டுடணும். அவர்களும் எதிர்த்து பேச ஆரம்பித்தால்?

நாமும் சுடச்சுட சண்டைக்கு போயிடணும், என்ன நினைச்சுகிட்டு இருக்கானுங்க?

எனக்கு இரண்டு பேர் சப்போர்ட்டுக்கு வரமாட்டானுங்களா? அப்படித்தான் வரலையின்னா என்ன? அடிதடிக்கு வருவானுங்களா? நம்மானால இரண்டு பேரை சமாளிக்க முடியாதா?

ஒரு பொண்ணு இரண்டு ஆம்பளைகளை எதிர்த்து சண்டை போட்டிருக்கறதா பேப்பர்ல போட்டிடுக்காங்க. அவங்களுக்கே அவ்வளவு தைரியம் இருக்கறப்போ எனக்கு இருக்காதா?

பக்கத்துல வரட்டும்? மனம் பர பரத்தது, இரத்தம் கொதி நிலைக்கு சென்றிருந்தது.

கை கால்களை முறுக்கி விட்டுக்கொண்டேன். என்னிடம் தேவையில்லாமல் அன்றொரு நாள் சண்டைக்கு வந்த எதிர் வீட்டுக்காரர் ஞாபகம் வந்தது. அந்த ஆள் என்னோட வாய் தகராறுக்கு வந்தவன், நான் பேசின பேச்சுல சத்தமில்லாம போனது மாதிரி இவனுங்கள் நான் பேசற பேச்சை கேட்டு அப்படியே ஓடிடணும்.

இந்த இடத்துல நிக்கறவனுங்க என்ன மனுசனுங்க? அவனுங்க தெனாவெட்டா நடந்து வராணுங்க? இவனுங்க ஆம்பளைங்க, அதுவும் தடித்தடியா வயசுப்பசங்களா இருக்கானுங்க? இந்த கூட்டம் வர்றதை பார்த்து பயந்து ஒதுங்கறானுங்க? வெட்கம் கெட்டவனுங்க?

நாமே முன்னால போய் சண்டைக்கு போயிடலாமா? வேண்டாம், அப்புறம் உன்கிட்ட நாங்க ஏதாவது பண்ணுனா? அப்புறம் ஏன் சண்டைக்கு வர்றேன்னு கேட்டா நம்மால பதில் சொல்ல முடியுமா?

ஏன் முடியாது? இது பொது இடம், பஸ்ஸை எதிர்பார்த்து இத்தனை ஆம்பளங்களும், பொம்பளைங்களும் நின்னுகிட்டு இருக்காங்க, இந்த இடத்துல நீங்க நாலஞ்சு பேரும் சத்தம் போட்டு சிரிக்கறதும், போற வர்றவங்களை கிண்டல் பண்ணறதும், அட வயசு புள்ளைங்களை வம்புக்கு இழுக்கறது. என்ன நினைச்சுகிட்டு இருக்கானுங்க?

வரும்போதே தெரியுது, இவனுங்க பஸ்ஸுக்கு வர்றலை, இங்க நின்னுகிட்டு இருக்கற பொண்ணுங்களை கலாட்டா பண்ண்னும்னே வந்திருக்கரானுங்க., பொண்ணுங்களை மட்டுமா கலாட்டா பண்ணுறானுங்க, பாரு அந்த வயசானவரு நிக்க முடியாம நிக்கறாரு. அவர்கிட்டே போய் ஏதோ சொல்லி சிரிக்கறானுங்க?

வாயில் கெட்ட வார்த்தை ஒன்று உருப்பெற்று சட்டென வெளியே வந்து விட்டது.

பக்கத்திலிருந்தவர் திடுக்கிட்டு என்னை பார்க்க நான் சட்டென முகத்தை திருப்பி நின்று கிண்டல் கேலி செய்து கொண்டிருந்த அந்த கூட்டத்தை பார்ப்பது போல நின்று கொண்டேன். நான் அவர்களை பார்த்துத்தான் அப்படி சொல்லியிருக்கவேண்டும் என்று அவர் முடிவு செய்திருப்பார். இந்த எண்ண்மே எனக்கு ஒரு பெரிய ஆறுதலை தந்தது.

இத்தனை கூட்டத்தில் நான் மட்டும் தைரியமாக அவர்களை பார்த்து இந்த வார்த்தையை சொல்லியிருந்ததை அவர் பாராட்டியிருப்பார்.

அந்த எண்ணம் எனக்குள் ஒரு சந்தோசத்தை கொடுத்தாலும், கோபம் இன்னும் இருந்து கொண்டுதான் இருந்தது. அவர்கள் மெல்ல நகர்வது எனக்கு தெரிந்தது. வரட்டும் இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடவேண்டும்.

ஹோ ஹோவென சிரித்துக்கொண்டு என்னை இடிப்பது போல வந்து தள்ளி சென்றார்கள். என்னை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோரசாய் சிரித்து கடந்து சென்றார்கள். நான் முகத்தில் பய ரேகையுடன், பத்தடி தள்ளி நின்று கொண்டேன்.

அவர்கள் போய் கொண்டே இருந்தார்கள். அதுவரை பொங்கி எழுந்து சண்டையிட்டு கொண்டிருந்த என் மனம் இப்பொழுது அமைதியாய், கொஞ்சம் பயந்தும் கூட.

பக்கத்தில் இருப்பவரை நான் திரும்பியே பார்க்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *